சதுர அடி 3500 - சினிமா விமர்சனம்

06-08-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தில் நிகில்,  ஆகாஷ் என்ற இரு புதுமுகங்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். இனியா ஹீரோயினாக நடித்திருக்கிறார். ரகுமான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும்  சுவாதி தீக்ஷித், மேக்னா முகேஷ், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, ‘தலைவாசல்’ விஜய், பிரதாப் போத்தன், பரவை முனியம்மா, ‘பெசன்ட் நகர்’ ரவி, இயக்குநர் ஷரவண சுப்பையா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – பிரான்ஸிஸ், இசை – கணேஷ் ராகவேந்திரா, கலை – ஜனார்த்தனன், படத் தொகுப்பு – ஆர்.ஜி.ஆனந்த், சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், நடனம் – ஸ்ரீதர், டிசைன்ஸ் – சபீர், ஸ்டில்ஸ் – பாக்யா, மக்கள் தொடர்பு – யுவராஜ், தயாரிப்பு – ஜாய்ச்மோன், வெளியீடு – ஆர்.பி.எம். சினிமாஸ், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –ஜாய்சன்.

பில்டிங் காண்ட்ராக்டரான ஆகாஷ் தான் கட்டிக் கொண்டிருக்கும் அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தூக்கில் தொங்குவதோடு படம் துவங்குகிறது. படத்தின் கடைசிவரையிலும் இதேபோல் கதையும், திரைக்கதையும் தூக்கில் தொங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
ஆகாஷின் வழக்கை விசாரிக்க ஸ்பெஷல் டூட்டியில் வருகிறார் சப் இன்ஸ்பெக்டரான ஹீரோ நிகில். வழக்கை விசாரித்த தருணத்தில் பல இடங்களில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் கண்களுக்கு ஆகாஷ் தென்படுகிறார். இது நிகிலுக்கு குழப்பத்தைத் தருகிறது.
இடையில் நிகிலுக்கும், மேக்னா முகேஷுக்கும் இடையிலான காதலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த வழக்கை முடித்துவிட்டுத்தான் கல்யாணம் என்று உறுதியாய் நிற்கிறார் நிகில். ஆகவே இந்த வழக்கு முடிவுக்கு வந்தாக வேண்டிய கட்டாயம் அவருக்குள் ஏற்படுகிறது.
வழக்கை மேலும் விசாரிக்கத் துவங்க.. இது ஆகாஷ் காதலித்த இனியாவிடம் போய்ச் சேர்கிறது. இனியாவின் குடும்பத்தாரிடம் விசாரிக்க.. இனியாவை பெண் பார்க்க வந்த அத்தனை பேரின் கண்களுக்கும் ஆகாஷ் ஆவியாகத் தோன்ற அனைவருமே சொல்லி வைத்தாற்போல் இனியாவை வேண்டாம் என்று சொல்லிவிட்டுப் போனதாகத் தெரிகிறது.
இதுவரையிலும் மற்றவர்களின் கண்களுக்குத் தெரிய வந்த ஆகாஷ் இப்போது நிகிலின் கண்களுக்கே தெரிகிறான். இதை நம்ப முடியாமல் திகைக்கிறான். இன்னொரு பக்கம் இந்த வழக்கை சீக்கிரமாக முடித்தாக வேண்டும் என்று காவல்துறையின் மேலிடம் பிரஷ்ஷர் கொடுக்கிறது.
கடைசியாக ஆகாஷ் புதைக்கப்பட்ட கல்லறையைத் தோண்டி பார்க்க அங்கே திடுக்கிடும் திருப்பம் ஏற்படுகிறது.  ஆகாஷ் உயிருடன் இருப்பதை அறியும் நிகில் அவன் ஏன் இறந்தவனாக நடிக்க வேண்டும்..? அவனது இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று கண்டறிய முற்படுகிறார்..? கடைசியில் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படமே..!
ஒரு திரைப்படம் முழுமையாக உருவாகிறது என்றால் அதில் கதை, திரைக்கதை தெளிவாக இருக்க வேண்டும். எதற்காக எந்தக் கருத்தை மையப்படுத்தி படத்தினை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதையாவது பார்வையாளர்களுக்கு உணர்த்த வேண்டும்.
நில மோசடி செய்யும் கும்பல்கள் பற்றியும், அதில் இருக்கும் ஏமாற்று வேலைகள் பற்றியுமான திரைப்படம் என்றால் அதை ஆழமாக படத்தில் சொல்லப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் பேய்ப் படம் என்றால் அதற்கான விஷயங்களும் படத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இது இரண்டுமில்லாமல் இரண்டையும் கலந்து குழப்பியடித்து ஏதோ தங்களால் முடிந்த அளவுக்கு படத்தினை இயக்கி ஒரு திரைப்படமாக கொண்டு வந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெய்சன். இயக்குதலில் பல சோடைகள் இருப்பதினால் படம் முழுவதுமே ஏதோ அரைகுறை இயக்கத்தில் உருவான படம் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிந்தது.
துவக்கத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் ரகுமான் அடுத்த காட்சி முடிந்தவுடன் ஆளையே காணோம். அவரை எதற்காக இதில் திணித்தார்கள் என்று தெரியவில்லை. ஹீரோவை மையப்படுத்திய படம் என்றாலும் ரகுமான் அவரது உயரதிகாரியா அல்லது சமமான அதிகாரியா என்பதும் சொல்லப்படாமல் விசாரணை கோணங்கள் அமைக்கப்பட்டிருப்பதில் சிரிப்புதான் வருகிறது.
ஹீரோ நிகிலுக்கு இதுதான் முதல் படம் என்று நினைக்கிறோம். தன்னால் முடிந்த அளவுக்கு, இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ஏற்றாற்போல் நடித்திருக்கிறார். மேற்கொண்டு எதுவும் சொல்வதற்கில்லை.
இரண்டு நாயகிகள் என்றாலும் இனியாவுக்கு மெயின் கேரக்டர். அவரும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதோடு தனது பங்களிப்பை முடித்துக் கொண்டார். நடிப்பதற்கேற்ற திரைக்கதை இருந்தும் காட்சிகள் இல்லாததால் இவரும் கவரவில்லை.
இடையிடையே கிச்சுகிச்சு மூட்டுவதுபோல ஆவியாக வந்து மிரட்டுகிறார் ஆகாஷ். தன்னை கொலை செய்ய முயற்சித்த கும்பலின் செயலை சொல்லும் பிளாஷ்பேக்கில்கூட ஒரு நடிப்பு இல்லாமல் சப்பென்று இருப்பது கர்ண கொடூரம்.
கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், மற்றும் இனியாவை காதலிக்கும் மெக்கானிக் என்று இந்த மூன்று பேரை மட்டுமே கொஞ்சம் கவனிக்க முடிகிறது. அதிலும் எம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் மட்டுமே நடிப்பு என்ற வஸ்து வெளிப்பட்டிருக்கிறது.
மெயின் வில்லன் வேடத்தில் நடித்திருப்பது பிரதாப் போத்தன் என்பதே கடைசியில்தான் தெரிகிறது. ஒரு குளோஷப் ஷாட்கூட இல்லாமல் நடிக்க வைக்காமலேயே அவரை இப்படியும், அப்படியுமாய் நடக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
இதேபோல் ‘தலைவாசல்’ விஜய்யும் ஒரு பயப்படும் கேரக்டராக அதுவும் போலீஸ் உயரதிகாரியாக இருந்து கொண்டு பேய், பிசாசுக்கு பகுத்தறிவே இல்லாமல் பயப்படும் கேரக்டர் ஸ்கெட்ச்சில் நடித்து இம்சை  செய்திருக்கிறார். 
கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் திரையில் ஒலித்தன. பின்னணி இசை ரொம்பவே சுமார்தான். பிரான்சிஸின் டல்லடிக்கும் ஒளிப்பதிவு படத்தின் பட்ஜெட்டை காட்டிவிட்டது.
சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படம் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் திரும்பித் திரும்பி சொன்ன இயக்குநர் இதில் என்ன திரில்லரும், திகிலும் இருக்கிறது என்பதை சொன்னால் நன்றாக இருக்கும்.
எத்தனையோ சிறந்த படங்கள் இதே பாணியில் இதற்கு முன் வந்திருக்கின்றன. அதையெல்லாம் இயக்குநர் பார்த்திருந்தால் நிச்சயம் இப்படியொரு படத்தைக் கொடுத்திருக்க மாட்டார். திரைக்கதையை ரசனையாக, சுவாரஸ்யமாக படமாக்காமல் தவறியிருப்பது படத்திற்கு மிகப் பெரிய பலவீனம். 
என்னதான் கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதையும், நடிப்பும், இயக்கமும் ஒன்று சேரவில்லையெனில் எதையுமே ரசிக்க முடியாது என்பதற்கு இந்தப் படமும் ஒரு மிகப் பெரிய உதாரணமாகிவிட்டது..!
இயக்குநருக்கு நமது ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!

0 comments: