வாயை மூடிப் பேசவும் - சினிமா விமர்சனம்

29-04-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘காதலில் சொதப்புவது எப்படி’ என்ற காதல் படத்தைக் கொடுத்த பாலாஜி மோகன் மூன்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் இது.

வித்தியாசமான கதைக் களம்தான். பனிமலை என்கிற மலைப் பிரதேச ஊரில் ஒரு புதுமையான வியாதி பரவுகிறது. சிலருக்கு பேச்சு நின்று போய் விடுகிறது. அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்தாலும் நோய்ப் பரவுவதை தடுக்க முடியவில்லை. யாரும், யாருடனும் பேசவே கூடாது.. ஊரைவிட்டு யாரும் வெளியேறக் கூடாது.. என்று தடா உத்தரவு போடுகிறார்கள்.
இந்தச் சூழலில் ஹீரோ துல்கர் சல்மான் சளசளவென்று பெண்களுக்கே சவால் விடும் வகையில் பேசக் கூடியவர். பேசினால்தான் பிரச்சினைகள் தீரும் என்ற கொள்கையுடையவர். ஹீரோயின் நஸ்ரியா நேர் எதிர். பேசவே கூடாது என்ற கொள்கையில் இருப்பவர். சிகிச்சைக்காக நஸ்ரியாவிடம் வரும் துல்கர் அவரை காதலிக்கிறார். ஆனால் நஸ்ரியாவுக்கு வேறொருவருடன் திருமண நிச்சயத்தார்த்தமே ஆகிவிடுகிறது. ஆனாலும் அந்த மாப்பிள்ளையை பிடிக்காத சூழலில்தான் இருக்கிறார் நஸ்ரியா. இந்த நிலைமையில் ஊரில் ஒரு பக்கம் பேசக் கூடாது என்கிற தடை உத்தரவு.. இன்னொரு பக்கம் இந்த காதல் ஜோடிகள்.. எப்படி நோயைத் தீர்த்தார்கள்.. காதலில் ஜெயிக்கிறார்கள் என்பதுதான் கதை..!
முதல் கண்டனம் படத்தின் இயக்குநருக்கு. தொலைக்காட்சிகள் மேல் அவருக்குக் கோபம் இருக்கலாம். எழுத்துப் பிழையுடன் ஸ்குராலிங் நியூஸ் ஓடுவதைக் கண்டு அவரது தமிழுணர்வு அவருக்குள் பொங்கி கோபம் எழுந்திருக்கலாம்.. போட்டிகளுக்கிடையே ஒவ்வொரு சேனலும் ஒவ்வொரு செய்தியை அணுகும் கோணங்கள் குறித்த கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் இதையெல்லாம் அவர் ஏதாவது ஒரு காட்சியிலோ அல்லது திரைக்கதையிலோ தொட்டுக் காட்டியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு தொலைக்காட்சிகளை இமிடேட் செய்வதை போல ஒரு டிவி கான்செப்ட்டை வைத்து அதில் அவரே தொலைக்காட்சி செய்திகளை கிண்டல் செய்வதுபோல காட்சிகளை வைத்திருப்பதை ரசிக்க முடியவில்லை. இதேபோல் இந்தப் படத்தைக் கிண்டல் செய்து தொலைக்காட்சிகள் சீரியல் எடுத்தால் இவருக்கு எப்படியிருக்கும்..?  சகிப்புத்தன்மை பலருக்கும் குறைந்து கொண்டே செல்கிறதோ..?  இயக்குநர் ஒரு கட்டத்தில் டிவியில் தோன்றி பேசுகிறார்.. “எல்லாரும் வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாலே போதும்..” என்று.. இதை அவரே செய்திருக்கலாம்..
துல்கர் சல்மான், மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டியின் மகன். இதுவரையிலும் மலையாளத்தில் 11 படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இது முதல் படம். இவருக்குப் பொருத்தமான கேரக்டரோ என்று சொல்ல வைத்திருக்கிறார். சொந்தக் குரலில் பேசியிருக்கும் துல்கரின் குரலும் இவருக்கு மிகப் பெரிய பலம். சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே படித்து வளர்ந்தவர் என்பதால் மிகச் சரளமாக தமிழ்ப் பேசுகிறார். நடிப்பும் கூடவே பொறந்தது போல வந்திருக்கிறது.
தனது பிரொடெக்ட்டை விற்பனை செய்வதற்காக அவர் சொல்லும் தந்திர வார்த்தைகள்.. அதை வீசும் டயலாக் டெலிவரிகள்.. முக பாவனைகள்.. நஸ்ரியாவை பார்த்தவுடன் வரும் ஈர்ப்பு.. ஒவ்வொருவரையும் சமாளிக்கும் விதம்.. அலுவலகத்தில் நண்பனுக்கு உதவிகளை அடுக்கடுக்காய் செம ஸ்பீடாய் சொல்வது.. இப்படி பல இடங்களிலும் இவர் ஸ்கிரீனில் இருக்கும் காட்சிகளிலெல்லாம் கண்களை நகட்ட முடியாமல் செய்திருக்கிறார். வெல்டன் துல்கர்.. தமிழிலேயே தொடர்ந்து நடிக்கத் துவங்கினால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீண்ட நாட்கள் உட்காரலாம்..
நஸ்ரியாவை இப்படியொரு அமைதிப் பூங்காவாக எதிர்பார்க்கவில்லை. நஸ்ரியா பேசினால்தான் அழகு.. அதுதான் நடிப்பு. இதில் மெழுகு பொம்மையை போல நிற்கிறார். நடக்கிறார். ஓடுகிறார்.. மெதுவாகப் பேசுகிறார்.. அவனுடைய ஸ்பெஷலாட்டியான எக்ஸ்பிரஷன்ஸ்கள் மிஸ்ஸிங் ஆனதால் நஸ்ரியாவின் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம்தான்..
இந்த பேச்சுக் கதையுடனேயே ஒரு நடிகருக்கும், அவரை எதிர்க்கும் குடிகார சங்கத்தினருக்கும் இடையிலான பிரச்சினையையும் அப்படியே கடைசிவரைக்கும் இழுத்திருக்கிறார்கள். இதற்கும் இயக்குநர் சொல்லும் அட்வைஸ்.. எந்தப் பிரச்சினையா இருந்தாலும் பேசித் தீர்த்துக்குங்க.. பேசாமல் இருந்து போராட்டம் நடத்தி நேரத்தை வேஸ்ட் செய்யாதீங்க என்பதுதான்..!
இந்த குடிகாரர்கள் சங்கத்தினர் செய்யும் அலப்பறைகள்தான் கொஞ்சம் கொஞ்சம் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றன. ரோபா சங்கரின் பாடி லாங்குவேஜ் அசத்தல்.. குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பதை போல முந்தைய நாள் இரவில் கையெழுத்திட்டுவிட்டு மறுநாள் காலையில் போராட்டத்திற்கு வந்து நிற்பவர்களை பார்த்து துல்கர் திடுக்கிடுவது நல்ல காமெடி.. கடைசியாக இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஒரு சப்பை திரைக்கதையை வைத்து முடித்திருக்கிறார். வேறு யோசிக்க முடியவில்லை போலும்..!
பொறுப்பான மந்திரியாக பாண்டியராஜன். மக்களை நம்ப வைக்க அரசியல்வியாதிகள் எதையும் செய்வார்கள் என்பதை இவரை வைத்தும் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அமைச்சருக்கும் பேச்சு பறி போனது என்று வதந்தியை பரப்பிவிட்டுவிட்டு அதனால் இவர் படும் அவஸ்தைகள்.. விவரமான பி.ஏ.விடம் அவமானப்படும் உதாரண மந்திரியை இங்கே பாண்டியராஜன் கண் முன்னே கொண்டு வந்திருக்கிறார்.
மீண்டும் மதுபாலா.. வெகு நாட்கள் கழித்து. சின்ன கேரக்டர்தான்.. ஆனால் கொடுத்த பில்டப்பிற்கு படத்தில் ஏதுமில்லை. மதுபாலாவின் பையனை வைத்து இயக்குநர் சொல்லியிருக்கும் ஒரு விஷயம் நிச்சயம் குறிப்பிடத்தக்கது. படிப்பு மட்டுமே போதுமானது இல்லை.. பையன்களுக்கு இருக்கும் தனித்திறமையை வளர்த்தெடுத்தாலே போதும். அதுவும் அவனது எதிர்காலத்தை நிச்சயமாகத் தீர்மானிக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.
முற்பாதியில் இடையிடையே வரும் பிரைம் டிவி செய்திகளைத் தவிர மற்றபடி ரசிக்கும்படியாகத்தான் இருந்த்து. பிற்பாதியில் பேசாமல் சைகையிலேயே கொண்டு போயிருக்கும் சில ரீல்களில்தான் கொஞ்சம் அலுப்புத் தட்டியிருக்கிறது.. அதிலும் நஸ்ரியான துல்கர் மீதான காதலை புரிந்து கொண்டும் அதனை ஏற்காமல் அலையவிடுவது கொஞ்சம் கோபத்தைத்தான் ஏற்படுத்தியது.. ரீல்களை அதிகப்படுத்த காட்சிகளை நிரப்பி இப்படியா இழுக்க வேண்டும்..?
ஷான் ரால்டனின் இசையில் ‘வாயை மூடிப் பேசு’ பாடல் ஓகே.. மற்றபடி தூர்தர்ஷன் நாடகத்தில் வரும் பின்னணி இசையை இங்கே அசத்தலாக போட்டு அசத்தியிருக்கிறார். பாராட்டுக்கள். பாராட்டுக்குரியவர் ஒளிப்பதிவாளர் செளந்தர்ராஜன். பனிமலை பிரதேசத்திற்குச் சென்று அழகு காட்சிகளைச் சுடவில்லையென்றால் எப்படி..? பாடல் காட்சிகள் அனைத்திலுமே அழகை காண்பித்து ரசிக்க வைத்திருக்கிறார். ஆனால் இது ஒன்று மட்டுமே போதாதே..?
சிட்டிகளில் இப்படத்தை ரசித்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் சிட்டி தாண்டி மற்ற ஏரியாக்களில் ரசிக்க முடியவில்லை என்று ஒரு சாரார் வருத்தப்பட்டிருக்கிறார்கள். புரியவில்லை என்று இன்னொரு குரூப் சொல்லிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்காகத்தான் இடையிடையே டிவியில் தோன்றி இயக்குநர் கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். அப்படியிருந்தும் கதை புரியலை என்று சொன்னால் எப்படி..?
எத்தனை விமர்சனங்கள் இந்தப் படம் பற்றி எழுந்தாலும், வித்தியாசமான கதைக்களனை தேர்வு செய்ததால் தமிழ்ச் சினிமாவில் ஒரு முக்கியமான படம் என்கிற பெருமையை இப்படம் பெற்றுவிட்டது என்பதில் ஐயமில்லை..