மசாலா படம் - சினிமா விமர்சனம்

11-10-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கஷ்டப்பட்டு உருவாக்கி அதைவிட கஷ்டப்பட்டு திரைக்கு கொண்டு வரும் திரைப்படத்தை ஐந்தே நிமிடங்களில் ‘குப்பை’, ‘மொக்கை’, ‘அசுர மொக்கை’, ‘படு குப்பை’ என்றெல்லாம் ஒரு வரியில் வீழ்த்திவிடும் நவீன விமர்சகர்களை குறி வைத்துத் தாக்கியிருக்கிறது இந்தப் படம்.

‘சூறாவளி’ என்றொரு படத்தை தயாரித்து வெளியிடுகிறார் தயாரிப்பாளர் வெங்கட். படம் தியேட்டரில் சக்கை போடு போடுகிறது. ஆனால் தீவிர விமர்சகர்களுக்கு அந்தப் படம் பிடிக்கவில்லை. ‘மொக்கை’ என்கிறார்கள். இதையே தியேட்டரில் அமர்ந்தபடியே பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் ஷேர் செய்கிறார் சமூக வலைத்தளங்களில் பிரபலமான சினிமா விமர்சகரான கார்த்திக்.
இது பலவாறாகப் பரவி சமூக வலைத்தலங்களில் ‘சூறாவளி’ படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தைத் தேடித் தருகிறது. இருந்தாலும் தியேட்டர்களில் கூட்டத்திற்கு குறைவில்லாமலும் இருக்கிறது.
இந்த நேரத்தில் இந்தப் படத்திற்கு கெட்ட விமர்சனத்தை அள்ளித் தெளித்த கார்த்திக் திடீரென்று ஒரு ஆக்சிடெண்ட்டில் சிக்குகிறார். இதையும் கண், காது, மூக்கு வைத்து ‘சூறாவளி’ படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்தான் ஆள் வைத்து விபத்துக்குள்ளாக்கியிருக்கிறார் என்றே எழுதுகிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் வெங்கட் இதை உறுதியாய் மறுக்கிறார். இந்த விபத்து செய்தியும் சமூக வலைத்தளங்களில் வைரஸாக பரவ தயாரிப்பாளரின் நற்பெயர் கெடுகிறது.  கார்த்திக்கின் மேல் அனுதாபம் கூடுகிறது.
இந்தப் பரபரப்பை தங்களுடைய சேனலின் டிஆர்பி ரேட்டிங்கிற்கு பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி இது தொடர்பான கலந்துரையாடலுக்கு தயாரிப்பாளர் வெங்கட்டையும், கார்த்தியையும், அவருடைய நண்பர்களையும் அழைக்கிறது.
இந்த கலந்துரையாடலில் தயாரிப்பாளருக்கும், விமர்சகர்களுக்கும் மிகக் கடுமையான வாக்குவாதம் ஏற்படுகிறது. முடிவில், “உங்களுக்கு விமர்சிக்கத்தான் தெரியும்.. படம் எடுக்கத் தெரியாது. வேண்டுமானால் ஒரு நல்ல புத்தம் புது கதையோடு வாருங்கள். எனக்குப் பிடிச்சிருந்தால் அதை நான் படமாக்குகிறேன். உங்களால் முடியுமா..?” என்கிறார் தயாரிப்பாளர். விமர்சகர்களும் இந்த சவாலை ஏற்றுக் கொள்கிறார்கள்.
நல்ல கதைக்காக யோசிக்கும்போது எதுவுமே அவர்களுக்கு பிடிபடாமல் போகிறது. மசாலா படமாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் நல்ல, புதிய கதையாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்து மண்டை காய்கிறார்கள்.
கதைகளுக்காக அறைக்குள் உட்கார்ந்து பேச வேண்டாம். வெளியில் பொதுமக்களுடன் கலந்து பேசுவோம்.. கூர்ந்து பார்ப்போம். அங்கேயிருந்து நமது கதை மாந்தர்களை தேர்வு செய்வோம் என்று முடிவு செய்து தெருவில் இறங்குகிறார்கள்.
காதல், காமெடி, டெர்ரர் என்ற மூன்று பாதையில் பயணிக்கும் ஒரு கதையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கேற்றாற்போல் மூன்று பேரை தேர்வை செய்து அவர்களை பாலோ செய்து அவர்களது வாழ்க்கையை ஸ்டெடி செய்து அதனை கதையாக்க முடிவு செய்கிறார்கள்.
அந்த மூன்று ஹீரோக்களையும் பாலோ செய்ய மாடலிங் ஆர்ட்டிஸ்ட்டான லட்சுமி தேவியை தேர்வு செய்து அனுப்புகிறார்கள். கடைசியில் கதை கிடைத்ததா..? இவர்கள் சவாலில் வெற்றி பெற்றார்களா என்பதையெல்லாம் இந்த ‘மசாலா பட’த்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்..!
முதலில் இப்படியொரு கதையை உருவாக்கிய கதாசிரியரும், இந்தப் படத்தின் நாயகியுமான லட்சுமி தேவிக்கு நமது பாராட்டுக்கள். இதற்கெல்லாம் ஒரு தைரியம் வேண்டும்.
இப்போது சினிமா துறையில் இருக்கும் விமர்சகர்களைவிடவும் சமூக வலைத்தளங்களில் அக்கவுண்ட் வைத்திருக்கும் விமர்சகர்கள்தான் அதிகம். எப்படியும் இந்தப் படத்தையும் கிழிக்காமல்விட மாட்டார்கள் என்பது தெரிந்திருந்தும், தைரியமாக இந்தக் கதையைத் தேர்வு செய்த தயாரிப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள்..!
படத்தில் இரு தரப்பினரையுமே பேலன்ஸ் செய்துதான் பேசியிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களின் கஷ்ட, நஷ்டங்களை தயாரிப்பாளர் சொல்லும்போது, அவர்களுடைய தவறான செயல்பாடுகள் சினிமா என்ற துறையையே அழிக்கிறது என்றும், சினிமா என்பது ஒரு ரசிகனின் ரசனையின் வெளிப்பாடு.. அந்த ரசனையை மேம்படுத்தும் கடமை சினிமா துறையினருக்கு உண்டு என்றும் விமர்சகர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது..!
இங்க நல்ல படம், கெட்ட படம் என்றெல்லாம் இல்லை. ஓடிய படம்.. ஓடாத படம் என்றுதான் இருக்கு என்கிறார் தயாரிப்பாளர். படம் நல்லா இருக்கு என்ற பேச்சுதான் படத்திற்குக் கிடைக்கும் உண்மையான லாபம் என்கிறது விமர்சகர்கள் டீம்.
இப்படி இரு தரப்பினருக்கும் தத்தமது வாதங்களை எடுத்து வைக்க போதிய அவகாசங்களை கொடுத்த பின்புதான் கதைக்குள்ளேயே படம் நகர்கிறது. இதுதான் படத்தின் துவக்கத்திலேயே ‘என்னய்யா இது’ என்று லேசாக முணுமுணுக்கவும் வைத்திருக்கிறது.
காமெடிக்கு மிர்ச்சி சிவா மிகப் பொருத்தம்.. டிவி நேரலையில் தொகுப்பாளர் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் படு மொக்கையாக பதில் சொல்லி கலகலப்பாக்குகிறார். லட்சுமி தேவியை பார்த்தவுடன் ரொமான்ஸில் விடும் ஜொள்ளும், பேச்சும் கலகல..
இவரது அறிமுகம் மட்டுமில்லாமல் பாபி சிம்ஹா மற்றும் கெளரவ் மூவரின் அறிமுகக் காட்சிகளும் பாராட்டுக்குரியவை. பாபி சிம்ஹா ரவுடியிஸத்தின் ஒரு கதையைத் தொட்டுக் காண்பிக்கிறார். நல்லாயிருக்கும்போது வராத காதல் சாகப் போகும்போது வந்து அவரையும் வீழ்த்துகிறதே.. அந்தக் காட்சி ஒரு ரம்மியான அழகு கவிதை.. படமாக்கலில் இனிமை..! ரொமான்ஸ் ஹீரோவாக கெளரவ். பெயரளவுக்கு, கிடைத்த அளவுக்கு நடித்திருக்கிறார்.
நாயகி லட்சுமி தேவி.. ஒரு மாடலிங் ஆர்ட்டிஸ்ட்.. கதையும் எழுதி தானே அந்தக் கதையில் நடித்திருக்கிறார். இந்தக் கேரக்டருக்கு ஓகே. இன்னும் சொல்ல வேண்டுமெனில் அடுத்தடுத்து படங்கள் செய்யட்டும்..! சொல்வோம்..!
இவர்களது நண்பர்களாக நடித்திருப்பவர்களுக்கு ஆங்காங்கே வசனங்களை அள்ளித் தெளிக்க வாய்ப்பளித்திருக்கிறார்கள். அதிலும் நகைச்சுவையே பிரதானமாக இருக்கிறது.
தயாரிப்பாளர் வெங்கட் தோற்றத்திலேயே ஒருவித ஆளுமையுடன் இருக்கிறார். இவருடைய கேரக்டரில் வேறொரு நோஞ்சான் தயாரிப்பாளரை போட்டிருந்தால் அவர் சொல்கின்ற நியாயத்தை கருத்தாக கொள்ளாமல், பாவப்பட்டு ‘விட்ருங்கப்பா’ என்று சொல்வதை போல இருந்திருக்கும். குட் செலக்சன்.
