14-11-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ் ஈழப் போராட்டம் பற்றி இதற்கு முன் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் மெட்ராஸ் கபே-யை தவிர மற்றவைகள் பெரிதாகப் பேசப்படவில்லை.. ஆனால் திரையிடுவதற்கே தலையால் தண்ணீர் குடிக்க வேண்டியதாயிற்று. 'உச்சிதனை முகர்ந்தால்' படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும், தடைகளும் அது போன்ற படங்களையே தயாரிக்கும் முடிவோடு யாரும் கோடம்பாக்கத்திற்குள் கால் வைக்க்க் கூடாது என்பதையே உணர்த்தியது. ஆனாலும் அதற்குப் பின்பும் 'மிதியடி' என்றொரு படம் வந்தது.. நீலிமாராணி நடித்தது. யுத்தக்களத்தில் புதைக்கப்பட்ட கன்னிவெடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.. இயக்குநர் நண்பர் இகோர் இப்போது 'தேன்கூடு' என்றொரு படத்தை தயாரித்து இயக்கிவிட்டு சென்சார் சர்டிபிகேட் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்..! ஆனால் இந்தப் படத்தை எப்படி சுலபமாக யு/ஏ சர்டிபிகேட் வாங்கி வெளியிட்டார்கள் என்றால் அதற்கான காரணத்தை நீங்கள் படம் பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும்..!
சிங்கள அரசு, சிங்கள ராணுவம், விடுதலைப்புலிகள் இயக்கம், இந்திய அரசு, தமிழக அரசு என்று யாரையும் விட்டுவைக்காமல் அவ்வப்போது லேசுபாசாக விமர்சனம் செய்துவிட்டு அந்த விமர்சனத்தைக்கூட சில இடங்களில் காட்சிகளாக பதிவு செய்திருக்கிறார்கள்.. படம் முழுவதிலும் தமிழ் ஈழ மக்களின் பேச்சு ஸ்டைல்.. கேட்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது.. புலிக்கொடி பறக்கும் காட்சிகள் ஒரு தமிழ்ச் சினிமாவில் காட்டப்பட்டு, அது இந்தியாவில் திரையிடப்படும் இந்தச் சூழலை நாம் மனப்பூர்வமாக வரவேற்க வேண்டும்..!
முல்லைத்தீவில் இருந்துதான் கதை துவங்குகிறது.. துவக்கத்தில் விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் வாழும் மக்கள்.. தமிழ்ச் சினிமா போல ஒரு காதல்.. என்னைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்திலும், ஏக்கத்திலும் ஹீரோ அஜய்யை சுற்றிச் சுற்றி வரும் ஹீரோயின் ஜெனிபர்.. அங்கிருந்து தமிழகம் தப்பி வரும் மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பி வைக்கும் புரோக்கர்.. வெளியூர் போய் பிஸ்கட், பிரட் பாக்கெட்டுகளை வாங்கி வந்து அதனை ரேஷன் முறையில் கொடுப்பதாகச் சொல்லி பாதியை பதுக்கி வைத்து அதையும் பிளாக்கில் விற்பனை செய்யும் அக்மார்க் தமிழன்.. எப்போதே காணாமல் போன தனது மகன் திரும்பி வருவான் என்றெண்ணி அவனுக்காகக் காத்திருக்கும் வயதான தம்பதிகள்.. தனது மகனை பெரிய படிப்பாளியாக உருவாக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பாசக்கார அப்பா.. இப்படி அந்தக் கிராமத்தில் இருக்கும் ஒரு சிலரை மையப்படுத்தியே கதையை நகர்த்தியிருக்கிறார் புதுமுக இயக்குநரும், படத்தின் ஹீரோவாவுமான அஜெய் நூத்தகி.
இதனூடே இன்னொரு சின்னப் பையன் கேரக்டர்.. இவரை வைத்துதான் அனைத்துவித விமர்சனங்களையும் முன் வைத்திருக்கிறார் இயக்குநர். காணாமல் போன பையனைத் தேடியலையும் வயதானவரின் பெயர் வேலுப்பிள்ளை. இவரைக் குறி வைத்தே பல வசனங்கள் செல்கின்றன..!
சிங்கள ராணுவம் திடீரென்று அந்தப் பகுதியைத் தாக்கி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட.. தமிழர்கள் கொல்லப்பட்டு.. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்குட்பட்டு கொல்லப்படும் சூழலில் மீண்டும் அடுத்த அதிரடியாக புலிகள் தாக்குதலில் மீண்டும் அப்பகுதியில் புலிக்கொடி பறக்கிறது..! வரும் தளபதியிடம் மக்கள் கேள்விகளை வீசுகிறார்கள்.. இந்தப் போராட்டத்தினால் யாருக்கு லாபம்..? இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறது..? என்றைக்கு இது நிற்கும்.. என்று கோப்படுகிறார்கள்..!
மீண்டும் மீண்டும் விமான தாக்குதல்கள்.. சோத்துப் பிரச்சினை.. எத்தனை நாளைக்கு பிரெட்டையும், பிஸ்கட்டையும் சாப்பிடுவது.. இந்தியாவுக்கு போயாவது வாழலாம் என்று முடிவெடுத்தால், புலிகள் இயக்கம் அதனைத் தடை செய்கிறது.. அனுமதிக்க மறுக்கிறது.. ஒரு சூழலில் புலிகளை எதிர்த்து அனைவரும் ஒன்றாகவே படகில் அங்கிருந்து இந்தியா நோக்கி கிளம்பி வருகிறார்கள்.. இதற்கு மேல்தான் இந்தப் படம் நாடகத்தனமான, வழக்கமான தமிழ்ச் சினிமா என்பதிலிருந்து மாறி அழகியல் கலையாகவே மாறிவிட்டது..!
தப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் ஒன்று சேர்ந்து கிளம்பினாலும், அவர்களுக்கிடையில் இருக்கும் குரோதங்கள்.. கோபங்கள்.. என்று அனைத்தையும் அவ்வப்போது இடையிடையே வெளிப்படும் சூழலும் ஏற்படுகிறது.. வழி தவறிய நிலையில் அந்த தப்பித்து வரும் அகதி மக்களின் அவல நிலையை இதைவிடவும் வேறு யாரும் மிக எளிமையாக புரிய வைத்துவிட முடியாது..!
இந்தப் படத்தின் இயக்குநர் அஜெய் தமிழர் அல்ல.. ஆந்திராக்காரர்..! அடிக்கடி காக்கிநாடா கடல் பகுதிக்கு வழி தவறி வந்து நிற்கும் தமிழர்களின் படகுகள் பற்றிய செய்தியைப் பார்த்தும், படித்தும் கேள்விப்பட்டும் அவர்களது அந்த அவலத்தை ஒரு படமாக எடுத்துப் பதிவு செய்ய நினைத்து இதனை எடுத்தாராம்..! இவரை எவ்வளவு வேண்டுமானாலும் வாழ்த்தலாம்..!
படகு செல்லும் பாதையை எப்படி தீர்மானிப்பது.. கப்பல் படைகள் வந்தால் எப்படி தப்பிப்பது..? ஒன்றரை நாளில் இந்தியா வந்துவிட வேண்டிய இவர்கள் வழி தவறியதால், 10 நாட்களுக்கு மேல் கடலில் பயணித்து எதனை இழந்து எதனை பெற்றார்கள் என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்..!
ஹீரோவாகவும், இயக்குநராகவும் அசத்தியிருக்கிறார் அஜெய்.. இவருக்கு ஜோடியாக ஜெனிபர்.. நந்திதா என்ற இயற்பெயரோடு இதற்கு முன்னரே பல படங்களில் நடித்திருக்கிறார். கல்யாணம் செஞ்சு, பிள்ளையும் பெத்த பின்பு இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது.. பையனை தேடிக் கொண்டிருக்கும் முதியவர்களான அந்த வயதான பெண்மணியும், வேலுபிள்ளை கேரக்டரில் நடித்திருக்கும் கொண்டாவும் மனதை உருக வைத்துவிட்டார்கள்..! இப்படியெல்லாம் முடிவுகள் ஒரு அப்பனுக்கும், அம்மாவும் வருமெனில் எந்தப் பிள்ளையால் தாங்கிக் கொள்ள முடியும்..? அந்தச் சின்னப் பையன் படபடவென பேச்சில் பட்டாசாக வெடிக்கிறான்.. அனைவரையும் லெப்ட் அண்ட் ரைட்டாக வெளுத்துக் கட்டும் அவனது பரிதாப முடிவுதான் அந்தக் கேரக்டருக்கு கனம் சேர்க்கிறது..! அவனை வைத்து இயக்குநர் கேட்டிருக்கும் கேள்விகளைத்தான் சம்பந்தப்பட்ட பலரும் தமிழ்நாட்டில் தினம் தினம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்..! கைக்குழந்தையுடன் தனது மனைவியுடன் பயணிக்கும் சந்திரன்.. ஆஸ்துமா நோயாளியான அந்த முதிய பெண்மணி.. அவளைக் காப்பாற்றத் துடிக்கும் பெரியவர்.. மற்றவர்களுக்கு கொடுக்க நினைக்காமல் தானே சாப்பிட நினைக்கும் புரோக்கர்.. மனிதாபிமானம் நிறைந்த அவனது மனைவி என்று அனைவருக்குமான திரைக்கதையை அழகாக எழுதியிருக்கிறார் இயக்குநர்..!
இடைவேளைக்கு பின்பான பகுதி முழுவதும் கடலாக இருக்க.. அனைத்தையும் கண் முன்னே அழகாகக் காட்டியிருக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ராஜ்.. கொஞ்சமும் பிசிறு தட்டாமல் நெய்திருக்கும் எடிட்டர் கார்த்திகா சீனிவாஸ் இருவரும் படத்திற்கு மிகப் பெரிய பலம்.. இந்தப் படம் சொல்லியிருக்கும் பாடமும், கேட்டிருக்கும் கேள்விகளும் தமிழ்த் திரையுலகில், "நாங்க என்ன செய்ய முடியும்..? அதான் மீட்டிங் போட்டு பேசியாச்சுல்ல.. பேட்டியெல்லாம் கொடுத்தாச்சுல்ல..." என்று சொல்லி தப்பிப் போயிருக்கும் தமிழ் இயக்குநர்களை நோக்கித்தான் வீசப்பட்டிருக்கிறது..! அவர்கள்தானே இதனை முதலில் கேட்டிருக்க வேண்டும்.. இதற்கும் ஒரு ஆந்திராக்காரன்தான் வர வேண்டுமா..?
"நாங்கள் இப்போது தோற்றவர்களாக இருக்கலாம். ஆனால் என்றோ ஒரு நாள்.. எங்களது வாரிசுகள் வெல்வார்கள்.." என்ற நம்பிக்கையையும் வார்த்தைகளால் இந்தப் படம் சொல்கிறது.. இந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்த சென்சார் போர்டுக்கு மீண்டும் எனது நன்றிகள்..!
அவசியம் பார்க்க வேண்டிய படம் மக்களே..! தவற விடாதீர்கள்..!
|
Tweet |
16 comments:
வீரமாமுனிவர் என்ற ஆங்கிலேயர் தொடங்கி இன்று வரையிலும் தமிழரல்லாதவர்களால் மட்டுமே இங்கு தமிழையும் தமிழர்களின் பிரச்சனைகளையும் பேச வைக்க முடிகின்றது.
அண்ணாச்சி,
//இந்தியாவுக்கு போயாவது வாழலாம் என்று முடிவெடுத்தால், புலிகள் இயக்கம் அதனைத் தடை செய்கிறது.. அனுமதிக்க மறுக்கிறது.. ஒரு சூழலில் புலிகளை எதிர்த்து அனைவரும் ஒன்றாகவே படகில் அங்கிருந்து இந்தியா நோக்கி கிளம்பி வருகிறார்கள்..//
எப்படி சென்சார் அனுமதிச்சது என்ற கேள்விக்கு இதுவே போதுமே.
மறைமுகமாக புலிகளின் செயல்ப்பாடுகளை விமர்சிக்கும் படமாக எடுத்திருக்கலாம், மேலும் இந்திய அரசியலின் தலையீட்டை விமர்சித்தாற்ப்போல நீங்களும் குறிப்பிடக்காணோம், எனவே அரசுக்கு சாதகமான பாடமாகவே இதனைப்பார்த்திருக்கலாம்.
உண்மையில அனைத்து சம்பவங்களையும் விமர்சித்து படம் எடுத்தால்,இந்தியரசியலின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கினால் தடை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.
arumai
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து நடுநிலைமையாக வந்த முதல் (தமிழ்) படம் என நான் நினைக்கின்றேன். இப்படத்தை எடுக்க அஜய் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். ஈழத்தைப் பொறுத்தவரை ஏழை, பிற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் போரை விரும்பியதில்லை. சிங்கள & தமிழ் அரசியல்வாதிகள் போரை அவர்கள் மீது திணித்தனர் வன்னி & மட்டகளப்புத் தமிழர்களின் அவல நிலையை, வறுமையை, போர் எதிர்ப்பரசியலை கொஞ்சமாவது இப்படம் தொட்டுச் செல்லும் என நினைக்கின்றேன். நிச்சயம் பார்க்கத் தூண்டும் கதையமைப்பே. சென்சார் மட்டுமல்ல புலிகளுக்குப் பின் இந்தியாவின் ஈழத்தமிழர் கொள்கை மாறி வருகின்றது என்பதே உண்மை.
Anne ,thanks for the review, //வெளிக்கட்டும் சூழலும் ஏற்படுகிறது// check this
[[[ஜோதிஜி திருப்பூர் said...
வீரமாமுனிவர் என்ற ஆங்கிலேயர் தொடங்கி இன்றுவரையிலும் தமிழரல்லாதவர்களால் மட்டுமே இங்கு தமிழையும் தமிழர்களின் பிரச்சனைகளையும் பேச வைக்க முடிகின்றது.]]]
இருக்கின்ற தமிழர்கள் அடுத்தனை கவிழ்ப்பதிலேயே குறியாக இருப்பதால் இதற்கு வேறு ஆட்கள்தான் தேவைப்படுகிறார்கள்..!
[[[வவ்வால் said...
அண்ணாச்சி,
//இந்தியாவுக்கு போயாவது வாழலாம் என்று முடிவெடுத்தால், புலிகள் இயக்கம் அதனைத் தடை செய்கிறது.. அனுமதிக்க மறுக்கிறது.. ஒரு சூழலில் புலிகளை எதிர்த்து அனைவரும் ஒன்றாகவே படகில் அங்கிருந்து இந்தியா நோக்கி கிளம்பி வருகிறார்கள்..//
எப்படி சென்சார் அனுமதிச்சது என்ற கேள்விக்கு இதுவே போதுமே.]]]
ஓகே..!
[[[மறைமுகமாக புலிகளின் செயல்ப்பாடுகளை விமர்சிக்கும் படமாக எடுத்திருக்கலாம், மேலும் இந்திய அரசியலின் தலையீட்டை விமர்சித்தாற்போல நீங்களும் குறிப்பிட காணோம், எனவே அரசுக்கு சாதகமான பாடமாகவே இதனைப் பார்த்திருக்கலாம்.
உண்மையில அனைத்து சம்பவங்களையும் விமர்சித்து படம் எடுத்தால், இந்தியரசியலின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கினால் தடை செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்.]]]
வசனங்கள் புரியாமல் போயிருக்கலாம் என்றே நானும் நினைக்கிறேன்..!
[[[raja durai said...
arumai]]]
வருகைக்கு நன்றிகள் நண்பரே..!
[[[விவரணன் நீலவண்ணன் said...
இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து நடுநிலைமையாக வந்த முதல் (தமிழ்) படம் என நான் நினைக்கின்றேன். இப்படத்தை எடுக்க அஜய் கடுமையாக உழைத்திருக்க வேண்டும். ஈழத்தைப் பொறுத்தவரை ஏழை, பிற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் போரை விரும்பியதில்லை. சிங்கள & தமிழ் அரசியல்வாதிகள் போரை அவர்கள் மீது திணித்தனர் வன்னி & மட்டகளப்புத் தமிழர்களின் அவல நிலையை, வறுமையை, போர் எதிர்ப்பரசியலை கொஞ்சமாவது இப்படம் தொட்டுச் செல்லும் என நினைக்கின்றேன். நிச்சயம் பார்க்கத் தூண்டும் கதையமைப்பே. சென்சார் மட்டுமல்ல புலிகளுக்குப் பின் இந்தியாவின் ஈழத் தமிழர் கொள்கை மாறி வருகின்றது என்பதே உண்மை.]]]
பிரபாகரனை வாழ்த்தியோ, தமிழ் ஈழம் தேவை என்றோ எடுத்திருந்தால் கதை கந்தலாகியிருக்கும்..! இது போன்ற கதையுடன்தான் தேன்கூடு தயாராகியிருக்கிறது.. இன்னமும் பெர்மிஷன் கிடைக்கவில்லை..!
[[[Karthikeyan Vasudevan said...
Anne, thanks for the review, //
வெளிக்கட்டும் சூழலும் ஏற்படுகிறது// check this]]]
வருகைக்கு நன்றி தம்பீ..! பார்க்கிறேன்..!
நமக்கு பார்க்க வாய்ப்பே இல்ல... டவுன்லோட் தான் பண்ணனும்.. சில நாட்கள் கழித்து பார்த்துவிட்டு சொல்கிறேன் அண்ணே..
உங்க பதிவு படம் பார்க்க தூண்டுகிறது...
[[[Nondavan said...
நமக்கு பார்க்க வாய்ப்பே இல்ல... டவுன்லோட்தான் பண்ணனும்.. சில நாட்கள் கழித்து பார்த்துவிட்டு சொல்கிறேன் அண்ணே..
உங்க பதிவு படம் பார்க்க தூண்டுகிறது...]]]
ஓகே.. அவசியம் பாருங்க பிரதர்..!
படத்தின் கதையையும்,உங்கள் விமர்சனத்தையும் நீங்கள் ஒட்ட வைத்திருக்கும் படங்கள் முந்திக்கொள்கின்றன.
[[[Nat said...
படத்தின் கதையையும், உங்கள் விமர்சனத்தையும் நீங்கள் ஒட்ட வைத்திருக்கும் படங்கள் முந்திக் கொள்கின்றன.]]]
அதுக்கென்ன செய்யறது..? 10 படங்கள் வரும்போது நல்லாயிருக்கும் படங்களை தயவு தாட்சண்யமில்லாமல் சொல்லி்ததானே ஆக வேண்டும்..!
சரியா ெெெெெெெெெெெெெெசான்னிங்க,,,,,ன்னிங்க,,,,ன்னிங்க,,,ன்னிங்க,,ன்னிங்க,ன்னிங்கன்னிங்ன்னிஙன்னின்னன்ன
Typed with Panini Keypad
சரியா ெெெெெெெெெெெெெெசான்னிங்க,,,,,ன்னிங்க,,,,ன்னிங்க,,,ன்னிங்க,,ன்னிங்க,ன்னிங்கன்னிங்ன்னிஙன்னின்னன்ன
Typed with Panini Keypad
Post a Comment