அழகன் அழகி - சினிமா விமர்சனம்



07-04-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தச் சினிமாவின் முதல் 10 நிமிட காட்சிகளை பார்க்காதவர்களை கொடுத்து வைத்தவர்கள் என்று சொல்ல வேண்டும். சிம்புவின் லன் ஆன்தம் பாடலுக்கு எதிராக பவர் ஸ்டார் என்று காமெடியனை வைத்து பாடவும், ஆடவும் வைத்திருக்கிறோம்.. யூ டியூபில் 4 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். அத்தனை சூப்பர் ஹிட்டாகிவிட்டது பாடல். அதேபோல இந்தப் படமும் ஹிட்டாகும் என்று ஒரு நம்பிக்கையோடு சொன்னார் படத்தின் இயக்குநர் நந்தா பெரியசாமி..! அந்த 4 லட்சம் பேரும் இந்தப் படத்தை பார்த்திருந்தால் இந்நேரம் இது சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கும்.. ம்ஹூம்..! ஆசை யாரை விட்டது..?

நந்தா பெரியசாமி.. உண்மையிலேயே பெரிய படிப்பாளி.. இலக்கிய வாசனை உள்ளவர்.. புத்தக விரும்பி.. அவர் மீதான முதல் அபிப்ராயம் மாத்தி யோசியில் டமால் டுமீலானாலும் இதில் கொஞ்சமாவது மீட்டெடுப்பார் என்று நினைத்துதான் போனேன்.. மறுபடியும் கத்தி நம் கழுத்தில்தான்..!



புதுமுக ஹீரோ ஜாக் தனது ஆட்களான சாம்ஸ், ஆர்த்திகணேஷ் சகிதமாக கிராமங்களுக்கு டிவி அவுட்டோர் வேன் மூலமாக வருகிறார். அவருடைய டிவி சேனலில் புதுமையான நிகழ்ச்சியொன்றை செய்ய இருப்பதாகவும், அதில் நடிக்க விருப்பமுள்ளவர்களைத் தேடியே வந்ததாகவும் சொல்லி, தலைக்கு 1500 ரூபாய் வசூலித்து அவர்களை புகைப்படமெடுத்து தள்ளுகிறார்கள்..!

காரைக்குடி அருகே நாட்டரசன்கோட்டை அவர்கள் வரும்போது அந்த ஊரில் ஒரு வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் ஹீரோயின் ஆருஷி இவர்களிடம் சிக்குகிறார். தனது முகம் டிவியில் தெரிய வேண்டும் என்பதற்காக தன்னை தேர்வு செய்யும்படி சொல்கிறார். ஹீரோ ஜாக்கோ, ஹீரோயினை மனதுக்குள் விரும்பி அதை அவரிடம் சொல்லாமலேயே தவிர்த்து வருகிறார்..!

ஹீரோயினை அந்த வீட்டில் இருப்பவரான ஜி.எம்.குமாரின் மகனுக்கு திருமணம் செய்துவைக்க முயற்சிகள் நடக்க ஆருஷீயை அழைத்துக் கொண்டு தப்புகிறது டிவி டீம். இன்னொரு பக்கம் இந்த டிவி டீமே டுபாக்கூர் டீம் என்பதை இவர்கள் முன் ஆடிப் பாடி காண்பித்த இன்ஸ்பெக்டர் ரத்தினவேலுக்குத் தெரிய வர.. அவரும் கொலை வெறியோடு இவர்களைத் தேடி வருகிறார். ஜி.எம்.குமாரின் தம்பி ரவி மரியாவும் தனது அடியாட்களுடன் இவர்களைத் துரத்த இறுதியில் இவர்கள் என்னவாகிறார்கள் என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

தன்னம்பிக்கை உள்ள அனைவருமே அழகனும், அழகியும்தான் என்கிறார் இயக்குநர். இதைச் சொல்லத்தான் இத்தனை ரவுண்டடித்திருக்கிறார். கிராமங்களில் ஆட்களை தேர்வு செய்வதில் காட்டப்படும் கிளிப்பிங்ஸ்களில் ஒன்றிரண்டை தவிர மற்றவைகள் சுவாரஸ்யமே இல்லை..! இதில் பலமாக கத்திரியைப் போட்டிருக்கலாம்..! 

இன்னொரு பெரிய மைனஸ் ஹீரோ ஜாக்கும், ஹீரோயின் ஆருஷியும்.. ஆருஷியின் திக்கித் திணறி பேசும் சின்னத்தனமானப் பேச்சு கொஞ்ச நேரத்திலேயே போரடித்துவிடுகிறது.. ஜாக், டைமிங்காக வசனம் பேசி, நடித்திருந்தாலும் ஏதோ ஒன்று இடிக்கிறது..! முழுமையாக ரசிக்க இயலவில்லை..!

சாம்ஸ் மற்றும் ஆர்த்தி கணேஷின் அலம்பல்களும், அரட்டைகளையும் பார்த்தால் இன்ஸ்பெக்டர் ரத்தினவேலுவின் வெறி சரியானதுதான் என்று தோன்றுகிறது..! சென்னையில் வேலையில் பொறுப்பெடுத்தவர் தனி ஆளாக இவர்களைத் தேடி ஊர், ஊராக அலைவதையும், ரகசியமாக இந்தக் கேஸை டீல் செய்வதாகவும் இவர் சொல்வது இயக்குநர் எழுதிய பயங்கரமான லாஜிக்..! 

பிரபலமான சேனல் ஒன்றின் பெயரை வைத்து ஊர் ஊராகப் போய் தேர்வு நடத்துவது இப்போதெல்லாம் சாத்தியமானதுதானா..? ஒரு நாளில் சென்னைக்கு தெரிந்துவிடாது.. இவ்வளவு பெரிய லாஜிக் ஓட்டையெல்லாம் இருக்கும்போது மற்றதெல்லாம் நமக்கெதுக்கு..? இடைவேளைக்கு பின்புதான் அந்தப் பகுதி டிவி சேனல் ரிப்போர்ட்டருக்கு தகவல் போய் அவர் தலைமைக்குத் தகவல் கொடுத்து அது போலீஸுக்கு போகிறதாம்..! 

இதைவிட கொடுமையான காமெடி.. இந்த டீமை தேவகோட்டை காட்டுக்குள் இருக்கும் தீவிரவாதிகள் சந்திக்கிறார்களாம்.. அவர்களும் ஒரு கதை சொல்கிறார்கள். அவர்களது குடும்பத்தினரை போலீஸார் கொன்றதால் இவர்களும் போலீஸை கொன்றார்களாம்.. இவர்களுடன் ஒரு அம்மாயி.. அந்தம்மாவை பார்த்தவுடன் ஒரு குத்துப் பாட்டு இருக்குன்னு நினைச்சோம்.. அது அப்படியே..!  எதிர்பாராமல் எதிர்பாராத இடத்தில் இருந்து கிடைக்கும் உதவியைப் போல இந்தத் தீவிரவாதிகள் உதவியோடு இந்த டீம் தப்பிப்பதாகவும் சொல்வதெல்லாம் பழம் கதை.. இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா..!

ஒரேயொரு பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது..! ‘மழைத்துளி நீயே’ என்ற இந்த மெலடி பாடலை படமாக்கியவிதமும் அழகுதான்.. இது ஒன்றுதான் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது.. பிரபு தயாளின் ஒளிப்பதிவும் ஓகேதான்..! வேறொன்றுமில்லை..!

இறுதியில் சோகத்தை திணித்து வைத்தால்தான் மக்கள் ரசிப்பார்கள் என்று நினைத்தாரோ என்னவோ..? ஆருஷிக்கு அவ்வளவு பெரிய  சோகத்தைக் கொடுத்து, அதனை சமன்படுத்த நினைக்கும் காட்சியும் நமக்குத்தான் சோதனையாக இருக்கிறது..! தன்னம்பிக்கை உள்ள அனைவருமே அழகன், அழகிதான் என்ற அழகான கான்செப்ட்டை வைத்து எப்படியோ கதை செய்திருக்கலாம்.. நல்லதொரு வாய்ப்பை மிஸ் செய்துவிட்டார் இயக்குநர் நந்தா பெரியசாமி..!

6 comments:

joe said...

அண்ணே, நீ ரொம்ப நல்லவன்னே. தியேட்டர்ல ஓடாத படத்துக்கு எல்லாம் இப்படி விமர்சனம் எழுதுறியே. 200 பக்கத்துக்கு கமெண்டு போடுற வவ்வால் அண்ணாச்சி கூட இன்னும் எட்டிப்பாக்களையே. தலைவி விகாசா இடுப்ப ரசிச்சு எழுதினதுக்கு நன்றிகடனாக கடையை தொறந்து வைக்க வந்தேன்.

சேட்டை விமர்சனம் எப்ப அண்ணே போடுவ. கொஞ்சம் அஞ்சலி விவகாரம் பத்தி பதிவு போட்டால் தன்யனாவேன்

உண்மைத்தமிழன் said...

[[[joe said...

அண்ணே, நீ ரொம்ப நல்லவன்னே. தியேட்டர்ல ஓடாத படத்துக்கு எல்லாம் இப்படி விமர்சனம் எழுதுறியே. 200 பக்கத்துக்கு கமெண்டு போடுற வவ்வால் அண்ணாச்சி கூட இன்னும் எட்டிப்பாக்களையே. தலைவி விகாசா இடுப்ப ரசிச்சு எழுதினதுக்கு நன்றிகடனாக கடையை தொறந்து வைக்க வந்தேன்.]]]

வருகைக்கு நன்றி தம்பீ..!

இந்தப் படம் வெற்றிகரமான 2-வது வாரமா சென்னைல மட்டும் ஓட்ட வைச்சுக்கிட்டிருக்காங்க..!

[[[சேட்டை விமர்சனம் எப்ப அண்ணே போடுவ.]]]

விமர்சனம் எழுதக் கூட முடியாத படமால்ல இருக்கு. அதான் யோசிக்கிறேன்..!

[[[கொஞ்சம் அஞ்சலி விவகாரம் பத்தி பதிவு போட்டால் தன்யனாவேன்.]]]

அதான் எல்லாரும் பத்தி, பத்தியா எழுதியிருக்காங்களே..? நானென்ன புதுசா எழுதப் போறேன்.. மொதல்ல அந்தப் பொண்ணு வெளில வரட்டும்..!

ரிஷி said...

//
[[[சேட்டை விமர்சனம் எப்ப அண்ணே போடுவ.]]]

விமர்சனம் எழுதக் கூட முடியாத படமால்ல இருக்கு. அதான் யோசிக்கிறேன்..!//

"U" படம்தானே? ரொம்ப மொக்கையா இருக்கா? தியேட்டருக்கு போயி பார்க்கலாமா?

உண்மைத்தமிழன் said...

[[[ரிஷி said...

"U" படம்தானே? ரொம்ப மொக்கையா இருக்கா? தியேட்டருக்கு போயி பார்க்கலாமா?]]]

தப்பித் தவறிக்கூட போயிராதீங்க ஸார்.. அதுலேயும் பேமிலியோட பார்க்கக் கூடிய படமும் அல்ல..! ஆக்ச்சுவல்லி டரிபுள் ஏ -தான் கொடுத்திருக்கணும்..! அவ்வளவு கொடுமை..!

joe said...

அண்ணே, கடையில டீ ஆத்தினால்தானே பேப்பர் படிக்கவாவது கூட்டம் வரும். அந்த சேட்டை விமர்சனம் போடுன்னே. எப்பெடி கொடுமையான படங்கள் எடுக்கரானுங்கன்னு எங்கள மாதிரி ரசிகர்களுக்கு தெரியவேனமா? இதுல இவனுங்க எல்லா தொலைகாட்சியிலும் கொடுக்கற டார்ச்சர் தாங்கல.

அஞ்சலி வந்துட்டாலே. உங்க கருத்து என்னண்ணே? யாரு சொல்லுறது உண்மையென்று தலை சுத்துது

உண்மைத்தமிழன் said...

[[[joe said...

அண்ணே, கடையில டீ ஆத்தினால்தானே பேப்பர் படிக்கவாவது கூட்டம் வரும். அந்த சேட்டை விமர்சனம் போடுன்னே. எப்பெடி கொடுமையான படங்கள் எடுக்கரானுங்கன்னு எங்கள மாதிரி ரசிகர்களுக்கு தெரியவேனமா? இதுல இவனுங்க எல்லா தொலைகாட்சியிலும் கொடுக்கற டார்ச்சர் தாங்கல. அஞ்சலி வந்துட்டாலே. உங்க கருத்து என்னண்ணே? யாரு சொல்லுறது உண்மையென்று தலை சுத்துது.]]]

அந்தப் படத்துக்கு விமர்சனம் எழுதணுமான்னு யோசிச்சு கைவிட்டுவிட்டேன்..! தயவு செய்து நீங்களும் படம் பார்க்கணும்ன்ற ஆசையையும் விட்ருங்க..!