ஆக்கம் - சினிமா விமர்சனம்

07-08-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆதிலட்சுமி பிலிம்ஸ் சார்பில் இ.செல்வம், இ.ராஜா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் சதீஷ் ராவன், டெல்னா டேவிஸ், ரஞ்சித், பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஜி.ஏ.சிவசுந்தர், இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – எல்.வி.கே.தாஸ், நடனம் – ஷோபி, சாந்தி அரவிந்த், சங்கர், ராஜசேகர், சண்டை பயிற்சி – ஃபயர் கார்த்திக், பாடல்கள் – பா.விஜய், இளைய கம்பன், ஈரோடு இறைவன், கானா வினோத், டிசைன்ஸ் – சசி & சசி, மக்கள் தொடர்பு – நிகில், எழுத்து, இயக்கம் – வேலுதாஸ் ஞானசம்பந்தம்.

கதைக் களம் வடசென்னைதான். போலீஸ் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்ட ஒருவரின் மகன்தான் ஹீரோ. இவருடைய அம்மா கஞ்சா விற்கும் வியாபாரி. எதற்கும் அஞ்சாதவர். பையனின் படிப்பை பாதியிலேயே நிறுத்திய புத்திசாலி அம்மா. எதுக்கு சின்னச் சின்னத் திருட்டெல்லாம் செஞ்சிட்டு ஜெயிலுக்கு போற.. அசிங்கமா இருக்குடா.. ஏதாவது பெரிசா கொலை, கொள்ளைன்னு செஞ்சிட்டு உள்ளாற போனீன்னா எனக்கும் பெருமையா இருக்கும்ல என்று மகனுக்கே கிளாஸ் எடுக்கும் அளவுக்கு பாசமான அம்மா.
பையன் அம்மாவின் வளர்ப்பால் எல்லாவிதமான ரவுடியிஸத்தையும் கற்று வைத்திருக்கிறார். திருட்டு, கொள்ளைகளில் ஈடுபட்டு ஜெயிலுக்கு போய் வருகிறார். ஒரு கட்டத்தில் லோக்கலில் இருக்கும் சேட்டு என்னும் நபரிடம் சேர்கிறார். சேட்டு குறிப்பிடும் நபர்களை கொலை செய்வது.. சேட்டு சொல்லும் இடங்களில் கொள்ளையடிப்பது என்று பக்கவாக சேட்டுக்கு கையாளாக செயல்பட்டு வருகிறார்.
தமிழ்ச் சினிமாவின் வழக்கமான பாணியில் இவரையும் ஒரு பெண் காதலிக்கிறார். விரட்டி விரட்டி பின்னாலேயே அலைகிறார். ஆனால் ஹீரோவோ யூஸ் அண்ட் த்ரோவாக ஹீரோயினை பயன்படுத்த வயிற்றில் பிள்ளையை சுமக்கிறார் ஹீரோயின்.
இந்த நேரத்தில் ஹீரோ ஒரு கொலை வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போகிறார். திரும்பி வரும்போது ஹீரோயின் தன் நிலைமையைச் சொல்ல கருவைக் கலைத்துவிடும்படி சொல்லி பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் செல்கிறார்.
இந்த நேரத்தில் ஹீரோ கொலை செய்த ஒரு அபார்ட்மெண்ட் காவலாளியின் சின்ன வயது மகன், ஹீரோவின் கூட்டத்தையே கொலை செய்ய துடியாய் துடிக்கிறான். யாருக்கும் தெரியாமல் கூட்டத்தில் ஒருத்தனை போட்டுத் தள்ள.. பழி வேறு நபர்கள் மீது விழுகிறது.
ஹீரோயின் கருவைக் கலைக்காமல் வைராக்கியமாக பிள்ளையை பெற்றெடுத்து தன்னந்தனியே வளர்க்கிறாள். உதவி செய்ய முன் வருபவர்களிடமும் உதவியைப் பெற்றுக் கொள்ள மறுக்கிறாள்.
ஹீரோவின் நண்பனான அதே பகுதியில் வசித்தவன் இப்போது ஐ.ஏ.எஸ். படித்து முடித்து கலெக்டராக பணியாற்றுகிறான். அவனும் ஹீரோவை திருத்த முனைகிறான். முடியாமல் போகிறது.
சேட்டு மூலமாக பெரிய ஆள்களை கொலை செய்திருப்பதால் போலீஸ் ஹீரோவை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ள முடிவெடுக்கிறது. இதனை பலரும் எச்சரித்தும் ஹீரோ கண்டு கொள்ளாமல் தன்னுடைய அராஜகத்தைத் தொடர… கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் இந்த ‘ஆக்கம்’ படத்தின் திரைக்கதையாக்கம்.
வடசென்னை என்றாலே ரவுடியிஸம் என்றுதான் அர்த்தமா..? அனைத்து இயக்குநர்களும் இதையேதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கருத்தைத் தப்பாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
ஹீரோவாக நடித்த சதீஷ் ராவண் நன்றாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். சந்தேகமேயில்லை. முதல் காட்சியில் அவர் ஆடும் ஆட்டம் அசத்தல்.. அச்சு அசலாக சாவுக்குக் குத்தாட்டம் போடுபவர்களை, அப்படியே மனக்கண்ணில் கொண்டு வந்து காட்டியிருக்கிறார்.
‘சோக்கு’ என்ற பெயருக்கேற்றாற்போல் எதையும் கண்டு கொள்ளாத, கவலை கொள்ளாத இளைஞனாகவும், முரட்டுத்தனமான ஆளாகவும், பாவம், பழி பார்க்காத கொலைகாரனாகவும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்.
துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரே மாதிரியான பேச்சிலும், துளிகூட பயத்தை வெளிக்காட்டிராத தன்மையிலும் படத்தின் கேரக்டருக்கு உண்மையாக நடித்திருக்கிறார் ராவண்.
மீனவப் பெண்ணாக வரும் ஹீரோயின் டெல்னா டேவிஸ் அந்த வயதுக்கே உரித்தான வெட்கத்துடனும், ஆர்வத்துடனும் காதலரைத் தேடியலையும் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். தன்னைப் போலவே தனது தோழியும் ஹீரோவால் பாதிக்கப்பட்டவள் என்பதை அறிந்தவுடன் அவளை சந்தித்து பொறுமித் தள்ளும் அந்தக் காட்சியில் டெல்னா டேவிஸின் நடிப்பு அபாரம்.. இயக்குநரின் இயக்கத் திறமைக்கு இந்த ஒரு காட்சியே சான்று..!
சேட்டிடம் முன்பு வேலை பார்த்து பின்பு தனியே வந்து இப்போது அடிதடி இல்லாமல் திருந்தி வாழும் ரஞ்சித் ஒரு பக்கம்.. இவருடைய ரவுடியிஸம் பிடிக்காமல் ஒரே வீட்டில் இருந்தாலும் தனியே தானே உழைத்துச் சம்பாதிக்கும் அம்மா வடிவுக்கரசி ஒரு பக்கம் என்று குணச்சித்திரத்தில் இருவருமே போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
தனது தந்தையை கொன்றவர்களை பழி வாங்கத் துடிக்கும் அந்தச் சிறுவனின் கதையும், பிள்ளை கொடுக்க இயலாத கணவனால் வஞ்சிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதையும், கூலிக்கு கொலை செய்யும் கும்பலின் போர்க்களக் காட்சிகளும் படத்தில் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன.
படத்தை மிக கவனமாகத்தான் உருவாக்கியிருக்கிறார்கள். மசூதி அருகே சவ ஊர்வலம் வரும்போது தப்பாட்டத்தை நிறுத்தியும், குடியாட்டத்தை நிறுத்தியும் அமைதி காத்து மசூதியை கடந்து செல்லும் காட்சியை படமாக்கியிருக்கும்விதம் சூப்பர்.
ஜி.ஏ.சிவசுந்தரின் ஒளிப்பதிவுக்கு ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையை சமர்ப்பிக்கலாம். அந்த அளவுக்கு அற்புதமாக காட்சிகளைப் படம் பிடித்திருக்கிறார். வடசென்னையை அங்குலம், அங்குலமாக கேமிராவில் பதிவு செய்து நூற்றுக்கும் மேலான காட்சிகளை கொண்ட திரைக்கதையை முழுமையாகப் படமாக்கியதில் பெரும் பங்கு வகித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாராட்டுக்கள் வாழ்த்துகள்.
இதேபோல் படத் தொகுப்பாளர் எல்.வி.கே.தாஸின் உழைப்பில்தான் படமே தேறியிருக்கிறது. அதிலும் கவுன்சிலரின் கொலை செய்யும் காட்சியை தொகுத்து வழங்கியிருக்கும்விதமே பயமுறுத்தியிருக்கிறது.
இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் அனைத்து பாடல்களுமே ஒரு முறை கேட்கும் ரகம்தான். கானா பாடல்கள் அதிகமாக அவ்வப்போது வந்து வந்து செல்வதுதான் ஒரே இடைஞ்சல். ‘சமரசம் வாழும் இடம்’, ‘தண்ணி போட்டா தப்புடா’ பாடல்கள் இளசுகளை கவரும். ‘மலை மேலே நின்னவன் நின்னவன்’ பாடலும், ‘சொல்லச் சொல்ல’ பாடலும் கொஞ்சம் கவனிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையில் அதட்டி, உருட்டி ஓட வைக்கிறார். சேஸிங் காட்சியிலும் கொலையுதிர்க் காட்சிகளிலும் ஒரு பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா.
இத்தனை கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கிய இயக்குநர் சென்னை பாஷையில் மட்டும் ஏன் இப்படி கோட்டைவிட்டார் என்று தெரியவில்லை. பலர் பேசும் வசனங்களே புரியவில்லை. அதிலும் சென்னை பாஷையை பேசி முடித்த பின்புகூட புரியவில்லை. சென்னை போன்ற பெரிய தியேட்டர்களிலேயே இந்தக் கதியென்றால் லோக்கல் தியேட்டர்களில் என்ன ஆகும்..? ஒலிப்பதிவை இன்னமும் திறமையாகச் செய்திருக்கலாம். வசனம் புரிந்தால்தானே கதை புரிந்து படத்தின் மீதான ஈர்ப்பு வரும்..?
‘கத்தியெடுத்தவன் கத்தியால்தான் சாவான்’ என்பதை 101-வது முறையாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். அவ்வளவுதான்.. ஹீரோ படிக்கவில்லை. அவனது அம்மாதான் படிக்கவில்லை. அதனால்தான் அவன் இப்படியானான் என்று சொல்லி கதாநாயகனின் கேரக்டர் ஸ்கெட்ச்சை நியாயப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இத்தனை நடந்தும் சாகும்தருவாயில்கூட தான் செய்த அல்லவைகளை நினைத்து வருத்தப்படாத ஒருவனை ஹீரோவாக நினைக்க முடியவில்லை. இதனாலேயே இந்தப் படத்தை நல்ல படம் என்று சொல்ல முடியவில்லை. ஆனால், மிகக் கடுமையான உழைப்பில் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்பது மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரிகிறது. அந்த உழைப்புக்கு நமது பாராட்டுக்கள்..!

0 comments: