வேலையில்லா பட்டதாரி-2 - சினிமா விமர்சனம்

13-08-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கலைப்புலி எஸ்.தாணு தன்னுடைய வி கிரியேஷன்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.
தனுஷ், அமலாபால், கஜோல், சமுத்திரக்கனி, மீரா கிருஷ்ணன், விவேக், இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சமீர் தாஹிர், இசை – ஷான் ரோல்டன், அனிருத், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, கலை – சதீஷ்குமார், சண்டை பயிற்சி – அனல் அரசு, உடைகள் – பூர்ணிமா ராமசாமி, மாலினி பானர்ஜி, ஒலிப்பதிவு – தபஸ் நாயக், இணை தயாரிப்பு – டி.பரந்தாமன், ஏ.கே.நட்ராஜ், கதை, வசனம் – தனுஷ், திரைக்கதை, இயக்கம் – செளந்தர்யா ரஜினிகாந்த்.

‘வேலையில்லா பட்டதாரி’யின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இந்தப் படமும் தொடங்குகிறது. முதல் பாகத்தில் காதலியாக இருந்த அமலாபால் இப்போது தனுஷின் மனைவியாக இருக்கிறார்.
சமுத்திரக்கனி, தம்பியுடன் அதே வீட்டில் இருக்கிறார் தனுஷ். பெண்ணில்லாத அந்த வீட்டில் தானே பொறுப்பான அம்மாவாக இருக்கிறார் அமலாபால். இப்போது அனிதா கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்கிற கட்டுமான நிறுவனத்தில் வடிவமைப்பு பொறியாளராக பணியாற்றி வருகிறார் தனுஷ். அதே லூனா மொபெட்டில்தான் வேலைக்குச் சென்று வந்து கொண்டிருக்கிறார்.
ஒரு நட்சத்திர ஹோட்டலில் அந்த ஆண்டிற்கான சிறந்த கட்டிடக் கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. அதில் ஒரு விருதைத் தவிர மற்ற அனைத்து விருதுகளையும் வசுந்த்ரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனமே பெறுகிறது. சிறந்த பொறியாளருக்கான விருது மட்டும் தனுஷுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் தனுஷுக்கு பதிலாக அனிதா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தின் எம்.டி. அனிதா அந்த விருதைப் பெற்றுக் கொள்கிறார்.
கஜோலுக்கு இது அதிர்ச்சியாகிறது. தனுஷை பற்றி விசாரிக்கிறார். அவரை தன்னுடைய நிறுவனத்திற்கு இழுக்கும்படி தனது அலுவலக அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அனிதா கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் அதிபரே தனுஷிடம் கஜோலை சென்று சந்தித்து மரியாதை நிமித்தமாக பேசிவிட்டு வரும்படி சொல்ல.. தனுஷ் கஜோலை சந்திக்கிறார்.
கஜோலோ தனுஷை நிமிர்ந்துகூட பார்க்காமல், உடனேயே தனது நிறுவனத்தில் சேரும்படியும், மற்ற விஷயங்களை ஹெச்.ஆர். மேனேஜரிடம் கேட்டுக் கொள்ளும்படியும் சொல்ல.. தனுஷுக்கு கோபம் வருகிறது. தனக்கு எந்த வேலையும் வேண்டாம் என்றும், தானும் தனது பொறியியல் நண்பர்களும் சேர்ந்து தனி கம்பெனியை ஆரம்பிக்கப் போவதாகச் சொல்லிவிட்டுப் போகிறார்.
மிகப் பெரிய தொழிலதிபரான செட்டியார் என்றழைக்கப்படும் ஜி.எம்.குமார் தான் கட்டப்போகும் கல்லூரிக்கான பில்டிங்கை கட்டிக் கொடுக்கும்படி வசுந்த்ரா கன்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். அவர்கள் கொடுத்த பிளான் புரியவில்லை என்பதால் நேரில் வந்து விளக்கம் சொல்லும்படி சொல்கிறார்.
கஜோல் வேண்டாவெறுப்பாக விளக்கமளிக்க நேரில் வர அங்கே அனிதா கன்ஸ்ட்ரக்சன்ஸ் சார்பில் அதன் தலைவரும், கூடவே தனுஷும் அங்கேயிருப்பதை பார்த்து கடுப்பாகிறார் கஜோல். இந்தக் கோபத்தில் தன்னுடைய பிளானை ஆங்கிலத்தில் பொரிந்து தள்ளிவிட்டு அமைதியாகிறார் கஜோல். ஆனால் தனுஷ் தன்னுடைய நிறுவனத்தின் பிளானை அழகுத் தமிழில் எளிமையாக எடுத்துரைக்க திட்டம் தனுஷின் நிறுவனத்திற்கே கிடைக்கிறது.
இதனால் மிக, மிக கோபத்தின் உச்சத்திற்கே போகும் கஜோல் தனுஷையும், அவர் வேலை பார்க்கும் நிறுவனத்தையும் அழிக்க நினைக்கிறார். அவர் நினைத்தது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.
தனுஷ் தனது தோற்றத்திற்கும், நடிப்புக்கும் ஏற்ற கேரக்டர்களை தொடர்ந்து செய்து வருகிறார். இதுதான் அவரது வெற்றிக்கான காரணம். சண்டை காட்சிகளைத் தவிர்த்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் நிச்சயமாக யதார்த்தமானது. நடிப்பும் கை வந்த கலையாய் அவருக்கு கை கொடுத்து வருகிறது.
கஜோலிடம் சவால்விடும் தனுஷைவிடவும் ஒவ்வொரு தவறுக்கும் தனது மனைவியிடம் மாட்டிக் கொண்டு அல்லல்படும் தனுஷையே அனைவருக்கும் பிடிக்கும். அமலாபாலின் சிடுசிடு என்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கும், தொண தொண பேச்சுக்கும் தனுஷ் கொடுக்கும் கவுண்ட்டர் பாயிண்ட் வசனங்களும் அட்டே போட வைக்கின்றன.
கஜோலிடம் தான் ஒரு ரகுவரன் என்பதை நிரூபிக்கும் சில காட்சிகளிலும், இறுதியான கிளைமாக்ஸில் லாஜிக்கே பார்க்க முடியாதபடிக்கு திரைக்கதை அமைத்து அதில் யதார்த்தமாக இருவரும் உரையாடி பழகும் காட்சியிலும் தனுஷை மறக்கடிக்க வைத்துவிட்டார் அவருக்குள் இருந்த ரகுவரன்.
‘அழகான மனைவி.. அன்பான துணைவி…’ என்கிற கேரக்டருக்கு அமலாபால் நச் என்று பொருந்தியிருக்கிறார். குடித்துவிட்டு வரும் கணவனை வார்த்தைகளால் துளைத்தெடுப்பதும், மார்க்கெட்டுக்கு போய்விட்டு லேட்டாக வருபவனை வாசலிலேயே பொரிவதும்.. பக்கத்து காம்பவுண்டில் இருக்கும் தனது அம்மாவிடம் திடீர் பாசமாக பேசுவதும்.. அந்த நேரத்தில் அமலாபால் ரசிக்கவே வைத்திருக்கிறார். இடைவேளைக்கு பின்பும் சில காட்சிகள் இன்னுமும் லேடீஸ் சென்டிமெண்ட்டுக்காக காட்சிகளை வைத்திருக்கலாம்.
‘மின்சார கனவு’ பேபி காஜல் மிரட்டியிருக்கிறார். முதலில் சாதாரணமாகவே துவங்கும் காஜல், தனுஷை பார்க்காமலேயே வேலைக்கு வந்து ஜாயிண்ட் செய்து கொள்ளும்படி சொல்லும் அலட்சியத்தை அசால்ட்டு லட்சுமியாக செய்திருக்கிறார்.
பணக்காரத் திமிர், அதிகார போதை, தெனாவெட்டான பேச்சு, அரசியல்வாதிகளைக்கூட கைக்குள் வைத்திருக்கும்விதம்.. எல்லாமும் சேர்ந்து ஒரு பெண்ணை இத்தனை இளம் வயதிலேயே இப்படியொரு பிஸினஸ் மேக்னடிக்காக்க உருவாக்கியிருக்கிறது என்பதை திரைக்கதையில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் செளந்தர்யா. இதுவே கஜோலின் கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு பலம் கொடுத்திருக்கிறது.
கஜோலுக்கான உடைகளை வடிவமைத்த அந்தக் கலைஞருக்கு நமது வாழ்த்துகள், பாராட்டுக்கள். கஜோலை கெத்தாக காட்டியதில் ஐம்பது சதவிகிதம் அவர் அணிந்திருந்த ஆடைகள்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
சென்னையில் வந்த வெள்ளக் காட்சியை சமயோசிதமாக இதில் பயன்படுத்தியிருக்கும் இயக்குநர் செளந்தர்யா, கஜோலின் நடிப்பை இயல்பாகவே வெளிக்கொணர்ந்திருக்கிறார். உண்மையாக மென்மையான திரைப்படமாக இதன் முடிவு அமைந்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம். ஆனால் அனைவரையும் கவரும்வகையில் படம் இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி வைத்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறோம்.
சமுத்திரக்கனியும் அவ்வப்போது மனைவியிடம் நல்ல பெயர் வாங்குவது எப்படி என்று மகனுக்கு அட்வைஸ் செய்கிறார். ஒவ்வொரு முறை பல்பு வாங்கியும் திரும்பத் திரும்ப அட்வைஸ் செய்து குடும்பஸ்தனாக இருக்கும் கணவன்கள் கஷ்டப்படுவதை போல காட்டுவது ஏன் என்றுதான் தெரியவில்லை.
அதேபோல் படத்தின் இடைவேளைக்கு பின்னான திரைக்கதை அமைப்பில் கொஞ்சம் மாற்றம் செய்திருந்தால் நன்றாக இருக்குமோ என்ற எண்ணமும் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
அந்த சதுப்பு நிலத்தில் கட்டப்படவிருக்கும் தீம் பார்க் விஷயத்தில் ஷரவண சுப்பையாவுக்கும், கஜோலுக்கும் இடையில் சண்டை வர.. இப்போது தனுஷ் கஜோலை காப்பாற்ற களத்தில் குதித்து.. காப்பாற்றியும்விட.. இதனால் கஜோலுக்கு தனுஷ் மீது கோபமெல்லாம் மறைந்து நட்பு துளிர்விடுவதாக செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இதற்கான திரைக்கதையை ஷரவண சுப்பையாவின் முகத்தில் அக்ரிமெண்ட் பேப்பர்களை கஜோல் வீசியெறியும் காட்சியிலிருந்தே துவக்கியிருக்கலாம். தனுஷின் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்திருக்கும். மிஸ் செய்துவிட்டார் திரைக்கதை ஆசிரியர் செளந்தர்யா ரஜினிகாந்த்.
படத்தின் துவக்கத்தில் காட்டப்படும் கஜோலை பார்க்க பகீரென்று இருந்தது. அந்த அளவுக்கு ஒளிப்பதிவு மிகவும் டல். போகப் போக கொஞ்சம், கொஞ்சமாகத்தான் ஒளிப்பதிவு பிரைட்டாக ஒளிர்ந்தது. ஆனால் இடைவேளைக்கு பின்பு மறுபடியும் டல்லு. என்னதான் ஆச்சு ஒளிப்பதிவாளருக்கு..?
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் தேறவில்லை என்பதுதான் உண்மை. நாடகத்தனமான சில பின்னணி இசையையும் போட்டுக் கொடுத்து தேற்றியிருக்கிறார். தனுஷ் தனது அடுத்தப் படத்துக்கு அனிருத்தை நாடுவதுதான் சிறந்த வழி.
சதுப்பு நிலத்தில் கட்டப்படவிருக்கும் தீம் பார்க்கை எதிர்த்து தனுஷ் அண்ட் டீம் நடத்தும் போராட்டத்திற்கு உடனடியாக நீதி கிடைக்கிறது என்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தான் முடியும். இதை இன்னும் கொஞ்சம் விளக்கமாகவே காட்டியிருக்கலாம்.
குடும்பம் மொத்தமும் ரசித்துப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே கொஞ்சம் சென்டிமெண்ட், கொஞ்சம் ஹீரோத்தனம், கொஞ்சம் வில்லித்தனம் என்று பலவற்றையும் கலந்து வழங்கியிருக்கிறார்கள்.
அதோடு மட்டுமில்லாமல், படம் நெடுகிலும் வள்ளுவப் பெருந்தகையின் ‘திருக்குறளில்’ இருந்து பல குறட்பாக்களை எடுத்து, கச்சிதமாக தேவைப்படும் இடங்களிலெல்லாம் பயன்படுத்தியிருக்கும் இந்த அரிய சிந்தனைக்காக இயக்குநரையும், கதாசிரியரையும் மனதாரப் பாராட்டுகிறோம்.
பார்க்கலாம்தான்..!