புறம்போக்கு என்னும் பொதுவுடமை - சினிமா விமர்சனம்

16-05-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’ படங்களுக்கு பிறகு ஜனநாதன் இயக்கியிருக்கும் 4-வது படம் இந்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’.
இயல்பாகவே தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லாமல் சொல்லி வருபவர் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். வருடத்திற்கு ஒரு படம் செய்பவரில்லை. சில வருடங்களுக்கு ஒரு படம். ஆனால் அவையே அந்தந்த காலக்கட்டத்தில் பேசப்பட்டவையாகவே அமைந்துவிடும். அதற்கு இந்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படமும் விதவிலக்கல்ல.
முதற்கண் நன்றிகள் யு டிவி நிர்வாகத்தினருக்கு. ஹிந்தியில் பரீட்சார்த்த முறையிலான சினிமா துறை சார்ந்த திரை மொழி படங்களுக்கு மிகுந்த ஆதரவு கொடுத்து வரும் யு டிவி தமிழில் மிக பெரிய நடிகர்களை வைத்து ஸ்டார் கேஸ்ட் படங்களாகவும், கமர்ஷியல் படங்களாகவும் மட்டுமே அளித்து வந்திருக்கிறது. இப்போதுதான் முதல் முறையாக மக்களுக்கான கதையாக ஒன்றைத் தேர்ந்தெடுத்து தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

தேசத் துரோக குற்றச்சாட்டிற்காக மூன்று மரண தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டிய குற்றவாளி ஆர்யா. இந்த மரண தண்டனையைக்கூட ஒரு கை தேர்ந்த தூக்கிலிடும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை வைத்தே செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இந்த பாலுச்சாமி என்கிற ஆர்யாவின் தேசத்துரோகம் அமைந்திருக்கிறது.
நீதிமன்றம் குறிப்பிட்ட தூக்கிலிடும் பணியில் நிபுணத்துவம் பெற்ற எவரும் கிடைக்காமல் போனதால், கடைசியாக 10 வருடத்திற்கு முன்பு ஒரு முறை தூக்கிலிட்ட அனுபவத்தை தன் தந்தை மூலமாகப் பெற்றிருக்கும் எமலிங்கம் என்கிற விஜய் சேதுபதியை வலை வீசிப் பிடிக்கிறது சிறை நிர்வாகம். ரயில்வேயில் கலாசியாக பணியாற்றும் விஜய் சேதுபதி முதலில் வர மாட்டேன் என்று முரண்டு பிடித்து பின்பு ஒத்துக் கொள்கிறார். தூக்கிலிட அல்ல. தூக்கில் தொங்க வேண்டியவரை காப்பாற்ற..!
தன்னுடைய பாசம் மற்றும் நேசத்தாலேயே ஆர்யாவை தூக்கு மேடைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருப்பதை நினைத்து வருத்தப்படும் ஆர்யாவின் பெண் கூட்டாளியான குயிலி என்னும் கார்த்திகா, ஆர்யாவை சிறையில் இருந்து காப்பாற்ற நினைக்கிறார். இதற்காக தூக்குப் போடும் பணிக்கு போகவிருக்கும் எமலிங்கத்துடன் நட்பு வைத்து அவரைக் கவர்ந்து தங்களது இயக்கம் பற்றித் தெளிய வைத்து.. ஆர்யா செய்த தேசத் துரோகச் செயல்கள் என்னென்ன என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லி எமலிங்கத்தின் மனதை மாற்றி அவரை சிறைக்குள் அனுப்பி வைக்கிறாள்.
இன்னொரு பக்கம் ஆர்யா, தூக்கில் தொங்கியே ஆக வேண்டும் என்பது இந்திய அரசின் தலையாய விருப்பம் என்கிற கட்டாயத்தின் பேரில் தமிழகச் சிறைக்கு அனுப்பப்பட்டு சிறைத் துறையின் அடிஷனல் டி.ஜி.பி.யான ஷாமின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஆர்யாவை தூக்கிலிடுவதுதான் தனது முதல்வேலை என்று பணியில் தீவிரமாக இருக்கிறார் ஷாம்.
இந்த நான்கு பேரின் நான்குவகையான முயற்சிகளில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதுதான் இந்த ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்தின் திரைக்கதையின் களம்.
கேரக்டர்களின் பெயர்களையே பொருத்தம் பார்த்து வைத்திருக்கிறார் இயக்குநர். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் சுதந்திர இந்திய அரசு முதலில் தூக்கிலிட்ட தமிழரான பாலுச்சாமியின் பெயர்தான் ஆர்யாவுக்கு..! உலகத்திலேயே முதல் மனித வெடிகுண்டாக செயல்பட்டு உயிர்நீத்த குயிலியின் பெயர்தான் கார்த்திகாவுக்கு. எமலிங்கம் என்ற பெயர் தூக்கு தண்டனை நிறைவேற்ற பிடிக்கவே பிடிக்காத நிலையில் இருக்கும் விஜய் சேதுபதிக்கு. அரசு என்ன சொல்கிறதோ அதை அப்படியே கண்மூடித்தனமாக கடைப்பிடிக்க நினைக்கும் அரசு அதிகாரியான ஷாமுக்கு, இப்போதுவரையிலும் கல்வித் துறையில் நம்மை ஆட்சி செய்யும் ஆங்கிலேயே கல்வி அதிகாரியான மெக்காலேயின் பெயர். எல்லாமே பொருத்தமானவைதான்.
ஒரு திரைப்படத்தில் எதெல்லாம் இருக்காது என்று நினைக்கிறோமே அதையெல்லாம் இந்தப் படத்தில் நைச்சியமாக அரங்கேற்றியிருக்கிறார் இயக்குநர்.
படத்தின் துவக்கத்திலேயே வெளிநாடுகளில் குப்பை என்று சொல்லப்படுபவையெல்லாம் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு அப்பாவி மக்களுக்கு எமனாக மாறி வருவதையுபம், குப்பைக் கூளங்களால் இந்தியாவே குப்பையாகிக் கொண்டிருப்பதையும், இந்த ஏகாதிபத்திய அவலட்சணத்தை இந்திய அரசு மறைமுகமாக ஊக்குவித்து வருவதையும் கடுமையாக சாடியிருக்கிறார் இயக்குநர்.
ஆர்யா செய்யும் தேசத் துரோகச் செயலாக பஞ்சத்தில் அடிபட்டு நிற்கும் மக்கள் கையில் தட்டுடன் உணவு வேண்டி நிற்க.. இன்னொரு பக்கம் ரயிலில் உணவு தானியங்கள் கொள்ளை போவதை அறிந்து அதைத் தடுத்து ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷத்துடன் மக்களுக்கு பகிர்ந்தளிக்கிறார்.
மாசுகளற்ற நிலம் இந்த மக்களுக்கு உடமை என்பதை வலியுறுத்தி தங்களது மக்கள் செயலுக்கு விரோதமாகச் செயல்படும் ராணுவத்தை எதிர்த்து மனித வெடிகுண்டு போராளியாக செல்வதாகக் காட்டியிருக்கிறார்.
வலிமை வாய்ந்த சென்சார் போர்டின் முறுக்கலை எதிர்கொள்ளும் எந்தவொரு இயக்குநரும் ஒரு கட்டுப்பாட்டுக்குள்தான் தன்னுடைய சொந்தக் கொள்கையையும், நாட்டைப் பற்றியும் பேச முடியும். அதைத்தான் இயக்குநர் ஜனநாதன் இதில் செய்திருக்கிறார்.
திரைப்படத்தின் வசனங்கள் மூலமாக பொதுவுடமை என்றால் என்ன..? தனியுடமை என்றால் என்ன..? மார்க்சியம் என்ன சொல்கிறது..? மக்களுக்கும் மார்க்சியத்திற்கும் இடைவெளி ஏன்..? யார் மக்கள்..? என்பதையெல்லாம் விலாவாரியாக விவரித்திருக்கிறார் இயக்குநர்.
ஷாமுக்கும், ஆர்யாவுக்குமான பல வசனங்கள் இன்றைய தீவிர நக்சல்பாரி அரசியலை எடுத்துக் காட்டுகிறது. “இளைஞர்களை அந்த வழிக்குக் கொண்டு போய் தள்ளியது அரசுகளே தவிர வேறு நபர்கள் இல்லை..” என்கிறார் இயக்குநர். அரசு இந்த பாலுச்சாமியை தூக்கிலிட்டே ஆக வேண்டும் என்று உறுதியாகச் சொல்வதுகூட அரசு அமைப்புகளை எதிர்க் கேள்வி கேட்கக் கூடாது என்கிற சர்வாதிகாரத்தின் வெளிப்பாடுதான்.
“ஜெனீவா ஒப்பந்தப்படி கைதிகளை உடல் ரீதியாக துன்புறுத்தக் கூடாது..” என்கிறார் ஆர்யா. “தண்டிக்கக் கூடாதுதான். ஆனால் கண்டிக்கலாம். தூக்கி கண்டத்துல போடு. ஒரு வாரத்துக்கு பச்சைத் தண்ணியைத் தவிர வேற எதையும் தராத..” என்கிறார் ஷாம். இது  அரசுகளை எந்தவொரு ஒப்பந்தமும் கட்டுப்படுத்த முடியாது என்பதையே காட்டுகிறது.
“நீ யாருக்காக போராடுறேன்னு சொல்றியோ.. அவங்களை உன்னைப் பத்திக் கவலைப்படலை..” என்கிறார் ஷாம். “நான் சொல்லும் மக்கள் அவங்க இல்லை..” என்கிறார் ஆர்யா. இதைத்தான் அனைத்துவிதமான தீவிரவாத இயக்கங்களின் தோழர்களும் சொல்கிறார்கள். தங்களின் போராட்டத்தை புரிந்து கொள்ள அந்த மக்களே விரும்பவில்லையே என்கிற ஆதங்கம் அவர்களுக்கு எப்போதுமே உண்டு. புரிந்து கொண்டால்தான் இன்றைக்கு அவர்கள் ஆட்சிக்கு வந்திருப்பார்களே..?
வெறுமனே தூக்குத் தண்டனைக்கு எதிரான படமாகவும் இருக்க்க் கூடாது என்பதால் எதற்கு தண்டனை..? ஏன் தண்டனை..? எதனால் இது ஏற்பட்டது என்பதையும் விளக்கமாகச் சொல்லி அதையும் திரைக்கதையில் விறுவிறுப்பானவிதத்தில் படமாக்கியிருக்கிறார் இயக்குநர்.
ஆர்யாவுக்கு நிச்சயம் இதுவொரு புதுமையான அனுபவமாகத்தான் இருக்கும். எப்போதும் அவரையொரு ரொமான்ஸ் பேபியாக பார்த்தவர்களுக்கு இந்தப் படம் ஆச்சரியமாகத்தான் இருக்கும். முகத்தில் எப்போதும் தீவிரம் காட்டும் தீவிரவாதியாக இல்லாமல் சரளமாக, சகஜமாக இனிமையாக பேசும் பாலுச்சாமியாகவும் நடித்திருக்கிறார்.
அதிகக் காட்சிகளில் இவருடன் வசனத்தினாலேயே மல்லுக்கட்டியிருக்கும் ஷாமின் மிதமான நடிப்பினால் ஆர்யா பேசும் வசனங்கள் நாளைய சினிமாவுலகத்திலும் பேசப்படவிருக்கின்றன. சின்னச் சின்ன ஷாட்டுகளில் அதிக நீளமான வசனங்களாக இல்லாமல் கச்சிதமாக கத்தரித்துவிட்டது போன்றவையாக இருப்பதால் இருவரின் வசனப் போராட்டத்தையும் வெகுவாக ரசிக்க முடிந்திருக்கிறது.
தூக்கு மேடையில் இறுதியாக தனது கனவு பலிக்காமல் போகப் போகிறது என்பதை உணர்ந்த நிலையிலும், விஜய் சேதுபதிக்காக பரிதாபமாகப் பார்க்கின்ற பார்வையில் ஒரு போராளியின் கனவை நினைவுபடுத்தியிருக்கிறார் ஆர்யா.  செம கிளாஸ் இயக்கம்.
உண்மையில் படத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பது விஜய் சேதுபதிதான். அவருடைய குடிகார பழக்கமும், குடும்பச் சூழலும் என்னமோ ஏதோ என்று நினைக்க வைத்து.. அவர்தான் தூக்கில் போடப் போகிறவர் என்றவுடன் ஒரு பரபரப்பு ஏற்படுகிறது.
சின்ன வயதில் ஒருவரின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டும்போது “நான் நிராபராதிப்பா..?” என்று அவர் சொல்ல.. அந்த வார்த்தையே இத்தனை நாட்களாக தன்னை தூங்க விடாமல் செய்கிறது என்பதை பத்ரகாளியின் முன்பாக பொரிந்து தள்ளிவிட்டு சாகப் போகும் காட்சியில் இமை கொட்டாமல் பார்க்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
எப்படியாவது தான் தூக்கிப் போடக் கூடாது.. அதே சமயம் அரசு கொடுத்த வேலையையும் செய்து முடிக்க வேண்டும் என்று டபுள் கேம் விளையாட நினைத்து அப்பாவியாக கார்த்திகாவின் முயற்சிகளுக்கு தோள் கொடுத்து நிற்கும் அப்பாவித்தனத்தில் அசத்திவிட்டார் விஜய் சேதுபதி.
கடைசிவரையிலும் ஆர்யா தப்பிக்கப் போகிறார் என்றே நினைத்துக் கொண்டு கழுத்தில் துணியை மூடப் போகும் சூழலிலும் கண்ணடித்துவிட்டு லீவரை இழுத்துவிட்டு காத்திருந்தவர்.. தொடர்ந்த நொடிகளில் அந்தக் கயிறு காற்றில் ஆடும் விதத்தையும், கீழேயிருந்து வரும் உயிர் பிரியும் வலியின் சப்தத்தையும் வைத்தே தன் கனவு சிதைந்துபோய்விட்டதை உணர்ந்து சிதிலடைந்து போய் முதுகு காட்டி அமர்ந்து அழுது படத்தின் ஒட்டு மொத்த பீலிங்கையும் தானே சுமந்து பார்வையாளர்களுக்குக் காட்டியிருக்கிறார் விஜய் சேதுபதி.
