என்னமோ நடக்குது - சினிமா விமர்சனம்

29-04-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஹீரோவுக்கேற்ற கதையாக இல்லாமல் கதைக்கேற்ற நாயகனாக நடிப்பதுதான் இப்போதைய நாட்களில் திரையுலகில் முன்னேற சிறந்த வழி. இதனைக் கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார் நடிகர் விஜய் வசந்த். ‘சென்னை-28‘ திரைப்படத்தில் அறிமுகமானாலும் அவருக்கென்று தனியான ஸ்பெஷலாட்டி எதுவும் இல்லாத்தால் தனித்து அடுத்தடுத்து படங்கள் செய்ய முடியவில்லை.

பணத்திற்கு பஞ்சமில்லை என்பதால் தாங்களே சொந்தமாகத் தயாரித்தால் என்ன என்ற அக்கறையோடு விஜய் வசந்தின் தம்பி தயாரிக்க அண்ணன் ஹீரோவாக நடித்திருக்கிறார். வித்தியாசமான கதை. நேர்த்தியான திரைக்கதை.. சிறப்பான இயக்கம்.. தப்பே சொல்ல முடியாத நடிப்பு.. ஒரு வெற்றிப் படத்திற்கு இது போதுமே..!படத்திற்குள் செல்லும் முன்பு ஒரு பிளாஷ்பேக்..

ஏ.ஆர்.அந்துலே மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த காலம் அது. மும்பையில் இருக்கும் இந்தியன் வங்கியின் தலைமை வங்கிக் கிளைக்கு ரிசர்வ் வங்கியின் உத்தரவின்பேரில் கரன்சி நோட்டுகள் வந்து கொண்டிருந்தன. அவைகள் அடுத்தடுத்த நாட்களில் கட்டுக்களாக பிரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகளுக்கு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டு வந்தன.

தலைமை வங்கிக் கிளைக்கு  ஒரு புதிய அக்கவுண்ட்ஸ் சீப் மேனேஜர் பணி மாற்றலாகி வந்தார். வந்து சேர்ந்த ஒரு மாத்த்திலேயே ஒரு புதிய ஆலோசனையை வங்கியின் மேலிடத்தில் வைத்தார். அதாவது “வாரத்தில் நினைத்த நாட்களில் வந்து கொண்டிருந்த புதிய கரன்சி நோட்டுக்களை சனிக்கிழமைகளில் கொண்டு வரச் செய்தால் நல்லது. நம்மிடம் இருக்கும் குறைந்த அளவு ஆட்களை வைத்து வார நாட்களில் அவற்றைப் பிரித்து எடுத்து வைப்பது கடினமாக உள்ளது. சனிக்கிழமைகளில் பணம் வந்தால் சனி மதியத்தில் ஓவர் டைமாக ஆட்களை வைத்து பிரித்து வைத்துவிட்டால் திங்கட்கிழமையன்று கிளைகளுக்கு அனுப்பி வைக்கும் வேலையை மட்டுமே பார்க்கலாம்”  என்று ஓதிவிட்டார்.

வங்கியின் மேலிடத்தில் என்ன செய்தார்களோ.. என்ன பேசினார்களோ தெரியவில்லை. திட்டம் ஓகேவானது. அதன்படியே ரிசர்வ் வங்கிக்கும் கடிதம் அனுப்பப்பட்டு  அங்கிருந்து பணம் அனுப்பும் இடத்திற்கும் கடிதம் பறந்து ஒரு வழியாக வாராவாரம் சனிக்கிழமை மதியத்திற்குள் பணப்பெட்டிகள் மும்பைக்கு வந்து சேர்ந்தன.

இங்கேதான் நம்ம புதிய அக்கவுண்ட்ஸ் சீப் மேனேஜர் விளையாடிவிட்டார். வந்து சேர்ந்த பணத்தை தனது பொறுப்பில் வைத்துக் கொண்டு அந்தப் பணத்தில் கொஞ்சத்தை எடுத்து மும்பையில் இருக்கும் தனது ஏஜண்ட்டுகள் மூலமாக வட்டிக்குவிட்டார். ஒரு மணி நேர வட்டி, நாள் வட்டி என்ற ரேஞ்ச்சில் திங்கள்கிழமை காலைக்குள் பணம் திரும்ப வந்தாக வேண்டும் என்பது இவரது விளையாட்டின் விதி.

அதோடு வந்து சேர்ந்த மொத்தப் பணத்தையும் வங்கிகளுக்குப் பிரித்துக் கொடுப்பதில்லை. கொஞ்சத்தை வங்கிக் கணக்கில் வைத்துவிட்டு மிச்சத்தை இது போல இறைத்திருக்கிறார். வட்டிப் பணத்தை அவர் சாப்பிட்டு திரும்பவும் பணத்தை பத்திரமாக திருப்பி வாங்கி கொஞ்சம், கொஞ்சமாக கிளைகளுக்கு பணத்தைச் சப்ளை செய்திருக்கிறார். அப்போது கம்ப்யூட்டர்கள் இல்லாத நேரம். மொத்தப் பணத்தையும் வரவு வைத்தாகிவிட்டது. ஆனால் எங்கே என்பது நம்ம ஹீரோவுக்கு மட்டுமே தெரியும்.

இப்படியே பல லட்சங்களை வாரி இறைத்து, சில லட்சங்களை மாதக்கணக்கில் கொடுத்து வாங்கி திரும்பவும் வங்கியில் சேர்த்து ரிஜிஸ்தரை திருத்தி இல்லாத கோல்மாலெல்லாம் செய்திருக்கிறார். இவரது அன்பளிப்பில் சொக்கிப் போன மேலதிகாரிகள் எதுவும் சொல்லாமல் சைலண்ட்டாக கொடுப்பதை வாங்கிக் கொண்டு ரிட்டையர்டுமாகி போய்க் கொண்டேயிருக்க.. 2 வருடங்கள் இந்த விளையாட்டு தொடர்ந்திருக்கிறது.

பல நாள் திருடனும் ஒரு நாள் அகப்படுவான் என்ற கதையாக மும்பையில் கொடுக்கப்பட்ட பணம், பூனே நெடுஞ்சாலையில் ஒரு விபத்தில் சிக்கியது.. பணம் அத்தனையும் காற்றில் பறந்தது.. அத்தனையும் புத்தம் புது நூறு ரூபாய் நோட்டுக்கள்.. இன்னமும் பிரிக்கப்படாதது.. காவல்துறையினர் வழக்கை பதிவு செய்து ரூபாய் நோட்டுக்கள் வந்தவிதத்தை தேடியபோது அது மும்பை இந்தியன் வங்கிக்கு சென்றடைந்தது..

விசாரணையின்போது திடுக்கிடும் திருப்பங்கள் தினம்தோறும் நடந்தன. சீப் மேனேஜரின் தில்லுமுல்லுகள் வெளியாக, வெளியாக இந்தியாவே அதிர்ச்சியடைந்தது.. இப்படியெல்லாம் திருட முடியுமா என்கிற  ஆச்சரியத்தில் இந்தியப் பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு இதனை வெளியிட்டு தங்களது பிரமிப்பை வெளியிட்டன.

அப்போது திண்டுக்கல்லில் நடந்த மிக பிரபலமான வங்கி ஊழியர் கொலை வழக்கில் அவரது மனைவி சசிகலா, காதலருடன் கைது.. கொலை செய்தது எப்படி..? என்கிற செய்தியைவிடவும் இந்தச் செய்திதான் தினத்தந்தியின் இரண்டாம் பக்கத்தில் பெரிதாக வந்திருந்தது. இன்றைக்கும் மறக்க முடியாத நிகழ்வு இது.. இது போன்ற செய்திகளை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர். நிச்சயம் பாராட்டுக்குரிய கதை..

போஸ்டர் ஒட்டிக் கொண்டும், தனது அம்மாவை அடித்துக் கொண்டும், மிதித்துக் கொண்டும், தாயை மதிக்காத தனயனாக இஷ்டம்போல் வாழ்ந்து வருகிறார் விஜய் வசந்த்.  வழக்கமான சினிமாவைப் போல இவருக்குள்ளும் ஒரு காதல் பூக்கிறது. நர்ஸான மஹிமாவை ஒருதலையாகக் காதலிக்கிறார். முதலில் எரிந்து விழும் ஹீரோயின், தனது அப்பாவை ஆபத்தான நிலைமையில் மருத்துவமனையில் சேர்ப்பித்த கணத்தில் இருந்து ஹீரோவை காதலிக்கத் துவங்குகிறார்.

காதலியின் படிப்புச் செலவுக்காக அவரது அப்பா கந்துவட்டி நமோ நாராயணனிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். ஏஜென்ட் பணத்தை வாங்கிவிட்டு எஸ்கேப்பாகிவிட நமோ நாராயணன் “ஒண்ணு பணத்தைக் கொடு. இல்லைன்னா பொண்ணை கொடு..” என்று மிரட்டுகிறான். காதலியைக் காப்பாற்ற உடனடியாக பணத் தேவைக்காக தம்பி ராமையாவிடம் சரண்டராகிறார் ஹீரோ.

தம்பி ராமையா சொல்லும் இந்த பணப் பரிவர்த்தனை வேலைகளை கச்சிதமாக செய்து முடிக்கிறார் ஹீரோ. கடைசி நாளில் 10 கோடியை எடுத்துக் கொண்டு செல்லும்போது அது களவாடப்படுகிறது. ஹீரோதான் அதனை சுட்டுவிட்டார் என்று தம்பி ராமையாவும், அவரது பாஸ் ரஹ்மானும் நினைத்து ஹீரோவைத் துவைத்தெடுக்கிறார்கள். இன்னொரு பக்கம் ஹீரோயினை நமோ நாராயணன் துரத்துகிறார். ஹீரோ எப்படி தனது காதலியை மீட்டெடுத்து ரஹ்மான் கோஷ்டியிடமிருந்தும் தப்பிக்கிறார் என்பதுதான் கதை..

விஜய் வசந்துக்கு பொருத்தமான கேரக்டர்தான்.. வீட்டுக்கு அடங்காத புள்ளை.. உலகமறியாத இளைஞர். காதலிக்க ஆசையுடன் ஆள் தேடும் காதலர்.. இதெல்லாம சரிதான்.. ஆனால் பெத்த தாயையே அடிப்பது போலவும், உதைப்பது போலவும்தான் கேரக்டர் ஸ்கெட்ச் அமைய வேண்டுமா..? இதனைத் திருத்தியிருக்கலாம்..

படத்தின் திரைக்கதை ஓட்டத்தில் விஜய் வசந்தின் நடிப்பும் மின்னல் வேகத்தில் ஓடிக் கொண்டேயிருப்பதால் வித்தியாசமாக எதனையும் உணர முடியவில்லை. ஆனால் அடுத்தப் படத்தில் ஆள் கண்டிப்பாக மாறியே ஆக வேண்டும்.. படத்துக்குப் படம் தோற்றத்தையும் மாற்றி, கேரக்டர்களையும் மாற்றினால்தான் ஒரு கலைஞன் மோல்டு ஆக முடியும்.. விஜய் வசந்த் புரிந்து கொண்டால் சரி..

‘சாட்டை’ படத்தில் பார்த்த சின்னப் பொண்ணு மஹிமாதான் இதில் ஹீரோயின். அப்பா அழகம்பெருமாளுடன் நட்புடன் பேசும் காட்சிகளில் ஒரு மகள் போல தோன்றுகிறார். இது போன்ற அப்பாக்களைத்தான் மகள்களுக்கு நிறையப் பிடிக்கும்.. இயக்குநருக்கு இதற்காகவே தனியாக ஒரு பாராட்டு..! விஜய் வசந்துடன் சண்டை போடுவது.. மருத்துவமனையில் கடுகடுவென்று பேசுவது.. அதே மருத்துவமனையில் தான் ஒளிந்து கொண்டு நமோ நாராயணனிடம் இருந்து தப்பிக்க நினைப்பது என்ற காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.

அடுத்தது சரண்யாவுக்குத்தான்.. அம்பானியோட அம்மாவா இருந்தாலும் சரி.. அமாவாசையோட அம்மாவா இருந்தாலும் சரி.. சரண்யாவின் வேஷம் கச்சிதமாகத்தான் இருக்கும்.. இதிலும் அப்படியே..! மஹிமாவின் புகைப்படத்தை வைத்து மகன் விஜய் கனவு காணத் துவங்கும் காட்சியில் அதைப் பார்த்து பெருமைப்படும் சரண்யாவின் எக்ஸ்பிரஷன்ஸ் சிம்ப்ளி சூப்பர்ப்..!

இசையமைப்பில் பிரேம்ஜி இதில் நல்லபடியாகவே ஸ்கோர் செய்திருக்கிறார். 2 பாடல்கள் கேட்கும்படி இருந்த்து. மற்றபடி பின்னணி இசையில்தான் கொஞ்சம் கவனமெடுத்து உழைத்திருக்கிறார் போலும்.. பிற்பாதியில் நடைபெறும் ரஹ்மான்-பிரபு மோதல் காட்சிகள்.. கிளைமாக்ஸ் காட்சிகளில் கவனம் மாறாமல் களத்தைக் கவனிக்க வைத்திருக்கிறது பின்னணி இசை. வெல்டன் பிரேம்ஜி..!

இதில் இடைவேளைக்கு பின்பு வரும் ரஹ்மான்-பிரபு கிளைக் கதை.. இதைத் தொடர்ந்து பிரபுவின் பழி வாங்குதல்.. இதற்கு துணை போகும் செளந்தர்ராஜன் குரூப். அவர்களைத் துரத்தும் விஜய் வசந்த்.. மாருதி வேனில் பணத்தை வைத்துக் கொண்டு சுற்றும் அடியாள் குரூப்.. அழுத்தமான முக பாவனையிலேயே வில்லித்தனத்தைக் காட்டியிருக்கும் சுகன்யா… இந்த அண்டர்வேல்டு பிஸினஸின் இன்னொரு முகத்தையும் மிக சுவாரஸ்யமாகக் காட்டி ரசிக்க வைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ராஜபாண்டி.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு நபர் படத்தின் வசனகர்த்தா ராதாகிருஷ்ணன். சன் டிவியில் பல வருடங்களாக காமெடி நிகழ்ச்சிகளுக்கு வசனம் எழுதியே குவித்திருக்கும் ராதாவுக்கு இதுவும் ஒரு வெற்றிப் படம்தான்.. பாணா காத்தாடியும் இவரது கை வண்ணம்தான்.. ரஹ்மான் கட்சிக் கூட்டத்தில் பேசுகின்ற பேச்சு.. தலைவரின் சமாதானம்.. அண்ணன் கவிதா பாரதியின் முறைப்பு.. இந்தக் காட்சியில் இருக்கும் வசனங்களே ராதாவுக்கு போதும்.. கொஞ்சம் காமெடியும் கலந்து கொடுக்க வேண்டுமே என்றெண்ணி நமோ நாராயணனிடத்தில் நிறைய சரக்குகளை கலந்து கொடுத்திருக்கிறார். கலகலக்க வைத்திருக்கிறார் நமோ நாராயணன் ராதாவின் புண்ணியத்தில்.

லாஜிக் மீறல்களை பற்றிச் சொல்லத் தேவையில்லாத அளவுக்கு படத்தின் ஈர்ப்பு நம்மை இழுப்பதால் என்னவோ நடக்குது படத்தில் எதுவோ நடக்குது.. அவசியம் பார்க்க வேண்டிய படம் என்பதற்கு இந்த டைட்டிலே ஒரு காரணமாகவும் இருந்திருக்கிறது.. அவசியம் பாருங்கள்..

1 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

//ஏ.ஆர்.அந்துலே மகாராஷ்டிராவின் முதல்வராக இருந்த காலம் அது. மும்பையில் இருக்கும் இந்தியன் வங்கியின் தலைமை வங்கிக் கிளைக்கு ரிசர்வ் வங்கியின் உத்தரவின்பேரில் கரன்சி நோட்டுகள் வந்து கொண்டிருந்தன. அவைகள் அடுத்தடுத்த நாட்களில் கட்டுக்களாக பிரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள இந்தியன் வங்கியின் பல்வேறு கிளைகளுக்கு பயன்பாட்டுக்காக அனுப்பப்பட்டு வந்தன.
//

ரிசர்வ் வன்கியில் இருந்து தினமெல்லாம் பணம் அனுப்புவதில்லை, அப்போ கதைய தப்பா சொல்லிட்டாங்களா? இல்லை இப்போ நீங்க தப்பா சொல்றிங்களா?

வழக்கமாக கிளை வங்கிகள் தான் மொத்த இருப்பில் இருந்து 10%க்கு(இது மாறும்) மேல் கிளையில் வச்சிருக்க கூடாது எனவே பணத்தினை தினம் ' தலைமைக்கிளைக்கு அனுப்பும்".

தினசரி பணப்பரிவர்த்தனைக்கு கையிருப்பு 10% விட தேவை என்றால் "தலைமைக்கிளை" அனுப்பும்.

தலைமை கிளையும் "cash reserve ratio" கணக்கின் படி அதிக பணத்தினை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிவிட வேண்டும் "அவங்களே " வச்சுக்கக்கூடாது.

தினசரி ஆகும் கலெக்‌ஷனை கட்டாமல் "கையில் வைத்துக்கொண்டு" செய்த ஊழல் தான் அது.

# டாஸ்மாக் ஊழியர்கள் தினசரி வித்தக்காசை உடனே (அடுத்த நாள் காலையில் கட்டிவிட வேண்டும்) வங்கில் கட்டாமல் கையில் வைத்துக்கொண்டு "ரொட்டேஷன்" விடுகிறார்கள், சில சமயம் ஏமாற்றிவிடும் சூழலில் "கடையில் கல்லாவில் " பணம் வச்சிட்டு போனேன் ,காலையில் பார்த்தால் பூட்டை உடைச்சு திருட்டிட்டாங்கனு "போலீசில்" பொய்ப்புகார் கொடுத்து நாமம் போட்டுக்கொண்டிருந்தார்கள், எனவே இப்போலாம் அப்படி புகார் கொடுத்தால் முதல் "கவனிப்பு" கடைக்காரனுக்கு தான் அவ்வ்!