புகழ் பெற்றவர் அயோத்தி ராமரா..? சேது ராமரா..?

22-09-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

போகின்ற போக்கைப் பார்த்தால் அயோத்தி ராமனைவிடவும் சேது ராமன் அகில உலகப் புகழ் பெற்று விடுவார் போலிருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டம் பல ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வந்து, திட்டமிடப்பட்டு, கடைசியாக சமீபத்தில் உருவாக்கப்பட்டபோதே ராமர் பாலத்தின் கதி என்னாவது என்று கண்ணீர் விட்டது பா.ஜ.க.

திட்டம் நிறைவேற்றப்பட்டு இப்போது 60 சதவிகிதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து உடைக்கப்பட இருப்பது ராமர் பாலம்தான் என்றவுடன் மறுபடியும் ஒரு ராமர்-ராவணன் மோதலை உருவாக்கிவிட வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

போதாக்குறைக்கு கலைஞர் வேறு “ராமர் எந்தக் கல்லூரியில் பொறியியல் படித்தார்..?” என்று குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு எரிகிற தீயில் எண்ணெய்யை வார்த்துள்ளார்.

ராமர் பாலத்தை இடிக்காமல் தனுஷ்கோடி வழியாக மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் என்கிற கருத்துக்கு ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு கலைஞரைத் தவிர ஆளும் மத்திய அரசுக் கூட்டணியின் மற்றத் தலைவர்களும் ஒத்துக் கொள்ளும் நிலைமைக்கு வந்திருக்கிறார்கள்.

நானும் ஒரு பக்தன்தான். கடவுள் பக்தி உள்ளவன்தான். ராமாயணம் நடந்த கதைதான் என்பதில் உறுதியாக இருப்பவன்தான். அதே சமயம் மக்களுக்காகத்தான் கடவுளே தவிர.. கடவுளுக்காக மக்கள் இல்லை என்ற கருத்திலும் இருப்பவன்.

புராதன சின்னங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று கூப்பாடு போடும் அரசியல் ஆத்திகவாதிகள் நாடு முழுவதிலும் உள்ள கோயில்களின் நிலைமைகளை பார்த்து, அதைச் சரியாகப் பின்பற்றி வருகிறோமா என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

உதாரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை எடுத்துக் கொள்ளுங்கள்.. அங்கேயுள்ள ஆயிரங்கால் மண்டபத்தைச் சுற்றிலும் 108 கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் நிறுவப்பட்டுள்ள இடங்கள் அனைத்துமே கோவிலின் உள்பிரகாரத்துக்குள்தான்..

கோவிலே புராதானச் சின்னம் என்றிருக்க.. அந்த புகழ் பெற்ற கோவிலை பிளாட் போட்டு விற்பதைப் போல் எட்டுக்கு எட்டு என்ற அளவில் தங்களுக்குள்ளேயே பாகப்பிரிவினை செய்து கோவிலையும், அந்தப் புராதனச் சின்னங்களையும் அசுத்தமாக்கியிருக்கும் இந்த அரசியல் ஆத்திக வியாதிகளை என்னவென்று சொல்வது?

இவர்களை யார் முதலில் தட்டிக் கேட்பது..

அதே மதுரையிலேயே புதுமண்டபம் என்னும் தொன்மையான மண்டபமும் உண்டு. அந்த மண்டபம் முழுக்கவே இப்போது கடைகள்தான். கேட்டால் வாடகை கிடைக்க வேண்டுமாம்.. அதை வைத்துத்தான் இந்து சமய அற நிலையத் துறைக்கு வருடச் செலவுகளைச் சமாளிக்க வேண்டுமாம்.. கோவிலுக்கு ஆகும் செலவிற்கும் இதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.

மதுரை என்றில்லை சிதம்பரம், தஞ்சை, ராமேஸ்வரம் என்ற புகழ் பெற்ற கோவில்கள் அனைத்திலுமே அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டில் கோவில் இடங்கள் அனைத்தும் குப்பை மேடாக இருக்கிறது.

கண் முன்னே இருக்கின்ற ஒரு அசிங்கத்தைப் பார்த்து நிவாரணம் செய்ய அரசியல் வியாதிகளுக்கு நேரமில்லை.. விருப்பமும் இல்லை..

இப்போது இங்கே வாடகையாக கிடைக்கின்ற சொற்ப பணத்திலேயே இருக்கின்ற புராதானச் சின்னங்களை பராமரிக்க முடியாமல் திணறுகின்ற இந்த அரசுகளைத் தட்டிக் கேட்க முடியாதவர்கள் பூமிக்குள் அமிழ்ந்து கிடக்கும் பாலத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்கள்.

இத்தனைக்கும் இன்றுவரையிலும் அந்தப் பாலத்தின் மீது நடந்து சென்றவர் யார்..?

அந்தப் பாலம் எப்படியிருக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை. நாசாவின் புகைப்படத்தை வைத்துத்தான் சுப்பிரமணியம் சாமியிலிருந்து அத்வானி வரையிலும் அனைவரும் ராமனுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள்.

அந்த ஒரு பாலத்தை உடைத்து வழி ஏற்படுத்தினால் நாளைய எதிர்கால சந்ததியினருக்கு வேலை வாய்ப்புகளும், மாநிலத்திற்கு வருவாய் வாய்ப்புகளும் கிடைக்கின்ற வாய்ப்பு இருக்கின்றபோது அதை செய்வதுதான் நாட்டிற்கு நல்லது.

அந்தப் பாலம் ராமர் கட்டியதாகவே இருக்கட்டும். கடவுளை வணங்குதல் என்பதே நம்முடைய நலனுக்காகத்தானே.. அப்படிப்பட்ட கடவுள் பக்தர்களுக்காக தன்னுடையதை விட்டுத் தர மாட்டாரா? என்ன செய்துவிடப் போகிறார்..?

ஆத்திகம் என்பதற்காக அதைத் தொட்டுக் கும்பிட வேண்டும் எனில் எத்தனையோ ஊர்களில் நட்ட நடு ரோட்டில் இருந்த கோவில்களையெல்லாம் சாலை அமைப்பிற்காக நாம்தானே இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

அவையெல்லாம் இப்போது கட்டிய கோவில்கள்.. புராதனச் சின்னங்கள் இல்லை என்று வாதமிட்டால், தமிழ்நாட்டின் புராதனச் சின்னங்களான கோவில்களின் இன்றைய நிலைமைக்கு என்ன சொல்லப் போகிறார்கள் இவர்கள்.

சென்ற வருடம்தான் இன்னொரு கொடுமையும் மதுரையில் நடந்தது.

மதுரை திருமலை நாயக்கர் மஹாலை புனரமைப்பு செய்து கொண்டிருந்தார்கள். அந்த நேரத்திலும் ஒரு திரைப்படத்தின் ஷ¥ட்டிங்கிற்கு அதை வாடகைக்கு விட்டார்கள். வாடகைக்கு எடுத்தவர்கள் லைட்டிங்ஸ் செய்வதற்காக மஹாலின் தரைத் தளத்தில் ஆங்காங்கே தோண்டி மணலை அள்ளி வெளியே கொட்டிவிட்டார்கள். இதையும் அரசு அதிகாரிகள்தான் வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். இதை எந்த ராமனிடம் போய் சொல்லி அழுவது?

ஒரு காலத்தில் தனுஷ்கோடி துறைமுகமாக இருந்த நகரம்தான். ஆனால் அது இன்று அழிந்து போய் கண்டு கொள்ளப்படாமலேயே சிதைந்து போய் நிற்கிறது.

புராதனச் சின்னம் என்று வாய்க்கூச்சல் போடுகிறவர்களுக்கு அதைப் பற்றிக் கண்டு கொள்ள நேரமில்லை. ஏனெனில் தனுஷ்கோடியில் இப்போது இருப்பது இவர்களுக்கு எதற்கும் பயன்படாத மீனவ குடும்பங்கள்.

ஆனால் ராமர் அப்படியல்ல..

தீயாய் பற்றிக் கொள்பவர். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிவரையிலும் நித்தம் நித்தம் தெய்வத்தைத் தொழுவதைத் தவிர வேறு வேலையில்லாமல் உழலுபவர்களின் மூளையை மழுங்கடிக்கும் சக்தி வாய்ந்தவர். அவர்களின் எதிர்வினை ஓட்டுச் சீட்டுக்களில் பதிந்து விடாதோ என்ற எண்ணம்தான்..

முதல் நாள் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பித்த வாக்குமூலத்தை மறுநாள் வாபஸ் பெறுகிறது மத்திய அரசு. இரண்டு அரசு அதிகாரிகள் மேல் பழியைத் தூக்கிப் போட்டு பலிகடாவாக்கிவிட்டு தான் நல்ல பெயர் பெற்றுவிட்டது.

போதாக்குறைக்கு மந்திரிகளுக்குள் மோதல் என்றும் சூட்டைக் கிளப்பி மத்திய அரசின் கையாலாகதனம் என்ற பெயரையே மறைத்து அப்போதைக்கு தப்பித்துவிட்டது.

நல்லவேளை.. அதை வாபஸ் பெறவில்லையெனில் இத்தனை நாள்கள் நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுதத இராமாயணக் கதையின் நோக்கமே மாறியிருக்கும்.

“ஒரு பொய்யான விஷயத்தை.. நடக்கவே நடக்காத அர்த்தமில்லாத ஒன்றை ‘பாடம்’ என்று சொல்லி ஏன் வைத்திருந்தீர்கள்?” என்று யாராவது ‘அறிவிப்பூர்வமாக’ கேள்விகளை கேட்டுவிட்டால் யார், என்ன பதில் சொல்வது என்று அர்த்தராத்திரியில் யாரோ ரூம் போட்டு யோசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். தப்பித்துக் கொண்டார்கள்.

அது நடக்கவே நடக்காத கதைதான் என்று சொல்பவர்கள் இத்தனை நாட்கள் எனக்கு, என் தந்தைக்கு, என் தாத்தாவுக்கு பள்ளிக்கூடங்களில் சொல்லிக் கொடுக்கும்போதெல்லாம் வாய் திறக்காமல் அமைதி காத்தது ஏனோ..?

ஒரு பொய்யுரையை பள்ளிக்கூடத்தில் பாடமாக வைக்கலாமா..? என்று கேள்வி எழுப்பி அதை நிறுத்தியிருக்க வேண்டுமே? செய்தார்களா?

அவ்வப்போது அவர்களுக்கு பேசுவதற்கு ஏதும் விஷயமில்லாத போது சொல்ல வேண்டியது இது போன்ற விஷயங்களைத்தான்..

ஏனெனில் ராமனுக்கும், கிருஷ்ணனுக்கும்தான் இங்கே நேரடி வாரிசுகள் இல்லையே என்ற அர்த்தமுள்ள தந்திரம்தான்..

17 comments:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

sariyana paarvai.

Anonymous said...

Anonymous said...
சேதுசமுத்திர திட்டப் பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. ராமர் பாலம் என்ற ஒன்று இந்திய வரைபடத்தில் இல்லை. சேது கால்வாய் தோண்டப்படும் இடத்தில் ஆதம் பாலம் என்பது உள்ளது.

பாரதீய ஜனதா ஆட்சியில் உமாபாரதி மத்திய மந்திரியாக இருந்த போது, ஆதம் பாலம் பகுதியில் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆதம் மணல் திட்டு பகுதி 5 லட்சம் முதல் 7 லட்சம் ஆண்டுகளுக்குள் உருவானதாக ஆய்வறிக்கை வெளியிடப் பட்டது.

ஆனால் இப்போது பாரதீய ஜனதாவும் மதவாதிகளும் 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ராமர் பாலம் இருப்பதாக கூறி வருகிறார்கள். உண்மை எது என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற 6 வழித் தடங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இப்போது நிறைவேற்றப்படும் 6-வது பாதையை மத்திய சுற்றுச்சூழல்துறை மற்றும் ஏராளமான வல்லுனர்களின் ஆய்வுகளின் அடிப்படையிலேயே பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த போது ஏற்றுக்கொண்டது.

மந்திரிகளாக இருந்த தம்பித்துரை, திருநாவுக்கரசர், சத்ருகன் சின்கா, கோயல் ஆகியோர் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு துறை வாரியாக ஒப்புதல் அளித்துள்ளனர். பாரதீய ஜனதா ஆட்சியில் வடிவமைத்த திட்டத்தைதான் நாங்கள் செயல்படுத்துகிறோம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கோ இதில் இடம்பெற்றுள்ள தலைவர்களுக்கோ எந்த மதத்தினரையும் புண்படுத்தும் எண்ணம் கிடையாது. குறிப்பாக தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி எல்லா மதத்தினரையும் சமமாகவே நடத்தி வருகிறார்.

8 ஆண்டுகளாக மத்திய அரசு சேதுசமுத்திர திட்டத்தை பற்றி பரிசீலித்த போது யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இப்போது குஜராத்தில் வரவிருக்கும் தேர்தலை மனதில் கொண்டு இந்த திட்டத்தை அரசியலாக்கி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். அது பலிக்காது.

ஆதம் பாலம் மணல் திட்டுகளில் தொடர்ச்சிதான் என்று நாசா ஆய்வு மையம் தெளிவாக படம்பிடித்துள்ளது. இதே போல் உலகில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் திட்டுகள் காணப்படுகின்றன.

இதுவரை சேதுசமுத்திர திட்டப்பணிகளுக்காக 600 கோடி செலவிடப்பட்டுள்ளது. மதவாதிகள் பிரச்சினையை கிளப்பும் ஆதம்பாலம் 30 ஆயிரம் மீட்டம் நீளம் உடையது. இதில் 300 மீட்டர் அகலத்துக்குதான் கால்வாய் தோண்ட வேண்டி உள்ளது.

இப்போது சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு உள்ளதால் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கால்வாய் தோண்டும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.அறிவியல் பூர்வமான ஆதாரங்களுடன் சுப்ரீம் கோர்ட்டில் வாதிட்டு வெற்றி பெறுவோம். தமிழர்களின் 147 ஆண்டுகால கனவு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்.

தேவையில்லாமல் மத பிரச்சினைகளை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்த பா.ஜனதாவும், அதனுடன் இருக்கும் கட்சிகளும் முயற்சிக்கின்றன. மதநம்பிக்கையை நாங்கள் ஒரு போதும் புண்படுத்தியது இல்லை. வால்மிகி ராமாயாணத்தில் எழுதப்பட்டு இருக்கும் தகவலைத்தான் முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்தார். அது தவறா?

இந்த பிரச்சினையில் மத்திய மந்திரிகளுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய தயாரித்த மனுவில் ஏதோ சிறு தவறு ஏற்பட்டதை உடனடியாக நிவர்த்தி செய்யப்பட்டு விட்டது.

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க பலர் தூண்டுகின்றனர். ஆனால் திட்டமிட்டப்படி அந்த திட்டத்தை நிறைவேற்றுவோம்.

ராஜ நடராஜன் said...

அயோத்தி ராமனை சின்ன வயசுல பொம்மலாட்டத்துல பார்த்தது.சேதுவுக்கு பாலம் அமைப்போம் பள்ளியில் முப்பாட்டன் பாரதி பாட்டுல படிச்சது.இந்த சேது ராமனை இப்பத்தானுங்க கேட்கிறேன்.பஜக விற்(க)கு புதிய அஸ்திரமும் பகடையும் கிடைச்சிருக்கு.உருட்டுங்கள் பகடைகளை.உண்மைத் தமிழரே! நல்லதோர் பார்வை.

Anonymous said...

//புராதன சின்னங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும்\\

அப்ப பாபர் மசூதி மட்டும் சூப்பர் மார்க்கட்டா?

Anonymous said...

அய்யா உனக்கு அறிவு இருக்கா?நீ முருகனை கும்பிடுவதால் ராமர் பாலம் உனக்கு ஒரு பொருட்டில்லை.பழனி கோவிலையும்,திருப்பரங்குன்றம் கோவிலையும் இடித்தால் இதே போல்தான் பேசுவியா?

உண்மைத்தமிழன் said...

///Anonymous said...
//புராதன சின்னங்களை போற்றிப் பாதுகாக்க வேண்டும்\\
அப்ப பாபர் மசூதி மட்டும் சூப்பர் மார்க்கட்டா?///

பாபர் மசூதி புராதனச் சின்னம்தான். அதை இடித்த மதவெறியர்களின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இல்லை என்று நான் மறுக்கவில்லை.

பார்த்தீர்களா? பல மத வெறியர்களின் செயல்களுக்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது..

உண்மைத்தமிழன் said...

//Anonymous said...
அய்யா உனக்கு அறிவு இருக்கா?நீ முருகனை கும்பிடுவதால் ராமர் பாலம் உனக்கு ஒரு பொருட்டில்லை.பழனி கோவிலையும்,திருப்பரங்குன்றம் கோவிலையும் இடித்தால் இதே போல்தான் பேசுவியா?//

நாட்டுக்கும், மக்களும் ஒரு பயனென்றால் பழனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, மருதமலை, திருத்தணி, திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை என்று எதை வேண்டுமானாலும் இடிக்கலாம்.

அங்கே வாசம் செய்யும் முருகன் படியிறங்கி எங்கள் இல்லம் நோக்கி வர மாட்டானா என்ன..?

கோவி.கண்ணன் said...

//நாட்டுக்கும், மக்களும் ஒரு பயனென்றால் பழனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, மருதமலை, திருத்தணி, திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை என்று எதை வேண்டுமானாலும் இடிக்கலாம்.

அங்கே வாசம் செய்யும் முருகன் படியிறங்கி எங்கள் இல்லம் நோக்கி வர மாட்டானா என்ன..?//

"உண்மை" ! தமிழன், பாராட்டுக்கள் !

உண்மைத்தமிழன் said...

//நட்டு said...
அயோத்தி ராமனை சின்ன வயசுல பொம்மலாட்டத்துல பார்த்தது.சேதுவுக்கு பாலம் அமைப்போம் பள்ளியில் முப்பாட்டன் பாரதி பாட்டுல படிச்சது.இந்த சேது ராமனை இப்பத்தானுங்க கேட்கிறேன்.பஜக விற்(க)கு புதிய அஸ்திரமும் பகடையும் கிடைச்சிருக்கு.உருட்டுங்கள் பகடைகளை.உண்மைத் தமிழரே! நல்லதோர் பார்வை.//

எல்லாமே தேர்தலை மனதில் வைத்து பேசப்படும் வசனங்கள். மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட அவர்கள் எடுத்திருக்கும் ஆயுதம்தான் நடுநிலையாளர்கள் அனைவரையும் பயமறுத்துகிறது.. மதப் பற்று இருக்கலாம். மத வெறி கூடவே கூடாது..

உண்மைத்தமிழன் said...

///கோவி.கண்ணன் said...
//நாட்டுக்கும், மக்களும் ஒரு பயனென்றால் பழனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, மருதமலை, திருத்தணி, திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை என்று எதை வேண்டுமானாலும் இடிக்கலாம். அங்கே வாசம் செய்யும் முருகன் படியிறங்கி எங்கள் இல்லம் நோக்கி வர மாட்டானா என்ன..?//
"உண்மை" ! தமிழன், பாராட்டுக்கள்!///

இதிலென்ன தப்பு ஸார்..? தெய்வம் அனைத்து மனிதர்களுக்குள்ளும் இருக்கிறான். வெளிப்படுத்தும்போது அனுபவப்பட்டவர்களுக்கு தெரிகிறான்.. அனுபவம் இல்லாதவர்கள் அதை உணர்வதில்லை. கோவிலுக்குச் செல்வதே அந்த டத்தில் நிலவும் ஒரு அமைதியை விரும்பித்தான்.. தான் நேசிக்கும் கடவுளை யார் இடையூறும் இல்லாமல் தொழுவதற்குத்தான்.. அதற்கான இடம் கோவில்தான். அதில் எனக்குச் சந்தேகமில்லை. அக்கோவிலை இடித்தால் ஊருக்கே நல்லது எனில் இடித்துவிட்டு இன்னொரு இடத்தில் அமைதியான கோவிலை கட்டிக் கொள்ள வேண்டியதுதான்..

Anonymous said...

//நாட்டுக்கும், மக்களும் ஒரு பயனென்றால் பழனி, திருப்பரங்குன்றம், சுவாமிமலை, மருதமலை, திருத்தணி, திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை என்று எதை வேண்டுமானாலும் இடிக்கலாம்.//
எனக்கு உடன்பாடில்லை.இதேபோல் இந்த நாட்டில் வேறு மதத்தைச் சேர்ந்த யாராவது ஒருவராவது சொல்வாரா?அதனால் நாட்டின் மீதும் மக்களின் மீதும் அவர்களுக்கு அக்கறையில்லை என்பது பொருளல்ல.ஒரு இந்தியனாக,உங்களுக்கு இருக்கும் அதே அக்கறை அவர்களுக்கும் இருக்கிறது.ஆனால்,தங்கள் வழிபாட்டுத்தலங்களுக்குத் தீங்கு நேராமல் மக்களுக்கு எப்படி நன்மை செய்யலாம் என்பதே அவர்கள்சிந்தனையாக இருக்கும்.இந்த நாட்டு இந்துக்கள்தாம் தங்கள்'பரந்த,விட்டுக்கொடுக்கும் ' மனப்பான்மையில் பெருமை கொண்டு குட்டக் குட்டக் குனிந்து கொண்டே இருப்பர்.எவரும் இந்து மதத்தையும்,இந்துக்களையும் தயக்கமின்றி இழிவு படப் பேசுவதற்கு இதுவே காரணம்.மதவிரோதம் வேண்டாம்;மத வெறி வேண்டாம்.ஆனால் மதப் பற்று இருக்கட்டும்.

Anonymous said...

கருணாநிதி அவர்கள் ஒரு நாத்திகர் ஆகவே அவர் ராமர் இல்லை என்கிறார். இதில் ஒண்றும் தவறு இல்லை. ஆத்திகர் அவர் கொள்கைப்படி பேசுவது எப்படியோ அது போலவே நாதிகரான கருணநிதி பேசுவதும் நியயமே ஆனால் அவர் பேசுவது அநியாயம் என்று சிலர் கூறுவது எந்த விதத்தில் நியாயம் என்று விளங்கவில்லை. - இது இந்த பதிவுக்கு சிறிது சம்பந்தம் இல்லாது போல் தோன்றினாலும் இதை வெளியிடவும் ஏனெனில் மற்ற பதிவுகளில் அனானி ஆப்சன் இல்லை

உண்மைத்தமிழன் said...

//மதுரை சொக்கன் said...
எனக்கு உடன்பாடில்லை. இதேபோல் இந்த நாட்டில் வேறு மதத்தைச் சேர்ந்த யாராவது ஒருவராவது சொல்வாரா? அதனால் நாட்டின் மீதும் மக்களின் மீதும் அவர்களுக்கு அக்கறையில்லை என்பது பொருளல்ல. ஒரு இந்தியனாக, உங்களுக்கு இருக்கும் அதே அக்கறை அவர்களுக்கும் இருக்கிறது.ஆனால், தங்கள் வழிபாட்டுத்தலங்களுக்குத் தீங்கு நேராமல் மக்களுக்கு எப்படி நன்மை செய்யலாம் என்பதே அவர்கள் சிந்தனையாக இருக்கும்.//

எல்லா வழிகளிலும் முயற்சி செய்து பார்த்துவிட்டு வேறு வழியே இல்லாத நிலை வந்த பின்புதான் இயற்கை வளங்களைத் தகர்க்க முடியும்.. இதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன். எடுத்த எடுப்பிலேயே ஒரு மலையை உடைக்க வேண்டும். அப்புறப்படுத்த வேண்டும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இப்போதைய சேது ராமர் பாலம் பிரச்சினையில் கூட வேறு வழியில்லாததால்தான் உடைக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இப்போது பிரச்சினை பெரிதானதும் தனுஷ்கோடி வழியாக மாற்றுப் பாதை பற்றி யோசிக்கத் துவங்கியிருக்கிறார்கள். ஆனால் அதற்கு இப்போது ஒதுக்கப்பட்டுள்ள தொகையைவிட அதிகமாகச் செலவாகும் என்னும்போது நாமும் யோசித்துத்தானே ஆக வேண்டும். பணம் பணம்தானே.. யாருடைய பணம்? மக்களுடைய பணம்தானே.. யாருக்குமே பயன்படாமல், பார்க்கக்கூட
முடியாமல் இருக்கும் ஒரு இடத்தை நாம் நம் மக்களுக்காக, நாட்டுக்காக பயன்படுத்துவதில் தவறில்லையே..

//இந்த நாட்டு இந்துக்கள்தாம் தங்கள் 'பரந்த, விட்டுக் கொடுக்கும் ' மனப்பான்மையில் பெருமை கொண்டு குட்டக் குட்டக் குனிந்து கொண்டே இருப்பர். எவரும் இந்து மதத்தையும், இந்துக்களையும் தயக்கமின்றி இழிவுபடப் பேசுவதற்கு இதுவே காரணம். மத விரோதம் வேண்டாம்; மத வெறி வேண்டாம். ஆனால் மதப் பற்று இருக்கட்டும்.//

அப்படியல்ல.. இந்து மதத்தில் நீ எதைக் கொண்டு வந்தாய் இழப்பதற்கு.. இன்று எது உன்னுடையதோ அது நாளை வேறொருவருடையது என்கிற உயர்ந்த தத்துவம் சொல்லப்பட்டிருக்கிறது. பகைவனுக்கருள்வாய் நெஞ்சே என்பதும் நம் மதத்தில்தான். அப்படியிருக்க.. இதை எதற்கு குட்டக் குட்டக் குனியும் உவமைக்கு ஒப்பாக்குகிறீர்கள்? இந்த அதீதமான பார்வைதான் மதப் பற்று என்ற பெயரில் மத வெறியாக வெளிப்படுகிறது.. விட்டுக் கொடுத்தலில் உள்ள சுகம் அலாதியானது. அதிலும் மாற்று மாதத்தினருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இந்து மதத்தை வளரத்தான் செய்யுமே தவிர, நிச்சயம் வீழ்த்தாது. இந்து மதமா வீழ்ச்சியடையும்..? எத்தனை 'பெரியார்'கள் வந்தாலும், எத்தனை 'கோரா'க்கள் வந்தாலும் நம் மக்களின் கடவுள் நம்பிக்கையை அழிப்பதென்பது நடக்கவே நடக்காது.. கவலை வேண்டாம் சொக்கன் ஸார்..

முகவை மைந்தன் said...

கடவுள் எங்கும் இருப்பவர் என்ற உணமையை மறந்து இங்கு தான் இருக்கிறார்னு அடிச்சுக்கிட்டவங்களைப் பாத்து இன்னும் விளக்கம் விளக்கம் சொல்ற உங்கள் பொறுமை கடலை விட ஆழமானது.

இந்த இத்துப்போன (ரொம்ப நாள் ஆச்சுல்ல) பாலத்தைவிட, அங்கே இருக்கும் கடல் வாழ் உயிர் சூழ்நிலை அழியும் என்பதும் அந்த வளைகுடாவை தங்கள் வாழ்வின் ஆதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் ஒட்டு மொத்தமாக தங்கள் வாழ்வையே தலைமுறைக்கும் இழப்பார்கள் என்பதும் எவரும் பொருட்படுத்தாத சங்கதிகளாகிப் போய்விட்டன.

இப்படிப் பட்ட தலைவர்களின் பிடியில் வாழ்வைக் கொடுத்து விழிக்கும் கடலோர மக்களின் நிலை மிகப் பரிதாபமானது.

உண்மைத்தமிழன் said...

//முகவை மைந்தன் said...
கடவுள் எங்கும் இருப்பவர் என்ற உணமையை மறந்து இங்கு தான் இருக்கிறார்னு அடிச்சுக்கிட்டவங்களைப் பாத்து இன்னும் விளக்கம் விளக்கம் சொல்ற உங்கள் பொறுமை கடலை விட ஆழமானது.//

இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை ஸார்.. நீங்கள் சிறு வயதிலிருந்தே ஒரு கொள்கையுடன் வளர்ந்து வருகிறீர்கள் என்றால், அதை உடனே, ஒரே நிமிடத்தில் உடைப்பதென்பது முடியாத காரியம்.. வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொண்டே தீர வேண்டும் என்கிற கட்டாயம் வந்தாலும் மனம் புலம்பத்தான் செய்யும். அல்லல்படத்தான் செய்யும். இங்கே தடுப்பவர்கள் அனைவருமே ராம பக்தர்கள்தான்.. அவர்களின் மனம் சமாதானமடைய இப்படி எழுதியோ, பேசியோ தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தத்தான் செய்வார்கள். நாம் அதை எதிர்கொண்டுதான் தீர வேண்டும்.

//இந்த இத்துப்போன (ரொம்ப நாள் ஆச்சுல்ல) பாலத்தைவிட, அங்கே இருக்கும் கடல் வாழ் உயிர் சூழ்நிலை அழியும் என்பதும் அந்த வளைகுடாவை தங்கள் வாழ்வின் ஆதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் ஒட்டு மொத்தமாக தங்கள் வாழ்வையே தலைமுறைக்கும் இழப்பார்கள் என்பதும் எவரும் பொருட்படுத்தாத சங்கதிகளாகிப் போய்விட்டன.//

அந்தப் பகுதியில் இருக்கும் பவளப் பாறைகள் வேறெங்கும் பார்க்க முடியாத அரிதானவை. கடல்வாழ் ஆராய்ச்சியாளர்களின் போராட்டத்திற்கும் அதுதான் காரணம். ஆனால் வேறு வழியில்லையே.. அந்தப் பவளப் பாறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து அதன் முடிவுகளை நம் இந்தியக் கண்டுபிடிப்புகளில் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமையில் நம் பங்கை நாம் பெற வேண்டும் என்பது அவர்களது அவா.

மீனவர்களுக்கோ அந்த இடத்தில் நிறையவே கிடைக்கும் மீன் வளம் வேறு இடங்களில் கிடைக்காது என்கிறார்கள். இதற்கான காரணமும் அந்த இடத்தில் எவ்வித போக்குவரத்தும் கிடையாது. அதிகமாக மக்களோ, வேறு இயற்கை வளங்களோ குறுக்கிடாத காரணத்தால் நீரின் வளமையும், நீரின் தன்மையும் மீன் வள அபிவிருத்திக்கு முன் உதாரணமாக இருக்க மீன்கள் அங்கே நிறையத் தென்படுகின்றன. மீனவர்களுக்கு கொழுத்த வேட்டை.. உண்மைதான். ஆனாலும் அதைவிட பல்லாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பிற்கும், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் இஇஇஇந்தத் திட்டம் உதவியாக இருக்குமே..

//இப்படிப் பட்ட தலைவர்களின் பிடியில் வாழ்வைக் கொடுத்து விழிக்கும் கடலோர மக்களின் நிலை மிகப் பரிதாபமானது.//

மீனவர்களுக்கு மீன் பிடிக்க வேறு இடங்களா இல்லை. அந்த இடத்தில் நிறைய கிடைக்கும் என்கிறார்கள். நாம் பக்தர்கள்தானே.. இறைவன் எப்போதும் ஒரு வாசல் மூடினால் மறுவாசலைக் கண்டிப்பாகத் திறந்து வைப்பான்.. காத்திருப்போம் அவனது நல்ல செய்திக்காக..

abeer ahmed said...

See who owns convert-me.com or any other website:
http://whois.domaintasks.com/convert-me.com