உன்னைப் போல் ஒருவன் - குமுதம் இதழ் விமர்சனம்..!

27-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!கமல் 'உன்னைப் போல் ஒருவனை' எடுத்தாலும் எடுத்தார். போதும், போதும் என்கிற அளவுக்கு அர்ச்சனைகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார். தவறு அவர் மீதும், வசனகர்த்தா மீதும், இயக்குநர் மீதும் இருக்கிறது என்பதால் இது இந்தக் கூட்டணிக்குத் தேவைதான் என்று நான் நினைக்கிறேன்.

'ஒரு மேட்டரை எடுத்தா முழுசா செஞ்சிரணும்.. இல்லைன்னா தூக்கம் வராது'ன்றதாலதான் போனா போகுதுன்னு வெகுஜனப் பத்திரிகைகளின் விமர்சனத்தையும் நமது விமர்சனத் தொகுப்பில் இணைக்க முடிவு செய்தேன்.

தினம்தோறும் வெறும் ஆயிரம் பேர் படிக்கின்ற அல்லது புரட்டுகின்ற அல்லது லேசாக லுக் விடுகிற இந்த வலையுலகத்தில் எழுதும் வலைப்பதிவர்கள் இந்தப் படத்தை ஆழ்ந்து, திறனாய்ந்து, யோசித்து, பரிசோதனை செய்து எழுதியதைப் போன்று ஒரு உண்மையான திறனாய்வு விமர்சனம் வெகுஜனப் பத்திரிகைகளிலும் வரும் என்று நானும் எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.

விமர்சனங்கள் வந்தன. ஆனால் நான் எதிர்பார்த்தவைகள் அதில் இல்லை. அனைத்துமே அப்படியொரு கோணமே தங்களுக்குத் தோணவில்லை என்பதைப் போல் கமலஹாசன் என்னும் கலைஞானிக்கு சோப்பு போட்டு நாங்கள்லாம கியூவுல நிக்குறோம்ண்ணே என்று பரணி பாடியிருக்கிறார்கள். சரி போகட்டும். அவங்களுக்கும் பிஸினஸ்ன்னு ஒண்ணு இருக்கே. அதையும் பார்க்கணும்ல்ல..

ஆனால் நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்கள் என்று சரடு விடுகிறார்களே.... அதுதான் கொஞ்சம் இடிக்கிறது..

நீங்களும் படித்துப் பாருங்கள்..

உன்னைப் போல் ஒருவன் - 'குமுதம்' விமர்சனம்

பயங்கரவாதத்துக்கு பயங்கரவாதிகளின் மொழியிலேயே தீர்வு தேடிப் புறப்படுகிற ஒரு பொதுஜனம்தான் உன்னைப் போல் ஒருவன்..

சமூகக் கோபத்தை ஆழ்ந்த மெளனத்தில் ஒளித்து வைத்திருக்கிற தேவைப்படுகிறபோது அதை அழுத்தமான கிண்டலாக வெளிப்படுத்துகிற குடும்பஸ்தனாக கமல் முழுமை பெறாத கட்ட மாடியில் தனி ஆளாய் லேட்பாட், டெலஸ்கோப், செல்போன்கள் சகிதம் உட்கார்ந்து கொண்டு காவல்துறையையே மிரட்டுவது திரையில் ஐம்பது வருடங்களைக் கடந்த கமலுக்குப் பொருத்தமான ஹீரோயிசம்.

'அன்டர்ப்ளே' செய்ய வேண்டிய சில இடங்களில் தீவிர இலக்கியப் பத்திரிகைகளுக்குத் தலையங்கம் எழுதுவதுபோல் பேசுவதை மட்டும் எப்போது தவிர்ப்பாரோ..?

கமிஷனராக வருகிற மோகன்லால் புத்திசாலித்தனமான காட்சிகளாலும் முதிர்ச்சியான நடிப்பாலும் அழகாக கமலுக்கு ஈடு கொடுக்கிறார்.

தமிழக அரசியலில் அதி முக்கியமான ஒருவரின் தொனியில் ஒலிக்கிற முதல்வர் குரல், உள்துறைச் செயலாளராக மிடுக்காக வந்திறங்கும் லட்சுமியின் நாசூக்கான பல்டி ஆகியவை தேவையற்ற மெனக்கெடல்கள்.

காவல்துறையின் நடவடிக்கைகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கமல் தனது மிஷினில் ஒரு தொலைக்காட்சி நிருபரை இழுத்துப் போடுவது சைலண்ட் சாணக்கியத்தனம். லாடம் கட்டுவதற்குப் பேர் போன போலீஸ் கணேஷும் என்கவுண்ட்டர் முடிந்த பிறகு டிவிக்கு சம்பிரதாய இண்டர்வியூ தருகிற பரத்ரெட்டியும் விறுவிறுப்பு சேர்க்கிற கேரக்டர்கள்.

ஸ்ருதிஹாசனின் பின்னணி இசை மிரட்டலுக்கு உதவுகிறது.

என்னதான் கமல் போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினாலும் பாம்ப் ஸ்குவாடு குரூப்புக்கே 'சிவப்பு வயரை அத்துவிடுங்க..', 'பச்சை வயரை கழற்றி விடுங்க' என்று யோசனை சொல்வது டூ மச்.

யாரோ ஒருவரிடமிருந்து வருகிற ஒற்றைத் தொலைபேசி மிரட்டலுக்கே கமிஷனர், முதல்வர்வரைக்கும் போவதையும் நம்ப முடியவில்லை. தீவிரவாதிகளைப் போட்டுத் தள்ளுவதற்கு கமல் கொடுக்கிற விளக்கத்தில் எக்கச்சக்க குழப்பம்.

வருடத்துக்கு இரு முறையாவது குண்டு வெடிப்புகளை அனுபவிக்கிற மும்பைவாசிகளின் கோபத்தை வெளிப்படுத்திய 'எ வெட்னெஸ் டே'யை நம்மூரில் பரீட்சித்துப் பார்த்திருக்கிறார் கமல்.

அந்தக் கோபத்தோடு முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளுடன் இருக்கிற நம்மை இணைத்துக் கொள்ளாமல், வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.

உன்னைப் போல் ஒருவன் - மூளைக்காரன். ஆனால் மேதையல்ல..!

டைரக்டர் வாய்ஸ்

கேள்வி : தன்னை சராசரி குடிமகன் என்று சொல்லிக் கொள்கிற கமல் துப்பாகி சகிதம் செயல்படுவது நெருடலாக இருக்கிறதே..?

சக்கி டோலட்டி : ஆர்டிஎக்ஸ் வெடி மருந்தையே வாங்க முடிகிற ஒருவரால் துப்பாக்கியையும், சுலபலமாக வாங்க முடியும். சாதாரண ஆள் என்றாலும், எதற்கும் தயாராக இருப்பதால்தான் கமல் துப்பாக்கி வைத்திருக்கிறார்.

வாசகர் கமெண்ட்

ப்ரவின்குமார் - கல்லூரி மாணவர்

"மோகன்லாலை பார்த்து கமல் பதட்டப்படும் க்ளைமாக்ஸ் காட்சி ரொம்ப நல்லா இருக்கு.."

ரேட்டிங் : ஓகே

நன்றி : 'குமுதம்' இதழ் 30-09-2009

இணைப்புகள் :

ஆனந்தவிகடன் இதழ் விமர்சனம்

குங்குமம் இதழ் விமர்சனம்

தமிழன் எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

சினிமா எக்ஸ்பிரஸ் இதழ் விமர்சனம்

13 comments:

குழலி / Kuzhali said...

//அந்தக் கோபத்தோடு முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளுடன் இருக்கிற நம்மை இணைத்துக் கொள்ளாமல், வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.
//
இவங்க ஒரு ஆள் தான் இதை சரியா சொல்லியிருக்காங்க...

பி.கு. நான் இன்னும் படம் பார்க்கலை

உண்மைத்தமிழன் said...

[[[குழலி / Kuzhali said...

//அந்தக் கோபத்தோடு முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளுடன் இருக்கிற நம்மை இணைத்துக் கொள்ளாமல், வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.//

இவங்க ஒரு ஆள்தான் இதை சரியா சொல்லியிருக்காங்க... பி.கு. நான் இன்னும் படம் பார்க்கலை]]]

இன்னுமா பார்க்கலை.. தேசிய குற்றமாச்சே..! சீக்கிரமா பார்த்துட்டு சுடச்சுட ஒரு பதிவு போடுங்க..!

SurveySan said...

இப்படி மொத்தமா காப்பி/பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். ரொம்ப தப்பு.

உண்மைத்தமிழன் said...

[[[SurveySan said...
இப்படி மொத்தமா காப்பி/பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். ரொம்ப தப்பு.]]]

ஆனந்தவிகடன் பதிவுலேயே பதில் சொல்லிட்டேன் சர்வேசன் ஸார்..!

Unknown said...

//அந்தக் கோபத்தோடு முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளுடன் இருக்கிற நம்மை இணைத்துக் கொள்ளாமல், வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.//

அந்த கோபம் எதிர்கலத்தை பற்றியது. தீவிரவாதம் என்பது ஒரு தேசிய பிரச்சினை. இங்கும் அது இருக்கிறது. ஆனால் அதன் பரிமாணம் வேறு. சாதி, இனம் மற்ரும் நிறம் சார்ந்த திவிரவாதம்.

மேலும், கோயம்பத்தூரில் நடந்தது என்ன?????? அதற்கான தீர்வு என்ன?!!!!

தீவிரவாத்துக்கு பதில் தீவிரவாதமே என்பது அவரால் (கமல்) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தேசிய திரைப்படத்தின் 'கரு'. ஒரு சாதாண மனிதனின் கொபத்தை திறமையாக வெளிப்படுதியிருக்கிறார்.


//என்னதான் கமல் போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினாலும் பாம்ப் ஸ்குவாடு குரூப்புக்கே 'சிவப்பு வயரை அத்துவிடுங்க..', 'பச்சை வயரை கழற்றி விடுங்க' என்று யோசனை சொல்வது டூ மச்.//

அது மூன்று நிமிட மரண பதட்டம். அதை படைத்தவன் அவிழ்க்க வேண்டிய முடிச்சி. இந்த விமர்சினத்தை சொல்ல எப்படி மற்றும் எவ்வளவு நேரத்திச் பாம்ப் ஸ்குவாடு டிஃபூஸ் செய்கிறது என்ற தெளிவு தேவை.

ஸ்பேடு ஜாக்கி said...

இப்ப உடம்பு எப்படி கீது நைனா?

உண்மைத்தமிழன் said...

[[[gopi said...

//அந்தக் கோபத்தோடு முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளுடன் இருக்கிற நம்மை இணைத்துக் கொள்ளாமல், வேடிக்கை பார்க்கத்தான் முடிகிறது.//

அந்த கோபம் எதிர்கலத்தை பற்றியது. தீவிரவாதம் என்பது ஒரு தேசிய பிரச்சினை. இங்கும் அது இருக்கிறது. ஆனால் அதன் பரிமாணம் வேறு. சாதி, இனம் மற்ரும் நிறம் சார்ந்த திவிரவாதம்.

மேலும், கோயம்பத்தூரில் நடந்தது என்ன?????? அதற்கான தீர்வு என்ன?!!!!

தீவிரவாத்துக்கு பதில் தீவிரவாதமே என்பது அவரால் (கமல்) ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு தேசிய திரைப்படத்தின் 'கரு'. ஒரு சாதாண மனிதனின் கொபத்தை திறமையாக வெளிப்படுதியிருக்கிறார்.

//என்னதான் கமல் போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினாலும் பாம்ப் ஸ்குவாடு குரூப்புக்கே 'சிவப்பு வயரை அத்துவிடுங்க..', 'பச்சை வயரை கழற்றி விடுங்க' என்று யோசனை சொல்வது டூ மச்.//

அது மூன்று நிமிட மரண பதட்டம். அதை படைத்தவன் அவிழ்க்க வேண்டிய முடிச்சி. இந்த விமர்சினத்தை சொல்ல எப்படி மற்றும் எவ்வளவு நேரத்திச் பாம்ப் ஸ்குவாடு டிஃபூஸ் செய்கிறது என்ற தெளிவு தேவை.]]]

கோவையில்தானே வெடித்தது.. சென்னையில் இல்லையே என்கிற மனப்பான்மைதான் பெரும்பான்மை சென்னைவாசிகளுக்கு..

தமிழ்நாட்டில்தானே வெடித்தது நம் மாநிலத்தில் இல்லையே என்று அடுத்த மாநிலத்துக்காரர்களுக்கு நிம்மதி..

மும்பையில்தானே வெடித்தது நம்ம ஊர்ல இல்லையே என்று பெரும்பாலான இந்தியர்களுக்கு பெருமூச்சு..

எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால் நமக்குள் சுயநலம் கூடிவிட்டது என்பதுதான் உண்மை..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்பேடு ஜாக்கி said...
இப்ப உடம்பு எப்படி கீது நைனா?]]]

ச்சும்மா சூடா, ஸ்பீடா இருக்கு நைனா..

சொகம் விசாரிச்சதுக்கு தேங்க்ஸ்மா..!

ஜெயக்குமார் said...

படம் பார்க்கும் வாய்ப்பு நேற்று தான் கிடைத்தது. ஆனால் அதைப்பற்றிய பல்வேறு விமர்சனங்களை ஏற்கனவே வலைத்தளங்களில் படித்துள்ளதால் சற்று கூர்ந்து கவனிக்கவேண்டியதாயிருந்தது.
சிலருடைய விமர்சனங்களும் அதில் நான் கண்ட ஒற்றுமை வேற்றுமைகளும்.
1. சிலர் இதில் காமென் மேன் கதா பாத்திரம் அவருக்கு பொருந்தவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும் பிரகாஷ்ராஜ் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டுருந்தனர்.

என்னைப்பொருத்தவரை இந்த கதாபாத்திரம் கமலுக்கு பொருந்தியிருக்கிறது. இதில் காமன் மேன் சற்றி ஜீனியஸாகவும் இருக்கவேண்டிய கட்டாயம் இருப்பதால் பிரகாஷ்ராஜிற்கு இந்த பாத்திரம் அவ்வளவாக பொருந்தியிருக்காது. ஒரு பாக்ஸிங் கோச்சாக அல்லது புட்பால் கோச்சாக நடிக்கும் போது பிரகாஷ்ராஜிடம் அதற்குறிய பாடி லாங்குவேஜ் சுத்தமாக இல்லை(வெண்ணிலா கபடி குழுவி வந்தவருக்கு சூப்பரா பொருந்தியிருந்தது). முயன்றுள்ளார் ஆனால் அது அவருக்கு பொருத்தமில்லை. எனவே இந்த வாதம் முற்றிலும் தவறு.

2. இந்துத்வா கருந்துக்கள்.

இதில் சுத்தமாக எனக்கு உடன்பாடு இல்லை. ஒருவேளை கமல் இந்து பிராமணனாக இல்லாமல் நஸ்ருதீன் ஷா போல முஸ்லீமாக இருந்திருந்தால் இந்தவாதம் சுத்தமாக வந்திருக்காது என்றே நினைக்கிறேன்.

3. கமல் சரியாக நடிக்கவில்லை.
எனக்கு இதில் உடன்பாடு இல்லை. இதில் ஆற்பாட்டமான அல்லது அழுதுவடியும் நடிப்பு தேவையில்லை. ஆரம்பம் மற்றும் இறுதிகாட்சிகளில் கமலிடம் தெரியும் சோகம் கலந்த ஒரு இருக்கமே போதும். அதை கமிஷனரிடம் பேசும் போது காட்ட இயலாது. ஒரு மன உறுதிகொண்ட புத்திசாலி தீவிரவாதியாக்த்தான் அந்த நேரத்தில் நடிக்கவேண்டும்.

4. உடன்பாடு இல்லாத காட்சிகள்.
கமிஷனரிடம் பேசுப்போகும் போது அவரிடன் இங்க “ஸ்மோக்” பன்னலாமா என்று கேட்கும் காட்சி வலிந்து திணிக்கப்பட்டது போல உள்ளது. எனக்கு தெரிந்து அந்த சூழ்நிலையில் யாரும் அந்த மாதிரி கேட்கமாட்டார்கள்.

அதேபோல கமல் தனது காரணத்தை கூறி முடித்ததும் அந்த கம்யூட்டர் என்ஞினியரும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் பல்டி அடிப்பதும் இயல்பாக இல்லை.

ஜெயக்குமார் said...

//என்னதான் கமல் போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினாலும் பாம்ப் ஸ்குவாடு குரூப்புக்கே 'சிவப்பு வயரை அத்துவிடுங்க..', 'பச்சை வயரை கழற்றி விடுங்க' என்று யோசனை சொல்வது டூ மச்.//

குமுதத்தில் இவ்வளவு ஞான சூன்யங்களையெல்லாம விமர்சனம் எழுதவிடுவாங்க.

கற்றது கையளவு என்று சொல்லும் தேசத்திலிருந்து வந்துள்ளோம் என்பது கூட தெரியாத அறிவுஜீவியையெல்லாம் எப்படி குமுதம் தன் பத்திரிக்கையில் வைத்துள்ளதோ தெரியவில்லை.

உண்மைத்தமிழன் said...

[[[ஜெயக்குமார் said...

4. உடன்பாடு இல்லாத காட்சிகள்.
கமிஷனரிடம் பேசுப்போகும் போது அவரிடன் இங்க “ஸ்மோக்” பன்னலாமா என்று கேட்கும் காட்சி வலிந்து திணிக்கப்பட்டது போல உள்ளது. எனக்கு தெரிந்து அந்த சூழ்நிலையில் யாரும் அந்த மாதிரி கேட்கமாட்டார்கள்.

அதேபோல கமல் தனது காரணத்தை கூறி முடித்ததும் அந்த கம்யூட்டர் என்ஞினியரும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் பல்டி அடிப்பதும் இயல்பாக இல்லை.]]]

இதில் எனக்கும் உடன்பாடே..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜெயக்குமார் said...

//என்னதான் கமல் போலீஸ் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினாலும் பாம்ப் ஸ்குவாடு குரூப்புக்கே 'சிவப்பு வயரை அத்துவிடுங்க..', 'பச்சை வயரை கழற்றி விடுங்க' என்று யோசனை சொல்வது டூ மச்.//

குமுதத்தில் இவ்வளவு ஞான சூன்யங்களையெல்லாம விமர்சனம் எழுதவிடுவாங்க. கற்றது கையளவு என்று சொல்லும் தேசத்திலிருந்து வந்துள்ளோம் என்பது கூட தெரியாத அறிவுஜீவியையெல்லாம் எப்படி குமுதம் தன் பத்திரிக்கையில் வைத்துள்ளதோ தெரியவில்லை.]]]

சரி விடுங்க ஸார்.. ஏதோ எழுதியாகணும்ல்ல..!

abeer ahmed said...

See who owns redneckgurus.com or any other website:
http://whois.domaintasks.com/redneckgurus.com