23-10-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு மனிதனுக்கு கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டால் அதைத் தடுத்த நிறுத்தவே முடியாது என்பார்கள். “வருவதை எதிர்கொண்டு அனுபவித்துதான் ஆக வேண்டும். இது உலக நியதி..” என்கிறது ஆன்மீக உலகம்.
அப்படியொரு கெட்ட சூழலில் மாட்டியிருக்கிறது ஹீரோ ரோஷனின் குடும்பம். அவரது அப்பாவான தலைவாசல் விஜய், தனது நண்பர் காதல் தண்டபாணியுடன் இணைந்து நடத்திய பைனான்ஸ் கம்பெனியில் தண்டபாணியின் திருவிளையாடலால் பைனான்ஸ் கம்பெனி திவாலாகிறது. பணம் போட்டவர்களெல்லாம் விஜய்யிடம் வந்து மல்லுக்கு நிற்கிறார்கள்.
தன்னுடைய பார்டனரான தண்டபாணி அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடிவிட்டதை சொல்கிறார் விஜய். கேட்பதற்குத்தான் ஆளில்லை. தண்டபாணி அரசியல்வாதியும்கூட என்பதால் அவரிடம் அதட்டி, உருட்டி வாங்க முடியாமல் தவிக்கிறார் விஜய்.
இந்த நேரத்தில் அவர்கள் குடியிருக்கும் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்புள்ள வீட்டை 50 லட்சம் ரூபாய்க்கு கேட்கிறார் அந்த வார்டு கவுன்சிலர். கொடுத்தால் பிரச்சினையில்லாமல் அவர்களை அனுப்பி விடுவதாக எச்சரிக்கிறார். போலீஸும் அவர்கள் பக்கம் இருக்க.. என்ன செய்வது என்பது தெரியாமல் முழிக்கிறார் விஜய்.
இந்த நேரத்தில் ஹீரோவுக்கு இந்த விஷயத்தினாலேயே பார்த்துக் கொண்டிருக்கும் வேலையும் பறி போகிறது. இதைத் தொடர்ந்து ஹீரோ காதலித்த பெண்ணும் அவளுடைய தந்தையின் கட்டாயத்தினால் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு போகிறாள். வாழ்க்கையின் எல்லைக்கே வந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கிறார் ஹீரோ.
இந்த நேரத்தில் சென்னையில் இருக்கும் தனது நண்பன் உதவுவான் என்றெண்ணி அவனைத் தேடி சென்னைக்கு வருகிறார் ஹீரோ. நண்பனும் கை விரித்துவிடுகிறான். ஆனால் நண்பனுக்கு திரும்பவும் போன் செய்தபோது ஒரு ராங்காலிடம் முழு மேட்டரையும் பேசிவிடுகிறார் ஹீரோ.
அந்த ராங்கால் மனிதர் ஹீரோவிடம் பவ்யமாக, அன்பாக, பணிவாகப் பேசி ஹீரோவின் மனதில் இடம் பிடிக்கிறார். ஹீரோ எதிர்பார்த்து வந்திருக்கும் பத்து லட்சம் ரூபாயை தான் தருவதாகச் சொல்லி அதேபோல கொடுக்கிறார்.
எதிர்பாராமல் கிடைத்த அந்தப் பணத்தை வைத்து அப்போதைக்கு ஒரு பெரிய பிரச்சினையை முடித்து வைக்கிறார் ஹீரோ. ஆனால் திடீரென்று அந்த ராங்கால் மனிதர் போன் செய்து சென்னைக்கு வந்தால் அவருடைய வீட்டை விற்பனை செய்ய அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகக் கூறுகிறார்.
அதை நம்பி சென்னைக்கு வந்த ஹீரோவை ஒரு வங்கிக் கொள்ளையில் தன்னுடன் ஈடுபடும்படி கேட்டுக் கொள்கிறார் ராங்கால் பார்ட்டி. ஹீரோ அதிர்ச்சியாகி “முடியாது” என்று சொல்ல.. பேசிப் பேசியே அவரை மயக்கி மடக்குகிறார் ராங்கால் பார்ட்டி. ஹீரோவும் டீலிங் 1 கோடி என்பதாலும் இதற்கு ஒத்துக் கொள்கிறார்.
கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். பங்கு பிரிப்பதற்கு முன்பாகவே போலீஸிடமிருந்து தப்பிப்பதற்காக காரில் இருந்து இறங்கி தப்பியோடுகிறார் ஹீரோ. ராங்கால் நண்பரும் தப்பிவிடுகிறார். ஆனால் நன்றி மறவாமல் ஹீரோவுக்கு ஒரு கோடி ரூபாயை அனுப்பி வைக்கிறார்.
இதனால் மனம் மாறிய ஹீரோ இதை யாருக்கும் சொல்லாமல் மறைத்துவிட்டு.. அந்த வீட்டை 50 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு திருச்சிக்கு குடி போகிறார். அங்கே ஒரு லோக்கல் சேனலில் புரொடியூஸராகப் பணியாற்றுகிறார்.
இந்த நேரத்தில் வங்கிக் கொள்ளையின்போது இவர்கள் பயணக் கைதியாகப் பயன்படுத்திய வங்கி ஊழியரான ஹீரோயினை போலீஸ் டார்ச்சர் செய்கிறது. ஹீரோயினின் கைப்பையில் ராங்கால் பார்ட்டி, சில பணக்கட்டுகளை நைஸாக திணித்திருந்ததால் போலீஸ் அந்தப் பெண்ணை சந்தேகமாக பார்க்கிறது.
கடைசியில் எதுவும் தேறாததால் அவரை ஜாமீனில் விடுவிக்கிறார்கள். ஜாமீனில் திருச்சிக்கு வந்த ஹீரோயினை அவருடைய குடும்பத்தினரே ஏற்றுக் கொள்ளாமல் துரத்தியடிக்கிறார்கள். இதனால் அருகில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் சேர்ந்திருக்கும் ஹீரோயினை, ஹீரோ பார்த்துவிடுகிறார்.
அவர் மீது பரிதாப்ப்பட்டு அவரை தன்னுடைய சேனலில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ டைப் நிகழ்ச்சியில் பேசுவதற்காக அழைக்கிறார். முதலில் முடியாது என்று மறுக்கும் ஹீரோயின் பின்பு ஹீரோவின் நல்ல மனசையும், தனக்கு உதவி செய்ய யாருமே இல்லாத நிலையையும் எண்ணி ஹீரோவுடன் பழக ஆரம்பிக்கிறார். காதலிக்கவும் செய்கிறார்.
அதற்குள்ளாக இந்த வங்கிக் கொள்ளை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றுகிறது அரசு. சி.பி.ஐ. ஹீரோயினை பாலோ செய்கிறது. ஹீரோயினுக்கு ஹீரோ எல்லா உதவிகளையும் செய்வதை அறிந்து ஹீரோவின் போனையும் ஒட்டுக் கேட்கிறது. மிகச் சரியான சமயத்தில் ராங்கால் பார்ட்டி சென்னையில் இருந்து மறுபடியும் போன் செய்து இன்னுமொரு வங்கிக் கொள்ளைக்கு உதவும்படி கேட்க.. ஹீரோ மறுக்கிறார்.
இறுதியில் என்ன ஆனது என்பதை தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மீடியம் பட்ஜெட் படம் என்றாலும் பெரிய நட்சத்திரங்களின் பங்களிப்பு குறைவு என்பதாலும் போட்டிக்கு இரண்டு படங்கள் வந்திருப்பதாலும் அதிகம் மவுத் டாக்கிற்கே வழியில்லாமல் போயிருக்கும் படம். ஆனாலும் ஒரு முறை பார்க்கலாம். தப்பில்லை.
இயக்கத்தில் பல குறைகள் இருப்பினும், லாஜிக் ஓட்டைகள் நிறையவே இருந்தாலும் படத்தின் நீட்டான திரைக்கதையும், ராங்கால் பார்ட்டியாக நடித்திருப்பவரின் அலட்சியமான நடிப்பும் படத்தினை கடைசிவரையிலும் பார்க்க வைக்கிறது. என்னமோ எடுத்திருக்காங்கப்பா என்கிற சொல்வடைக்கு இந்தப் படமும் ஒரு சான்றாக இருக்கிறது.
ஹீரோ, ஹீரோயின் ஓரளவு நடித்திருக்கிறார்கள். ஹீரோயினின் தேர்வு ஏன் என்றுதான் தெரியவில்லை. ஆடிஷன் செய்திருந்தாலே ஒதுக்கியிருக்கலாம். அவர்தான் படத்திற்கு மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். ராங்கால் பார்ட்டியாக நடித்திருக்கும் பிஜோதான் படத்தனை தாங்கிப் பிடித்திருக்கிறார். அளவான பேச்சு.. கனிவான பேச்சு. சூப்பரான டயலாக் டெலிவரி.. அற்புதமான முக பாவனைகளுடன் நாவிலேயே தேன் தடவி பேசி ஆளைக் கவிழ்க்கும் கேரக்டருக்கு மிகப் பொருத்தமான நபராக இருக்கிறார். வெல்டன் ஸார்.
மற்றபடி தலைவாசல் விஜய், இவரது மனைவி ஸ்ரீரஞ்சனி, போலீஸ் இன்ஸ்பெக்டர், கவுன்சிலர்.. ஒரேயொரு காட்சி என்றாலும் கவனத்தை ஈர்த்திருக்கும் மறைந்த நடிகர் காதல் தண்டபாணி என்று அனைவருமே நன்கு நடித்திருக்கிறார்கள்.
வங்கிக் கொள்ளையும், அங்கிருந்து தப்பிக்கும் காட்சிகளும் ஏதோ 1980-களில் நடப்பது போல காண்பித்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய குறை. மற்றபடி ராங் நம்பர் தப்பிப்பதும் பின்பு கடைசியாக மாட்டிக் கொண்டு மறுபடியும் தப்பித்து லண்டனில் இருந்து பேசுவதும் அக்மார்க் சினிமா டிவிஸ்ட்..! ரசிக்க முடிகிறது..!
அதே சமயம் சிபிஐயின் கைக்கு வழக்கு மாறுவது.. சிபிஐ அதிகாரிகள் ஏதோ லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றுபவர்கள் மாதிரி பேசுவதும்.. நடந்து கொள்வதும்.. படத்துடன் ஒட்டவேயில்லை. அதிலேயும் ஒரு பெண் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் பேசும் பேச்செல்லாம் அதுவரையிலும் அமைதியாக இருக்கும் ரசிகர்களையே எரிச்சலாக்கும் விஷயம். முற்றிலும் தவிர்த்திருக்கலாம்.
இதில் வசனம் எழுதியிருக்கும் தமிழ் மணவாளனை தனியே பாராட்ட வேண்டும். அவருடைய சில வசனங்களும்கூட இந்தப் படத்தைக் கவனிக்க வைத்திருக்கின்றன.
“கேக்காம இருக்கறதவிட கேட்டு கிடைக்கலேன்னா ஒண்ணும் கூடுதல் நஷ்டமில்ல..”,
“கடவுள் எல்லாருக்கும்தான் அனுப்புறார்…. ஆனா ராங்கால் போட்டு நீதானே கண்டுபிடுச்சே…?”,
“கொள்ளையடிக்கிறதுதான் என் பிஸினஸ். அதுலதான் நூறு பெர்ஸன்ட் லாபம் கிடைக்கும்…”,
“கோடீஸ்வரனப் பார்த்துக் கும்புடுறவன், அவன் எப்படி கோடீஸ்வரன் ஆனான்னு பார்க்கறதில்ல..”,
“முதல்ல பணம் கிடைக்கலையேன்னு கவலையா இருந்துச்சு.. இப்ப பணம் கிடைக்கிறதை நினச்சா பயமா இருக்கு..”
“தப்புப் பண்ணினதுக்கப்புறம் பயப்படக் கூடாது.. பயந்தா புத்தி வேலை செய்யாது… அதுவே.. பல சிக்கல்கள்ல நம்மள சிக்க வச்சுரும்.”,
“பொண்ணோட வாசனை இல்லாமகூட தூங்கிருவேன்.. பணத்தோட வாசனை இல்லாம தூங்க முடியாது்..”
- போன்ற பல வசனங்களும் படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கின்றன.
கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லையென்றாலும் பின்னணி இசையும் அதேபோல இருந்துவிட்டது. இயக்குநர் இதையும் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
போலீஸ் சேஸிங் காட்சியும், வண்டிக்குள் ஹீரோயினுடன் ராங்கால் மல்லுக் கட்டும் காட்சியையும் விலாவாரியாக அமர்க்களமாகப் படமாக்கியிருக்கிறார்கள். சண்டை பயிற்சியாளருக்கு இதற்காகவே ஒரு பாராட்டு.
‘சதுரங்க வேட்டை’யின் ஒரு பாகத்தைக் குறிப்பிடுவதுபோல படத்தின் கதை இருந்தாலும், ஒரு திரில்லர், சேஸிங் படம் போல மேக்கிங் செய்யப்பட்டிருக்கிறது. இயக்குதலில் உள்ள குறைகளை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நிச்சயம் நமது பொழுதை போக்கக் கூடிய படம்தான்..!
|
Tweet |
0 comments:
Post a Comment