பாலுமகேந்திரா கொடுத்த அதிர்ச்சி..!

24-06-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘முதல் தகவல் அறிக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பாகிய பாடல் காட்சிகள் கொடுத்த அதிர்ச்சியைவிடவும், அதிக அதிர்ச்சியை அளித்தவர்கள் இரண்டு பேர். விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் கலைப்புலி சேகரன், கடந்த 20-ம் தேதி காலமான பிரபல சினிமா தயாரிப்பாளர் கே.ராஜகோபால் என்னும் கே.ஆர்.ஜி.யை பற்றிச் சொன்ன தகவல்கள் ஒன்று.. இரண்டு, இதனைத் தொடர்ந்து காமிரா கவிஞர் பாலுமகேந்திரா பேசியது..!

“நேற்று காலமான தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி. தனது கடைசிக் காலத்தில் பணத்திற்காக எத்தனை கஷ்டப்பட்டார் என்பது இங்கே இருப்பவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. கமல், ரஜினியை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.. 70-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்தவர்.. தனது கடைசிக் காலத்தில் ஒரு கார்கூட இல்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டார் தெரியுமா உங்களுக்கு..? எத்தனை மனத் துயரத்திற்கிடையில் அவர் இறந்து போனார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்..?” என்றார் சேகரன்..! கேட்டவர்களுக்கெல்லாம் அதிர்ச்சிதான்.. 


ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ இவருடைய கே.ஆர்.ஜி. பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது இன்றைய சினிமாக்காரர்களுக்கே தெரியாத ரகசியம்தான்..! சிவாஜி நடித்த ‘நேர்மை’, ‘திருப்பம்’, ரஜினி நடித்த ‘துடிக்கும் கரங்கள்’, ‘ஜானி’, கமல் நடித்த ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘கடல் மீன்கள்’, பிரபு நடித்த ‘பட்ஜெட் பத்மநாபன்’, ‘மிடில்கிளாஸ் மாதவன்’, விஜய் நடித்த ‘மின்சாரக் கண்ணா’ என்று தமிழில் மட்டுமே 60-க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்திருக்கிறார் கே.ஆர்.ஜி. அதே சமயம் மலையாளத்தில் மம்மூட்டி நடித்த ‘நீலகிரி’, ‘ஒளியம்புகள்’, மோகன்லால் நடித்த ‘லால் சலாம்’, ‘வரவேற்பு’, சீனிவாசனின் புகழ் பெற்ற படமான ‘வடக்கு நோக்கிய யந்திரம்’ ஆகியவையும் கே.ஆர்.ஜி.யின் தயாரிப்புதான்..! கடைசியாக 2009-ம் ஆண்டு மாதவன், அப்பாஸ் நடிப்பில் ‘குரு என் ஆளு’ படத்தைத் தயாரித்திருந்தார். இப்படம் தயாரித்து முடிக்கப்பட்டு 1 வருடம் கழித்தே திரைக்கு வந்தது. இந்தப் படத்தின் படு தோல்வி இவரையும் சினிமாவுலகத்தின் ஓரத்தில் தள்ளியது..! 

தயாரிப்பாளர் சங்கத்தில் ஏற்கெனவே 4 ஆண்டு காலம் தலைவராகப் பொறுப்பு வகித்திருந்ததால், ஊருக்கெல்லாம் படமெடுக்க அட்வைஸ் செய்தவரின் கடைசிக் காலம் அவரை விரக்தியடைய வைத்துவிட்டது என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். தயாரிப்பாளரும் இயக்குநரை போன்று டெக்னீஷியன்தான்.. ஒரு படம் தோல்வியடைந்தாலும், அடுத்த படத்தை தயாரிக்க வேண்டும். மீண்டும் வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். கே.ஆர்.ஜி. அப்படி நினைத்துத்தான் இன்றைய ஹீரோக்கள் பலரிடமும் கால்ஷீட் கேட்டபடியே இருந்திருக்கிறார்.

ஆனால் கே.ஆர்.ஜி. ஏற்கெனவே “சுத்தமாகி”விட்டார் என்பதை உணர்ந்து, தங்களது கெப்பாசிட்டுக்கு ஏற்றபடி அவரால் செலவு செய்ய முடியாதே என்று நினைத்து பல நடிகர்களும் ஜகா வாங்கிவிட நடிகர்கள் “தயாரிப்பாளர்களை மட்டுமல்ல.. தமிழ்ச் சினிமாவையும் சேர்த்தே அழித்துவிட்டார்கள்..” என்று கோபத்துடன் பேட்டியும் கொடுத்திருந்தார்.

நான் பார்த்தவரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் அம்பாசிடர் காரில் வந்து கொண்டிருந்த கே.ஆர்.ஜி., சில மாதங்களுக்கு முன்பெல்லாம் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தின் வாசலில் ஆட்டோவில் வந்து இறங்கியபோது சுற்றியிருப்பவர்கள் அவரைப் பார்த்த பார்வையே வேறு.. தன் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அவர் சொல்லாமல் சொல்லியது போல இருந்தது..! 

சினிமாவுலகில் உச்சம் என்பது பணத்தை பத்திரப்படுத்தி வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கும் காலம்..! இருப்பதையெல்லாம் தொலைத்துவிட்டு மீண்டும் தேடுதல் வேட்டை நடத்தும் காலமல்ல..! 40 ஆண்டு காலமாக தயாரிப்புப் பணியில் இருந்தவர் காலம் முழுக்க தனது பணத்தை எடுத்ததும் இந்தக் கோடம்பாக்கத்தில்தான்..! இழந்ததும் இந்த கோடம்பாக்கத்தில்தான்..! 

கே.ஆர்.ஜி.யின் ஒரே மகன் கங்காதரன் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே மறைந்துவிட்டதால், அவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் பணியைத் தொடர அவரே தனி மனிதராக அலைய வேண்டிய சூழல்.. இப்படி குடும்பச் சூழலும் அவருக்கு எதிரியாகப் போய்விட, மனிதர் ரொம்பவே தளர்ந்து போயிருந்தார் தனது இறுதிக் காலத்தில்..!

அண்ணன் சேகரன், கே.ஆர்.ஜி.யின் இந்தச் சோகத்தை வெளிப்படையாகச் சொல்லி முடித்த கணத்தில் அரங்கம் நீண்ட மெளனம் காத்தது..  இதற்குப் பின்பும் அன்றைய தினம் காலையில் மரணமடைந்த சினிமா புகைப்படக் கலைஞர் சித்ரா சுவாமிநாதனை பற்றியும் பேசினார் சேகரன். 



சினிமாவில் ஒரு சந்தோஷமான நிகழ்ச்சிக்கு வந்திருக்க, சோகத்தை கொடுக்கிறாரே என்று சினிமாவுலகம் தவிர்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் இருக்க, அதைவிட எதிரில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த கேமிரா கவிஞர் பாலு மகேந்திராவின் முகம் இறுகிப் போய்க் கிடந்தது. இதற்கான காரணத்தை அவர் தன் பேச்சில் குறிப்பிட்ட போது பத்திரிகையாளர்களுக்கு இன்னொரு அதிர்ச்சியும் கிடைத்தது..

“இங்கே கலைப்புலி சேகரன் சொன்ன பின்புதான் எனதருமை நண்பர் கே.ஆர்.ஜி. காலமாகிவிட்டார் என்பதே எனக்குத் தெரிந்தது.. மேலும், புகைப்படக் கலைஞர் சித்ராவும் இறந்தது எனக்குத் தெரியாது.. இப்போதுதான் கேள்விப்படுகிறேன்..” என்றார்.

இதைக் கேட்டு சேகரனே அதிர்ச்சியாகிவிட்டார்..! இத்தனை தொலைத் தொடர்பு வசதிகள் இருந்தும், இது போன்ற முக்கியத் தகவல்கள் ஒருவரை சென்றடையாததை என்னவென்று சொல்வது..? இத்தனைக்கும் பாலுமகேந்திராவின் அலுவலகத்தில் எப்போதும் சினிமா துறை இளைஞர்கள் இருப்பார்கள். சினிமா பி.ஆர்.ஓ.க்களை கேட்டால் அவருக்கும் மெஸேஜ் அனுப்பினோம் என்கிறார்கள்..! எப்படி இவருக்குத் தெரியாமல் போனது என்று தெரியவில்லை..!

ஒருவருடைய கஷ்ட கால வாழ்க்கைகூட சக நண்பர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம்.. ஆனால் இறப்புச் செய்தி கூட தெரியாமல் இருப்பது ரொம்பவே துரதிருஷ்டம்..! 

19 comments:

N.H. Narasimma Prasad said...

ஒருவரின் இறப்பு நிகழ்ச்சிக்கு போகாமல் இருப்பதே பாவம். அதை உரியவகளுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது ரொம்ப கொடுமை.

MANO நாஞ்சில் மனோ said...

கே ஆர் ஜி இப்பிடியெல்லாம் கஷ்ட்டப்பட்டாரா...?

ச்சே சினிமா தூக்கியும் விடுகிறது திடீரென குப்புற கவுத்தும் விடுகிறது ஆச்சர்யமான கனவு உலகம் அது...!!!

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்கு பாலு மகேந்திராவின் கூத்து...!?

முரளிகண்ணன் said...

\\முதல் தகவல் அறிக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பாகிய பாடல் காட்சிகள் கொடுத்த அதிர்ச்சியைவிடவும்,\\

அண்ணே அப்படி என்ன அதிர்சிண்ணே?
அதப் பத்தி அப்புறம் ஒண்ணும் சொல்லலியே?

ஏன்?

”தளிர் சுரேஷ்” said...

சினிமா ஒரு சூதாட்டம்! அதில் கே,ஆர்,ஜியும் பலிகடா ஆகியது பரிதாபம்!

Unknown said...

aarambam GV..thodaraamal irukka vazhi thayaarippaalar sangam thaan seyyavendum.

உண்மைத்தமிழன் said...

[[[N.H.பிரசாத் said...

ஒருவரின் இறப்பு நிகழ்ச்சிக்கு போகாமல் இருப்பதே பாவம். அதை உரியவகளுக்கு தெரியப்படுத்தாமல் இருப்பது ரொம்ப கொடுமை.]]]

ஏதோ அவர் நேரம்.. இந்த முறை அவரது பார்வைக்கு இத்தகவல் போகவில்லை என்றே நினைக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

கே ஆர் ஜி இப்பிடியெல்லாம் கஷ்ட்டப்பட்டாரா? ச்சே சினிமா தூக்கியும் விடுகிறது திடீரென குப்புற கவுத்தும் விடுகிறது ஆச்சர்யமான கனவு உலகம் அது...!!!]]]

இதுதான் சினிமாவுலகம். இங்கே எப்போதும் உச்சத்தில் இருந்தால்தான் மரியாதை.. இல்லாவிடில் செல்லாக் காசுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[MANO நாஞ்சில் மனோ said...

நல்லா இருக்கு பாலு மகேந்திராவின் கூத்து...!?]]]

அவருக்குத் தெரியாமல் போனதுதான் ஆச்சரியமாக இருக்கிறது..! நேரம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[முரளிகண்ணன் said...

\\முதல் தகவல் அறிக்கை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஒளிபரப்பாகிய பாடல் காட்சிகள் கொடுத்த அதிர்ச்சியைவிடவும்,\\

அண்ணே அப்படி என்ன அதிர்சிண்ணே?
அதப் பத்தி அப்புறம் ஒண்ணும் சொல்லலியே? ஏன்?]]]

எல்லாம் படமாக்கியவிதத்தைப் பார்த்துதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[s suresh said...

சினிமா ஒரு சூதாட்டம்! அதில் கே,ஆர்,ஜியும் பலிகடா ஆகியது பரிதாபம்!]]]

அதுலேயே புரண்டவர்தான் கே.ஆர்.ஜி. ஆனால் கடைசி காலத்தில் அவருடைய கணக்கு எல்லாமே தப்பாகிவிட்டது..!

உண்மைத்தமிழன் said...

[[[ssr sukumar said...

aarambam GV.. thodaraamal irukka vazhi thayaarippaalar sangam thaan seyyavendum.]]]

சங்கம் ஆலோசனை மட்டுமே சொல்ல முடியும்.. கையைப் பிடித்து இழுத்துச் செல்லவோ, தடுக்கவோ முடியாது..!

khaleel said...

அவர் இப்ப industrila இல்லை. அதனால தான் அவர் கிட்ட சொல்ல மறந்துட்டாங்க. நீங்க ஒரு மாசம் பதிவு போடலனா உங்களையும் மறந்துடவாங்க. வேகமனே வாழ்கை ன்றாங்களே. அது இது தானோ.

உண்மைத்தமிழன் said...

[[[khaleel said...

அவர் இப்ப industrila இல்லை. அதனாலதான் அவர்கிட்ட சொல்ல மறந்துட்டாங்க. நீங்க ஒரு மாசம் பதிவு போடலனா உங்களையும் மறந்துடவாங்க. வேகமனே வாழ்கை ன்றாங்களே. அது இதுதானோ.]]]

இல்லை கலீல்.. பாலுஜி நடிப்பு பயிற்சிக் கல்லூரியை நடத்தி வருகிறார். தினமும் சினிமாக்காரர்களை சந்தித்துதான் வருகிறார். சசிகுமாரின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கிக் கொணடிருக்கிறார்.. அதிகமாக செல்போனை பயன்படுத்த மாட்டார். அதுதான் இப்போது பிரச்சினை என்று நினைக்கிறேன். அவருக்கும் சேர்த்துதான் மெஸேஜ் அனுப்பியதாக பி.ஆர்.ஓ.க்கள் கூறுகின்றனர்..!

Unknown said...

Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை .

எங்கள் இணையத்தின் ஓர் விட்ஜெட்டை மட்டும் உங்கள் இணையத்தில் இணைத்து விட்டால் போதும் . எந்த ஓட்டும் இல்லாமலே உங்களுக்கு எம் இணையத்தின் மூலம் டிராபிக் கிடைக்கும்


விட்ஜெட்டை இணைப்பது பற்றி அறிய



www.tamilpanel.com







நன்றி

துளசி கோபால் said...

அட ராமா:(

சித்ரவேல் - சித்திரன் said...

ஒரு தயாரிப்பாளரின் இறப்புக்குப் பின் சில உண்மைகள் தெரியுது...

அவர் கஷ்டப்படும்போது , அவர் தயாரிப்பில் நடிச்ச பெரிய நடிகர்கள் , அவரை ஓரளவுக்கு கை கொடுத்து காப்பாத்திருக்கலாம்ல சரவணன் சார். 16வயதினிலே தயாரிப்பாளரை ஓரளவுக்கு கை கொடுத்து தூக்கியவர் கமல்னு கேள்விப்பட்டு இருக்கேன்...

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

அட ராமா:(]]]

பாவம்.. தன்னுடைய அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூட பண வரவு இல்லாமல் திண்டாடியிருக்கிறார் என்பதுதான் பெரும் சோகம்.. பாவம்..! வேறென்ன சொல்ல டீச்சர்..! இந்த சினிமா உலகத்துல இன்னொரு பிரச்சினையும் இருக்கு.. ஏதாவது பண முடை, வசதி குறைவாயிட்டோம் என்பதை வெளியில் சொல்வதையே சிலர் கவுரவக் குறைச்சலா நினைச்சு சொல்ல மாட்டேன்றாங்க. இதனாலேயே பின்னாடி விஷயம் தெரிஞ்சவங்க முன்னாடியே சொல்லியிருக்கக் கூடாதான்னு கேட்டு தப்பிச்சிர்றாங்க.. அவங்களா வந்து கேட்கணும்னு எதிர்பார்த்தா இதென்ன பாசமலர் காலமா..?

உண்மைத்தமிழன் said...

[[[சித்ரவேல் - சித்திரன் said...

ஒரு தயாரிப்பாளரின் இறப்புக்குப் பின் சி உண்மைகள் தெரியுது. அவர் கஷ்டப்படும்போது, அவர் தயாரிப்பில் நடிச்ச பெரிய நடிகர்கள், அவரை ஓரளவுக்கு கை கொடுத்து காப்பாத்திருக்கலாம்ல சரவணன் சார். 16 வயதினிலே தயாரிப்பாளரை ஓரளவுக்கு கை கொடுத்து தூக்கியவர் கமல்னு கேள்விப்பட்டு இருக்கேன்.]]]

16 வயதினிலே படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுக்கு கமல் மட்டுமில்ல.. பாரதிராஜா, பாக்கியராஜ் உள்ளிட்ட பலரும் உதவி செஞ்சுதான் அவரை மீட்டெடுத்திருக்காங்க..!