நவீன சரஸ்வதி சபதம் - சினிமா விமர்சனம்

30-11-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

குடியின் தீமையைப் பற்றி விளக்கப் படமாக எடுக்க வேண்டிய படம்..! பெரும் தயாரிப்பாளர் ஒருவர் கையில் சிக்கிவிட்டதால் பெரும் பாடமாகவே எடுத்துக் காண்பித்திருக்கிறார்கள்..!


ஹீரோவாகி அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் பிடிக்கத் துடிக்கும் ராஜ்குமார்.. அடுத்த எம்.பி.யாகி இன்னமும் பணத்தை சம்பாதிக்கத் துடிக்கும் சத்யன்.. சொர்ணாக்கா மாதிரியான ஒரு மனைவியிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் விடிவி கணேஷ்.. ரகசிய வியாதி மருத்துவராக திகழும் ஜெய்.. இவர்கள் நால்வரும் நண்பர்கள்.. நால்வருக்கும் ஒரு ஒற்றுமை.. மெகா குடியர்கள்..! 

குடியின் தீமைகளைப் பற்றி இவர்களை வைத்தே ஒரு நாடகம் நடத்த ஆசைப்படுகிறாராம் சிவபெருமான். ஆகவே ஜெய்யின் கல்யாணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு.. ராஜ்குமாரின் புதிய பட ஷூட்டிங் துவங்கும் ஒரு வாரத்திற்கு முன்பு.. பேச்சுலர்ஸ் பார்ட்டி கொண்டாட்டத்திற்காக பாங்காங் புறப்படுகிறார்கள் நண்பர்கள். 

அங்கே வைத்து அவர்களை கடத்தும் சிவபெருமான், ஆளில்லாத ஒரு தனித் தீவில் அவர்களை கொண்டு போய்ச் சேர்க்கிறார்..! மிதமிஞ்சிய குடியால் அந்த இடத்திற்கு எப்படி வந்து சேர்ந்தோம் என்பதுகூட தெரியாதவர்களாக இருக்கிறார்கள் அவர்கள்.. அங்கிருந்து தப்பிச் செல்ல அவர்களுக்கு 2 முறை வாய்ப்புகள் கொடுக்கிறார் சிவன்.. அவர்கள் அதனை மிஸ் செய்துவிட.. 6 மாதங்கள் கழிந்த நிலையில் அவர்கள் செய்த பாவம், புண்ணியத்தை சீர்தூக்கிப் பார்த்து.. கடைசியாகவும் ஒரு வாய்ப்பு தருகிறார். அதில் அவர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என்று தப்பி வருகிறாகள். இப்போது அவர்களது நிலைமை ஊரில் எப்படி என்பதுதான் கடைசி ரீல் கிளைமாக்ஸ்..!?

முதலில் கதையின் அடிப்படையே தவறானது.. குடிகாரர்களையே திட்டிக் கொண்டிருக்கும் இயக்குநர், குடியைத் திறந்து வைத்திருக்கும்.. அனுமதித்திருக்கும் அரசுகளை பற்றி ஒரு வார்த்தைகூட இதில் சொல்லவில்லை..! டாஸ்மாக் கடைகளே இல்லையெனில் இங்கே குடிகாரர்களே இருக்க மாட்டார்களே.. பிறகெதற்கு இந்த அறிவுரையெல்லாம்..? வீண்தானே..? அரசை நேரடியாக திட்டி படமெடுத்தால் படம் வெளியில் வந்துவிடுமா..? வராதே..? வரலைன்னா எப்படி போட்ட காசை எடுக்கிறது..? எப்படி இயக்குநருக்கு சான்ஸ் கிடைக்கிறது..? அதுனால.. இளிச்சவாயர்கள் யாரு குடிகார மட்டைகள்தான்.. அவர்களா வீடு தேடி வந்து கேக்கப் போறாங்க..? உதைக்கப் போறாங்க..? உன்னை இல்லடா.. அவன.. அவன இல்லடா.. இன்னொருத்தனை என்று கை காட்டிவிட்டுத் தப்பிக்கலாம் இல்லையா..? அப்படித்தான் ஏதோ குடிக்கு எதிரான கதையாக ஒரு பில்டப் விட்டு... கொஞ்சம், கொஞ்சம் காமெடிகளை வைத்து படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்..!


முற்பாதி முழுவதிலுமே இவர்களைப் பற்றிய அறிமுகத்திலேயே கழிந்துவிடுகிறது..! அதிலும் கொடுமையோ கொடுமை சிவலோகத்தின் தற்போதைய செட்டிங்ஸ்..! எடுத்திருப்பது நல்ல கருத்துள்ள, அறிவுரை சொல்லும் படமாம்..! ஆனால் காட்சியமைப்போ நகைச்சுவையாக இருக்கிறது.. எது மனதில் நிற்கும்..? 

சிவலோகத்தில் வரவேற்பு என்று பெயர் எழுதப்பட்ட பகுதி.. லேப்டாப்புடன் வரவேற்பு பெண்..! முருகன் ஐபாடில் பாட்டு கேட்கிறார். நாரதரை மொபைலில் கூப்பிடுகிறார் பார்வதி.. சிவன் ஆப்பிள் மேக் கம்ப்யூட்டர் முன் பேஸ்புக்கின் முதல் பக்கத்தை ஓப்பன் செய்த நிலையில் காத்திருக்கிறார்.. நாரதர் வெயிட் தூக்க முடியாததால் வீணையைத் தூக்கிக் கடாசிவிட்டு கிடாருடன் வருகிறார்..! இவர்களது பேச்சுக்கள் எல்லாம் பாதி ஆங்கிலமும், பாதி தமிழுமாக கலாய்க்கிறார்கள்..! இப்படி எல்லாமே காமெடியாகவே இருந்து தொலைக்க.. இவர்கள் சொல்வதை மட்டும் சீரியஸாக நாம் கேட்க வேண்டும் என்கிறார்கள்..? என்ன கொடுமை சரவணா இது..?

விடிவி கணேஷின் சின்னச் சின்ன கடிகள்தான் படத்தை பிற்பாதியில் காப்பாற்றுகின்றன. இப்படி தனித்தீவில் மாட்டிக் கொண்ட பின்பும் ஜாலியாகத்தான் பொழுதைக் கழிக்கிறார்கள்.. இங்கேயும் கள்ளைக் குடித்து ஆட்டமோ ஆட்டம் ஆடுகிறார்கள்..! குடியினால்தான் இப்படி தனித் தீவில் மாட்டிக் கொண்டு அல்ல்ல்படுகிறோம் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்யும் காட்சிகள் இல்லாததால் எல்லாமே திராபையாக தெளிவில்லாமல் தெரிகிறது..!

2-வதாக கிடைத்த வாய்ப்பை கணேஷ் விட்டுவிடும்போதுதான் திடீரென்று ஞானதோயம் வந்து டயலாக் பேசி இனிமேல் குடிக்க மாட்டோம் என்று சத்தியம் செய்து கொள்கிறார்கள்..! இதனால் என்ன ஆகிவிடப் போகிறது என்றுதான் தெரியவில்லை. படத்தை முடித்தாக வேண்டிய கட்டாயம் இருந்ததால் 3-வதாக ஒரு ஆப்ஷனை கொடுத்து அவர்களைக் காப்பாற்றிவிட்டார்கள்..!

சித்த மருத்துவர் கோவை காமராஜ் கேரக்டரில் நடித்திருக்கும் சித்ரா லஷ்மணனுக்கு மிகப் பொருத்தமான கேரக்டர். ஒருவகையில் இவரும் சேலம் சிவராஜ் போலவேதான் தெரிகிறார்..! அவருடைய டயலாக் டெலிவரியே சிரிப்பை மூட்டுகிறது..! அதிலும் கடைசியில் அவரது மனைவியை அறிமுகப்படுத்தும் காட்சி செம கலகலப்பு..! ஆனால் படத்தில் முதல் சிரிப்பு வந்த காட்சியே ஹீரோயின் வீட்டில் அனைவரும் ஜெய்யின் பேட்டியை பார்க்க டிவி முன் அமர்ந்திருப்பதுதான்..! 

அதேபோல் தலையில் தேங்காய் விழுந்து அடிபட்டவுடன் சரஸ்வதி சபதம் டயலாக்குகளை அள்ளி வீசும் கணேஷின் காமெடியும் சிரிப்பை மூட்டியது..! கணேஷ் இதற்கடுத்து செய்யும் அனைத்துமே சரவெடி.. தியேட்டரில் இவருக்காகவே ஒரு கூட்டம் வருகிறது போலும்..! மனுஷன் டயலாக்குகளையும் அள்ளி வீசுகிறார்.. "ஏழாம் அறிவு படத்துலேயே போதி தர்மனை பத்தி சொல்லியிருக்காங்க..." என்று சொல்வதற்கு "சூர்யா எனக்கு டிக்கெட் கொடுக்கலப்பா..." என்று சீரியஸாகவே பதில் சொல்லும் இடம் செம செம..! சித்தப்பா, மாமா கேரக்டருக்கு மிகப் பொருத்தமானவர்தான்..!

ஜெய் வழக்கம்போல.. துள்ளி விழுகும் காதலர்.. கண்டவுடன் காதலாக.. பாடலைக் கேட்டவுடன் காதலாக இதில் மலர்கிறது.. காதலியை பார்த்து பேசி.. ஒரு அக்ரிமெண்ட்படி 2 வருடமாக பின்னாடியே அலைந்து திரிந்து காதலை ஓகே செய்ய வைப்பதும்கூட காதலர்களுக்குப் பிடித்தமான காட்சிகள்தான்..! 


ஹீரோயின்தாம்பா அழகு.. கொஞ்ச நேரமே வந்தாலும் நிவேதா தாமஸ் அழகாக நடித்திருக்கிறார்.. சத்யன், அவரது அப்பாவான சுவாமிநாதன்.. நடிகராக ராஜ்குமார்.. சிவபெருமானாக சுப்பு பஞ்சு.. நாரதராக மனோபாலா.. பார்வதியாக தேவதர்ஷிணி என்று ஆர்ட்டிஸ்டுகளை கச்சிதமாக பொறுக்கியெடுத்து நடிக்க வைத்து  வேலை வாங்கியிருக்கிறார்.. இட்ஸ் ஓகேதான்..!

பிரேமின் இசையும், பாடல்களும் ஒலிக்கின்றன.. ஆனால் பாடல்கள்தான் மனதில் நிற்கவில்லை..! ஒளிப்பதிவாளர் ஆனந்திற்கு ஒரு தனி ஷொட்டு.. கடல் பகுதியை மிக அழகாக காட்டியதற்கு..!  ஒரு புறம் கடலைத் தாண்டி சென்று மறுபுறம் மீண்டும் கடலுக்கே திரும்பி வந்து நிற்கும் காட்சியில் ஒரு பயத்தை கேமிரா மட்டுமே காட்டியிருக்கிறது.. நடிகர்கள் காட்டவில்லை..! பாங்காங் போய்தான் எடுத்தார்களா என்று தெரியவில்லை..! விமான நிலையத்தின் உட்புறம் மற்றும் சாலையில் செல்லும் காட்சிகள் மட்டுமே இருந்தன.. கிளப் டான்ஸுகளை இங்கேயே எடுத்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. 

இதற்குப் பெயர் பொருத்தம்கூட இல்லை.. 'நவீன திருவிளையாடல்' என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்..! ஆனால் அப்படியொரு படம் சமீபத்தில் வெளிவந்துவிட்டதால் 'சரஸ்வதி சபத'த்தை கையில் எடுத்தார்களாம்..! தலைப்புக்காகவே இடையில் திடீரென்று சரஸ்வதிக்கு கோபம் வந்து, சிவனுடன் மோதுவதைப் போல ஒரு சப்ஜெக்ட்டை திணித்திருக்கிறார்கள்..! வெட்டி வேலை..! வேறு பெயராவது வைத்துவிட்டுப் போயிருக்கலாம். இனிமேல் தயவு செய்து இது மாதிரியான நல்ல படங்களின் தலைப்புகளை, வேறு யாருக்கும் கொடுத்து பெயருக்கு இருக்கும் ஒரு மரியாதையைக் கூட கெடுக்காதீர்கள் என்று தயாரிப்பாளர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்..!

ஒரு சீரியஸான சப்ஜெக்ட்டை காமெடியாகவே சொல்ல முனைந்திருப்பதால் இது  மக்கள் மனதில் நிற்குமா என்பது சந்தேகமே..? ஏனெனில் 2 மணி 20 நிமிடங்கள் ஓடும் இதனைவிடவும், ஒவ்வொரு தியேட்டரிலும் இடைவேளையில் நுரையீரல் பஞ்சு போன்ற மென்மையானது என்ற கர்ண கொடூரக் குரலுடன் ஒலிக்கும் அந்த 1 நிமிட விளம்பரப் படமே மக்கள் மனதை பெரிதும் தொடுகிறது... 

தமிழ்ப் படம் படத்தில் அமுதனிடமும், பின்பு வெங்கட்பிரபுவிடமும் இணை இயக்குநராகப் பணியாற்றிய சந்துரு இயக்கியிருக்கிறார். காமெடிகளை இன்னமும் கொஞ்சம் மெருகேற்றி இயக்கியிருக்கலாம்.. முதல் படம் என்பதால் வாழ்த்தி வரவேற்போம்..! 

ஒரு முறை பார்க்கலாம்..! 

9 comments:

Muthukumara Rajan said...

முதலில் கதையின் அடிப்படையே தவறானது.. குடிகாரர்களையே திட்டிக் கொண்டிருக்கும் இயக்குநர், குடியைத் திறந்து வைத்திருக்கும்.. அனுமதித்திருக்கும் அரசுகளை பற்றி ஒரு வார்த்தைகூட இதில் சொல்லவில்லை..! டாஸ்மாக் கடைகளே இல்லையெனில் இங்கே குடிகாரர்களே இருக்க மாட்டார்களே..

-- who said.

உண்மைத்தமிழன் said...

[[[muthukumara Rajan sk said...

முதலில் கதையின் அடிப்படையே தவறானது.. குடிகாரர்களையே திட்டிக் கொண்டிருக்கும் இயக்குநர், குடியைத் திறந்து வைத்திருக்கும்.. அனுமதித்திருக்கும் அரசுகளை பற்றி ஒரு வார்த்தைகூட இதில் சொல்லவில்லை..! டாஸ்மாக் கடைகளே இல்லையெனில் இங்கே குடிகாரர்களே இருக்க மாட்டார்களே..

-- who said.]]]

நான்தான் சொல்றேன்..!

Nondavan said...

நல்ல வேலை, என் காசு தப்பிச்சது.. இதன் டிரைலர் பார்த்து போகலாம் என்று இருந்தேன்.. எதுக்கும் ஒரு நாள் கழித்து உங்க பதிவின் முடிவில் தீர்மானிக்கலாம் என்று இருந்தது நல்லாதாப்போச்சு...

வாழ்க அண்ணாச்சி

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நல்ல வேலை, என் காசு தப்பிச்சது.. இதன் டிரைலர் பார்த்து போகலாம் என்று இருந்தேன்.. எதுக்கும் ஒரு நாள் கழித்து உங்க பதிவின் முடிவில் தீர்மானிக்கலாம் என்று இருந்தது நல்லாதா போச்சு...

வாழ்க அண்ணாச்சி]]]

சுத்தம்.. ஒரு டிக்கெட்டை கவுத்துட்டனா..? பாவம் தயாரிப்பாளர்..!

Nondavan said...

ஹஹஹஹா... ஒரு டிக்கெட் இல்லை... 3 டிக்கெட்... (நான், மகன், மனைவி)

நாங்களும் எத்தனை படத்தை தான் தியேட்டரில் பார்க்குறது...???

ஒரு படத்திற்கு போனால், மினிமம் ரூபாய் 5,000 செலவு ஆகுது... இதை பொறுத்துகிட்டு தான் ஒவ்வொரு படத்திற்கும் போகிறோம்...

பல சமயம், அடிச்சு வெளியிலே அனுப்புறாங்க...அவ்வளவு மொக்கை

aavee said...

அது மாற்றான் இல்ல ஏழாம் அறிவு..

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...
ஹஹஹஹா... ஒரு டிக்கெட் இல்லை... 3 டிக்கெட்... (நான், மகன், மனைவி) நாங்களும் எத்தனை படத்தைதான் தியேட்டரில் பார்க்குறது? ஒரு படத்திற்கு போனால், மினிமம் ரூபாய் 5,000 செலவு ஆகுது. இதை பொறுத்துகிட்டுதான் ஒவ்வொரு படத்திற்கும் போகிறோம். பல சமயம், அடிச்சு வெளியிலே அனுப்புறாங்க. அவ்வளவு மொக்கை.]]]

என்னத்த சொல்றது..? பிடிச்சா பாருங்க.. இல்லைன்னா விட்ருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை ஆவி said...

அது மாற்றான் இல்ல ஏழாம் அறிவு.]]]

புரியலண்ணே..!

ராஜ் said...

//மாற்றான் படத்துலேயே போதி தர்மனை பத்தி சொல்லியிருக்காங்க என்று சொல்வதற்கு சூர்யா எனக்கு டிக்கெட் கொடுக்கலப்பா என்று சீரியஸாகவே பதில் சொல்லும் இடம் செம செம..!///

அண்ணே, போதிதர்மன் படம் மாற்றான் இல்ல, ஏழாம் அறிவு...அதை தான் ஆ.வி சொல்லறார்....
நானும் பார்த்தேன்...சில இடங்களில் சிரிப்பை வரவழைத்தாலும், படம் அவ்வளவு நல்லா இல்லை...