கப்பல் - சினிமா விமர்சனம்

27-12-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இயக்குநர் ஷங்கருக்கு நகைச்சுவை என்றால் மிகவும் பிடிக்கும். நகைச்சுவை நடிகர்களின் பேச்சுக்களை விரும்பிக் கேட்பார். அவர்களுடன் நிறைய பேசுவார். நகைச்சுவை படங்களை விரும்பிப் பார்ப்பார். எல்லாம் சரிதான். இந்தப் படத்தின் நகைச்சுவை காட்சிகள் அவருக்கு படத்தை வாங்கி வெளியிடும் அவரை கொண்டு போயிருக்கிறது என்றால் இது நிச்சயம் கடவுள் அருள்தான்.

சின்ன வயதில் இருந்தே திருமணம் செய்யக் கூடாது என்ற கொள்கையில் இருக்கும் நண்பர்களுடன் இருப்பவன் ஹீரோ வாசு. வாலிப வயது வந்தவுடன் காதலிக்க மனசு துடிக்கிறது. ஆனால் நண்பர்களுக்கு செய்த சத்தியம் தடுக்கிறது. அதையும் மீறி சென்னைக்கு ஓடி வந்து ஒரு காதலியைத் தேடிப் பிடிக்கிறார். அதற்குள் அவரது நண்பர்களும் சென்னைக்கு வந்துவிட அவர்களுக்குத் தெரியாமல் தனது காதலை வளர்க்கத் தெரியவில்லை ஹீரோவுக்கு. நண்பர்கள் ஹீரோவின் காதலை முறியடிக்க நினைக்கிறார்கள். இதைச் செய்து முடித்தார்களா இல்லையா என்பதுதான் கதை..
நகைச்சுவை படம் என்றாலே லாஜிக் தேவையில்லைதான். ஆனால் இந்த அளவுக்கா..?
இப்படியொரு நண்பர்கள் குழாமை இந்தியாவில் எந்த மூலையிலும் நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் குடும்பத்தில் பார்க்கலாம்.. இப்படியொரு குரூர மனம் கொண்டவர்கள் நமக்கு நண்பர்களாகவும் இருக்க முடியாது. நட்பின் வலிமையைக் காட்டுவதற்கு வேறு மையக் கருத்தே கிடைக்கலியா இயக்குநர் ஸார்..?
காட்சியமைப்புகளில்தான் நகைச்சுவையைக் காட்டியிருக்கிறார் இயக்குநர். இயக்கத் திறமையுள்ளவர்தான். நன்கு தெரிகிறது.. விடிவி கணேஷின் ஒரு சின்ன ஆக்சனிலேயே சிரிப்பை வரவழைக்கிறார் இயக்குநர். ஆனாலும் அநியாயத்திற்கு காட்சிக்கு காட்சி லாஜிக் உதைப்பதால் இடைவேளைக்கு பின்பு ரசிக்கவே முடியவில்லை. காட்சிகளால் சிரிக்கப்பட்டு ஏதோ கடமையை ஆற்ற வேண்டியதாகிவிட்டது.
ஹீரோயின் குடிபோதையில் ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட்டார் என்பதற்காக ஹீரோ அடுத்த நாளே அவரது வீட்டில் போய் நிற்பதெல்லாம் கொட்டாம்பட்டியில்கூட நடக்காதே இயக்குநர் ஸார்..? இத்தனை பெரிய கோடீஸ்வர பெண்.. யாரோ ஒருவன்.. முன் பின் தெரியாதவன்.. பார்த்தவுடன் அவன் தகுதியென்ன என்பதுகூட தெரியாமல் காதலித்துவிடுவாளா..?
நண்பர்கள் செய்யும் கலாட்டாக்களை சிரித்துக் கொண்டே ஜஸ்ட் லைக் தேட் பாணியில் வைபவ் எதிர்கொள்வதெல்லாம் நமக்கே கோபத்தைக் கிளப்புகிறது. அவ்ளோ பெரிய கோடீஸ்வரப் பெண்ணிற்கு கடுப்பாகாதா..? நட்புதான் முக்கியம் என்பதற்கு ஹீரோ எதை முன் வைக்கிறார் என்பதை மட்டும் படத்தில் சொல்லவேயில்லை. இதனாலேயே நட்பு என்று சொல்லும்போதெல்லாம் எரிச்சல்தான் வருகிறது.!
முதலில் இந்தப் படத்திற்கு எப்படி ‘யு’ சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்பதை சி.பி.ஐ. விசாரணை வைத்துதான் கண்டுபிடிக்க வேண்டும். சிறந்த படங்களில்கூட ஏதாவது ஒரு லொட்டு, லொசுக்கை சொல்லி ‘யு’ தர மறுக்கும் சென்சார் போர்டு ‘ஏ’ சர்டிபிகேட் பெறும் முழு தகுதியுள்ள இந்தப் படத்துக்கு ‘யு’ சர்டிபிகேட் கொடுத்தது மோசடித்தனம் என்றே தோன்றுகிறது.
நகைச்சுவையில் பிளாக் காமெடி என்ற ஒரு வகையும் உண்டு. குழந்தைகளைக் கவரும் காமெடியும் உண்டு. இது பிளாக் காமெடி படம். இதைப் போய் குடும்பத்துடன் பாருங்கள் என்றால் எப்படி..?
கேரக்டர் ஸ்கெட்ச்கூட முற்றிலும் அர்த்தமற்றதாக இருக்கிறது. நண்பர்களின் குடும்பத்தினரை காணவில்லை. இந்த நண்பர்கள் வேலை வெட்டிக்கே போகவில்லையெனில் சோத்துக்கு என்ன செய்கிறார்கள். இவர்கள் திருமணம் செய்ய மாட்டோம் என்ற கருத்திற்கு அவர்களது குடும்பத்தினர் ஏதும் சொல்லவில்லையா..?
இரட்டை அர்த்த வசனங்கள்.. முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள்.. கொஞ்சமும் நட்பை உயர்வாகக் காட்டிவிடாத திரைக்கதை.. இப்படி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ்தான் மகா சொதப்பல்..
ஏதோ சில காமெடி சீன்களினால் கிளைமாக்ஸ் தள்ளாடி தள்ளாடி செல்கிறது. ஆனால் பார்க்கத்தான் முடியவில்லை. மணமகனை ஜட்டியோடு மண்டபத்துக்குள் ஓட விட்டால் எப்படி..? நம் மக்கள் எதையும் நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்வார்கள் என்று நினைத்துவிட்டார்களோ..?
இதில் நடிகர்களின் நடிப்பெல்லாம் எதற்கு..? இசையும் சுமார்தான்.. பாடல் காட்சிகளை எடுத்திருக்கும் விதம் மட்டுமே ரசனையானது. ஹீரோயினிடம் கோடம்பாக்கம் எதிர்பார்க்கும் விஷயங்கள் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.
பெண்கள் பக்கமே போகாதவர்கள்.. பெண் வாடையை நுகராதவர்களுக்கு பெண்கள் கிடைத்தால் என்னாகும் என்பதை ஹீரோவும், அவரது திருமணம் செய்யப் போகும் நண்பனும் காட்டிவிடுகிறார்கள்.
ஹீரோ எப்போதும் ஹீரோயினை கட்டிப் பிடிப்பதையே  கொள்கையாக வைத்திருக்கிறார். இன்னொரு நண்பரோ பெண் பார்க்கச் சென்ற இடத்தில் “தனியா பேசணும்..” என்று சொல்லி பொண்ணை அழைத்துச் சென்று கட்டிலில் கட்டிப் பிடித்து உருள்கிறார். இந்த விபரீதத்தை தெரிந்தோ, தெரியாமலோ படமாக்கியிருக்கும் ஒரு விஷயத்திற்காக இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
ஒரு மிகப் பெரிய இயக்குநரிடம் வேலை பார்த்தவர்.. தொழில் கற்றுக் கொண்டவர் என்பதால் அவரது படம் எப்படியிருக்கும் என்று எதிர்பார்ப்போடு வந்தவர்களை வெறுமனே ஏமாற்றி அனுப்பியிருக்கிறார் இயக்குநர்.
அடுத்தடுத்த படங்களை நிச்சயம் சமூகப் பொறுப்போடு எடுக்கிறேன் என்று சமீபத்திய பிரஸ்மீட்டில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் கிரீஷ். அதைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறோம்..

1 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது..பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-