தன் தரப்பு நியாயத்தை அழுத்தம் திருத்தமாக டயலாக் டெலிவரி செய்து கவன ஈர்ப்பு செய்திருக்கிறார். குரலும், தோற்றமும் அவருடைய கேரக்டருக்கு ஒரு புதிய கனத்தைக் கொடுத்திருக்கிறது. இன்னமும் நிறைய சினிமாக்களில் வேறு வேறு தோற்றங்களில் பார்க்க ஆர்வமாகத்தான் இருக்கிறது. செய்வார் என்று நம்புகிறோம்..! 
சில இடங்களில் திரைக்கதை கொஞ்சம் அலுப்பாக இருந்தாலும், பல இடங்களில் புதுமையாக இருக்கின்றன. இந்தப் படத்திற்காக எடுக்கப்பட்ட ஷாட்டுகள் மிக அதிகமாக இருக்கும்போல தெரிகிறது.. தேவையில்லாத இடங்களில்கூட சென்னை அழகைக் காட்டும் ஷாட்டுகளை நிரப்பி அழகு பார்த்திருக்கிறார்கள். இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருந்ததால்தான் இது சாத்தியமாகியிருக்கிறது.
மிர்ச்சி சிவாவின் அறிமுகம்.. பாபி சிம்ஹாவின் அறிமுகக் காட்சி.. இந்த இடத்தில் மூன்று ஹீரோக்களும் இருக்கும்விதமன திரைக்கதை.. பாபி சிம்ஹா கடற்கரையில் லட்சுமி தேவி பார்க்க, சண்டையிடும் காட்சி.. அவரது மரணக் காட்சி.. சிம்ஹா தனக்குள் ஊடுருவுகிறார் என்பதை உணர்ந்து தான் இந்த விளையாட்டுக்கு வரவில்லை என்று சொல்லி லட்சுமி விலக நினைக்கும் காட்சிகள்.. மிர்ச்சி சிவாவின் வீட்டுக்கு லட்சுமி வரும் காட்சிகள்… இதை முன் பின் காட்சிகளாக நண்பர்களுக்கு விளக்குவது.. என்று பல காட்சிகள் திரைக்கு புதிதாகவும், அழகாகவும், சுவாரஸ்யமாகவும் படமாக்கப்பட்டிருக்கிறது.
இயக்குநர் லஷ்மணனே படத்திற்கு ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். இயக்கம் போலவே படம் முழுக்க ஒளிப்பதிவும் மிக அழகு. கார்த்திக் ஆச்சார்யா இசையில் பாடல்கள் கேட்க வைத்திருக்கின்றன.
திரைப்படத்திற்கு விமர்சனம் செய்வது சரியா தவறா என்றெல்லாம் படம் சொல்லவில்லை. எந்தப் பார்வையில் விமர்சனம் இருக்க வேண்டும் என்பதைத்தான் தயாரிப்பாளர் வெங்கட் தனது கருத்துரையில் விளக்குகிறார். இது இந்தப் படத்தின் இயக்குநரின் சொந்தக் கருத்து என்றும் நாம் எடுத்துக் கொள்ளலாம்.
இறுதியில் விமர்சகர்கள் சொல்லும் சரணாகதி சினிமாவுக்காக சொல்லப்பட்டதாகவே தெரிகிறது.. உண்மையில் இவர்கள் பார்த்த, கேட்ட இந்த ‘மசாலா பட’த்தின் கதையே ஒரு நல்ல சினிமாவின் கதைதான். இதையே முயற்சி செய்யலாம். சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்களை வைத்தால் படம் நிச்சயம் தேறும் என்கிறார் தயாரிப்பாளர் வெங்கட்.
அப்படித்தான் இவர்களது கதையில் உருவான படமும் ஜெயித்துவிட்டதாக அவசர கதியில் சொல்லியிருக்கிறார்கள். இந்தக் கதைக்காக இவர்கள் கதை மாந்தர்களின் பின்னால் போனதைவிட்டுவிட்டு, நிஜமாகவே படமாகவே இதை ஆக்கியிருந்தால் எப்படியிருந்திருக்கும்..?
ஒரு கதையை படமாக்கும்போது ஏற்படும் சிரமங்களும், வெளியிடுவதில் இருக்கும் தலையடி சமாச்சாரங்களும்தான் இன்றைய அவசர யுக இரண்டு வரி விமர்சகர்கள் அதிகம் அறிய வேண்டியது. அப்படி இந்த ‘மசாலா படம்’ எடுக்கப்பட்டிருந்தால் இன்னும் நன்றாகவே இருந்திருக்கும் என்று தோன்றுகிறது..!

0 comments: