அரவான் - சினிமா விமர்சனம்

03-03-2012


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரையுலகில் “மயக்கம் என்ன” படத்திற்குப் பின்பு மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த படம் இதுதான். படத்தின் பட்ஜெட் ஒரு காரணமாகவும், இயக்குநர் வசந்தபாலனிடம் தங்களுக்காக படம் சொல்லிக் கேட்ட சில நடிகர்களின் காத்திருப்பை.. இன்னொரு காரணமாகவும் சொல்லலாம்..!

18-ம் நூற்றாண்டில் நகர்கிறது இக்கதை. சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவலில் மையப்படும் 47 பக்கங்களைக் கொண்ட ஒரு கதையை எடுத்தாண்டிருக்கிறார் வசந்தபாலன். மனித குலத்தில் தவறும், சரியும் ஒன்றாகத்தான் இருந்து வருகிறது. திருடர்கள் இல்லாத சமூகமே கிடையாது. ஆனால் கள்வனாக வாழ்வதே வாழ்க்கை என்ற தீர்க்கதரிசனத்தோடு இருந்தவர்கள் உலகத்தின் எந்த மூலையிலும் இருந்திருப்பார்கள் போலும்..! 


மூத்த குடி தமிழ்க் குடி என்று பெருமையாகச் சொன்னாலும், அதிலும் கள்ளம் உண்டு.. கள்வர் உண்டு.. கள்ளத்தனம் செய்திருந்தனர் என்பதையும் நாம் மிக நேர்மையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். "களவாமை" என்ற வார்த்தை சொல்லப்படாத தமிழ் இலக்கியம் உண்டா..? தொன்றுதொட்டு வந்த அந்த களவாடலை, ஒரு நுட்பமான கலையாகவும், அதனை வழிவழியாகத் தாங்கள் பின்பற்றப்பட வேண்டிய தொழிலாக கருதியும் செய்து வந்திருக்கின்றனர். இதன் நீட்சி முடிவுதான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டம்..! 

களவு என்பது பெரும் குற்றம் என்பதை அந்தப் பிரிவினர் என்றைக்கு உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களைப் பற்றிய கதைகளை இப்போதும் நினைவு கூர்கிறது தமிழ் இலக்கியம்..! அந்த வரிசையில் இவர்களைப் பற்றிய வாழ்க்கையில் ஒரு சிறு பகுதியை திரை வெளிச்சமாக்கிய இயக்குனர் வசந்தபாலனுக்கு முதற்கண் எனது வாழ்த்துகள்..!

கள்வர்கள் மட்டுமே குடியிருக்கும் வேம்பூரின் பெரும் கள்வன் பசுபதி. கன்னம் வைத்துக் கொள்ளையடித்து கொண்டு வரும் நகைகளை விற்று ஈடாகக் கிடைக்கும் கோட்டை நெல்லை வைத்துதான் ஒட்டு மொத்த ஊருக்கும் ஜீவனம்..! மகாராணியின் வைர அட்டிகை திருட்டுக் கொடுக்கப்பட்டு அதை வேம்பூர்கார களவர்கள்தான் களவாடியிருக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டோடு தனது ஊர் மக்கள் தாக்கப்படுவதைக் கண்டு கோபமாகும் பசுபதி, அந்த அதி அசுரத் திருடனை தான் கண்டறிந்து பிடித்து கொண்டு வந்து நிறுத்துவதாகவும், பதிலுக்கு 100 கோட்டை நெல்லை பரிசாக பெறவும் அரசுத் தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டு தேடிச் செல்கிறான்.

திரைக்கதையில் மிகவும் கஷ்டப்படாமல் அசுரத் திருடன் ஆதியை மிகச் சர்வசாதாரணமாக பசுபதியுடன் சந்திக்க விடுகிறார் இயக்குனர். ஆதிதான் அந்தத் திருடன் என்பதையறிந்து அவனையும் தன் கூட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார் பசுபதி. சினிமாவிற்காக பசுபதியின் தங்கையுடன் ஒருதலைக் காதலுக்கு வழி வகுக்கிறார் ஆதி. ஒரு ஜல்லிக்கட்டு மோதலின்போது அக்கால வழக்கப்படியான "பலியாடு" என்கிற பெயரில் பதுங்கியிருந்ததாகச் சொல்லி ஆதி பகைவர்களிடம் பிடிபடுகிறார்..! பசுபதியால் அவரை மீட்க முடிந்ததா என்பதுதான் கதையா.. அல்லது ஆதி தானாகவே தப்பித்தாரா என்பதுதான் கதையா என்பதையெல்லாம் உங்களது யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

ஆனால் இயக்குனரோ, மரண தண்டனைக்கு எதிரான மனநிலைக்கு மக்களை கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கிறார். ஆனால் அதை மட்டும் அவர் செய்யவில்லை. இறுதியில் ஆதி மீதும், மரணத்தின் மீதும் படம் பார்ப்பவர்களுக்கு எந்தவொரு பரிதாப உணர்ச்சியும் ஏற்படவில்லை என்பதுதான் இந்தப் படம் காட்டும் பரிதாபம்..! மரண தண்டனைக்கு எதிராக இப்படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை..! அந்த இறுதி டைட்டில்கள் போடப்படாமலேயே இருந்திருந்தால், ரசிகர்களின் கொஞ்சமான குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்..!

அக்காலத்திய தமிழின் வழக்கு முறையைத்தான் இப்படம் சுட்டிக் காட்டுகிறதா என்பதை நிரம்பவே நம்ப முடியவில்லை..!  பசுபதி முதல் களவுத் தொழில் செய்யும் வீட்டில் படுத்திருக்கும் தம்பதியினரிடையே ஏற்படும் சிறு சச்சரவை எடுத்துக் காட்டும்போதே "ஐயையோ இதுலயுமா..?" என்றது மனது. மாமியார், மருமகள் சச்சரவு அப்போதும் இப்படித்தான் என்பதையும், கணவரை மனைவி உதைப்பதும், பதிலுக்கு மனைவியை கணவர் உதைப்பதுமாகக் காட்டியதில் நொடியில் தொலைந்து போனது இப்படம் பற்றிய எனது வரலாற்றுக் கனவு..! 


பல இடங்களில் தற்காலத்திய தமிழ் புகுந்து விளையாடுகிறது. “தட்டுவாணிச் சிறுக்கி, எடுவட்ட பய புள்ளை, மொள்ளமாரி, முடிச்சவிக்கி..” என்றெல்லாம் தயவு தாட்சண்யமே இல்லாமல் கூவத்துடன் ஒப்பிடும் அளவுக்கு தமிழ் புழங்குவதைப் பார்த்தால், இப்படம் எந்த வரலாற்று நிகழ்வைச் சொல்கிறது என்றே சந்தேகம் வருகிறது. தமிழகத்தில் பேசப்படும் அனைத்துவகை தமிழையும் லேசுபாசாக தொட்டிருக்கிறார்கள்..!

திரைக்கதை ஓடும் ஓட்டத்தையும், காட்டும் காலத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் வயதாகவில்லை என்பதை மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. 10 ஆண்டுகள் ஆன பின்பும், அதே முகப் பொலிவுடன், வித்தியாசமே காட்டாத மேக்கப்பில் ஆதியை எப்படி வைத்திருக்க முடியும் என்பதும் தெரியவில்லை. இவரை மட்டுமல்ல.. படத்தின் கேரக்டர்கள் பலருமே அது போலவே காணப்படுவது கொஞ்சம் நெருடல்தான்..!


அத்தோடு மிக, மிக குறுகிய நேரத்தில் கதையை கொண்டு செல்வதற்காக திடீர் திரைக்கதைகளை அமைத்திருப்பது கொஞ்சம் நெருடத்தான் செய்கிறது. உதாரணமாக பசுபதியின் தங்கை ஆதியிடம் “என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..” என்று கேட்பது.. தன்ஷிகா, ஆதி தொடர்பான பேச்சுக்கள்... இன்னொரு பக்கம், இவைகளெல்லாம் உண்மையானதாகவே இருக்குமானால், தமிழ்ச் சமூகம் பெண்ணடிமைச் சமூகமாக இருந்ததே இல்லை என்று ஆணித்தரமாக சொல்லிவிடலாம்..!

பசுபதியின் நிமிடத்திற்கொரு முறை மாறும் முகபாவங்கள், ஆதியின் சிக்ஸ் பேக் உடம்புடன் பேசும் தெனாவெட்டு.. கிராமத்துப் பெரிசுகள், "கொழுந்தியாள்களை பாதுகாக்கணும்யா.." என்ற சிங்கம்புலியின் காலம் கடந்தும் உணர்த்தும் உண்மைகள்.. அக்காலத்திய சில சடங்குகள், சம்பிரதாயங்கள் என்று பலவற்றையும் பார்த்து, பார்த்து நெய்திருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். 

இயக்குனருக்கு ஏற்றாற்போல் நடிப்பில் வளைந்து கொடுத்திருக்கும் அத்தனை பேரையும் பாராட்டத்தான் வேண்டும்.. சின்ன வேடம் என்றாலும் குருநாதருக்காக தட்சணை செய்ய முன் வந்த பரத், அஞ்சலி இருவருக்கும் எனது நன்றிகள்..! இனி வரும்காலத்தில் இயக்குனர்கள் நன்றியுணர்விற்கு குறிப்பிட்டுச் சொல்ல இப்படம் உதவிகரமாக இருக்கும்..!

முற்பாதியில் கதை எதன் போக்கில் போகிறது என்பதே தெரியாமல் இருக்கும் நிலையில் ஆதியின் புதிய கிளைக் கதை சுவாரஸ்யத்தைக் கொடுத்ததுதான் என்றாலும், இக்கதைதான் ஏன், எதற்கு என்ற கேள்விகளைக் கிளறிவிட்டது.. 

கரிகாலனுடனான சண்டையின்போது எருமைக் கூட்டத்தைக் கூட்டி வந்து பசுபதியை மீட்டுச் செல்லும் ஆதியின் சண்டை கிராபிக்ஸில் சின்னாபின்னமாகிவிட்டது. கொஞ்சம் செம்மைப்படுத்தி செதுக்கியிருக்கலாம்.. பணமா இல்லை..? எத்தனையோ செலவுகளை செய்துவிட்டு இதில் மட்டும் கஞ்சம் பிடித்தால் எப்படி..? காட்சியின் வேகத்தில் இது கண்டும் காணாமல் விடப்படும் என்று இயக்குநர் எதிர்பார்த்திருந்தால், நிச்சயம் அவர் ஏமாற்றமடைவார்..

ஆதி, பிடிபட்ட பின்பு இயேசுநாதரை போல் கொண்டு செல்லப்படுவதும், திருமாறனின் மனைவியும், மகனையும் அவ்விடத்தில் காட்டும் யுக்தியும் சுவாரசியமாகத்தான் இருந்தது. என்றாலும் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது ஒரு குறையே..! 

வியந்து பாராட்ட வேண்டும் என்றால், இயக்குனருக்கு பின்பு ஒளிப்பதிவாளர் சித்தார்த்தைத்தான்..! காணாடுகாத்தான் வீடுகளின் பிரமாண்டத்தையும், காடு, மலை, அருவி என்று அவர் படம் பிடித்திருப்பவைகள் அவர்களின் கடுமையான உழைப்பைக் காட்டுகிறது..! ராஜாவின் மரணக் காட்சியில் அலைகளுடனேயே கேமிராவும் ஆடும் வித்தை அசத்தல்..! கொஞ்சமே வந்தாலும் கேரளத்து பேரழகி ஸ்வாதி மேனனின் விஸ்வரூபத்தை காட்டியதற்காக சித்தார்த்தின் கேமிராவுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்..!

வரலாற்று நிகழ்வுகளுக்கேற்றாற் போன்று கலை இயக்கம் பயன்பட்டிருக்கிறது..! 18-ம் நூற்றாண்டுதானே என்பதால் கொஞ்சம், கொஞ்சம் மிச்சம், மீதி பிடித்து வைத்திருக்கிறார்கள். வீடுகள், பொருட்கள், கழி, குவளைகள் என்பதோடு நிறுத்திக் கொண்டு அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டு வைத்தது ஏன் என்றுதான் தெரியவில்லை. 

ஏற்கெனவே எழுதப்பட்ட கதைதான் என்பதால் வெங்கடேசனின் வசனங்கள் கதையை காட்சிக்கு காட்சிக்கு நகர்த்தவே பயன்பட்டிருக்கிறது..! அனைவரும் நீள, நீளமான வசனங்களை தேவையே இல்லாத இடங்களில்கூட பயன்படுத்தியிருப்பதுதான் மிகுந்த சோர்வைத் தருகிறது. வசனங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை காட்சிப்படுத்துவதில் செலுத்தியிருக்கலாம்..! பரத்தை கொலை செய்தது யார் என்று திடீரென்று ஆதிக்கும், திருமாறனுக்கும் வரும் சந்தேகம் ஏன் முன்பே வரவில்லை என்று நமக்கே சந்தேகத்தை எழுப்புகிறது..! இதன் தொடர்ச்சியாய் துப்பறியும் படமாக இது உருமாறி, கடைசியில் தோல்வி கண்ட புலனாய்வுப் புலியாய் ஆதியைக் காட்டி முடித்திருத்திருப்பில் முடிந்திருக்கிறது..!

புதிய இசையமைப்பாளர். கார்த்திக். "ஊரு ஊரு என்னைப் பெத்த ஊரு", "உன்னைக் கொல்லப் போறேன்", "நிலா நிலா போகுதே" பாடல்களில் வரிகளுக்கு மிக அழுத்தம் கொடுத்து இசையைப் பின்னுக்குத் தள்ளி கேட்க வைத்திருக்கிறார். பாராட்டுக்கள் இசையமைப்பாளருக்கு..! ஜல்லிக் கட்டு காட்சியிலும், ஸ்வாதி மேனன் இடுப்பு ஒட்டியாணத்தை ஆதியின் இடுப்பில் வைத்து சோதனை செய்யும் காட்சியிலும் ரீரிக்கார்டிங்கில் கொஞ்சம் கவனத்தைச் செலுத்தியிருக்கலாம்..! 

இயக்குனரின் இயக்கத்தை பற்றி நாம் சந்தேகப்பட வேண்டிய தேவையே இல்லை.. ஏற்கெனவே வெயிலிலும், அங்காடி தெருவிலும் அழுக வைத்து அனுப்பி வைத்தவர், இதில் லேசாக கண்ணைக் கசக்கக்கூட விடவில்லை என்பதுதான் உண்மை..! 


கள்வர்கள் என்ற ஒரு வார்த்தையிலேயே இவனுகளுக்கெல்லாம் இப்படித்தான் சாவு வரும் என்ற போக்கிலேயே வாழ்ந்து வரும் தமிழ்ச் சமூகம், இந்தப் படத்தையும் இப்படித்தான் பார்க்கப் போகிறதோ என்ற ஐயம் என் மனதில் எழுகிறது..!

பலவித கேள்விகள்.. சந்தேகங்கள் ஆயிரம் இருந்தாலும், தனக்கிருக்கும் பெயரைப் பயன்படுத்தி பக்கா கமர்ஷியல் கம்மர் கட் சாப்பிட்டு தன்னுடைய பேங்க் பேலன்ஸை ஏற்றிக் கொள்ள நினைக்காமல், மொழி, மாநிலம், இலக்கியம், தமிழ் என்று அனைத்திற்கும் ஒரு அடையாளக் குறியீட்டைச் செய்ய முன் வந்திருக்கும் வசந்தபாலனின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியதே..!

"பாலை" படத்திற்குப் பின் தமிழ் அகராதியில் சேர்க்கப்பட வேண்டிய திரைப்படம் இது.  "பாலை"யின் வறட்சியான பட்ஜெட்டிற்கு முன்னால் இப்படம் ஒரு பெரும் யானையாக நிமிர்ந்து நிற்கிறது..! அந்த வகையில் வசந்தபாலன் அதிர்ஷ்டக்காரர்தான்..!

அவசியம் பார்த்தே தீர வேண்டியது அரவான்..!




27 comments:

ராம்ஜி_யாஹூ said...

படம் சுமார் என எண்ணுகிறேன் (அதுதான் உண்மையும் கூட)
ஆனால் உங்கள் விமர்சனம் அருமை, பூரணம்
முழுமையான விமர்சனம் நன்றிகள்

rajasundararajan said...

//மரண தண்டநனைக்கு எதிராக இப்படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை..! அந்த கார்டு போடப்படாமலேயே இருந்திருந்தால் ரசிகர்களின் கொஞ்சமான குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்..!//

அந்தக் கார்டில், இன்னும் உலகில் இத்தனை நாடுகளில் மரணதண்டனை இருக்கிறது என்பதோடு நிறுத்தி இருக்க வேண்டும். அதற்கும் மேல் ஒரு வரி போட்டு இயக்குநர் சிரிப்பை வரவழைத்துவிட்டார்.

இப் பட விமர்சனத்துக்கு 'கேபிள்' தளத்தில் நான் இட்ட பின்னூட்டத்தில் ஒரு பகுதி:

/இப் படம் ஒரு murder mystery ஆக எடுக்கப்பட்டிருக்க வேண்டிய படம். நாவலில் எழுதப்பட்ட களவு நுணுக்கங்கள் நம்மை ஈர்க்கும்தான். இயக்குநரையும் கவர்ந்துவிட்டது போலும், பாதிப் படத்தை அதற்காகவே ஒதுக்கிவிட்டார்.

நாவலில் சின்னா 'கருப்பு'க்கு முன் 'சடைச்சி'யை வணங்குவான். அது அவன் இன்ன ஊரான் என உணர்த்திவிடும், ஆனால் யார் என்ன என்று பிடிகிட்டாது. அதே 'அரைகுறை வெளிப்பாடு' படம் தொடங்கிய அரைமணிக்குள் வரச் செய்து, முழு வெளிப்பாடு இடைவேளைக் கட்டத்தில் தெளியும்படிச் செய்திருக்கலாம்.

வசந்தபாலனிடம் நான் காண்பது ஒரு நெருக்கடி மன அமைப்பை. அவர் தான் யாக்கும் சட்டகங்களை இடைவெளி இல்லாமல் நிரப்புகிறார். நாடக வழக்குக்கு அது பொருந்தி வரக் கூடியதுதான் என்றாலும், காண்பவருக்கு அயர்ச்சியை உண்டுபண்ணவும் கூடும். இந்தப் படத்தில், அருவியில் பாளையக்காரரும் சின்னானும் பாய்கிற சட்டகத்தில் கூட நம்மை விட்டுப் பிடிக்கும் அந்த வெட்டவெளி கிட்டவில்லை. டூயட் பாட்டிலும் கூட இல்லை. (அடைபாட்டுக்குள் நிகழும் "அங்காடித் தெரு"க் கதைக்கு இந்த leaving-no-space-composition பொருத்தமாக இருந்ததும் உண்மை)

மகாபாரதத்தில் ஒரு பிரச்சாரம் உண்டு: பரசுராமன் க்ஷத்ரிய ஆண்களையெல்லாம் கொன்று போட்டதால், க்ஷத்ரிய ஸ்த்ரீகள் பிராமணர்களைக் கூடி வம்ச விருத்தி செய்தார்கள் என்பது அது. அதாவது, இன்றைக்கு ஒரிஜினல் க்ஷத்ரியன் என்று ஒருவனும் இல்லை; பிராமண விந்து வழி வந்தவர்கள்தான் அத்தனை பக்கிகளும் என்பது அந்தப் பிரச்சாரம்.

அது போல, ராஜாவின் (பாளையக் காரரின்) மனைவியை ஒரு கள்ளர் இனத்தவன் கூடுவதாக வசந்தபாலன் இக் கதையில் திருத்தம் செய்திருக்கிறார். (நாவலில் இதற்கு மூலம் என்று கொள்ளத்தக்க அத்தியாயத்தில், பொம்மு நாயக்கனின் மனைவியரை ஒரு கொல்லவாரு நாயக்க இளைஞன் கூடுவதாக இருக்கும்).

எஸ்ரா.வைப் போல 'ஆயிரம் பக்கம் அபத்தம்' என்றெல்லாம் புலம்பாமல் இப்படி ஒரு சிக்ஸர் அடித்தார் பாருங்கள் வசந்தபாலன், இதுதான் இப் படத்தின் கூடுதல் கதையாடல் ஆச்சரியம்!/

Siva said...

நண்பா.. உங்களைப் போன்றகவர்கள் செய்யும் தவறுதான், தப்பான படங்களுக்கு வக்காலத்தாக முடிகிறது.

அரவான் தமிழருக்கான படமா.. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்?

தமிழனி்ன் சரித்திரமே இவ்வளவுதானா? ஒரு திருட்டு கும்பலின் கேடுகெட்ட வாழ்நிலைக்கும் தமிழனின் சரித்திரத்துக்கும் சம்பந்தமென்ன நண்பா!

பிரபாகர்

Philosophy Prabhakaran said...

// மூத்த குடி தமிழ்க் குடி என்று பெருமையாகச் சொன்னாலும், அதிலும் கள்ளம் உண்டு.. கள்வர் உண்டு.. கள்ளத்தனம் செய்திருந்தனர் என்பதையும் நாம் மிக நேர்மையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். "களவாமை" என்ற வார்த்தை சொல்லப்படாத தமிழ் இலக்கியம் உண்டா..? தொன்றுதொட்டு வந்த அந்த களவாடலை, ஒரு நுட்பமான கலையாகவும், அதனை வழிவழியாகத் தாங்கள் பின்பற்றப்பட வேண்டிய தொழிலாக கருதியும் செய்து வந்திருக்கின்றனர். இதன் நீட்சி முடிவுதான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்றப் பரம்பரைச் சட்டம்..! //

சரி மேட்டருக்கு வாங்க...

// கணவரை மனைவி உதைப்பதும், பதிலுக்கு மனைவியை கணவர் உதைப்பதுமாகக் காட்டியதில் நொடியில் தொலைந்து போனது இப்படம் பற்றிய எனது வரலாற்றுக் கனவு..! //

ஒன்றும் விளங்கவில்லையே...

// 10 ஆண்டுகள் ஆன பின்பும், அதே முகப் பொலிவுடன், வித்தியாசமே காட்டாத மேக்கப்பில் ஆதியை எப்படி வைத்திருக்க முடியும் என்பதும் தெரியவில்லை. இவரை மட்டுமல்ல.. படத்தின் கேரக்டர்கள் பலருமே அது போலவே காணப்படுவது கொஞ்சம் நெருடல்தான்..! //

Good observation...

பறக்கும் குதிரை said...

நல்ல balanced review. வாழ்துக்கள்.

ஆனால் இயக்குனரின் இவ்வளவு திறமைகளும் திருட்டை glorify செய்வதற்குத்தான் என்பது தான் சோகம்.

ஹாலிவுட்ரசிகன் said...

விமர்சனங்களைப் பார்த்தால் படம் ஓகே ரகம் போலத் தோன்றுகிறது. ஆனால் இப்படிப்பட்ட புதுமுயற்சிகளுக்கு கட்டாயம் ஆதரவு தேவை. கைவிட்டால் நமக்கு பழையபடி வில்லு,சுறா, ஒஸ்தி தான் மிஞ்சும்.

ananthu said...

தெளிவான , செம்மையான விமர்சனம் ! படம் என்னை முழுமையாக களவாடவில்லை என்றாலும் முயற்சியை பாராட்டலாம் ... எனது பதிவில் அரவான் - கள்வன் பாதி ! காவலன் பாதி ...! http://pesalamblogalam.blogspot.in/2012/03/blog-post.html

Kaliraj said...

மொள்ளமாரி, முடிச்சவுக்கி என்பவை திரிந்த தழிழ் சொற்கள். முல்லை மாறி என்பது ஒரு அழகிய நிலப்பகுதி வறண்ட பகுதியாக மாறி கெடுவது.நேத்துவரைக்கும் நல்லவனா இருந்தான் திடீர்னு இப்படி மாறிட்டான் என்பதை குறிக்க இந்த சொல்...

முடிச்சை அவுக்கி என்பது பழங்கால மக்கள் மணிபர்ஸ், உடையில் பாக்கெட் போன்ற வகையறாக்கள் இல்லை. அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடையின் முனைப்பகுதியில் காசுகளை முடிச்சு போட்டு பாதுகாப்பாய் வைத்திருப்பர். அந்த முடிச்சை அவிழ்த்து பொருட்களை களவாடுபவர். முடிச்சவிக்கி என்றும் அழைக்கப்படுவர். ( பிக்பாக்கெட் )

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

படம் சுமார் என எண்ணுகிறேன் (அதுதான் உண்மையும் கூட) ஆனால் உங்கள் விமர்சனம் அருமை, பூரணம் முழுமையான விமர்சனம் நன்றிகள்]]]

பெரிய இயக்குநர்களுக்கு இதுதான் மிக முக்கிய பிரச்சினை. அவர்களின் ஒரு வெற்றி அடுத்தடுத்து தொடர வேண்டும் என்று ரசிகர்களும் விரும்புகிறார்கள்.. அந்த அளவுக்கு ரசனையை தொடர்ந்து கொடுப்பது எந்த இயக்குநருக்கும் சவால்தான்.. தொடர்ந்து முடியுமா என்பது சந்தேகம்தான் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

//மரண தண்டநனைக்கு எதிராக இப்படத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை..! அந்த கார்டு போடப்படாமலேயே இருந்திருந்தால் ரசிகர்களின் கொஞ்சமான குழப்பத்தைத் தவிர்த்திருக்கலாம்..!//

அந்தக் கார்டில், இன்னும் உலகில் இத்தனை நாடுகளில் மரணதண்டனை இருக்கிறது என்பதோடு நிறுத்தி இருக்க வேண்டும். அதற்கும் மேல் ஒரு வரி போட்டு இயக்குநர் சிரிப்பை வரவழைத்துவிட்டார்.]]]

மரணத்திற்கு எதிராக படத்தில் காட்சிகளை தான் அழுத்தமாக பதிவு செய்திருப்பதாக இயக்குநர் நினைத்திருக்கிறார். அதுதான் பிரச்சினை..! பரவாயில்லை.. அது ஒன்றை மன்னிப்போம்..!

உண்மைத்தமிழன் said...

[[[Siva said...

நண்பா.. உங்களைப் போன்றகவர்கள் செய்யும் தவறுதான், தப்பான படங்களுக்கு வக்காலத்தாக முடிகிறது. அரவான் தமிழருக்கான படமா.. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்? தமிழனி்ன் சரித்திரமே இவ்வளவுதானா? ஒரு திருட்டு கும்பலின் கேடு கெட்ட வாழ்நிலைக்கும் தமிழனின் சரித்திரத்துக்கும் சம்பந்தமென்ன நண்பா!

பிரபாகர்]]]

நண்பர் பிரபாகர்.. தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியைத்தான் அவர் தொட்டுக் காட்டியிருக்கிறார். இது உண்மைதானே..? பிறகு எதற்குக் கோபம்..?

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

// கணவரை மனைவி உதைப்பதும், பதிலுக்கு மனைவியை கணவர் உதைப்பதுமாகக் காட்டியதில் நொடியில் தொலைந்து போனது இப்படம் பற்றிய எனது வரலாற்றுக் கனவு..! //

ஒன்றும் விளங்கவில்லையே...]]]

"தூக்கம் கெடுகிறதே என்ற கோபத்தில் மாமியாரைத் திட்டும் மருமகள். பெத்த ஆத்தாளைத் திட்டுறதே உனக்கு பொழப்பா போச்சு என்று மனைவியைத் திட்டும் கணவன்.. உன் ஆத்தாளை ஒண்ணு சொல்லிரக் கூடாதே என்று கணவரை உதைக்கும் மனைவி.. என்னையவாடி உதைக்குற என்று பதிலுக்கு திருப்பி உதைக்கும் கணவன்.."

வீ.சேகர் படம் பார்த்தது போல் இருந்தது..!

உண்மைத்தமிழன் said...

[[[பறக்கும் குதிரை said...

நல்ல balanced review. வாழ்துக்கள்.
ஆனால் இயக்குனரின் இவ்வளவு திறமைகளும் திருட்டை glorify செய்வதற்குத்தான் என்பதுதான் சோகம்.]]]

ஒரு வாழ்க்கைக் கதையை எது சரி.. எது தவறு என்று பிற்காலத்தினர் சொல்லிவிட முடியாது. அது அந்தந்த காலச் சூழலுக்கேற்றாற்போன்று நமது மூதாதையர்கள் வாழ்ந்த கட்டம்.. இப்படி நடந்திருக்கிறது என்பதாகத்தான் சொல்ல முடியுமே தவிர.. இதில் தவறு, சரி என்பதை தனி நபர்கள் எடுத்துக் கொள்ளும் முடிவாகத்தான் நாம் கருத முடியும்..! இயக்குநரின் கருத்து அதுவல்ல..! படைப்பை முன் வைத்துள்ளார்.. அவ்வளவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட்ரசிகன் said...

விமர்சனங்களைப் பார்த்தால் படம் ஓகே ரகம் போலத் தோன்றுகிறது. ஆனால் இப்படிப்பட்ட புதுமுயற்சிகளுக்கு கட்டாயம் ஆதரவு தேவை. கைவிட்டால் நமக்கு பழையபடி வில்லு,சுறா, ஒஸ்திதான் மிஞ்சும்.]]]

மிக்க நன்றி ஹாலிவுட்ஜி.. நீங்கள் சொன்னதும் உண்மைதான்..! ஆனால் இப்படத்தின் வெற்றியில்தான் அதன் தயாரிப்பாளரின் எதிர்கால வாழ்க்கையும் உள்ளது. அதையும் கொஞ்சம் பார்க்க வேண்டியுள்ளது..!

உண்மைத்தமிழன் said...

[[[ananthu said...

தெளிவான, செம்மையான விமர்சனம்!

படம் என்னை முழுமையாக களவாடவில்லை என்றாலும் முயற்சியை பாராட்டலாம் ... எனது பதிவில் அரவான் - கள்வன் பாதி ! காவலன் பாதி ...! http://pesalamblogalam.blogspot.in/2012/03/blog-post.html]]]

நீங்கள் மட்டுமல்ல.. பெரும்பாலோரின் நிலையும் இப்படித்தான்..! உங்களது பதிவின் தலைப்பும், உள்ளடக்கமும் அருமை..!

உண்மைத்தமிழன் said...

[[[Kaliraj said...

மொள்ளமாரி, முடிச்சவுக்கி என்பவை திரிந்த தழிழ் சொற்கள்.

முல்லை மாறி என்பது ஒரு அழகிய நிலப்பகுதி வறண்ட பகுதியாக மாறி கெடுவது.நேத்துவரைக்கும் நல்லவனா இருந்தான் திடீர்னு இப்படி மாறிட்டான் என்பதை குறிக்க இந்த சொல்...

முடிச்சை அவுக்கி என்பது பழங்கால மக்கள் மணிபர்ஸ், உடையில் பாக்கெட் போன்ற வகையறாக்கள் இல்லை. அவர்கள் உடுத்தியிருக்கும் ஆடையின் முனைப்பகுதியில் காசுகளை முடிச்சு போட்டு பாதுகாப்பாய் வைத்திருப்பர். அந்த முடிச்சை அவிழ்த்து பொருட்களை களவாடுபவர். முடிச்சவிக்கி என்றும் அழைக்கப்படுவர். (பிக்பாக்கெட்)]]]

அர்த்தங்களை தெரிந்து கொண்டேன். தகவலுக்கு மிக்க நன்றிகள் அண்ணா..!

Anonymous said...

நீங்கள் அனுப்பிய பதிவை இணைத்துவிட்டேன். நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

Unknown said...

எவ்வித பாராபட்சமும் இல்லாத விமர்சனம். எல்லாரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பது மட்டுதான் கொஞ்சம் உதைக்கிறது..

வசந்தபாலன் மீது கொண்ட மதிப்பினால் பார்க்கலாம்..ஆனால் படம் நம்மை ஏமாற்றவே செய்கிறது..

பிரசன்னா கண்ணன் said...

முடிச்சவிக்கி அப்படிங்குறதுக்கு நம்ம திண்டுக்கல் பக்கம் வேற ஒரு அர்த்தம் கூட உண்டு தலைவரே.. :-)

உண்மைத்தமிழன் said...

[[[எவ்வித பாராபட்சமும் இல்லாத விமர்சனம். எல்லாரும் பார்க்க வேண்டிய திரைப்படம் என்பது மட்டுதான் கொஞ்சம் உதைக்கிறது. வசந்தபாலன் மீது கொண்ட மதிப்பினால் பார்க்கலாம். ஆனால் படம் நம்மை ஏமாற்றவே செய்கிறது..]]]

எல்லோருமே பார்க்கலாம் விஜய்..! எல்லா படங்களும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு இயக்குநர் தனது அனைத்து படங்களிலும் ஜெயிப்பார் என்றும் சொல்ல முடியாதே..! அந்த வகையில் எனக்கும் வருத்தம்தான்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரசன்னா கண்ணன் said...

முடிச்சவிக்கி அப்படிங்குறதுக்கு நம்ம திண்டுக்கல் பக்கம் வேற ஒரு அர்த்தம்கூட உண்டு தலைவரே.. :-)]]]

அப்படியா..? என்னன்னு சொல்லலாமே பிரசன்னா..? எனக்குத் தெரியலை..!

N.H. Narasimma Prasad said...

அருமையான விமர்சனம் அண்ணே. பகிர்வுக்கு நன்றி.

Marc said...

அருமையான விமர்சனம் வாழ்த்துகள்.

உண்மைத்தமிழன் said...

[[[N.H.பிரசாத் said...

அருமையான விமர்சனம் அண்ணே. பகிர்வுக்கு நன்றி.]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் பிரசாத்..!

உண்மைத்தமிழன் said...

[[[DhanaSekaran .S said...

அருமையான விமர்சனம் வாழ்த்துகள்.]]]

மிக்க நன்றி தனசேகரன்..!

ஸ்ரீகாந்த் said...

படம் பார்க்க வரும் ரசிகர்களை திருப்தி அடைய செய்யவேண்டும் என்பது தான் ஒரு நல்ல இயக்குனரின் முடிவாக இருக்குமே தவிர உங்களை போன்ற விமர்சனம் செய்பவர்களை ஒரு நாளும் திருப்தி படுத்தவே முடியாது என்பது என் கருத்து ......மேலும் சினிமா என்பது ஒரு சுவாரசியமான தொகுப்பாகவே பார்க்க வேண்டுமே தவிர குற்றம் மட்டுமே கண்டு பிடிக்கும் மாமியார்களை போல் தயவு செய்து இருக்காதீர்கள்.....விமர்சனம் ஒரு நாகரீக எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதை இந்த இணைய தமிழ் பதிவு எழுதுபவர்களுக்கு ஒரு கட்டாய விதியாக வேண்டுமோ என ஒரு வினா உங்கள் விமர்சனத்தை படித்தவுடன் ஏற்பட்டது///

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்ரீகாந்த் said...

படம் பார்க்க வரும் ரசிகர்களை திருப்தி அடைய செய்யவேண்டும் என்பதுதான் ஒரு நல்ல இயக்குனரின் முடிவாக இருக்குமே தவிர உங்களை போன்ற விமர்சனம் செய்பவர்களை ஒரு நாளும் திருப்திபடுத்தவே முடியாது என்பது என் கருத்து.

நானும் அந்த ரசிகர்களில் ஒருவன்தான்..! என்னைத் திருப்திப்படுத்தவில்லை என்று நண்பனிடம் பகிர்ந்து கொள்வது போலத்தான் சில நண்பர்களிடம் இங்கே பகிர்ந்துள்ளேன்..!


[[[மேலும் சினிமா என்பது ஒரு சுவாரசியமான தொகுப்பாகவே பார்க்க வேண்டுமே, தவிர குற்றம் மட்டுமே கண்டு பிடிக்கும் மாமியார்களை போல் தயவு செய்து இருக்காதீர்கள்.]]]

சினிமா விமர்சனம் என்ற பகுதிக்குள் வந்து விமர்சனமே செய்யாதீர்கள் என்றால் எப்படிங்கண்ணா..?

[[[விமர்சனம் ஒரு நாகரீக எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதை இந்த இணைய தமிழ் பதிவு எழுதுபவர்களுக்கு ஒரு கட்டாய விதியாக வேண்டுமோ என ஒரு வினா உங்கள் விமர்சனத்தை படித்தவுடன் ஏற்பட்டது//]]]

இதில் எங்கே அநாகரிகம் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினால் தெரிந்து கொள்கிறேன்..!

வருகைக்கு நன்றி நண்பரே..!