04-04-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 3-வது படம் இது. இயக்குநர் எம்.ராஜேஷின் சீடர் ஏ.ஜெகதீஷ் இயக்கியிருக்கும் முதல் படம்.
வழக்கமான காதல் கதைதான். ஆனால் திரைக்கதையில் பல திடீர் திருப்பங்களுடன், இடைவேளைக்கு பின்பு நகைச்சுவை ததும்ப அமைக்கப்பட்டிருக்கும் காட்சித் தொகுப்புகளால் படத்தினை பெருமளவு ரசிக்க முடிகிறது.
தனக்கு ஆதரவளிக்கும் அம்மா.. வழக்கமான அப்பா. மகனை வேலைக்கு அனுப்பி வைக்கத் துடிக்கிறார். ஆனால் மகனான ஹீரோவுக்கு அது பிடிக்கவில்லை. அவருக்குப் பிடித்தது ஊர் சுற்றுவது. அதுவும் சொந்த ஊரான தஞ்சாவூரில் இருந்து திருச்சிக்கு வந்து அங்கே குடி கொண்டிருக்கும் தனது ஆருயிர் நண்பன் சிவக்கொழுந்து என்னும் சந்தானத்தின் சம்பளத்தை காலி செய்துவிட்டு செல்வதுதான் தலையாய பணி.
அப்படியொரு ரெகுலர் பணியினைச் செய்ய திருச்சிக்கு வரும் உதயநிதியின் கண்ணில் படுகிறார் கனவுக்கன்னி ரம்யா என்னும் நயன்தாரா. திருச்சியில் இருக்கும் ஒரு வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றும் இவரை பார்த்தவுடன் வழக்கமான ஹீரோ போல் காதலில் விழுகிறார்.
ஒரு பொண்ணை ஒரே நாள்ல மூணு தடவை தற்செயலா பார்த்தீன்னா அது கண்டிப்பா உனக்கான பொண்ணுதான் என்று ஹீரோவின் அம்மாவே போனில் ஏற்றிவிட.. திருச்சியிலேயே நிரந்தரமாகத் தங்கிவிட முடிவெடுக்கிறார். சந்தானத்தின் ஹோட்டலிலேயே துணை மேலாளராகப் பணியில் சேர்ந்தாலும் முழு நேரப் பணியாக ரம்யாவின் மனதில் இடம் பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்.
மிகுந்த சிரமப்பட்டு காதலுக்கு ஓகே வாங்கும் நேரத்தில் நயன்தாரா சொல்லும் ஒரு சோகக் கதையைக் கேட்டு நக்கலாக சிரித்துவிட காதல் புட்டுக் கொள்கிறது. அதே நேரம் அதே ஊரில் ஸ்கார்பியோ சங்கர் என்னும் மாபெரும் ரவுடி ஒருவரும் இருக்கிறார். அவருடைய ஸ்கார்பியோ கார் வாங்க கடன் கொடுத்த்து நயன்ஸின் வங்கிதான். டியூ கட்டாத்தால் காரை தூக்கி வருகிறார்கள். தன்னுடைய உயிருக்கு உயிரான காரை தூக்கிச் சென்றதால் வங்கிக்கே வந்து நயன்தாராவிடம் சண்டையிட்டுவிட்டுச் செல்கிறார் சங்கர்.
இதே நேரம் திருச்சியில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக வந்து சேர்கிறார் கருணாகரன். இவர் உதயநிதி மற்றும் சந்தானத்தின் பால்ய காலத்து தோழர். இவர்களால் வதைக்கப்பட்டு வளர்ந்தவர். சமயம் கிடைத்தால் இருவரையும் தூக்கி உள்ளே வைக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் தற்செயலாக ஏற்பட்ட ஒரு நிகழ்வில் சங்கர் கத்திக்குத்துப்பட்டு இறந்துவிட அந்த இடத்தில் இருந்த உதயநிதி மற்றும் சந்தானத்தின் மீது கொலை பழி விழுகிறது. இதுதான் சமயம் என்று இன்ஸ்பெக்டர் கருணாகரன் இவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்.
இவர்கள் இந்த வழக்கிலிருந்து தப்பித்தார்களா..? உதயநிதி-நயன்ஸ் காதல் என்ன ஆனது..? என்பதெல்லாம் மிச்சம் மீதிக் கதையில் தெரிந்து கொள்ளலாம்.
முதல் காட்சியே ஜெயிலில் இருந்து உதயநிதி தப்பித்தலில் இருந்தே துவங்குகிறது. இவர்களுக்கு ஏன் இந்த நிலைமை என்று இப்போதைய சினிமாக்களின் பார்முலா போலவே ஆரம்பிக்கும்போதே படத்தின் நிலைமை நமக்குத் தெரிந்துவிடுகிறது.
இடைவேளைவரையிலும் கதை செல்லும் பாதை நம் கண்ணுக்கே தெரியவில்லை. காதல் இருக்கா இல்லையா என்கிற குழப்பத்திலேயே நாம் இருப்பதால் கதைக்குள் ஆழமாகச் செல்ல முடியவில்லை. போதாக்குறைக்கு பிரேம் பை பிரேம் நயன்ஸின் பிரமாண்டமான அழகு வேறு நம்மை ஆட்கொணர்வதால் என்ன செய்வது என்று தெரியாமல் ரசிகர்கள் திக்குமுக்காடுகிறார்கள்.
இடைவேளைக்கு பின்புதான் இயக்குநர் அடித்து ஆடியிருக்கிறார். ராஜேந்திரனின் கொலைச் சம்பவத்திலேயே 3 டிவிஸ்ட்டுகளை சொருகிவைத்துவிட்டு அதனை சமயம் பார்த்து வெளிப்படுத்தும்விதமும், இதற்கு இடைவேளைக்கு முன்பாகவே நயன்தாரா மூலம் ஒரு இணைப்புக் காட்சியை வைத்திருக்கும்விதத்தைப் பார்த்தால் திரைக்கதை இலாகாவினர் ரொம்பவே தங்களது மூளையைக் கசக்கிப் பிழிந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
இடையிடையே வரும் பாடல் காட்சிகள் படத்தின் வேகத்தைக் குறைத்தாலும் நயன்ஸ் இருப்பதால் யாரும் எழுந்து போகாமல் இருக்கிறார்கள். இதுவே இயக்குநருக்குக் கிடைத்த வெற்றிதான்.
உதயநிதி இந்தப் படத்தில் ஒரு காமெடியான சண்டையும் போட்டிருக்கிறார். தமாஷா இருக்குது என்று நாமளே சொல்லிக் கொள்ளலாம். இதிலும் அவருக்கு நயன்ஸ்தான் உதவியிருக்கிறார். பாடல் காட்சிகளில் நன்கு ஆடியிருக்கிறார். ஆனால் நடிப்புதான் காமெடியைத் தாண்டி வர மறுக்கிறது. இதை கொஞ்சம் தாண்டிவிட்டாரென்றால் வேறு ஜர்னலிலும் சென்று ஒரு ரவுண்டடிக்கலாம்.. மனசு வைப்பாரா உதயநிதி ஸ்டாலின்..?
நயன்ஸை பத்தி என்னவென்று சொல்வது..? வயதானாலும் அழகு இவருக்கு மட்டும் கூடிக் கொண்டே செல்கிறது. பாடல் காட்சிகளில் காட்டும் நளினமும் நயனமும் இவருக்கு மட்டுமே உண்டு என்றே சொல்ல வைத்திருக்கிறது. தன்னுடைய சோகத்தைச் சொல்லியும் அதை மதிக்காமல் சிரிக்கிறார்களே என்கிற கோபத்தை வெளிப்படுத்தும் காட்சிகளில் நிஜமாகவே உச்சு கொட்ட வைத்திருக்கிறார். காதலை ஏற்றுக் கொள்வதை வெளிப்படுத்தும் போதும் பின்பான காட்சியில் அதை மறுதலிக்கும் காட்சியிலும் நடிப்பைக் கொட்டியிருக்கிறார். இவருக்கு சரியான போட்டியாளராக இருந்திருக்க வேண்டிய உதயநிதி சரி பாதியாக மட்டுமே காட்சியளிக்கிறார் என்பது சோகமானதுதான்..!
சந்தானத்தின் அலப்பறை காமெடி இதில் மிஸ்ஸிங் என்றாலும் சில சில இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். ஹோட்டலுக்கு தள்ளிட்டு வருபவர்களை அவர் அடையாளம் கண்டு கொண்டு விரட்டியடிக்கும் காட்சிகளும், ஷெரீனுடனான காதல் காட்சி எபிசோடுகளும் அமர்க்களம்..! இது ஷெரீன்தானா.. பப்ளிமாஸ் மாதிரி குஷ்புவுக்கு போட்டியாக வந்திருக்கிறார்.
ஷெரீனின் அப்பாவாக பட்டிமன்றம் ராஜா, உதயநிதியின் அப்பா சாயாஜி ஷிண்டே, அம்மா ரஞ்சனி, ஸ்கார்பியோ சங்கராக நடித்திருக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்.. சூஸன், ஹோட்டல் அதிபர் சித்ரா லட்சுமணன், கருணாகரன், மனோபாலா என்று பல நட்சத்திரங்கள் அணி வகுத்து அமர்க்களப்படுத்தியிருந்தாலும் நகைச்சுவை படமென்பதால் அனைவருமே மிக எளிதாக மறந்து போகிறார்கள்.
பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் அத்தனை நட்சத்திரங்களுமே அழகாகத்தான் இருக்கிறார்கள். நயன்ஸின் அழகை இன்னும் கொஞ்சம் கூட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். விவேக் ஹர்ஷனின் எடிட்டிங்கினால் படத்திற்கு ஒரு இறுக்கமான சூழல் இடைவேளைக்கு பின்பு கிடைத்திருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜின் இசை மட்டும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நடனத்தை சிறப்பாக அமைத்திருந்தாலும் இசை மட்டும் ஒட்டவில்லை என்பது வருத்தமான விஷயம்.
இயக்குநர் ஜெகதீஷின் முதல் படம் என்பதால் அதிகமாக குறைகளை சொல்லி அலட்சியப்படுத்தாமல், நிறைகளை நிறையவே சொல்லி ஊக்கப்படுத்துவோம். நகைச்சுவை நடிகர்களை போலவே நகைச்சுவை இயக்குநர்கள் கிடைப்பதும் அரிது. இவருடைய மிகப் பெரிய பலமே நல்ல வசனங்கள்தான். உதயநிதி-சந்தானம் காம்பினேஷனில் வசனத்திற்கென்று ஒரு போட்டியே வைத்திருக்கிறார்கள் இந்தப் படத்தில். அத்தனையும் கடுகு தாளித்தல் ரகம்..! பாராட்டுக்கள் இயக்குநருக்கு..!
இந்த வாரத்திய நகைச்சுவை படம் இது ஒன்றே ஒன்றுதான் என்றாலும் படம், பொழுது போக்கிற்கு ஒரு கியாரண்டி என்றே சொல்லலாம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment