23-04-2014
என் இனிய வாக்காளப் பெரும் ‘குடி’மக்களே..!
என் பேச்சை எவன் கேக்குறான்..? நானும் இந்த இணையவுலகம் வந்து 7 வருஷமாச்சு. கரடியாய் கத்துறேன்.. ஒரு பய கேக்கலை.. திரும்பத் திரும்ப ஆத்தா.. இல்லாட்டி தாத்தா.. இதோ இப்போ இன்னொரு தேர்தலும் வந்தாச்சு.. இடைல ஒரு நாள்தான் இருக்கு. இப்பவாச்சும் யோசிங்கப்பா..!
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஒரு முறை நம்மை கொள்ளையடிக்கப் போகும் கூட்டம் மாறினாலும், கொள்ளைகள் மட்டும் மாறியதில்லை. இதோ அடுத்து நம்மளைச் சுரண்டியெடுக்க நம்மகிட்டேயே பெர்மிஷன் கேட்டு வந்திருக்காங்க. இப்படி கூட்டணி சேர்ந்திருக்கிறவங்க எல்லாரும் என்ன கொள்கைப்படியா கூட்டணி சேர்ந்திருக்காங்க..? காலைல ஒரு கட்சியோட கூட்டணி பேச்சு.. மதியம் வேற கட்சியோட.. ராத்திரி இன்னொரு கட்சியோட.. இப்படி, எவன் அதிகம் சீட்டு தருவான்.. எவன் அதிகமா காசு தருவான்னு பார்த்து, பார்த்து கூட்டணி வைக்குறதுக்கு பேரு மக்கள் தொண்டா..?
ஒரு பக்கம் சென்ற 5 வருடங்களில் இந்தியா என்ன உலகமே கண்டிராத அளவுக்கு ஊழல் அடித்த பெருமையுடன் இருக்கும் திமுக. இன்னொரு பக்கம் தனி நபர் ஊழலில் தனி சகாப்தமே படைத்துவிட்ட அதிமுக.. இவங்களுக்கு நடுவுல அயோத்தில ராமர் கோயிலை கட்டியே தீருவோம்.. எவன் வந்தாலும் போட்டுத் தள்ளாம வுடமாட்டோம்ன்னு நிக்குற பா.ஜ.க.. அனைத்து சாதிக்காரர்களும் அவரவர் சாதி சனங்களை கூட்டி வைத்து சங்கம் ஆரம்பிங்க.. அதோட கட்சியும் ஆரம்பிங்க.. அப்புறம் எல்லா சாதியும் சேர்ந்து மெகா கட்சிகளின் கூட்டணி வைத்து திராவிட கட்சிகளை வீட்டுக்கு அனுப்புவோம் என்ற கொள்கையோடு பா.ம.க.. கொள்கையாவது மண்ணாவது.. எவன் என் மச்சானுக்கு சீட்டு கொடுக்குறானோ.. என் மனைவி பேச்சை எவன் கேக்குறானோ அவன்கூடத்தான் கூட்டணின்னு கேப்டன் கட்சி.. இவங்களை நம்பிக்கிட்டு ஒட்டியும், ஒட்டாமலும் டிராமா போடும் சின்னச் சின்ன கட்சிகள்.. இவர்களெல்லாம் சேர்ந்துதான் நம்ம நாட்டைக் காப்பாத்தப் போறாங்களாக்கும்..!
ஒரு சொத்துக் குவிப்பு வழக்கு 20 வருஷமா கோர்ட்ல இழுத்துக்கிட்டிருக்கு. இதைப் பத்தி என்னன்னு கேக்க நாட்டுல நாதியில்லை.. முகவரியே தெரியாத ஆளுங்க 200 கோடி ரூபாயை ஒரு டிவி சேனலுக்குத் தூக்கிக் கொடுத்திட்டு போயிட்டாங்க. அதைப் பத்தியும் கேக்க முடியலை.. கலவரம்ன்னு சொல்லி உயிரோட அப்பாவி பெண்களையும், குழந்தைகளையும் எரிச்சிருக்காங்க. அவங்க யாருன்னே கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்றாங்க.. இவங்கெல்லாம் திரும்பவும் நம்மகிட்டயே வந்து வெட்கமில்லாமல் ஓட்டுக் கேட்க வந்துட்டாங்க..
மக்கள் எவ்வழியோ அவ்வழியே அரசியல்வியாதிகள்.. இத்தனை ஊழல் செஞ்சிருக்காங்களே.. இவ்வளவு கோடிகளை சுருட்டியிருக்காங்களே.. இவங்களை வீட்டுக்கு அனுப்புவோம்னு நம்ம முட்டாள் மக்களுக்கும் அறிவில்லை.. புருஷன் சொல்றான்.. புள்ளை சொல்றான்.. அப்பன் சொல்றான்.. ஆத்தா சொல்லுதுன்னு அறிவே இல்லாம எவனுக்கோ ஓட்டைக் குத்திட்டு வந்திர்றது.. அப்புறமா நாடு நல்லாயில்லே.. கெட்டுப் போயிருச்சுன்னு புலம்ப வேண்டியது..
“அதான் நீ எப்படியும் நாலு காசு சம்பாதிக்கத்தான போற..? போன தேர்தலப்போ 500 கொடுத்தீங்க. இப்போ விலைவாசி ஏறிருச்சுல்ல.. ஆயிரம் ரூபா கொடு.. ஓட்டுப் போடுறேன்”னு சொல்ற ஜனங்க இருக்கும்போது இந்த அரசியல்வியாதிகளும் இப்படித்தானே இருப்பார்கள்.?
இந்தத் தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணிதான் ஜெயிக்கும் என்று நினைக்கிறேன். மோடி பிரதமராக வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது. அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றால் இங்கே தமிழகத்தில் இருந்து ஆத்தா முதல் ஆளாய் மோடிக்கு கை கொடுக்கப் போவதும் உறுதி. பதிலுக்கு கர்நாடகாவில் நடக்கும் தனது சொத்துக் குவிப்பு வழக்கை பணால் ஆக்க உதவி கேட்பார்.
இதில் தாத்தா இடையில் புகுந்து கெடுக்க முயல்வார். அவருக்கு சற்று குறைவான எம்.பி.க்களே கிடைக்கவிருப்பதால் மோடியுடன் ஐக்கியமாகும் வாய்ப்புகள் குறைவு. ஆனாலும் இவர் மோடியை நாடத்தான் செய்வார்.
அவருடைய கண்ணின் மணி, கனிமொழியின் வாழ்க்கை சிபிஐ கோர்ட்டில் இருக்கிறது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது தயவு தாத்தாவுக்குத் தேவை. ஆகவே மதியாதார் வாசல் என்றாலும் நிச்சயம் மோடியைத் தேடி ஓடப் போகிறார் தாத்தா.
மூன்றாவது அணி நிச்சயம் உருவாகாது. ஜெயலலிதா பிரதமராகவே மாட்டார். ஆனால் பிரதமரை உருவாக்கும் கீயாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அது மோடியாக இருந்தால் நடக்காது. மோடி அத்வானியின் இன்னொரு ஆன்மா. இன்னொரு முகம். ஆத்தாவின் பாச்சா அவரிடம் பலிக்க வாய்ப்பில்லை. கிடைக்கிற அமைச்சர்கள் பதவியில் ஆட்களை உட்கார வைத்து நிலைமையைத் தனக்குச் சாதகமாக்க நினைப்பார் ஆத்தா.. தாத்தா இதனை முறியடிக்க நினைப்பார்..
ஒருவேளை(ஒருவேளை என்றுதான் சொல்கிறேன்) காங்கிரஸும், பி.ஜே.பியும் சம அளவுக்கு பலமாக வந்தால் தாத்தா நிச்சயம் காங்கிரஸுக்குத்தான் சப்போர்ட் செய்வார். பாரதீய ஜனதா என்றால் மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இனிமேல் தமிழகத்தில் உச்சரிக்க முடியாதே என்கிற பயம்தான்..! இப்படி ஒவ்வொரு கொள்ளையர்களும் ஆளுக்கு ஒரு கொள்ளை கொள்கையோடு, களத்தில் இருப்பதால் நாம் என்னதான் செய்வது..?
சென்ற சட்டமன்றத் தேர்தலின்போதே நான் சொன்னதைத்தான் இப்போதும் சொல்கிறேன்..
எத்தனையோ கருத்து வேறுபாடுகள் இருப்பினும் கம்யூனிஸ்டு இயக்கங்களின் தோழர்கள் மட்டுமே மக்களுடன் கொஞ்சம் நெருக்கமாக உள்ளார்கள். ஆகவே அந்த கம்யூனிஸ்டு வேட்பாளர்கள் அனைவரும் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும். ஆலந்தூர் தொகுதியைத் தவிர..! அந்தத் தொகுதில் நமது மனதிற்கினிய நேர்மையான பத்திரிகையாளர் என்ற அடையாளத்திற்குச் சொந்தக்காரரான அண்ணன் ஞாநி வெற்றி பெற்றாக வேண்டும். அவருடைய வெற்றி நிச்சயமாக ஜனநாயகத்தின் வெற்றியாகத்தான் இருக்கும்..!
கம்யூனிஸ்டுகள் நிற்கும் தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளில் ஆம் ஆத்மி நின்றிருந்தார்கள் அவருக்கு நிச்சயம் வாக்களியுங்கள்.. குறைவான வாக்குகளாக இருந்தாலும் பரவாயில்லை. நாம் அவர்களுக்குக் கொடுக்கின்ற வாக்குகள் அனைத்தும் திராவிட இயக்கங்களுக்கு எதிரானதாக நமது உணர்வை மங்கிப் போகாமல் பாதுகாக்கும்.
கம்யூனிஸ்டுகள், ஆம் ஆத்மி கட்சிகள் நிற்கும் தொகுதிகளைத் தவிர மற்ற தொகுதிகளெனில் சுயேச்சை வேட்பாளர்களில் யார் உங்களுக்கு நேர்மையாளர் என்று தெரிகிறதோ அவருக்கே வாக்களியுங்கள்.
இந்தத் தேர்தலில் ஒரேயொரு மன வருத்தமான விஷயம்.. அண்ணன் வைகோவுக்கு ஆதரவளிக்க முடியாத சூழல் இருப்பதுதான். இது அவராகவே இழுத்துக் கொண்டதுதான்.. வைகோவின் உயிரான ஈழ விஷயத்தில் காங்கிரஸ் எந்த அளவுக்கு எதிர்ப்பாக உள்ளதோ, அதே அளவுக்கு எதிர்ப்பாளர்கள் உள்ள கட்சி பாரதீய ஜனதா. அதனுடன் கூட்டணி வைத்து இவர் எதனைச் சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. அந்தக் கூட்டணியில் இருப்பதாலேயே அண்ணன் வைகோவுக்கு என்னால் ஆதரவளிக்க முடியவில்லை. அண்ணன் மன்னி்ப்பாராக..!
இருப்பது ஒரு ஓட்டு.. வாக்களிக்க இருப்பவர்களோ கோடிக்கணக்கில்.. நீங்கள் செலுத்தப் போகின்ற வாக்குகள்தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களது தலைவிதியை நிர்ணயிக்கப் போகும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யப் போகிறது.. இப்போதாவது முழித்துக் கொண்டு செயல்படுங்கள்.
இத்தனை பள்ளிக்கூடங்கள்.. இத்தனை பாடங்கள்.. இத்தனை படிப்புகள் என்று அத்தனையையும் படித்துவிட்டும், ஊழல்வாதிகளை தங்களது இதய தெய்வம் என்றும் நெஞ்சில் சுமக்கிறோம் என்றும் சொல்லிக் கொண்டு ஓட்டு கேட்கும் படித்தவர்களை பார்க்கும்போது நமது சமூகத்தின் முட்டாள்தனம் நன்கு தெரிகிறது.. நம்முடைய அடிப்படை தவறே நமது சுயநலம்தான். அடுத்தவனைவிட நாம நல்லாயிருக்கணும் என்ற எண்ணமும், அரசியலில் நுழைந்தால் மிக எளிதாக பணம் சம்பாதித்து பணக்காரனாகிவிடலாம் என்ற எண்ணமும் இளைய சமுதாயத்தினர் மத்தியில் வழி வழியாக, பரம்பரை பரம்பரையாக போதிக்கப்பட்டுவிட்டது. அதன் பலனை நமது எதிர்கால சந்ததிகளும் அனுபவிக்கத்தான் போகிறார்கள்.
இதை மனதில் கொண்டு யோசியுங்கள் வாக்காளர்களே.. கடைசியாக ஒரு விஷயம்..
இப்போ இந்தியாவுலேயே எல்லாரையும்விட கில்லாடி, புத்திசாலி யாருன்னு பார்த்தா.. நம்ம மண்ணுமோகனசிங்குதான்.. இன்னும் பாதி இடங்கள்ல வாக்குப்பதிவே நடக்கலை.. அதுக்குள்ள எப்படியும் நம்ம போஸ்ட் காலியாகப் போவுதுன்னு புரிஞ்சிக்கிட்டு பொண்டாட்டியை கூட்டிட்டு டெல்லியையே ரவுண்டு அடிச்சு.. அவங்களுக்குப் பிடிச்சா மாதிரி.. தனி வீடு பார்த்து பால் காய்ச்ச நாளெல்லாம் குறிச்சு வைச்சிட்டு சூட்கேஸை தூக்க ரெடியா இருக்காரு பார்த்தீங்களா..? இவரோட தொலைநோக்குப் பார்வை இந்தியால எவனுக்கும் இல்லை..!
வாழ்க மண்ணுமோகனசிங்கு..!
|
Tweet |
2 comments:
இன்னும் நூறு வருடம் ஆனாலும் இதே நிலைதான் தல, நம்பளால புலம்பதான் முடியும்.
\\அண்ணன் வைகோவுக்கு ஆதரவளிக்க முடியாத சூழல் இருப்பதுதான். இது அவராகவே இழுத்துக் கொண்டதுதான்.. வைகோவின் உயிரான ஈழ விஷயத்தில் காங்கிரஸ் எந்த அளவுக்கு எதிர்ப்பாக உள்ளதோ, அதே அளவுக்கு எதிர்ப்பாளர்கள் உள்ள கட்சி பாரதீய ஜனதா. அதனுடன் கூட்டணி வைத்து இவர் எதனைச் சாதிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. அந்தக் கூட்டணியில் இருப்பதாலேயே அண்ணன் வைகோவுக்கு என்னால் ஆதரவளிக்க முடியவில்லை\\
வைக்கோவுக்கு மேற்கண்ட நிலைப்படி ஆதரவளிக்க முடியவில்லை.
ஆனால்,
திரும்பத் திரும்ப ஆத்தா, தனி நபர் ஊழலில் தனி சகாப்தமே படைத்துவிட்ட அதிமுக.. என்று நீங்கள் சொல்லும் அதிமுகவுடன் கடைசிவரை காவடிதூக்கிக்கொண்டிருந்துவிட்டு கடைசியில் ஆத்தா விட்ட உதையில் நடுரோட்டில் வந்து விழுந்த கம்யூனிஸ்டுகளுக்கு நாங்கள் ஓட்டு போட வேணுமாக்கும். உதைத்த ஆத்தாவை வையுறதுக்குக்கூட வாயில்லாத கம்யூனிஸ்டுகளுக்கு நாங்கள் கியூ கட்டி ஓட்டு போடணுமாக்கும்.
அப்டியே கம்யூனிஸ்டுகள் ஜெயித்து விட்டாலும் காங்கிரசுக்கு தானே முட்டு கொடுப்பார்கள்... இல்ல மூணாவது அணி, முப்பதாவது அணின்னு ஏதாவது காமெடி பண்ணுவார்கள்.....
ஆம் ஆத்மி காமெடி சூப்பர் மாஸ்டர் பீசு...
நாடு இன்றிருக்கும் நிலைமையில் காமெடியெல்லாம் தாங்கும் திறனில் இல்லை...அதுதான் உண்மை நிலை
Post a Comment