கும்கி - சினிமா விமர்சனம்

23-12-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கடின உழைப்பும், அதையொட்டிய ஜீஸஸின் கருணையும் மட்டுமே தனது வெற்றிக்கு காரணம் என்று இயக்குநர் பிரபு சாலமன் எங்கேயும், எப்போதும் சொல்லி வருகிறார். ‘மைனா’வின் அசுரத்தனமான வெற்றியை பார்த்துவிட்டு அது போலவே கடின உழைப்பு செய்து இந்த ‘கும்கி’யை வெளிக்கொணர்ந்திருக்கிறார்..! ‘மைனா’ வெற்றியின் பாதியைத்தான் ‘கும்கி’ இப்போது தொட்டிருக்கிறது என்பதுதான் உண்மை..! அதுவும் உடன் வெளிவந்த 'நீதானே என் பொன்வசந்தம்' வசந்தத்தைத் தராததாலும், அடுத்த வாரம் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' வந்த வேகத்தில் இருட்டறைக்குள் போனதாலும், ‘இப்போதைக்கு இந்தப் படம்தான் நல்லாயிருக்கும்போல’ என்ற மவுத் டாக்கினால் படம் வெற்றிகரமாக கூடுதல் பிரிண்டுகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.. வாழ்த்துகள் பிரபு சாலமன் டீமுக்கு..!

‘கும்கி’ யானைகளைப் பற்றி பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் படித்து, பார்த்து தெரிந்து வைத்திருக்கிறோம்..! அதனையே களமாக வைத்து கொஞ்சம் விளையாடிப் பார்த்திருக்கிறார் இயக்குநர். 


அறுவடை காலத்தில் ஊரையே துவம்சம் செய்து பயிர்களை நாசப்படுத்தும் கொம்பன் என்னும் காட்டு யானையை நினைத்து பயப்படும் கிராம மக்கள்.. ஒரு ‘கும்கி’ யானையை வரவழைத்து காட்டு யானையை விரட்டுவோம் என்று முடிவெடுக்கிறார்கள். கோவிலில் ஆசி வழங்கி காசு பொறுக்கும் மாணிக்கம் என்ற யானையை ‘கும்கி’ யானை என்று பொய் சொல்லி 2 நாட்களில் மாற்றிவிடலாம் என்று ஊருக்குப் போகும் மாணிக்கம் யானையின் உரிமையாளரான ஹீரோ விக்ரம் பிரபு, அந்த ஊர் தலைவரின் மகள் அல்லியை பார்த்து காதலுற்று அங்கிருந்து நகர மறுக்க.. பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் கதை..!

யானைகளின் மோதல்தான் கதைக்களன் என்று சொல்லிவிட்டு படத்தின் துவக்கத்திலும், இறுதியிலும் மட்டுமே யானைகளைக் காட்டியிருப்பதில் தமிழ் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்குள்ளாகியுள்ளார்கள். இயக்குநரையும் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை.. விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்படி யானைகளை சினிமாவுக்காக துன்புறுத்துவது தடுக்கப்பட்டுள்ளது. விலங்குகள் வாரியத்தின் மேற்பார்வையில் ஒவ்வொரு படப்பிடிப்பின்போதும் ஒரு மருத்துவரை தயாரிப்பாளரின் செலவில் உடன் தங்க வைத்து, அரசு அலுவலர் ஒருவரும் உடன் இருந்து கண்காணிக்கும் நிலையில்தான் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அரசு விதி. ஆனால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் ‘டப்பு’வை ‘வெட்டிவிட்டு’ அரசு அலுவலர்களையும், அரசு மருத்துவரையும் ‘கட்’ செய்துவிட்டு தாங்களே ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்ததாகச் சொல்லி சர்டிபிகேட் வாங்கிவிடுவார்கள். இங்கேயும் அதுதான் நடந்திருக்கிறது..!

புரட்சித் தலைவரின் ‘நல்ல நேரம்’.. சூப்பர் ஸ்டாரின் ‘அன்னை ஓர் ஆலயம்’,  ஆழ்வார்பேட்டை ஆண்டவனின் ‘ராம் லஷ்மண்’ போன்ற படங்களிலெல்லாம் யானைகளின் அட்டகாசத்தையும் நடிப்பாக பார்த்திருந்த என்னைப் போன்ற ‘இளைஞர்கள்’ இப்படத்தின் யானையின் நடிப்பை பார்த்து அசந்துதான் போயிருப்பார்கள். வேறு வழியில்லை..! அப்புறம் சென்சார் போர்டுக்கு யார் பதில் சொல்றது..?

‘ஓடி ஓடி உழைக்கணும்’ பாடலில் எம்.ஜி.ஆரைவிடவும், டி.எம்.எஸ்ஸைவிடவும் அதிகம் கவர்ந்தது யானைகள்தான்..! அந்த அளவுக்கெல்லாம் யானைகளை படுத்தியெடுத்தால் இங்கே சென்சார் அனுமதியே கிடைக்காது என்பதால் முக்கால்வாசியை கிராபிக்ஸில் செய்து சமாளித்திருக்கிறார் இயக்குநர். அதுவே வினையாகிவிட்டது..!

சில மாதங்களுக்கு முன்னால் வெளிவந்த ‘நான் ஈ’ திரைப்படம் கிராபிக்ஸ் பற்றி தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு நிறையவே சொல்லிக் கொடுத்துவிட்டது.. போதாதுக்கு தினத்துக்கு  டிவி சேனல்களில் பல ஆங்கில கிராபிக்ஸ் படங்களைத் திரையிட்டு தமிழ் ரசிகர்களை மகிழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் இப்படியொரு மொக்கையான கிராபிக்ஸை வைத்து ‘இதுதான் கொம்பன் யானை.. இதுதான் மாணிக்கம் யானை.. இதுதான் அதுகளுக்கு இடையில் நடக்கும் மோதல்’ என்று சொன்னால் எப்படி நம்புவார்கள்..? இந்தப் படத்தில் மிகப் பெரிய ஏமாற்றமே இந்த கிராபிக்ஸ் வித்தைதான்..!

அறிமுக நடிகர் விக்ரம் பிரபுவுக்கு சரளமாக பேசவும் வருகிறது.. நடிக்கவும் வருகிறது.. வயசுக்கேற்ற காதல் ஜாடையையும் காட்டத் தெரிகிறது. இதுக்கு மேலும் மனதைப் பிழியும் நடிப்பைக் கொட்ட அவருக்கேற்ற கதைகள் அடுத்தடுத்து அமையுமானால் இவரும் பிரகாசிக்கலாம்..! காத்திருப்போம்.. ஆனாலும் தம்பி இராமையாவுடனான இவரது மோதல் காட்சிகள் பையனுக்குள் நடிப்பும் இருக்குன்னும் சொல்ல வைக்குது..! 

லட்சுமி மேனன் நடிச்ச முதல் படம்.. இரண்டாவது படமே முதல்ல ரிலீஸ் ஆகி என்னைப் போன்ற யூத்துகளின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டார் லட்சுமி..!  கிராமத்து அல்லிக்கேற்ற முகம்..! முழுக்க மூடிய உடையில் வெளியில் தெரிந்த ‘சில’வைகளை வைத்தே பெண்ணை வெள்ளாவி வைத்த வெளுத்தது போல காட்டியிருப்பதுதான் அந்த கிளைமேட்டுக்கு ஒத்துவரவில்லை..!  சிணுங்குகிறார்.. மின்னுகிறார்.. பாடுகிறார்.. ஓயிலாக நடக்கிறார். காந்தப் பார்வையை வீசுகிறார்.. எல்லாம் இருந்தும் காதலில் ஒரு ஆழமும், சுவாரஸ்யமும் இல்லாததால் அத்தனையும் வீணாகிப் போயிருக்கிறது.. யானையைக் கண்டு மிரளும் லட்சுமியின் கண்களை பார்த்து யானையே மிதந்திருக்கும்..! யானையைக் கொஞ்சும் லட்சுமியும், விக்ரமின் காதல் தூதை ஏற்றுக் கொள்ளாத நிலையில் மருண்டு போய் கண்ணீர்விடும் லட்சுமியை பிடிக்கத்தான் செய்கிறது..! 

