வேலையில்லா பட்டதாரி - சினிமா விமர்சனம்

21-07-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


மிக நீண்ட இடைவெளிக்குப் பின்பு ஒரு வெற்றியைப் பெற்றிருக்கிறார் தனுஷ். பிரபல ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் எழுத்து, இயக்கத்தை நம்பி நடிக்க ஒத்துக் கொண்ட அந்த முதல் முயற்சிக்கே அவரை பாராட்ட வேண்டும்.. தமிழகம் முழுவதிலும் முதல் 3 நாட்களுக்கு தியேட்டர்கள் ஹவுஸ்புல் என்று கணக்கு காட்டுகின்றன இந்த நிமிடம்வரையிலும்.. ஆச்சரியமாக இருக்கிறது..!

சிவில் என்ஜீனியரிங் படித்துவிட்டு தான் படித்த வேலைக்குத்தான் போக வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வீட்டில் தண்டச் சோறு பெயரையும் வாங்கிக் கொண்டு உலா வருகிறார் தனுஷ். அவ்வப்போது வீட்டு வேலையையும் செய்கிறார். வழக்கமான அப்பா.. வழக்கமான அம்மா.. கூடுதலாக தனுஷைவிட 3 வயது குறைந்த தம்பி.. அவன் ஐடி கம்பெனியில் பெரிய வேலைக்குப் போய் காரே வாங்கி விடுகிறான்.. வேலைக்கு போகக் கூடாது என்றில்லை.. ஆனால் தனக்குப் பிடித்த சிவில் என்ஜீனீயரிங் வேலைக்கு மட்டுமே போக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார் தனுஷ்.
இந்த லட்சியத்தை அடையும் நோக்கில் வீட்டில் தண்டச்சோறு என்று திட்டுக்களை வாங்கினாலும் சகித்துக் கொள்கிறார். இந்த நேரத்தில் பக்கத்து வீட்டில் “ச்சும்மா சினிமா ஹீரோயின் மாதிரியான பொண்ணு…” என்று அம்மா சரண்யாவாலேயே பாராட்டப்படும் அமலாபால் புதிதாக குடி வருகிறார். ஒரு குடிவேளையில் அவருடன் சந்திப்பு நிகழ்ந்து பின்பு அது சட்டென்று மாறிய வானிலையாக காதலாக உருவெடுக்க இந்த டிராக் தனியாக போய்க் கொண்டிருக்கிறது..
அமலாபாலுடன் ஒரு இனிய பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் தருணத்தில் அம்மா சரண்யாவுக்கு திடீர் நெஞ்சு வலி வர.. தொடர்ச்சியாக போன் கால்கள் வெட்டி ஆபீஸர் மகனுக்கு வருகிறது. அவர்தான் காதல் வேலையில் தீவிரமாக இருக்கிறாரே.. போனை எடுக்காமல்விட.. இங்கே அம்மா தவறிப் போகிறார்.. அப்பா கத்துகிறார்.. தம்பி கதறுகிறான். இவருக்கு ஒரு அழுகையும் வரவில்லை..
இந்த நேரத்தில் திடீர் திருப்பமாக சரண்யாவினால் உயிர் கிடைத்த(இதை காட்சியின் மூலமாக அமைத்திருக்கலாம்) இன்னொரு ஹீரோயின் சுரபியின் தந்தை வீடு தேடி வந்து “என்ன உதவின்னாலும் தயங்காமல் கேளுங்க.. செஞ்சு தர்றேன்…” என்று சொல்லிவிட்டுப் போகிறார். சுரபியும் பின்னொரு நாளில் தனுஷை தேடி வந்து தன்னுடைய தந்தையும் ஒரு பில்டிங் கன்ஸ்டரக்சன் கம்பெனிதான் வைச்சிருக்கார் என்று சொல்ல.. வேலை கேட்டுச் செல்கிறார் தனுஷ். வேலை பிடிக்கிறது. அங்கேயே அமர்ந்துவிடுகிறார்..
குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் கட்டப்படும் வீடுகளை கட்ட டெண்டர் எடுக்கிறார் சுரபியின் அப்பா. இதில் குறைந்த தொகையில் தனுஷ் தலைமையில் டெண்டர் கேட்க. கிடைக்கிறது.. டெண்டர் கிடைக்காத கோபத்தில் போட்டி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் இளைய வாரிசு அடிதடியில் இறங்க.. தனுஷ் அதனை எதிர்த்து களம் இறங்குகிறார். இறுதியில் என்னாகிறது என்பதுதான் படம்..!
இது முழுக்க முழுக்க தனுஷ் படம்தான்.. தனுஷின் நடிப்பைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.. காட்சிக்கு காட்சி அசத்தியிருக்கிறார். ஞாயிற்றுக்கிழமையன்று கடைக்கு அனுப்புகிறார்களே என்று சீறுகின்ற காட்சி.. “கறில கை வை.. பேசிக்கிறேன்..” என்று தம்பியை குதறிவிட்டுச் செல்வது.. அப்பாவின் அனைத்துவித திட்டுதல்களுக்கும், அம்மாவிடம் பாந்தமாக கேள்வி கேட்கும் பாணி.. அமலாபால் சொல்லும் காதல் கணைகளைக்கூட புரிந்து கொள்ளாத நிலையில் பேசுவது.. “அவனுக்கு மட்டும் கார்த்திக்குன்னு ஹீரோ பேரு.. எனக்கு மட்டும் ரகுவரன்னு வில்லன் பேரு…” என்று அம்மாவிடம் சீறுவது.. சிகரெட் பிடித்துவிட்டு அப்பாவிடம் சிக்கும் காட்சியில் பட்டு, பட்டென்று நறுக்குத் தெரித்தாற்போல் பேசும் தனுஷை பிடிக்காதவர்களே நிச்சயம் இருக்க முடியாது.. இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டு இந்த படத்தின் ஹீரோ ரகுவரன்.. அதனால்தான் இந்தப் படத்தின் வெற்றி முதல் காட்சியிலேயே உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது..!
வில்லனிடம் பேசும் ஸ்டைல்.. அந்த நீளமான வசனத்தை ஒரே ஷாட்டில் பேசி அசத்தியிருக்கும்விதம்.. கிளைமாக்ஸில் யாருமே எதிர்பார்க்காத ஒரு டிவிஸ்ட்டாக வில்லனையும் துணைக்கு அழைத்துக் கொண்டு கட்டிடத் திறப்பு விழாவுக்கு வருவது என்று திரைக்கதையும், இயக்கமும் அவருக்குத் துணை நிற்க தனுஷ் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்.
இரண்டாவதாக பாராட்ட வேண்டுமெனில் அது சரண்யாவுக்குத்தான்.. இப்படியொரு அம்மாதான் உலகத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள். பையன் குடித்துவிட்டு வந்துவிட்டான் என்று தெரிந்து அப்பாவுக்குத் தெரியாமல் தூங்க வைக்கும் படும் பதட்டம்.. மறுநாள் காலையில் அப்பாவை ஆபீஸிற்கு அனுப்பிவிட்டு விளக்கமாத்தை எடுத்து நாலு சாத்து சாத்தும் அம்மா என்று சரண்யா தன் பங்கை நிறைவாகவே செய்திருக்கிறார்..
பொருத்தமே இல்லாத ஜோடிதான்.. ஆனால் சமுத்திரக்கனியின் நடிப்பு பெஸ்ட்டோ பெஸ்ட்டு.. அண்ணன் டயலாக் டெலிவரியில் பின்னுகிறார்.. மைண்ட் வாய்ஸில் பேசுவது போல சன்னமான குரலில் அவ்வப்போது ஹாலில் இருந்து அவர் பேசும் வசனங்கள்தான் தியேட்டரை அதிர வைக்கின்றன. சரண்யா இறந்தவுடன் தனுஷ் மீது கோபம் கொண்டு அவர் செய்யும் அந்த ஆக்சன்.. தத்ரூபம்.. ஆனால் அடுத்த முறையும் சரண்யாவுடன் ஜோடியாக நடிக்க வேண்டாம்.. அக்கா தம்பி மாதிரியிருக்கு..! ப்ளீஸ்..!
கொஞ்சமும் வேலையே இல்லாமல் ச்சும்மா ஹீரோயின் என்ற பேருக்காக வந்து செல்கிறார் அமலாபால்.. ஆனால் அழகு கண்களில் சொக்கிக் கிடக்கிறது.. நடிப்பும் மிளிர்கிறது..! எல்லாமே ஒரு சில காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலுமே தொலைந்து போய்விட்டது..
இடைவேளைக்கு பின்பு வரும் விவேக்கின் போர்ஷன் மிக முக்கியம்தான்.. தனுஷுக்கு விவேக்தான் மிக பொருத்தமான காமெடி ஜோடியாக இருக்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை.. ஆனாலும் இந்தப் படத்துக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் இதிலும் மனைவியை சந்தேகப்படும் அந்த காமெடி தேவைதானா..? வேறு எதையாவது யோசித்திருக்கலாம்.. பேஸ்புக்கை கலாய்க்கலாம் என்றெண்ணி கடைசியாக அவரவர் மனைவியை சந்தேகப்படும்படியாக பார்க்க வைக்கும் லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார்கள்.. ம்ஹூம்.. இதனை முற்றிலும் மாற்றியிருக்க வேண்டும்.
முதல் பாடலில் இருந்து கடைசிவரையிலும் டிரம்ஸை போட்டு அடி, அடியென்று அடித்து நம் காதைக் கிழித்திருக்கிறார் அன்புத் தம்பி அனிருத்.. ஏதோ பாடல்கள்.. எதுவும் நமக்கு மனதில் நிற்கவில்லை.. ஆனால் ஒளிப்பதிவில் குறைவில்லை.. இருந்த இடத்திற்கேற்றாற்போல் கச்சிதமான ஒளிப்பதிவு.. கட்டிடம் கட்டும் இடங்களையெல்லாம் எங்கே தேடிப் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. அழகு மிளிர படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான வேல்ராஜ்.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு கேரக்டர் அந்த சின்ன சைக்கிள் பைக்.. அதனை ஒரு குறியீடாகவே வைத்து திரைக்கதை நகர்வது படு சுவாரஸ்யம்.. அமலாபாலை ஏற்றிக் கொண்டு செல்லும்போது இதைத் தாண்டி ஒரு சிறுவன் சைக்கிள் செல்லும்போது தானாகவே வந்துவிட்டது காமெடி.. அந்த பைக் சைக்கிள் கிளை கதைக்கு இயக்குநருக்கு ஒரு சபாஷ்..!
