தோனி-சினிமா விமர்சனம்

10-02-2012



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நடிகர் பிரகாஷ்ராஜின் தனிப்பட்ட வாழ்க்கை நிகழ்வுகளை மட்டுமே மையப்படுத்தி பார்த்தால் அவர் மீது பலருக்கும் பலவித விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவரது டூயட் மூவிஸின் தயாரிப்புகள் அனைத்தும் தரமானவை என்பதில் சந்தேகமில்லை. அந்த வரிசையில் இந்தப் படமும் நிச்சயமாகப் பேசப்படக் கூடியது.

பல ஆண்டுகளாக நான் மறந்து போயிருந்த என் வாழ்க்கை நினைவுகளை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது இப்படம். எனக்கு மட்டுமல்ல.. படம் பார்க்கும் அனைவருக்குமே நிச்சயமாக இதுவொரு ஆட்டோகிராபாகத்தான் இருக்கும்..!

2010-ல் வெளிவந்த மகேஷ் மஞ்ச்ரேக்கரின் மராத்தி மொழிப் படமான Shikshanachya Aaicha Gho -வின் தழுவல்தான் இப்படம்..!


சப் ரிஜிஸ்தர்ர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக இருக்கும் சுப்பு என்னும் பிரகாஷ்ராஜ் மனைவியை இழந்தவர். 9-ம் வகுப்பு படிக்கும் பையனும், 7-ம் வகுப்பு படிக்கும் பெண்ணும் உண்டு. சம்பளத்திற்கு மட்டுமே கை நீட்டும் பழக்கம் கொண்ட சுப்பு, அதற்கு மேல் நியாயமான முறையில் சம்பாதிக்க விரும்பி வீட்டிலேயே ஊறுகாய் தயாரித்து அதனையும் விற்பனை செய்து வருகிறார்.

தானே சமையல் செய்து, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்து, மாலையில் மீண்டும் சமையல் செய்து அக்மார்க் பிள்ளைகளுக்குத் தாயாகவும் இருந்துவரும் அவருக்கு ஒரே பிரச்சினை அவருடைய பையன் கார்த்திக்குதான். தோனி மீது பைத்தியம் பிடித்தாற்போல் இருக்கும் அவரது பையன் கார்த்திக் படிப்பில் மக்காக இருந்தாலும், கிரிக்கெட்டில் புலியாக இருக்கிறான். அந்தப் பள்ளியோ பொதுத் தேர்வில் நூற்றுக்கு நூறு விழுக்காடு தேர்வுகளைக் காண்பிக்க வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் நிர்வாகிகளைக் கொண்டது. 

கார்த்திக் கணிதத்தில் ஆர்வம் இல்லாமலும், மண்டையில் ஏறவில்லை என்றும் சொல்லி அதில் தோல்வியடைந்து கொண்டே வர, கடைசி மாதாந்திர தேர்விலும் அவன் தோல்வியடைகிறான். 9ம் வகுப்பில் அவனுக்கு பாஸ் போட முடியாது என்று பள்ளி நிர்வாகம் உறுதியுடன் சொல்லிவிட, கிரிக்கெட் மீதான அவனது பைத்தியத்தைக் கண்டு கோபமடையும் பிரகாஷ்ராஜ் கார்த்திக்கை தாக்கிவிடுகிறார். அந்தத் தாக்குதல் கோரமாகி, கார்த்திக்கை மரணப் படுக்கையில் போட்டுவிடுகிறது..! துயரத்திலும், துயரமாக தனது பையனை மீட்கப் போராடும் ஒரு அக்மார்க் மிடில் கிளாஸ் மாதவனின் கதைதான் மீதிக் கதை..!

கதை தேர்விலும், இயக்கத்திலும் செஞ்சுரி அடித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ். சிற்சில இடங்களில் அவருடைய அழுகையும், செயலும் ஓவர் ஆக்டிங்கோ என்று சொல்லவும் வைக்கிறது. பிள்ளைகளிடம் கெஞ்சல், பாச உணர்ச்சி, பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் போராட்டம், கிரிக்கெட் கோச் நாசரிடம் தோழமையுணர்வு, நீயா நானாவில் தனது கருத்தை, தனது மன அழுத்த்த்தை பகிரங்கமாக பதிவு செய்தல், அலுவலகத்தில் சிரித்த முகம், கந்து வட்டிக்காரனிடம் பயப்படுதல், முதல்வரை சந்திக்க முனைப்பு காட்டி சாதித்தல்.. என்று அத்தனையிலும் பிரகாஷ்ராஜே சாதித்திருக்கிறார். மனிதரின் நடிப்புத் திறனை பற்றி யாருக்கும் சந்தேகமில்லை என்பதால் இப்படத்தைத் தூக்கி நிறுத்தியிருப்பது அவரது நடிப்பும், இயக்கமும்தான்..!


'ரத்தச் சரித்திரம்' படத்தில் விவேக் ஓபராய் மனைவியாக நடித்து நம் கண்களை கொள்ளை கொண்ட ராதிகா ஆப்தேயை மீண்டும் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் பிரகாஷ். அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் திடுக்கிட வைத்தது. ஆனாலும் அவரது செயலுக்கு நியாய, காரண காரியங்களை அடுத்தடுத்து திரைக்கதையில் சாமர்த்தியமாக திணித்திருக்கிறார். பாராட்டுக்கள்..! இவருடைய சிரிப்பு அபாரம்தான்.. போட்டோஜெனிக் முகம்..! அசத்தல்..! அதிகம் நடிப்புக்கு இடமில்லை என்பதால் அடுத்து யாராவது முழுமையாக நடிக்க வைப்பார்கள் என்று நம்புவோமாக..!

கந்துவட்டிக்காரரின் திடீர் ஸ்டண்ட்டும், அதனால் விளையும் நன்மையுமாக பிரகாஷ்ராஜுக்குக் கிடைக்கும் அந்தப் பாசத்தையும் கச்சிதமாக அளித்திருக்கிறார் அவர். திரையுலகத்துக்குப் புதுமுகமா அவர்..? பாராட்டுக்கள்..! இன்னும் எத்தனை படங்களில்தான் பிரம்மானந்தம் இதே கேரக்டரில் நடிக்கப் போகிறார்..? தெலுங்கிலேயே 50 படங்களில் நடித்திருப்பார். கதைக்கு உதவாது என்றாலும், தெலுங்கிலுகில் படத்திற்கு ஒரு விளம்பரமாக இணைக்கப்பட்டிருக்கிறார்..!

கார்த்திக்காக நடித்த சிறுவன் ஆகாஷ்பூரி இடைவேளைக்கு பின்பு கோமா ஸ்டேஜில் இருக்கும்போது எப்படித்தான் நடித்தானோ தெரியவில்லை.. பொதுவாக இவன் வயதுக்கார்ர்களால் இது போன்ற காட்சிகளில் ஒன்றிப் போய் நடிக்க இயலாது. ஆனால் பையன் பின்னியிருக்கிறான். கணிதம் வரவில்லையே என்று தங்கை திட்டும்போது தோனியின் கிரிக்கெட் வரலாற்றையே எடுத்துவிடும் காட்சியில் என்னை மறந்து கை தட்டினேன்..! 


பள்ளியில் கார்த்திக்கின் லாக்கரை திறந்து பார்த்துவிட்டு பிரகாஷ்ராஜின் அந்த ஆக்சன், தொடர்ச்சியான காட்சிகளின் வேகம் செம பரபரப்பு..! ஹிஸ்டரி டீச்சர் ஹேமாவிடம் அவர் கேட்கும் கேள்வியும், கிடைக்கப் பெறாத பதில்களும்தான் இப்படத்தின் முக்கிய காட்சி. இதில்தான் நாம் பல ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருக்கும் கல்வித் துறை பற்றிய கொள்கை அடங்கியிருக்கிறது.

பாடங்களை வெறுமனே மனனம் செய்து பரீட்சை எழுதி ரேங்க் எடுத்து தேர்வு செய்து சர்டிபிகேட்டை வாங்கி வேலையில் சேர்ந்து வாழ்க்கையில் உயர்வதுதான் லட்சியமா..? அல்லது படிப்பு இல்லாமல் வேறு திறமையை வைத்து வாழ்க்கையில் உயர விரும்புவது தவறா..? இதில் அந்தப் பள்ளிகளின் சுயநலத்தன்மையையும் சுட்டிக் காட்டியுள்ளார் பிரகாஷ். பையன் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை.. பிளேயராக இருந்தாலும் கவலையில்லை. நூறு சதவிகிதம் தேர்ச்சி மட்டுமே எங்களது குறிக்கோள் என்று சொல்லும் பள்ளிகளை கேள்வி மேல் கேள்வி கேட்கிறார் பிரகாஷ். பதில் சொல்லத்தான் யாருமில்லை..!

இதே கேள்வியைத்தான் இறுதியில் முதல்வரிடமும் கேட்கிறார். கொஞ்சம், கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும் என்கிறார் அவர். ஆனால் நிச்சயமாக மாற்ற மாட்டார்கள்..! நேர்மையாக நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால் அது கிடைக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதிக்கும் அளவுக்கு படிப்பாற்றல் வேண்டும். அவ்வளவுதான். இது ஒன்றை மையமாக வைத்துதான் தமிழ்நாட்டில் இத்தனை பொறியியல் கல்லூரிகள் உருவாகியுள்ளன. இவைகள் நல்ல மாணவர்களை உருவாக்கியிருக்கலாம்.. ஆனால் தரம் குறைந்த கல்லூரிகளில் இருந்து வெளிவந்திருக்கும் குறைவான சதவிகித்த்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் உயரத்தைத் தொட முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள்..!

விளையாட்டு சோறு போடாது என்றாலும், அது ஒரு தனி திறமை. அதனை வளர்த்துக் கொள்ள குழந்தைகளுக்கு நாம் அனுமதியளிக்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் பிரகாஷ். ஆனால் இது எத்தனை பேருக்கு பிடிக்கும் என்றுதான் தெரியவில்லை. யதார்த்த நிலைமை தனது அண்டை வீட்டாரைவிட, தனது உறவினர் குழந்தைகளைவிட தன் குழந்தை நன்கு படித்து, பணம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள். அடுத்த டோனியாக, யுவராஜ்சிங்காக, சேவாக்காக வளர எந்தப் பெற்றோரும் அனுமதியளிப்பதில்லை..! ஏன் கூடாது..? அவன் போக்கிலேயே விடுவோமே என்கிறார் பிரகாஷ்..!


பிரபல பத்திரிகையாளர் த.செ.ஞானவேல் வசனங்களை ஈர்ப்பாய் எழுதியிருக்கிறார். “இந்த டோனி, சச்சின், சேவாக் இவனுகளையெல்லாம் மொத்தமா நாடு கடத்திரணும் ஸார்..” என்ற பிரகாஷின் வெறுப்பான ஆசைக்கு தியேட்டரில் என்ன கை தட்டல் கிடைக்கப் போகிறதோ தெரியவில்லை. ஆனால் இப்படி ஒவ்வொரு அப்பனும் நாட்டில் நினைத்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பதையும் மறுப்பதற்கில்லை..! “இனிமே பிள்ளைக போடுற ஜட்டியகூட ஸ்கூல் கலர்ல போடச் சொல்வானுங்க போலிருக்கு..” என்ற வரியில் இருக்கும் நக்கல் நாடு தழுவியது..! போகிறபோக்கில் ராதிகாவிடம் டேட் ஊறுகாய் செய்து தருவதாகச் சொல்வதும், அதற்கு ராதிகாவின் ரியாக்ஷனும் அசத்தல்..!

இளையராஜாவின் இசை என்றார்கள். வாங்கும் பணத்துக்கும் பாடலுக்கு மட்டுமே இசை தெரிகிறது..! அதிலும் பிரபுதேவா சம்பளம் வாங்காமல் நட்புக்காக ஆடிக் கொடுத்திருக்கிறார். அதிகம் வெளியூரெல்லாம் பறக்காமல் பாண்டிச்சேரியிலேயே பாதி படத்தை முடித்திருக்கிறார்கள். வாழ்க..!

இந்தப் படத்தை பார்த்துவிட்டு அந்தத் தாக்கத்துடன் இருந்த வேளையில் இன்று காலை சென்னையில் ஒரு பள்ளியில் ஆசிரியரை மாணவரொருவன் குத்திக் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. காரணம், படிப்பு டார்ச்சர். பையனுக்குப் பிடிக்கவில்லை. பெற்றோர்களிடம் சொல்லி மாட்டிவிட்டாரே என்கிற கோபம்..! இதில் யாரைக் குற்றம் சொல்வது..? பையனையா..? ஆசிரியையா..?

ஒவ்வொருவரும் அவரவர் எல்லைக் கோட்டைத் தாண்டிச் செல்லும்போதுதான் பிரச்சினை ஏற்படுகிறது..! எந்தப் படிப்பு வரவில்லையோ அதனை வேண்டா வெறுப்பாகவே இருந்தாலும் படித்தே தீர வேண்டும் என்ற கட்டாயத்தைத்தான் இப்போதைய கல்வி முறை நமக்குள் புகுத்தி வருகிறது.. இந்த முறை நிச்சயமாக மாற வேண்டும்..! 

அதற்கான துவக்கத்தை முதன்முதலில் ஒரு திரைப்படம் மூலமாக நமக்குள் உருவாக்கியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். தழுவலான படம் என்றாலும்கூட, இந்த நேரத்தில்,  தனது பொன்னான நேரத்தை கைவிட்டு, தனது சொந்தப் பணத்தில் இப்படியொரு படத்தை எடுத்துத் தந்திருக்கும் அவருக்கு எனது அன்பான வணக்கங்கள். ஹாட்ஸ் அப் பிரகாஷ் அண்ணே..! 





தோனி - அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்..!

28 comments:

கோவை நேரம் said...

இனிய...முன் அதி காலை வணக்கம்

கோவை நேரம் said...

விமர்சனம் அருமை...படம் பார்க்கணும்...நம்பிக்கை வீண் போகவில்லை

கோவை நேரம் said...

இன்னொரு நண்பன் போல .....பிடித்ததை செய்...

நன்பேண்டா...! said...

விமர்சனம் அருமையாக உள்ளது படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது

Anonymous said...

Going this sunday. Thanks for the review sir.

Thava said...

புதிய படத்தை பற்றிய சிறப்பான அலசல்..படம் நல்ல படம் என்பதை தங்கள் எழுத்துக்களே சொல்கின்றன.எப்படியும் பார்த்துவிடுவேன்.என் நன்றிகள்.

சைக்கோ திரை விமர்சனம்

Indian said...

விமர்சனத்துக்கு நன்றி.

//
நேர்மையாக நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால் அது கிடைக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதிக்கும் அளவுக்கு படிப்பாற்றல் வேண்டும். அவ்வளவுதான்.//

என்னத்தச் சொல்ல? தகவல் தொழில் நுட்பத் துறைக்கு வருபவர்களில் பலருக்கு சாப்ட்வேர் மெக்கானிக்குகளாக இருக்க ஆசைப்படுகிறார்களே தவிர சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகும் தன்முனைப்பு கொஞ்சமும் இருப்பதில்லை.

RAVI said...

ரைட்டோ.... பாத்துடலாம்.

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

இனிய... முன் அதிகாலை வணக்கம்.]]]

இப்படியுமா..?

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

விமர்சனம் அருமை... படம் பார்க்கணும்... நம்பிக்கை வீண் போகவில்லை.]]]

ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு மாணவனும், ஒவ்வொரு ஆசிரியரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இது..!

உண்மைத்தமிழன் said...

[[[கோவை நேரம் said...

இன்னொரு நண்பன் போல ..... பிடித்ததை செய்...]]]

இதைத்தான் சொல்கிறது படம். பிடித்ததை படி. மண்டையில் ஏறுவதையே படி.. மாற வேண்டியது நமது கல்வி முறை..! அதன் அவசியத்தை உணர்த்துகிறது இப்படம்..!

உண்மைத்தமிழன் said...

[[[நன்பேண்டா...! said...

விமர்சனம் அருமையாக உள்ளது படம் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.]]]

அவசியம் பாருங்கள் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[! சிவகுமார் ! said...

Going this sunday. Thanks for the review sir.]]]

ஓகே.. போயிட்டு வந்து தயவு செய்து விமர்சனம் எழுது தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[Kumaran said...

புதிய படத்தை பற்றிய சிறப்பான அலசல்.. படம் நல்ல படம் என்பதை தங்கள் எழுத்துக்களே சொல்கின்றன. எப்படியும் பார்த்துவிடுவேன். என் நன்றிகள்.]]]

நன்றி குமரன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Indian said...
விமர்சனத்துக்கு நன்றி.

//நேர்மையாக நிறைய சம்பாதிக்க வேண்டும் என்றால் அது கிடைக்கும் தகவல் தொழில் நுட்பத் துறையில் சாதிக்கும் அளவுக்கு படிப்பாற்றல் வேண்டும். அவ்வளவுதான்.//

என்னத்தச் சொல்ல? தகவல் தொழில் நுட்பத் துறைக்கு வருபவர்களில் பலருக்கு சாப்ட்வேர் மெக்கானிக்குகளாக இருக்க ஆசைப்படுகிறார்களே தவிர சாப்ட்வேர் இஞ்சினியர் ஆகும் தன் முனைப்பு கொஞ்சமும் இருப்பதில்லை.]]]

அனைவரும் மந்தரித்துவிட்ட ஆடுகளை போலவே இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். அப்படித்தான் அவர்களது எண்ணமும், நடத்தையும் பெற்றோர்களாலும், ஆசிரியர்களாலும் வடிவமைக்கப்படுகிறது..!

உண்மைத்தமிழன் said...

[[[RAVI said...

ரைட்டோ.... பாத்துடலாம்.]]]

அவசியம் பாருங்கள் ரவி..!

ஹாலிவுட்ரசிகன் said...

பிரகாஷ்ராஜின் டூயட் முவிஸ் படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். சில படங்கள் தழுவலாக இருந்தாலும் அனேகமாக எல்லாமே மிக நல்ல படங்கள் தான். அதனால் நம்பிப் பார்க்கப் போகிறேன். விமர்சனத்திற்கு நன்றி.

rajasundararajan said...

சென்னை பாரீஸ் கார்னர் சென்ட்.மேரீஸ் பள்ளி ஆசிரியை கொலைச் செய்தியை வாசித்துச் சோர்வாக இருக்கிறேன். பள்ளி நிர்வாகம், பெற்றோர், மாணவன் என எல்லாரும் 'அது' இன்னது/ இதனால் எனும் தெளிவில்லாமல் த்ம் பக்க நியாயத்தைப் பேசுவதாகவே தோன்றுகிறது. மனநல மருத்துவரும், பெற்றோர்க்கு இடையிலான சண்டையைக் காரணமாகக் கண்டுபிடிக்கிறார். இவற்றை எல்லாம் தாண்டி ஏதோ இருக்கிறது. அது இந்தக் காலகட்டத்தோடு சம்பந்தப்பட்டது. இன்னதென்று எனக்கும் தெரியவில்லை.

நானும் பள்ளி ஆசிரியர்களிடம் பிரம்படியும் தகப்பனிடம் சாட்டைகம்பு அடியும் வாங்கி வளர்ந்தவந்தான். ஆனால் எல்லா ஆசிரியர்களும் அடிப்பார்கள்; எல்லாப் பிள்ளைகளும் படுவார்கள்; எல்லாத் தகப்பன்மாரும் மேலும் அடிப்பார்கள் என்னும் ஒரு ஜனநாயகத் தெளிவு அன்று இருந்தது.

Jeevanantham Paramasamy said...

படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம். நன்றி.

aotspr said...

பிரகாஷ்ராஜ் ஒரு திறமையான நடிகர்
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விமர்சனம் அருமை அண்ணே....!

உண்மைத்தமிழன் said...

[[[ஹாலிவுட்ரசிகன் said...

பிரகாஷ்ராஜின் டூயட் முவிஸ் படங்கள் எல்லாம் பார்த்திருக்கிறேன். சில படங்கள் தழுவலாக இருந்தாலும் அனேகமாக எல்லாமே மிக நல்ல படங்கள்தான். அதனால் நம்பிப் பார்க்கப் போகிறேன். விமர்சனத்திற்கு நன்றி.]]]

அவசியம் பாருங்கள். ஏமாற மாட்டீர்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

சென்னை பாரீஸ் கார்னர் சென்ட். மேரீஸ் பள்ளி ஆசிரியை கொலைச் செய்தியை வாசித்துச் சோர்வாக இருக்கிறேன். பள்ளி நிர்வாகம், பெற்றோர், மாணவன் என எல்லாரும் 'அது' இன்னது/ இதனால் எனும் தெளிவில்லாமல் த்ம் பக்க நியாயத்தைப் பேசுவதாகவே தோன்றுகிறது. மனநல மருத்துவரும், பெற்றோர்க்கு இடையிலான சண்டையைக் காரணமாகக் கண்டுபிடிக்கிறார். இவற்றை எல்லாம் தாண்டி ஏதோ இருக்கிறது. அது இந்தக் காலகட்டத்தோடு சம்பந்தப்பட்டது. இன்னதென்று எனக்கும் தெரியவில்லை. நானும் பள்ளி ஆசிரியர்களிடம் பிரம்படியும் தகப்பனிடம் சாட்டைகம்பு அடியும் வாங்கி வளர்ந்தவந்தான். ஆனால் எல்லா ஆசிரியர்களும் அடிப்பார்கள்; எல்லாப் பிள்ளைகளும் படுவார்கள்; எல்லாத் தகப்பன்மாரும் மேலும் அடிப்பார்கள் என்னும் ஒரு ஜனநாயகத் தெளிவு அன்று இருந்தது.]]]

காலத்திற்கேற்றாற்போல் மாணவர்கள் மாறுகிறார்கள். ஆனால் ஆசிரியர்கள் மாற மறுக்கிறார்கள். இதுதான் காரணம்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஜீவானந்தம் பரமசாமி said...

படத்தை பார்க்க தூண்டும் விமர்சனம். நன்றி.]]]

நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[Kannan said...

பிரகாஷ்ராஜ் ஒரு திறமையான நடிகர்
"நன்றி,
கண்ணன்]]]

மிகப் பிரமாதமான நடிகர்..! இந்தப் படத்தின் மூலமாக சிறந்த இயக்குநராகவும் பிரமோஷன் பெற்றுள்ளார்.

உண்மைத்தமிழன் said...

[[[பன்னிக்குட்டி ராம்சாமி said...

விமர்சனம் அருமை அண்ணே....!]]]

நன்றி ராமசாமி..!

RajMena said...

பிரகாஷ் ராஜுக்கு இணையான உழைப்பு இளையராஜாவுடையது. ரொம்ப நாளைக்குப் பிறகு இந்த மாதிரி பாடல்களை, பின்னணி இசையை தமிழ் சினிமாவில் கேட்க முடிந்தது. எந்தப் பாடலுமே உறுத்தவில்லை. வெகு இயல்பாக படத்தோடு இயைந்த காட்சிகளாகவே கடந்து போகின்றன.

பாடல்களுக்கான சூழல்களைப் பாருங்கள்…

பொருளாதார கஷ்டம். ஆனால் பருவம் காத்திருக்குமா… தாயில்லாத மகள் வயசுக்கு வந்துவிடுகிறாள். தந்தைக்கு அவசரமாக தகவல் போகிறது பக்கத்து வீட்டிலிருந்து. விஷயம் தெரியாமல் அரக்கப் பரக்க வரும் அப்பாவுக்கு விஷயத்தைச் சொல்கிறார்கள். பெரும் தவிப்பு, கவலை, பாசத்துடன் கதவோரமாய் எட்டிப் பார்க்கிறார்… வெள்ளந்தியான ஒரு பூ மாதிரி உட்கார்ந்திருக்கும் மகள் மீது அவர் பார்வை பதிய… ஒரு இசைமேகம் மெதுவாக பொழிய ஆரம்பிக்கிறது… மளுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்க்கிறது நம் கண்களில்… அதுவே ‘வெளையாட்டா படகோட்டி…’ என பருவமடைந்த மகளுக்கான தாலாட்டாய் நீள்கிறது. ராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் நிச்சயம் இதற்கும் இடமுண்டு!

நினைவின்றி வீல்சேரில் மகன்… அய்யோ மகனைப் புரிந்து கொள்ளாமல் அடித்துவிட்டோமே என்ற ஆற்றாமை… காயப்பட்ட ஒரு நெஞ்சுக்கு ஆறுதலாய்… ‘தாவித் தாவி போகும் மேகம்…’ என இசைஞானி பாட, மனம் எல்லையற்ற பரவசத்தில் தளும்புகிறது.

இசையிலிருந்து எந்தக் காட்சியையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவு அப்படி நெய்திருக்கிறார் பின்னணி இசையை. படிக்க மறுத்த மகனை திட்டும்போது வேக வேகமாக உச்சத்துக்குப்போகும் இசை, அவன் அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கும்போது, கதறுகிறது… கண்ணீர் வடிக்கிறது. இந்த காட்சிகளில் ஒரு சின்ன வார்த்தை கூட கிடையாது. இயக்குநர், வசனகர்த்தா என அத்தனை பேரையும் ‘கொஞ்சம் சும்மா இருங்க’ என சொல்லிவிட்டு இசை ஆட்சி செய்கிறது!

2012-ம் ஆண்டின் துவக்கம் மிக மிக அருமையாய் அமைந்திருக்கிறது தமிழ் சினிமா இசைக்கு

உண்மைத்தமிழன் said...

ராஜ் ஸார்..

நானும் இளையராஜாவின் ரசிகன்தான். ஏனோ இந்தப் படத்தின் பாடல்கள் மீண்டும், மீண்டும் கேட்கும்விதமாக இல்லை என்கிற எனது அனுபவ உணர்வில்தான் இப்படி எழுதியிருக்கிறேன்..!