நூல் பிடித்தாற்போன்று செல்லும் காட்சிகளை ஒருங்கிணைக்க தம்பி இராமையா பெரிதும் உதவியிருக்கிறார். அவருடைய மைண்ட் வாய்ஸ் கமெண்ட்டுகள் கலகலப்பை கூட்டுகின்றன..!  2 நிமிடத்திற்கு முன்னால் ‘நம்ம சங்கை அறுத்திருவாங்க’ என்று சொல்லிவிட்டு அதற்குப் பின்பு காதலை சேர்த்து வைக்கவும் மனம் மாறும் தம்பி இராமையாதான் படத்தினை இறுதிவரையிலும் கொண்டு போயிருக்கிறார்..!

இந்தப் படம் ஒளிப்பதிவுக்காகவே பெரிதும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. சுகுமாரின் படப்பதிவு அந்த மலையையும், மக்களையும், இருப்பிடத்தையும் பல கோணங்களில் அழகாக பதிவு செய்திருக்கிறது. இதற்காக எத்தனை உழைப்பை அவர்கள் செலவிட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகவும் உள்ளது. பாடல் காட்சிகளிலும், ஏரியல் வியூக்களிலும் இப்படி ஒரு இடத்தில் குடியிருக்கப் போனால்தான் என்ன என்ற ஏக்கத்தைத்தான் தோற்றுவிக்கிறது..! வெல்டன் சுகுமார் ஸார்..!

‘சொல்லிட்டாளே அவ காதலை’ பாடலும், ‘சொய் சொய்’ பாடலும்தான் இமான் இசையில் கவனிக்க வைக்கிறது.. பாடல்களைவிடவும், இசையைவிடவும், பாடல் காட்சிகள் மிக ரம்மியமாக இருந்து தொலைந்திருப்பதால் பாடல்களை தனியே கேட்டுத்தான் ரசித்தேன்..! இமானிடம் ஸ்பெஷலாக கேட்டு வாங்கியிருக்கும் ‘சொய் சொய்’ பாடல் அதற்கேற்ற உச்சத்தை எட்டியிருக்கிறது.. இப்போது எஃப்.எம்.களில் கட்டாய உணவாக அதுதான் ஒலித்துக் கொண்டிருக்கிறது..!

காலம், காலமாக மலையிலேயே காலம் தள்ளி வரும் மக்களுக்கு யானை மீது ஏன் இவ்வளவு பயம் வருகிறது..? கும்கி யானைக்கும் மற்ற யானைகளுக்கும் சட்டென அவர்களால் வித்தியாசம் கண்டறிய முடியாதா என்ன..? இடையில் காமெடியன்களாக இரண்டு வன இலாகா அதிகாரிகள்.. ‘கொம்பனை எந்தக் கொம்பனாலும் தூக்க முடியாது’ என்று அந்தக் கொம்பனுக்கே கொம்பு சீவி விடுகிறார்கள்.. எப்படியோ ஒரு நாளில் மாட்டிய கொம்பனை மடக்கி காட்டுக்குள் அனுப்பி வைத்த கதைதான் உண்மையில் நடந்திருக்கிறது.. அதற்காக அதையே இவ்ளோ நீளத்துக்கு பில்டப்பாக செய்ய வேண்டுமா என்ன..? இறுதிக் காட்சி தமிழ்ச் சினிமா ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது என்று பலரும் ரிலீஸுக்கு முன்பே சொல்லியும் அதனை மாற்ற மறுத்துவிட்ட இயக்குநருக்கு எனது பாராட்டுக்கள்..! கதைக்குப் பொருத்தமான முடிவுதான்..! ஆனால் இடையில் காதல்தான் நுழைந்து அல்லல்படுத்திவிட்டது..! 

காடு விலங்குகளின் இருப்பிடம். அவைகளின் தேசம்.. அதில் மனிதர்கள் குடியிருந்து வாழ்ந்தால், அவற்றோடு இயைந்துதான் இருக்க வேண்டும்.. எந்த மலைவாழ் மக்களும் விலங்குகளை எதிர்கொள்ள எந்த நேரமும் தயாராகத்தான் இருப்பார்கள். யானைகளின் அட்டூழியம் என்றுகூட இதனைச் சொல்லக் கூடாது.. சொல்லவும் முடியாது.. காட்டு யானை எப்படியிருக்கும்..? அதன் குணாதிசயங்கள் என்ன என்பது நமக்குத் தெரியாதா..? அவற்றிற்கான இயற்கை வழிகளை மனிதர்களே அடைத்துவிட்டால், அவைகள் பாவம் என்னதான் செய்யும்..?

குளம், குட்டைகளைத் தேடித்தான் அடர்ந்த காடுகளில் இருந்து யானைகள் வெளிப்படுகின்றன.. அவற்றுக்கான நீர் ஆதாரங்கள் முன்பு இருந்த இடத்தில் இப்போது இல்லை என்பதற்கு மனிதனின் செயல்கள்தானே காரணம்..? பின்பு அவற்றைக் குறை சொல்லி என்ன புண்ணியம்..? 

படம் நெடுகிலும் யானைகளின் இயல்புகளை கொடூரமாக சித்தரித்திருப்பதால் இவற்றை பார்க்கும் இளைய சமுதாயத்தினரின் மத்தியிலும் இவையே பதிவாகுமே..? யானைகளின் வாழ்க்கை முறையை பற்றியும் கொஞ்சம் எடுத்துச் சொல்லியிருக்கலாம்..! இறுதியில் கொம்பன் யானையை கொன்றே தீருவது என்று முடிவெடுத்து இயக்குநர் செய்திருப்பது விலங்குகளின் வாழ்க்கைக்கு மனிதன் தடை போடுவது போலத்தான் உள்ளது..!

ஒரு திரைப்படமாக பார்க்கப் போனால் பசுமை நிறைந்த காட்சிகளையும், அழகான நடிகர், நடிகைகளையும், கடுமையான உழைப்பையும் மட்டுமே வைத்திருந்து, மனதைத் தொடும் காட்சிகளையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் கொடுக்காமல் விட்டிருப்பதால் இந்த கும்கி மாணிக்கம், இப்போதும் கோவில் யானை மாணிக்கமாகவே தெரிகிறான்..! 

ஒரு முறை பார்க்கலாம்..! 

8 comments:

Unknown said...

// ‘தாய் மீது சத்தியம்’,// அல்ல - அன்னை ஓர் ஆலயம் !

Prem S said...

‘சொல்லிட்டாளே அவ காதலை’ பாடல்
கலக்கல் உங்கள் விமர்சனத்தை போல ..

உண்மைத்தமிழன் said...

[[[Geneva Yuva said...

// ‘தாய் மீது சத்தியம்’,// அல்ல - அன்னை ஓர் ஆலயம் !]]]

நன்றி.. திருத்திவிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Prem Kumar.s said...

‘சொல்லிட்டாளே அவ காதலை’ பாடல்
கலக்கல், உங்கள் விமர்சனத்தை போல.]]]

விமர்சனத்திற்கு மிக்க நன்றி நண்பரே..!

scenecreator said...

ஆமாம் சார் நிறைய இடங்களில் நீதானே என் பொன்வசந்தம் தூக்கிவிட்டு கும்கி போட்டு இருக்கிறார்கள்.

ஒரு சந்தேகம் சார் துப்பாக்கி பாடல்கள் சன் டி.வியை தவிர மற்ற எல்லா டி.வியிலும் போடுகிறார்கள் .ஏன் .தவிர முந்தய விஜய் படங்களான வேலாயுதம்,நண்பன் போன்ற பட பாடல்களும் சன் மியூசிக் உட்பட சன் குரூப் எதிலும் இல்லை .ஏன் ?

உண்மைத்தமிழன் said...

[[[scenecreator said...

ஆமாம் சார்... நிறைய இடங்களில் நீதானே என் பொன்வசந்தம் தூக்கிவிட்டு கும்கி போட்டு இருக்கிறார்கள்.]]]

புத்திசாலிகள்.. எல்லாரும் காசு சம்பாதிக்கத்தானே தொழிலுக்கு வந்திருக்கிறார்கள். வேறென்ன செய்வார்கள்..?

[[[ஒரு சந்தேகம் சார்... துப்பாக்கி பாடல்கள் சன் டி.வியை தவிர மற்ற எல்லா டி.வி.யிலும் போடுகிறார்கள். ஏன். தவிர முந்தய விஜய் படங்களான வேலாயுதம், நண்பன் போன்ற பட பாடல்களும் சன் மியூசிக் உட்பட சன் குரூப் எதிலும் இல்லை. ஏன் ?]]]

துப்பாக்கி, நண்பன் இரண்டு படங்களின் சேனல் ரைட்ஸையும் விஜய் டிவி வாங்கியுள்ளது. அதுனால போட மாட்டாங்க. வேலாயுதம், ஜெயா டிவின்னு நினைக்கிறேன்.. அதுனாலதான்..! மற்ற டிவிகளுக்கு நாம ஏன் ஓசில பிரமோஷன் கொடுக்கணும்னு சன் நினைக்குது. அதுனாலதான்..!

ஜீவன் சுப்பு said...

//‘இதுதான் கொம்பன் யானை.. இதுதான் மாணிக்கம் யானை.. இதுதான் அதுகளுக்கு இடையில் நடக்கும் மோதல்’ என்று சொன்னால் எப்படி நம்புவார்கள்..? இந்தப் படத்தில் மிகப் பெரிய ஏமாற்றமே இந்த கிராபிக்ஸ் வித்தைதான்..!- True

//யானையைக் கண்டு மிரளும் லட்சுமியின் கண்களை பார்த்து யானையே மிதந்திருக்கும்..!// alagu

//நூல் பிடித்தாற்போன்று செல்லும் காட்சிகளை ஒருங்கிணைக்க தம்பி இராமையா பெரிதும் உதவியிருக்கிறார். அவருடைய மைண்ட் வாய்ஸ் கமெண்ட்டுகள் கலகலப்பை கூட்டுகின்றன..! //- ???

//இந்தப் படம் ஒளிப்பதிவுக்காகவே பெரிதும் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. சுகுமாரின் படப்பதிவு அந்த மலையையும், மக்களையும், இருப்பிடத்தையும் பல கோணங்களில் அழகாக பதிவு செய்திருக்கிறது. இதற்காக எத்தனை உழைப்பை அவர்கள் செலவிட்டிருக்கிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகவும் உள்ளது. பாடல் காட்சிகளிலும், ஏரியல் வியூக்களிலும் இப்படி ஒரு இடத்தில் குடியிருக்கப் போனால்தான் என்ன என்ற ஏக்கத்தைத்தான் தோற்றுவிக்கிறது..! வெல்டன் சுகுமார் ஸார்..!// - Kumki worth for visuals and music.

//படம் நெடுகிலும்(?) யானைகளின் இயல்புகளை கொடூரமாக சித்தரித்திருப்பதால் இவற்றை பார்க்கும் இளைய சமுதாயத்தினரின் மத்தியிலும் இவையே பதிவாகுமே..? யானைகளின் வாழ்க்கை முறையை பற்றியும் கொஞ்சம் எடுத்துச் சொல்லியிருக்கலாம்..! இறுதியில் கொம்பன் யானையை கொன்றே தீருவது என்று முடிவெடுத்து இயக்குநர் செய்திருப்பது விலங்குகளின் வாழ்க்கைக்கு மனிதன் தடை போடுவது போலத்தான் உள்ளது..!- correct

Read more: http://truetamilans.blogspot.com/2012/12/blog-post_23.html#ixzz2G2okFDbj

Read more: http://truetamilans.blogspot.com/2012/12/blog-post_23.html#ixzz2G2oQZAIX
Read more: http://truetamilans.blogspot.com/2012/12/blog-post_23.html#ixzz2G2oCW1Qr

Read more: http://truetamilans.blogspot.com/2012/12/blog-post_23.html#ixzz2G2o3X8FK


Read more: http://truetamilans.blogspot.com/2012/12/blog-post_23.html#ixzz2G2nmUzvC

உண்மைத்தமிழன் said...

ஜீவன்சுப்பு said...

//நூல் பிடித்தாற்போன்று செல்லும் காட்சிகளை ஒருங்கிணைக்க தம்பி இராமையா பெரிதும் உதவியிருக்கிறார். அவருடைய மைண்ட் வாய்ஸ் கமெண்ட்டுகள் கலகலப்பை கூட்டுகின்றன..! //- ???

கொஞ்சமாவது இடைல இடைல டைம் பாஸ் ஆவுதே.. அதுனால சொன்னேன்..!