28-02-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனமும், ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தைத் தயாரித்திருக்கின்றன. சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் ஹீரோவாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக ஓவியா, மீரா நந்தன் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடித்திருக்கிறார்.
மற்றும் விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, நரேஷ், தம்பி ராமையா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சிங்கம் புலி, ‘காதல்’ தண்டபாணி, நளினி, டெல்லி கணேஷ், மோகன்ராம், ஜி.எம்.குமார், சந்தானபாரதி, ரேகா சுரேஷ், வின்சென்ட் அசோகன், ‘கானா’ உலகநாதன் என்று மிகப் பெரிய பட்டாளமே நடித்திருக்கிறது. சரத்குமாரின் சொந்தக் கதை இது. கிரைம் கதை மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை அமைத்தியிருக்கிறார். கூடுதல் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.வெங்கடேஷ்.
ஒளிப்பதிவு – N.S.உதய்குமார், இசை – ஜேம்ஸ் வசந்தன், பாடல்கள் – மோகன்ராஜ், சுமதிஸ்ரீ, எடிட்டிங் – V.T. விஜயன், கலை – ரூபேஷ், ஸ்டண்ட் – ஸ்டண்ட் சிவா, நடனம் – கல்யாண், விஷ்ணு தேவா, தலைமை செயல் அதிகாரி – பா..சக்திவேல், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – A.N.சுந்தரேசன், தயாரிப்பு மேற்பார்வை – வினோத் சபரீசன், தயாரிப்பு – R.சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன், வசனம் இயக்கம் – A.வெங்கடேஷ் .
கும்பகோணத்தில் அரசியல்வாதிகளைவிடவும் அதிகமாக அராஜகம் செய்து வருகிறார் சர்வேஸ்வரன் என்கிற வில்லன் சரத்குமார்.
இவர் தன்னுடைய எதிரிகளை வித்தியாசமான முறையில் ‘ஒப்வாலசிகா’ என்கிற கெமிக்கல் முறையில் தீர்த்துக் கட்டுகிறார். ஒரு சின்னஞ்சிறிய குடுவையில் இந்த வாயுவைப் பிடித்து அடைத்து வைத்திருக்கும் சூழலில், குடுவையைத் திறந்து வைத்தால் நான்கே விநாடிகளில் அதன் அருகில் இருப்பவர் 100 சதவிகிதம் தீக்காயம்பட்டவரை போலாகி மரணமடைவார்.
இவருடைய அராஜகத்தை அடக்கியொடுக்க கும்பகோணத்திற்கு டி.ஜி.பி.யின் நேரடி உத்தரவின் பேரில் மாற்றலாகி வருகிறார் சமுத்திரக்கனி. இவரை இங்கேயே விட்டுவைத்தால் தனக்கு ஆபத்து என்று கருதி ஒரு நாள் இவருக்கும் நாள் குறித்து பரலோகம் அனுப்ப திட்டமிடுகிறார் வில்லன் சரத்குமார்.
இதே நேரம் பொள்ளாச்சியில் வசிக்கும் இளைய சரத்குமார், தான் ஒரு போலீஸ் ஆபீஸர் என்பதையே தனது தந்தையைத் தவிர தனது குடும்பத்தினர் யாரிடமும் சொல்லிக்காதவர். சட்.. சட்டென்று ஊர், ஊராகச் சென்று குருவியைச் சுடுவதை போல ரவுடிகளை என்கவுண்ட்டர் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதற்கு போலீஸ் மேலிடத்தின் ஆதரவும் உண்டு.
கும்பகோணத்தில் இருந்து பொள்ளாச்சி வந்த சமுத்திரக்கனி அங்கே வில்லன் சரத்குமாரின் ஆட்களால் கொல்லப்பட இப்போது நண்பனுக்காக பழிக்குப் பழி வாங்க கும்பகோணத்திற்கு வருகிறார் இளைய சரத்குமார். அதைச் செய்து முடித்தாரா இல்லையா என்பதுதான் மிச்சம், மீதி கதை..!
இப்போதெல்லாம் வில்லன்கள் ஹீரோக்களைவிடவும் அதிகம் பேசப்படுகிறார்கள் என்கிற கான்செப்ட்டின்படி வில்லன் கேரக்டரையும் தானே செய்திருக்கிறார் சரத்குமார்.
கிளைமாக்ஸ் சண்டை காட்சியின்போது துள்ளலுடன் எகத்தாளத்துடனும் பேசும்போது மட்டும் வில்லனாக ரசிக்க முடிகிறது. மற்றபடி எப்போதும் ஹீரோவாக பார்த்தவர்கள் சட்டென்று மனநிலை மாறுவது கடினம்தான்..!
இளைய சரத்குமார் அதேபோலத்தான். கவுண்டமணி, வடிவேலுகூடவெல்லாம் சக்கை போடு போட்டவர் இப்போது தம்பி ராமையா, வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் மல்லுக் கட்ட வேண்டியிருக்கிறது.
பாடல் காட்சிகளில் எப்போதும் தனக்கிருக்கும் சிக்ஸ் பேக் உடம்பைக் காட்டியதால், அதே பாடல் காட்சிகளில் அதே சிக்ஸ் பேக் காட்டி அசத்தலாக ஆடியிருக்கும் ஓவியாவை ரசிக்கவிடாமல் செய்திருக்கிறார். என்னண்ணே இப்படி பண்றீங்களேண்ணே..?
தம்பி ராமையாவின் புலம்பல் சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது. படத்துக்கு படம் அண்ணனின் நடிப்பு கேரியர் ஏறிக் கொண்டேதான் இருக்கிறது.. வெண்ணிற ஆடை மூர்த்தியின் வழக்கமான நகைச்சுவை கலந்த ‘பிட்டு’ பேச்சுகள் இதிலும் உண்டு. கொஞ்சம் நைஸாக அதனை திணித்திருக்கிறார்கள்.
குடும்ப குத்துவிளக்காக மீரா நந்தன். கவர்ச்சிக்கு ஓவியா.. முன்னவருக்கு கொஞ்சம் நடிப்புடன் கூடிய வேடம்.. ஆனால் ஹீரோவுடன் பார்க்கும்போது அப்பா-மகள் போல இருக்கிறார்கள். பின்னவருக்கு கவர்ச்சியுடன் ச்சும்மா வந்து போகும் வேடம்.. திடீரென்று வருகிறார். அடுத்த காட்சியிலேயே தான் ஒரு போலீஸ் ஆபீஸர் என்கிறார்.. இப்படி படமே ரன் வேகத்தில் போகும்போது இவர்களை எப்படி கவனித்துக் கொண்டேயிருப்பது..?
கமர்ஷியல் படங்களுக்கே உரித்தான வேகத்தில்.. பல திருப்பங்களில் படம் செல்வதாலும், இயக்குநர் ஏ.வெங்கடேஷன் வழக்கமான இயக்கத்தினாலும் எந்தக் காட்சியும் மனதில் அழுத்தமாக பதியாமல் போய்விட்டது.
ராஜேஷ்குமாரின் திரைக்கதை சிறப்பாக இருந்தும் படத்தின் முடிவு இடைவேளையின்போதே தெரிந்துவிடுவதால் எப்படி சாகிறார் என்பதை பார்ப்பதற்காகவே கடைசிவரையிலும் உட்கார்ந்து பார்த்தோம் என்றாகிவிட்டது.
சமுத்திரக்கனியின் தீர்க்கமான பார்வையே அவர் ஏற்கும் வேடத்திற்கு கம்பீரத்தை அளிக்கிறது. இதிலும் அப்படியே..! இயல்பாக வந்து சென்றாலே போதுமென்னும் அளவுக்கு நடித்திருக்கிறார். வின்சென்ட் அசோகனும் இன்னொரு தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ் அதிகாரியாக வந்திருக்கிறார்.
ஜேம்ஸ் வசந்தனின் இசையில் பாடல்கள் ஒலித்தன. சரத்குமார், ஓவியா டூயட் பாடல் ஓகேதான் என்றாலும் இன்னுமொரு சரணத்தைக் கூடுதலாக வைத்து நேரத்தைக் கூட்டியிருக்கலாம். லொகேஷனும், ஓவியாவும், அவரது சிக்ஸ் பேக்கும் அப்படியொரு அழகு..! ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமாரின் கேமிராவுக்கு நன்றிகள்… சண்டை காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும், பொள்ளாச்சி காட்சிகளிலும் ஒளிப்பதிவு தனித்தே தெரிகிறது.
படத்தின் இடையிடையே பல விதங்களில் தமிழக சினிமா ரசிகர்களுக்கு பல்வேறுவிதமான அறிவியல் சம்பந்தமான பொது அறிவு விளக்கங்களை கொடுத்திருக்கிறார்கள்.
சினிமாவுக்கு போனோமா..? ஹீரோவை பார்த்தோமா..? ஹீரோயினை பார்த்தோமா? வந்தோமா என்றில்லாமல் இந்தப் படம் பார்த்துவிட்டு ஒரு அறிவியல் புதுமையை தெரிந்து கொண்டு வெளியில் வருகிறார்கள் ரசிகர்கள். இதைச் சாத்தியப்படுத்திய திரைக்கதை மன்னன் ராஜேஷ்குமாருக்கு எமது நன்றிகள்.
கமர்ஷியல் படமேயென்றாலும் தமிழ்ச் சினிமாவில் தனது இருப்பையும் தக்க வைத்துக் கொள்ள விரும்பும் சரத்குமார் இனிமேல் சங்கோஜமே இல்லாமல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா தேர்வு செய்யும் கதைகளில் நடிக்கலாம். அப்போது கமர்ஷியல் தரப்பு ரசிகர்கள் இன்னும் அதிகமாக அவரை வரவேற்கக் கூடும்.
|
Tweet |
1 comments:
என்னோட கோரிக்கையை ஏற்று விமர்சனம் எழுதியதுற்கு நன்றி சார்
Post a Comment