கங்காரு - சினிமா விமர்சனம்

27-05-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ என்று ராத்திரி 10 மணிக்கு மேல் பார்க்க வேண்டிய கதையில் படமெடுத்து கோடம்பாக்கத்தை குறி வைத்துத் தாக்கியவர்களுக்கு பிளாட்பார்ம் போட்டுக் கொடுத்த இயக்குநர் சாமியை அவரது சொந்தத் தாயே வறுத்தெடுத்த்தால் இந்த முறை தாய் மீது சத்தியமாக சாத்வீகமான படத்தை எடுத்து என்னுடைய கதைத் திறமையை நிரூபிக்கிறேன் என்று சொல்லி களத்தில் குதித்திருக்கிறார்.
ஒருவன் திருந்தி வாழ முற்பட்டால் இந்த சமூகம் அதற்கு வழிவிடாது என்கிற பேச்சை துடைத்தெறிந்திருக்கிறார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. இயக்குநர் சாமியின் இந்த நல்ல பிள்ளை வேடத்திற்கு மேடை போட்டுக் கொடுத்து கூடவே தோள் கொடுத்து படத்தில் ஆர்மோனியமும் வாசித்திருக்கிறார் தயாரிப்பாளர். இதற்காக இவருக்கு ஒரு பூச்செண்டை பரிசளித்துவிடுவோம்.
பாசமலர் என்ற ஒரேயொரு படமே ஆதி தமிழனுக்கும், இனி கடைசிவரை இருக்கப் போகிற அக்மார்க் தமிழனுக்கும் அண்ணன்-தங்கை பாசம் என்றால் என்னவென்று எடுத்துக்காட்டும் படமாக இருக்கப் போகிறது. இதன் அடித்தளத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பாசம் அபரிமிதமானால் என்ன விளைவு கிடைக்கும் என்பதை இக்காலத்திற்கேற்றாற்போல கொஞ்சம் மாற்றி கொடுத்து நம்மை உஷார்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சாமி.

கொடைக்கானலில் டீக்கடை நடத்துகிறார் ஹீரோ அர்ஜூனா. படிக்காதவர். அதற்கேற்றார்போலவே நடந்து கொள்கிறார். சாதாரணமானவர் இல்லை என்பது அவரது நடை, உடை, பாவனையிலேயே தெரிகிறது. ஆனால் தங்கை பிரியங்கா மீது பாசமானவர். உயிரானவர்.  தங்கை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்பவர்.
அர்ஜூனா ராஜ்கிரணுக்கு தம்பி மாதிரியே சாப்பிடுகிறார். குடிக்கிறார். முரடனாகத் தெரிகிறார். இவரையும் வர்ஷா என்னும் ஒரு அல்வா துண்டு காதலிக்கிறது. இந்த வர்ஷாவின் அக்கா ஊரில் பலான தொழில் செய்கிறார். ஊரையே வளைத்துப் போட்டு வைத்திருக்கும் இவரது அக்கா, தங்கை வர்ஷாவையும் கல் தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த் தொழிலில் ஈடுபட வைத்து ஹைடெக் டெக்னாலஜியில் தொழிலை வளர்க்க முனைகிறார். ஆனால் வர்ஷாவோ மறுக்கிறார்.
அர்ஜூனாவின் தங்கை பிரியங்கா. தனது அண்ணன் மீது அவரளவுக்கு பாசமாக இருக்கிறார். அண்ணன் எல்லை மீறும் போதெல்லாம் கண்டிக்கிறார். தண்டிக்கிறார்.
ஊரில் ‘மாமா’ வேலை பார்க்கும் காலாபவன் மணிக்கு இந்த பிரியங்கா மீது ஒரு தலைக்காதல். அடைய வேண்டும் என்று நினைக்கிறார். பிரியங்காவை தூக்க முயற்சித்தபோது செய்தியறிந்து வரும் ஹீரோ அவரை அடித்து துரத்த.. பகையாகிறது.
பிரியங்காவுக்கு திருமணம் செய்து வைக்க எண்ணமிடுகிறார் இவர்களது குடும்ப நண்பரான முருகேசன் நாடார் என்னும் தம்பி ராமையா.  பிரியங்காவின் ‘தல’ பைத்தியத்தை தெரிந்து கொண்டு ‘தல’ படத்தின் டிவிடிக்களை வீடு தேடி வந்து கொடுத்து பிரியங்காவையும் காதல் வலைக்குள் விழ வைக்கிறார் ஒரு காதலர். தம்பி ராமையாவின் சமாதானத்தில் இத்திருமணத்திற்கு அர்ஜூனா ஒத்துக் கொள்ள திருமணம் நிச்சயமாகிறது.
திடீரென்று மாப்பிள்ளை இறந்துவிட ஸ்தம்பிக்கிறது வீடு. கதறியழும் பிரியங்காவை சமாதானப்படுத்துகிறாள் வர்ஷா. இப்படியே விட்டுவிட முடியுமா என்ன..? அடுத்த மாப்பிள்ளையை ரெடி செய்கிறார் தம்பி ராமையா. அந்த மாப்பிள்ளையும் திருமண பத்திரிகையெல்லாம் அடித்த பின்பு கரண்டு கம்பியில் சிக்கி உயிரை விடுகிறார்.
இனிமேல் இந்த ஊரில் இருந்தால் பிரியங்காவிற்கு மனம் ஆறாது என்று சொல்லி தன் ஊருக்கு அழைத்துச் செல்கிறார் இவர்களை சின்ன வயதில் இருந்தே தெரிந்து வைத்திருக்கும் ஆர்.சுந்தர்ராஜன். அங்கே சுந்தர்ராஜனின் மைத்துனர் ஒருவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.  இவர் மனைவியை இழந்தவர். இளம் வயதுக்காரர். இது போதாதா தம்பி ராமையாவுக்கு.. இங்கேயும் தம்பி ராமையா மீண்டும் கல்யாணப் பேச்சை எடுத்து சீக்கிரமாக கோவிலில் திருமணத்தை நடத்தி வைத்துவிடுகிறார்.
இதன் பின்பு திடீரென்று ஒரு நாள் பிரியங்காவின் கணவரை யாரோ ஒருவன் தாக்கிவிட அவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். பதறும் அர்ஜூனின் குடும்பத்தினருக்கு இப்போது சந்தேகம் வருகிறது. யாரோ வேண்டுமென்றே செய்கிறார்களோ என்ற எண்ணத்தில் போலீஸில் புகார் தெரிவிக்கிறார்கள்.
போலீஸ் விசாரணையில் கலாபவன் மணி, வர்ஷாவின் அக்கா, ஜீப் டிரைவர்கள் என்று பலர் மாட்டியும் உண்மை தெரியாமல் இருக்கிறது. இதற்கு முன் பலியான இரண்டு மாப்பிள்ளைகளுமே கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் இப்போது எழுகிறது. மருத்துவமனையில் இருக்கும் பிரியங்காவின் கணவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. என்றாலும் கொலைகாரன் அவரைத் தேடி வரலாம் என்று இரு தரப்பினருமே காத்திருக்கிறார்கள்.
முன்னர் நடந்தது கொலைகளா..? யார் அந்த கொலைகாரன்..? எதற்காக பிரியங்காவின் கணவனை கொலை செய்ய முயன்றான் என்பது சஸ்பென்ஸ். இதை கண்டிப்பாக நீங்கள் தியேட்டருக்கு சென்றுதான் பார்த்து தெரிந்து கொண்டாக வேண்டும்.
அண்ணன்-தங்கை பாசக் கதையை ஒரு சைக்காலஜிக்கல் திரில்லராக கொடுத்திருக்கிறார். இடைவேளைக்கு முன்பான ஒரேயொரு காட்சியில் இதற்கான லின்க் கிடைக்கிறது என்றாலும் கொஞ்சம் உற்றுக் கவனித்தால்தான் அது புரியும்.
சாமியின் இயக்கத்தைப் பற்றி குறையே சொல்வதற்கில்லை. இதற்கு முன்பான படங்களிலெல்லாம் கதைகள் வில்லங்கமாக இருந்தாலும் நடிப்பில் குறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு இயக்கத் திறமையைக் காட்டியிருந்தார். இதிலும் அப்படியே..!
நடிப்பில் அனைவரையும் தூக்கிச் சாப்பிட்டிருப்பது காலாபவன் மணிதான். என்னவொரு எகத்தாளம்.. துள்ளல்.. டயலாக் டெலிவரி.. என்று தனக்குக் கிடைத்த காட்சிகளிலெல்லாம் தனி ஸ்கோர் செய்திருக்கிறார் மணி. இவராலேயே இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையெல்லாம் வெகுவாக ரசிக்க முடிந்த்து.
ஹீரோ அர்ஜூனாவுக்கு இது புதிய களம். முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு எதுவும் தெரியாத முரடன்போல பேசவும் வேண்டும். நடிக்கவும் வேண்டும் என்றால் கஷ்டம்தான். கஷ்டத்தோடு கஷ்டமாகத்தான் நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில்தான் ஒட்டு மொத்த நடிப்பையும் காட்டி தனது பெயரை பதிவு செய்திருக்கிறார்.
பிரியங்கா என்னும் தமிழ்ப் பெண் சமீபமாக பல படங்களில் நல்லவிதமாகவே நடித்து புகழ் பெற்றிருக்கிறார். இதிலும் அப்படியே..! அண்ணனுடன் மோதும் சண்டையிலும், அண்ணனிடம் அடி வாங்கியவனிடம் மன்னிப்பு கேட்டு வரச் சொல்லி திட்டுவதிலும்,  இறுதியில் உண்மை தெரிந்து அதிர்ச்சியான நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் பேசுவதிலும் ஒரு தங்கையாக அந்தக் கேரக்டரின் நிஜத்தை உணர்த்தியிருக்கிறார். பாராட்டுக்கள்.. சிறந்த நடிகை என்று பெயரெடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறார்.
வர்ஷா அஸ்வதி என்னும் இன்னொரு ஹீரோயின் ஒரு கண் லேசாக மூடியிருந்தாலும் அதுவே கவர்ச்சியாகத்தான் இருக்கிறது. இடைவேளைக்கு பின்பு ஜில்லிஸான குரலில் “என் ஏத்தத்துக்கும் என் இறக்கத்துக்கும் என்னா குறை?” என்று கேட்டு பாடும் பாடல் காட்சியில் நடன அசைவுகளால் அசர வைத்திருக்கிறார்.  இயக்கம் சிறப்பாக இருப்பதினால் இவரது நடிப்பும் கவனத்தை ஈர்க்கிறது.
முருகேச நாடாராக தம்பி ராமையா. முதல் சில காட்சிகளிலேயே வர்ஷாவின் அக்கா கடைக்கு வந்தவுடன் பேசும் வசனங்கள் அக்மார்க் சாமி வசனம் மாதிரியே இருக்கே.. படமும் அப்படியா என்கிற சிறிய சந்தேகத்தை காட்டியது. பின்பு போகப் போக பாசத்தைப் பிழிந்தெடுத்து கொன்றுவிட்டார் தம்பி ராமையா. ஆர்.சுந்தர்ராஜனிடம் சின்னப் பிள்ளைல இருந்து என் பிள்ளைக மாதிரி வளர்த்திருக்கேன் ஸார். இப்போ நீ யாருன்னு கேக்குறானே என்று கேட்டு அங்கலாய்க்கும் காட்சியில் உச்சுக் கொட்ட வைத்திருக்கிறார்.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், இயக்குநர் சாமியும்கூட அரிதாரம் பூசியிருக்கிறார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிதான் பிரியங்காவின் கணவராக நடித்திருக்கிறார். அளவோடு நடித்திருக்கிறார். நிச்சயமாக நீங்க இனிமேலும் நடிப்பைக் கொட்டலாங்ஙகண்ணா..! காட்டுங்கண்ணா.. நடிங்கண்ணா..!
இயக்குநர் சாமி இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்து இன்னொரு நடிகரின் வாய்ப்பில் ஆப்படித்திருக்கிறார். ஆனால் இன்ஸ்பெக்டர் கெத்து குறையாமல் பேசியிருப்பதை பார்த்தால் இவரும் அடுத்து நடிக்கப் போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது..!
ராஜரத்னத்தின் ஒளிப்பதிவில் கொடைக்கானல் மலைப்பகுதியின் வனப்பு தென்படுகிறது. குறையொன்றுமில்லை என்று சொல்லும் அளவுக்கு பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவின் உழைப்பு இருக்கிறது. வர்ஷா பாடல் காட்சியில் அபாரம் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது ஒளிப்பதிவும், நடன இயக்கமும்.
இது எல்லாவற்றையும் மீறி குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது இன்னொன்று அது படத்தின் எடிட்டிங். எடிட்டர் மணிகண்டன் சிறப்பாக செய்திருக்கும் படத் தொகுப்பினால், படம் எந்த இடத்திலும் தொய்வில்லாமல் செல்ல உதவியிருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியில் பரபரப்பைக் கூட்டியிருப்பதில் பெரும் பங்கு எடிட்டிங்கிற்குத்தான்.. ஒரேயொரு பாடல் காட்சியிலேயே ஹீரோவின் இளமைப் பருவக் கதையைச் சொல்லி படத்தின் நீளத்தைக் குறைத்து அனுமதித்திருக்கும் இயக்குநருக்கு நமது நன்றிகள்..! ‘நச்’சென்று சுருக்கமாக இருந்தது.
இந்த உலகத்தில் அனாதையாய் வளர்ந்த ஒருவனின் வாழ்க்கை எப்படியெல்லாம் தடுமாறும் என்பதை இந்தப் படத்தின் ஹீரோவின் கேரக்டர் ஸ்கெட்ச் மூலமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குநர். தெளிவான கதை.. அளவான காட்சிகள்.. நிறைவான இயக்கம்.. என்று அனைத்திலுமே ‘கங்காரு’ சிறப்பானதுதான். இது போலவே இனியும் சாமியின் படங்கள் சாமியாடினால் நல்லது..!

0 comments: