என்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்

06-02-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அஜீத் போன்ற பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் ஹீரோக்களை வைத்து படம் இயக்கி வெற்றி காண்பது சாதாரண விஷயமல்ல.. ஹீரோவைவிடவும், அவரது ரசிகர்களை திருப்திபடுத்துவதுதான் மிக சிரமம். ‘வீரம்’ படத்தில் பார்த்த அஜீத்திற்கு அப்படியே நேர் மாறாக வேறொரு அஜீத்தை தனது ஸ்டைலில் காட்டியிருக்கிறார் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன்.

வழக்கமான கேங்ஸ்டர் கதைதான். ஆனால் கெளதமின் திரைக்கதையிலும், இயக்கத்திலும் வித்தியாசப்படுகிறது. போதை கடத்தல் ஆசாமிகளை கூண்டோடு பிடிக்க அவர்களது கூட்டத்திலேயே உளவாளியாக நுழைந்து அவர்களை பிடிக்கிறார் அஜீத். நம்பிக்கை துரோகம் செய்த அஜீத்தை பழி வாங்க வில்லன் அருண்குமார் அஜீத்தின் வாழ்க்கையில் கத்தியினால் விளையாடுகிறார். இதனால் துயரத்தில் ஆழ்ந்துபோகும் அஜீத் தனது போலீஸ் வேலையையே ராஜினாமா செய்கிறார்.
தனது வளர்ப்பு மகளுடன் அமைதியாக இருந்தவரை ஒரு பெண் கடத்தல் வழக்கு மீண்டும் துப்பாக்கியை தூக்க வைக்கிறது. இதனை துப்புத் துலக்க களமிறங்கியவர் இந்தக் கடத்தலில் தனது முன்னாள் கேங்ஸ்டர் நண்பனான அருண்குமாரை பார்த்தவுடன் அதிர்ச்சியாகிறார்.
ஒரு மிகப் பெரிய பணக்காரரின் உடல் உறுப்புகள் செயலிழந்துவிட்டதால் அவருக்கு மாற்று உறுப்புகள் கிடைக்க வேண்டி அதற்கு பொருத்தமாக இருக்கும் நபர்களை கடத்தி வந்து ஆபரேஷன் செய்ய திட்டமிடுகிறார்கள். பெரும் தொகையை வாங்கிக் கொண்டு இந்த வேலையைச் செய்கிறார் அருண்குமார்.
இதைத் தடுக்க களமிறங்கிய அஜீத்தை அருண்குமாரும் கண்டு கொள்ள.. இருவரும் அவரவர் வழியில் போராடுகிறார்கள். யார் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் இந்த ‘என்னை அறிந்தால்’ படம்..!
‘இப்படி அழகாயிட்டே போனீங்கன்னா நாங்கெள்லாம் என்ன செய்யறது..?’ என்று ஒரு காட்சியில் அஜீத்திடம் கேட்கிறார் திரிஷா. இது சினிமாவுக்கான வசனம் என்றாலும் நிஜத்திலும் இதுவே உண்மை. கால மாற்றத்திற்கேற்ப அஜீத் சில கெட்டப்புகளில் மாறி, மாறி வந்தாலும் இளம் பெண்களையும், முதிர் பெண்களையும் கவரத்தான் செய்வார். அப்படியொரு அழகோ, அழகு..
முந்தைய படங்களில் இருந்து சற்று மாறுபட்டு நடப்பது, திரும்புவது, சிரிப்பது எல்லாவற்றுக்கும் ஸ்லோமோஷன், பஞ்ச் டயலாக்குகளெல்லாம் இந்தப் படத்தில் இல்லை. ஆனால் அதையும் மிஞ்சிய குளோஸப் ஷாட்டுகள் இருக்கின்றன. மெச்சூர்டான வசனங்களும் அஜீத்தின் கெத்துக்கு ஏற்றாற்போல் மிகவும் ரசிக்க வைக்கின்றன.
அஜீத் எப்போதும் தனக்கு வயதாகிவிட்டதை மறைப்பதில்லை. அவருடைய படங்களில்கூட அதற்கேற்றாற்போல் திரைக்கதை அமைத்துக் கொள்வார். இதிலும் அப்படியே.. ஏற்கெனவே கல்யாணமாகி டைவர்ஸாகி குழந்தையுடன் இருக்கும் திரிஷாவை காதலிக்கும் முதல் ஹீரோ இவராகத்தான் இருக்கும். ரசிகர்களைத் திருப்திபடுத்துவதற்காகவே அனுஷ்காவின் மூலமாக அஜீத்தின் அழகு பறை சாற்றப்படுகிறது. ரசிகர்கள் இதற்கு என்ன குதி குதித்தார்களோ தெரியவில்லை.  
வீடு தேடி வந்து லஞ்சம் கொடுக்க முன் வரும் ஆஷிஷ் வித்யார்த்தியிடம் கோபப்படும் காட்சியிலும், கிளைமாக்ஸ் நெருக்கத்தில் அருண்குமாரிடம் போனில் பேசும்போதும் அஜீத்தின் நடிப்பை ரசிக்க முடிகிறது. விவேக்கின் அரதப்பழசான உயர காமெடியை கேட்டவுடன் சங்கடத்துடன் நெளியும் அஜீத்தையும் பிடிக்க வைக்கிறார் இயக்குநர் கெளதம் மேனன்.
நடிப்பில் இரண்டாமிடம் நிச்சயமாக அருண்குமாருக்குத்தான். நல்ல இயக்குநர்கள் கையில் நல்ல நடிகர்கள் கிடைத்தால் அது அவர்களை உயர்த்தும் என்பதற்கு இவரும், இந்தப் படமும் ஒரு உதாரணம். தடையறத் தாக்க படத்திலேயே இவருடைய முழு திறமையும் தெரிந்தாலும் ஏதோ அதிர்ஷடம் இல்லாமல் விநியோகஸ்தர்களின் லிஸ்ட்டில் இல்லாத நடிகராகவே இன்னமும் இருந்து வருகிறார். இனிமேலாவது ராஜபாட்டையில் நடக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் நல்லதுதான்..
அனுஷ்கா என்னும் தேவதையும், திரிஷா என்னும் தேவதையும் வயதுக்கேற்ற நடிப்பை நடித்திருக்கிறார்கள். பெண் பார்க்க வந்தவன் பாடல் சொல்லிக் கேட்க வெறுப்புடன் ஒரு பாடலை பாடுகிறாரே அனுஷ்கா.. ஜோர்.. விமானக் காட்சிகளில் வெட்கப்படுவதும், சங்கடப்பட்டு பேசுவதுமாக முதல் சில காட்சிகளிலேயே ஈர்க்கிறார். இன்னமும் பாடல் காட்சிகளில் ஓவரான அழகுடன் இவருடைய ரிட்டையர்ட்மெண்ட்டை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. இனி யார் இருக்கா..?
இன்னொரு பக்கம் திரிஷா.. கல்யாணமாகிப் போகவிருக்கும் பொண்ணு.. எங்கிருந்தாலும் வாழ்கன்னு வாழ்த்தி வழியனுப்பலாம். 8 வயது மகளுக்கு அம்மாவாக நாட்டிய பேரொளி ஹேமானிகாவாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். வரும் அனைத்து காட்சிகளிலும் பளபள உடையில் ஆள் பாதி ஆடை பாதியாக சேலையிலேயே பாந்தமாக அழகு காட்டியிருக்கிறார்.  நடிப்பென்று பார்த்தால் அதிகம் வேலையில்லை. சாதாரணமாக பேசுகிறார். மெதுவாக பேசுகிறார். இதுவே சினிமாத்தனம் இல்லாமல் இருப்பதால் அழகாக இருக்கிறது..!
அந்தக் குட்டிப் பெண் இஷாவுக்கு ஒரு பாராட்டு.. இயக்குநரின் இயக்கத் திறமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு திரிஷா இறந்தவுடன் நிஷாவை அஜீத் சமாதானப்படுத்தும் காட்சியும், அதில் நிஷாவின் நடிப்பும்தான். அழுகையே இல்லாமல் ஒரு சோகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்.
விமானப் பயணத்தில் அனுஷ்காவிடம் அழகு பற்றி பேசும் வசனங்களும், காபி ஷாப்பில் ‘ஐ லவ் யூ’ சொல்லும் அனுஷ்காவிடம் பேசும் பேச்சுக்களும், திரிஷாவிடம் கல்யாணம் பற்றி பேசுவதும்.. காதலர்களுக்கு குறிப்பாக அக்மார்க் கெளதம் மேனனின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமாகத்தான் இருக்கும்..!
ஹாலிவுட் படங்களில் எப்பேர்ப்பட்ட ஆக்சன் படங்களாக இருந்தாலும் சின்ன குழந்தைகளை வைத்து கொஞ்சம் சென்டிமெண்ட் சீன்களை வைத்திருப்பார்கள். அது போலவே இதிலும் திரிஷாவின் குழந்தை இஷா சம்பந்தப்பட்ட காட்சிகளெல்லாம் இயக்குநர் எதிர்பார்த்த ‘அச்சச்சோ பாவம்’ என்கிற பீலிங்கை கொண்டு வந்துவிட்டது.
அஜீத்தின் முன் வாழ்க்கைக் கதையில் அவருடைய அப்பாவின் பாதிப்பும், அவர் எதனால் போலீஸ் வேலைக்கு வந்தார் என்கிற கதையும் இடம் பெறுகிறது. கெளதம் மேனனுக்கு இன்னமும் தனது தந்தையை மறக்க முடியவில்லை போலும். அவருடைய படங்களில் தொடர்ச்சியாக அப்பா புராணம் தவறாமல் இடம் பெறுகிறது.
சென்னை விமான நிலையத்தை கிண்டல் செய்வது போன்ற வசனத்துடன் என்ட்ரியாகும் விவேக், தனது காமெடி போர்ஷனை ஒரு அளவுக்கு மேல் தாண்டவில்லை. கட்டுக்குள் வைத்து நறுக்கென்று செய்திருக்கிறார் குணச்சித்திர நடிப்பை.   சுமன், பார்வதி நாயர், நாசர், ஆர்.என்.ஆர்.மனோகர் என்று சிலரும் படத்தில் காட்சியளித்திருக்கிறார்கள்.
டேன் மெக்காத்தரின் ஒளிப்பதிவு சிறப்பானதுதான். இதையே தமிழ் ஒளிப்பதிவாளர்களும் கொடுத்திருப்பார்கள். எதற்கு வெளிநாட்டு ஒளிப்பதிவாளர் என்று தெரியவில்லை. கிளைமாக்ஸ் காட்சி பறத்தல் காட்சிகளில் கழுகு பார்வை காட்சிகளை படமாக்கி டென்ஷனை கூட்டியிருக்கிறது கேமிரா. அஜீத், அனுஷ்கா, திரிஷா மூவரையுமே அழகுற காட்டியிருப்பதற்கு இவருக்கு ஒரு நன்றி.
வீட்டுக்குள் நடக்கும் சண்டை காட்சியும், துப்பாக்கி சண்டைகளும் வழக்கம்போல தெறிக்கிறது. தெறி மாஸ் என்று ரசிகர்கள் சொல்வது சண்டை காட்சிகளை பற்றித்தான். ஸ்டண்ட் சில்வாவே ஒரு கேங்ஸ்டர் தலைவராகவும் வந்து ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் நடனமாடுகிறார். டான்ஸ் மாஸ்டர் சண்டையிடுகிறார்.. சினிமாவே தலைகீழாக மாறி வருகிறது.
தபஸ் நாயக்கின் அருமையான ஒலிப்பதிவு விருது கமிட்டிகளை ஈர்க்கும் என்றே நினைக்கிறோம். ஆனாலும் 3 காட்சிகளில் யாரோ ஒருவருக்கான செல்போன் அழைப்பு மெல்லிய ஒலியில் ஒரே மாதிரி ரிங்டோனில் தொடர்ச்சியாக வந்தது  ஏனென்று தெரியவில்லை. தெரியாமல் விட்டதா..? அல்லது தெரிந்தே விட்டதா என்று தெரியவில்லை. பட்.. தபஸ் நாயக்கிற்கு ஒரு சபாஷ்..
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்கலாம். படத்தில் காட்சிகளோடு பார்ப்பதற்கு நன்றாகவே உள்ளது. அதாரு இதாரு பாடல் லோக்கல் ரசிகர்களுக்கேற்றவகையில் ஆடலும், பாடலும் அமைக்கப்பட்டிருக்கிறது. பின்னணி இசையில் நேர்மாறாக திகிலூட்டியிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். தேவையில்லாத இடங்களில் இசையை நுழைந்து நாராசாரம் செய்யாமல் அமைதிக்கு வழி விட்டிருக்கிறார். நன்றி..!
எத்தனை பெரிய இயக்குநராக இருந்தாலும் லாஜிக் மீறல்கள் இல்லாமல் இந்தக் காலத்தில் படமாக்க முடியாது. அதிலும் கமர்ஷியல் படத்தில் இது இல்லாமல் இருக்க வாய்ப்பேயில்லை. மதுரை சென்று ஆஷிஷ் வித்யார்த்தியின் வீட்டில் சண்டையிட்டு வெளியே வருவது.. கேங்ஸ்டரின் முதல் ஆக்சன் காட்சியில் தப்பித்து வருவது.. ராஜினாமா செய்துவிட்டு போன முன்னாள் போலீஸ் ஆபீஸருடன் இந்நாள் அதிகாரிகள் ஒத்துழைப்பது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.. ஆனால் இதையெல்லாம் நினைக்கும் அளவுக்கு படம் பார்த்தபோது பீலிங்கே வரவில்லை.. இதுதான் இயக்குநரின் வெற்றி..!
கெளதம் மேனனின் முந்தைய படங்களின் சாயல் இப்படத்தில் இருந்தாலும் இதுவும் ரசிக்கத்தக்கதாகவே இருக்கிறது. படத்தில் தான் மட்டுமே கதை சொல்லியில்லை என்பதை உணர்த்தும்விதமாக முதலில் அஜீத், பின்பு அனுஷ்கா, பின்பு திரிஷா, கடைசியாக இயக்குநர் என்று நால்வருமே வந்து வந்து கதை சொல்லி போரடிக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவும் திரைக்கதையில் ஒரு புதிய யுக்திதான்.
ஒரு பெரிய கமர்ஷியல் படம்.. மிகப் பெரிய ஹீரோவின் படம்.. மிகப் பெரிய தயாரிப்பாளர்.. இதில் யாருடைய நேரத்தையும் வீணாக்காமல், பணத்தையும் வீணாக்காமல்.. அதற்கேற்ற தகுதியுள்ள படத்தை இயக்கிக் கொடுத்திருக்கிறார் கெளதம் மேனன்.
நன்றிகள் கெளதம் மேனனுக்கு..! 

0 comments: