துணை முதல்வர் - சினிமா விமர்சனம்

13-04-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு இயக்குநர் திலகம் கே.பாக்யராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி முதன்மை கேரக்டரில் நடித்திருக்கும் படம்.
இப்போதைய யூத்துகளுக்கேற்றாற்போல் என்னாலும் படம் எடுக்க முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே திரைக்கதையை அவசரமாக அமைத்திருக்கிறார் போலிருக்கிறது..! எல்லாம் விழலுக்கு இழைத்த நீர்தான்..!

ஊரிலேயே பெரிய படிப்பு படித்தவர்கள் பாக்யராஜூம், ஜெயராமும். 5, 3-ம் வகுப்புகள்வரையிலும் படித்து முன்னேறியவர்கள். பங்காளிகள்.. பாக்யராஜ் தன்னுடைய தங்கையை டீச்சருக்கு படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இவருடைய மனைவி ஸ்வேதா மேன்ன். 5 வயதில் ஒரு பையன். ஜெயராமுக்கு சந்தியா ஜோடி.
அந்த ஊரில் போக்குவரத்தெல்லாம் பரிசல் மூலமாகத்தான். சாலை வசதியே இல்லை. பிரசவத்திற்காகவும், அவசர மருத்துவ சிகிச்சைக்காகவும் பரிசல் மூலமாகச் சென்றவர்கள் திடீர் வெள்ளத்தில் மூழ்கி இறந்து போன சோகங்கள் அந்தக் கிராமத்தில் இன்னமும் பசுமை மாறாமல் இருக்கின்றன.
சட்டப் பேரவைத் தேர்தல் வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் ஊருக்கு பாலம கட்டித் தருகிறோம் என்று சொல்லி ஓட்டை வாங்கிக் கொண்டு ஜெயித்த பின்பு ஊர்ப் பக்கமே வராமல் இருந்த அரசியல்வியாதிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள் ஊர் மக்கள். இந்த முறை தங்களது கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒருவரையே நிறுத்துவது என்று முடிவெடுக்கிறார்கள்.
ஜெயராம், பாக்யராஜை கை காட்ட பாக்யராஜ் வேட்பாளராகிறார். பாலம் கட்டுதல்.. பள்ளிகள் இல்லாத்து.. மருத்துவமனைகள் வராத்து ஆகிய முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தே பாக்யராஜ் தேர்தலில் வெற்றி பெற்று விடுகிறார்.
முதன்முதலாக சென்னைக்குள் கால் வைக்கும் அவருக்கு அப்போதைய அரசியல் சூழ்ச்சிகள் புதிதாக இருக்கின்றன. சம அளவிலான எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் பாக்யராஜின் ஒரு ஓட்டு ஆதரவில்தான் புதிய ஆட்சியே அமையும் என்கிற நிலைமை. கா.கா.தே.கா. என்கிற கட்சிக்கு தனது ஆதரவைக் கொடுத்து துணை முதல்வர் பதவியையும் பெறுகிறார் பாக்யராஜ்.
சட்டப் பேரவையின் முதல் நாளிலேயே ஆளும் கட்சியினரால் அவருக்கு பிரச்சினை ஏற்பட இனி எனது ஓட்டு எதிர்க்கட்சிக்குத்தான் என்று சொல்லி எதிரணிக்குத் தாவுகிறார். ஆட்சி நித்திய கண்டம் பூரண ஆயுசு மாதிரி ஆகிறது. துணை முதல்வரை இரு தரப்புமே வலைவீசித் தேட.. அவரோ தனது கிராமத்திற்கு பாலம் கட்டுவது மட்டுமே தனது லட்சியம் என்கிறார்.
இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறாரே என்ற நினைப்பில் இரு கட்சியினரும் அவரை மிரட்டுகிறார்கள். பாக்யராஜ் இறந்துவிட்டால் இடைத்தேர்தல் வரும். அதில் தங்களது கட்சிக்காரரை நிறுத்தி ஜெயித்துவிடுவோம் என்று இரண்டு முக்கிய கட்சிகளுமே சவால்விட.. பாக்யராஜ் இப்போது யோசிக்கிறார்.
இடைத்தேர்தல் வந்தால் கிராமத்திற்கு கேட்பதையெல்லாம் செய்து தருவார்களே என்கிற எண்ணத்தில் தான் இறந்துவிட்டதாக ஒரு செட்டப்பை செய்யச் சொல்லி விளையாடுகிறார். ஜெயராமின் தூண்டுதலிலும், ஒத்துழைப்பிலும் இது சரியாகவே நடந்தேறுகிறது..
தேர்தல் நாளுக்குள் அந்த ஊருக்கு பாலம், மருத்துவமனை, பள்ளிக்கூடம் மூன்றுமே கட்டி முடிக்கப்பட்டுவிட்டால்.. தேர்தல் நாளன்று தனது வனவாசத்தை முடித்துவிட்டு ஊருக்குள் வந்து தான் உயிருடன் இருப்பதைச் சொல்லிவிட நினைக்கிறார் பாக்யராஜ். அது முடிந்ததா இல்லையா என்பதுதான் மிச்சம், மீதிக் கதை.
திரைக்கதை மன்ன்ன் என்று பெயரெடுத்தவர் பாக்யராஜ். அதெல்லாம் ஒரு காலம் என்று சொல்ல வைத்திருக்கிறது இந்தப் படம்.
பாக்யராஜ் தனியாக ஒரு கட்சியை நடத்தியிருக்கிறார். அ.தி.மு.க., தி.மு.க. இரு கட்சிகளிலும் இருந்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இத்தனையாண்டு கால பொது வாழ்க்கைக்கு பின்பும் இப்படியொரு கதையை தேர்வு செய்ய இவருக்கு எப்படி மனது வந்தது என்று தெரியவில்லை..
பொதுமக்கள் தங்களுடைய கிராமத்தின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்க அரசுகளை அணுகும் முறையை இதற்கு முன்பு சேரனின் தேசிய கீதமும் இப்படித்தான் ஆராய்ந்த்து. ஆனால் தோல்வியடைந்த்து.. காரணம் அரசியல்வாதிகளின் உண்மை முகத்தைக் காட்டாமல் மூடி மறைத்து சொன்னதுதான். இதேதான் இந்தப் படத்திற்கும்..!
தங்களுடைய கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் ஓட்டு போடவே மாட்டோம் என்று எச்சரித்தை பல கிராமங்கள் தங்களுடைய தேவையை பூர்த்தி செய்திருக்கின்றன. மேலும் இப்போதைய நிலைமையில் அவரவர் சார்ந்த கட்சியினர் அதே ஊரில் இருந்தால் தங்களது கட்சியினை வளர்க்க அவர்கள் கையிலெடுப்பதும் மக்கள் நலன்தான்.
அப்படியிருக்க. இப்படி ஒரு இடைத் தேர்தலை திட்டமிட்டு வரவழைத்து அதன் மூலமாக பாலம் கட்டி, பள்ளிக்கூடம் கட்டி, மருத்துவமனை அமைக்கிற கதையெல்லாம் முடிகிற விஷயமா..? தேர்தல் கமிஷனின் விதிமுறைகளின்படி தேர்தல் நடைபெறும் தொகுதியில், தேர்தல் நடைபெறும் காலக்கட்டத்தில் எந்தவொரு அரசு திட்டமும் மேற்கொள்ளக்கூடாது. எத்தனை தேர்தல் பிரச்சாரங்களில் ஊர், ஊராகச் சுற்றியிருக்கும் பாக்யராஜ் எப்படி இதனை சுலபத்தில் மறந்து போனார் என்று தெரியவில்லை.
திரைக்கதையில் அரதப்பழசான அவருடைய டிரேட் மார்க் விஷயமும் ஒன்று உண்டு. அதனை முற்றிலும் தவிர்த்திருக்கலாம். இப்போதைய இளைஞர்களும், பெண்களும் இதையெல்லாம் தாண்டி எங்கயோ போய்விட்டார்கள். எதற்கு இந்த வீணான ஜொள்ளு வேலை..?
புதிய இயக்குநரின் இயக்கத்தில் அனைவருமே நன்றாகவே நடித்திருக்கிறார்கள். பாக்யராஜின் நடிப்புதான் சில இடங்களில் சகிக்கவில்லை. அவர் கோபப்படும் காட்சிகளெல்லாம் காமெடியாக இருக்கின்றன.  நெகிழ்ச்சியான சம்பவங்களில்கூட அப்படியொரு பீலிங் வரவேயில்லை என்பது மகா கொடுமை.
ஸ்வேதா மேன்ன் மாதிரியான ஒரு நடிகை தமிழில் கிடைக்கவே மாட்டார்கள். எனவேதான் வசதியாக மலையாளத்தில் இருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். கொஞ்சம் கவர்ச்சியும், கூடுதலாக கிளாமரும் காட்டி படத்தின் தேவையை பூர்த்தி செய்திருக்கிறார். கேரளத்து சேச்சியல்லோ பாடல் காட்சியில் ஒரு கிறக்கமாக ஆடி ரசிகர்களையும் கிறங்க வைத்திருக்கிறார்.
ஜெயராம் காமெடி செய்திருக்கிறார். அல்லது செய்ய முயற்சித்திருக்கிறார். ஹோட்டல் அறையில் எதிர்க்கட்சியை சேர்ந்தவருடன் அறையைவிட்டு வெளியேற மாட்டேன் என்று அடம் பிடிக்கும் காட்சியைத்தான் மிகவும் ரசிக்க முடிந்தது.. இப்படி அவ்வப்போது ஏதாவது ஒரு சில காட்சிகளில் தன்னையும் அறியாமல் சிரிக்க வைத்து, கை தட்டவும் வைத்திருக்கிறார் இயக்குநர். காதல் சந்தியா ஜெயராமுக்கு ஜோடி. ஒட்டவில்லை. ஆனாலும் நடித்திருக்கிறார். பாக்யராஜின் தங்கை கேரக்டரில் நடித்த பொண்ணுக்கு ஒரு ஷொட்டு. திரைக்கதையின் ஓட்டையில் இவரது போர்ஷன் சுவையில்லாத்தாக இருந்தாலும் நடிப்பில் குறை வைக்கவில்லை.  
படம் முழுவதும் தர்மபுரி மாவட்டத்தில் ஒகனேக்கல் அருகிலிருக்கும் கிராமங்களில் படமாக்கியிருக்கிறார்கள். கேமிராமேனுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் வேலையைக் கொடுத்திருக்கலாம்.  கேரளத்து சேச்சி பாடல் மட்டுமே முணுமுணுக்க வைத்த்து. ஸ்வேதா, சந்தியாவை வைத்தே ஒரு கிளப் டான்ஸும் உண்டு.
படம் முழுவதுமே கொஞ்சம் எரிச்சலை கொடுத்த விஷயம்.. ஒரே விஷயத்தை இரண்டு, மூன்று முறைகள் திருப்பித் திருப்பிச் சொல்வதுதான். வசனமே இல்லாமல் காட்சியமைப்பிலேயே படத்தை நகர்த்திச் செல்லும்விதத்தை இப்போது பல இயக்குநர்கள் செய்து வரும் நிலையில் இப்படி சீரியல் டைப்பில் வசனங்களை எழுதி கொலை, கொலையாக செய்தால் எப்படி..?
படத்தின் மையக் கருவே நம்பகத் தன்மை இல்லாததாக இருப்பதால்தான் படமும் ரசிக்க முடியாதபடிக்கு போய்விட்டது. அதிலும் கிளைமாக்ஸ் காட்சி அரதப்பழசு. காட்சிகளை வேக, வேகமாக முடிப்பதற்கேற்றாற்போன்று திரைக்கதையையும் வசதியாக எழுதி வைத்துக் கொண்டு இயக்கியிருக்கிறார்கள். இதனாலேயே படம் உப்புச் சப்பில்லாத ஒரு சாம்பாராக மணக்கிறது..!
துணை முதல்வர் – அந்தப் பதவியை அலங்கரிக்கவில்லை..!

0 comments: