30-01-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஏதோ ஒரு முடிவோடுதான் இருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஐந்தாண்டு கால இடைவெளிக்குப் பிறகு இயக்கம் செய்ய வந்தவர் எடுத்திருக்கும் புதுமையான இந்தப் படத்தில் இருக்கும் இரண்டு கதை அமைப்பியலை சற்று யோசித்து கூர்ந்து கவனித்தால் இதில் இருக்கும் அரசியலும் தெரிகிறது. புரிகிறது..!
முதல் கதை பிரச்சினையே இல்லை.. இரண்டாம் கதைதான் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றிய கதை..! முதலில் முதல் கதையைப் பார்ப்போம்.
(இங்கே முழுக் கதையையும் சொல்லியிருக்கிறேன். வேண்டாம் என்பவர்கள் மேற்கொண்டு படிக்காமல் நிறுத்திக் கொள்ளவும்.)
எஸ்.ஏ.சந்திரசேகரனே கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இப்போது அவரது வயது 75. அவர் 30 வயது வாலிபராக இருந்தபோது காதலித்த ஒரு பெண்ணைத் தேடி இத்தனையாண்டுகள் அலைந்திருக்கிறார்.
இப்போது அவருக்கு டாக்டர்கள் நாள் குறித்துவிட்டார்கள். “ஒரு சொட்டு ஆல்கஹால் வயிற்றுக்குள் போனாலும் நீங்கள் காலிதான்…” என்கிறார் டாக்டர். “என் சாவுக்கு மறந்திராம வந்திருங்க..” என்று அதே டாக்டரிமே சொல்லிவிட்டு கிளம்புகிறார் எஸ்.ஏ.சி.
அவருடைய பால்ய வயது காதலியை இப்போதைய சம வயது நண்பரான மனோபாலா சிம்லாவில் பார்த்ததாகச் சொல்ல.. தனது காதலியைத் தேடி சிம்லா வருகிறார் எஸ்.ஏ.சி.
வந்த இடத்தில் பரமக்குடியை பூர்வீகமாகக் கொண்ட இரண்டு பிக்பாக்கெட் திருடர்களை பரமக்குடியின் மைந்தர் கமல்ஹாசனின் வாழ்க்கை சரித்திரத்தைச் சொல்லித் திருத்துகிறார். அவர்களுடைய உதவியுடன் தனது காதலியைத் தேடுகிறார். ஒரு நாள் கண்டுபிடிக்கிறார்.
அதற்குள்ளாக அவருக்கு மரணம் அருகில் வந்துவிட்டது தெரிகிறது. அன்றைக்கு தனது காதலியைத் தேடி அவளது வீட்டிற்குச் சென்று பார்த்தே விடுகிறார். காதலி இப்போது நான்கைந்து சின்ன குழந்தைகளுக்கு பாட்டியாக இருக்கிறாள்.
அப்போதைய கல்யாணத்தன்று காதலிக்கு அணிவிக்க வைத்திருந்த மோதிரத்தை இப்போது காதலியின் கையில் கொடுத்துவிட்டு பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவிடம் ஐக்கியமாகிறார் எஸ்.ஏ.சி.
எத்தனையோ படங்களை இயக்கியவர்.. இப்படி ‘முன்னாடி போனாலும் உதைக்கும்.. பின்னாடி வந்தா கடிக்கும்’ என்ற லெவலில் லாஜிக்கே இல்லாமல் திரைக்கதையை அமைத்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.
“இத்தனையாண்டுகள் கழித்தும் ஆள், அடையாளம் தெரியாமல் போயிருக்குமே.. எப்படி கண்டுபிடிப்பீர்கள்..?” என்று பிக்பாக்கெட்டுகள் கேட்பதற்கு “அவளுடைய கண்ணை வைச்சே கண்டு பிடிச்சிருவேன்..” என்கிறார் எஸ்.ஏ.சி. அப்படித்தான் கண்டும் பிடிக்கிறார். அவருக்குள் ஏதோ அமானுஷ்ய சக்தி இருக்கும் போலிருக்கு..! காதலிக்கும் அப்படித்தான்.. ‘ஹேமா’ என்ற குரலைக் கேட்டவுடன் அவரும் சட்டென்று கண்டுபிடிக்கிறார். இது சாத்தியமா என்று காதலர்களைத்தான் கேட்க வேண்டும்.
இள வயது எஸ்.ஏ.சி., தனது நண்பர்கள் இருவருடன் ‘ரூப் தேரா மஸ்தானா’ பாடலை பாடி காதலியை டாவடிக்கிறார். இது 1969-களில் வந்த ‘ஆராதனா’ இந்தி படத்தின் பாடல். இப்போதிலிருந்து 50 ஆண்டுகள் பின்னாடி போக வேண்டிய நிலையில் 30-வது வயதில்தான் இவர்களது காதல் கதை நடந்திருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்வோம்.
ஹீரோயின் இவர்களை கலாய்ப்பதற்காக தனக்கு எய்ட்ஸ் இருப்பதாகச் சொல்கிறார். சிதறி ஓடுகிறார்கள் ஹீரோவும், நண்பர்களும். ‘எய்ட்ஸ்’ என்ற வார்த்தை எந்த வருடத்தில் உலகத்தில் முதன் முதலில் தோன்றியது என்பது நமக்குத் தெரியும்..! எஸ்.ஏ.சி.க்கு தெரியுமா..?
பார்த்தவுடன் காதல்.. இந்தக் காதலியைப் பார்த்த தருணத்தில் பைக் கவிழ்ந்து கையில் கட்டுடன் வீட்டுக்கு வரும் ஹீரோவிடம் அம்மாவே இது பற்றி பேசுகிறார். அம்மாவிடம் தனது காதலியை அழகுற வர்ணிக்கிறார் ஹீரோ.. அப்பவே நம்ம அம்மாக்கள் இப்படியா இருந்தார்கள்..?
சர்ச்சில் திருமணத்திற்காக காத்திருக்கும் தருணம். ஹேமா கிறிஸ்தவராக மதம் மாறினாரா இல்லையா என்பது தெரியவில்லை. மதம் மாறாமல் சர்ச்சில் திருமணம் செய்ய முடியுமா என்றும் தெரியவில்லை. மேற்படி திருமணம் கடைசி நிமிடத்தில் காதலியின் அப்பாவுக்குத் தெரிய வந்து அவர் துப்பாக்கி முனையில் மகளை அடக்கி, ஒடுக்கி வேறு ஊருக்கு உடனடியாக அழைத்துச் சென்றுவிட.. அன்றிலிருந்து தனது தேடுதல் வேட்டையைத் துவக்கியிருக்கிறார் எஸ்.ஏ.சி. காதலியை நினைத்து பிரம்மச்சாரியாகவே இருந்திருக்கிறார்.
இடையில் காதலியுடன் ஓரிடத்தில் இரவு தங்க வேண்டி வர.. அங்கேயே அவர்களுக்கு முதலிரவும் நடந்து முடிந்துவிடுகிறது.. இதெல்லாம் 50 ஆண்டுகளுக்கு முந்திய காலத்தில் நடந்ததாம்.
சரி.. இத்தனை லாஜிக் ஓட்டையுடன் இந்தக் கதை எதற்கு என்பவர்களுக்கு இடைவேளைக்கு பின்பு வரும் ‘செல்வி’ என்கிற கதை விடையைச் சொல்கிறது.
ஏதோ ஒரு பட்டி.. கிராமம்.. ஊரில் மேல்சாதி, கீழ்சாதி மக்கள்.. மேல்சாதியினரின் வயல் வெளிகளில்தான் கீழ்சாதி மக்கள் வேலை செய்து வருகிறார்கள். அந்த ஊர், பண்ணையார், பண்ணையாரின மகன், ஆளும் கட்சி கவுன்சிலர் மூவரும் சேர்ந்துதான் பல அட்டூழியங்களை செய்து வருகிறார்கள். அந்த ஊர் போலீஸாரின் கைகள் கட்டப்பட்ட நிலை.. திருட்டுத்தனமாக மணல் அள்ளுவதைத் தடுத்த தாசில்தாரை குழி தோண்டி புதைக்கும் அளவுக்கு கொடூரமானவர்களாக இருக்கிறார்கள்.
தாசில்தார் காணாமல் போன விஷயத்தைக் கண்டுபிடிக்க சென்னையில் இருந்து ஒரு தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த காதலர்களான ரிப்போர்ட்டர்கள் இருவர் அந்த ஊருக்கு வருகிறார்கள். வந்தவர்களை அந்த ஊரின் ‘நல்ல’ போலீஸ் இன்ஸ்பெக்டர் வீடு எடுத்து தங்க வைத்திருக்கிறார். இவர்கள் ஒரு பக்கம் தாசில்தார் கொலையைப் பற்றி துப்பறிந்து வருகிறார்கள்.
பண்ணையாரின் வீட்டில் வேலை செய்கிறாள் பூங்கொடி. 20 வயது இருக்கலாம். இவளுடைய தங்கை செல்வி. பள்ளியில் 2 அல்லது 3-ம் வகுப்பு படிக்கிறாள். இவர்களுக்கு தாய், தந்தை இல்லை. பூங்கொடி தனது தங்கையை பாசத்துடன் வளர்க்கிறாள்.
ஒரு நாள் பண்ணையாரின் மகன் அந்த ஊர்ப் பள்ளிக்கு வந்து “கீழ்சாதி பயலுகளெல்லாம் படிச்சு கிழிச்சது போதும்.. எந்திரிச்சு வீட்டுக்கு போங்கடா…” என்று விரட்டுகிறான். தட்டிக் கேட்கும் டீச்சரின் சேலையைப் பிடித்திழுக்கிறான். “இவுங்களையெல்லாம் இப்பவே படிக்காம தடுத்தால்தான் நாளைக்கு நமக்கு மரியாதை. நாலெழுத்து இவனுகளை படிக்க வைச்சுட்டா அப்புறம் நம்மளையே கேள்வி கேப்பானுக..” என்கிறான் பண்ணையார் மகன்.
இந்த நேரத்தில் பாரதியார் பாடலான ‘பாதகம் செய்வோரை கண்டால் பயங்கொள்ளலாகாது பாப்பா’ என்ற பாடலை சிச்சுவேஷனாக பாடி இவனை மூக்குடைபடுத்துகிறாள் செல்வி. இதனால் கோபமான பண்ணையாரின் மகனும், கவுன்சிலரும் அந்த சின்னஞ்சிறு பெண்ணை கற்பழித்து மரத்தில் தூக்கு மாட்டி சாகடிக்கின்றனர். இந்த உண்மை பூங்கொடிக்கு தெரிந்து போலீஸில் புகார் செய்கிறாள். போலீஸ் வருகிறது. ஆனால் புகாரை பதிவு செய்யாமல் ஆதாரம் இல்லை என்று சொல்லி நிறுத்தி வைக்கிறது.
ஆனால் அந்த இன்ஸ்பெக்டர் தனிப்பட்ட முறையில் டிவி ரிப்போர்ட்டர்களிடத்தில் பூங்கொடியை அறிமுகப்படுத்தி வைத்து அவளுக்கு நியாயம் வழங்க கேட்கிறார்(!). நால்வரும் சேர்ந்து திட்டம் போடுகிறார்கள்.
இவர்கள் திட்டப்படி பூங்கொடி மீண்டும் பண்ணையாரின் வீட்டுக்கே வேலைக்கு செல்கிறாள். அங்கே தன்னை படுக்கைக்கு அழைத்த பண்ணையாரை திட்டமிட்டு ‘அந்த’ இடத்தில் தேளால் கடிக்க வைத்து சாகடிக்கிறாள்.
அடுத்து மிச்சமிருக்கும் இருவரையும் அவள் எப்படி பழி வாங்குகிறாள் என்பதும், டிவி ரிப்போர்ட்டர்கள் தாசில்தார் விஷயத்திலும், பூங்கொடி விஷயத்திலும் என்ன செய்தார்கள் என்பதும்தான் மீதி படம்..!
தமிழ்நாட்டில் ஜாதி பிரச்சினை எப்போதும் கனன்று கொண்டே இருப்பதுதான். லேசாக பொறி கிளம்பினாலே போதும்.. பற்றிக் கொள்ளும். பாதிக்கப்படப் போவது படைப்பாளிகள் அல்ல.. அப்பாவி பொதுஜனங்கள்தான்..!
இது போன்ற சம்பவங்கள் உண்மையில் நடந்தவைதான். நடப்பவைதான்.. நடந்த விஷயங்களில் இருந்து சிலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.
இதிலும் அநியாயத்திற்கு லாஜிக் எல்லை மீறல்கள்.. தாசில்தாரை சாகடித்த விஷயத்தை அவரது மகனே மறைக்கிறான். இன்ஸ்பெக்டரும் “ஆக்சன் எடுக்க முடியாது…” என்கிறார். “ஆனால் ஏதோ நடந்திருக்கிறது..” என்பதை மட்டும் சொல்கிறார். இப்படியொரு கைகள் கட்டப்பட்ட நிலையில் காவல்துறை இருப்பது சில நேரங்களில் மட்டுமே.. பல நேரங்களில் அப்படியிருக்க முடியாது..! அரசு அலுவலர் சங்கங்கள் சும்மா விடுமா..? அந்த இன்ஸ்பெக்டர் நல்லவராக.. உண்மையை வெளிக்கொணர தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்வதாக காட்டுவதும் சமாளிப்புதான்..!
இந்தக் கதையின் மிகப் பெரிய பயங்கரமே பூங்கொடி பண்ணையாரின் மகனையும், கவுன்சிலரையும் பழி வாங்குவதுதான்.. கவுன்சிலர் குடிக்கும் காபியிலும், பண்ணையாரின் மகன் குடிக்கும் டாஸ்மாக் சரக்கிலும் தனது சிறுநீரை கலந்து குடிக்க வைக்கிறாள் பூங்கொடி. இது ஒன்றே ஆதிக்க மேல்சாதியினரை பழிவாங்க கீழ் சாதியினர் செய்யும் கோபமான செயல் என்று எடுத்துக் கொள்ளலாமா..?
ஏனெனில் படத்தின் கிளைமாக்ஸில், “இத்தனை நாளா இந்தப் பொண்ணு மூத்திரத்தைத்தாண்டா குடிச்சு வாழ்ந்தீங்கன்னு உங்க ஏழு தலைமுறைக்கும் இந்த ஊரே பேசும்டா.. அப்ப எங்கடா போவும் உங்க கவுரவம்..?” என்று ஊர்க்காரர் ஒருவர் கேட்கிறார்.
ஒரு மனிதனின் சிறுநீரை வேறொரு மனிதன் தொடுவதென்பதோ, குடிப்பதென்பதோ அருவருப்பான விஷயம் என்றுதான் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பல கிராமங்களில் மேல் சாதி, கீழ் சாதியினர் மோதல் வரும்போதெல்லாம் இது போன்ற சம்பவங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஏவப்பட்டு நடந்திருப்பது உண்மைதான். யாரும் மறுக்க முடியாது. ஏன் மலத்தைக்கூட தின்ன வைத்தார்கள் என்றுகூட குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.
இதுபோல ஒவ்வொரு சாதிக்காரர்களும், மற்ற சாதிக்காரர்களை இழிவாகப் பேச மூத்திரத்தை மையப்படுத்தியே பேசத் துவங்கினால் கடைசியில் என்ன ஆகும்..?
அந்தப் பெண் செய்தது சினிமாட்டிக்காக இருந்தாலும், ஊர்க்காரர்கள் பேசிய வசனங்களால் இது இரண்டு சாதியினரையும் தூண்டிவிடுவதை போலவே இருக்கிறது.
மேலும் மேல்சாதிக்கார ஆண்கள் மட்டுமே கெட்டவர்கள் என்பது போலவும், அந்த வீட்டு பெண்கள் நல்லவர்கள் போலவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். “வெறியிருந்தா என்கிட்ட வந்திருக்க வேண்டியதுதானே..? அந்தச் சின்னப் பொண்ணை ஏன்யா சிதைச்ச..? என்கிறார் பண்ணையாரின் மருமகள். “நீ என் வயித்துலதான் பொறந்தியாடா..?” என்கிறார் அம்மா. கடைசியாக செல்வியின் பள்ளித் தோழியும், பண்ணையாரின் பேத்தியும், பண்ணையாரின் மகனின் மகளுமான அந்தச் சிறுமி துப்பாக்கியைத் தூக்க.. குற்றவாளிகள் காலி..
இங்கே பண்ணையாரின் மருமகள் துப்பாக்கியைத் தூக்கியிருந்தால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால் சின்னப் பொண்ணு.. இரண்டாங்கிளாஸ் படிக்கிற பொண்ணு.. தனது தோழிக்காக தனது அப்பாவையும், மாமாவையும் கொலை செய்கிறாளாம். இந்த அளவுக்கு நியாயத்தை கற்பிக்க முனைந்திருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சி.
படைப்பாக்கம் என்று வரும்போது அவற்றை செய்வதற்கும், சொல்வதற்கும், காட்டுவதற்கும் ஒரு காரணம் வேண்டும். இந்தக் கதையில் சொல்ல வந்த கருத்து சரி. ஆனால் சொல்லிய விதம் தவறு என்றே நாம் கருதுகிறோம்.
இடையில் அந்த ரிப்போர்ட்டர்கள் இடையிலான வாழ்க்கைக் கதையும் ஓடுகிறது. அது இப்போதைய ரிப்போர்ட்டர்களெல்லாம் இப்படித்தான் வாழ்கிறார்களோ என்பது போன்ற ஒரு பிரமையையும் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதாகக் காட்டியிருக்கிறார். இந்த வீட்டிலும் ஒரே படுக்கையில் இருந்தும் ‘எதுவும் நடக்காமல்’ பார்த்துக் கொள்கிறார்கள். கதைக்குக் கொஞ்சமும் தேவையில்லாமல் ஒரு காட்சியில் பெண் டிவி ரிப்போர்ட்டரின் கிளாமரையும் காட்ட வைத்திருக்கிறார் இயக்குநர். எதற்கு..?
“செல்லியின் தற்கொலை குறித்த உண்மைத் தகவல்கள் கிடைத்தால், நாம இதை எக்ஸ்குளூஸிவ்வாக செய்தால் நம்ம டிவிக்கு டி.ஆர்.பி. ஏறும்.. சம்பளம் கூடும்..” என்கிறார் சேனலின் சி.இ.ஓ. “அப்படியே என்னோட பிரமோஷனையும் மறந்திராதீங்க ஸார்..” என்கிறார் ஆண் ரிப்போர்ட்டர். பெண் ரிப்போர்ட்டர் இப்போதுதான் சீறிப் பாய்கிறார். “ஆம்பளை புத்திய காட்டிட்டியே.. அந்தப் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கிறது முக்கியமா..? நமக்கு பிரமோஷன் கிடைக்கிறது முக்கியமா..?” என்று சீறுகிறார். நியாயமான உணர்வுதான்.
செல்லி நாசமாக்கப்பட்ட அந்த கரும்புக் காட்டுக்குள் அத்தனை நாட்கள் கழித்தும் தடயங்கள் அப்படியே இருப்பது போலவும் அதனை டிவி ரிப்போர்ட்டர்கள் மட்டுமே கண்டுபிடிப்பது போலவும் காட்சிகள் இருக்கின்றன. ஏன் இதை காவல்துறையே முன் விசாரணையில் செய்திருக்கக் கூடாதா..? மேம்போக்கான விசாரணையை கூடவா போலீஸ் நடத்தாது..?
தாசில்தாரின் உதவியாளர் எப்படி, எங்கேயிருந்து வந்தார்.. இவர்கள் எப்படி அவரை விரட்டுகிறார்கள் என்பதே தெரியவில்லை. திடீரென்று விரட்டுகிறார்கள் டிவி ரிப்போர்ட்டர்கள் இருவரும். அவரைக் கட்டி வைத்து விசாரிக்கிறார்கள்.
அவர் உண்மையைச் சொல்ல மறுக்க அவரது இடுப்புக்குக் கீழே கத்தியை வைக்கிறார் ஆண் ரிப்போர்ட்டர். பெண் ரிப்போர்ட்டரோ, “ஏன் சும்மா நிறுத்திட்ட.. கீழ இறக்கு.. அப்பத்தான் உண்மையைச் சொல்வான்..” என்கிறார். எக்ஸ்கியூஸ் மீ மேடம் அண்ட் ஜென்டில்மேன்.. இங்க என்ன நடக்குது..? நீங்க டிவி ரிப்போர்ட்டர்ஸா? இல்லைன்னா போலீஸா..? போலீஸ் இப்படி செஞ்சா ‘அப்பட்டமான மனித உரிமை மீறல்’ன்னு காலைல இருந்து ராத்திரிவரைக்கும் ஒப்பாரி வைப்பீங்க. இப்போ நீங்களே செஞ்சா என்ன அர்த்தம்..? என்னவொரு திரைக்கதை பாருங்க..? அஸைண்மெண்ட்டுக்கு எப்படி அலையுறாங்கன்னும் பாருங்க..!?
இவர் கொடுத்த தகவலின்படி அத்தனை பெரிய மணல் குவாரியில் சமாதியாக்கப்பட்ட தாசில்தாரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு இவர்களது காரில் சென்னைக்கே பயணிக்கிறது.
சென்னைக்கு அவருடைய உடலை கொண்டு போய் இந்த ரிப்போர்ட்டர்கள் செய்யப் போவது என்ன..? யாரிடம் காட்டப் போகிறார்கள்.? அவர் கொல்லப்பட்டதற்கான எவிடென்ஸ் எங்கேயிருந்து கிடைக்கும்..? இது சட்டப்படி தவறில்லையா..? டிவிக்காரர்கள் இந்த அளவிற்கு சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவார்களா என்ன..?
நடிப்பென்று பார்த்தால் ஒட்டு மொத்த படத்திற்குமே பூங்கொடியாக நடித்த சுனுலட்சமிதான் ஐகானாக இருக்கிறார். மலையாள வரவு. திருப்தியான நடிப்பு. புதுமுகம் மாதிரியே தெரியவில்லை. பாடல் காட்சியில் துள்ளலான அந்த நடனம் ரசிக்க வைக்கிறது. அந்த கேரக்டருக்காக அவருடைய பாடி லாங்குவேஜில்கூட வித்தியாசம் காட்டியிருக்கிறார். கிளைமாக்ஸில் பேசும் வசனங்களும், காட்டியிருக்கும் நடிப்பும் இந்தாண்டு சிறந்த நடிகைக்கான பட்டியலில் குறித்து வைக்க வேண்டிய கட்டாயத்தைக் கொடுத்திருக்கிறது.
முதல் கதையில் ஹீரோயினாக பாப்ரிகோஷ் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். அசப்பில் ‘நெடுஞ்சாலை’ ஷமிதாவுக்கு அக்கா போல இருக்கிறார். சிரித்த முகத்துடன் படம் முழுக்க வலம் வருகிறார். எஸ்.ஏ.சி.க்கு முத்தம் கொடுக்கும் பாக்கியம் கடைசியாக இந்த பாக்கியவல்லிக்குத்தான் கிடைத்திருக்கிறது. முத்தம் கொடுத்து, வாங்கியதில்… யார் கொடுத்து வைத்தவர் என்று அவர்களே சீட்டுக் குலுக்கிப் பார்க்கட்டும். என்ன இருந்தாலும் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்பதால் லிப்லாக்கிற்கெல்லாம் அஞ்சவில்லை. துணிந்து நடித்திருக்கிறார். தேறுவார் என்று எதிர்பார்க்கலாம்.
எஸ்.ஏ.சி.யின் இந்த வயது காதலியாக ஹேமமாலினி என்னும் சிம்லா தேசத்து நடிகை நடித்திருக்கிறார். கண்ணை பார்த்தே கண்டுபிடிக்கும் அளவுக்கு இவரது கண் ஒன்றும் ரசனைக்குரியதில்லை. ஆனாலும் வெறும் பார்வையாலேயே நடித்திருக்கிறார்.
எஸ்.ஏ.சி. அப்படியேதான். எப்போதும் இருப்பது போலவே வசனம் பேசியிருக்கிறார்.. அவ்வளவுதான். இரண்டாவது கதைக்கு அழுத்தம் கொடுக்கவே முதல் பாதியில் வேடமேற்றிருப்பதால் அதிகமாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சில நேரங்களில் அவருடைய காதல் புராணத்தைக் கேட்கும்போது எரிச்சல் வருகிறது. அதையும் படத்தில் நேர்மையாக பதிவு செய்திருக்கிறார். நன்றிகள் ஸார்..!
பண்ணையாராக ‘ஆடுகளம்’ ஜெயபாலன், பண்ணையாரின் மகனாக ‘ரோபோ’ சங்கர், கவுன்சிலராக சாய் கோபி, இவர்களுக்கு ஒத்து ஊதும் உறவினராக ‘செவ்வாழை’ ராசு என்ற இந்த மேல்சாதி கூட்டணி வசனங்களை பின்னியெடுத்திருக்கிறது. அதிலும் இன்ஸ்பெக்டரிடம் ரோபோ சங்கர் கூட்டணி பேசும் எகத்தாளப் பேச்சுக்கள் தனி ரகம்.. ‘இவனுகளையெல்லாம்’ என்று கொஞ்சம் கோபப்படவும் வைத்திருக்கின்றன வசனங்கள். வசனகர்த்தா கிருஷ்ணமூர்த்திக்கு தனி பாராட்டுக்கள்.
இசைஞானியின் இன்னிசையில் முதல் பாடலும், பின்னணி இசையும் ஓகேதான்.. மற்றபடி மேலும் இரண்டு பாடல்களை கேட்டபோது நம்ம மொட்டை சாமிதானா இது என்று சந்தேகம் வருகிறது..!
இந்தப் படம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அரசியலுக்கு வருவதற்கான முதல்படியாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்பியிருக்கிறது. நாட்டின் அதி முக்கிய பிரச்சினையான மேல் சாதி-கீழ் சாதி பிரச்சனையை மையமாக வைத்த ஒரு திரைப்படத்தில் எஸ்.ஏ.சி. தன்னை முன்னிறுத்தி வைத்திருப்பது எதற்கு என்று சந்தேகமும் எழுகிறது.
ஒருவேளை இந்தப் படம் பெரிய அளவு சர்ச்சையை கிளப்பினால் “இது எஸ்.ஏ.சி.யின் படம். அவருடைய இயக்கம். அவரே நடிச்சிருக்கார்.. அந்தப் படத்துனால இவ்ளோ பிரச்சினை என்று நாட்டு மக்கள் நலனில் அக்கறை கொண்ட படைப்பாளியாக எஸ்.ஏ.சி.யின் பெயர் பேசப்பட்டு இதன் பலன் இளைய தளபதி விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பயன்படப் போகிறதோ..?” என்று நினைக்கவும் வைக்கிறது..!
தமிழகத்தின் ஜாதி அரசியல் சம்பந்தமான வகையில் தமிழ்த் திரையுலகின் முக்கியமான படமாக இது இருக்க வேண்டும் என்று எஸ்.ஏ.சி. நினைத்திருக்கிறார். அதனால்தான் இது தனது இயக்கத்தில் வெளிவரும் கடைசி படம் என்றுகூட அறிவித்திருக்கிறார். திட்டமில்லாமலா சொல்லியிருப்பார்..?
முதல் பாதியைப் பொறுத்துக் கொண்டால், இரண்டாம் பாதியான அதிர்ச்சியைக் காணலாம்..!
|
Tweet |
2 comments:
இவரிடம் உதவியாளராக இருந்த சங்கர் (ஐ, காதலன், எந்திரன், ...) ஏன் அதிக சம்பளம் வாங்கும் இயக்குநராக உள்ளார் என்பதும் இவர் ஏன் வெற்றி பெற்ற இயக்கநராக இல்லாமல் தன் பையனையே நம்பி உள்ளார் என்பதும் இதனால் நன்கு விளங்குகிறது.
என்னங்க இவ்வள தைரியமா நம்ம வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அப்பா படத்த தாறுமாறா விமர்சனம் பண்ணிருக்கிங்க. பத்து கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க
Post a Comment