பசங்க-2 - சினிமா விமர்சனம்

25-12-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எப்போதும் துறுதுறுவென்று பரபரப்பாக எதையாவது செய்து கொண்டேயிருக்கும் சின்ன பிள்ளைகளை ‘அதிகம் சேட்டை செய்யுதுக’ என்று சொல்லி கண்டிப்பதும், தண்டிப்பதுதான் பெற்றவர்களின் வழக்கம். இது தவறு என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

ஏ.டி.ஹெச்.டி. என்று சொல்லப்படும் Attention Deficit Hyber Activity Disorder என்கிற குழந்தைகளின் சின்ன குறைபாடுடைய இரண்டு பிள்ளைகளின் வாழ்க்கைக் கதைதான் இந்த ‘பசங்க-2’ திரைப்படம். ‘பசங்க-1’-ல் இருந்த சின்ன வயது பிள்ளைகளின் பிரச்சினைகளைவிடவும் மிக அதிகமாக, இதில் குழந்தைகள் பிரச்சினைகளை விவாதித்து குழந்தைகள் நல சிறப்பு இயக்குநர் என்றே பெயரெடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.
வங்கியில் மேனஜராகப் பணியாற்றும் முனீஸ்காந்த் – வித்யா பிரதீப் தம்பதிகள். இவர்களுக்கு ஒரு மகன். இதேபோல் சிவில் என்ஜினீயரான கார்த்திக்குமார் – பிந்து மாதவி தம்பதிக்கு ஒரு மகள். இவர்களும் சென்னையில் வேறொரு பகுதியில் வசித்து வருகிறார்கள். 
இந்த இரு தம்பதிகளின் குழந்தைகளுமே இந்த விநோதமான ஒரு குறையினால் பாதிக்கப்பட்டவர்கள். சேட்டை என்றால் அப்படியொரு சேட்டை..! வருடத்திற்கு ஒரு முறை பள்ளியை மாற்றி மாற்றி ஓய்ந்துவிட்டார்கள். இத்தனைக்கும் இவர்கள் படிப்பதென்னவோ 2-ம் வகுப்புதான். அதற்குள்ளாக 4 பள்ளிகள் மாறிவிட்டார்கள். இந்த சேட்டையான பிள்ளைகளினால் அடிக்கடி வீடு மாறும் தொல்லை வேறு..
கடைசியாக தாம்பரம் பக்கத்தில் இருக்கும் ஒரு குடியிருப்பில் குடியேறுகிறார்கள். அங்கேதான் இந்த இரண்டு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்கிறார்கள். குடியிருப்பிலும் இவர்களது சேட்டைகள் தொடர.. தாங்க முடியாமல் ஹாஸ்டலில் சேர்த்துவிடுகிறார்கள் பெற்றோர்கள்.  பிள்ளைகளோ ஹாஸ்டலிலும் பலவித  சேட்டைகளை செய்து அங்கேயிருந்தும் துரத்தப்பட்டு வீடு வந்து சேர்கிறார்கள்.
தாம்பரத்தில் புதிதாக இவர்கள் போன குடியிருப்பிலேயே பிரபலமான குழந்தைகளுக்கான மனநல மருத்துவரான தமிழ்நாடான் என்னும் சூர்யா தனது குடும்பத்துடன் குடியிருக்கிறார். அசந்தர்ப்பத்தில் இந்தப் பிள்ளைகளின் சேட்டை பற்றி அவருக்கும் தெரிய தான் பிள்ளைகளை கேர்டேக் செய்து கொள்வதாக கூறி இரண்டு குடும்பத்தினருக்கும் கவுன்சிலிங் கொடுக்கிறார்.
சூர்யாவுடன் அந்தக் குழந்தைகள் நெருங்கி பழக ஆரம்பிக்கிறார்கள். குழந்தைகளுக்குள் இருக்கும் பிரச்சினையை சூர்யா கண்டறிந்து, அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்தாரா… குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் இடைவெளி சரியானதா என்பதை மிக அழகாகச் சொல்லி முடித்திருக்கிறார் இயக்குநர்.
வெறுமனே குழந்தைகளின் வளர்ப்பு முறை பற்றிச் சொல்லாமல் பெற்றோர்களின் கடமை.. ஆசிரியர்களின் பொறுப்பு.. பள்ளிகளின் கடமை.. இப்போதைய பள்லிகள் கல்வியை சொல்லித் தரும் லட்சணம்.. அவர்களது விளம்பர வெறி.. பெற்றோர்களின் அதீத எதிர்பார்ப்பு.. என்று அனைத்தையுமே சல்லடை போட்டு சல்லிசாக்கித்தான் தந்திருக்கிறார் இயக்குநர்.
முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பேபி வைஷ்ணவி, நிஜேஷ், நயனா, அபிமன் ஆகிய குழந்தைகளை அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அதிலும் வைஷ்ணவியின் துடுக்குத்தனமான பேச்சுக்கள்.. பேய் வேடத்தில் காட்டும் நடிப்பு.. ஹாஸ்டலில் பெற்றோரை பிரிந்து காட்டும் தவிப்பு.. கிளைமாக்ஸில் மேடையில் குருவி கதை சொல்லும் ஆக்சன்களில் அனைவரையும் தாண்டிச் சென்றுவிட்டார்.
அதேபோல் பையன் நிஜேஷ்.. இப்படியொருத்தன் இருந்தால் வீடு உருப்பட்டாப்புலதான் என்பார்கள்.  ஒரு சேட்டைக்கார பையனை அப்படியே நினைவு கூற வைத்திருக்கிறான்.
சூர்யா அவருக்கே பிடித்தமான சூர்யாவாகவே நடித்திருக்கிறார். குழந்தைகளோடு குழந்தைகளாக அவர்களுக்குப் பிடித்தமான சேட்டைகளைச் செய்யும் ஒருவித மருத்துவர் நிலையில் தியேட்டருக்கு வரும் குழந்தைகளும் நிச்சயம் கவர்வார். இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் தங்களுக்கெல்லாம் இது போன்ற கணவர் கிடைக்க மாட்டாரா என்கிற ஒரு எதிர்பார்ப்பை ரசிகைகளுக்குள் தூண்டிவிடும் அளவுக்கு இருக்கிறது.
அமலாபால் கேமிராமேன் உதவியோடு இன்னமும் அழகாக ஜொலிக்கிறார். குளோஸப் ஷாட்டுகளில் சொக்க வைக்கிறார். டீச்சர் என்கிற கேரக்டருக்கு கண்ணியமான காஸ்ட்யூம் என்றாலும் மேக்கப்பும், அணிகலன்களும் அதீதமாக இருந்தன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
முந்தைய படங்களிலெல்லாம் காமெடி வேடங்களில் மட்டுமே நடித்திருக்கும் முனீஸ்காந்த், இதில் ஒரு பொறுப்பான அப்பாவாகவும் நடித்திருக்கிறார். ஆனாலும் இவருக்குள் இருக்கும் கெட்ட பழக்கமான சிறுசிறு பொருட்களை சுடும் காட்சிகளெல்லாம் கலகலப்பு.. அதிலும் டாக்டரிடன் ஸ்டெதஸ்கோப்பையே சுட்டுவிட்டு வந்து அழுவதெல்லாம் வயிறு வலிக்க வைத்த காட்சி..
இவருக்கு மனைவியாக வரும் அறிமுகம் வித்யா பிரதீப்பும் அழகு. பையனை சமாளிக்க முடியாமல் அவர் தவிக்கும் தவிப்பு.. ஹாஸ்டலில் இருக்கும் நேரத்தில் பிரிவு தாங்க முடியாமல் வருத்தப்பட்டு கண்ணீர் விடுவதிலும் ஒரு சராசரி அம்மாவை கண் முன்னே காட்டியிருக்கிறார்.
கார்த்திக் குமார் – பிந்து மாதவி ஜோடியும் நம் மனதில் அழகாக பதிகிறார்கள்.  அடுத்தக் குழந்தை உண்டான சந்தோஷத்தை காட்டுவதும்.. அதை ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பில் கார்த்திக் இருப்பதும்.. மகளின் அதிகமான பேச்சால் கோபப்பட்டு அடித்துவிட்டு பின்பு வருத்தப்படும் பிந்து.. கணவனின் கண்டு கொள்ளாமையை நினைத்து மனதுக்குள் மருகும் தாய் என்று பல்வேறு கோணங்களிலும் ஒரு அப்பர் மிடில் கிளாஸ் பேமிலியின் குணச்சித்திரத்தை இந்தக் கதை மாந்தர்களின் மூலமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இவர்கள் மட்டுமேயில்லாமல் ஒரு சிறிய கேரக்டராகவே இருந்தாலும் மனதில் நிற்பதுபோல முகம் காட்டியிருக்கும் தீபா ராமானுஜன், வினோதினி வைத்தியநாதன், டெல்லி கணேஷ், மருத்துவராக நடித்திருக்கும் ப்ரியா என்று அனைவருமே ரசிக்கவும் வைத்திருக்கிறார்கள்.
கதைக்கு பக்க பலமாக ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியெம்மின் ஒளிப்பதிவும் அமைந்திருக்கிறது. காட்சிகள் ஒவ்வொன்றும் அழகழகாக இருக்கின்றன. எந்த கேமிராவில்தான் படமாக்குகிறாரோ தெரியவில்லை. மற்றவர்களைக் கேட்டாலும் இதே கேமிராதான் என்கிறார்கள். ஆனால் இதில் மட்டும் ஏன் இப்படி என்றால் யாருக்கும் சொல்லத் தெரியவில்லை.
இசையமைப்பாளர் ஆரோல் கொரெல்லியின் இசையில் வந்திருக்கும் பின்னணி இசை கதையோடு ரசிகர்களை ஒன்ற வைக்கிறது. பாடல்கள் ரசிக்கும்விதமாக இருக்க.. எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளோ குழந்தைகளுக்கும் பிடிக்கும்வகையில் இருக்கிறது. 
சின்னப் பையன்களை வைத்து படமெடுப்பது சுலபமல்ல. அது எல்லோராலும் முடிகிற விஷயமும் இல்லை. அவர்களின் சின்னச் சின்ன மூவ்மெண்ட்டுகளைக்கூட கவனம் சிதறாமல் பதிவாக்கியிருக்கிறார். நிச்சயம் பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு பாண்டித்யம் பெற்றவர்தான். இல்லாவிடில் இது போன்ற மழலைகளை சமாளித்து எடுத்துவிட முடியுமா..?
அதேபோல் கணவன், மனைவிக்குள் நடக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகள், ஊடல்களைக்கூட முழுமையாக பதிவு செய்திருக்கிறார். ஒரு காட்சியில் தன் மனைவியை பிறர் முன்பாக குறை சொல்ல விரும்பாத சூர்யா.. “அங்கே இருந்துகிட்டே ஒண்ணும் செய்ய முடியலைன்னா எப்படி…?” என்று சொல்லிவிட்டு சூர்யா தள்ளிப் போய்க் கொண்டேயிருக்க கேமிரா அமலாபாலை காட்டுகிறது. இந்த இடத்தில் இயக்குநர் வைத்திருக்கும் காட்சியமைப்பு அபாரமான நாகரிக கற்பனை..!
சேட்டை செய்யும் குழந்தைகளும், நிறைய பேசும் குழந்தைகளும் செய்வதெல்லம் குற்றங்கள் இல்லை. அவர்களுடைய ஆளுமைத் திறனின் அதிகப்படியான வெளித்தோற்றம் அவ்வளவுதான் என்கிறார் இயக்குநர். இதனை நினைத்து பயந்து போகும் பெற்றோர்களும், அடக்கி ஆள நினைக்கும் ஆசிரியர்களையும் ஒரு சேர கண்டித்திருக்கிறார். அந்தக் குழந்தைகளிடம் தனித் திறமைகள் நிறைய இருக்கும். அதை வெளிக்கொணர்வதுதான் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் கடமை என்கிறார் இயக்குநர்.
மதிப்பெண்களின் அடிப்படையில் கணிக்கப்படும் மாணவர்களின் மதிப்பீடு.. பிள்ளைகளை திறமைசாலிகளை வளர்ப்பதைவிடவும் சம்பாதிக்கக் கூடியவர்களாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள்.. மாணவர்களை வைத்து பள்ளியின் மதிப்பை உயர்த்தி பணம் சம்பாதிக்க நினைக்கும் பள்ளிகள்.. எப்போதும் தங்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் மாணவர்களையே விரும்பும் ஆசிரியர்கள்.. மற்ற பிள்ளைகளோடு ஒப்பீடு செய்தே தன் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோர்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் இந்த ஒரு படத்தின் மூலமாக அருமையான விளக்கவுரை தந்திருக்கிறார் இயக்குநர்.
‘தரே ஜமீன் பர்’ என்கிற புகழ் பெற்ற ஹிந்தி படத்தின் கதைக் கருவின் சாலயை இந்தப் படமும் கொண்டிருந்தாலும் நம் தமிழ் மண்ணுக்கே உரித்தான குணத்தோடும், மனத்தோடும் திரைக்கதை அமைக்கப்பட்டு மிக அருமையான கட்டிடமாக எழுப்பப்பட்டிருக்கிறது..!
நல்ல படம் வரவேயில்லை என்றெல்லாம் இனியும் புலம்பாமல் வந்திருக்கும் இது போன்ற நல்ல படங்களுக்கும் ஆதரவு கொடுத்து கை தூக்கிவிட வேண்டியது தமிழ் சினிமா ரசிகர்களின் கடமை.
தயவு செய்து செய்யுங்கள்..! அவசியம் குடும்பத்தோடு பாருங்கள்..!

0 comments: