Showing posts with label பிரமிட் சாய்மிரா. Show all posts
Showing posts with label பிரமிட் சாய்மிரா. Show all posts

நினைத்தேன் எழுதுகிறேன்..!

05-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தயாரிப்பாளரின் தலைமறைவு..!

‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ‘டைம் பிரேம்’ ராம்ஜி திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவு என்கிற செய்தியைக் கேள்விப்பட்டு பெரிதும் வருத்தமாகிவிட்டது.

நேரில் சந்திக்கும்போதெல்லாம் எதைப் பற்றியும் கவலைப்படாதவராகத் தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் அவரது பிஸினஸ் செம அடி என்றும், சம்பளம் கொடுக்கக்கூட முடியாமல் இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் காதுக்கு வந்தபோதிலும் அப்படி எதுவுமி்ல்லை என்பதைப் போலவே நடந்து கொண்டார்.

ஆனால் இப்போது தலைக்கு மேல் வெள்ளம் போனவுடன் தத்தளிக்கிறார். இவ்வளவு நஷ்டத்துடன் எதற்காக தொழிலை நடத்த வேண்டும்..? சிறிய நஷ்டம் கிடைக்கின்றபோதே கவுரவமாக அதனைவிட்டு விலகி விடுவதுதான் புத்திசாலித்தனம். ஆனானப்பட்ட சினிமாவிலேயே போட்டதை அள்ள முடியாமல் தவிக்கின்றபோது, டிவியில் மட்டும் முடியுமா என்ன..?

இது முழுக்க, முழுக்க அவருடைய தவறுதான் என்றாலும் புதிய தயாரிப்பாளர்களுக்கு சிறந்த பாடமாகவும் இருக்கும்..!
நித்யானந்தம் ஜெயிலில் - வீடியோ லீக்..!

‘கதவைத் திற காற்று வரும்’ என்று சொல்லி தன் வீட்டு பெட்ரூமை சரியாக செக் செய்யாமல் விட்டதன் காரணமாக ஒரே நாளில் தன் சாம்ராஜ்யத்தை இழந்திருக்கும் நித்யானந்தாவின் வழக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு தினுசாகவே போய்க் கொண்டிருக்கிறது..!

நம்ம கையில் எடுக்காமல் இருந்தாலே போதும் என்ற நினைப்பில் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு வழக்குகளைத் தள்ளிவிட.. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்பதைப் போல கர்நாடக அரசும் தாமதப்படுத்த கிடைத்த இடைவெளியில் எதிர்ப்புகளைக் குறைக்கின்றவகையில் தான் பொறுப்பு வகித்து வந்த பீடத்தின் தலைமைப் பதவியில் இருந்து விலகிவிட்டதாகச் சொல்லிப் பார்த்தால் நித்தி. ஆனாலும் கர்நாடகாவின் தற்போதைய அரசியல் சூழல் அவருக்கு எதிராக இருப்பதினால் அவரைக் கைது செய்ய வேண்டிய கட்டாயச் சூழல்.

போலீஸ் விசாரணையில் கேள்வி கேட்கும்போதெல்லாம் கஸாப் பாணியில் ஏதோவொன்றை சொல்லி தப்பித்து வந்திருக்கும் நித்திக்கு போலீஸ் விசாரணையின்போது கிடைத்திருக்கும் மரியாதையை பார்த்தால் ஏழைகளுக்கு ஒரு சட்டம்.. பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்பது போலத்தான் தெரிகிறது.

நித்தியானந்தாவை விசாரணை செய்தவிதத்தையும், அவரை ஜெயில் செல்லில் அடைக்கும் காட்சியையும் நேற்று டைம்ஸ் நெள சேனல் வெளிப்படுத்திக் காட்டியது. அக்காட்சிகளைப் பார்க்கின்றபோது நிஜமாகவே நித்தியானந்தம் கொடுத்து வைத்தவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஏதோ பிஸினஸ் பேச வந்திருப்பவரைப் போல ஒரு சேரில் அமர்த்தி, எதிரில் விசாரணை அதிகாரிகள் அமர்ந்து கொண்டு பேசியிருக்கும் விதத்தைப் பார்க்கின்றபோது மனதுக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்றாலும், இதேபோல் மற்ற அனைத்துக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமும் இவர்கள் நடந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை..!

“அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே” என்கிற கேள்விக்கு ஆமாம் என்று ஒத்துக் கொண்டு உடன் இருந்தது ரஞ்சிதாதான் என்பதையும் சொல்லும் நித்தி, “அன்றைக்கு, அங்கே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை..” என்று ஆணித்தரமாக வாதிடுவதைப் பார்த்தால் எதிரில் அமர்ந்திருப்பவர்கள் கேணத்தனமான அதிகாரிகள் என்பதுதான் நித்தியின் முடிவு போலும்..! அவர்களும் அப்படித்தான் ரியாக்ட் செய்திருக்கிறார்கள்..

“எதற்காக ஒப்பந்தத்தில் செக்ஸ் நிபந்தனையைச் சேர்த்தீர்கள்?” என்ற கேள்விக்கு..? “அது எனது சீடர்களே செய்தது.. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.. அது அமெரிக்காவுக்கு மட்டும்தான். வேறு எந்த நாட்டிற்கும் அது மாதிரியான ஒப்பந்தப் படிவம் இல்லை” என்று முனங்கவும் செய்கிறார். தப்பித் தவறி அமெரிக்காவில் தன் திருவிளையாடலை காட்டியிருந்தால் ஆயுசுக்கும் வெளியே வர முடியாது என்பதால் முன்கூட்டியே தப்பிக்க இப்படி ஒரு ஐடியா..!

“எப்படி இவ்வளவு பணம் உங்களுக்கு வந்து குவிந்தது?” என்றால் “டொனேஷன்” என்று ஒரு வரியில் பதில்.. அதிலும் “ஒரு அக்கவுண்ட்டில் இருக்கும் 32 கோடி ரூபாய் முழுவதும் டொனேஷனாக வந்ததுதான்” என்கிறார்.

ஜெயில் செல்லுக்குள் அனுப்பி வைத்து கதவைச் சாத்துகின்றவரையிலும் படம் பிடித்த அதி பயங்கர கேமிராமேன்கள் யாரோ..? எப்படியிருந்தாலும் ஜெயிலுக்குள் நுழைந்து படம் பிடித்து வெளியிட்டது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். வாழ்க மீடியாக்கள்..!
பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் கோல்மால்..!

கிட்டத்தட்ட 15 மாதங்கள் இந்நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.. ஒரு நிறுவனம் எப்படியெல்லாம் நடத்தப்படக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த நிறுவனத்தைத்தான் சொல்ல வேண்டும்..!

கொஞ்சம், கொஞ்சமாக ஊழியர்களை வெளியேற்றியபோது பாக்கி சம்பளத்தை மூன்று மாதத்தில், நான்கு மாதத்தில் தருவதாக எழுதிக் கொடுத்த இந்நிறுவனம், இன்றுவரையிலும் தரவில்லை. அதோடு வருங்கால வைப்பு நிதியையும் கடந்த இரண்டாண்டுகளாக கட்டவேயில்லை.. அந்தத் தொகையும் ஊழியர்களுக்கு அப்படியே நிற்கிறது..!

எனக்கு மூன்று மாதச் சம்பளத்துடன் பி.எப். பணம் வர வேண்டியுள்ளது. மொத்தம் 50000 வரும்.. கேட்டுக் கேட்டு சலித்துப் போய் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிகூட பார்த்தேன். நேரில் போய் கம்பெனியின் தற்போதைய நிர்வாகியான நாராயணனிடம் சண்டையிட்டும் பயனில்லை. “உங்க காரை வித்தாவது எனக்கு செட்டில் பண்ணுங்க..” என்கிறவரையில் கத்திப் பார்த்தாச்சும்.. ம்ஹூம்.. அசரவில்லை ஐயாமார்கள்..!

நேற்றுதான் ஊழியர்களில் ஒரு சிலர் மிகுந்த பிரயத்தனப்பட்டு பலரையும் தொடர்பு கொண்டு ஒட்டு மொத்தமாகச் சென்று பி.எஃப். கமிஷனரை சந்தித்து புகார் மனுவைக் கொடுத்துள்ளார்கள்.

“ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டதால் நிறுவனத்தின் கையெழுத்து உங்களுக்குத் தேவையில்லை. நீங்களே அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கொடுங்கள்” என்று பி.எஃப். அலுவலகத்தில் சொன்னதால் பலரும் பணம் கோரும் விண்ணப்பத்தினை கொடுத்துள்ளார்கள். நான் இன்றைக்குச் சென்று எழுதிக் கொடுத்தேன். இன்னும் பாக்கிச் சம்பளம் கேட்டு சண்டை பாக்கியிருக்கிறது..

இந்த நிறுவனம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி எழுத வேண்டுமானால் ஒரு இராமாயணமே பாட வேண்டியிருக்கும்..
ஜெட் வேகத்தில் வந்தது தமிழக மேல்சபை..!

அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தங்களுக்கு நன்மை பயக்கின்ற செயல்களை மட்டும்தான் மின்னல் வேகத்தில் முடிப்பார்கள். கலைஞரும் செய்து முடித்துவிட்டார்.

மேல்சபை அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கேட்பதுபோல் கேட்க வைத்து உடனேயே சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி.. நடப்புக் கூட்டத் தொடரிலேயே அதனை பாஸ் செய்ய வைத்து இந்த வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையெழுத்து வாங்கி.. முதல் கட்டப் பணிகள் துவங்கிவிடும்..

ராஜ்யசபா தேர்தல்கள் முடிந்ததும் அடுத்தது மாநில மேல்சபைக்கான தேர்தல்தான்.. அதிருப்தியாளர்கள், மகனது எதிர்ப்பாளர்கள், மகளது ஆதரவாளர்கள், பேரன்களின் நண்பர்கள், தன்னைத் துதிபாடும் கவிஞர்கள், எப்போதும் ஆதரிக்கும் பத்திரிகை நண்பர்கள் என்று ஒரு பட்டாளமே உள்ளே நுழைய காத்திருக்கிறது.

இதுவரையிலும் மாதத்திற்கு ஒரு முறைதான் கலைஞரைப் பற்றிய பாராட்டுப் புராணங்களைக் கேட்டு நமது செவி கிழிந்தது.. இனிமேல் தினம்தோறும் அதுதான் கேட்கப் போகிறது.. காது போச்சு..

இவ்வளவு வேகத்தை பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் மத்திய அரசு காட்டவில்லை.. ஈழத்தில் போர் நிறுத்தத்திற்காக கலைஞரும் இதுபோல் முனைப்பு காட்டவில்லை.. ம்ஹும்.. அவங்கவங்களுக்கு அவங்கவங்க பொழைப்புதான் முக்கியம்..
சின்னத்திரையினரின் துணிச்சல்..!

தமிழ் மக்களை கொத்தாகக் கொன்று குவித்து ஈழத்தில் இருந்து அப்புறப்படுத்தியதை நினைவுகூர்ந்து இனி வருடந்தோறும் மே 18-ம் தேதியன்று தீபாவளி கொண்டாட்டம்போல் கொண்டாடப் போவதாக இலங்கை அரசு அறிவித்திருக்கும் சூழலில் அந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எப்படி சின்னத்திரையினர் சிலர் ஒத்துக் கொண்டார்கள் என்பது பரம ரகசியமாக உள்ளது.

“தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில் இப்போது அமைதியாக, ஆனந்தமாக இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் கேட்கிறோம். நீங்கள் வந்து கலை நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்” என்று அங்கேயிருக்கும் சில அரசு ஆதரவு தமிழ் அமைப்புகள் மூலமாகத்தான் தமிழக சின்னத்திரையினரை அணுகினார்களாம். பலரும் முடியாது என்று ஒதுங்கிக் கொள்ள.. சிலர் மட்டுமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே ரிகர்சல் நடந்து கொண்டிருக்கும் சூழலில் நேற்றுதான் போஸ்டர்கள் யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் ஒட்டப்பட்டதாம். அதன் பின்பே விஷயம் வெளியே தெரிய வந்திருக்க.. இப்போது எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் என்கிற லெவலுக்கு திருமாவளவன் போயிருக்கிறார். கடைசியில் சின்னத்திரை கூட்டமைப்பு இதில் தலையிட்டு நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்திருக்கிறதாம்..

இருந்தாலும் எவ்வளவு துணிச்சல் என்று சின்னத்திரையினர் மீது கோபத்தில் இருக்கிறார்கள் ஈழத்து ஆதரவாளர்கள்..
பார்வதி அம்மாள் விவகாரம்

மிக விரைவில் பார்வதி அம்மாள் சென்னைக்குள் காலடி எடுத்து வைப்பார். கலைஞரின் குடும்பத்தினர் விமான நிலையத்தில் வரவேற்கப் போகிறார்கள். வீரமணியும், திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் ஷிப்ட் டைம் போட்டு அம்மாவை மருத்துவமனையில் கவனிக்கப் போகிறார்கள்.

வைகோவும், நெடுமாறனும் அம்மாவைச் சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கப் போகிறார்கள். கிடைக்காவிட்டால் தர்ணா போராட்டம் நடத்துவார்கள். மருத்துவமனைக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறார்கள்.. முடியாது என்று மறுக்கப் போகிறது அரசு.

கோவை மாநாடு முடியும்வரையில் அவரை யாரும் சந்திக்க முடியாது. அதுதான் நிபந்தனை என்று கடைசியாக கோர்ட்டில் ஒப்பந்தப் பத்திரத்தை நீட்டப் போகிறது.. தீர்ப்பும் அதையொட்டியே வரப் போகிறது..

என்ன எல்லாத்தையும் நானே சொல்றனேன்னு பார்க்குறீங்களா..? தமிழ்நாட்டுல கொஞ்சூண்டு அரசியல் தெரிஞ்ச யார்கிட்ட வேண்ணாலும் கேளுங்க.. இதைத்தான் சொல்லப் போறாங்க..

எப்படியோ அந்தம்மா குணமாகி வீட்டுக்குப் போனா சரிதான்..
நார்கோ அனாலிசஸ் முறை தவறு

ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாக சுப்ரீம் கோர்ட்டை பாராட்ட வேண்டிய கட்டாயம்..

குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் நார்கோ அனாலிசஸ் முறையில் விசாரிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ரொம்பப் பெரிய குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைக்க போலீஸார் மிகச் சமீபத்தில் கண்டுபிடித்த ஒரு முறைதான் இந்த நார்கோ அனாலிசஸ்..

ஆழ்நிலை மயக்கத்திற்குக் கொண்டு போய் அந்த நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் கேள்வி கேட்டு பதிலைப் பெற்று அதன் மூலம் விசாரணையை நடத்துவது. இது கொஞ்சமும் மனிதாபிமானற்ற செயல் என்று மனித உரிமை இயக்கங்கள் குரல் கொடுத்து வந்தன. அரசு அமைப்புகள் இதுவரையிலும் அசைந்து கொடுக்கவில்லை. இப்போது சுப்ரீம் கோர்ட் துடைத்தெறிந்துவிட்டது.

மோசடி மன்னன் தெல்கியிடம் இதேபோல்தான் விசாரணை செய்தார்கள். அவர் போதையில் இருக்கின்ற நேரத்தில் அவருடைய கன்னத்தில் மாறி, மாறி அறைந்து ஏதோ குற்றவாளியிடம் விசாரிப்பதைப் போல் மருத்துவமனைக்குள் மருத்துவ ரீதியாக படுத்திருப்பவரிடம் சிபிஐ செய்த கொடுமையை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது.

ஏதோ எக்குத்தப்பாக அப்போதைய மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரின் பெயரை தெல்கி மீண்டும், மீண்டும் உச்சரிக்க அவர் பதவி கோவிந்தா.

அடுத்தது சத்யம் ராஜூவின் விசாரணை.. இதில் முடிவென்ன என்று தெரியவில்லை. ஆனால் அதனை வைத்துத்தான் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தயார் செய்திருக்கிறது சிபிஐ. விசாரணையே சட்ட விரோதமானது என்னும்போது அதை வைத்து கேஸை நடத்தினால் என்னாகுமோ..?

நெகிழ வைத்த ஜெயராம்-கோபிகா : திரைப்பட விமர்சனம்


25-08-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பல நேரங்களில் காமெடித் திரைப்படம் என்று நினைத்துப் போனால் அழ வைத்துத் திருப்பியனுப்புவார்கள். திரில்லர் படம் என்று நினைத்துப் போனால் காமெடி படம்போல இருக்கும். சண்டைப் படம் என்று போனால் சர்க்கஸ் பார்த்த திருப்தியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும். குடும்பப் படம் என்று நினைத்து போனால், களியாட்டம் ஆடும் கிளப்புகளின் அன்றாட நிகழ்வுகளை ஒரு சேர பார்த்த வெறியுடன் வெளியில் வர வேண்டியிருக்கும்.

நீங்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக திரைப்படங்களைப் பார்க்கும் வியாதியுடையவராக இருந்தால், மேற்கூறியவற்றையெல்லாம் அனுபவித்தவராக இருந்திருப்பீர்கள்.

ஆனால், சில நேரங்களில் மட்டுமே நாம் பார்க்கச் செல்லும் திரைப்படங்களின் தாக்கம் நம்மை மகிழ்ச்சியடைய வைக்கும். பணம் செரித்தது என்ற திருப்தியைத் தரும்.. மனதை குதூகலிக்க வைக்கும்.. அப்படியொரு திடீர் சிலிர்ப்பைத் தந்தது கடந்த வெள்ளிக்கிழமை மாலை உட்லண்ட்ஸ் தியேட்டரில் நான் பார்த்த 'Veruthe Oru Bharya' என்கிற மலையாளத் திரைப்படம்.

நடிகர் ஜெயராமை மலையாளத் திரைப்படங்களை அதீத ஆர்வத்துடன் பார்க்கத் துவங்கியதிலிருந்தே நான் ரசித்து வருகிறேன். குடும்பப் படங்களின் ஒட்டு மொத்த கதாநாயகன் என்கிற இமேஜை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக மலையாளத் திரையுலகில் கட்டிக் காப்பாற்றி வந்த புண்ணியவான்.

இவரும் ஊர்வசியும் நடித்திருந்த மலையாளப் படங்கள், அனைத்து இந்திய மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யக்கூடிய அளவுக்கு தகுதியான கதையம்சம் கொண்டவைதான். கண்ணியமான கணவன், அப்பாவியான கணவன், குடும்பத்தில் அனைவருக்கிடையிலும் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு சராசரி மனிதன் என்றெல்லாம் தனது நடிப்பு வேட்டையில் பல பரிமாணங்களை வகுத்திருக்கும் ஜெயராமுக்கு 'Veruthe Oru Bharya' என்னும் இந்த புதிய மலையாளத் திரைப்படமும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது.

மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றும் சுகுணன் என்னும் ஜெயராமுக்கு பிந்து(கோபிகா) என்கிற மனைவியும், 13 வயதுள்ள ஒரு அஞ்சனா என்கிற குழந்தையும் உண்டு.

மனிதனுக்கு பெண் குலத்தின் மீது என்ன வெறுப்போ தெரியவில்லை. பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தனக்குத்தானே ஒரு கயிற்றைக் கட்டிக் கொண்டு அதற்குள்தான் இருக்க வேண்டும் என்று மனைவியையும், மகளையும் போட்டு இம்சை செய்கிறான்.

பிறந்த வீடு, அரண்மனைபோல் இருக்க இங்கேயோ ஓட்டு வீட்டுக்குள் குடிசை வீட்டில் இருக்கும் பொருட்களைப் போல் இருப்பவைகளை வைத்துக் கொண்டு அல்லாடுகிறாள் மனைவி பிந்து.

காலையில் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவதில் இருந்து, இரவு 11 மணிக்கு படுக்கப் போகும்வரை ஓயாமல் உழைக்கிறாள் பிந்து. பெண்கள் வீட்டில் வேலையில்லாமல் சும்மா இருக்கக் கூடாது என்கிற கணவன் சுகுணனின் நினைப்பால் மாடு, கன்றுக்குட்டிகளை மேய்க்கும் கடமைகூட அவளுக்கு உண்டு.

எப்போது நிற்கும் என்று தெரியாத மிக்ஸி, மல்லுக்கட்டும் ஒரேயொரு கேஸ் ஸ்டவ்.. தனக்குக் குளிப்பதற்காக சுடுதண்ணியை விறகு அடுப்பில்தான் வைக்க வேண்டும் என்கிற அளவுக்கான சுகுணனது ஆணாதிக்கம் அந்த வீட்டில் நிறைந்திருக்கிறது. சட்டையைப் போடுவதற்குக்கூட “பிந்து” என்று அழைக்கும்போது பிந்துவின் எரிச்சலைவிடவும் ஒரு பைத்தியம் என்கிற விமர்சனத்தை சுகுணன் பெறுகிறான்.

தினசரி பேப்பரை எட்டுப் படிகளில் ஏற சோம்பேறித்தனப்பட்டு வீசியெறியும் பேப்பர்காரனிடம் சண்டையிடும் சுகுணன், அந்தப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து தாழ்வாரத்தில் சாய்வு நாற்காலியில் அமர்ந்து படிக்கத் துவங்கி “பிந்து, பிந்து” என்று பத்து முறை அழைத்து காபியை வாங்கிக் குடிக்கும்போது எனக்கும் வெட்கமாகத்தான் இருந்தது.

வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் எல்லாமே மனைவியே செய்ய.. அவளைத் தான் ஆள வந்தவன் என்ற நினைப்பில் ஜெயராம் செய்யும் அலம்பல்கள்தான் முற்பாதி முழுக்க..

அலுவலகத்திலும் இதே நிலைதான். கையில் ரசீதுகளுடன் பொதுமக்கள் காத்திருக்க அலுவலகத்தில் வெட்டிக் கதை பேசிக் கொண்டிருக்கிறான் சுகுணன். அலுவலக மேலதிகாரி வந்து சொல்லியும் அரசுத் துறை ஊழியர்களின் அலட்சியப் போக்கை கண் முன்னே காண்பிக்கிறான் சுகுணன்.

வீட்டிற்கு வரும் பணக்கார மாமனாரையும், மைத்துனனையும் மதிக்காமல் உடன் சென்று வந்ததற்காக மனைவியை வாசலிலேயே கடிந்து கொள்ளும் போக்கைச் சகித்துக் கொள்ளும் போக்கில் பிந்துவின் மேல் பரிதாபம் கூடுகிறது.

மைத்துனன் திருமணத்தன்று EB Post-ல் இருந்து திருட்டுத்தனமாக கரண்ட் கனெக்ஷன் கொடுத்திருப்பதை அறியும் சுகுணன், “அது தப்பு.. மொதல்ல நிறுத்து..” என்று சொல்லி அதே இடத்தில் களேபரம் செய்வதுதான் படத்தின் முடிச்சு.

மறுநாள் ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த பிந்துவின் அம்மா மரணமடைந்திருக்க.. எப்போதும் நக்கலுடன் பேசும் சுகுணனுக்கு அன்று மட்டும் தனது மாமனாரிடம் துக்கத்தோடு பேச வேண்டிய சூழல். கடமையை முடித்துவிட்டு வீட்டில் வந்து உட்கார்கிறான்.

பெற்ற தாயின் இறுதிக் காரியங்களை செய்துவிட்டு கணவன் வீட்டிற்கு வரும் பிந்து எடுக்கும் ஒரு அஸ்திரம்தான் ஒத்துழையாமை இயக்கம். “இனி இந்த வீட்டில் நான் ஒரு வேலையும் செய்ய மாட்டேன்..” என்பது. “செய்யாட்டி போ.. நான் பாத்துக்குறேன்..” என்றெல்லாம் சவுடால் விடும் சுகுணனுக்கு ஒரு நாள்கூட தாங்க முடியவில்லை..

கோபத்தில் மனைவியை அடித்துவிட, மறுநாள் காலையே மகளிடம் மட்டும் சொல்லிக் கொண்டு சூட்கேஸைத் தூக்கிக் கொண்டு போய்விடுகிறாள் மனைவி. இதற்குப் பின்தான் கதையே சூடு பிடிக்கிறது.

மனைவி இல்லாத சூழலில் ஜாலியாக இருக்க நினைக்கும் சுகுணன் முதல் காரியமாக தனது மகளுக்கு ஒரு செல்போனை வாங்கித் தருகிறான். அதனை வாங்கியவுடன் மகள் செய்கிற முதல் காரியம், அடுத்த வீட்டுப் பையனுடன் பேசத் துவங்குவதுதான்.

தனக்கும், மகளுக்கும் சமைத்துப் போட ஒருவனை நியமிக்கிறான் சுகுணன். வந்தவனோ மகளுக்கு மேஜிக் கற்றுக் கொடுக்கிறேன் என்று சொல்லி அவளைத் தொடப் பார்க்க, கடைசி நிமிடத்தில் பார்த்துவிடும் சுகுணன் அவனை அடித்து விரட்டுகிறான்.

செல்போனில் இடைவிடாமல் தொடர்ச்சியாகப் பேசியதன் பயனாக பக்கத்து வீட்டுப் பையன் தனது ஜீப்பில் அஞ்சனாவின் பள்ளிக்கே வந்து அவளை அழைத்துச் செல்கிறான். விடலைப் பருவத்தின் தூண்டுதலால் செய்வது என்னவென்று தெரியாத, இனம் புரியாத கவர்ச்சிப் போதையில் இளம் தளிர்கள் இருவரும் மாலை நேரத்தில் மலைப்பிரதேசத்தில் போய்க் கொண்டிருக்க.. ஜீப் ரிப்பேர்..

அப்போது அங்கே கையில் பீர் பாட்டிலோடும், கண்களில் போதையோடும் வரும் இளைஞரணி கூட்டமொன்று அஞ்சனாவைத் தூக்க முயல.. ஜீப்காரன் அடிபட்டு கீழே விழுக அஞ்சனா தப்பியோடுகிறாள். சுகுணன் இரவு வீடு திரும்பி, மகளின் தோழிகள், பள்ளி அலுவலகம் என்று பலவற்றிலும் தேடி என்ன ஆனாள் என்பது தெரியாமல் அவதிப்பட்டு தேடி வருகிறான்.

காமுகர்களால் விரட்டப்படும் மகளும், மகளைத் தேடி வரும் அப்பாவும் ஓரிடத்தில் சந்தித்துக் கொள்ள.. பின்னால் வரும் போலீஸாரும் ரவுடிகளைப் பிடித்துக் கொள்ள மகள் காப்பாற்றப்படுகிறாள்.

நல்ல மனிதனாக இருந்த போலீஸ் அதிகாரி மகளுடைய செல்போனை ஆராய்ந்து, அதில் எத்தனை மணி நேரம் அந்தப் பையனுடன் பேசியிருக்கிறாள் என்பதை சுகுணனிடம் சொல்லி, “இனியாவது பத்திரமா பாத்துக்குங்க..” என்று அட்வைஸ் செய்து அனுப்பி வைக்கிறார்.

வீட்டுக்கு வரும் மகள் அப்பாவின் காலில் விழுந்த மன்னிப்பு கேட்க சுகுணன் யோசிக்கிறான். மனைவியை அழைத்து வர இப்பவும் அவனுக்குத் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.. என்ன செய்வது என்று இரவெல்லாம் யோசிக்கத் துவங்க.. இந்த இடத்தில் அவனது மனநிலை மாறுவதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

அங்கே மனைவியின் நிலையோ இதைவிட பரிதாபமாக இருக்கிறது. அப்பாவுக்கும், தம்பிக்கும் இடையில் மாட்டிக் கொண்டு இருதலைக்கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாள் பிந்து.

மறுநாளும் பள்ளி முடிந்து வீடு திரும்பும் அஞ்சனாவை அதே மேஜிக்காரன் கையைப் பிடித்து இழுத்து ஆட்டோவுக்குள் திணிக்க முயல மகளை அழைக்க வரும் சுகுணன், இதைப் பார்த்து இன்னமும் பதைபதைத்துப் போகிறான். அவனை விரட்டிவிட்டு மகளை அரவணைக்கும்போது அவனுக்குள் அது அணையாத நெருப்பாகிறது.

மகள் அரவணைக்கப்பட வேண்டியவள். அவளை விரட்டும் கழுகுகள் நிறையவே உள்ளன. பாதுகாக்க வேண்டியது அவன் கடமை என்ற உணர்வுகள் மேலோங்க மனச்சிதைவு நோய்க்கு ஆளாகுகிறான். ஆனால் இதனை கடைசிவரையில் சொல்லாமல் காப்பாற்றியது இயக்குநரின் திறமை.

வீட்டுக்கு வரும் சுகுணன் மனைவியிடமிருந்து வரும் போனை கட் செய்கிறான். கூடவே போன் இணைப்பையும் துண்டிக்கிறான். இரவில் தூக்கத்தின் ஊடேயே இதுவரையில் மகளின் வாழ்க்கையில் குறுக்கே புகுந்த கோடாரிகள் அவர்கள் நினைத்ததை சாதிக்கப் போவதை நினைத்துப் பார்த்து அவஸ்தைப்படுகிறான். உடனேயே எழுந்தோடி வந்து மகளைப் பார்த்து ஆறுதல்படுகிறான்.

மறுநாளில் இருந்து அவனது நடத்தை முற்றிலும் மாறுகிறது. மகளுடைய படிப்பை நிறுத்துகிறான். “வீட்டிலிருந்தே படித்துக் கொள்..” என்கிறான். மகள் பயந்து போய் அம்மாவுக்கு போன் செய்ய முயல.. போன் கட்.. வீடு உட்புறமாகவே பூட்டப்படுகிறது.

நிலைமை புரியாமல் சுகுணனின் அலுவலக ஊழியர்கள் கையில் பாட்டிலோடு தீர்த்தம் சாப்பிட வீட்டுக்குள் வந்து அமர்ந்து அலப்பரையைக் கொடுக்க.. அமைதியாக அதனை மறுக்கும் சுகுணன் அவனது மகளிடம் டம்ளர் எடுத்து வரும்படி ஒருவன் சொல்லும்போது ஆவேசமாகி அனைவரையும் கழுத்தில் கை வைக்காத குறையாக வெளியேற்றுகிறான்.

பிந்துவோ மகளது நிலைமை தெரியாமல் பரிதவித்து பாசம் மேலோங்க அவளது பள்ளிக்குச் சென்று விசாரிக்கிறாள். பிந்து பள்ளிக்கு வந்தே வாரங்களாகிவிட்டது என்று தலைமையாசிரியை சொல்ல.. சுகுணனின் அலுவலகம் வந்து விசாரிக்கிறாள். சுகுணன் வேலைக்கு வந்தும் நாட்களாகிவிட்டது என்று அவர்களும் சொல்ல “போய்தான் பாக்கலாம்.. வாங்க..” என்று சொல்லி அனைவரும் வீட்டிற்கு ஓடி வருகிறார்கள்.

வீட்டின் வெளிவாசல் இறுகப் பூட்டியிருக்க.. நாள் கணக்கில் பேப்பர்கள் எடுக்கப்படாமல் மழையில் நனைந்து நைந்து போயிருக்க.. ஏதோ ஒன்று என்று நினைத்து ஓடுகிறார்கள் மனைவியும், நண்பர்களும்.

வீடு அமானுஷ்ய அமைதியில் பூட்டப்பட்டிருக்க.. அதோடு கூடவே ஜன்னல்களும் இறுகப் பூட்டப்பட்டு அதற்கு மேல் குறுக்குவாக்கில் இரண்டு கட்டைகளும் வைத்து மூடப்பட்டிருக்கிறது. சுற்றிச் சுற்றி வருகிறார்கள் அனைவரும். அனைத்து ஜன்னல்களுமே பாதுகாப்பு கோட்டை போல் இருந்து நிலைமையை பயமுறுத்துகிறது.

ஓரிடத்தில் கிடைத்த இடத்தில் கட்டையை அப்புறப்படுத்தி உள்ளே பார்க்க மகள் அஞ்சனா கடும் குளிரில் அவதிப்பட்டு நடுங்கிக் கொண்டிருக்கிறாள். அப்பா சுகுணனோ போர்வையை எடுத்து போர்த்திவிட்டு சுடுதண்ணி கொண்டு வந்து வைத்தும் ஏதோ உளறிக் கொண்டிருக்கிறான்.

இவர்கள் கதவைத் திறக்கும்படி சொல்ல.. சுகுணன் ஜன்னலை நோக்கி பார்க்க அங்கே அவன் கண்களுக்கு உன்மத்த வெறியுடன் மகளை சுற்றிச் சுற்றி வந்த ரெளடிகளாகவே அனைவரும் தெரியும்போதுதான் சுகுணனின் நிலைமை நமக்குத் தெரிகிறது.

அவன் கதவைத் திறக்க மறுத்து மகளையும் இழுத்துக் கொண்டு அறை, அறையாக ஓட.. கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள் அனைவரும். மனைவி, சக ஊழியர்கள் என்று யாரையும் அறிந்து கொள்ள முடியாமல் வந்திருப்பவர்கள் மகளைக் காவு வாங்க வந்த எமன்கள் என்றே நினைத்து எதிர்க்கிறான் சுகுணன்.

மகளை இறுக அணைத்து அழுகும் மனைவியை அடிக்க இரும்புக் கம்பியை வீசுகிறான் சுகுணன். ஆனால் அடி மகளின் மீது விழுந்து ரத்தம் சிதற.. அந்த ரத்தச் சிதறலே அவனை ஆசுவாசப்படுத்துகிறது.

முடிவில் மனநல மருத்துவரின் நீண்ட தேவையான அட்வைஸால் பிரச்சினைக்கான காரணத்தை முழுமையாக அறிந்து மனநோயிலிருந்து விடுபட்டவனாக இருக்கிறான் சுகுணன்.படத்தின் துவக்கக் காட்சிக்கு முற்றிலும், மாறுபட்ட இறுதிக் காட்சியோடு படத்தை நிறைவு செய்கிறார் இயக்குநர்.

டைட்டில் காட்சியிலேயே படத்தின் மொத்தக் கதையையும் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது.

ஜெயராம் தனது நடிப்பில் இன்னொரு புதிய இடத்தை இப்படத்தின் மூலம் நிரப்பியிருக்கிறார். மகளின் படிப்பு பற்றி கோபிகா புகார் சொன்னவுடன் “ஏன் படிக்கல?” என்று திடீர் கோபத்தில் மகளை விரட்டி விரட்டி அடித்து படிக்கச் சொல்லுமிடத்தில் ஒரு அப்பாவின் தோற்றத்தைக் காட்டுகிறார் மனிதர்.

கோபிகாவை கொஞ்சுவதாகட்டும், கெஞ்சுவதாகட்டும், ஆணாதிக்கக் கணவனை கண் முன்னே கொண்டு வருகிறார். மனைவி பிரிந்து போயிருக்க அதே சூழலில் அலுவலகத்தில் தனது பெண் மேலதிகாரியிடம் தனது புலம்பலைக் கொட்டுகின்ற இடத்தில் ஜெயராமுக்கு ஒரு சபாஷ் போடலாம்.

அலுவலக ஊழியர்களுடன் டூருக்குச் செல்லும்போது தண்ணியை போட்டுவிட்டு சலம்பல் செய்வதும், மனைவியையும், மகளையும் ஒருவன் தவறாகப் பேச அதைக் கேட்டு ஆவேசப்பட்டு அடிதடியில் ஈடுபட்டுவிட்டு போதையில் புலம்புவதைக் காண்கின்றபோது நடிகர்களின் உண்மையான நடிப்பு போதையில் தெள்ளத் தெளிவாக வருமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

கோபிகாவின் நடிப்பு அவர் உருவாக்கியிருக்கும் வெற்றிடம் எவ்வளவு கஷ்டமானது என்பதை காட்டுகிறது. கோபிகாவின் இப்போதைய கடைசித் திரைப்படம் இது என்று மட்டும் நாம் நினைத்துக் கொள்ள வேண்டும். அந்த அளவிற்கு படம் முழுவதும் வியாபித்துள்ளார்.

கணவனைப் பற்றி புலம்புவதில் இருந்து மாடு, கன்னுக்குட்டிகளிடம் பேசுவதுவரையிலும் அந்த வீட்டில் அவளுக்கிருக்கும் பெரும் பிரச்சினையே, அவளுடைய ஆதங்கங்களைக் கேட்கக்கூட ஆள் இல்லை என்பதைத் தெளிவாக்குகிறது.

மகளுக்கு ஆபத்து என்றவுடன் இப்போது ஜெயராமு இருக்கும் ஒரே துணை அவள்தான் என்ற உணர்வுதான் அவரை ஆட்கொண்டு மனச்சிதைவு அளவுக்கு கொண்டு செல்வதை இயக்குநர் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

படத்தின் பாடல்களும் மிகப் பெரும் வெற்றி பெற்றிருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. “மஞ்சில் குளிக்கும்” என்ற பாடல் ஒலித்த போது எனக்கு முன்னால் அமர்ந்திருந்த இளைஞர்கள், கூடவே கடைசி வரையிலும் பாடியது கேட்பதற்கும், பார்ப்பதற்கும் கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது.

மிகக் குறைந்த பட்ஜெட்டில் 1.35 கோடியில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் மலையாளத் திரையுலகின் கதையம்சமுள்ள ஒரு பக்கத்தை மறுபடியும் பறை சாற்றியிருக்கிறது. வெற்றியும் பெற்றிருக்கிறது என்பது மனதுக்கு நிறைவைத் தருகின்ற ஒரு விஷயம்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை கிரீஷ்குமார் எழுதியிருக்க.. அக்கு அக்பர் என்பவர் இயக்கம் மட்டுமே செய்திருக்கிறார். இதனை நமது தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் பார்த்துப் படித்து உணர்ந்து கொள்வது அவசியம் என்கிறேன்.

இயக்கத்துடன் கதை, திரைக்கதை, வசனத்தையும் நான்தான் எழுதுவேன் என்று பல இயக்குநர்களும் பிடிவாதம் பிடிப்பதால், வெற்றி பெற வேண்டிய திரைப்படங்கள் பல கூட தோல்வியடைவதுண்டு.

ஒருவேளை தனது கதை இல்லை என்பதால் இந்த இயக்குநர் இதனை தயாரிப்பாளரின் முன் கொண்டு செல்லாமல் போயிருந்தால், ஒரு நல்லத் திரைப்படம் மலையாளத் திரையுலகத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கும் வாய்ப்பு உண்டே. இத்திரைப்படத்தின் இயக்குநரை இந்த ஒரு விஷயத்திற்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

தமிழகம் முழுவதும் பிரமிட் சாய்மிரா நிறுவனம் திரையிட்டுள்ள இத்திரைப்படம், தமிழகத்தில் பரவலாக மலையாள மக்களிடையேயும், சினிமா ஆர்வலர்களிடமும் திடீர் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

“கதா பறையும் போள்” திரைப்படத்தினைவிடவும் இத்திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்திருக்கிறது என்கிற உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.

பார்க்க விரும்பும் சென்னை வாழ் அன்பர்கள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் உட்லண்ட்ஸ் தியேட்டரிலும், சங்கம் தியேட்டரிலும் சென்று காணும்படி கேட்டுக் கொள்கிறேன். இது போன்ற மலையாளத் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 7 நாட்கள்தான் திரையிடப்படும்.

நல்லவைகளை காண்பதற்கு இன்றே முந்துங்கள்..!