கோழி கூவுது - சினிமா விமர்சனம்

28-12-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தாண்டின் இறுதியில் தமிழ்ச் சினிமாவிற்குக் கிடைத்திருக்கும் மற்றுமொரு குறிப்பிடத்தக்க படம் இது..! அட்டக்கத்தியை போன்றே இந்த கோழி கூவுது-ம் ஒரு காதல் கதைதான்.. ஆனால் முன்னது நகரம் சார்ந்தது.. பின்னது முழுக்க, முழுக்க கிராமியத்தனம் சார்ந்தது..!

நீங்கள் ஏற்கெனவே பார்த்த அதே சலிப்பான காதல்தான் என்றாலும், அது தோன்றுகின்ற விதம், காதலர்களுக்குள் ஏற்படுகின்ற ஈர்ப்பு, அது காதலாக மாறுகின்ற தருணம், காதலுக்கு எப்போதும் வரும் எதிர்ப்பு.. காதலர்களின் பரிதவிப்பு.. இது அனைத்துமே இந்தப் படத்திலும் உண்டு.. ஆனால் புதிதாக..!


கோழி விற்கும் சாதாரணமானவனுக்கும், ஊர்ப்பணக்காரரின் மகளுக்குமான காதலுக்கு எதிர்ப்பு ஜாதி, மதம் கடந்தும் தனி நபரின் விருப்பு வெறுப்பையும் தாண்டி பாசத்தால் முதலில் நிராகரிக்கப்பட்டு பின்பு ஏற்கப்படுவதுமாக அமைத்திருக்கும் திரைக்கதைதான் இப்படத்தின் சுவாரஸ்யம்..!

கோழிகளில் இத்தனை வகைகள் உண்டு என்பதை இப்படத்தை பார்த்தும் தெரிந்து கொண்டேன்..! ஏதோ மேம்போக்காக கோழி விற்பவன் என்று சொல்லாமல் கோழி தொழிலின் அத்தனையையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். செய்வது திருட்டுத் தொழில் என்றாலும், அதனை செய்வதற்கு அதில் ஈடுபட்டுள்ள அனைவருக்குமே ஒரு காரண, காரியங்கள் இருக்கின்றன என்பதையும் ஒளிவுமறைவில்லாமல் திரைக்கதையில் விளக்கியிருக்கிறார் இயக்குநர்..!


தன் முந்தைய 2 படங்களைவிடவும் இதில் அதிகமாகவே நடித்திருக்கிறார் அசோக். ஹீரோயின் இந்தத் தொழிலை கைவிடும்படி சொன்னதும், அதற்கு அவரிடம் இருக்கும் நியாயங்களைச் சொல்லும் அசோக்கின் நடிப்பு அதனை ஏற்றுக் கொள்ள வைக்கக் கூடியதாகவே இருந்தது.. சின்ன சின்ன விஷயங்களில்.. ரியாக்ஷன்களில், காமெடி டெலிவரிகளில் அசத்தியிருக்கிறார். ரோகிணியிடம் தன் காதலை நியாயப்படுத்தி பேசுகின்ற காட்சியில் யாருமே அதற்குப் பின் பேச முடியாத அளவுக்கு தன் கருத்தை அழுத்தமாக பதிவு செய்வது போன்ற அவரது நடிப்பு ஓகே..! 


ஹீரோயின் ஸ்ரீஜாரோஸ்.. வழக்கம்போல கடவுளின் தேசத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறார். பெயருக்கேற்றார்போல் ரோஸ் கலரில் அநியாயத்திற்கு அழகாய் இருக்கிறார்..! 


பரந்து விரிந்திருக்கும் அந்தக் கண்கள் மூலமாக அவர் காட்டியிருக்கும் ரியாக்ஷன்கள்.. ஆக்சன்கள்.. கொஞ்சல்கள்.. கெஞ்சல்கள்.. அத்தனையும் இயக்குநருக்கு போனஸ்..! பாடல் காட்சிகளிலும், குளியல் காட்சிகளிலும் முகத்திற்கு இத்தனை குளோஸப் வைத்து ஒளிப்பதிவாளரும் தன் பங்குக்கு அழகை ஆராதனை செய்திருக்கிறார்..! 


அந்த சிவந்த அதரங்களும், சலிப்படைந்த முக பாவனைகளும், சிரிக்கின்ற காட்சிகளில் குழி விழுந்த கன்னங்களின் அபாயகரமான அழைப்பும்.. சொக்க வைத்தது என்றால், நடிப்பிலும் அம்மணி சோடை போகவில்லை.. தன்னை ஏமாற்றிவிட்டு சென்ற அசோக்கை ஓரிடத்தில் பார்த்தவுடன் அவருடைய முகம் காட்டிய பாவனையை மறக்க முடியவில்லை..! 


இதே பொண்ணைத்தான் பிற்பாதியில் பல இடங்களில் கதறி அழுக வைத்து நடிக்கவும் வைத்திருக்கிறார்கள்..! அந்த பால்கோவா முகத்தில் கண்ணீர்க் கோடுகள் மேலிருந்து கீழிறங்கி ஓடுவதைக்கூட குளோஸப்பில் காட்டி நம் சாபத்தையும், கோபத்தையும் சம்பாதித்திருக்கிறார் இயக்குநர்.. புன்னகை இளவரசிக்கு போட்டியாக இன்னொரு இளவரசி கிடைத்திருக்கிறார்..! இவருக்கு சரியான கைட்லைன்ஸ் கிடைத்தால் நிச்சயம் பெரிய ரவுண்ட் வரலாம்..! 

என் பார்வையில் இந்த ஹீரோயினான ரோஸ், கடைசி நேரத்தில் அறிமுகமாகியிருந்தாலும் இந்த ஆண்டு அறிமுகமான ஹீரோயின்களில் முதலிடத்தை பிடித்திருக்கிறார். இரண்டாமிடத்தை லட்சுமி மேனனும், மூன்றாமிடத்தை கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின் ஹீரோயின் நந்திதாவும் பெறுகிறார்கள்..!


படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொருவர் நரேன்..! தான் பெற்ற பிள்ளையை மனைவியின் இறப்பு காரணமாகவும், ஜோஸியக்காரன் சொன்னான் என்பதற்காகவும் 18 ஆண்டுகள் தனியாக வைத்திருந்து வளர்த்த சோகத்தை உணர்ந்த ஒரு தந்தையின் உணர்வுகளை பிரதிபலித்திருக்கிறார்.. எப்போதும் கோபத்துடன் கேமிராவை பார்த்தே பேசிப் பழகியிருக்கும் நரேனுக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு சவால்தான்.. தன் மகளுக்கும், தனக்குமான பாசப் போராட்டத்தை அவர் விவரிக்கும் அந்த நீண்ட காட்சியில் இயக்குநரையும் மீறிய ஒரு தனி பாணி வெளிப்பட்டிருப்பதுபோல் தெரிகிறது.. தன் மகளின் சந்தோஷமே தனக்கு முக்கியம் என்பதை அவர் அழுத்தமாகச் சொல்லும் காட்சியிலும், ரோகிணியிடம் அவ்வளவு பிரச்சினையிலும் பணிவாகப் பேசும் அந்தப் பக்குவமும் ரஞ்சித்தின் சிறந்த இயக்கத்தைக் காட்டுகிறது..!


ரோகிணியின் அந்த மனமாற்றத்திற்கு முன்புவரையிலுமான அவரது நடிப்பு சரண்யா பொன்வண்ணனுக்கு சரியான போட்டி என்றே சொல்ல வேண்டும்..! அசோக்கின் காதலை மறுத்து அவர் பேசுகின்ற காட்சியும், போஸ் வெங்கட்டை எச்சரிக்கும் காட்சியிலும் அசத்தியிருக்கிறார்..! போஸ் வெங்கட் இனிமேல் சீரியல்கள் பக்கம் தலைவைத்துக்கூட படுக்க மாட்டேன் என்று வீர சபதம் போட்டு அதில் உறுதியாகவே இருக்கிறார். அதற்கு இந்தப் படம் இன்னும் கொஞ்சம் உரம் போட்டு உறுதியாக்கியிருக்கிறது..!


போஸ் வெங்கட்டின் மிக முக்கிய படங்களில் இதுவும் ஒன்றாகிவிட்டது..! இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் எனக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.. அனைத்து காதல் திரைப்படங்களிலும் வில்லனை காதலுக்குத்தான் எதிரியாக காட்டுவார்கள்.. இதில் தனி மனிதனின் ஈகோவை முன்னிறுத்திக் காட்டிவிட்டு, தனது குடும்ப நலனுக்காக, அண்ணனுக்காக தானும் விட்டுக் கொடுக்கும் ஒரு தம்பியாக இறுதியில் காட்டியிருப்பது வித்தியாசம்தான்..! முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் தனது அண்ணன் மேல் மரியாதை வைத்திருப்பவர்.. அவருடைய பேச்சுக்குக் கட்டுப்படுபவர் என்பதை பல காட்சிகளில் அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருப்பதால், காதலர்களைத் தேடியலையும் அந்தக் காட்சியிலும், கிளைமாக்ஸிலும் போஸின் நடிப்பு குறை சொல்ல முடியாதது..!

புதுமுக இசையமைப்பாளர் ராம்தாஸின் இசையில் வாடாமல்லிக்காரி பாடல் அசத்துகிறது..! அதேபோல் இந்தப் பாடலின் காட்சிகளும் ரசனையோடு படமாக்கப்பட்டுள்ளது.. 


வீட்டின் கூடத்தில் பாவாடை, தாவணியில் கோழிக் குஞ்சைக் கையில் தூக்கி வைத்துக் கொண்டு ஹீரோயின் காட்டும் அந்த எக்ஸ்பிரஷன்.. ம்.. சூப்பர்..! அதேபோல் சாரப் பாம்பு போல பாடலும் இனி எஃப்.எம்.களில் அதிகம் ஒலிக்கப்படும் என்று நினைக்கிறேன்..!  

படத்தின் இரண்டு கதாபாத்திரங்கள் இரு பக்கமும் முக்கியத் தூணாக இருக்கின்றன. ஒரு பக்கம் ஹீரோயினின் பாட்டியாக ஜோதிலட்சுமி. மறுபக்கம் ஹீரோவுக்கு வேலை கொடுத்திருக்கும் முதலாளி மயில்சாமி..! இருவருமே ஆளுக்கொரு பக்கமாக இறுதியில் நியாயம் பேசுகிறார்கள்.. அதிலும் உணர்ச்சியோடு.. ஜோதிலட்சுமி இப்படி நடிப்பை 'மட்டுமே' காட்டி எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்..? 

கிளைமாக்ஸில் ஹீரோயின் அசோக்கை தேடி வரும் காட்சி மட்டும், கொஞ்சம் நெருடலே தவிர.. மற்றபடி இந்தப் படத்தில் எந்தத் தவறையும் என்னால் சுட்டிக் காட்ட முடியவில்லை..!  பார்த்த விஷயத்தையே, பார்க்காத கோணத்தில், நியாயமான காரணங்களோடு, சிறந்த இயக்கத்தோடு கொடுத்தாக வேண்டு்ம் என்கிற கட்டாயம் காதலை இயக்கும் இயக்குநர்களுக்கு உண்டு. அந்த வரிசையில் அட்டக்கத்தி ரஞ்சித்திற்கு போட்டியாக இன்னொரு ரஞ்சித் இன்றைக்கு உருவாகியிருக்கிறார்..! 

இந்தப் படம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாகவே தயாராகி பல முறை ஸ்பெஷல் ஷோ போட்டுக் காண்பிக்கப்பட்டிருந்தது.. படத்தை கடைசியாக வாங்கி டிங்கரிங் வேலை செய்து வெளியிட்ட லண்டனைச் சேர்ந்த அந்த தொழிலதிபருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்..! இது போன்ற படங்களை ஆதரிப்பது, சினிமா ஆர்வலர்கள், மற்றும் ரசிகர்களுக்கு முதலாளிகள் செய்யும் தொண்டாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த லண்டன் முதலாளியும் மிகுந்த தைரியமானவர். பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த டீமை போட்டு புரட்டி எடுத்துவிட்டார். “நான் இந்த பிராஜெக்ட்டுக்குள் கால் வைத்தவுடனேயே செய்த முதல் வேலை படத்தின் பி.ஆர்.ஓ.வை தூக்கியதுதான்..” என்று ஓப்பன் மைக்கில் சொன்னபோது பத்திரிகையாளர்களே அசந்துவிட்டார்கள். “அந்த டீமுக்குள் இருந்த ஈகோ பிரச்சனை.. ஏற்றத்தாழ்வுகள் அனைத்தையும் ஒரு வாரத்தில் சரி செய்து இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும்வரையிலும் சொந்தப் படம்போல உழைக்க வைத்தேன்” என்றார். இந்தத் தொழிலதிபர் தொடர்ந்து படங்களை தயாரித்தால் நன்றாகத்தான் இருக்கும்..! 

இன்றைக்கு ரிலீஸ் ஆகியிருக்கும் படங்களில் இந்த ஒன்று மட்டுமே தேறியிருக்கிறது என்பதால், கடைசி நேரத்தில் வந்திருக்கும் இதுவொரு வெற்றிப் படமாகவும் அமையட்டும் என்று வாழ்த்துவோம்..  படத்தின் ஹீரோயினுக்காகவே நான் இன்னும் 3 முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்..! நீங்க..????

16 comments:

Caricaturist Sugumarje said...

ஜொள்ளு ரொம்ப வடியுதுண்ணா... நல்லா துடைச்சிக்கோங்க!

rajasundararajan said...

//அந்த சிவந்த உதரங்களும்//

'உதரம்'னா வயிறு இல்லையோ? அது வோல்கா தீரத்துப் பெண்களுக்கே வெள்ளையாத்தானே இருக்கும்? மல்லுகளுக்கு....?!!!

'அதரம்'னு சொல்ல நெனைச்சீங்களோ? தெரியாத பாஷைல எழுதுனா இதுதான் கோளாறு. எங்களுக்கும் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியலை.

கதாநாயகி அழகா இருக்காங்கன்னு சொல்ல வர்றீங்களா, தம்பி?

குரங்குபெடல் said...

"ஜோதிலட்சுமி இப்படி நடிப்பைக் காட்டி எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்..? "


இதன் மூலம் அண்ணனின் வயது

60 ஆயிடுச்சி என அறிவிக்க படுகிறது

உண்மைத்தமிழன் said...

[[[Caricaturist Sugumarje said...

ஜொள்ளு ரொம்ப வடியுதுண்ணா... நல்லா துடைச்சிக்கோங்க!]]]

ஓகே... ஓகே.. ராத்திரி நேரம் வேறய்யா.. அதுதான்..!

உண்மைத்தமிழன் said...

ppprajasundararajan said...

//அந்த சிவந்த உதரங்களும்//

'உதரம்'னா வயிறு இல்லையோ? அது வோல்கா தீரத்துப் பெண்களுக்கே வெள்ளையாத்தானே இருக்கும்? மல்லுகளுக்கு....?!!! 'அதரம்'னு சொல்ல நெனைச்சீங்களோ? தெரியாத பாஷைல எழுதுனா இதுதான் கோளாறு. எங்களுக்கும் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியலை.]]]

ஹி.. ஹி... ஆமாங்கண்ணா..! மாத்திச் சொல்லிப்புட்டேன்..!

[[[கதாநாயகி அழகா இருக்காங்கன்னு சொல்ல வர்றீங்களா, தம்பி?]]]

அழகா இருக்காங்களாவா..? படத்தைப் போய் பாருண்ணே.. பார்த்துட்டு சொல்லுண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[குரங்குபெடல் said...

"ஜோதிலட்சுமி இப்படி நடிப்பைக் காட்டி எத்தனை வருடங்கள் ஆகியிருக்கும்..? "

இதன் மூலம் அண்ணனின் வயது
60 ஆயிடுச்சி என அறிவிக்கபடுகிறது.]]]

அடப்பாவிகளா..! ஒரு பேச்சுக்குச் சொன்னா இப்படியா..?

வவ்வால் said...

அண்ணாச்சி,

கதைய கேட்கும் போதே பயங்கர "டெம்ப்ளேட்டா"இருக்கே, அதுக்கு அப்புறமும் திரையில புதுமையா இருக்குன்னு சொல்லுறிங்க,இடிக்குதே.

//இதன் மூலம் அண்ணனின் வயது
60 ஆயிடுச்சி என அறிவிக்கபடுகிறது.]]]

அடப்பாவிகளா..! ஒரு பேச்சுக்குச் சொன்னா இப்படியா..?//

ஜோதிலட்சுமி என்றப்பெயரே எனக்கு சேது படத்துக்கு அப்புறமா தான் தெரிய வந்தது, அதுக்கு அப்புறம் பழைய படமெல்லாம் பார்த்து அப்டேட் ஆனேன், நீங்க நடிப்பை எல்லாம் ஒப்பிடும் அளவுக்கு பார்த்து இருக்கீங்கன்னா 60னு சொன்னதே கம்மி தான் :-))

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, கதைய கேட்கும் போதே பயங்கர "டெம்ப்ளேட்டா"இருக்கே, அதுக்கு அப்புறமும் திரையில புதுமையா இருக்குன்னு சொல்லுறிங்க... இடிக்குதே.]]]

அது திரைக்கதைலதாண்ணே இருக்கு. படத்தைப் பார்த்திட்டு வாண்ணே..!

//இதன் மூலம் அண்ணனின் வயது
60 ஆயிடுச்சி என அறிவிக்கபடுகிறது.]]]

அடப்பாவிகளா..! ஒரு பேச்சுக்குச் சொன்னா இப்படியா..?//

ஜோதிலட்சுமி என்ற பெயரே எனக்கு சேது படத்துக்கு அப்புறமாதான் தெரிய வந்தது.. அதுக்கு அப்புறம் பழைய படமெல்லாம் பார்த்து அப்டேட் ஆனேன். நீங்க நடிப்பை எல்லாம் ஒப்பிடும் அளவுக்கு பார்த்து இருக்கீங்கன்னா 60-னு சொன்னதே கம்மிதான் :-))]]]

வவ்ஸு.. அவ்ளோ சின்னப் புள்ளையா நீங்க..? அக்காவும், தங்கச்சியும் சேர்ந்து ஆடிருக்கிறதையெல்லாம் பார்த்திருக்கேளா..? சொக்கிருவேள்..! சரி.. உங்க ஆசைக்கு 80-ன்னு வைச்சுக்குங்க..!

வருண் said...

***படத்தின் ஹீரோயினுக்காகவே நான் இன்னும் 3 முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்..! நீங்க..????***

அண்ணே! நீங்க இப்படி ஏத்திவிட்டால், "இவட்ட என்ன இருக்கு?"னுதான் நம்ம மக்கள் நெனைப்பாங்க?

ஏன் இப்படி ஏத்திவிட்டு கவுத்துறீங்க? :)

வருண் said...

ஜோதி லட்சுமினா, வசந்தமாளிகையில், குடிமகனே பாட்டுக்கு ஆடிவாங்களே அந்த ஆண்ட்டிதானே?

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

***படத்தின் ஹீரோயினுக்காகவே நான் இன்னும் 3 முறையாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்..! நீங்க..????***

அண்ணே! நீங்க இப்படி ஏத்திவிட்டால், "இவட்ட என்ன இருக்கு?"னுதான் நம்ம மக்கள் நெனைப்பாங்க? ஏன் இப்படி ஏத்திவிட்டு கவுத்துறீங்க?:)]]]

போய்ப் பார்க்கட்டுமே..? நீங்களும் பாருங்க வருண்.. பார்த்திட்டுச் சொல்லுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

ஜோதி லட்சுமினா, வசந்தமாளிகையில், குடிமகனே பாட்டுக்கு ஆடிவாங்களே அந்த ஆண்ட்டிதானே?]]]

அடப்பாவி தமிழா..!? ஜோதிலட்சுமியை தெரிஞ்சு வைச்சுக்கமாலேயே இத்தனை வருஷமா தமிழனா இருக்கியா..? அவமானம்..!

சேது படத்துல ஒரு டப்பாங்குத்து பாட்டுக்கு ஆடியிருக்குமே ஒரு பேரிளம் பெண்... அந்தம்மாதான் ஜோதிலட்சுமி..!

வசந்தமாளிகைல ஆடினது சி.ஐ.டி. சகுந்தலா..!

வருண் said...

சரி, கொக்கு சைவக் கொக்குக்கு பாட்டுக்கு "வயசான சுந்தரியா" ஆடுற அம்மானு சொல்லுங்க! :)

வருண் said...

***அடப்பாவி தமிழா..!? ஜோதிலட்சுமியை தெரிஞ்சு வைச்சுக்கமாலேயே இத்தனை வருஷமா தமிழனா இருக்கியா..? அவமானம்..!***

கவனிச்சீங்களா? அதான் நாங்கள்லாம் உங்கள மாதிரி "உண்மைத் தமிழன்"னு சொல்லிக்கிறதில்லை! :)))

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

சரி, கொக்கு சைவக் கொக்குக்கு பாட்டுக்கு "வயசான சுந்தரியா" ஆடுற அம்மானு சொல்லுங்க! :)]]]

அம்மா இல்லை.. இப்பவும் சுந்தரிதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

***அடப்பாவி தமிழா..!? ஜோதிலட்சுமியை தெரிஞ்சு வைச்சுக்கமாலேயே இத்தனை வருஷமா தமிழனா இருக்கியா..? அவமானம்..!***

கவனிச்சீங்களா? அதான் நாங்கள்லாம் உங்கள மாதிரி "உண்மைத் தமிழன்"னு சொல்லிக்கிறதில்லை! :)))]]]

ஹி.. ஹி.. இப்படியாச்சும் என்னை உண்மைத்தமிழன்னு ஒத்துக்கிட்டீங்களே..!? அது போதும்.. தேங்க்ஸ் பிரதர்..!