திட்டம் தோல்வியடைந்து போராளியின் பூதவுடலைத் தூக்கிச் செல்லும்போது அவருக்கு ஒண்ணுமில்ல ஸார்.. ஒண்ணுமில்ல ஸார்.. விடுங்க ஸார்.. என்று பின்னாலேயே ஓடி வரும் எமலிங்கத்தின் கதறல் தனியொரு மனிதனின் படுகொலைக்கு எதிரானதேயன்றி வேறொன்றுமில்லை.. 
இவருடைய கடைசியான முடிவு தூக்கில் தொங்கப் போகிறவனைவிடவும், தூக்கில் தொங்கவிடுபவனின் சோகம்தான் மிகப் பெரியது என்கிற இயக்குநரின் மனவோட்டத்தை பிரதிபலிக்கிறது. இந்தப் படத்திற்கு இத்தனை கடினமான சோகம் தேவையா என்று கேட்டால்.. இது நிச்சயம் தேவைதான். இப்போதுதான் தூக்குத் தண்டனை என்பதன் முழு வீரியமும் பார்வையாளர்களுக்குப் புரிகிறது..! வெல்டன் இயக்குநர் ஸார்..!
தற்போதைய ஹைடெக் தீவிரவாதிகளாக பவனி வரும் கார்த்திகா அண்ட் கோவும். அவர்கள் போடும் திட்டங்களும் ஒரு பரபரப்பை ஏற்படுத்துகின்றன. கார்த்திகாவுக்கு அழுது புரண்டு நடிக்கும் காட்சிகள் இல்லையென்றாலும், பரபரவென்று நடித்திருக்கிறார். தீவிரவாதியாகவே இருந்தாலும் வீஜய் சேதுபதிக்கு தன் மீது ஒரு பார்வை இருப்பதை உணர்ந்தும், அதனை தன்னுடைய இயக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதெல்லாம் இயக்குநரின் பக்குவமான திரைக்கதை. நடிப்பிற்காக இயக்குநர் அதிகம் பிரயத்தனப்படவில்லை. ஆனால் திரைக்கதையும், வசனமும், இயக்கமும் சிறப்பாக இருப்பதினால் படத்தில் ஒரு நிமிடம்கூட தொய்வு என்பதே இல்லை.
படத்தில் லெனின், மார்க்ஸ், ஏங்கெல்ஸ் போன்றவர்களின் புகைப்படங்களும் புத்தகங்களும் அங்கொன்றும், இங்கொன்றுமான காட்சிகளில் தென்படுகின்றன. பஞ்சாப்பில் சீக்கிய தோழர் ஒருவர், அந்த ஜெயிலை பற்றிச் சொல்லும்போது அவருடைய பின்னணியில் ஏங்கெல்ஸின் புகைப்படத்தை வைத்திருப்பது என்ன குறியீடோ..?
தோழர்களின் சமூகம் சார்ந்த அக்கறையையும் ஒரு காட்சியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். விஜய் சேதுபதியின் அம்மா தனது மகன் பாலியல் பெண்களை சந்திக்கும் பழக்கம் வைத்திருக்கிறான் என்பது தெரிந்தும், “அப்படியொரு பெண்ணை கூட்டி வந்து கட்டி வைத்து அவளையும் நல்லவளா மாத்திரலாமே..?” என்று அக்கறையாக கேட்கிறார். இயக்குநர் சமூக சிந்தனையுள்ளவர் என்பதற்கு இதைவிட பெரிய வசனங்கள் எதுவும் தேவையில்லை.
சினிமாத்தனமான காட்சிகளாக சிலவையும் இருக்கத்தான் செய்கின்றன. அவையும் திணிக்கப்பட்டவையல்ல. ஆனால் இருந்துதான் ஆக வேண்டும். இது தமிழ்ச் சினிமாவின் தலைவிதி. ஆர்யாவை தப்பிக்க வைக்க போடும் திட்டங்கள்.. சிறைச்சாலையின் வரைபடம் உடனயே கார்த்திகா டீமிடம் கிடைப்பது.. கடைசி நிமிடத்தில் மழையால் தங்களது சதித்திட்டம் வெளியாவது.. இதனை தற்செயலாகவே காட்டியிருக்கலாம்.. கடைசி கேட் அருகில் சென்றவுடன் திட்டம் பணாலாவது என்பதெல்லாம் சினிமாத்தனம்தான். இதுகூட இல்லையெனில் ரசிகர்களை ஆர்வத்தோடு அமர வைப்பது கடினம்..!
வர்ஷன் இசையமைத்திருக்கிறார். இந்த மாதிரியான படங்களுக்கு பாடல்களே தேவையில்லைதான். ஆனால் தயாரிப்பாளரையும் திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காகவே வைத்திருக்கிறார்கள்.. பின்னணி இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் திருப்திதான். கிளைமாக்ஸ் காட்சியில் நெஞ்சை உருக்குமிடத்தில் அதன் போக்கிலேயே விட்டுவிட்டு நம்மை ரசிக்க வைத்தமைக்கு அவருக்கு ஒன்று நன்றி..
திரும்பத் திரும்ப ஜெயில் காட்சிகளே வருவதால் ஒவ்வொரு முறையும் வேறுவேறு காட்சிகளை கொண்டு வந்து எடிட்டிங்கில் காப்பாற்றியிருக்கிறார் எடிட்டர் கணேஷ்குமார்.
ஜெயில் செட் அமைத்து பிரமாதப்படுத்தியிருக்கும் கலை இயக்குநருக்கு நமது ஷொட்டு. கோடிகளை செலவிட்டு செய்திருக்கிறார்கள். அதன் பிரமாண்டத்தை அழகாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். வெளிச்சக் கலவையில்லாமல் ஜெயிலின் சூழல் கெடாமல் மங்கலான வெளிச்சத்திலேயே படமாக்கியிருப்பதும் ஒரு குறியீடு போலத்தான் தோன்றுகிறது..
என்னதான் கதை செய்வது..? திரைக்கதை அமைப்பது..? வசனம் எழுதுவது..? என்றெல்லாம் தலையைப் பிய்த்துக் கொள்ளும் இயக்குநர்களுக்கு ஒரு பாடமாக எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன்.
சென்சார் போர்டு நமக்குக் கொடுத்திருக்கும் குறைந்தபட்ச சுதந்திரத்தில் அவர்கள் கண்ணுக்கே தெரியாத அளவுக்கான விஷயங்களை திறம்பட கொடுத்து, இப்படியொரு அற்புதமான படத்தைக் கொடுத்திருக்கும் நமது தோழர், மக்கள் இயக்குநர் அண்ணன் எஸ்.பி.ஜனநாதனுக்கு ஒரு சல்யூட்..!

3 comments:

யாஸிர் அசனப்பா. said...

தமிழ் சினிமாவில் இந்த மாதிரியான கம்யூனிஸ கருத்துக்களை துணிந்து எடுத்தது இதுவே முதல்முறையாக இருக்கும். சேதுபதி, ஷாம், ஆர்யா ஆகியோருடைய மனநிலையை நாம் உணரும்படி செய்தது இயக்குனரின் வெற்றி. கார்த்திகா, பாடல்கள் படத்துக்கு கொஞ்சம் தொய்வாக தெரிகிறது. லால்ஸலாம்.

துளசி கோபால் said...

எனக்கு ஷாமின் நடிப்பு ரொம்பவே பிடிச்சுருக்கு. நல்ல நடிகர். ஸோ அண்ட் ஸோவை விட சிறந்த நடிப்பு. என்னமோ இவரை வேணுமுன்னே அலட்சியம் செய்யுது தமிழ்சினிமா:(

நல்லபடம். தேவையில்லாத டூயட்:(

ஆமாம்.... ஏன் கடையிலே கூட்டமே காணோம்?

உண்மைத்தமிழன் said...

டீச்சர்..

படம் இங்கயே சரியா போகலை. என்ன காரணம்ன்னுதான் தெரியலை. சில நல்ல படங்களுக்கும் இப்படி நடிப்பதுண்டு..!