36 வயதினிலே - சினிமா விமர்சனம்

18-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இதுவரையிலும் இந்தியாவை ஆட்சி செய்த 14 பிரதமர்களில் ஒரேயொருவர்தான் பெண். ஜனாதிபதி மாளிகையில் ரப்பர் ஸ்டாம்ப்பாக ஆட்சி புரிந்த 13 ஜனாதிபதிகளில் ஒருவர்தான் பெண். சுதந்திரம் அடைந்த இத்தனையாண்டுகளில் 15 பெண் முதலமைச்சர்கள்தான் ஆட்சியில் இருந்திருக்கின்றனர்.
பெண்களுக்கான கதவுகள் திறந்திருந்தும் யார் அவர்களை உச்சத்திற்கு வரவிடாமல் தடுப்பது..? ஒரு குடும்பத்தையே திறம்பட நிர்வகிக்கும் திறன் கொண்ட பெண்கள் அதிகமாக நாட்டின் பொறுப்பேற்க.. பொது வாழ்க்கைக்கு வர.. எத்துறையிலும் முதலிடத்திற்குள் ஏன் வர முடியவில்லை..?
இந்தக் கேள்விக்கான விடையைத் தேடித்தான் இந்தப் படத்தின் ஹீரோயின் வசந்தியும் செல்கிறாள். விடை கிடைத்ததா என்பதுதான் படத்தின் ரத்தினச் சுருக்கமான கதை.

தமிழ்ச் சினிமாவுக்கு மிகவும் புதிய கதை. மலையாளத்தில் ‘How old are you’ என்ற பெயரில் வெளிவந்தபோதே நாடு முழுவதிலும் கவனத்தை ஈர்த்த படம் இது. பெண்களின் முன்னேற்றத்தைத் தடுப்பது யார் என்கிற கேள்வியைவிடவும், பெண் தனக்குள் இருக்கும் திறமைகளை ஏன் வெளிக்காட்டாமல் இருக்கிறாள் என்கிற கேள்வியைத்தான் இந்தப் படம் அதிகம் பேசியிருக்கிறது. முன் வைத்திருக்கிறது என்றே நினைக்கிறோம்.
சுயநலமிக்க கணவன்.. தன்னைப் புரிந்து கொள்ள முயலாத மகள்.. வீட்டில் இருக்கும் மாமனார், மாமியாரையும் கவனிக்க வேண்டிய சூழல்.. இதனாலேயே அலுவலக வேலையில் முழுமையாக ஈடுபட முடியாத சூழல் என்று ஒரு மந்தமான வாழ்வியலில் உழன்று கொண்டிருக்கும் சாதாரணமான கலெக்டர் ஆபீஸ் கிளார்க் வசந்தா.
கல்லூரி காலங்களில் மாணவிகளை ஒன்று திரட்டி கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்தி ஜெயிக்க வைத்த இதே வசந்திதான் இன்றைக்கு அமைதியின் திருவுருவமாக தாங்க முடியாத மன அழுத்தத்துடனும், சகிப்புத்தன்மையுடன் வாழ்கிறாள்.
தனது பெற்றோர்களை பற்றியே கவலைப்படாமல் தான் அயர்லாந்துக்கு சென்றே ஆக வேண்டும் என்று துடிக்கிறான் கணவன். வீட்டில் வயதான அம்மா, அப்பா இருக்கிறார்களே என்கிற சிறு கவனம்கூட இல்லாமல் தன்னைப் பற்றி மட்டுமே கவலைப்படும் அவனை இன்னமும் நேசிக்கிறாள் வசந்தி.
கவனக்குறைவால் காரை ஓட்டி ஒரு சிறுவனின் காயத்திற்கு காரணமாகும் கணவனைக் காப்பாற்ற தான் கார் ஓட்டியதாகச் சொல்லி தண்டனைக்குட்பட முன் வருகிறாள் வசந்தி. ஆனால் காலாவதியான லைசென்ஸ் நிலைமையைச் சிக்கலுக்குள்ளாக்க மேலும் கணவனின் கோபத்திற்குள்ளாகிறாள்.
இந்த நேரத்தில் தன் பெண்ணிடம் எப்போதோ சொன்ன ஒரு கேள்வியை அவள் தனது பள்ளிக்கு வந்த இந்திய ஜனாதிபதியிடம் கேட்க.. இதைக் கேட்டுவிட்டு இன்ப அதிர்ச்சியான ஜனாதிபதி அவளது தாய் வசந்தியை சந்திக்க விரும்புகிறார். வசந்தி பயத்துடன் ஜனாதிபதியை சந்திக்கும் நேரத்தில் உயர்ரத்த அழுத்தத்தினால் மயங்கி விழுந்துவிட இதுவே நாடு முழுவதிலும் கேலிக்குரியதாகிறது.
ஒரு பக்கம் தன் முகம் நாடு முழுவதிலும் தெரிந்தாலும் இப்போது அது கேலிக்குட்பட்டதாக இருப்பதால் வருத்தப்படும் வசந்தியை தனியே விட்டுவிட்டு கணவன் தன் மகளை அழைத்துக் கொண்டு அயர்லாந்து செல்கிறான்.
இங்கே மாமனார், மாமியாரோடு தனித்து நிற்கும் வசந்தியை சந்திக்கும் அவளது கல்லூரி தோழி, பழைய வசந்தி எங்கே என்று ஒரு கேள்வி கேட்டு உசுப்பிவிட.. தன்னைக் கேட்க அருகில் ஆளில்லை என்கிற நிலைமையில் தான் நினைத்ததையெல்லாம் செய்ய நினைக்கிறாள் வசந்தி.
செய்து முடித்தாளா..? தனக்கான தனித்துவத்தைப் பெற்றாளா..? வசந்தி என்ற பெயருக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டாளா என்பதுதான் மீதமிருக்கும் படத்தின் கதை.
குடும்பம் மட்டுமே முக்கியம் என்கிற ஒற்றை விஷயத்துடன் மல்லுக்கட்டி வரும் இந்திய சமூகத்தில் பெண்கள் எப்பேர்ப்பட்ட பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் வீட்டுக்குள் வந்தால் அவர்கள்தான் குடும்பத் தலைவியாகவும், பொறுப்பான அம்மாவாகவும், மனைவியாகவும், மகளாகவும், மருமகளாகவும் இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இதனாலேயே இவர்களது தனிப்பட்ட சாதனைகள் அனைத்தும் கேள்விக்குரியதாகவே போய்விடுகின்றன.
அத்திப்பூத்தாற்போலத்தான் ஒரு சிலர் தங்களது வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து மற்றவர்களுக்கு அடையாளமாகத் திகழ்கிறார்கள். அப்படியொரு அடையாளமாக இந்த வசந்தியிருக்கிறாள் என்பதுதான் படம் காட்டியிருக்கும் செய்தி.
அடித்து, உதைத்து, துன்புறுத்தி சித்ரவதை செய்தவர்தான் கொடுமையான கணவர்கள் என்றில்லை. குடும்பம் பற்றி கவலையில்லாமல் தான்தோன்றித்தனமாக தன் சுயநலம் சார்ந்து பேசும் இந்த வசந்தியின் கணவர்கூட ஒரு டெர்ரரிஸ்ட் கணவர்தான்.  போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பும்போது ஜோதிகாவும், ரகுமானும் பேசிக் கொண்டே வரும் அந்த நீளமான ஷாட்டுதான் இந்தப் படத்தின் அடித்தளம்.
தனது குடும்பப் பொறுப்பை எத்தனை முறை சொல்லியும் எதையும் காதில் வாங்காமல் அக்கறையில்லாமல் பேசும் அந்தக் கணவனை ஏன் வசந்தி கடைசிவரையிலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை..
பெண்கள் தங்களுக்குள் இருக்கும் ஒரு சிறப்பு தகுதியை வளர்த்து அதன் மூலம் பெரிய ஆளாகலாம் என்று அடித்துச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ். ஆர்கானிக் அக்ரிகல்ச்சர் என்றழைக்கப்படும் இயற்கை விவசாயம் முறையை வீட்டிலேயே செய்து அதன் மூலமும் தொழில் செய்யலாம். குடும்பத் தேவையையும் பூர்த்தி செய்யலாம் என்று ஒருவித புத்திசாலித்தனமான கான்செப்ட்டை இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியதற்காக இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்..!
வெற்று வெளியாக இருக்கும் மொட்டை மாடியில் சின்னஞ்சிறிய இடத்தில்கூட சிறிய காய்கறிகளை பயிரிட்டு அந்தக் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு பயன் பெறலாம் என்பதோடு இயற்கை விவசாயத்தையும் ஊக்குவிக்கும்வகையில் தொழிலை நடத்தலாம் என்பதையும் அழுத்தம்திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
மலையாளத்தில் மஞ்சுவாரியரின் செகண்ட் இன்னிங்க்ஸின் துவக்கம் இந்தப் படத்தில்தான் அமர்க்களமாகத் துவங்கியது. அதேபோல இதில் ஜோதிகாவின் மறு பிரவேசமும் அமோகமாக துவங்கியுள்ளது.
இத்தனை நடிப்புத் திறனை வைத்துக் கொண்டு கடந்த 8 ஆண்டுகளாக அரிதாரம் பூசாமல் காத்திருக்கும் பொறுமை ஜோதிகாவுக்கு எப்படி வந்ததோ தெரியவில்லை. ஆனால் இனியும் அதுபோல இருக்க வேண்டாம் என்பது தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பும், வேண்டுகோளும்..!
முதல் காட்சியில் இருந்து கடைசியாக கம்பீமான தோற்றத்தில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியில் வரும் காட்சிவரையிலும் பிரேம் பை பிரேம் ஜோதிகாவின் ஆதிக்கம்தான்..!
அவருடைய கண்களே பல மொழிகளைப் பேசும். இதில் தன்னுடைய பாடி லாங்குவேஜை வைத்தும் கூர்மையான வசனங்களின் மூலமாகவும் அந்த வசந்தியை இன்றைக்கு அனைத்து ரசிகர்களின் மனத்திலும் சம்மணங்கால்போட்டு அமர வைத்திருக்கிறார் ஜோ.
கணவனிடம் தனது நிலைமையைச் சொல்லி இறைஞ்சுகின்ற அதே ஜோ.. பின்னாளில் “நான் அயர்லாந்துக்கு வரலை..” என்று தீர்மானமாகச் சொல்கிற தொனியில் கை தட்ட வைத்திருக்கிறார். தன் மகள் அயர்லாந்து செல்லும்போது “அந்தக் கேள்வியை சொல்லவா?” என்று கேட்கும்போது “வேண்டாம்..” என்று திடமாக மறுக்கும்போதும் அந்த காட்சியின் முழு பரிமாணத்தையும் தானே சுமந்திருக்கிறார் ஜோ.
கணவனிடத்தில் அன்பை செலுத்தி வாங்க முடியாமலும், மகளிடத்தில் பாசத்தைக் கொட்டி அதையும் திரும்ப்ப் பெற முடியாமலும்.. அலுவலக வேலைகளிலும் ஈர்ப்பு காட்ட முடியாமல் தவியாய் தவித்தும், பார்க்கிறவர்களின் கேலிகளுக்கு ஆளாகாமல் தவியாய் தவிப்பதுமாக வசந்தி என்கிற ஒரு விலைமதிப்பில்லாத கேரக்டரை நம் கண் முன்னால் நடமாடவிட்டிருக்கிறார் ஜோதிகா. வெல்டன்.. பிரமிப்பாகவே இருக்கிறது..
கணவராக ரகுமான்.. சிடுசிடு குணத்துடன்.. சுயநலமிக்கவராக காட்சியளித்திருக்கிறார். இடையில் கணவர் என்ற கோதாவில் வீட்டில் எரிந்துவிழுந்துவிட்டு மகளிடத்தில் பாகப் பிரிவினை செய்வதை போல அயர்லாந்து பிரித்து அழைத்துப் போகும் அந்த வில்லன் கேரக்டரையும் கச்சிதமாகவே செய்திருக்கிறார்.
மகளாக நடித்திருக்கும் இஷா துவக்கத்தில் ஜோதிகாவின் வயதைக் குறிப்பிட்டு தொடர்ச்சியாக பேசும் காட்சிகளில் கவர்ந்திழுக்கிறார். இயக்கம் சிறப்பாக இருந்தாலே அனைத்தும் சிறப்பாகத்தான் இருக்கும் என்பதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி.
ஏன்.. எதற்கு.. என்கிற காரணத்தையெல்லாம் சொல்லாமல் ஜோதிகாவின் வீடு, அடையாளங்களை தேடும் பணியில் போலீஸ் மும்முரமாக இருப்பதை பக்கா சினிமாத்தனம் என்று சொன்னாலும் அதுவும் படத்தில் ஒரு டிவிஸ்ட்டாகி ரசிக்கத்தான் வைத்திருக்கிறது.
அபிராமியின் என்ட்ரிதான் படத்திற்கு மிகப் பெரிய டிவிஸ்ட். அவருடைய வார்த்தை ஜாலத்தில் ஜோ திசை திரும்பி தன் வாழ்க்கையை தன் கையில் எடுப்பதெல்லாம் திரைக்கதையின் யுக்திதான்.. இந்த இடத்தில் சொல்வது ஒரு ஆணாக இருந்தால் அது நிச்சயம் எடுபட்டிருக்காது..
அலுவலக சச்சரவுக்கு கோலிசோடா சுஜாதா.. வீட்டில் சீரியலே கதி என்றிருக்கும் மாமியாராக ரொம்ப நாள் கழித்து தமிழில் கலாரஞ்சனி.. ஆதரவான மாமனாராக டெல்லி கணேஷ்.. ஆதரவான தோழியாக தேவதர்ஷிணி, ஒரு மில்லியன் டாலருக்கு மதிப்பான அந்தக் கேள்வியை சதாராணமாகச் சொல்லும் பிரேம்.. மக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தான் பணம் சம்பாதிக்க காய்கறிகளை செயற்கை முறையில் வளர்த்து கூச்சமே இல்லாமல் விற்பனை செய்யும் வியாபாரியாக இளவரசு.. துணிக்கடை அதிபரான ஜெயபிரகாஷ் என்று அனைவருமே அவரவர் கதாபாத்திரத்தை ரசித்து செய்திருக்கின்றனர். கூடுதலாக ஒரேயொரு காட்சியில் வந்தாலும் பாரதிமணி நினைவில் நிற்கிறார்.
‘வாடி ராசாத்தி’ பாடல் ஜோதிகாவுக்காக பாடப்பட்டிருந்தாலும் படத்திற்கு மிகப் பொருத்தமானதுதான். சந்தோஷ் நாராயணனின் இசைப் பயணம் இன்னமும் தொடரும்போல தெரிகிறது.. திவாகரனின் ஒளிப்பதிவில் மொட்டை மாடிகள் அனைத்தும் அழகாக இருக்கின்றன. இதையும்விட ஜோதிகாவும் மிக அழகாக இருக்கிறார். இன்னமும் 40 படங்களில் அவர் நடிக்கலாம்..
இடைவேளைக்கு பின்புதான் இந்த பூ ஒன்று புயலானது கதையே துவங்குகிறது. அந்தப் பரபரவை கடைசிவரையிலும் கொணடு போய் நம்மை ஸ்கிரீனைவிட்டு அகல வைக்காமல் செய்திருக்கும் எடிட்டர் மகேஷ் நாராயணனுக்கும் நமது பாராட்டுக்கள்.
விஜியின் வசனங்கள் இயக்குநருக்கு மிகப் பெரிய உதவியாக கிடைத்திருக்கின்றன.  கடமை, வேலை, பொறுப்புகள் இவை மூன்றுக்கும் உள்ள வேறுபாட்டை ரகுமான்-ஜோதிகா பேச்சிலேயே தெளிவாக்கியுள்ளார். ஒரு விஷயத்தைத் தூண்டிவிடுவதற்கு சம்பவங்களே வேண்டும் என்றில்லை.. சில வார்த்தைகளே போதும் என்பதையும் அபிராமி கேரக்டர் வாயிலாகச் சொல்லி பெருமைப்படுத்தியிருக்கிறார் விஜி.
படத்தில் ஒரேயொரு நெருடல்தான். இன்றுவரையிலும் வசந்தியை புரிந்து கொள்ளாத கணவனிடத்தில் மறுபடியும் வசந்தி சேரத்தான் வேண்டுமா..? அயர்லாந்துக்கு போகத்தான் வேண்டுமா..? ஜனாதிபதியை சந்தித்த்தோடு அவளுடைய லட்சியம், கனவுகள் முடிந்துவிட்டதா..? அவளுடைய உயர்வின் எல்லைக்கோடே ஜனாதிபதியின் சந்திப்புதானா..? புரிந்து கொள்ளாத, பாசமில்லாத, சுயநலமான கணவனை புறக்கணித்துவிட்டு தனித்தே வாழ்ந்து அவள் தன்னை இன்னமும் பெரிய ஆளாக்கிக் காட்டலாமே..? என்றெல்லாம் கேள்விகள் நாலாபுறத்தில் இருந்தும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.  இயக்குநர்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.
மற்றபடி பெண்கள் சாதிப்பதற்கு வயது ஒரு பொருட்டல்ல. குடும்பம் ஒரு தடையல்ல.. பிள்ளைகள் ஒரு பிரச்சனையில்ல.. என்பதை நெத்திப் பொட்டில் அடித்தாற்போல் அடித்திருக்கும் படம் இது..!
பெண் குலத்தினர் மட்டுமல்ல ஆண் குலத்தினரும் அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம் இது..!

2 comments:

Yarlpavanan said...

சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்

Unknown said...

நன்று கூரிய பார்வை நேரிய விமர்சனம்