இட்லி-தோசை-பொங்கல்-வடை-சட்னி-சாம்பார்-05-11-12

05-10-2012

என் இனிய தமிழ் மக்களே..!


எழுத நேரம் இருந்தும், அளவிட முடியாத சோம்பேறித்தனத்தினாலும், அதிகரித்து வரும் இணைய தேடல்களினாலும் இட்லி-தோசை பதிவுகளை எழுத முடியாமல் இருந்தேன்.. இப்போது தவிர்க்க இயலாமல் மீண்டும் துவக்குகிறேன்..!

துர்ப்பாக்கிய மரணம்

சென்ற மாதம் சென்னையில் காலமான ஒரு சினிமா பிரமுகரின் மரணம் தற்கொலையாம்..! எத்தனையோ வருடங்கள் பிஸியாக ஒர்க் செய்துவிட்டு கடைசியாக கிடைத்த வேலைக்கு, மாதச் சம்பளத்தில்கூட வேலை பார்த்திருக்கிறார்.. வீட்டில் அவரது மகனுடன் நடந்த சின்ன வாக்குவாதத்தினால் கோபப்பட்டு விஷத்தை அருந்தியிருக்கிறார். அவர் வாந்தி எடுப்பதை பார்த்து மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அங்கேதான் விஷமருந்தியது தெரிந்திருக்கிறது. “ஏதோ கோபத்தில் குடிச்சிட்டேன். காப்பாத்திருங்க..” என்று மருத்துவர்களிடம் கேட்டிருக்கிறார்..! முயற்சி செய்தும் முடியவில்லை.. முறையாக போலீஸ் விசாரணைக்கு பின்பு போஸ்ட் மார்ட்டம் செய்து உடல் கிடைத்தாலும், சினிமா துறையினருக்கு மட்டும் அது தெரிவிக்கப்படவில்லை..

“சினிமாக்காரன் தூங்கும்போது காலை ஆட்டிக்கிட்டே தூங்கணும்.. இல்லேன்னா செத்துட்டான்னு மாலையை வாங்கிப் போட்டிருவாங்க”ன்னு சொல்வாங்க.. ஆனால் இங்கே இறந்து போன இவருக்காக அஞ்சலி செலுத்த பிரபலங்கள் யாருமே வரவில்லை..! இவர் உச்சத்தில் இருந்த காலத்தில் இவர் உதவி இயக்குநர்களிடம் நடந்து கொண்ட முறையினால் வளர்ந்து வந்திருக்கும் அந்த இயக்குநர்களும் இவரை கண்டு கொள்ளாமல்விட, இவருடைய நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்களுமே இவரது போக்கால் வெறுப்படைந்து ஒதுங்கி போய்விட்டார்கள்..!

இத்தனையாண்டு காலம் திரையுலகில் இருந்து தனது குடும்பத்தை மட்டுமே கரை சேர்த்த புண்ணியத்தோடு போய்ச் சேர்ந்துவிட்டார்..! இருக்கும்போது ஆடக் கூடாது என்று சொல்வது இதனால்தான்..!

சலவை நிலா - இளைய நிலாவாக மாறிய மர்மம்..!


கவிப்பேரரசு பற்றி பல இயக்குநர்கள் பலவிதமாகச் சொல்லியிருக்கிறார்கள். இப்போது இயக்குநர் ஆர்.சுந்தர்ராஜனும்  அவர் பங்குக்கு ஒரு விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ‘பயணங்கள் முடிவதில்லை’ படத்தில் இடம் பெற்ற ‘இளைய நிலா பொழிகிறது’ பாடலை முதலில்  ‘சலவை நிலா பொழிகிறது’ என்றுதான் வைரமுத்து எழுதிக் கொடுத்தாராம்..

அந்தச் ‘சலவை’ என்ற வார்த்தை நன்றாக இல்லை. அதற்குப் பதிலாக வேறு வார்த்தையை போடும்படி ஆர்.சுந்தர்ராஜன் வற்புறுத்தியும் கவிஞர் ஏற்கவில்லையாம்.. பதிலுக்கு, “உங்களைவிட அறிவாளிகள் நிறைய பேர் தமிழ்நாட்டுல இருக்காங்க..” என்று பதில் சொன்னாராம்.. “இருக்கலாம் ஸார்.. ஆனா எனக்கே அது என்னன்னு புரியலையே..? அப்புறம் எப்படி நான் மத்தவங்களுக்கு புரிய வைக்கிறது..?” என்று சண்டையிட்டாராம் ஆர்.சுந்தர்ராஜன்.

இளையராஜாவும் ஆர்.சுந்தர்ராஜனை அழைத்து, “இது உனக்கு முதல் படம்.. ரொம்ப திமிரா இருக்காத.. கொஞ்சம் விட்டுக் கொடுத்து போ.. கவிஞர் சொன்ன மாதிரியே இருக்கட்டும்..” என்று அட்வைஸ் செய்திருக்கிறார். “இல்ல ஸார்.. என் படத்துல என் ஹீரோயினை பாடாய்ப்படுத்தி அடிச்சு, துவைச்சு காயப் போட்ட மாதிரி காட்டப் போறேன்.. அதுக்கு முன்னாடியே இப்படி ‘சலவை’ன்னு போட்டா நல்லாயிருக்காது ஸார்..” என்றிருக்கிறார். “சரி.. கதைக்கு தேவையில்லைன்னா நீ எப்படி வேண்ணாலும் மாத்திக்க..” என்று இளையராஜா ஓகே சொன்ன பின்புதான் ‘சலவை நிலா’-‘இளைய நிலா’வாக மாறியதாம்..!

கவிப்பேரரசுவின் இந்த விட்டுக் கொடுக்காத தன்மை இண்டஸ்ட்ரீ முழுக்கத் தெரிந்ததுதான். இதனால்தானோ என்னவோ அவரை எப்படியாவது கீழேயிறக்கிவிட வேண்டும் என்ற எண்ணமும் நிறைய பேருக்கு இருக்கு போலிருக்கு..! இயக்குநர் அமீர் ஒரு நிகழ்ச்சியில் மதன் கார்க்கியை மேடையில் வைத்துக் கொண்டே, “எப்பவுமே வைரமுத்துதான் உச்சத்துல இருக்காரு.. அவரை யாராச்சும் கீழே இறக்கி விடுவாங்களான்னு நானும் பார்த்துக்கிட்டேயிருக்கேன். யாராலும் முடியலை.. மதன் கார்க்கியாச்சும் அதைச் செஞ்சா நல்லாயிருக்கும்”ன்னாரு.. மதன் கார்க்கியால் சிரிக்க மட்டுமே முடிந்தது..!

அது போகட்டும்..  “சலவை நிலா”வுக்கு என்ன அர்த்தம்..?

பிரபாகரன் படத்தைத் தடுக்கும் சென்சார் போர்டு..!

‘ஈழம்’, ‘பிரபாகரன்’ என்ற வார்த்தைகளை எப்பாடுபட்டாவது மக்களிடமிருந்து மறைத்துவிட வேண்டும் என்று இந்திய ஏகாதிபத்தியம் அரும்பாடுபட்டு வருவதாக வைகோவில் இருந்து சீமான்வரையிலும் பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். கேட்பதற்கு ஆரம்பத்தில் அலுப்பாக இருந்தாலும் இதுதான் உண்மை..!

இகோர் இயக்கியிருக்கும் ‘தேன்கூடு’ படத்தின் டைட்டிலில் ‘த’ என்ற எழுத்துக்குப் பதிலாக தமிழ் ஈழ வரைபடத்தை டிஸைனாக வரைந்திருந்தார்கள். அதனைத் தூக்கினால்தான் டிரெயிலருக்கே அனுமதி என்று மறுதலித்திருக்கிறார்கள் சென்சார் போர்டில் இருந்த இந்திய அடிமைகள்..! அதேபோல் பிரபாகரன் பற்றி பேசியிருந்த வசனங்களையும் காட்சிகளையும், புகைப்படங்களையும் நீக்கிவிட்டு வந்தால் டிரெயிலர் பற்றி யோசிப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். செலவு செய்தாகிவிட்டது.. வேறு வழியில்லை என்ற நிலையில் அவர்களுக்கிணங்கிய நிலையில்தான் சென்சார் சர்டிபிகேட் பெறப்பட்டு டிரெயிலர் வெளியாகியுள்ளது..!

இது இப்படியிருக்க.. இந்தப் படத்தைப் பற்றிப் பேச சீமான், இயக்குநர் புகழேந்தி, அமீர், கவிஞர் காசி ஆனந்தன், புலமைப்பித்தன் போன்றோரெல்லாம் வந்திருந்தது சரி.. எதற்கு தமிழச்சி தங்கபாண்டியன்..? இவரை மேடையில் வைத்துக் கொண்டே முள்ளிவாய்க்கால் போர் பற்றியும், நாம் எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்தோமே என்று புகழேந்தியும், சீமானும் பேசியதுதான் முரண்..!

இந்தப் படத்திற்கு இப்படியென்றால் ‘கள்ளத்துப்பாக்கி’ படத்தின் டைட்டிலில் பிரபாகரனின் படத்தை தைரியமாக வைத்திருக்கிறார்கள்.. சென்சாரும் வாங்கிவிட்டார்கள். அது எப்படி..? அப்பீலுக்கு போனால் ஓகே.. போகவில்லையெனில் கட்டா..? அப்போ சென்னை சென்சார் போர்டுக்கு ஒரு  விதிமுறை.. டெல்லி சென்சார் போர்டுக்கு ஒரு விதிமுறையா..? அட என்னங்கடா உங்களோட இந்திய தேசியம்..?

மோதத் துடிக்கும் தங்கர்பச்சான்..!

அடிக்கிற காத்துல அம்மியே பறக்கும்போது, அது பூவாவே இருந்தாலும் நிக்க முடியுமா..? தங்கர்பச்சானை நோக்கி திரையுலகப் பிரமுகர்கள் முணுமுணுக்கும் கேள்வி இது..! வரிசையாக ‘18 வயசு’, ‘தாண்டவம்’, ‘மாற்றான்’னு மாத்து வாங்கிட்டு கடுப்புல இருக்கும் தியேட்டர்காரர்கள், ‘துப்பாக்கி’யின் வருகைக்காக ஆவலோட காத்திருக்காங்க.. இது ஓடினாத்தான் இந்தப் படங்கள்ல விட்டதை இந்த வருஷத்துல அவங்களால எடுக்க முடியும்ன்ற நிலைமைல இருக்காங்க..

620-க்கும் அதிகமான தியேட்டர்களில் துப்பாக்கியை ரிலீஸ் செய்யக் காத்திருக்கிறார்கள்.  ஏற்கெனவே ஜெமினி லேப்புடன் நடந்த அக்கப்போர் அடிதடியாகி, தாணு ஸாரின் ‘ராசி’ இந்தப் படத்திலும் ஒர்க்அவுட்டான நிலையில்.. எப்படியாச்சும் படத்தை ஹிட்டாக்கிவிட அவரும் துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலைமையில் தனது அம்மாவின் கைப்பைசியையும் தீபாவளிக்கே தரை இறக்கியிருக்கிறார் தங்கர்பச்சான்.. முந்தாநாள் வரையிலும் 60-க்கும் குறைவான தியேட்டர்களே கிடைத்திருக்கின்றன.. இதையே சொல்லிச் சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார்..

“யார் இவரை தீபாவளிக்கு கொண்டு வரச் சொன்னது..?” என்கிறார்கள் திரையுலகப் பிரமுகர்கள்.. கொஞ்சம் நிறுத்தி வெளியிடலாமே என்றால் தங்கர் முடியாது என்கிறாராம். அப்போ அனுபவி என்று கை கழுவிவிட்டார்கள்..!  ‘துப்பாக்கி’யுடன் சிம்புவின் ‘போடா போடி’யும் களத்திற்கு வருகிறது.. அதுவும் மிச்சம் மீதி தியேட்டரை சாப்பிட்டிருக்கும்..! ‘கள்ளத்துப்பாக்கி’, ‘துப்பாக்கி’யுடன் போட்டி போடுவது தவிர்க்க முடியாதது.. ஒத்துக் கொள்ளலாம்.. ஆனால் ‘அம்மாவின் கைப்பேசி’ எதற்கு..? கொஞ்சம் பின்னாடி ரிலீஸ் செய்யக் கூடாதா..? தங்கர் யோசிக்கட்டும்..!

இயக்குநர்கள் சங்கமே ஆஜர்

சென்ற மாசம், விட்டனே பார் என்று அடித்துக் கொண்ட சினிமா இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் ‘கள்ளத்துப்பாக்கி’ படத்தின் ஆடியோ ரிலீஸுக்கு ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து ஆச்சரியப்படுத்தினார்கள்..!

படத்தின் டிரெயிலரை பார்க்கும்போதே பயமாக இருந்தது. அதீத வன்முறை..! ‘ஏ’ சர்டிபிகேட்டுதான் வாங்கியிருக்கிறார்கள். ‘யு’ வாங்கியிருந்தால் சேனல் ரைட்ஸிலாவது பணம் கிடைக்குமே என்றால், “கதை இப்படித்தான் ஸார்..” என்கிறார் இயக்குநர். செலவு செய்ய தயாரிப்பாளர் கிடைத்துவிட்டால் என்ன வேண்ணாலும்தான் செய்யலாமே..?

ஏ.வெங்கடேஷ் பேசும்போது அவருடன் பேசிய நண்பரொருவர் இயக்குநர் ஜனநாதனை ஏதோ நன்கு தெரிந்தவர் போல பேசி, “ஜனநாதன் கப்பல் கேப்டன்..” என்று திடமாகச் சொன்னாராம்..! ஏ.வெங்கடேஷே அந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.ஸ்டான்லியிடம் இது உண்மையா என்று கேட்டதாகச் சொன்னபோது கூட்டம் கலகலத்தது..! சினிமாக்காரர்களைவிடவும் அதிகமாக ‘கதை’ சொல்பவர்கள் வெளியில்தான் இருக்கிறார்கள் போலிருக்கிறது..!

டைட்டிலில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், என்று காட்டியவர்கள் அடுத்து அஜீத்தை மட்டும் காட்டிவிட்டு விஜய்யை கைவிட்டுவிட்டார்கள். ஏன் என்று கேட்டதற்கு “அவ்ளோதான் ஸார் ஆர்ட்டிஸ்ட்டுகள். அதுனாலதான் விஜய்யை காட்ட முடியலை..” என்றார் தயாரிப்பாளர் ரவிதேவன்.. நாமும் நம்புவோமாக..!

பீட்சாவின் வெற்றி

ஒரேயொரு படம்தான்.. படத்தின் இயக்குநர் யார் என்று இந்தியாவே விசாரித்து வருகிறது.. கார்த்திக் சுப்புராஜ் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பையே நல்லவிதமாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டார்.. படமும் நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது..! பல ஊர்களிலும் புதிதாக வாங்கித் திரையிட்டிருக்கிறார்களாம்..! தெலுங்கு, கன்னடம், இந்தி மொழியாக்கம் பற்றிய பேச்சுக்கள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன..! இது போல் அனைத்து புதுமுக இயக்குநர்களும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெற்றால் திரையுலகம் நிச்சயமாக பிழைக்கும்..!

மேடை படத்தின் அறிமுகம்

ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், கே.பாக்யராஜ், பிரகாஷ்ராஜ் போன்றவர்களின் கெட்டப்பில் மேடை நாடகங்களிலும், டிவி தொடர்களிலும் நடித்தவர்களை வைத்து “மேடை” என்றொரு திரைப்படத்தை தயாரித்து முடித்திருக்கிறார்கள்.  ஹீரோயின் வழக்கம்போல புதுமுகம்..!

இப்பல்லாம் ரொம்ப சிம்பிளா ஆடியோ ரிலீஸ் செய்யணும்னா ஏவி.எம். ஏசி தியேட்டரைவிட்டா வேற இடமே இல்லை..! ஆனா இந்த இடத்துல நிகழ்ச்சிகளை பார்க்கவும் ஒரு கொடுப்பினை வேணும்..! எப்பவுமே உக்கார இடம் கிடைக்காது.. ஏசி வேலை செய்யாது.. படம் தெளிவாத் தெரியாது.. இத்தனை இருந்தும் வெறும் 3000 ரூபாய்க்கு கிடைக்கறதால சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் இங்கேயே நிகழ்ச்சிகளை வைத்து வெறுப்பேத்துறாங்க..

இந்தப் பட நிகழ்ச்சி முடிஞ்ச பின்னாடி கொட்டுற மழைல, ராத்திரி எட்டு மணிக்கு சட்டுன்னு அங்கேயே “இங்கிவனை யான் பெறவே..” என்ற டைட்டிலில் ஒரு புதுப்படத்துக்கும் பூஜையை போட்டு ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்ச அந்தத் தயாரிப்பாளரை எப்படி வேண்ணாலும் பாராட்டலாம்.. பொழைச்சுக்குவாரு..!

பார்த்ததில் பிடித்தது
 

படித்ததில் பிடித்தது

மக்கள் திலகத்திற்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்காக திரைப்படக் கலைஞர்கள் பாராட்டு விழா எடுத்தனர். இப்போது நேரு ஸ்டேடியம் இருக்குமிடம் அப்போது காலி இடமாக இருந்தது. அங்குதான் பாராட்டு விழா நடந்த்து. பிரமாண்டமான அரங்கம் அமைத்து அந்த விழா நடந்தது.

பாரதிராஜா, பாக்யராஜ். டி.ராஜேந்தர் என்று மக்கள் திலகம் மீது மரியாதை கொண்ட அனைவரும் வந்து மனதார வாழ்த்தினர். நடிகை ரேவதி உட்பட பலர் நடனம் ஆடினார்கள்.

இந்த விழா நடப்பதற்கு இரண்டு தினங்கள் முன்பு அடையாறு பார்க் ஷெரட்டன் ஓட்டலில் சின்ன விழா நடந்தது. அங்கேயும் திரை பிரபலங்கள் குவிந்திருந்தார்கள். மக்கள் திலகம் அப்போது முதல்வர் என்பதால் அவர் வர மாட்டார் என்ற நினைப்பில் நான், ஜெய்சங்கர் உட்பட சிலர் டிரிங்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

திடீரென்று மக்கள் திலகம் வந்துவிட்டார். அப்போது இலங்கை பிரச்சினை உச்சத்தில் இருந்த்தால் அவர் கருப்பு உடையில் வந்திருந்தார். அவர் வந்ததும் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த டிரிங்ஸை மறைத்துவிட்டோம். நான் அவசரம், அவசரமாக ஓட்டல் ஊழியரிடம் சென்று டூத் பேஸ்ட்டு வாங்கி பல் துலக்கிவிட்டு வந்து மக்கள் திலகத்திற்கு வணக்கம் வைத்தேன்.

“எப்படியிருக்கு சினிமா..?” என்று கேட்டார் மக்கள் திலகம்.

“நல்லாயில்லை..” என்றேன்..

“ஏன்..” என்றார்.

“நீங்கதான் சி.எம். ஆகிட்டீங்களே ஸார்..” சிரித்துக் கொண்டே என் தோளில் கை போட்டார்.

பல் துலக்காததால் மது வாடை பிடிக்கும் என்பதாலும், அது மக்கள் திலகத்திற்குப் பிடிக்காது என்பதால் தூரத்திலேயே நின்று கொண்டிருந்தார் நடிகர் ஜெய்சங்கர்.

மக்கள் திலகம் சில கலைஞர்களுடன் தோளில் கை போட்டுக் கொண்டு போஸ் கொடுத்தார். நான் படம் பிடித்தேன். அப்போது டைரக்டர் பாலு மகேந்திரா மக்கள் திலகம் தோள் மீது கை போட்டுவிட்டார். அவர் தோளில் கை போட்ட அடுத்த நிமிடமே பட்டென்று மக்கள் திலகம் அவரது கையைத் தட்டிவிட்டார். அவசரத்தில் அதையும் நான் படம் பிடித்துவிட்டேன். மக்கள் திலகம் இதைக் கவனித்துவிட்டார்.

“நடிகை ஷோபா, பாலுமகேந்திராவில் கொலை செய்யப்பட்டுவிட்டார் என்று பேசப்பட்ட நேரம் அது. முதல்வர் என்பதால் வழக்கில் இருந்து தப்பிக்க மக்கள் திலகத்திற்கு நெருக்கமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்வதற்காக அப்படி தோளில் கை போட்டு படம் பார்க்கப் பார்த்திருக்கிறார் பாலுமகேந்திரா..” என்று முணுமுணுத்தார்கள். “பெருந்தன்மையாக எல்லோருடைய தோளிலும் முதல்வர் கை போடுகிறார். இதற்காக அவர் தோளிலேயே கை போடலாமா..?” என்று சிலர் சிடுசிடுத்துக் கொண்டிருந்தார்கள்.

விழா நடந்த அன்று இரவு 11 மணிக்கு நான் வீட்டிற்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் கதவு தட்டும் சப்தம் கேட்டது. கதவைத் திறந்தபோது வாசலில் ஜேப்பியார் நின்று கொண்டிருந்தார்.

“என்ன ஸார்.. எம்.ஜி.ஆர்., நெகடிவ் ரோலை எல்லாம் வாங்கிட்டு வரச் சொன்னாரா..? என்று கேட்டேன். “அதெப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க..?” என்றார் ஜேப்பியார். “இத்தனை வருஷமா அவர்கூட இருந்திருக்கேன். இது தெரியாதா ஸார் எனக்கு..? பாலுமகேந்திரா தோளில் கை போட்டதும் நான் படம் எடுத்ததை மக்கள் திலகம் பார்த்துவிட்டார். நிச்சயம் பிலிம் ரோலை வாங்கிக் கொள்வார்ன்னு தெரியும்..” என்று சொல்லிவிட்டு பிலிம் ரோலை ஜேப்பியாரிடம் கொடுத்தேன்.

அதை வாங்கிக் கொண்டதும், “தலைவர் கொடுக்கச் சொன்னார்..” என்று சொல்லி ஒரு கவரைக் கொடுத்தார் ஜேப்பியார். பிரித்துப் பார்த்தேன். அதில் நூறு ரூபாய் நோட்டுக்கள் பத்து இருந்தன.

நன்றி :

“தரணி கண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர்.”
எழுதியவர் : புகைப்படக் கலைஞர் திரு.ஏ.சங்கர்ராவ்
நக்கீரன் வெளியீடு
பக்கங்கள் : 264
விலை : ரூ.150


23 comments:

தமிழன் said...

இறந்துபோன அந்த சினிமா பிரபலம் யார்னு சொல்லலையே. யார் சார் அது?

வவ்வால் said...

அண்ணாச்சி,

இட்லிகடைய ரொம்ப நாளா தொறக்காம இருந்தோமேன்னு ,நடு ராத்திரியில தொறக்குறிங்களே , சில்லி சிக்கன் சாப்பிட்ற நேரமல்லோ :-))

ஹார்ட் அட்டாக்ன்னு செய்தியில் போட்ட சசியான மோகன இயக்குனருங்களா அண்ணாச்சி ?

----

வெள்ளாவியில் வச்சு வெளுத்து சலவை செஞ்சாப்போல வெள்ளையா நிலா இருக்குன்னு சொல்லி இருப்பார் போல வைரமுத்து :-))

சலவை...
உலா...

ல ..ல ன்னு எதுகை பார்த்திருப்பார் போல,

"அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை
அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்"

வைரமுத்து தொல்காப்பியர் வழி வந்தவருல்ல அதான் :-))

பால கணேஷ் said...

சலவை நிலா மட்டுமா... திராட்சை ரசம் வழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதுன்னு தான் முதல்ல எழுதியிருந்தார் வைரமுத்து. பின்னாலதான் அது அந்தி மழை பொழிகிறதுன்னு மாற்றப்பட்டது. எம்.ஜி.ஆர். பற்றிய விஷயம் எனக்குப் புதியது.

முரளிகண்ணன் said...

அண்ணே சூப்பர் டேஸ்டுண்ணே

பாலகணேஷ் சார்

அதை கமல்தான் மாத்தினார் என்று சொல்வார்களே?

Anonymous said...


சினிமா மட்டுமே இருப்பதால் ஒரு ஐட்டம் பேரை தலைப்பா வைக்கலாம். எதுக்கு இட்லி, தோசை, பொங்கல் வடை, சட்னி, சாம்பார்னு இவ்ளோ பெரிய மெனு?

எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும் உண்மைத்தமிழன்!!

CS. Mohan Kumar said...

சுவாரஸ்யமா இருக்கு. பத்திரிக்கையில் வர்ற மாதிரி நிறைய ஸ்கூப் நியூஸ் இருக்கு. சினிமா ஆளுங்களுக்கு நெருக்கமா இருந்துட்டு இதை ஏன் எழுதுனீங்க என கேட்க மாட்டாங்களா அண்ணே?

”தளிர் சுரேஷ்” said...

சுவையான பகிர்வு! எல்லா நிகழ்வுகளும் எனக்கு புதியதாகவும் வியப்பாகவும் இருந்தது! எம். ஜி.ஆரின் கூர்மை அதிசயிக்க வைத்தது!

உண்மைத்தமிழன் said...

[[[தமிழன் said...

இறந்துபோன அந்த சினிமா பிரபலம் யார்னு சொல்லலையே. யார் சார் அது?]]]

தேடிப் பாருங்கள்.. கிடைக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாச்சி, இட்லி கடைய ரொம்ப நாளா தொறக்காம இருந்தோமேன்னு, நடு ராத்திரியில தொறக்குறிங்களே, சில்லி சிக்கன் சாப்பிட்ற நேரமல்லோ :-))]]]

அதுக்கு முன்னாடி சுடச்சுட இட்லியை சாப்பிட்டுப் பாருங்க..

[[[ஹார்ட் அட்டாக்ன்னு செய்தியில் போட்ட சசியான மோகன இயக்குனருங்களா அண்ணாச்சி ?]]]

இல்லை..!

[[[வெள்ளாவியில் வச்சு வெளுத்து சலவை செஞ்சாப்போல வெள்ளையா நிலா இருக்குன்னு சொல்லி இருப்பார் போல வைரமுத்து :-)) சலவை...
உலா... ல ..ல ன்னு எதுகை பார்த்திருப்பார் போல..
"அடிதொறும் தலை எழுத்து ஒப்பது மோனை அது ஒழித் தொன்றின் எதுகை ஆகும்"
வைரமுத்து தொல்காப்பியர் வழி வந்தவருல்ல அதான் :-))]]]

இருக்கலாம்..! ஆனால் அப்படியே விட்டிருந்தால் நன்றாகவா இருந்திருக்கும்..?

உண்மைத்தமிழன் said...

[[[பால கணேஷ் said...

சலவை நிலா மட்டுமா... திராட்சை ரசம் வழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறதுன்னுதான் முதல்ல எழுதியிருந்தார் வைரமுத்து. பின்னாலதான் அது அந்தி மழை பொழிகிறதுன்னு மாற்றப்பட்டது. எம்.ஜி.ஆர். பற்றிய விஷயம் எனக்குப் புதியது.]]]

இப்படி பல படங்களில், பல பாடல்களில் சில வார்த்தைகள் இயக்குநர்களால் திருத்தப்பட்டிருக்கும்..!

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...

அண்ணே சூப்பர் டேஸ்டுண்ணே...]]]

மிக்க நன்றி முரளி..!

[[[பாலகணேஷ் சார்

அதை கமல்தான் மாத்தினார் என்று சொல்வார்களே?]]]

இருக்கலாம்.. அல்லது இசைஞானியாகவும் இருக்கலாம்..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

சினிமா மட்டுமே இருப்பதால் ஒரு ஐட்டம் பேரை தலைப்பா வைக்கலாம். எதுக்கு இட்லி, தோசை, பொங்கல் வடை, சட்னி, சாம்பார்னு இவ்ளோ பெரிய மெனு? எனக்கொரு உண்ம தெரிஞ்சாகனும் உண்மைத்தமிழன்!!]]]

ச்சும்மா.. பேரை நீங்க ஞாபகமா வைச்சுக்கணும்னுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[மோகன் குமார் said...

சுவாரஸ்யமா இருக்கு. பத்திரிக்கையில் வர்ற மாதிரி நிறைய ஸ்கூப் நியூஸ் இருக்கு. சினிமா ஆளுங்களுக்கு நெருக்கமா இருந்துட்டு இதை ஏன் எழுதுனீங்க என கேட்க மாட்டாங்களா அண்ணே?]]]

கேட்டா பார்த்துக்கலாம்.. தப்பா ஒண்ணும் எழுதலையே..?

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

சுவையான பகிர்வு! எல்லா நிகழ்வுகளும் எனக்கு புதியதாகவும் வியப்பாகவும் இருந்தது! எம்.ஜி.ஆரின் கூர்மை அதிசயிக்க வைத்தது!]]]

மிக்க நன்றி சுரேஷ்..!

Gujaal said...

அந்த சரக்கு பாட்டில் என்ன ப்ராண்டுங்க?

BKK said...

என்ன ஒரு ஒற்றுமை, இதை படிக்கும் போது, நான் இளைய நிலா பாடல் கேட்டுகொண்டிருக்கிறேன்

உண்மைத்தமிழன் said...

[[[Gujaal said...

அந்த சரக்கு பாட்டில் என்ன ப்ராண்டுங்க?]]]

அதையெல்லாம் அவர் எழுதலியே பிரதர்..?

உண்மைத்தமிழன் said...

[[[BKK said...

என்ன ஒரு ஒற்றுமை, இதை படிக்கும்போது, நான் இளைய நிலா பாடல் கேட்டுகொண்டிருக்கிறேன்.]]]

லக்கி மேன் நீங்கள்..!

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

ஸ்ரீராம். said...

துப்பாக்கி விமர்சனம் போட்டிருக்கிறீர்களா என்று பார்க்க வந்தால்.... அட நம்ம ஃபேவரைட்!

நாள் பட்டு படிப்பதால் யார் அந்தத் திரையுலகப் பிரபலம் என்று தெரியவில்லை!

சலவை நிலா மேட்டர் பத்திரிகையில் படித்தேன். சமீபப் சலவை நிலா வரி கேட்ட ஞாபகம் இருக்கிறதே....

பார்த்ததில் பிடித்ததில் அமிதாப்புடன் இருப்பவர்கள் யாரென்று தெரியவில்லையே..!

Unknown said...

'Idhayakkani' Jagannathan

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீராம். said...

துப்பாக்கி விமர்சனம் போட்டிருக்கிறீர்களா என்று பார்க்க வந்தால்.... அட நம்ம ஃபேவரைட்!
நாள் பட்டு படிப்பதால் யார் அந்தத் திரையுலகப் பிரபலம் என்று தெரியவில்லை!]]]

பொதுவில் சொல்ல விரும்பவில்லை. மன்னிக்கவும் நண்பரே..!

[[[பார்த்ததில் பிடித்ததில் அமிதாப்புடன் இருப்பவர்கள் யாரென்று தெரியவில்லையே..!]]]

நடிகைகள் சுகுமாரியும், சீமாவும்..!

உண்மைத்தமிழன் said...

[[[Mooventhan GP said...

'Idhayakkani' Jagannathan.]]]

இல்லை.. வேறொருவர்..!