உன்னைப் போல் ஒருவன் - தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

27-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


கமல் 'உன்னைப் போல் ஒருவனை' எடுத்தாலும் எடுத்தார். போதும், போதும் என்கிற அளவுக்கு அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். தவறு அவர் மீதும், வசனகர்த்தா மீதும், இயக்குநர் மீதும் இருக்கிறது என்பதால் இது இந்தக் கூட்டணிக்குத் தேவைதான் என்று நான் நினைக்கிறேன்.

'ஒரு மேட்டரை எடுத்தா முழுசா செஞ்சிரணும்.. இல்லைன்னா தூக்கம் வராது'ன்றதாலதான் போனா போகுதுன்னு வெகுஜனப் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் நமது விமர்சனத் தொகுப்பில் இணைக்க முடிவு செய்தேன்.

தினம்தோறும் வெறும் ஆயிரம் பேர் படிக்கின்ற அல்லது புரட்டுகின்ற அல்லது லேசாக லுக் விடுகிற இந்த வலையுலகத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் இந்தப் படத்தை ஆழ்ந்து, திறனாய்ந்து, யோசித்து, பரிசோதனை செய்து எழுதியதைப் போன்று ஒரு உண்மையான திறனாய்வு விமர்சனம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் வரும் என்று நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

விமர்சனங்கள் வந்தன. ஆனால் நான் எதிர்பார்த்தவைகள் அதில் இல்லை. அனைத்துமே அப்படியொரு கோணமே தங்களுக்குத் தோணவில்லை என்பதைப் போல் கமலஹாசன் என்னும் கலைஞானிக்கு சோப்பு போட்டு நாங்கள்லாம கியூவுல நிக்குறோம்ண்ணே என்று பரணி பாடியிருக்கிறார்கள். சரி போகட்டும். அவங்களுக்கும் பிஸினஸ்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணும்ல்ல..

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சரடு விடுகிறார்களே.... அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

நீங்களும் படித்துப் பாருங்கள்..

உன்னைப் போல் ஒருவன் - தமிழன் எக்ஸ்பிரஸ் விமர்சனம்

முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். தீவிரவாதத்தை தீவிரவாதத்தால்தான் அழிக்க முடியும் என நினைக்கும் ஒரு தனி மனிதனின் கோபத்தைச் சொல்லும் படம். ஒரு வரி கதைதான். அதை பிரமிக்க வைக்கும் திரைக்கதையின் மூலம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கின்றனர்.

கமிஷனர் மாறாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. "நகரில் மக்கள் கூடும் முக்கியமான இடங்களில் வெடிகுண்டுகள் வைத்துள்ளேன். அது ஆறு மணிக்கு வெடிக்கும். நான் சொல்லும் நான்கு தீவிரவாதிகளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் கொண்டு வந்து ஒப்படைக்க வேண்டும். அப்படிச் செய்தால் அமைதியான நாட்டை அமைதியாகவே விட்டுவிடுகிறேன்" என்கிறார் தொலைபேசியில் பேசியவர்.

இந்த மிரட்டலைக் கேட்டு கமிஷனரும், உள்துறைச் செயலாளரும் அதிர்ந்து போகிறார்கள். "முடிந்தால் குண்டு வைத்தவனைப் பிடி. இல்லையேல் தீவிரவாதிகளை விடுதலை செய்து மக்களைக் காப்பாற்று" என்கிறார் உள்துறை செயலர். கையில் அதிகாரம் கிடைத்ததும் அதிரடி வேலையில் இறங்குகிறார் கமிஷனர். எவ்வளவோ முயன்றும் மிரட்டல்காரரின் இடத்தை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. பெரும்பாலும் தீவிரவாதத்தால் இறந்தவர்களின் பெயர்களில் அவர்களின் முகவரியில் சிம்கார்டு வாங்கியிருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொள்கிறார் கமிஷனர்.

வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களை விற்கும் ஒரு நபரைக் கொண்டு வந்து விசாரித்து அடையாளங்களைத் தெரிந்து கொள்வதற்குள் நேரம் கடந்து விடுகிறது. கெடு நேரம் நெருங்கியதால் வேறு வழியின்றி நான்கு தீவிரவாதிகளையும் மிரட்டல்காரர் சொன்ன இடத்திற்கு அனுப்பி விடுகின்றனர்.

தமது இயக்கம்தான் தம்மை விடுவிக்கிறது என்று மகிழ்ச்சியோடு செல்லும் தீவிரவாதிகள் என்ன ஆனார்கள்? தொலைபேசியில் மிரட்டல் விடுத்தவரின் நோக்கம் என்ன என்பதுதான் மீதிப்படம்.

இந்தியில் வெளியான 'எ வெட்னெஸ் டே' படத்தின் ரீமேக். இந்தியில் நஸ்ரூதின்ஷா நடித்த பாத்திரத்தில் கமலும், அனுபம்கெர் நடித்த பாத்திரத்தில் மோகன்லாலும் நடித்திருக்கின்றனர்.

இரவு, பகல் பாராமல் உழைத்து மர்ம பைகளை முக்கியமான இடங்களில் வைக்கும் கமல் அதில் ஒன்றை போலீஸ் நிலையத்திலேயே வைக்கிறார். நல்ல பிள்ளையாக மார்க்கெட்டில் காய்கறி வாங்கிக் கொண்டு வருபவர் ஓர் உயரமான கட்டிடத்தில் ஏறுகிறார். அங்கே இருக்கைகளைத் தயார் செய்து லேப்டாப் முன்பு அமர்கிறார். அதன் மூலம் கமிஷனரிடம் பேசத் தொடங்கும்வரை அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் கமல், வெடிகுண்டு மிரட்டலை ஆரம்பித்ததும் பீதியைக் கிளப்புகிறார்.

"வழக்கமாக கதாநாயகன் நல்லதுதானே செய்வான்? கெட்டது ஏன் செய்கிறான்?" என்ற குழப்பம் படம் பற்றிய சுவாரஸ்யத்தைத் தூண்டுகிறது. ஃப்ளாஷ்க்கில் இருந்து காபியை எடுத்துக் குடித்துவிட்டு ஃப்ளாஷ்பேக்கில் கதையைச் சொல்லும்போது நமது கண்களிலும் ஈரத்தை வரவழைக்கிறார் கமல்.

உள்துறைச் செயலாளருடன் பேசும் காட்சிகளில் சிரிக்க வைக்கும் மோகன்லால் கடமையில் கறாராக இருக்கும் காட்சிகளில் கம்பீரமாக நிற்கிறார். அவருக்கு உதவியாக வரும் அதிரடி போலீஸ்காரர் கணேஷ் வெங்கட்ராம், பிரேம்குமார் ஆகியோரின் நடிப்பும் பிரமாதம். உள்துறை செயலாளராக லட்சுமி நடித்திருக்கிறார்.

இரா.முருகனின் வசனம், ஸ்ருதிஹாசனின் பின்னணி இசை, மனோஜ் சோனியின் ஒளிப்பதிவு ஆகியவை படத்திற்குப் பக்க பலம். உயரமான மொட்டை மாடி, கமிஷனர் அலுவலகம் என இரண்டு இடங்களும் கதையின் முக்கியக் களங்கள். அதனால் அங்கு இடம் பெறும் பல காட்சிகளை வேறு, வேறு கோணங்களில் ஒளிப்பதிவாளர் உதவியுடன் மிரட்டும்படி படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சக்ரி டெலோடி.

கமலின் சினிமா பயணத்தில் அடுத்த மைல் கல் "உன்னைப் போல் ஒருவன்".

இணைப்புகள் :

குமுதம் இதழ் விமர்சனம்

ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்

குங்குமம் இதழ் விமர்சனம்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்