09-05-2015
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
புதிதாக நடிப்புத் துறைக்குள் நுழைய விழைபவர்களும், தயாரிப்புப் பணிகளை மேற்கொள்பவர்களும் மிகக் குறைந்த முதலீட்டில் போட்ட காசு வந்தால் போதுமே.. முயற்சி செய்து பார்ப்போமே என்று நினைத்து உழைத்தால் சேதாரம் அடைந்தாலும் அடையாத்துபோலவே நினைத்து கரையேறலாம்.. இப்படியொன்றை நினைத்துத்தான் இந்தப் படக் குழுவினரும் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்கள் என்று நினைக்கிறோம்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க.. வனிதாவின் கணவரான நடன இயக்குநர் ராபர்ட் தானே மெயின் ரோலில் நடித்து இயக்கியிருக்கும் படம் இது. தலைப்பு வித்தியாசமாகவும், ஈர்ப்பாகவும் இருக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் ஒரேயொரு சிறப்பம்சம்.
ராபர்ட், சுரேஷ், மனோஜ், கும்கி நால்வரும் அந்த சின்ன பேட்டையில் இருக்கும் நண்பர்கள். என்ன வேலை செய்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் ஒன்றாக இருக்கும்போது கண்ணம்மா என்ற திருநங்கையின் கடையில் சாப்பிட்டுவிட்டு பொழுதைக் கழிப்பவர்கள்.
நண்பர்களில் ஒருவரின் தாய்க்கு இதயக் கோளாறு ஏற்பட மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். ஆபரேஷனுக்குத் தேவையான பணத்தைப் புரட்டுவதற்குள் அவர் இறந்து போய்விட.. இப்போது இந்த நண்பர்கள் நால்வருக்கும் பணத்தின் மீதான அருமையும், தேவையும் புரிகிறது. எதைச் செய்தாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஒரு நாள் இரவில் டாஸ்மாக் சரக்கின் புண்ணியத்தில் டிஸ்கஷன் நடத்தும்போது ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட முடிவெடுக்கிறார்கள். அதனைச் செயல்படுத்தப் போகும் இடத்தில் தங்களது முகம் தெரியாமல் இருக்க எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போஸ்டர்களை முகத்தில் போட்டுக் கொண்டு செல்கிறார்கள்.
அதே நேரம் ஏடிஎம்மில் பணத்தை வைக்க ஏஜென்ஸிக்காரர்களும் அங்கே வர.. இரு தரப்பினருக்கும் கை கலப்பாகிறது. பணத்தையும் திருடிவிட்டு ஏஜென்ஸி சார்பாக அங்கே வந்திருந்த அதிகாரி நிரோஷாவையும் கடத்திக் கொண்டு செல்கிறார்கள்.
விடிந்த பின்பு ஊரே அல்லலோகப்பட ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்த எம்.ஜிஆர். சிவாஜி, ரஜினி, கமல் மாஸ்க்குகள் பெரிதாகப் பேசுகின்றன. போலீஸும் தீவிரமாக யோசித்து ஒரு அப்பாடக்கர் லேடி துணை கமிஷனரான ஐஸ்வர்யாவை இந்தக் கேஸை துப்புத் துலக்க நியமிக்கிறது. தன்னுடைய ஜீப் டிரைவரை மட்டும் துணைக்கு வைத்துக் கொண்டு, இந்த கேஸை துப்புத் துலக்க கிளம்புகிறார் ஐஸ்வர்யா.
அதே நேரம் நிரோஷா அவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்காமல், அந்தக் கொள்ளையில் தனக்கும் பங்கு வேண்டும் என்கிறார். இவர்களை விரட்டிப் பிடிக்கும் ஐஸ்வர்யா அந்தக் கொள்ளையில் தனக்கும் பங்கு கொடுத்தால் அவர்களை உயிருடன் விட்டுவிடுவதாக பேரம் பேசுகிறார். இதற்கிடையில் இவர்களிடமிருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டுவிட.. அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள்.
கொள்ளையர்களான இவர்களிடமிருந்தே கொள்ளையடித்தது யார்..? எதற்காக..? என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
ராபர்ட்டே இயக்கியிருப்பதால் அதிலும் முதல் படமாகவும் இருப்பதால் நத்தை வேகத்தில் நகர்கிறது படம். இதனாலேயே பல இடங்களில் சுவாரஸ்யம் கெட்டுப் போய் கொட்டாவிதான் வருகிறது. இயக்கமும் சில இடங்களில் சொதப்பலாக டயலாக் டெலிவரிக்கே டைம் லேப்ஸாகி வசனங்கள் சவசவ என்று சொல்லப்படுகின்றன. ஐஸ்வர்யாவின் முணுக் கோபமெல்லாம் ஓவர் ஆக்டிங்காக மாறி நம்மை இம்சைப்படுத்துகிறது.
ஒரு வெற்றிப் படத்திற்கான கதைக்களம் இதில் இருந்தும் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாததும், ஈர்ப்பான இயக்கம் இல்லாமையாலும் படத்தினை முழுமையாக ரசிக்க முடியவில்லை.
படத்தின் ஒரேயொரு ஆறுதல் திருநங்கையாக நடித்திருக்கும் ராம்ஜிதான். அசத்தியிருக்கிறார். தோற்றம், நடை, உடை, பாவனை அனைத்துமே அப்படியே திருநங்கைகளை உரித்து வைத்திருக்கிறது. கண்ணாலேயே ஏமாற்றி, காதல் செய்து.. கல்யாணம் செய்யும் ஆசையுடன் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் சர்ச்சில் செய்யும் குட்டிக் கலாட்டாக்கள் பெரிதும் ரசிக்கப்படும்..! இதுபோல ராம்ஜி வரும் காட்சிகளெல்லாம் ரசனையாவைதான். ஆனால் இது ஒன்றே இந்தப் படத்தை வெற்றி பெறவும், பேசப்படவும் வைக்காதே..?!
ராபர்ட்டின் ஆடலும், பாடலும் சிறப்புதான். அதிலும் சந்திரபாபு ஸ்டைலில் பாடும் பாடலும், ஆடும் ஆட்டமும் அந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமாக ரசிக்க்க் கூடியதாக இருந்தது. ஆனால் மற்றவைகள்..?
காதல் பாடல்களை படமாக்கியிருந்தாலும் படத்தின் ஸ்பீடு குறைகிறதே என்று நீக்கிவிட்டார்களாம். தவறான முடிவு. அந்த காதல் பாடல்கவை வைத்திருந்தால் அதுவே ரசிகர்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸினை கொடுத்திருக்கும்..!
அடுத்த முறை இன்னமும் சிறப்பான படத்தினை கொடுக்க இயக்குநர் ராபர்ட்டை வாழ்த்துகிறோம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment