தேர்தல் ஸ்பெஷல்-10-03-2009-உத்தரப்பிரதேசம்

10-03-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

உத்தரப்பிரதேசத்தில் கூட்டணி முறிவு என்று மன வருத்தத்துடன் காங்கிரஸும், சமாஜ்வாதிக் கட்சியும் தெரிவித்தாலும் மறைமுகமாக ஒரு கூட்டணியைத் தங்களுக்குள் அமைத்துக் கொண்டதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன..

மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 71 தொகுதிகளுக்கு சமாஜ்வாதிக் கட்சி முதலிலேயே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதேபோல் காங்கிரஸும் 24 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி முறிந்தது.

ஆனாலும் இந்தியாவி்ன் நம்பிக்கை நட்சத்திரம் என்று தன்னைத்தானே சொல்லிக் கொள்ளும் மாயாவதியை வீட்டுக்கு வீழ்த்துவதற்காக ரகசிய உடன்பாடு ஒன்றிற்கு இரண்டு கட்சிகளுமே தலையாட்டியுள்ளனவாம்.

அதன்படி காங்கிரஸ், சமாஜ்வாதிக் கட்சிகளில் பலம் வாய்ந்த வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக குறிப்பிட்ட சில தொகுதிகளில் பலவீனமான வேட்பாளர்களை நிறுத்துவது என்று இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளனவாம்.

இந்தக் கூட்டணி முறிவுக்கு மிக முக்கியக் காரணம், முன்னாள் உ.பி. முதல்வர் கல்யாண்சிங் சமாஜ்வாதிக் கட்சியுடன் கரம் கோர்த்திருப்பதுதான் என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். ஆனாலும் உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர்களும் இந்தக் கூட்டணி முறிவு பற்றி பெரிய அளவில் கவலைப்படவில்லையாம்.

காரணம் என்னவெனில், 1992-ல் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கல்யாண்சிங்தான் உத்தரப்பிரதேசத்தின் முதல்வராக இருந்தார். இதனால் அப்போதிலிருந்தே முஸ்லீம் இனத்தவர் அவர் மீது காண்டுவில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் கல்யாண்சிங் முலாயத்துடன் இணைந்திருப்பதால் முஸ்லீம் ஓட்டுக்கள் தங்கள் பக்கம்தான் விழுகும் என்று காங்கிரஸார் வாயெல்லாம் பல்லாக இளித்தபடியே சொல்கிறார்களாம்..

இன்னொரு பக்கம் மாயாவதி தனது பிராமணர்களின் ஓட்டுக்களை அள்ளுவதற்காக ஆடுகின்ற டான்ஸ்கூட முஸ்லீம்களை தங்கள் பக்கமே கொண்டு வந்து சேர்ப்பிக்கும் என்பதில் காங்கிரஸார் உறுதியுடன் இருக்கிறார்கள்.

கட்டக் கடைசியாக சமாஜ்வாதிக் கட்சி ஏற்கெனவே காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் இப்போது நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் அனைவருமே டப்பும், பெயரும் இல்லாத ஆட்களாம். இதனால் நிச்சயம் காங்கிரஸுக்குத்தான் இதனால் அனுகூலம் என்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.


முலாயமுக்கோ மாயாவதிக்குப் பின்பு பெருவாரியான ஓட்டுக்கள் பாரதீய ஜனதாவுக்குப் போகும் அபாயம் உண்டு. அதனை கல்யாண்சிங்கால் தடுக்க முடியும். அந்தத் தடுப்பாணையை தன் கட்சி பக்கம் திருப்ப கல்யாண்சிங்கை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அவர் நினைக்கிறார். இதனால் இப்போது முலாயம் முஸ்லீம் இனத் தலைவர்களை தேடிச் சென்று சந்தித்து அவர்களை கூல் செய்து கொண்டிருக்கிறாராம்..

உ.பி.விவகாரத்தைக் கையாண்டுவரும் காங்கிரஸின் பொதுச்செயலாளர் திக்விஜயசிங்கோ, "இன்னமும் கூட்டணிக்கான கதவுகள் திறக்கப்பட்டே உள்ளன..” என்கிறார். "எங்களுக்காக சமாஜ்வாடி கட்சி ஆறு தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது. அதே போல் நாங்கள் எத்தனை தொகுதிகளை அவர்களுக்காக விட்டுக் கொடுப்பது பற்றி இன்னமும் முடிவு செய்யவில்லை. வரக்கூடிய தேர்தலில் ஓட்டுக்கள் பிரியாமல் இருக்க ஆதரவு தரும்படி சமாஜ்வாதி கட்சியைக் கேட்டுக் கொள்வோம். அதே சமயத்தில் எங்களின் சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்" என்று குட்டையைக் குழப்பியுள்ளார்.

சோனியா போட்டியிடும் ரேபரேலி, ராகுல் போட்டியிடும் அமேதி மற்றும் கான்பூர், மதுரா, தனரா மற்றும் காசியாபாத் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என்று சமாஜ்வாதிக் கட்சி அறிவித்துள்ளது.

இதில் காசியாபாத் தொகுதியில்தான் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் போட்டியிடப் போகிறாராம்.. இங்கே ஏன் என்ற கேள்வியையெல்லாம் கேட்டு மண்டை காயக் கூடாது..! அது ராஜந்திரமாக்கும்...!


ம்ஹும்.. இந்த அரசியல் தலைவர்களின் சதுரங்க ராஜதந்திர காய் நகர்த்தல்களையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்தால், இதை வைத்தே 100 சினிமாக்களுக்கு கதை எழுதிவிடலாம் போல் இருக்கிறது..

2 comments:

Anonymous said...

//இதில் காசியாபாத் தொகுதியில்தான் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் போட்டியிடப் போகிறாராம்.. இங்கே ஏன் என்ற கேள்வியையெல்லாம் கேட்டு மண்டை காயக் கூடாது..! அது ராஜந்திரமாக்கும்...!//

என்ன இருந்தாலும் ரொம்ப சுதாரிப்பாத்தான் இருக்காரு முலாயமு.. தப்பித் தவறி பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்துவிட்டால் அங்கேயும் தன்னைக் காப்பாத்திக்கலாம்னு பிளான் போடுறாரு போலிருக்கு..

என்ன கேவலமான அரசியல்..?

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//இதில் காசியாபாத் தொகுதியில்தான் பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங் போட்டியிடப் போகிறாராம்.. இங்கே ஏன் என்ற கேள்வியையெல்லாம் கேட்டு மண்டை காயக் கூடாது..! அது ராஜந்திரமாக்கும்...!//
என்ன இருந்தாலும் ரொம்ப சுதாரிப்பாத்தான் இருக்காரு முலாயமு.. தப்பித் தவறி பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்துவிட்டால் அங்கேயும் தன்னைக் காப்பாத்திக்கலாம்னு பிளான் போடுறாரு போலிருக்கு..
என்ன கேவலமான அரசியல்..?///

இதுல கேவலத்தையெல்லாம் பார்த்தா அரசியல் பிழைப்பு நடத்த முடியுமா அனானி.. அவர் கஷ்டம் அவருக்கு..!?