Showing posts with label நித்தியானந்தம். Show all posts
Showing posts with label நித்தியானந்தம். Show all posts

நினைத்தேன் எழுதுகிறேன்..!

05-05-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தயாரிப்பாளரின் தலைமறைவு..!

‘கதையல்ல நிஜம்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ‘டைம் பிரேம்’ ராம்ஜி திடீரென்று குடும்பத்துடன் தலைமறைவு என்கிற செய்தியைக் கேள்விப்பட்டு பெரிதும் வருத்தமாகிவிட்டது.

நேரில் சந்திக்கும்போதெல்லாம் எதைப் பற்றியும் கவலைப்படாதவராகத் தன்னைக் காட்டிக் கொள்வார். ஆனால் அவரது பிஸினஸ் செம அடி என்றும், சம்பளம் கொடுக்கக்கூட முடியாமல் இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் காதுக்கு வந்தபோதிலும் அப்படி எதுவுமி்ல்லை என்பதைப் போலவே நடந்து கொண்டார்.

ஆனால் இப்போது தலைக்கு மேல் வெள்ளம் போனவுடன் தத்தளிக்கிறார். இவ்வளவு நஷ்டத்துடன் எதற்காக தொழிலை நடத்த வேண்டும்..? சிறிய நஷ்டம் கிடைக்கின்றபோதே கவுரவமாக அதனைவிட்டு விலகி விடுவதுதான் புத்திசாலித்தனம். ஆனானப்பட்ட சினிமாவிலேயே போட்டதை அள்ள முடியாமல் தவிக்கின்றபோது, டிவியில் மட்டும் முடியுமா என்ன..?

இது முழுக்க, முழுக்க அவருடைய தவறுதான் என்றாலும் புதிய தயாரிப்பாளர்களுக்கு சிறந்த பாடமாகவும் இருக்கும்..!
நித்யானந்தம் ஜெயிலில் - வீடியோ லீக்..!

‘கதவைத் திற காற்று வரும்’ என்று சொல்லி தன் வீட்டு பெட்ரூமை சரியாக செக் செய்யாமல் விட்டதன் காரணமாக ஒரே நாளில் தன் சாம்ராஜ்யத்தை இழந்திருக்கும் நித்யானந்தாவின் வழக்கு ஆரம்பத்தில் இருந்தே ஒரு தினுசாகவே போய்க் கொண்டிருக்கிறது..!

நம்ம கையில் எடுக்காமல் இருந்தாலே போதும் என்ற நினைப்பில் தமிழக அரசு கர்நாடக அரசுக்கு வழக்குகளைத் தள்ளிவிட.. கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்பதைப் போல கர்நாடக அரசும் தாமதப்படுத்த கிடைத்த இடைவெளியில் எதிர்ப்புகளைக் குறைக்கின்றவகையில் தான் பொறுப்பு வகித்து வந்த பீடத்தின் தலைமைப் பதவியில் இருந்து விலகிவிட்டதாகச் சொல்லிப் பார்த்தால் நித்தி. ஆனாலும் கர்நாடகாவின் தற்போதைய அரசியல் சூழல் அவருக்கு எதிராக இருப்பதினால் அவரைக் கைது செய்ய வேண்டிய கட்டாயச் சூழல்.

போலீஸ் விசாரணையில் கேள்வி கேட்கும்போதெல்லாம் கஸாப் பாணியில் ஏதோவொன்றை சொல்லி தப்பித்து வந்திருக்கும் நித்திக்கு போலீஸ் விசாரணையின்போது கிடைத்திருக்கும் மரியாதையை பார்த்தால் ஏழைகளுக்கு ஒரு சட்டம்.. பணக்காரர்களுக்கு ஒரு சட்டம் என்பது போலத்தான் தெரிகிறது.

நித்தியானந்தாவை விசாரணை செய்தவிதத்தையும், அவரை ஜெயில் செல்லில் அடைக்கும் காட்சியையும் நேற்று டைம்ஸ் நெள சேனல் வெளிப்படுத்திக் காட்டியது. அக்காட்சிகளைப் பார்க்கின்றபோது நிஜமாகவே நித்தியானந்தம் கொடுத்து வைத்தவர் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

ஏதோ பிஸினஸ் பேச வந்திருப்பவரைப் போல ஒரு சேரில் அமர்த்தி, எதிரில் விசாரணை அதிகாரிகள் அமர்ந்து கொண்டு பேசியிருக்கும் விதத்தைப் பார்க்கின்றபோது மனதுக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கிறது என்றாலும், இதேபோல் மற்ற அனைத்துக் குற்றம்சாட்டப்பட்டவர்களிடமும் இவர்கள் நடந்து கொள்வார்களா என்பது தெரியவில்லை..!

“அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே” என்கிற கேள்விக்கு ஆமாம் என்று ஒத்துக் கொண்டு உடன் இருந்தது ரஞ்சிதாதான் என்பதையும் சொல்லும் நித்தி, “அன்றைக்கு, அங்கே என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியவில்லை..” என்று ஆணித்தரமாக வாதிடுவதைப் பார்த்தால் எதிரில் அமர்ந்திருப்பவர்கள் கேணத்தனமான அதிகாரிகள் என்பதுதான் நித்தியின் முடிவு போலும்..! அவர்களும் அப்படித்தான் ரியாக்ட் செய்திருக்கிறார்கள்..

“எதற்காக ஒப்பந்தத்தில் செக்ஸ் நிபந்தனையைச் சேர்த்தீர்கள்?” என்ற கேள்விக்கு..? “அது எனது சீடர்களே செய்தது.. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.. அது அமெரிக்காவுக்கு மட்டும்தான். வேறு எந்த நாட்டிற்கும் அது மாதிரியான ஒப்பந்தப் படிவம் இல்லை” என்று முனங்கவும் செய்கிறார். தப்பித் தவறி அமெரிக்காவில் தன் திருவிளையாடலை காட்டியிருந்தால் ஆயுசுக்கும் வெளியே வர முடியாது என்பதால் முன்கூட்டியே தப்பிக்க இப்படி ஒரு ஐடியா..!

“எப்படி இவ்வளவு பணம் உங்களுக்கு வந்து குவிந்தது?” என்றால் “டொனேஷன்” என்று ஒரு வரியில் பதில்.. அதிலும் “ஒரு அக்கவுண்ட்டில் இருக்கும் 32 கோடி ரூபாய் முழுவதும் டொனேஷனாக வந்ததுதான்” என்கிறார்.

ஜெயில் செல்லுக்குள் அனுப்பி வைத்து கதவைச் சாத்துகின்றவரையிலும் படம் பிடித்த அதி பயங்கர கேமிராமேன்கள் யாரோ..? எப்படியிருந்தாலும் ஜெயிலுக்குள் நுழைந்து படம் பிடித்து வெளியிட்டது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். வாழ்க மீடியாக்கள்..!
பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் கோல்மால்..!

கிட்டத்தட்ட 15 மாதங்கள் இந்நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்.. ஒரு நிறுவனம் எப்படியெல்லாம் நடத்தப்படக்கூடாது என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக இந்த நிறுவனத்தைத்தான் சொல்ல வேண்டும்..!

கொஞ்சம், கொஞ்சமாக ஊழியர்களை வெளியேற்றியபோது பாக்கி சம்பளத்தை மூன்று மாதத்தில், நான்கு மாதத்தில் தருவதாக எழுதிக் கொடுத்த இந்நிறுவனம், இன்றுவரையிலும் தரவில்லை. அதோடு வருங்கால வைப்பு நிதியையும் கடந்த இரண்டாண்டுகளாக கட்டவேயில்லை.. அந்தத் தொகையும் ஊழியர்களுக்கு அப்படியே நிற்கிறது..!

எனக்கு மூன்று மாதச் சம்பளத்துடன் பி.எப். பணம் வர வேண்டியுள்ளது. மொத்தம் 50000 வரும்.. கேட்டுக் கேட்டு சலித்துப் போய் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிகூட பார்த்தேன். நேரில் போய் கம்பெனியின் தற்போதைய நிர்வாகியான நாராயணனிடம் சண்டையிட்டும் பயனில்லை. “உங்க காரை வித்தாவது எனக்கு செட்டில் பண்ணுங்க..” என்கிறவரையில் கத்திப் பார்த்தாச்சும்.. ம்ஹூம்.. அசரவில்லை ஐயாமார்கள்..!

நேற்றுதான் ஊழியர்களில் ஒரு சிலர் மிகுந்த பிரயத்தனப்பட்டு பலரையும் தொடர்பு கொண்டு ஒட்டு மொத்தமாகச் சென்று பி.எஃப். கமிஷனரை சந்தித்து புகார் மனுவைக் கொடுத்துள்ளார்கள்.

“ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டதால் நிறுவனத்தின் கையெழுத்து உங்களுக்குத் தேவையில்லை. நீங்களே அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கொடுங்கள்” என்று பி.எஃப். அலுவலகத்தில் சொன்னதால் பலரும் பணம் கோரும் விண்ணப்பத்தினை கொடுத்துள்ளார்கள். நான் இன்றைக்குச் சென்று எழுதிக் கொடுத்தேன். இன்னும் பாக்கிச் சம்பளம் கேட்டு சண்டை பாக்கியிருக்கிறது..

இந்த நிறுவனம் ஏன் வீழ்ந்தது என்பது பற்றி எழுத வேண்டுமானால் ஒரு இராமாயணமே பாட வேண்டியிருக்கும்..
ஜெட் வேகத்தில் வந்தது தமிழக மேல்சபை..!

அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தங்களுக்கு நன்மை பயக்கின்ற செயல்களை மட்டும்தான் மின்னல் வேகத்தில் முடிப்பார்கள். கலைஞரும் செய்து முடித்துவிட்டார்.

மேல்சபை அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கேட்பதுபோல் கேட்க வைத்து உடனேயே சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து மத்திய அரசுக்கு அனுப்பி.. நடப்புக் கூட்டத் தொடரிலேயே அதனை பாஸ் செய்ய வைத்து இந்த வாரத்திற்குள் ஜனாதிபதியிடம் கையெழுத்து வாங்கி.. முதல் கட்டப் பணிகள் துவங்கிவிடும்..

ராஜ்யசபா தேர்தல்கள் முடிந்ததும் அடுத்தது மாநில மேல்சபைக்கான தேர்தல்தான்.. அதிருப்தியாளர்கள், மகனது எதிர்ப்பாளர்கள், மகளது ஆதரவாளர்கள், பேரன்களின் நண்பர்கள், தன்னைத் துதிபாடும் கவிஞர்கள், எப்போதும் ஆதரிக்கும் பத்திரிகை நண்பர்கள் என்று ஒரு பட்டாளமே உள்ளே நுழைய காத்திருக்கிறது.

இதுவரையிலும் மாதத்திற்கு ஒரு முறைதான் கலைஞரைப் பற்றிய பாராட்டுப் புராணங்களைக் கேட்டு நமது செவி கிழிந்தது.. இனிமேல் தினம்தோறும் அதுதான் கேட்கப் போகிறது.. காது போச்சு..

இவ்வளவு வேகத்தை பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவில் மத்திய அரசு காட்டவில்லை.. ஈழத்தில் போர் நிறுத்தத்திற்காக கலைஞரும் இதுபோல் முனைப்பு காட்டவில்லை.. ம்ஹும்.. அவங்கவங்களுக்கு அவங்கவங்க பொழைப்புதான் முக்கியம்..
சின்னத்திரையினரின் துணிச்சல்..!

தமிழ் மக்களை கொத்தாகக் கொன்று குவித்து ஈழத்தில் இருந்து அப்புறப்படுத்தியதை நினைவுகூர்ந்து இனி வருடந்தோறும் மே 18-ம் தேதியன்று தீபாவளி கொண்டாட்டம்போல் கொண்டாடப் போவதாக இலங்கை அரசு அறிவித்திருக்கும் சூழலில் அந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எப்படி சின்னத்திரையினர் சிலர் ஒத்துக் கொண்டார்கள் என்பது பரம ரகசியமாக உள்ளது.

“தமிழ் மக்கள் யாழ்ப்பாணத்தில் இப்போது அமைதியாக, ஆனந்தமாக இருக்கிறார்கள். அவர்களுக்காகத்தான் கேட்கிறோம். நீங்கள் வந்து கலை நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் சந்தோஷப்படுவார்கள்” என்று அங்கேயிருக்கும் சில அரசு ஆதரவு தமிழ் அமைப்புகள் மூலமாகத்தான் தமிழக சின்னத்திரையினரை அணுகினார்களாம். பலரும் முடியாது என்று ஒதுங்கிக் கொள்ள.. சிலர் மட்டுமே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கே ரிகர்சல் நடந்து கொண்டிருக்கும் சூழலில் நேற்றுதான் போஸ்டர்கள் யாழ்ப்பாணத்தைச் சுற்றிலும் ஒட்டப்பட்டதாம். அதன் பின்பே விஷயம் வெளியே தெரிய வந்திருக்க.. இப்போது எதிர்ப்பு, ஆர்ப்பாட்டம் என்கிற லெவலுக்கு திருமாவளவன் போயிருக்கிறார். கடைசியில் சின்னத்திரை கூட்டமைப்பு இதில் தலையிட்டு நிகழ்ச்சியை ரத்து செய்ய வைத்திருக்கிறதாம்..

இருந்தாலும் எவ்வளவு துணிச்சல் என்று சின்னத்திரையினர் மீது கோபத்தில் இருக்கிறார்கள் ஈழத்து ஆதரவாளர்கள்..
பார்வதி அம்மாள் விவகாரம்

மிக விரைவில் பார்வதி அம்மாள் சென்னைக்குள் காலடி எடுத்து வைப்பார். கலைஞரின் குடும்பத்தினர் விமான நிலையத்தில் வரவேற்கப் போகிறார்கள். வீரமணியும், திருமாவளவனும், சுப.வீரபாண்டியனும் ஷிப்ட் டைம் போட்டு அம்மாவை மருத்துவமனையில் கவனிக்கப் போகிறார்கள்.

வைகோவும், நெடுமாறனும் அம்மாவைச் சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கப் போகிறார்கள். கிடைக்காவிட்டால் தர்ணா போராட்டம் நடத்துவார்கள். மருத்துவமனைக்குள் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்குத் தொடரப் போகிறார்கள்.. முடியாது என்று மறுக்கப் போகிறது அரசு.

கோவை மாநாடு முடியும்வரையில் அவரை யாரும் சந்திக்க முடியாது. அதுதான் நிபந்தனை என்று கடைசியாக கோர்ட்டில் ஒப்பந்தப் பத்திரத்தை நீட்டப் போகிறது.. தீர்ப்பும் அதையொட்டியே வரப் போகிறது..

என்ன எல்லாத்தையும் நானே சொல்றனேன்னு பார்க்குறீங்களா..? தமிழ்நாட்டுல கொஞ்சூண்டு அரசியல் தெரிஞ்ச யார்கிட்ட வேண்ணாலும் கேளுங்க.. இதைத்தான் சொல்லப் போறாங்க..

எப்படியோ அந்தம்மா குணமாகி வீட்டுக்குப் போனா சரிதான்..
நார்கோ அனாலிசஸ் முறை தவறு

ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாக சுப்ரீம் கோர்ட்டை பாராட்ட வேண்டிய கட்டாயம்..

குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் நார்கோ அனாலிசஸ் முறையில் விசாரிப்பது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ரொம்பப் பெரிய குற்றவாளிகளிடம் உண்மையை வரவழைக்க போலீஸார் மிகச் சமீபத்தில் கண்டுபிடித்த ஒரு முறைதான் இந்த நார்கோ அனாலிசஸ்..

ஆழ்நிலை மயக்கத்திற்குக் கொண்டு போய் அந்த நேரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் கேள்வி கேட்டு பதிலைப் பெற்று அதன் மூலம் விசாரணையை நடத்துவது. இது கொஞ்சமும் மனிதாபிமானற்ற செயல் என்று மனித உரிமை இயக்கங்கள் குரல் கொடுத்து வந்தன. அரசு அமைப்புகள் இதுவரையிலும் அசைந்து கொடுக்கவில்லை. இப்போது சுப்ரீம் கோர்ட் துடைத்தெறிந்துவிட்டது.

மோசடி மன்னன் தெல்கியிடம் இதேபோல்தான் விசாரணை செய்தார்கள். அவர் போதையில் இருக்கின்ற நேரத்தில் அவருடைய கன்னத்தில் மாறி, மாறி அறைந்து ஏதோ குற்றவாளியிடம் விசாரிப்பதைப் போல் மருத்துவமனைக்குள் மருத்துவ ரீதியாக படுத்திருப்பவரிடம் சிபிஐ செய்த கொடுமையை நாடே தொலைக்காட்சியில் பார்த்தது.

ஏதோ எக்குத்தப்பாக அப்போதைய மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரின் பெயரை தெல்கி மீண்டும், மீண்டும் உச்சரிக்க அவர் பதவி கோவிந்தா.

அடுத்தது சத்யம் ராஜூவின் விசாரணை.. இதில் முடிவென்ன என்று தெரியவில்லை. ஆனால் அதனை வைத்துத்தான் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தயார் செய்திருக்கிறது சிபிஐ. விசாரணையே சட்ட விரோதமானது என்னும்போது அதை வைத்து கேஸை நடத்தினால் என்னாகுமோ..?

மக்கள் நித்தியானந்தன்களைத் தேடி ஏன் ஓட வேண்டும்..?

24-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த மூன்று வாரங்களாக கோடி ரூபாய்கள் செலவிட்டிருந்தால்கூட நித்தியானந்தத்திற்கு இவ்வளவு விளம்பரம் கிடைத்திருக்காது.. அவ்வளவை அள்ளியிருக்கிறார் நித்தி. சில பரபரப்பு ஊடகங்கள் தங்களது தார்மீகத்தை துறந்து சிற்றின்பத்தைத் தூண்டிவிடும் விளையாட்டை பொதுமக்கள் மத்தியில் விளையாடி அதற்கும் ஒரு கட்டணத்தை சுளையாக சம்பாதித்துக் கொண்டு தங்களுக்கும் நித்தியானந்தத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பறைசாற்றிவிட்டார்கள்.

நித்தியானந்தம் தினம்தோறும் ஒரு அறிக்கையையும், வீடியோவில் தோன்றி தான் இன்னமும் இளமைப் பொலிவுடன்தான் இருக்கிறேன் என்பதையும் காட்டிக் கொண்டார்.. ரஞ்சிதா போன இடமும், மறைவில் இருக்கும் இடமும் தெரியவில்லை. அவருடைய சீடர்கள் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி தலைமறைவாகிவிட்டார்கள். நித்தம், நித்தம் நித்தி புராணங்களை பாடிய, ஓதியவர்களெல்லாம் இன்றைக்கு அதே வாயால் அவரை வைந்து.. கூடவே நித்தியிடம்விட்ட காசை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நித்தி இன்னமும் இறைவன்தான் என்று நம்புகிறவர்களில் சிலர் மட்டுமே அவரது ஆசிரமத்தில் குப்பை கொட்டிக் கொண்டிருப்பதாகத் தகவல்.

இந்தக் களேபரத்தில் மத்திய அரசு கொண்டு வந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வு தமிழக மக்களை மறக்கடிக்க செய்துவிட்டது.. வழக்கம்போல எருமை மாட்டின் மீது மழை விழுந்த கதையாக இதையும் ஜீரணித்துவிட்டு அடுத்த சாமியாரின் வீடியோவுக்காக காத்திருக்கிறது தமிழகம்.

அன்றைய இரவு எட்டு மணிக்கு முன்புவரையில் மகானாக கருதப்பட்ட நித்தி அடுத்த நொடியில் இருந்து கிரிமினலாக உருவகப்படுத்தப்பட்டார். அவரை தெய்வமாக கருதியவர்கள்தான் இன்றைக்கு துப்புகிறவர்கள் வரிசையில் முதலில் இருக்கிறார்கள். ஏன் இவர்களுக்கு இது முன்பே தெரியவில்லை.. நித்தியும் ஒரு சக மனிதர்தான் என்று..

நித்தியானந்தத்தின் வயது 32. இந்த வயதிற்குள் உலகம் முழுவதும் ஆசிரமங்களை அமைத்தாகிவிட்டது. நான்காயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு இருக்காது என்றாலும் நிச்சயம் கோடிகளில்தான் சொத்துக்கள் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

எப்படி சேர்ந்தது இது..? யார் கொடுத்தது இது..?

தெருவோர காளியாத்தா, மாரியாத்தா கோவில்களின் உண்டியல்களில் போடப்படும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய்களா அங்கே கோடிகளாக உருவெடுத்தன.. இல்லையே..?

பல ஆயிரங்கள்.. பல லட்சங்கள்.. சில கோடிகள் என்று ஒரே செக்கில் கொண்டு வந்து கொட்டியிருக்கிறார்களே பணக்கார பெருமக்கள்.. அவர்களெல்லாம் யார்..? அவர்களுக்கெல்லாம் கல்வியறிவு இல்லையா..? மனிதனுக்கும், கடவுளுக்கும் பாகுபாடு பார்க்கத் தெரியாத முட்டாள்களா அவர்கள்..? அப்படியெனில் இவ்வளவு பணம் அவர்களிடம் எப்படி சேர்ந்தது..? சொல்ல முடியுமா..?

இந்த கோடீஸ்வரர்கள் எதற்கு நித்தியைத் தேடி ஓடினார்கள்.. நிம்மதி வேண்டி.. எதற்கு நிம்மதி வேண்டி இவரிடம் ஓட வேண்டும்..? அதுதான் போதுமென்கிற அளவுக்கு பணம் இருக்கிறதே.. அதனை வைத்து அந்த நிம்மதியைத் தேடிக் கொள்ளலாமே.. ஏன் இவர்கள் செய்யவில்லை.. பணம்தான் அளவற்று இருக்கிறதே.. அது இருந்தால் எதையும் செய்யலாமே..?

தீராத நோய் என்கிறார்கள். பணம் இருந்தால் சுவிட்சர்லாந்துவரையிலும் சென்று வைத்தியம் பார்க்கலாமே..? எதற்காக காவி உடையிடம் வந்து மருத்துவம் பார்க்கச் சொல்கிறீர்கள்..?

குடும்பத்தில் குழப்பம் என்கிறார்கள். பணத்தை விட்டொழித்துவிட்டு குழப்பத்தை நீக்கிவிட்டு சந்தோஷத்தைக் கொண்டாடலாமே.. ஏன் செய்யவில்லை..?

இந்தப் பணக்காரர்களுக்கு அப்படி என்னதான் கவலை..? பணம்.. பணம்.. பணம்.. வேறொன்றுமில்லை..

பணத்தை பத்திரப்படுத்த நினைக்கிறார்கள். இன்னமும் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்கள்.. தங்களது உடல் நலனில் தனி கவனம் செலுத்துகிறார்கள்.. தாங்கள் எப்படியும் நூறு வருடங்களைத் தாண்டி வாழ வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில் இவர்கள் பணக்காரர்கள்.. கோடீஸ்வரர்கள்.. அவர்கள் இப்போது அனுபவிக்கும் இன்பமயமான வாழ்க்கையை இப்படியே தொடர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது எல்லாவற்றிற்குமான அடிப்படை காரணம் என்ன..?

பதில் ஒரே வார்த்தைதான்.. ஆசை..

வேறொன்றுமில்லை. இவர்களுடைய ஆசைக்காகத்தான் நித்தி முதற்கொண்டு அத்தனை மனிதர்களையும் தெய்வங்களாக்கி புனிதப் பசுவாக்குகிறார்கள்.

இதில் சிலர் தெய்வ நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பதினாலும், மற்றவர்களின் சொல் வார்த்தையில் நம்பிக்கை வைத்து இவர்களை சேவிக்கிறார்கள். ஆனால் தொழிலிலும் கடுமையாக உழைக்கிறார்கள். அந்த உழைப்பு அவர்களுக்கு செல்வத்தை மென்மேலும் ஈட்டித் தருகிறது. ஆனால் அந்த மனிதரை சந்தித்துவிட்டு வந்த பின்புதான் தனக்கு செல்வம் கொட்டுகிறது என்று நினைத்து தன்னுடைய கடுமையான உழைப்பை பின்னுக்குத் தள்ளிவிட்டு அந்த மனிதரை முன்னுக்குத் தள்ளுகிறார்கள் இந்த பணக்காரர்கள்.

இதை பிரபலமான ஒருவர் செய்தால் என்னவாகும்..? அது கொசுவின் வளர்ச்சியைப் போல் பிரபலங்கள் வட்டாரத்தில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில்.. இந்த பிரபலங்கள் கொட்டாவி விடுவதைக்கூட ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அடுத்தக் கட்ட நிலையில் இருக்கும் மிடில் கிளாஸ் மாதவன்களுக்கும், மிடில் கிளாஸ் காமன்மேன்களுக்கும் அந்த மனிதனே இன்னொரு தெய்வமாகிறான்.

அடுத்த படை கிளம்புகிறது. இப்போது மிடில் கிளாஸ்காரர்கள். கையில் பணம் இல்லாமல் இருந்தாலும் கடன் வாங்கியாவது கொண்டு போய் பணத்தைக் கொட்டிவிட்டு வருகிறார்கள். இவர்களில் நூறில் ஒருவருக்கு ஒரு நல்லது நடந்தால்கூட அது மிச்சமிருக்கும் 99 பேருக்குள்ளும் சந்தேகத்தை கிளம்பி.. நாம்தான் சரியா விழுந்து கும்பிடாமல் வந்துவிட்டோமோ என்றெண்ணி மறுபடியும் கிளம்பி ஓடுகிறார்கள்.

இதுதான் இந்த ஆன்மீக உலகத்தில் அப்பாவி மக்களின் செயல்பாடுகளால் தெய்வங்களாக்கப்பட்ட மனிதர்கள் வளர்ந்த கதை..

கவியரசர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் என்னும் நூலில் இடம் பெற்றிருக்கும் புகழ் பெற்ற பாடல் இது.

"ஆவீன மழை பொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய் நோவ அடிமை சாக
மாவீரம் போகுதென்று விதை கொண்டோட
வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற
தள்ளவொணா விருந்து வர.. சர்ப்பந் தீண்ட
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க
குருக்கள் வந்து தட்சணை கொடு என்றாரே.."

வீட்டில் பசுமாடு கன்று ஈன்றிருக்கிறது..!

ஊரில் மழை கொட்டித் தீர்த்திருக்கிறது..

அந்த மழையினால் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது.

வீட்டில் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. படுத்த படுக்கையாக இருக்கிறாள்.

வீட்டு வேலைக்காரி இரண்டு நாட்களுக்கு முன் இறந்துபோயிருக்கிறாள்.

மழை கொட்டியதால் வயலில் ஈரம் இருக்கின்ற இந்த நேரத்திலேயே விதையை நட்டு வைத்துவிடலாம் என்றெண்ணி விதைகளை எடுத்துக் கொண்டு வயற்காட்டை நோக்கி ஓடுகிறான் அவன்.

அந்த விதைகள் வாங்க கடன் கொடுத்தவன் எதிரில் வந்து இவனது இடுப்பு வேட்டியை பிடித்திழுத்து முதலில் தனது கடனுக்கு பதில் சொல்லிவிட்டுப் போ என்கிறான்.

அவனிடம் ஒருவாறு வாய்தா வாங்கிவிட்டு மீண்டும் ஓடுகிறான் வயலுக்கு.

பக்கத்து ஊரில் இருந்து அவனது பங்காளியின் சாவு செய்தியை ஒருவன் எதிரில் வந்து சொல்கிறான்.

செய்தியை வாங்கி ஜீரணித்துவிட்டு மீண்டும் வயற்காட்டை நோக்கி ஓடுகிறான்..

அதே நேரம் அவனது வீட்டிற்கு அவனது சம்பந்தி விட்டார் மனைவியைப் பார்க்க வருகிறார்கள்.

இங்கே பங்காளியின் மரணத்தைப் பற்றி சிந்தித்தபடியே சென்றவன் வயலில் இருந்த பாம்பை மிதித்துவிட அது அவனைக் கொத்திவிடுகிறது.

அணிந்திருந்த வேஷ்டியை கிழித்து பாம்பு விஷத்தை உடலில் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டு எப்படியும் விதையை நட்டுவிட்டுத்தான் மறுவேலை என்பதைப் போல் தனது வயற்காட்டில் கால் வைக்கிறான்.

அங்கே அவனுக்கு முன்பாகவே அரசு அதிகாரிகள் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். விவசாய வரியை இதுவரையிலும் கட்டவில்லை.. எப்ப கட்டப் போறீங்க..? பதில் சொல்லுங்க என்று அவனை மறித்து நிற்கிறார்கள்.

அதே நேரம் ஊருக்கு பொதுவான கோவிலின் கொடையை அன்றைய தேதிக்கு அவர்களது குடும்பம்தான் தரவேண்டும் என்பதால் படி அரிசி கேட்டு வாசலில் வந்து நிற்கிறார் கோவில் குருக்கள்.

இவ்வளவு கஷ்டமும் ஒரு மனுஷனுக்கு, ஒரே நாள்ல அடுத்தடுத்து வந்தா அவன் என்ன ஆவான்..? செத்து சுண்ணாம்பாயிர மாட்டான்..? ஆனால் இதுவெல்லாம் வராது என்று நினைக்காதீர்கள். வரும்.. நிச்சயமாக வரும். இதுதான் மனித வாழ்க்கை..

கஷ்டங்களெல்லாம் சொல்லி வைத்தாற்போல் சேர்ந்துதான் வரும். நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இந்தக் கஷ்டங்கள் வருகிறது..? மனிதன் எதையோ செய்கிறான். ஏன் செய்கிறான்? அவனுக்கு அவன் செய்த செயல் தொடர்பாக ஒரு ஆசை. அந்த ஆசையினால் அந்தச் செயலை செய்யப் போய் சிக்கலில் மாட்டுகிறான். ஆக எல்லாவற்றிற்கும் அடிப்படை இந்த ஆசைதான்.

நியாயமான ஆசைகளாக இருந்தாலும் அதற்காக நாம் கஷ்டப்படத்தான் வேண்டும். இங்கே கஷ்டம் என்பது பெற்றோர்களின் கடமை, பிள்ளைகளை வளர்ப்பது, பிள்ளைகள் பெற்றோரை காப்பது.. இதற்காக அவர்கள் சில தியாகங்களைச் செய்வது போன்றவற்றிற்குள் அடங்கும்.

ஆனால் நியாயமில்லாத ஆசைகளினால் துன்பங்களை அனுபவித்தால் யார் அதற்கு பொறுப்பாவது..?

சுருக்கமாக ஒரு உதாரணத்தோடு சொல்கிறேன்.

ஒரு பையன். பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறான். 50 சதவிகித மதிப்பெண்கள்தான் எடுத்திருக்கிறான். ஆனால் அவனது பக்கத்து வீட்டுப் பையன் 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கிறான். இவனது அப்பா இவனை பொறியியல் படிக்க வைக்கிறார்.

இதேபோல் 50 சதவிகிதம் மதிப்பெண் எடுத்த பையனையும் அவனது தந்தை பொறியியல் படிக்க வைக்க முயல்கிறார். அரசுக் கல்லூரியில் சீட் கிடைக்கவில்லை. தனியார் கல்லூரியில்தான் கிடைக்கிறது. ஆனால் இதற்கு பணம் நிறைய செலவாகும். ஆனால் வேறு வழியில்லை. தன் பையனை பக்கத்து வீட்டுப் பையனைப் போல பொறியாளனாக்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொள்கிறார்.

மனைவியிடம் இருந்த நகைகளை விற்றுக் காசாக்கி பையனை தனியார் கல்லூரியில் நுழைத்துவிடுகிறார். பையனும் பெயருக்கு கல்லூரிக்குப் போகிறான். படிப்பதைப் போல் ஏதோ செய்கிறான். அப்பா அடுத்த செமஸ்டருக்கு பீஸ் கட்ட பணமில்லாமல் கடன் வாங்குகிறார். பின்பு இந்தக் கடனை அடைக்க வேறொருவரிடம் பெரிய அளவிலான வட்டி விகிதத்தில் கடன் வாங்குகிறார்.

கடன் கழுத்தை நெரித்த வேளையில் தாங்க மாட்டாமல் இதனை அடைக்க வேண்டி தான் வேலை பார்க்கும் அரசு வேலையில் முறைகேடாக நடந்து கொள்ள முயல்கிறார். லஞ்சம் வாங்குகிறார். முதல் முயற்சி ஜெயிக்கிறது. தொடர்ந்து கொண்டே செல்கிறார். பையன் அரியர்ஸில் குளித்துக் கொண்டிருக்கும்போது இவர் லஞ்சத்தில் குளிக்கிறார்.

கடைசியாக ஒரு நாள் பிடிபடுகிறார். ஜெயிலுக்கு போகிறார். இப்போது இவரது மனம் சொல்கிறது நான் என் பையனுக்காகத்தான் செய்தேன் என்று.. பையன் சொல்கிறான் இது அப்பாவின் கடமைதானே என்று..

இது நியாயமில்லாத ஆசைதானே..? இந்தப் பையனுக்கு இருக்கின்ற அறிவை வைத்து, எடுத்திருக்கின்ற மதிப்பெண்களை வைத்து, அவனால் பொறியியல் படிப்பை படிக்க முடியுமா? முடியாதா? என்றல்லவா அந்தத் தகப்பன் சிந்தித்திருக்க வேண்டும்..?

பொறியியல் துறை இல்லையென்றால் பாலிடெக்னிக், கம்ப்யூட்டர், ஐ.டி.ஐ. என்று பல்வேறு பிரிவுகளில் திருப்பிவிடலாமே.. நிறைய வழிகள் இருக்கிறதே.. செய்யவில்லையே இந்தத் தந்தை..

அவரது இந்த அர்த்தமற்ற ஆசைக்கான விலையை அவர்தானே கொடுக்க வேண்டும். இத்தனையையும் வரிசையாக செய்துவிட்டு "எனக்கு ஏன் இப்படி சோதனையைக் கொடுக்கிறாய்..?" என்று முருகனின் கோவணத்தை இழுத்தால் என்ன நியாயம்..?

நான் இன்றைக்கும் நிரந்தரமான வேலை கிடைக்கவில்லையே என்று புலம்பிக் கொண்டிருப்பதற்கும் நானேதான் காரணம். எனக்கே நன்கு தெரிகிறது. சினிமா துறையில் இயக்குநர் ஆக வேண்டும் என்றால் இந்நேரம் நான் எத்தனை கஷ்டப்பட்டாலும் ஏதாவது ஒரு இயக்குநரிடம் ஒட்டியிருக்க வேண்டும். நான் செய்யவில்லை.

சீரியல்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் மட்டுமே எழுதுவேன் என்று நினைத்து முனைப்போடு போராட நினைத்திருந்தால் இந்த பிளாக்கையெல்லாம் இழுத்து மூடிவிட்டு அங்கே ஓடியிருக்க வேண்டும். அதையும் நான் செய்யவில்லை.

இங்கே பாதி கால்.. அங்கே பாதி கால் என்று வைத்து அலம்பிக் கொண்டிருப்பதினால்தான் எனது நிலைமை இப்போதுவரையிலும் திரிசங்கு சொர்க்கமாக இருக்கிறது. எனக்கே நன்கு தெரிகிறது.. தவறு என் மீதுதான் என்று.

"இது தொடர்பாக ஏதாவது ஒரு முயற்சியை நான் எடுக்கிறேன் முருகா.. அதற்கு ஏதேனும் ஒருவகையில் நீ எனக்குத் துணையிரு. அது போதும்.. வழியைக் காட்டு. நான் ஓடுகிறேன். ஆளைக் காட்டு. நான் பேசுகிறேன்.." என்று முருகனுடனான ஒரு எழுதப்படாத ஒப்பந்தத்தில்தான் எனது நம்பிக்கையான வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் எனது ஆசை சினிமா என்பதால் அதற்கு என்ன விலை கொடுத்தாக வேண்டுமோ அதனை நான் கொடுத்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை.

இந்நேரம் எனக்கு சாதாரணமாக ஐயாயிரம் ரூபாயில் டிடிபி வேலை கிடைத்தாலும் பரவாயில்லை. வாழ்க்கையில் செட்டிலானால் போதும் என்று நான் நினைத்திருந்தால் இந்தப் பிரச்சினைகளெல்லாம் எனக்கு வந்திருக்காதே.. ஆக.. இந்த மாதிரியான பிரச்சினைகள் உருவாவதே நமது ஆசைகளினால்தான்..

போதும் என்ற மனதோடு.. வாழ்க்கையை ஆண்டவனின் கைகளில் ஒப்படைத்துவிட்டு.. எப்போது வேண்டுமானாலும் இறப்பை எதிர்நோக்கி காத்திருப்பவனுக்கு எந்த ஒரு வழிபாடும் தேவையில்லை.

நானும் இப்படித்தான் காத்திருக்கிறேன். இது சுயபச்சாபதமில்லை! நிஜமாகவே.. இன்றைக்கு.. இந்த நேரத்திற்கு.. இந்த நிமிடத்தில்.. இந்த நொடியில்கூட நான் இறப்பதற்கு தயாராக இருக்கிறேன். முருகன்தான் கூப்பிட மறுக்கிறான்.

மனசு நிறைய கனவுகளோடு, நிறைய எதிர்பார்ப்புகளோடு உழைத்துக் கொண்டிருப்பவர்களை திடீரென்று அழைத்துக் கொள்கிறானே என்பதை நினைக்கின்றபோது அவனை திட்டுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியவில்லை.

நான் இப்போதே இறக்கத் தயார் என்று சொல்வதாலேயே உடனேயே எனக்கு இறப்பு வந்துவிடாது என்பது எனக்கும் தெரியும். ஆனால் இதில் இருக்கும் ஒரு கூடுதல் வசதி என்னவெனில், எதன் மீதும் அதிகம் நாட்டம் வராது.. இருப்பதே போதும் என்று ஆசையை அளவோடு வைத்துக் கொள்ளலாம்.

"நாம் உழைத்துக் கொண்டேயிருப்போம். இறப்பை பற்றிக் கவலைப்படாமல் உழைப்போம். முருகன் எப்ப கூப்பிடுறானோ அப்போ போய்க்குவோம்... எதுக்கு அதைப் பத்தி நினைக்கணும்"னு சொல்கிறவர்களும் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த மாதிரி மனப்பான்மை உள்ளவர்கள்தான் ஒரு போதும் நித்தி மாதிரியான சாமியார்களிடம் போகவே மாட்டார்கள்.

வெற்றியும், தோல்வியும், இன்பமும், துன்பமும், லாபமும், நஷ்டமும் வாழ்க்கையில் சகஜம். அதற்காக துவண்டு போகக் கூடாது. அதைத் தூக்கிப் போட்டுட்டு மேலும், மேலும் உழைக்க வேண்டும்.. எல்லாமே கடந்து போகும் என்கிற மனநிலை நமக்குக் கிடைத்தால் நிச்சயம் இந்த மாதிரியான மனித போலிகளான சாமியார்களின் தயவு நமக்குத் தேவையிருக்காது.

நானும் இதுவரையில் இது மாதிரியான எந்த சாமியாரிடமும் போனதில்லை. ஆர்வமும் கொண்டதில்லை.. காரணம் எனக்கும், என் அப்பன் முருகனுக்கும் இடையில் எந்த புரோக்கரும் தேவையில்லை. எனக்கு அவன்.. அவனுக்கு நான்.. இதுவே எங்களுக்கு போதும்..

நித்தியானந்தம் தவிர நாமெல்லாரும் யோக்கியமானவர்கள்தானா..?

04-03-2010

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடந்த இரண்டாம் தேதி இரவு எட்டரை மணிமுதல் கோடம்பாக்கத்தில் யாருக்கும் உறக்கமில்லை. எப்படி இப்படி நடந்தது என்று இரவு முழுவதும் போன் போட்டு அழுதவர்கள், இப்போதுவரையிலும் அதையேதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

திரையுலகம் மட்டும்தான் என்று நினைத்தேன். வலையுலகத்தில் நான் எதிர்பார்த்தது போலவே இதைத் தவிர முக்கியம் வேறில்லை என்பதைப் போல் ஒரே சமயத்தில் ஒரே சம்பவத்தை வைத்து பதினைந்து பதிவுகள் தமிழ்மணத்தின் முகப்பில் நின்றது என்றால் அது நிச்சயம் இந்தப் பிரச்சினைக்காகத்தான்.

எப்போதடா சமயம் கிட்டும் என்று காத்துக் கொண்டிருந்தவர்கள் பக்தியின் மீது, கடவுள் மீதும், அந்த நம்பிக்கை மீதும், சாமியார்கள் மீதும், அவர்களது பிரதான பக்தர்களின் மீதும், கடைநிலை பக்தர்கள் மீதும் பாய்ந்து குதறியெடுத்துவிட்டதை நினைத்து இனிமேல் இந்தப் பிரச்சினையில் எழுதுவதற்கு எதுவுமே இல்லை என்றாகிவிட்டது.

ஆனாலும் இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் பின்னாளில் நாட்டுப் பிரச்சினைகள் எதையும் பொதுவில் வைத்து வாதாடும்போது உனக்கென்ன உரிமை இருக்கிறது என்கிற கேள்வி எழ வாய்ப்பு உண்டு என்கிற காரணத்தினால் விருப்பமே இல்லாமல் இந்தப் பதிவு.

காமம் மனிதர்களைக் கொல்லத்தான் செய்கிறது. எவ்வளவு செல்வாக்கு படைத்த மனிதர்களும் இதை வெல்ல முடியாமல் கடைசியில் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள். இதைத்தான் கடவுளர் வரலாறுகளும், தேசங்களின் வரலாறுகளும், ஒரு சமான்யனின் வரலாறுகளும் வருடக்கணக்காக சொல்லி வருகின்றன. ஆனாலும் சாதாரண மக்களுக்கு தங்களிடம் அதன் மீதிருக்கும் ஒரு மரியாதை கலந்த பயத்தையும், விருப்பம் கலந்த வெறுப்பையும் நீக்க முடியவில்லை.

நித்தியானந்தம் என்கிற தனி நபரும், ரஞ்சிதா என்கிற பெண்மணியும் கலந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு இது என்கிற பட்சத்தில் இது இருந்திருந்தால், தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கும் லட்சணக்கணக்கான அந்தரங்க வீடியோக்களில் ஒன்றாக இதுவும் போய்விட்டிருக்கும்.

மாறாக தன்னையொரு அவதாரப் புருஷனாகவும், மக்களுக்கே அறிவுரை சொல்லும் மகானாகவும், ரட்சிக்க வந்த புனிதராகவும் காட்டிக் கொண்டதால்தான் நித்தியானந்தம் இன்றைக்கு தலைகாட்ட முடியாமல் மாநிலம் விட்டு மாநிலம் செல்ல வேண்டியிருக்கிறது.

அவரால் முடிந்தது.. போய்விட்டார். ஆனால் அவரைத் தொழுதவர்கள் அன்றைய இரவு முதல் பட்டபாட்டை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க மாட்டார். கவுதம புத்தர் தோரணையில் நித்தியானந்தம் அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பலரது வீடுகளின் வரவேற்பறையில் பார்த்திருக்கிறேன். இப்போது போனால் நிச்சயமாக அது குப்பைக் கூடைக்குள்தான் இருக்கும்.

திரையுலகில் கோவைசரளாவும், நடிகர் விவேக்கும் இவரது பிரதான சீடர்கள். தயாரிப்பாளர் 'சத்யஜோதி' தியாகராஜன் இவரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து புண்ணியத்தைத் தேடிக் கொண்டதாகச் சொல்கிறார்கள். பல பிரபலங்களுக்கு மத்தியில் இப்படி குருவாக இருந்தவர் தனக்குத்தானே குழியைத் தேடிக் கொண்டார் என்றால், அதற்குக் காரணம் அவரது வயதுதான். இளம் வயதில் பெயரும், புகழும், பணமும், அளவற்ற செல்வாக்கும் கிடைத்தால் எது நடக்குமோ அதுதான் இவருக்கும் நடந்திருக்கிறது.

ஏதோ நம்மைத்தான் இந்தப் பிரச்சினை தாக்கியிருக்கிறது என்றில்லை. தமிழ்நாடு முழுக்கவே நிலைமை இதுதான். டீக்கடையில் இருந்து பெட்ரோல் பங்க்வரையிலும் அனைவரின் முகத்திலும் ஒரு நக்கல் சிரிப்பு. அடுத்தவர்களின் அந்தரங்கம் உலகத்தில் அத்தனை பேருக்குமே எவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது பாருங்கள்..?

நித்தியானந்தம் ஒரு சாமியார் என்கிற ரீதியிலேயே கவனிக்கப்பட்டுவிட்டாலும் அவருக்குள் இருந்த இயற்கையான, இயல்பான மனித குணம் இல்லாமல் போயிருக்காது. ஆனால் அதற்காக அவர் அதனைப் பயன்படுத்தியவிதமான அந்த காவி உடையை அணிந்து அந்தச் செயலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்பதும் ஒரு புறும் இருக்கட்டும்.. இந்தச் செயல் எதற்காக, எப்படி வெளிப்பட்டது என்பதையும் ஒருபுறம் பாருங்கள்..

பல்வேறு மீடியாக்களுக்கும் குறிப்பாக குமுதம் பத்திரிகைக்கும் இந்தச் செய்தி டிவிடியுடன் ஒரு கோரிக்கை கடிதத்துடன் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்தக் கடிதத்தில் இடம் பெற்றிருக்கும் வாசகங்களைப் படிக்கின்றபோது இந்தச் செயலில் பங்கு கொண்ட மூன்றாமவரும் நிச்சயம் ஒரு பெண்ணாகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் அதனை வாசிக்க வாய்ப்புக் கிடைத்த பத்திரிகையாளர்கள்.

நீண்ட வருடங்களாக தனக்கும், நித்தியானந்தத்திற்கும் இடையில் இருந்த நெருங்கிய நட்பை உடைத்தெறிந்துவிட்டு புதிய நட்பை உருவாக்கிக் கொண்ட ரஞ்சிதாவின் மேல் கோபம் கொண்டுதான் அந்த பெண் அவர்கள் இருவருக்குமே தெரியாமல் இதனை ரிக்கார்டு செய்து மீடியாக்களுக்கு அனுப்பியிருக்கிறார் என்பது பலரது அனுமானம். அந்தப் பெண்ணை கிட்டத்தட்ட ஸ்மெல் செய்துவிட்ட பத்திரிகையாளர்கள் விரைவில் அந்தப் பெண்ணின் பெயர் போட்டு கவர்ஸ்டோரி எழுதுவார்கள் என்று நினைக்கிறேன்.

போடலாமா வேண்டாமா என்றெல்லாம் பலரும் தங்களது அலுவலகத்தில் யோசித்துக் கொண்டிருக்க பல்வேறு டிவிக்களின் செய்தி ஆசிரியர்களும் இரவு 9 மணியோடு கடைசி புல்லட்டின்னை முடித்துவிட்டு கிளம்பிவிடுவார்கள் என்பதை யூகித்து இரவு நேரத்திலேயே சப்தமில்லாமல் வெளியிட்டுள்ளார்கள் சேனல்காரர்கள்.

அதுவும் துணை முதல்வர் பற்றிய நூல் வெளியீட்டு விழாவின் நேரடி ஒளிபரப்பு கலைஞர் டிவியில் முடிகின்றவரையில் காத்திருந்து அதன் பின்புதான் ஸ்கிரால் நியூஸே ஓடத் துவங்கியது. அப்போதிலிருந்தே சேனல்காரர்கள் நினைத்ததுபோல தமிழ்நாடே பரபரக்கத் துவங்கியது.

ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பாகவே நித்தியானந்தத்தை தொடர்பு கொண்டு இது பற்றிக் கேட்கப்பட்டு அவர் அதனை மறுத்து அது தன்னுடையதல்ல என்று சொன்ன பின்புதான் ஒளிபரப்பியுள்ளார்கள். இதனால்தான் நேற்று மதியம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தம் தரப்பினர் ஒளிபரப்புக்கு தடைகோரியபோது ஸ்டே ஆர்டரை கொடுக்க நீதிபதியும் மறுத்துவிட்டாராம்.

நான் அந்த வீடியோவை பார்த்தபோது ஒரு 32 வயது வாலிபனும், அவன் மீது தாளாத காதல் கொண்டிருக்கும் ஒரு பெண்ணிற்குமான உணர்ச்சிக் குவியலைத்தான் பார்க்க முடிந்தது. எனது பக்கத்துவீட்டுப் பெண்கள் "புருஷனுக்குக்கூட எந்த பொம்பளையும் இவ்வளவு மரியாதையா கால் பிடிச்சுவிட மாட்டாங்க.." என்று கிண்டல் அடித்தார்கள். அவர்களுடைய பார்வை எப்படிப்பட்டது என்பதைப் பாருங்கள்..

நடந்ததெல்லாம் ஒரு நிகழ்வு என்று சொல்லிவிட்டுப் போக இங்கே யாருக்கும் மனமில்லை. காரணம் அவர் ஒரு சாமியார்.. சாமியார் பெண்ணுடன் சம்போகிக்கலாமா என்கிறார்கள். அதனால் நித்தியின் உடலை இரண்டாகப் பிளந்ததுபோல் அத்தனை பேரின் கோபச் சொல்லாடல்கள் அவரைத் துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் இதற்கெல்லாம் தகுதிகள் யாருக்கு உண்டு..? அந்தக் காட்சிகளை ஒளிபரப்பிய அந்தத் தொலைக்காட்சி சேனலுக்கு முதலில் இருக்கிறதா..? இந்தக் காட்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஃபிரேமுக்குக் கீழேதான் தீராத விளையாட்டு பிள்ளை என்கிற நடிகைகளின் திவ்ய தரிசனத்தை முழுமையாகக் காட்டிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் விளம்பரம் ஓடியது.

அதே தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகளில் காட்டப்படுகின்ற காட்சிகள் எதுவும் நித்தியும், ரஞ்சிதாவும் இருந்த காட்சிகளுக்குக் குறைந்ததல்ல.. வெறுமனே கட்டில் அறை காட்சிகள் மட்டும்தான் ஆபாசமா..?

பத்தாண்டுகளுக்கு முன்பாக 'மெட்ரோ பிரியா' என்றொரு தொகுப்பாளினி பற்றிய ஒரு விளம்பரம் அதே தொலைக்காட்சியில் ஓடியது.. பாலங்கள், சாலைகள், போக்குவரத்து நெரிசல்கள் அனைத்தையும் கடந்து ஓடி வருகிறார்கள் இரண்டு பெரியவர்கள். அரக்கப் பறக்க ஓடி வரும் அவர்கள் ப்ரியாவின் எதிரில் வந்தமர்ந்தவுடன் அதில் ஒருவரின் வாயில் இருந்து உமிழ்நீர் அப்படியே கொட்டிக் கொண்டேயிருக்கும். கேட்டால் இது அந்த ப்ரியா என்றொரு பெண்ணிற்காக தமிழ்நாடே காத்துக் கொண்டிருப்பதை உணர்த்துவது போன்ற கான்செப்டாம்..

அடுத்து திடீரென்று ஒரு ஜட்டி கம்பெனி லம்பமாக ஒரு தொகையைக் கொடுத்து அனைத்து நிகழ்ச்சிகளின் இடையிலேயும் தங்களது உலகப் புகழ் பெற்ற ஜட்டியைக் காட்டச் சொன்னது.. காட்டினார்கள்.. எப்படி..? ஒரு ஆண் கட்டிலில் படுத்திருப்பார்.. கான்செப்ட்டின் டயலாக்குகள் முடிந்தவுடன் சடாரென்று தனது ஜிப்பைத் திறந்து பேண்ட்டை முட்டி வரையிலும் கீழிறக்கி ஜட்டியைக் காண்பிப்பார். அப்படியே ஜட்டி மீது லோகோ வந்து நிற்க.. விளம்பரம் முடியும்.. இப்படிப்பட்ட அற்புதமான காட்சிகளையும் அள்ளித் தெளித்ததுதான் இந்த சேனல்.

இவர்கள் என்றில்லை.. இப்போது அனைத்து மீடியாக்களுமே சிற்றின்பத்தை மையமாக வைத்துதான் தங்களை வளர்த்துக் வருகின்றன. இந்த சிற்றின்பத்தில் அடுத்தக் கட்டமான 'பெரிய' இன்பத்தையும் இவர்கள் நட்ட நடு இரவில் சில வருடங்கள் தொடர்ந்து காட்டிக் கொண்டுதான் இருந்தார்கள்..

'சூர்யா' டிவியில் சனிக்கிழமை இரவு 12 மணிக்கு ஷகிலா நடித்த மலையாளப் படங்களையும் காண்பித்தார்கள். தமிழக சட்டப்பேரவைவரையிலும் இந்த விஷயம் பேசப்பட்டு தாத்தா வழக்கம்போல பேரன்கள் பக்கமே பேச.. இனி போடுவதற்கு படங்கள் கிடைக்காததால் அது அப்படியே நின்று போனது. ஆனாலும் வசந்த் தொலைக்காட்சியில் இப்போது இந்த அரிய சேவையை மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் எதைவிடக் குறைந்துபோய்விட்டது நித்தியின் இந்த உறவு..?

இந்த வெளியீட்டீன் மூலம் நித்தியானந்தத்தை குதறியெடுக்கும் பலரும் உடன் காட்சியளிக்கும் அந்தப் பெண் ரஞ்சிதாவை ஏன் நினைத்துப் பார்க்கவில்லை?

கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ்.. திரைப்படங்களில் முன்புபோல் நடிக்க வாய்ப்பில்லை.. சின்னத்திரையிலும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குநரிடமே மோதல் ஏற்பட்டு அங்கிருந்தும் விலக வேண்டிய நிர்ப்பந்தம்.

இப்படி எல்லா இடத்திலும் பிரச்சினைகள் என்று வந்த பிறகு ஒரு மன அமைதி வேண்டி அவர் சென்றடைந்த இடம் அது. அங்கே ஏற்கெனவே அமைதி வேண்டி வந்திருந்த மனிதர்களில் ஒருவரோடு ஒருவராக இருந்திருக்க வேண்டியவர், நித்தியுடன் ஒட்டிக் கொண்டதுதான் இப்போது இந்தளவுக்குக் கொண்டு வந்துவிட்டுள்ளது.

இதனைத் தவறு என்று நான் சொல்ல மாட்டேன். அவர் அந்த வீடியோவில் நடந்துகொண்டிருக்கும் விதத்தினைப் பார்க்கின்ற போது எந்த அளவிற்கு நித்தி மீது அவருக்கு இருக்கும் காதலையும், மரியாதையையும் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் அது ஏதோ ஒருவித செட்டில்மெண்ட்டுக்காக நடத்தப்பட்டவிதமாக இல்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ரஞ்சிதா நித்தியை முழுமையாக நம்பியிருக்கிறார். ஆனால் இப்போது அவரது நிலைமைதான் பரிதாபமாக இருக்கிறது. இனி அவர் எப்படி வெளியுலகில் தயக்கமில்லாமல் நடமாட முடியும்..? எத்தனை கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியும்..? கேள்விகள் அனைத்தும் தார்மீக ரீதியாக வருமா..? 'அந்தக்' காட்சிகளை மையமாக வைத்துதானே கேள்விகள் பறந்து வரும். அதற்கு ஒரு பெண்ணால் எப்படி பதில் சொல்ல முடியும்..?

ரஞ்சிதாவின் பொருட்டாவது இந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்கலாம்.. கண் மூடித்தனமான பக்தியும், காதலையும்தான் அந்தப் பெண் அந்த வீடியோவில் காண்பித்திருக்கிறார். ஒரு கணவருக்கும், மனைவிக்குமான உறவு போல இருந்த அவற்றை இப்படி பகிரங்கப்படுத்தியிருப்பதில் காணாமல் போயிருப்பது நமது நாகரிகமும் சேர்ந்துதான்.

நித்தியின் உடன் இருந்தவர்களின் பொறாமையும், பயமும் அந்தப் பெண்ணையும் இப்போது பலி வாங்கிவிட்டது. இது பல மாதங்கள் நீடித்திருக்கும் நட்புதான் என்று உறுதியாகச் சொல்கிறது ஆசிரம வட்டாரம்.

உரிமையாக நித்தியின் படுக்கையறைக்குள் நுழையும் அளவுக்கு செல்வாக்கையும், தகுதியையும் உடைய ஒரு பெண் திடீரென்று வந்துசேர்ந்த ரஞ்சிதாவால், நித்தியை சந்திக்க முடியாத அளவுக்குப் போய் அந்தக் கோபத்தில்தான் வீடியோ கேமிராவை நித்திக்கும், ரஞ்சிதாவிற்குமே தெரியாத அளவுக்கு மறைத்து வைத்து படம் பிடித்திருக்கிறார் என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.

நித்தி இன்றைய செய்தியின்படி ஹரித்துவாருக்கு சென்றிருக்கிறார். உண்மையாக அவர் நாளை அலகாபாத்தில் நடக்கும் ஒரு கும்பமேளாவில் பல சாமியார்களுக்குத் தலைமை தாங்கி பூஜை நடத்த வேண்டுமாம். இருக்கின்ற குழப்பத்தில் அங்கே அவர் சென்றால், அவருக்கே பூஜை நடத்திவிடுவார்கள் என்பது உறுதி.

வீடியோவை வெளியிட்டவர்கள் சாமியாரின் சல்லாபம் என்றே குறிப்பிடுவதும் மிக நகைச்சுவையான ஒன்று.. இவர்களது சேனல்களில் நிமிடத்துக்கொருமுறை காட்டப்படுகின்ற சினிமா பாடல் காட்சிகளில் இருப்பது மட்டும் என்ன என்பதை இவர்கள் விளக்கிச் சொன்னால் தேவலை.

அதோடு அந்த வீடியோவின் காட்சிகளுக்கேற்ப 'சிருங்கார ரசம்' சொட்டும் சினிமாப் பாடல்களைச் சேர்த்து வெளியிட்டிருக்கும் அற்பபுத்திக்காரர்களை எதை வைத்து அடிப்பது..? யார் இவர்களைக் கண்டிப்பது..? எப்படி கண்டிப்பது என்று தெரியவில்லை. நிச்சயமாக அது ஸ்பாட் ரிக்கார்டிங் அல்ல. எடிட்டிங் டேபிளில் இணைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகப் புலனாகிறது.

மற்றபடி சேனல்காரர்கள் என்ன நினைத்தார்களோ அது அப்படியே நடந்து கொண்டிருக்கிறது.. தமிழ்நாட்டில் பல்வேறு ஊர்களில் இருக்கும் நித்தியின் ஆசிரமங்கள் தாக்கப்பட்டுள்ளன. அவருடைய புகைப்பட போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டுள்ளன. அவருடைய புகைப்படங்கள் எரிக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் இருக்கும் தலைமை அலுவலகமும் தாக்கப்பட்டுள்ளது.

இவ்வளவுக்குப் பின்பும் "இது ஒரு கிராபிக்ஸ் வேலை.. நாங்கள் இதனை சட்டரீதியாக அணுகுவோம். நித்தி சாமி ஒரு தவறும் செய்யாதவர்.." என்று இன்னொரு சாமி பேட்டியளித்திருக்கிறார். உடன் போலீஸார் இருந்ததால் தப்பித்திருக்கிறார்.

நேற்று மட்டும் முகத்தை மார்பிங் செய்துவெளியிட்ட சேனல் இன்றைக்கு அப்படியே வெளியிட்டது. அதோடு அவர்கள் ரஞ்சிதாவின் புகைப்படத்தையும் பயன்படுத்திக் கொண்டார்கள். 'உதயா' தொலைக்காட்சியில் ரஞ்சிதா நடித்த ஒரு நெருக்கமான காதல் காட்சியையும், அவரைக் கற்பழிக்க முனையும் காட்சியையும் போட்டுக் காண்பித்து இவர்தான் ரஞ்சிதா என்கிறார்கள். இதுவா ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கும் முறை..? இதற்கு நித்தி, காவி உடை அணிந்து காதலியுடன் ஒன்றாக இருந்ததில் ஒன்றும் தவறில்லையே..?

எந்தவிதத்திலும் இந்த விஷயத்தில் நித்தியானந்தத்தை கண்டிக்க யாருக்கும் தகுதியில்லை என்பது எனது தாழ்மையான கருத்து. ஒரு விரல் அவரைக் குற்றம் சுமத்தினால் மற்ற நான்கு விரல்களும் நம்மைத்தான் காட்டுகின்றன. அவர்கள் நடத்தியது சல்லாபம் என்றால் அடுத்தவர்களின் சல்லாபத்தை உச்சுக் கொட்டி பார்த்த நம்முடைய செயலை என்னவென்று சொல்வது..?

முதல் முறையாக அந்தக் காட்சிகளைப் பார்த்தபோது ரஞ்சிதாவாக இருக்காது என்றுதான் நினைத்தேன். ஆனால் 'நக்கீரன்' இணையத் தளத்தில் முழுமையாகப் பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். நான் முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அடுத்தடுத்த முறைகள் பாஸ்ட் பார்வேர்டும், ரிவர்ஸுமாக மாற்றி மாற்றிப் பார்த்ததில் பாதி நித்தியானந்தமாக நானே மாறிவிட்டேன். பின்பு எனக்கு எங்கே இருக்கிறது கண்டிக்கின்ற தகுதி..?

இல்லை. எங்களுக்கு இருக்கிறது என்றால், உங்களது வாழ்க்கையை கொஞ்சம் புரட்டிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒருவிதத்தில் ஒரு நோக்கில் நீங்களும் இந்தக் காமத்தை எதிர்கொண்டிருப்பீர்கள். அல்லது தெரிந்தும், தெரியாததுபோல் இருந்திருப்பீர்கள். யாரோ ஒரு நித்தியானந்தமோ அல்லது ரஞ்சிதாவோ உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் அப்போது மெளனமாக இருந்த நீங்கள், இப்போது இவர்கள் என்றவுடன் வெளிப்படையாகக் கொட்டுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

வலையுலகில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் பற்றி பதிவர்கள் எழுதிய விமர்சனத்தில் அத்தனை பேரும் அட்சரப் பிசகாமல் சொன்ன ஒரு வாக்கியம் "ரீமாசென்னின் உடல் மொழி அசத்தல்" என்பது. ஆனால் படத்தைப் பார்த்தபோதுதான் அந்த உடல்மொழியை எப்படி பதிவர்கள் கண்டுகொண்டுள்ளார்கள் என்பது புரிந்தது. அடிப்படையே காமம்.. அத்தனை காமக்கண்ணோட்டத்தோடு ரீமாசென்னை அணு, அணுவாக ரசித்துத் துடித்த அந்த ரசனைதான், இன்றைக்கு இரு உடல்கள் இசைவோடு இணைந்திருப்பதை குற்றமாக பார்க்கிறது. விந்தையாக இல்லை..?

நித்தியானந்தம் செய்த ஒரே தவறு அவர் சாமியாராக இருப்பதுதான். தன்னை பின்பற்று என்று அவர் சொல்லியிருக்கும்பட்சத்தில் அதை தீர ஆராயாமல், யோசிக்காமல் பின்பற்றியிருக்கும் தொண்டர்களைத்தான் நாம் கண்டிக்க வேண்டும்.

ரஞ்சிதாவை இப்போது நினைத்துப் பார்த்து வருத்தமடையும் என் மனம் அந்த வீடியோவில் பார்க்கின்றபோது அவருடன் சேர்ந்து களியாட்டம் ஆடியதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். பின்பு நான் எப்படி "இதுவொரு சாமியாரின் சல்லாபம்" என்று கண்டிக்க முடியும்..?

இணையத்தில் இன்றைய தேதிவரையில் இது போன்று நித்தியானந்தங்களும், ரஞ்சிதாக்களும் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் சிலரை அவ்வப்போது நாம் பார்த்து ரசிப்பதுண்டு.. 'காஞ்சிபுரம் தேவநாதன்' வீடியோக்களை தேடித் தேடிப் பார்த்த அனைவரும் அவன் மீது வழக்குப் போடவா பார்த்தார்கள்? இல்லையே.. என்ன நடந்தது என்பதற்காகத்தான் என்று மனசில் சல்ஜாப்பு சொல்லிக் கொண்டாலும் அதில் இருந்த காமத்தின் ஈர்ப்பை யாராலேயும் மறுக்கமுடியாது.

நித்தியானந்தம் துறவற வாழ்க்கைக்குத் தகுதியானவர் இல்லை என்று சொல்வதற்குக்கூட எனக்குத் தகுதியில்லை. அது மாதிரியான கணக்கிலடங்காத வீடியோக்களை திரையரங்கத்தின் இருட்டு மூலையிலும் கணிணியின் உதவியாலும் பார்த்துப் பார்த்துச் சலித்துப் போயிருக்கும் என் மனது "நீயே ஒரு நித்தியானந்தம்தான். அவருக்கு வாய்ப்புக் கிடைத்து செய்திருக்கிறார். நீயும் அவர் நிலையில் இருந்தால் அதைத்தான் செய்வாய்.. இனி முடிவெடுக்க வேண்டியது நித்திதான். என்ன செய்ய வேண்டும் என்று அவருக்குத் தீர்ப்பு சொல்ல வேண்டியது நீயல்ல.." என்று கூப்பாடு போடுகிறது.

அவருடைய செயல் ஒரு கட்டுப்பாட்டை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து பிறண்டதுதான். இந்தக் கட்டுப்பாட்டை மீறியை செயலை செய்யாதவன் எவனும் உலகத்தில் இருக்க முடியாது என்பதே எனது கருத்து. நான் ஒரு காலத்தில் கை நீட்டி சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை பார்த்த இடத்தில் அந்த நிர்வாகத்தின் தயாரிப்பையும், அதன் பொருட்களையுமே பார்க்காதீர்கள்.. வாங்காதீர்கள்.. கண்டுகொள்ளாதீர்கள் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தேன். இது எவ்வளவு பெரிய தவறு..? ஆனால் தனியொரு மனிதனாக நான் செய்தது சரி.. இப்படிப்பட்ட குழப்பம்தான் நமக்குள் இப்போதும் இருந்துவருகிறது.

பல கட்சிக்காரர்களின் அனுதாபிகளும் வலையுலகில் இருப்பார்கள். அவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் கட்சியிலும் இப்படிப்பட்ட ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் அவர்களைப் பொருட்படுத்தாமல் கட்சிதான் முக்கியம் என்று நினைத்து கொள்கைகளில் மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நித்தி கட்சிக்காரர் இல்லையே.. கட்சியில் இருந்துகொண்டு கொள்ளையடிப்பவனைப் பற்றிக் கவலைப்படாத சிலர்தான், காவி உடையை மட்டும் தனி கவனம் கொண்டு பறந்து வருகிறார்கள். ஏனெனில் அவர்களும் கட்சிக்காரர்களே..

வலையுலகத்தில் நித்தியானந்தத்திற்கு அடுத்து அதிகமாக சாடப்பட்டுள்ளவர் சாருநிவேதிதா. அவர் செய்த தவறு அவரும் நித்தியை அதீதமாக நம்பியதுதான். மனிதர்களை கடவுளாக்கினால் என்ன நடக்கும் என்பதை இப்போது அவரும் உணர்ந்திருக்கிறார் போலும். ஆனால் அதனை வெளிப்படுத்த நினைத்து அவர் எழுதியிருக்கும் கட்டுரையைப் படித்தபோது வேதனையாக இருந்தது.

தான் தமிழ் மொழியின் குறிப்பிடத்தக்க எழுத்தாளன். என்னை வறுமையால் வாட வைத்து வேடிக்கை பார்க்கிறது இச்சமூகம் என்றெல்லாம் பொங்கியெழும் சாரு இப்போதைய கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் சில வார்த்தைகளைப் பார்க்கின்றபோது நிச்சயமாக இவர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமான எழுத்தாளராகவோ, குருவாகவோ, வழிகாட்டியாகவோ இருக்க சிறிதும் தகுதியில்லாதவர் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இப்படியொரு எழுத்தினை தமிழில் பதிவு செய்யப்படுவதற்கு எந்தவிதத்திலும் தமிழ் மொழி உதவாமலேயே இருந்து தொலைந்திருக்கலாம் என்கிற ஆதங்கம்தான் எனக்குள் தோன்றுகிறது.

இன்றைய வாரமே சாமியார்கள் வாரமோ என்று சொல்லக் கூடிய அளவுக்கு புலனாய்வு பத்திரிகைகள் அத்தனையிலும் சாமியார்களின் நடவடிக்கைகள் பற்றியச் செய்திகள்தான் பிரதானம். டெல்லியில் ஒரு சாமியார் விபச்சார விடுதியே நடத்தியிருக்கிறார். திருச்சி அருகே ஒரு சாமியார் கடவுளின் வரம் கிடைத்த வாழைப்பழத்தை பெண் பக்தர்களுக்கு வாயாலேயே டிரான்ஸ்பர் செய்கிறாராம்.. எங்கேயிருந்துதான் இப்படியெல்லாம் கிளம்புகிறார்கள் என்று தெரியவில்லை.

கல்கி ஆசிரமத்தில் உருண்டை வடிவத்தில் தரப்படும் பிரசாதத்தில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அதை வைத்து எங்களது பிள்ளைகளை கடத்துகிறார்கள் என்ற புகார் நீண்ட வருடங்களாகவே இருந்துவருகிறது. திவாரியின் அக்கப்போர் லீலைகளை அம்பலப்படுத்தியே அதே டிவி சேனல், நேற்றைய முன்தினம் கல்கி ஆசிரமத்திற்குள் நடக்கும் ஓஷோ ஸ்டைல் விஷயங்களை வெளிப்படையாக்க.. அங்கேயும் பிரச்சினைகள்.. கலவரங்கள்..

இந்து மதம் வேரோன்றியிருக்கும் இந்திய நாட்டில் சாமியார்களுக்கும், கடவுள்களுக்கும் பஞ்சமில்லாமல் இருப்பதும், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளும் பெரிது, பெரிதாக வளர்ந்து கொண்டேயிருப்பதும்தான் இதற்குக் காரணம்.

மூன்று வேளையும் சாப்பிட்டே தீர வேண்டும் என்கிற கட்டாயமும், அப்படி சாப்பிட்டதையும் வெளியில் அனுப்பித்தான் தீர வேண்டும் என்கிற நிர்ப்பந்தமும் உள்ள மனித உடலைத் தாங்கிய எவரும் இங்கே கடவுளர் இல்லை என்பதை சராசரி மனிதர்கள் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள். மொழி இந்த சாமியார்களது நாவில் அரசியல்வியாதிகளைவிடவும் அபாரமாக விளையாடுவதுதான் சாமான்யர்களை கவர்ந்திழுக்கக் காரணம்.

ஆறுதல் தேடி கோவிலுக்கு ஓடி வரும் மனிதர்கள் பாரத்தை அங்கே இறக்கி வைத்துவிட்டு அமைதியாக பெருமூச்சுடன் வீடு நோக்கிச் செல்லலாம், இதுவும் கடந்து போகும் என்ற நினைப்பில்.. என்னைப் போலவே..

ஆனால் ஒரு சிலர்தான் இப்படியொரு குறுக்குச் சந்தில் நிற்கும் ஒருவரிடம் உபதேசம் கேட்டு வாழ்க்கையைத் திசை திருப்பிக் கொள்ளலாம்.. மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம் என்றெல்லாம் நினைத்து அங்கே போய் சிக்கிக் கொள்கிறார்கள். மீள்வது சுலபம்தான் என்றாலும் இங்காவது தனக்கு நல்லதொரு ஆறுதல் வார்த்தைகள் கிடைக்கிறதே என்பதால்தான் அவர்கள் மீள்வதில்லை.

குடும்பங்களில் சோகங்களும், சோதனைகளும் ஏற்படத்தான் செய்யும். அத்தனைக்கும் நாம் வருத்தப்பட்டுக் கொண்டே அப்படியே அமர்ந்திருந்தால் வந்த நோய் வாசலைத் தாண்டிப் போகாது. வீட்டுக்குள்தான் இருக்கும். இருப்பதை விரட்டுவதற்கும் அவரவர்க்கு போதிய சக்தியைக் கொடுக்கத்தான் செய்திருக்கிறான் ஆண்டவன். நமக்குள்ளேயே நம்மிடையையே, நம்மின் அருகிலேயே தீர்வுக்கு வழி இருக்கிறது என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

இவருடைய தப்பினால் இவர்கள் மேற்கொண்ட கடவுள் பக்தி என்பது பொய்யாகிவிடாது. எவன் ஒருவன் அனுபவத்தால் இறைவனை உணர்ந்தானோ, அவனே உண்மையான பக்தன். வெறும் வார்த்தைகளாலும், கோஷங்களாலும், பஜனைகளாலும், பாடல்களாலும் இறைவனை நீங்கள் அணுகவே முடியாது. இது நன்கு படித்த மனிதர்களுக்கே புரியாமல் போகிறது.

பக்தி என்பது கடவுளிடம் பக்தன் காட்டுகின்ற தீவிரத்திற்கு மட்டுமல்ல.. கட்சியின் உண்மையான தொண்டனாக இருப்பவன் காட்டுவதும் பக்திதான். உழைக்கின்ற இடத்தில் முழுமையான அர்ப்பணிப்பு நோக்கத்துடன் உழைப்பவன் வெளிப்படுத்துவதும் பக்திதான். குருவின் பேச்சைத் தட்டாமல் செய்து முடிக்கும் சிஷ்யனிடம் உள்ளதும் பக்திதான். இந்த பக்திக்கு மதச் சாயமோ, இனச் சாயமோ தேவையில்லை என்பது எனது கருத்து.

நித்தி இனி ஒதுக்கப்பட்டவர்தான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்த மனிதரை நேசித்தக் குற்றத்திற்காக ரஞ்சிதா இனி வாழ்க்கை முழுவதும் தன்னை எப்படி வைத்துக் கொள்ளப் போகிறார் என்பதுதான் தெரியவில்லை. நித்தி செய்த குற்றத்திற்காக அவருடைய காவி உடையைப் பறித்துவிடலாம். ரஞ்சிதாவிற்கு மீடியாக்கள் இழைத்த கொடுமைக்காக அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்..?