அதிகப்படியான மதுபானம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், புகைப்பிடிக்கும் காட்சிகளும் இடம் பிடித்திருப்பது மட்டும்தான் இந்தப் படத்தின் மீதான குறைகள்.. அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை முடிந்தவுடன் தனுஷ் ஸ்டைலாக சிகரெட் பற்ற வைத்துவிட்டு நடப்பதெல்லாம் கொஞ்சமல்ல ரொம்பவே ஓவர்.. அதை செய்திருக்கவே கூடாது.. படத்தின் தன்மையை அதிகமாக அது பாதித்திருக்கிறது. ஏதோ ஹீரோயிஸ படம் போல இந்தப் படத்தை அடையாளப்படுத்துகிறது அந்தக் காட்சி..
ஒரு பொறியியல் பட்டதாரி.. உண்மையாகவே மிகத் திறமையான முறையில் கொடுத்த பட்ஜெட்டிற்குள் அந்தக் கட்டிடத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறான். நியாயமானவன்.. படித்த படிப்புக்கு ஏற்றவன்.. “கொஞ்சம் குறைத்து செய்தால் அது சரிவராது.. கட்டிடம் இடிந்துவிடும்… செய்ய மாட்டேன்…” என்று சொல்லி வரும் வேலையையும் விட்டுவிட்டு வருபவன்.. தங்களை அடிக்க ஆட்களை அனுப்பியவனிடம் திரும்பவும் சண்டைக்கு போகாமல் அவனை வரவழைத்து மன்னிப்பு கேட்க வைப்பதுகூட ஒரு வித்தியாசமான திருப்பம்தான்.. அதுவும் பொறியியல் பட்டதாரிகள் மீதான மதிப்பை கூட்டியது..
இன்றைக்கு உண்மையாகவே இந்தியாவில் உருவாக்கப்பட்ட பொறியியல் பட்டதாரிகளில் 60 சதவிகிதம் பேருக்கு மட்டுமே அவர்கள் நினைத்த வேலைகள் கிடைத்துள்ளன. மீதம் பேர் வேறு வேறு துறைகளில்.. வேறு வேறு வேலைகளில் வேறு வழியில்லாமல் ஈடுபட்டிருக்கிறார்கள். அதிகப்படியான மாணவர்களின் வருகை ஒரு பக்கம்.. வேலைகள் குறைவானது இன்னொரு பக்கம்.. இதில் இரண்டுக்கும் நடுவில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களது இன்றைய அவல நிலையை ஒரு பாடல் காட்சியிலும், இடைவேளைக்கு பின்பான சில காட்சிகளிலும் அற்புதமாக படமாக்கியிருப்பதன் மூலம் இதன் இயக்குநர் வேல்ராஜ் நிச்சயம் இந்தாண்டு பேசப்படக்கூடிய இயக்குநராக உருமாறுகிறார் என்பதில் சந்தேகமில்லை..
இப்படியொரு துறை சார்ந்த படமாகவும், பொறியியல் பட்டதாரிகளின் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகவும் போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த கிளைமாக்ஸில் தனுஷ் ஈடுபடும் சண்டை காட்சியும், புகைப்பிடிக்கும் காட்சியும் இது தமிழ்ச் சினிமா ஹீரோ தனுஷின் படம் என்பதாக போய் முடிந்திருப்பது மிகப் பெரிய துரதிருஷ்டம்..
எப்படியிருந்தாலும் இதுவரையிலான தனுஷின் நடிப்பு கேரியரில் இதுதான் மிகச் சிறந்த படம் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.. இந்தப் பெருமையை அவருக்குக் கொடுத்த அறிமுக இயக்குநர் வேல்ராஜுக்கு நமது இனிய வாழ்த்துகள்..!
வேலையில்லா தமிழர்களுடன், வேலையில் இருக்கும் தமிழர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் வேலையில்லா பட்டதாரி..!

5 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Nondavan said...

SUPER ANNAE, ஈஇந்த வாரம் பார்த்துவிட்டு சொல்கிறேன்

Unknown said...

Good movie. And DHANUSH acting super.
Super hit

துளசி கோபால் said...

இசையைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளது உண்மையே! நானும் அவ்வாறே உணர்ந்தேன்.

YESRAMESH said...

தனுஷ் ரசிகர் மன்ற தலைவரா நீங்க.