10-10-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ் சினிமாவில் சமூகம் சார்ந்த கருத்துக்களைச் சொல்லி அதையும் நல்லவிதமாக பேசப்படுவதுபோல வழங்குவது அரிதிலும் அரிதாக இருக்கிறது. கதை இருந்தால் திரைக்கதை இருப்பதில்லை. திரைக்கதையும் இருந்துவிட்டால் சிறப்பான இயக்கம் இருப்பதில்லை. எல்லாம் இருந்தாலும் அது மக்கள் பார்வைக்கு போய் சேர்வதில்லை. இப்படி ஆயிரம் அரசியல்கள் இருந்தாலும் ஒன்றிரண்டு திரைப்படங்கள் அதையும் மீறி மக்களின் பார்வைக்கு பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
சென்ற மாதம்தான் ‘49-ஓ’ என்கிற திரைப்படம் விவசாயிகளின் அருமையையும், பெருமையையும் சொல்லியது. ஆனால் தியேட்டர்கள் கிடைக்காமலும், விளம்பரப்படுத்தப்படாமலும் போனதால் அதிக மக்களை சென்றடையாமல் போய்விட்டது.
இதற்கு அடுத்தபடியாக விவசாயத்தின் முக்கியத்துவத்தை முக்காடு போட்டுச் சொல்லாமல் முக்காலி போட்டு மைக் செட்டு வைத்து அழகுத் தமிழில் அழகுற சொல்லியிருக்கிறது இப்படம்.
தமிழகத்தின் விளைநிலமான தஞ்சை தரணியில் விவசாயக் குடும்பத்தில் பிறந்து எம்.ஏ. படித்தவர் ஹீரோ நரேன். படித்த படிப்புக்கேற்ற வேலைக்குப் போக விருப்பமில்லாமல் ஊரைச் சுற்றி வருகிறார். டாஸ்மாக்கில் ரெகுலர் கஸ்டமராகவே இருக்கிறார். உடன் சூரி என்னும் நண்பனை வைத்து அலப்பறையும் செய்து வருகிறார்.
ஆனாலும் விவசாயம் பற்றி இவருக்குள் ஒரு ஆர்வம். விவசாயம் அழியக் கூடாது. அதன் வளர்ச்சியைத் தடுக்கும் எதுவும் தனக்கு ஆகாது என்பதில் உறுதியாக இருப்பவர். மீத்தேன் வாயுவை தோண்டியெடுக்க நிலம் கேட்டு வரும் அரசு அதிகாரிகளை முகத்தில் அடித்தாற்போல் திரும்பிப் போகச் சொல்லாமல் விவசாயத்தின் மகிமையை பற்றிச் சொல்லி திருப்பியனுப்புகிறார்.
அதே ஊரில் வசிக்கும் ஹீரோயின் சிருஷ்டிக்கு சொந்தமான இடத்தை செல்போன் டவர் வைக்க கேட்டு அவரிடம் மல்லு கட்டுகிறார் ஹீரோ நரேன். அப்படியொரு டவர் வந்துவிட்டால் ஊரில் இருக்கும் மைனா, குருவி போன்ற பறவைகளெல்லாம் காணாமல் போய்விடும் என்று சொல்லி அவர் தர மறுக்கிறார். ஹீரோவை போலவே ஹீரோயினும் இயற்கை விவசாயம்.. சுற்றுச் சூழலில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார். நல்ல கேரக்டர் ஸ்கெட்ச்.
நரேனின் அப்பாவான ஜெயராஜ் தற்போதைய எதிர்க்கட்சியின் பிரமுகர். தான் சார்ந்த கட்சியில் கடந்த 40 வருடங்களாக கட்சிக்காக பாடுபட்டு உழைத்தவர். சட்டமன்றத் தேர்தல் வருகிறது. இதில் இந்த முறை எப்பாடுபட்டாவது சீட்டு வாங்கிவிட வேண்டும் என்று கேட்டு சென்னைக்கு படையெடுக்கிறார்.
காலம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் இளைஞர்கள் தேர்தல் களத்தை உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதனால் வயதானவர்களை ஓரம்கட்டிவிட்டு இளைஞர்களுக்கு சீட்டு கொடுக்க கட்சி முடிவெடுத்திருப்பதாக தலைவர் சொல்கிறார். நம்பிக்கையோடு போன ஜெயராஜ் அதிர்ச்சியாகிறார். அதிலும் ஒரு இனிய அதிர்ச்சியாக எம்.எல்.ஏ. சீட்டை அவருடைய மகன் நரேனுக்கு வழங்குகிறார்கள்.
அதே மாவட்டத்தில் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருக்கும் ஞானவேல் நரேனுக்கு ஒருவகையில் உறவினர்தான். ஆனால் கில்லாடி. சொந்தக் கட்சியிலேயே தன்னை எதிர்ப்பவர்களைக்கூட தன் வழிக்குக் கொண்டு வரும் வல்லமை படைத்தவர். இந்த முறை அந்தக் கட்சியிலும் புதுமுகம் அதிலும் இளைஞனுக்குத்தான் சீட் என்று சொல்லி அந்தக் கட்சியின் பிரமுகரின் மகனுக்கு கொடுக்கிறார்கள். இவனை ஜெயிக்க வைத்தவிட்டால் உனக்கு ராஜ்ய சபா சீட் உறுதி என்று தலைவர் சொல்லிவிட வேறு வழியில்லாமல் களத்தில் குதிக்கிறார் ஞானவேல்.
இந்த நேரத்தில் மீத்தேன் திட்டத்திற்காக தனது நிலத்தை சூழ்நிலை காரணமாக விட்டுக் கொடுக்கிறார் ஒரு விவசாயி. அதைத் தட்டிக் கேட்க செல்லும் சிருஷ்டியின் அப்பா ராஜாவை அரசு அதிகாரிகள் அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். இதனால் வேதனைப்படும் ராஜா பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த நேரத்தில் அவர் எழுதிய விவசாயத்தை அழிக்க வந்த மீத்தேன் பற்றிய கடிதத்தை மறைத்துவிட்டு, சிருஷ்டி நரேனுடன் காதல் கொண்டிருப்பதை அறிந்து தான் இந்த முடிவுக்கு வந்ததாக கடிதத்தை மாற்றி எழுதி வைத்து தேர்தல் பிரச்சாரத்தை சூடு பிடிக்க வைக்கிறார்கள் போலீஸும், ஆளும் கட்சியும்.
இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இந்த சுவையான, சுவாரஸ்யமான, கலகலப்பான ‘கத்துக்குட்டி’ படத்தின் கதை..!
ஏற்கெனவே விவசாய விளைநிலங்களெல்லாம் பிளாட்டுகள் போடப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குழி கணக்கில் நிலம் வைத்திருந்தவர்கள்கூட அதை விற்றுவிட்டு வேறு வேலையைப் பார்க்க போய்க் கொண்டிருக்கின்றனர். ஏக்கர் கணக்கில் வைத்திருந்தவர்களெல்லாம் கல்லூரி கட்ட நிலத்தை தாரை வார்த்துவிட்டு அதே கல்லூரியில் தங்களது மகன்களையோ, மகள்களையோ சேர்க்க நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த ஒட்டு மொத்த பணத்தையும் கொடுத்துவிட்டு இப்போது பிச்சையெடுக்கிறார்கள்.
விவசாயம் மெல்ல மெல்ல செத்தொழிவதற்குக் காரணம் விவசாயத் தொழிலின் மீது சுமத்தப்படும் பல்வேறு சுமைகள்தான்.. விளைநிலங்களை பாதுகாக்கவே போராடி வருகிறார்கள் விவசாயிகள்.. இதன் பின்புதானே விவசாயம் செய்ய போராட வேண்டும்..?
இதிலேயே நரேன் மூலமாக பேசப்படும் வசனங்கள் விவசாயத்தின் தற்போதைய நிலையை மக்களுக்கு உணர்த்துகின்றன. “விவசாயி தற்கொலை செய்து கொள்வது, வறுமையினால் இல்லை.. விவசாயம் செய்ய முடியலையே என்கிற தொழில் ஏக்கத்துலதான்.. 5 குழி, 10 குழி வைத்திருப்பவர் செத்தாலாவது இப்படி சொல்லலாம். ஆனா ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருப்பவனும் வெறுப்பில் சாகிறான். இதுக்கென்ன காரணம்?” என்கிறார் நரேன்.
மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை கடந்த அரசு கொண்டு வந்தபோதே விவசாயிகள் கடும் எதிர்ப்பைக் காட்டினார்கள். அப்படியிருந்தும் அதனைச் செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முயன்றபோது நீதிமன்றத்தில் கடுமையான போராட்டத்திற்குப் பின்புதான் தடையுத்தரவை பெற முடிந்தது. இப்போதுதான் அதை மறுபரிசீலனை செய்வதாக சொல்லியிருக்கிறார்கள்.
இந்த மீத்தேன் திட்டம் விவசாயிகளின் நிலத்துக்கு நடுவில் புகுந்து நிலத்தடி நீரின் தன்மையையே சீரழித்து அதுநாள்வரையில் அந்த மண்ணுக்கென்று இருக்கும் இயற்கைத் தன்மையையும் கெடுத்து.. அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக சிதைத்துவிடும் என்பதை பல காட்சிகளில் விளக்கியிருக்கிறார் இயக்குநர்.
இவற்றையெல்லாம் ஒரு சினிமாத்தானமாகவே மக்களுக்கு எளிதில் புரியும்படி சொல்லியிருப்பதில் இயக்குநர் இரா.சரவணனுக்கு அவருடைய பத்திரிகை அனுபவம் நிறையவே கை கொடுத்திருக்கிறது.
விவசாயத்தை மட்டுமல்ல.. இன்றைய அரசியல் நிழலுகத்தையும் அப்படியே படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். ஜெயராஜ் தனது கட்சி எதிர்க்கட்சியாக ஆனவுடன் செலவை பார்த்து, பார்த்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகச் சொல்லி நைஸாக தனது கட்சிக்கார்ர்களை கழட்டிவிட செய்யும் டிராமாவை ரசிக்கும்படி எடுத்திருக்கிறார் இயக்குநர்.
அதேபோல் சீட் கேட்டு கட்சித் தலைவரிடத்தில் அவர் பேசுகின்ற ஒவ்வொரு பேச்சும் இன்றைய அரசியல்வாதிகளின் அக்மார்க் வசனங்கள்தான். ஞானவேல் தனக்கு சீட் தராமல் வேறொருவருக்குக் கொடுத்துவிட அதைக் கண்டு பொருமும் காட்சியும், ச்சும்மா கண் துடைப்புக்காக சீன் போட்டு ஓட்டு வேட்டையாடும் காட்சிகளெல்லாம் உண்மையின் உரைகல்.
“இதுநாள்வரையிலும் எனக்கு பிள்ளை இல்லையேன்னு ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. இன்னிக்கு வருத்தப்படுறேன்டா…” என்று ஞானவேல் சொல்லும் ஒரு வசனம் அத்தனை காமெடியிலும் கண் கலங்க வைக்கிறது..!
இதேபோல் இறுதியில் ஞானவேல் பேசும் படத்தின் இறுதி டயலாக் படத்தின் ஹைலைட் என்றே சொல்லலாம். இது போன்ற முடிவுகளை வைப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். இயக்குநர் இரா.சரவணனுக்கு அது நிறையவே இருக்கிறது.
நரேன் சிறந்த நடிகர்தான்.. இதிலும் வசன உச்சரிப்பில் மட்டுமே வித்தியாசம் காட்டினாலும் நடிப்பில் அசத்தல்தான். அதிலும் தண்ணியை போட்டு சலம்பல் செய்யும் காட்சிகளில் சூரியின் டயலாக் டெலிவரிக்கு ஈடு கொடுத்திருக்கிறார். காதல் என்பதை பெரிதாகச் சொல்லாமலேயே ஒரு காதல் விளையாட்டை இதில் காட்சியிருக்கிறார் இயக்குநர்.
நரேன் ஒரு சந்தர்ப்பத்தில் சிருஷ்டியின் மீது கொள்ளும் காதலும், துளசி சிருஷ்டியின் வீட்டுக்கு வந்து பெண் கேட்கும் காட்சியும் அடுத்தடுத்து வர.. எல்லாம் முடிந்த பீலிங்குதான் நமக்கு..!
அந்தக் கன்னக் குழி அழகுடன் அதிக மேக்கப் இல்லாமல் மென்மையாக நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே. அதிகம் வேலையில்லை என்றாலும் தனது கேரக்டருக்கு நடிப்பினால் ஒரு வெயிட் கொடுத்துள்ளார். இதில் சூரி ஒரு பல்லாங்குழி ஆட்டமே ஆடியிருக்கிறார். அவரது அலப்பறையில் பல காட்சிகளில் தியேட்டரில் கை தட்டல்கள் பறக்கின்றன. “டேய்.. இவன் டான்ஸா ஆடுனான்.. பைட் பண்ணினதை டான்ஸுன்னு நினைச்சு ஏண்டா கொல்ற..?” என்று புலம்பும்போது சிரிக்காமல் இருக்க முடியாது..!
அதிகம் ஈர்த்துள்ளவர்கள் ஜெயராஜும், ஞானவேலும்தான்.. இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். ஜெயராஜின் குரலும், முகமும் அவரது அண்ணன் பாரதிராஜாவை ஞாபகப்படுத்தினாலும் நடிப்பிலும் அசத்தியிருக்கிறார். மகனுடன் நேரடியாக பேச விருப்பமில்லாமல் மனைவி மூலமாக பேசியும், கோபப்பட்டும் மகனது ஒழுங்கற்ற தன்மையினால் தனது மானம் போவதை உணரும் வெட்கப்பட்ட அந்த நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
எப்போதும் ஏதாவது பேசிக் கொண்டேயிருக்கும் அந்த ரெங்கு பாட்டி, அவ்வப்போது ஜெயராஜுக்கு ஹின்ட்ஸ் கொடுக்கும் சித்தன் மோகன், விளைநிலத்தை பிளாட் போட்டு விற்க வந்து நரேன், சூரியிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் தேவிபிரியா, அப்பனுக்கும், மகனுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு தனது கருவிழிகளால் முழிக்கும் துளசி, ஒரேயொரு பாடலுக்கு ஆட வந்தாலும் கெட்ட ஆட்டம் போட்டிருக்கும் ‘காதல்’ சந்தியா.. என்று பலரும் இந்தப் படத்திற்கு சிற்ப்பான வகையில் தங்களுடைய பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் கொஞ்சம் சோர்வடையச் செய்தாலும் போகப் போக படம் தெளிவாகி நம்மையும் வயல்காட்டிற்குள் இழுத்துச் சென்று நாற்று நட வைத்துவிட்டது. ஜெயராஜ் தனது கட்சிக்காரனை காப்பாற்ற போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து அதே ஸ்டேஷனில் குத்த வைத்து உட்கார வைக்கப்படும் காட்சிகளும், இதைத் தொடர்ந்த ஞானவேல், இன்ஸ்பெக்டர், போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளெல்லாம் காமெடியின் உச்சக்கட்டம்.
தஞ்சை மாவட்டத்தின் எழில் கொஞ்சும் இடங்களை கொஞ்சமும் குறைவில்லாமல் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் ராம். பாடல் காட்சிகளிலும், வயல்காடு காட்சிகளிலும் கேமிராவின் கண்களிலேயே படம் நகர்வதை பார்க்க முடிகிறது. இதற்கு முற்றிலும் எதிராக ஜெயராஜ் தனது கட்சித் தலைவரிடம் பேசும் காட்சியில் அந்த அறையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒளியமைப்பு பாராட்டத்தக்கது.
அனைத்து பாடல்களுமே திரும்பவும் கேட்கவும், பாடவும் முடிந்தவையாக இருப்பது சிறப்பு. அருள்தேவின் பாடல்களில் ‘கள கட்டு கண்ணால மெனக்கெட்டு’, ‘ஒரு ரவுண்டு தண்ணி ஊத்தி’, ‘நெஞ்சுக்குள்ள கல்லெடுத்து வைக்குறா’ ஆகிய பாடல்கள் எஃப்.எம். வானொலிகளில் கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து ஒளிபரப்பினால் மனப்பாடமே செய்துவிடலாம். அந்த அளவுக்கு எளிமையான வார்த்தைகளால் புனைந்திருக்கிறார்கள்.
“கர்நாடக தண்ணி வரலை. கிருஷ்ணா தண்ணியும் வரலை.. ஆனா பாண்டிச்சேரி தண்ணி மட்டும் ஆறா ஓடுதுய்யா…” என்று பாடலின் இடையே வரும் வரிகள் மிக அழுத்தமாக பாடப்பட்டிருப்பதால் தியேட்டரே அதிர்கிறது இந்தக் காட்சியில்..! பாடலாசிரியருக்கு நமது பாராட்டுக்கள்..!
இந்தப் படத்தில் மிக எளிதான நகைச்சுவையை தனது சிறப்பான இயக்கத்தினாலும், நடிப்பினாலும், சிறப்பான வசனங்களினாலும் வெளிக்கொணர்ந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் இரா.சரவணன். தனது முதல் படைப்பையே இப்படிப்பட்ட ஒரு சிறப்பான கதையம்சத்தோடு திறமையான இயக்கத்தில் உருவாக்கி இதனை சிறந்த படைப்பு என்று பேசவும் வைத்திருக்கிறார். வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!
‘கத்துக்குட்டி’ நிஜத்தில் அப்படியல்ல.. பெருமைமிக்க மேஜரான படம்.. அவசியம் பார்க்க வேண்டிய படமும்கூட..!
|
Tweet |
0 comments:
Post a Comment