18-10-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தெலுங்குலகில் ‘சைனிக்குடு’, ‘ஒக்குடு’, ‘விருடு’, ‘அர்ஜூன்’ போன்ற ‘ஹிட்’ படங்களைக் கொடுத்த இயக்குநர் குணசேகரின் படைப்பு இது.
13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ‘மார்க்கோ போலா’ என்னும் பிரயாணியை நம்மால் மறக்க முடியாது. அவரைப் பற்றி படிக்காமலும் இருந்திருக்க முடியாது. அவர் தனது தாய் நாடான ஸ்பெயினுக்குத் திரும்பிய பின்பு அந்த நாட்டு அரசவையில் தான் இந்தியாவில் ஒரு தேசத்தின் ஒரு பகுதியில் கண்டு வியந்து போன ஒரு அரசியல் சாம்ராஜ்யத்தை அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். இதிலிருந்துதான் கதை துவங்குகிறது.
13-ம் நூற்றாண்டில் இன்றைய தெலுங்கானாவை உள்ளடக்கிய காகதீய அரசு பல சிற்றரசுகளை கொண்டது. கப்பம் கட்டித் தங்களை காகதீய ஆளுமைக்குட்படுத்திக் கொண்டு வளம் கொண்டு செழித்து வந்த தேசம் அது. அதன் அரசன் கணபதி தேவருக்கு அதுவரையிலும் பிள்ளை இல்லை. அப்போதுதான் பிறக்க இருக்கிறது.
பிறக்கின்ற குழந்தை ஆணாக இருந்தால் கவலையில்லை. அரசியல் சூழ்ச்சிகளால் சூழப்பட்டிருக்கும் அந்தத் தேச்ம் கொஞ்சம் மூச்சுவிடும்.. காப்பாற்ற ஒரு தலைவன் வந்துவிட்டான் என்று..! ஆனால் பெண்ணாய் பிறந்துவிட்டால்.. அடுத்த நொடியே கணபதி தேவரின் அரியாசணத்தைப் பறிக்க அவரது பங்காளி தம்பிகளான சுமனும், ஆதித்யாவும் தயாராக இருக்கிறார்கள். கோட்டைக்கு வெளியே தேவகிரி அரசனும் தயார் நிலையில் இருக்கிறான்.
பதைபதைப்பில் இருக்கும் அரசனிடம் பெண் குழந்தை பிறந்திருப்பதை சொல்கிறார் மந்திரி மஹாதேவ ஐயர். என்ன செய்யலாம் என்று யோசித்து இப்போதைக்கு நாட்டைக் காப்பாற்ற ஒரு பொய் சொல்வதில் தவறில்லை என்று சொல்லி பெண் குழந்தையை ஆண் குழந்தையாக மாற்றி ‘ருத்ரமா தேவன்’ என்று பெயர் வைத்து நாட்டு மக்களுக்கு அறிவிக்கிறார்கள்.
புரட்சி செய்ய காத்திருந்த தம்பிகளும், போர் தொடுக்க தயாராய் இருந்த தேவகிரி மன்னனும் சோர்வாகிறார்கள். அடுத்த 14 வருடங்கள் காட்டில் ‘ருத்ரமா தேவன்’ என்ற பெயரில் ஒரு ஆணாகவே வளர்க்கப்படுகிறாள் பட்டத்து இளவரசி. வாள் சண்டை, கத்தி சண்டை, குதிரையேற்றம் என்று அனைத்திலுமே தேறிய நிலையில் அரண்மனை திரும்புகிறாள்.
அங்கே ஆணுடையில் இருந்தாலும் தான் ஒரு பெண் என்பதை அப்போதுதான் உணர்கிறாள் ருத்ரமா. உண்மை உணர்ந்து தாய், தந்தையிடம் கேட்க அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள். அது அவளுக்கும் சரியென்று தோன்றவே ஆண் வேடத்தை விரும்பி புனைகிறாள் ருத்ரமா தேவி.
இந்த விஷயம் யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாலும் ருத்ரமாவின் சிறு பிராயத்து நண்பனும் இப்போதைய சாளுக்கிய தேசத்து இளவரசனுமான வீரபத்ரன் என்னும் ராணா டக்குபதிக்கு தெரிந்துவிடுகிறது. அவன் இவள் மேல் காதல் கொள்கிறான். நாட்டுக்காக தான் காதல் பற்றியே நினைக்கவில்லை என்கிறாள் ருத்ரமா.
இந்த நேரத்தில் தந்தையின் பங்காளிகளின் சூழ்ச்சி காரணமாய் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் ருத்ரமா தேவிக்கு. அதே அரண்மனையில் வளர்ந்து வந்த முத்தாம்பாளை திருமணம் செய்து கொள்கிறாள் ருத்ரமா தேவி. ருத்ரமா யார் என்பதை தெரிந்து கொண்ட முத்தாம்பாள் ருத்ரமாவின் நாட்டுப் பற்றுக்கு தலை வணங்கி இதனை ஏற்றுக் கொள்கிறாள்.
இந்த விஷயம் ஒற்றர் மூலமாக தேவகிரி மன்ன்னுக்கும், பங்காளிகளுக்கும் தெரிய வர.. அவர்கள் படையெடுப்புக்கும், சூழ்ச்சிக்கும் நாள் குறிக்கிறார்கள். அதற்குள்ளாக அரசவையில் ருத்ரமா தேவனின் பிறப்பு ரகசியத்தை வெளிப்படுத்தும் மந்திரி ருத்ரமாதேவிக்கு பட்டாபிஷேகம் செய்ய நாள் குறிக்கிறார்.
ஆனால் இதனை சிற்றரசர்கள் பலரும் எதிர்க்கிறார்கள். அவர்களைச் சமாதானப்படுத்த வேண்டி ராஜகுருவை வேண்டுகிறார் அரசர். ராஜகுருவோ, ‘இது மிகப் பெரிய தெய்வீகக் குற்றம். எனவே ருத்ரமா தேவி அரண்மனையைவிட்டு வெளியே போய் எளிய வாழ்க்கையை வாழ வேண்டும்’ என்கிறார்.
ருத்ரமா தேவியும் அதன்படியே வெளியேற.. எதிரிகளின் கூட்டமும், அரண்மனைக்குள் இருக்கும் கூட்டமும் சேர்ந்து கொண்டு அரசைக் கவிழ்க்கின்றன. போர் முரசு கொட்டுகிறது. இனி ருத்ரமா தேவி என்ன செய்தாள்..? தனது அரசை மீட்டெடுத்தாளா என்பதுதான் இந்த அனுஷ்கா அரசாளும் ‘ருத்ரமா தேவி’யின் கதை.
இந்தப் படம் ‘பாகுபலி’க்கு முன்பே வந்திருந்தால் நிச்சயம் ஏதோ ஒன்று நடந்திருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது. இவை போன்ற படங்களுக்கு இதற்கு முந்தி இதே ஜர்னலில் வெளிவந்த படம்தான் வில்லனாக இருக்கும் என்பார்கள். அந்த வரிசையில் இதற்கு வில்லன் ‘பாகுபலி’தான்.
அனுஷ்காவை நிச்சயமாக இன்னொரு ‘சூப்பர் ஸ்டாரினி’ என்றே சொல்லலாம். அந்தத் தோற்றமும், நடை,உடை, பாவனையும் அவரை அந்த கெத்துக்கு கொண்டு போயிருக்கிறது. ‘வைஜெயந்தி ஐ.பி.எஸ்.’ மாதிரியான ஒரு மக்கள் விரும்பும் கதையம்சம் கொண்ட கதையில் அவர் நடித்துவிட்டால் இந்தப் பட்டம் தானாகவே அவரைத் தேடி வரும்.
இதிலும் அவர் ராஜ்ஜியம்தான். ஆண் மகனாக சீற்றம் கொண்டு யானையை அடக்கும் காட்சியில் இருந்து பெண்ணாகவே தன்னை காட்டிக் கொண்டு கடைசிவரையிலும் வாள் வீச்சு, சண்டை காட்சிகளில் அவர் காட்டியிருக்கும் நடிப்பு ஏதோ ஒரு ஆண் ஹீரோவை திரையில் பார்த்ததுபோல இருக்கிறது.
அழகுப் பதுமையாக பாடல் காட்சிகளில் தோன்றுபவர் அதிரடியாக சண்டை காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். குளோஸப் காட்சிகளில் இத்தனை அழகாக இதுவரையில் அனுஷ்காவை பார்த்ததே இல்லை.
இவருக்கு அடுத்த ஸ்கோர் நிச்சயம் அல்லு அர்ஜூன்தான். ‘கோனா கொண்டா ரெட்டி’ என்கிற வித்தியாசமான பெயருடன் ஒரு தீவிரவாதியாக சித்தரிக்கப்படும் இவரது பேச்சும், ஸ்டைலும் இவர் வரும்போதெல்லாம தியேட்டரை கைதட்டல்களில் அதிர வைக்கிறது. செமத்தியான கேரக்டர் ஸ்கெட்ச்..
ராணாவுக்கு அதிகம் வேலையில்லை என்றாலும் கவனிக்க வைத்திருக்கிறார். அரசனான கிருஷ்ணம்ராஜூ, மந்திரியான பிரகாஷ்ராஜ், சுமன், ஆதித்யா, நித்யா மேனன், கேத்ரின் தெரசா என்று அனைவருமே அவரவர் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.
‘பாகுபலியை’விடவும் மிக அதிகமாக கிராபிக்ஸ் காட்சிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மோஷன் கேப்சரிங் முறையைக் கையாண்டிருப்பதும் தெரிகிறது. பாம்பு ஸ்டைல் அரணும்.. இதைத் தடுக்க கோனா கொண்டா ரெட்டியால் கொண்டு வரட்டும் கருடன் ஸ்டைல் அரணும் கை தட்ட வைத்திருக்கிறது. உடைகள், மேக்கப், அரங்கப் பொருட்கள், அரங்கங்கள் என்று அனைத்திலுமே பார்த்து பார்த்து மேற்கொண்டிருக்கிறார்கள். என்றாலும், இதை இன்னமும் அழகாக அதிகமாகவே செய்திருக்கலாம் என்றும் சொல்லத் தோன்றுகிறது.
சண்டை காட்சிகளில் இன்னமும் அதிக வேகத்தையும், கிராபிக்ஸ் காட்சிகளில் இன்னமும் அதிக திறனையும் காட்டியிருக்க வேண்டும். மட்டுப்படுத்தப்பட்ட சில காட்சிகளால் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
தேவகிரி நாட்டு மன்னன் பேசும் அந்த மாடமே கடைசிவரையிலும் அவர்களுடைய இருப்பிடமாக வருகிறது.. வேறு எதையும் காணோம். அருவி, அந்தப்புர அரங்கங்கள்.. சுமன், ஆதித்யாவின இருப்பிடம், பெண் ஒற்றர் அவர்களிடத்தின் உண்மையைச் சொல்லும் இடம்.. என்று சில இடங்களில் கலை நுணுக்கம் பாராட்டத்தக்கதுதான்.
கிராபிக்ஸ், அனிமேஷன், ஒளிப்பதிவு, இதற்கடுத்து சொல்ல வேண்டியது இசைஞானியின் பின்னணி இசை. பாடல்கள் ஏனோ கவரவில்லையென்றாலும் பின்னணியில் ராஜா அசத்தியிருக்கிறார். போர்க்களக் காட்சிகளின்போது ஒலிக்கும் இசையே, நம்மை அந்தக் காட்சியை லயித்துப் பார்க்க வைத்திருக்கிறது.
எல்லாம் இருந்தும் எல்லாம் இருந்தும் ஏதோ ஒன்று குறை என்பார்களே.. அது போலத்தான்.. குணசேகர் இயக்கிய மற்ற தெலுங்கு மசாலா படங்களை போலவே சட்டு, சட்டென்று தாவும் திரைக்கதையும், அழுத்தமில்லாத இயக்கமும் உணர்வுப்பூர்வமாக இல்லாத சில காட்சிகளால் நம் மனதைத் தொடவில்லை.
அனுஷ்கா இல்லாமல் பார்த்தால் இது சாதாரணமான படமாகவே தோன்றும். அனுஷ்கா இருப்பதால்தான் இது வரலாற்று படமாகவே படமாகியிருக்கிறது என்று தைரியமாகவே சொல்லலாம்.
தெலுங்கு படத்தின் டப்பிங் என்றாலும் தெலுங்கானா தேசத்து நாடுகள், சிற்றரசர்களின் பெயர்கள் சராமரியாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. தெலுங்கு தயாரிப்பாளர் கதையிலும், மாந்தர்களின் பெயர்களிலும், ஊர்ப் பெயர்களிலும் மாற்றம் செய்யாமல் வெளியிட்டிருக்கிறார். அவருக்கு நமது பாராட்டுக்கள்..! இந்த மொழிப் பற்று நம்ம தயாரிப்பாளர்களுக்கும் இருந்தால் எப்படியிருக்கும்..?
ஒரு உண்மைக் கதையை சினிமாத்தனமாக சிறிதளவு மாற்றி ஒரு வரலாற்று அனுபவத்தை நாம் ரசிப்பது போல கொடுத்திருக்கிறார் இயக்குநர். ‘பாகுபலி’ வரிசை படங்களை பார்க்க விரும்புவர்கள் தவறவிடாமல் பார்த்துவிடுங்கள்..!
இதுவும் ஒரு புதிய அனுபவம்தான்..!
|
Tweet |
0 comments:
Post a Comment