Showing posts with label கிரிக்கெட். Show all posts
Showing posts with label கிரிக்கெட். Show all posts

போனால் போகட்டும் போடா..!

21-02-2012

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!








ஆஸ்திரேலியாவில் நடைபெறும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் இந்திய சோப்ளாங்கிகள் மீண்டும் தோத்துட்டாங்களாமே..? 

இந்த நேரத்தில் எப்பொழுதோ, ஏதோ ஒரு பத்திரிகையில் நான் படித்த “போனால் போகட்டும் போடா” ஸ்டைல் பாடல் நினைவுக்கு வந்தது..!

படித்துதான் பாருங்களேன்..!


போனால் போகட்டும் போடா..
இந்த மேட்ச்சினில் ஸ்டெடியாய் 
அடித்தவர் யாரடா..?
போனால் போகட்டும் போடா..!
போனால்.. போகட்டும் போடா..!


வந்தது பந்து; போனது ஸ்டம்பு 
அவுட்டானதேதான் தெரியாது..!
வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்
இந்த இன்னிங்ஸ் முடிவது எப்போது..?


நமக்கும் நேரே அம்பயர்டா..!
அவர் எல்லாந் தெரிந்த தலைவனடா..!
இந்த பேட்ஸ்மேனை ஆட்டும் கலைஞனடா..!
போனால் போகட்டும் போ..போ..போ..போடா..!


போனால் போகட்டும் போடா..
இந்த மேட்ச்சினில் ஸ்டெடியாய் 
ஜெயித்தவர் யாரடா..?
போனால் போகட்டும் போடா..


சிக்ஸரும், பவுண்டரியும் லீக்கினில் அடித்தேன்..
இங்கே ஒரு ரன் எடுத்தேனா..?
எடுத்திருந்தால், தலைகுனிந்தே நானும் 
பெவிலியனுக்குள் நுழைவேனா..?


கிரிக்கெட் என்பது வியாபாரம் - இது 
போர்டுக்கு போனால் ஜெயிக்காது - ஆட்டம்
கோட்டை விட்டால் திரும்பாது..! 
போனால் போகட்டும் போடா..!


போனால் போகட்டும் போடா..
இந்த மேட்ச்சினில் ஸ்டெடியாய் 
அடித்தவர் யாரடா..?

குறிப்பு : இதில் இன்னொரு சரணமும் உண்டு. மூளையை எப்படி கசக்கிப் பார்த்தும் அது மட்டும் நினைவுக்கு வர மறுக்கிறது. தெரிந்தவர்கள் சொன்னால் பெரிதும் மகிழ்வேன்..!


கிரிக்கெட்டிற்காக 40000 - நாட்டிற்காக 1000..! பெருமை கொள்வோம்!

08-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானமே, 'நாக்க முக்க' பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஆடிக் கொண்டிருக்க.. வந்திருக்கும் இந்திய ரசிகர்கள் அனைவரும் பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும் ஆவலுடன் காத்திருக்கும் இதே நேரத்தில், இந்தியத் தலைநகர் டில்லியின் ஜந்தர்மந்திர் என்னுமிடத்தில் 72 வயதான ஒரு இந்தியரான முதியவர் அன்னா ஹசாரே.. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கோரி இன்றோடு 4-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்..!



சென்னை சேப்பாக்கத்தில் தற்போது திரண்டிருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 40000. ஆனால் டெல்லியில் ஹசாரேயைச் சுற்றிலும் வெறும் 1000 பேர் மட்டுமே இருக்கிறார்களாம். ஒரே நாடுதானாம்.. ஆனால் ஒருவரின் பிரச்சினை மற்றவருக்கு பிரச்சினையாக இல்லையாம்..! மற்றவரின் பிரச்சினை இன்னொருவருக்குத் தொல்லையாக இல்லையாம்..!

வருங்கால இளைஞர் சமுதாயம்தான் இந்த நாட்டை வழி நடத்தப் போகிறது என்று கஞ்சா விற்று அரசியல்வியாதியானவர் முதற்கொண்டு அப்துல்கலாம்வரையிலும் சொல்லிவிட்டார்கள். ஆனால் சேப்பாக்கம் மைதானத்தில் இருக்கும் 40000 இளைஞர்களுக்கு இன்றைக்குக் கிடைக்கின்ற கிரிக்கெட் விருந்துதான் முக்கியமாக இருக்கிறது..!

இதே நேரத்தில் சன் தொலைக்காட்சியினர் தாங்கள் தயாரித்திருக்கும் மாப்பிள்ளை படத்தின் முதல் காட்சியில் திரைக்கு முன்னே இந்திய இளைஞர் சமுதாயம் குத்தாட்டம் போடுவதையும் காலையில் இருந்தே காட்டி வந்து தங்களது தேச பக்தியை பறை சாற்றி வருகின்றனர்..!

பொழுதுபோக்கு என்கின்ற வார்த்தையே இப்போது தொலைந்துபோய் அதுதான் வாழ்க்கை என்கிற அளவுக்கு ஊடகங்கள் நமது இளைஞர்களை மாயவலைக்குள் கொண்டுபோய் சிக்கவைத்துவிட்டார்கள்.

இது மறைமுகமாக நமது பிரச்சினைகளிலிருந்து நம்மை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் மறைத்துவைத்துவிட்டு, தெருவில் இருந்த பிரச்சினை நம் வீட்டிற்குள் வந்தவுடன் நம்மை அதேபோல் தூக்கிக் கொண்டு வந்து வீட்டுக்குள் விட்டுவிட்டு வெளிக் கதவைச் சாத்திச் செல்லும் தந்திரத்தை இந்திய அரசியல் வர்க்கமும், அதிகார வர்க்கமும், பணக்காரத் திமிர்த்தனமும் போட்டி போட்டுச் செய்து வருகிறார்கள்.

காலையில் கொல்கத்தாவில் இருந்து கிளம்பும்போது தான் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவளிப்பதாக பேட்டியளித்திருக்கும் ஷாரூக்கான், சாயந்தர வேளையில் இதே மைதானத்தில் ஷ்ரேயாவுடன் நாக்க முக்க.. நாக்க முக்க.. என்று குத்தாட்டம் போடுகிறார். ஆதரவுகளை வாயால் வழங்குவோம்..! அதே நேரத்தில் தாங்கள் சம்பாதிப்பதற்கு மட்டுமே உடல் உழைப்பை நீட்டுவோம் என்ற சுயநலத்திற்கு ஷாரூக்கான் மட்டும் விதிவிலக்கா என்ன..?

அன்ன ஹசாரே அப்படியென்னதான் சொல்கிறார்..? அரசியல்வியாதிகள்.. அதிலும் பிரதமர், ஜனாதிபதி என்று எவரையும் விட்டுவிடாமல் அனைவருமே ஊழல் வழக்குகளின் முன் நின்றால் விசாரிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்பது போன்ற உச்சபட்ச அதிகாரத்துடன் கூடிய லோக்பால் சட்ட மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்கிறார். இது நியாயம்தானே..?

ஆனால் அரசியல்வியாதிகளுக்கு இது எப்படி பிடிக்கும்..? அவர்களுடைய அடிமடியிலேயே கை வைத்து, அவர்களது பொழைப்பைக் கெடுக்கின்ற அளவுக்கு ஒரு சட்டத்தை அவர்களே கொண்டு வர வேண்டும் என்று கூறினால் இதனை ஏற்பதற்கு இவர்களுக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது.

இந்த நாட்டில் இதுவரையிலும் எத்தனையோ லஞ்ச ஊழல் வழக்குகள் அரசியல்வியாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மக்கள் முன் ஆதாரங்கள் குவித்து வைக்கப்பட்டாலும், அரசியல்வியாதிகள் தப்பித்து அதிகாரிகளை மட்டும் பகடைக்காயாக்கிவிடுகிறார்கள்..!

எத்தனை எத்தனை ஊழல்கள்..? முந்த்ரா ஊழல் தொடங்கி தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல்வரையிலும் அத்தனையிலும் அரசியல்வியாதிகளின் கை வண்ணம்தான்..!

1975-ம் ஆண்டு: லாட்டரி ஊழல்

1990-99-ம் ஆண்டு:போபர்ஸ் ஊழல்

1992-ம் ஆண்டு: ஹர்ஷத் மேத்தா ஊழல்

1993-ம் ஆண்டு: ஹவாலா ஊழல்

1996-ம் ஆண்டு: பீகார் கால்நடை தீவன ஊழல்.  முன்னாள் அமைச்சர் சுக்ராம் மீதான டெலிகாம் ஊழல் .

1999 முதல் 2001வரை பங்கு சந்தை புரோக்கர் கேதன் பரேக் செய்த பங்கு சந்தை ஊழல்

2001-ம் ஆண்டு: ராணுவத்துறையில் நடந்த ஆயுத பேர ஊழல்.

2003-ம் ஆண்டு: போலி முத்திரைத்தாள் ஊழல் (அப்துல் கரீம் தெல்கி)

2005-ம் ஆண்டு: உணவுக்காக எண்ணெய் தொடர்பான முன்னாள் அமைச்சர் நட்வர் சிங் சம்பந்தப்பட்ட ஊழல்.

2009ம் ஆண்டு: பல்வேறு இடங்களில் சொத்துக்களை குவித்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா மீதான 4,000 கோடி ரூபாய் ஊழல்

2010-ம் ஆண்டு: "2-ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆதர்ஷ் ஊழல், கடைசியாக, காமன்வெல்த் விளையாட்டு ஊழல்.

இப்படி கணக்கு, வழக்கில்லாமல் ஊழல்களை செய்வதையே குறிக்கோளாகக் கொண்ட இந்தியத் திருநாட்டின் அரசியல்வியாதிகளை உண்மையாகவே தண்டித்து அரசியலில் இருந்து அவர்களை அப்புறப்படுத்த நினைத்துத்தான் இந்த லோக்பால் கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

உச்சநீதிமன்றம் சர்வவல்லமை படைத்ததாக இருந்தாலும், அது இன்னமும் தனது முழு அதிகாரத்தையும் வெளியிட்டதாகத் தெரியவில்லை. கூடவே அந்த அமைப்பின் உறுப்பினர்கள்கூட அரசியல்வியாதிகளின் அல்லக்கைகளாக மாறிவிட்ட கொடூரமும் நிகழ்ந்துதான் வந்திருக்கிறது..!

அரசு அதிகாரிகள் மீது சுமத்தப்படும், ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்ற குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்ற அரசு அமைப்பாகத்தான் லோக்பால் அமைப்பைக் குறிப்பிடுகிறார்கள்.

பொதுமக்கள், அரசு அதிகாரிகள் மீது லோக்பாலிடம் புகார் கொடுக்கலாம். அந்த புகாரை லோக்பால் விசாரித்து, நடவடிக்கை எடுக்கும். லோக்பால் உருவானால் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஊழல் கட்டுப்படுத்தப்படும் என்கிற அளவுக்கு அவற்றுக்கு அதிகாரங்கள் வழங்கப்படும்.

இப்படிப்பட்ட லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை  நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் சட்டம்.


ஏற்கெனவே இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் இந்தியத் தண்டனை சட்டம்-1860 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம்-1988 ஆகியவை, அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இவற்றின்படி நடவடிக்கை எடுக்க, போலீசோ, வேறு புலனாய்வு துறையோ, மாநில, மத்திய அரசுகளிடமிருந்தோ அனுமதி பெற வேண்டும்.

இதன்படி பார்த்தால் கருணாநிதி மீது ஊழல் வழக்கை இப்போது தெரிவித்தால் அதற்குக் கவர்னர் அனுமதியளித்தால் மட்டுமே நாம் அவர் மீது தனிப்பட்ட முறையில் வழக்குத் தொடர முடியும். இல்லையெனில் முடியாது. இது இந்த அரசியல் ஓநாய்கள், தங்களைக் காப்பாற்றிக் கொள்ள தாங்களே போட்டுக் கொண்ட ஒரு விதிவிலக்கு..!

அரசில் நிர்வாக துறையை பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே, ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.

இது முறையாக நிறுவப்பட்டால், அரசின் சட்டத் துறை மற்றும் நிர்வாகத் துறையின் கலவையாக இருக்கும். புகார்களைப் பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையைப் போன்றும், தண்டனை கொடுப்பதில் நீதித் துறையைப் போன்றும் செயல்படும். மக்களின் பிரச்னை, அலைக்கழிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் தீர்க்கப்படும்.

ஆந்திரா, அசாம், பீகார், சத்திஸ்கர், டில்லி, குஜராத், ஜார்க்கண்ட், அரியானா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, கேரளா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்கள், லோக் ஆயுக்தா மற்றும் உபலோக் ஆயுக்தா அமைப்புகளை உருவாக்கியுள்ளன.

இவை, மாநில அளவில் லோக்பாலின் வேலைகளை, குறுகிய அளவில், அதிகாரமற்ற நிலையில் செய்து வருகின்றன. இவற்றில் பிரபலமானது, கர்நாடகாவில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் இயங்கும் லோக் ஆயுக்தா. இந்த அமைப்பு சமீபத்தில் கர்நாடகாவில் அரசியல் பலம் படைத்த பெல்லாரி சகோதரர்களின் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டியது.

கடந்த 1968-ம் ஆண்டு முதல், லோக்சபாவில் எட்டு முறை இந்த லோக்பால் சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டும், தகுந்த காலவரைக்குள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

தற்போது நிலவும் தொடர் ஊழல் சூழலில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், ஊழலை தடுக்க நடவடிக்கைகள் பரிந்துரைக்க, மத்திய அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதில் லோக்பால் மசோதாவின் வடிவம் மற்றும் அதை மீண்டும் அறிமுகப்படுத்துவது பற்றி பரிந்துரைக்கப்பட்டது.

லோக்பால் மசோதாவின் வடிவம் குறித்து போராடி வரும் அன்னா ஹசாரே உட்பட அனைத்து தரப்பினரும் ஒப்புக் கொண்டால், இந்த ஆண்டே லோக்சபாவில் நிறைவேற வாய்ப்பு உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த மசோதாவுக்காகக் குரல் கொடுத்து வரும் அன்ன ஹாசரே ஒத்துக் கொள்ளாததற்குக் காரணம்,  தற்போது அரசு பரிந்துரைக்கும் லோக்பால் சட்டம் மிகவும் பலவீனமானது. அதன்படி உருவாக்கப்படும் அமைப்புக்கு, வெறுமனே பரிந்துரை செய்யும் அதிகாரங்கள் மட்டுமே இருக்கும்.

இதுவரை வெவ்வேறு அரசு ஆணையங்கள் லோக்பால் குறித்து செய்த பரிந்துரைகளை சேர்த்து, சட்டத்துக்கு வலிமையூட்டும் வகையில், அன்னா ஹசாரே தலைமையில், ஒரு சமூக ஆர்வலர் குழு, மாதிரி மசோதா தயார் செய்திருந்தது. அந்த மாதிரி மசோதாவின் அடிப்படையில் புதிய லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றுதான் அன்னா ஹசாரே கோரியிருக்கிறார்.

அன்னா ஹசாரே தனது பரிந்துரையில் சொல்லியிருப்பது இது :

* அரசியல்வாதிகள், அதிகாரிகள், நீதிபதிகள் மீதும் லஞ்சம் தொடர்பான நீதி விசாரணை நடத்த லோக்பால் கட்டுப்பட்டது. மத்திய ஊழல் கண்காணிப்பு கமிட்டி மற்றும் மத்திய அரசின் அனைத்து கண்காணிப்பு அமைப்புகளும், லோக்பால் அமைப்பிற்குள் கொண்டு  வரப்பட வேண்டும்.

* பொதுமக்களிடமிருந்து, புகார்களை நேரடியாகப் பெற்று, நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரிடமும் சரி பார்க்க வேண்டிய அவசியமோ, அனுமதி பெற வேண்டிய அவசியமோ கமிஷனுக்கு இருக்கக் கூடாது.

* புலனாய்வு முடிந்ததும், வழக்கு தொடரலாம்; ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் அல்லது இரண்டையும் மேற்கொள்ள வேண்டும்.

* லோக்பால் அமைப்புடன் சி.பி.ஐ. அமைப்பும் இணைக்கப்பட்டுவிட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் புலனாய்வு செய்தல், வழக்கு தொடர்தல் ஆகியவைகளை கமிஷன் மேற்கொள்ள முடியும்.

* லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர். இவர்களில் 4 பேர் மட்டுமே முன் அனுபவம் இல்லாத வக்கீல்களாக இருக்கலாம்.

* தேர்வு கமிட்டியில் சட்டம் தொடர்பான பின்னணி உடையவர்கள், தலைமை தேர்தல் கமிஷனர், மத்திய கணக்கு தணிக்கை அலுவலக தலைவர், ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல்கள், லோக்பால் அமைப்பில் இருந்து வெளியேறும் உறுப்பினர்கள் இடம் பெற வேண்டும்.

* லோக்பால் அமைப்பின் முழு அதிகாரத்தையும் பயன்படுத்த எந்த தடையும் இருக்கக் கூடாது.

* ஓராண்டிற்குள் புலனாய்வை முடிக்க வேண்டும். இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த ஓராண்டிற்குள் முடிக்க வேண்டும்.

* ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் தொடர்புடைய அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசு இழப்பைச் சரிகட்ட வேண்டும்.

இப்படி ஆட்டமாய் ஆடுகின்ற அரசியல்வியாதிகளின் தலையைக் கொய்யும் அளவுக்கு நிபந்தனைகளை விதித்தால் அவர்களென்ன செய்வார்கள்..? இதற்காகவாக அவர்கள் அரசியலுக்கு வந்திருக்கிறார்கள்..? ச்சும்மா விட்டு விடுவார்களா என்ன..?

அரசுத் தரப்போ தனது பரிந்துரையாக கமிஷனின் மசோதாவில் சேர்த்துள்ள வெளக்குமாத்துக் குச்சிகளைப் பாருங்கள்...

* இந்த லோக்பால் அமைப்பு நாட்டின் பிரதமர், அமைச்சர்கள், எம்.பி.க்கள் மீது மட்டுமே லஞ்சம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தும் உரிமை கொண்டது.

* லஞ்சம் தொடர்பான விசாரணையை துவங்கவோ, பொதுமக்களிடம் இருந்து நேரடியாக புகார்களை பெறவோ இந்தக் கமிஷனுக்கு அதிகாரம் கொடுக்கப்படாது. புகார்களைப் பெறுவதற்கென நியமிக்கப்படும் எம்.பி.,க்கள் மூலமே, அவை பெறப்படலாம்.
(இங்கேயும் எம்.பி.க்களாம். அப்போதுதானே யார் மீது புகார் வந்திருக்கிறது என்று உடனேயே தெரிந்து கொண்டு தப்பிக்க வழி செய்யலாம்.)

* புகாரில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; அமைச்சர்கள் மீதான புகார் குறித்து பிரதமரிடமோ, பிரதமர், அமைச்சர்கள் மீதான புகார் குறித்து, புகார்களை பெற நியமிக்கப்பட்டுள்ள எம்.பி.,க்களிடமோ சிபாரிசு மட்டுமே செய்ய முடியும்.

* காவல் துறைக்கான அதிகாரம், லோக்பால் அமைப்புக்கு கொடுக்கப்படாது. எனவே, எந்த புகார் மீதும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது.

* லோக்பால் அமைப்பில் தவறான புகார் தெரிவித்தது உறுதி செய்யப்பட்டால், புகார் கொடுத்தவருக்கு ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை வழங்கப்படும்.
(இதை மட்டும் வக்கனையா எழுதிட்டானுகய்யா இந்த நாதாரிகள்)

* இந்த அமைப்பை நிர்வகிக்க, ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் அடங்கிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும்.

* இவர்கள் மூவரும் இணைந்து, லோக்பால் அமைப்புக்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பர். உறுப்பினர்கள் அனைவரும், அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களாக, குறிப்பாக ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பர்.
(முடிஞ்சது மேட்டர்.. இதுக்கு இப்ப இருக்குற மாதிரியே எதையுமே அமைக்காமல் கொள்ளையடிச்சிட்டுப் போயிரலாமே)

* நாட்டின் பாதுகாப்பு, ராணுவம், வெளியுறவு தொடர்பாக, பிரதமருக்கு எதிராக புகார் வந்தால், அது குறித்து விசாரிக்க பரிந்துரை செய்ய, இந்த அமைப்புக்கு அதிகாரம் கிடையாது.

* புகாரின் அடிப்படையில் விசாரணையை ஆறு மாதத்தில் இருந்து ஓராண்டிற்குள் துவக்க வேண்டும். ஆனால், எவ்வளவு மாதங்களில், ஆண்டுகளில் முடிக்க வேண்டும் என்பது வரையறுக்கப்படவில்லை.
(போபர்ஸ் கேஸ் மாதிரி ஆட்சி மாறி வேற ஆட்சி வந்தாலும் வாய்தா போட்டு இழுத்தடிச்சு மறுபடியும் ஆட்சிக்கு வந்து கடைசீல சங்கு ஊதிரலாம்ல..)

* லஞ்ச அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்டவர், தவறான வழிகளில் ஈட்டிய சொத்துக்களை அனுபவிப்பதற்கு, இந்த அமைப்பின் மூலம் தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

இப்படி இந்த அரசியல்வியாதிகள் கொண்டு வரப் போகும் கேவலமான மசோதாவை எதிர்த்துத்தான் இந்த முதியவர் காந்தியாரின் ஆயுதமான உண்ணாவிரதத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

இதிலென்ன பிளாக்மெயில் இருக்கிறது..? உண்மையாக பிளாக்மெயில் செய்திருப்பது இந்தக் கேடு கெட்ட, கேவலங்கெட்ட அரசியல்வியாதிகள்தான்..! எங்களை கேள்வி கேட்கவே எவனுக்கும் உரிமையில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்..! நாடு மக்களுக்காகவா அல்லது இந்த ஓநாய்களுக்காகவா..?

முறைப்படி அனைவருக்கும் முன்கூட்டியே தெரிவித்துவிட்டுத்தான் இந்தப் பெரியவர் இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளார். முதல் நாள் அன்ன ஹாசரேவை தனது வீட்டுக்கு அழைத்துப் பேசியிருக்கும் மன்னமோகனசிங்கால் அவருக்கு உரிய பதிலையும், விளக்கத்தையும் அளிக்க முடியவில்லை. பாவம் அந்தாளு என்ன செய்வார்..? இத்தாலி அம்மாவின் பெர்மிஷன் இல்லாமல் தனது தலைப்பாகையைக்கூட அவரால் கழட்ட முடியாது..! அந்த லட்சணத்தில்தான் அவர் இருக்கிறார்.

ஒரு நாட்டின் பிரதமரே இந்த லட்சணத்தில் இருக்கும்போது இவரை நம்பி சட்ட மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் என்னவாகும்..? அந்தக் கிழவருக்கு மன உறுதியும், நல்ல எண்ணமும் இருக்கிறது. இவரைவிட பத்து வயது அதிகமான நமது மாநிலத்தின் பெரிசும் ஏதோ ஒரு நாள் நல்ல ஹாயான சமாதியொன்றில் போய் அரைமணி நேரம் படுத்துறங்கிவிட்டு வெற்றிகரமான உண்ணாவிரதம் என்று சொல்லிவிட்டு வரத் தெரியாத நபர்தான் இந்தத் தாத்தா..

இதோ 4-வது நாளாக உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். அரசுகள் இப்போதும் சல்ஜாப்பு சொல்லி வருகின்றன. தேர்தல் பிரச்சார நேரத்தில் இப்படியொரு லொள்ளு தேவையா என்று மன்னமோகனசிங்குக்கு ஏக டோஸ் விழுந்திருக்கலாம்..!

விவசாயத் துறை அமைச்சராக இருப்பதாக தன்னைக் கொள்ளும் சரத்பவார் இவருடைய கடும் எதிர்ப்பினால் லோக்பாலின் அமைப்புக் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் தப்பித்துவிட்டார். தனது ஜென்ம விரோதியுடன் தேசிய அளவில் மோதி தனது பெயரை ரிப்பேராக்கிக் கொள்ள விரும்பாமல் ஒதுங்கிவிட்டார் சரத்பவார்.

இப்போது ஹசாரேவைச் சுற்றிலும் உள்ள அவரது இயக்கத் தொண்டர்களும், ஆர்வமுள்ள,  உண்மையான இந்தியர்களாக அவருக்குத் தோள் கொடுத்து உற்சாகமளித்து வருகிறார்கள்..!

நாமும், நம்மால் முடிந்த அளவுக்கு பெரியவர் அன்ன ஹசாரேவுக்கும் அவரது இயக்கத்திற்கும், அவரது போராட்டத்திற்கும் நமது ஆதரவை வழங்க வேண்டும் தோழர்களே..!

தமிழகத்தில் சென்னை மற்றும் ஈரோட்டில் இது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்துள்ளன என்பது பாராட்டுக்குரியது..!

சாதுவான முயலைக்கூட சீண்டிக் கொண்டேயிருந்தால்கூட லேசாக கடிக்கக்கூட செய்யும். ஆனால் நம்மை குழி தோண்டி புதைக்கும் அளவுக்கான பிரச்சினைகள் நம்மைச் சூழ்ந்திருக்கும் வேலையிலும், நமது தார்மீகமான எதிர்ப்பையும், ஒற்றுமையையும் இந்தக் களத்தில் நாம் காட்டவில்லையெனில் இதன் பாதிப்பு நமது வாரிசுகளுக்குத்தான்..!

கொண்டாட வேண்டியதை கொண்டாட்ட நேரத்தில் கொண்டாடுவோம் இந்தியர்களே..! கிரிக்கெட் எப்போதும் இங்கேதான் இருக்கும். எங்கேயும் ஓடிப் போகாது..!

இப்போது இந்தியன் என்பதை நாம் உணர்வில் காட்ட வேண்டிய நேரம். மாறாக அந்த உணர்வை உணவில் மட்டுமே காட்டி நாம் சோற்றால் அடித்த பிண்டங்களாகக் காட்டுவதில் அர்த்தமில்லை தோழர்களே..!

இந்தியனாக இரு.. இந்தியனாகவே வாழு.. இந்தியனாகவே சாகு என்பதெல்லாம் சரி.. அதற்கு முன்பாக ஒரு நாளாவது நாம் நல்ல மனிதனாக வாழ்ந்து காட்டுவோமே..!?

பதிவிற்கு உதவியவை : பல்வேறு செய்தித் தாள்கள், இணையத்தளங்கள்

உலகக் கோப்பை நமக்கு ஒரு கேடா..?

03-04-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

நேற்று இரவு முதல் இந்திய நாடு முழுவதும் கொண்டாட்டங்கள். கும்மாளங்கள்..! ஏதோ இந்திய நாட்டின் கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றுவிட்டதாம்..! அதனால் சந்தோஷமாம்..!
நானும் மிகச் சமீபம் காலம்வரையிலும் நல்ல இந்தியனாகத்தான் இருந்து வந்தேன். சில, பல உண்மைகளை நேரில் அறியும்வரையிலும்.. படித்தறியும்வரையிலும் உண்மையான தேச பக்தனாகத்தான் இருந்து தொலைந்தேன்.. ஆனால் இப்போது இந்தியன் என்கிற அடையாளத்தை வெறுத்து ரொம்ப நாளாச்சு..

என்னிக்கு இவனுக கிரிக்கெட்டை சர்வதேச வியாபாரமா மாத்தினாங்களோ.. அன்னிக்கே கிரிக்கெட் மேல இருந்த பைத்தியமும் போயிருச்சு.. போதாக்குறைக்கு மேட்ச் பிக்ஸிங்ன்னு ஒண்ணை உறுதிப்படுத்திய நாளில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது கொலை வெறிதான் வந்திருக்கு.

ஊர், ஊருக்கு இருக்கும் கிரிக்கெட் ஸ்டேடியங்களை தனி அமைப்பின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சில, பல பணக்கார முதலைகளின் கைகளில்தான் உள்ளது. அவர்களது பொழுது போக்குக்காக கூடும் கிளப்பிற்கு இன்னொரு பெயராகத்தான் இந்தியக் கிரிக்கெட் வாரியம் காட்சியளிக்கிறது.

கோடிகளை வாரிக் குவித்தாலும் பிச்சைக்காரத்தனமாக அத்தனைக்கும் வரிவிலக்கு கேட்கிறார்கள் இந்த உலக மகா பிச்சைக்காரக் கோடீஸ்வரர்கள்..! ஒவ்வொரு மாநிலத்திலும் இவர்களே தனி அமைப்பை வைத்துக் கொண்டு இவர்களுக்குள்ளேயே அடித்துக் கொண்டு எப்பாடுபட்டாலும் அரசு இதில் தலையிடாத வண்ணம் பார்த்துக் கொள்வதில்தான் சூட்சுமமே இருக்கிறது..

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தை வருடத்திற்கு சில ஆயிரம் ரூபாய்க்குத்தான் அரசு குத்தகைக்கு கொடுத்திருக்கிறது..! ஒரு போட்டி நடந்தாலே கோடிக்கணக்கில் கல்லா கட்டும் இந்தக் கொள்ளையரிடமிருந்து கூடுதலான தொகையை வசூல் செய்ய எந்த அரசுகளுக்கும் மனமில்லை. வாங்கிக் கொடுக்கவும் எந்த புரோக்கர் அதிகாரிகளுக்கும் மனமில்லை. அந்த அதிகாரிகளின் வீட்டம்மா, சின்ன வீடு, கொழுந்தியாள், மாமியார், மைத்துனர்களுக்கெல்லாம் வீடு தேடிப் போய் கிரிக்கெட் டிக்கெட்டுகளை பிச்சை போட்டுவிடுவதால் அவர்களுக்குக் கவலையில்லை..

இதேபோல் அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும் அவரவர்க்குச் சொந்தமான வீடுகளையோ, நிலங்களையோ இதேபோல் மிகக் குறைந்த விலைக்கு விற்கச் சொன்னாலோ, குத்தகைக்குக் கொடுக்கச் சொன்னாலோ கொடுத்துவிடுவார்களா..? கணக்குப் போட மாட்டார்கள்..?

ஆனால் இதில் மட்டும் கேட்க மாட்டார்கள். ஏனெனில் இது ஊரான் வீட்டுக் காசு. மக்களுடைய காசு.. இதனை வைத்துத்தான் அந்த அயோக்கியர்கள் வாழ வேண்டியிருக்கிறது.. அதிகார வர்க்கமும், பணக்கார வர்க்கமும் இணைந்து, இயைந்து ஒட்டி உரசிப் போவதுகூட இதனால்தான்..!

கலைஞர் டிவிக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலமாக கிடைத்த 214 கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுத்தபோதுகூட உடனுக்குடன் கை மாத்தாக இதில் பாதி பணத்தைக் கொடுத்து உதவியிருப்பது கிரிக்கெட் வாரிய செயலாளர், 'மெட்ராஸ் சிமெண்ட்ஸ்' சீனிவாசன்தான் என்கிறார்கள்..

அரசு தானே தலையிட்டு தேர்வு செய்யும் வேலையைச் செய்தால் எத்தனை வில்லங்கங்கள் நடக்குமோ அதையெல்லாம் இப்போது இந்த முதலைகளே செய்து வருகிறார்கள். அத்தனை மாநில கிரிக்கெட் அமைப்புகளின் பின்னணியிலும் இருப்பது சில அரசியல்வியாதிகள்தான். அவர்களுக்கு ஏற்ற பதவிகளைக் கொடுத்து காக்கா பிடித்து வைத்துக் கொண்டு அவர்கள் விரும்பும் சிலரை ஆட்டக்காரர்களாகத் தேர்வு செய்து சரிக்கட்டும் வேலையையும் செய்து வருகிறார்கள்..!

கிரிக்கெட் என்பது இங்கு மதமாக ஆக்கப்பட்டுள்ளது. சினிமாவைப் போல இதுவும் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது. எனது சிறு வயதில் நேரத்தைச் செலவழிக்க எனக்கு வேறு போக்கிடம் இல்லாததால் நான் அழகுத் தமிழில் கேட்ட கிரிக்கெட் வர்ணனை என்னை கிரிக்கெட் வாசம் நோக்கி இழுத்துச் சென்றது..

இப்போதுதான் மூன்றாவது பாராவில் சொன்னதுபோல புத்தி வந்து தெளிந்திருக்கிறது..! இப்போதும் எந்தக் கவலையும் இல்லை என்பார்களுக்கு கிரிக்கெட் என்பது விளையாட்டாகத்தான் தெரிகிறது..!

நேற்று ஒரு நாளில் மட்டும் ட்விட்டரிலும், பிற இணையத்தளங்களிலும் இவர்கள் உதிர்த்த தேச பக்தியை பார்க்க வேண்டுமே..? இது போல் ஒரு நாள்கூட தங்களது தமிழ் பாசத்தைக் இவர்கள் காட்டியிருக்கவே மாட்டார்கள்..!

இந்தியா, இந்தியா.. என்பவர்களின் இந்திய தேசியம் உண்மையில் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதை ஈழத்தில் நடந்த கடைசிப் போர் எனக்கு நன்றாகவே உணர்த்திவிட்டது..!

பாகிஸ்தான் எல்லையில் நடைபெறும் மோதலில் எத்தனையோ தமிழர்கள் இந்தியாவுக்காக தங்களது உயிரை இழந்து பிணமாக கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் தேசியம் பேசும் இந்தியவாதிகள், தமிழ் ஈழப் பிரச்சினையில் தமிழர்கள் சாகும்வரை வேடிக்கை பார்த்தபடியே கையைக் கட்டிக் கொண்டார்கள்..!

இந்திய தேசியத்துக்காக உயிரைக் கொடுக்கிறான் தமிழன். அவனுக்காக நானும் இனவெறி பிடித்த இலங்கையை புறக்கணிக்கிறேன் என்று இந்திய நாடும் சொல்லவில்லை. இந்தியாவின் கிரிக்கெட் வாரியமும் சொல்லவில்லை.

என்ன செய்தாலும் அவர்களுக்குத் தனி நாடு கொடுத்துவிடக் கூடாது என்பதில் இந்திய ஏகாதிபத்தியம் வரிந்து கட்டிக் கொண்டு நின்றது.. இப்போதும் அப்படியே நிற்கிறது..! பதவிக்கும், பணத்துக்கும் சோரம் போன தமிழர்களே இதற்கு ஒத்து ஊத, அவர்களுக்கு வேண்டியதை தள்ளிவிட்டு அவர்கள் செய்யும் விபச்சாரத்தையும் ஊக்குவித்து வருகிறது இந்திய தேசியம்..!

வாரியத்துக்குத் தேவை இந்தியா முழுவதும் கிரிக்கெட்டை கொண்டாடுவதினால் கிடைக்கின்ற பணம்.. அதில் முத்துக் குளிக்கும் அவர்கள் இந்த வருமானத்தை இழக்க விரும்பவில்லை. ஆனால் இளிச்சவாயன் தமிழன்தான்..!

மும்பை குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வீரர்கள் மும்பையில் விளையாடக் கூடாது என்று சிவசேனா அமைப்பு இன்றுவரையில் கடும் எதிர்ப்பைக் காட்டி வருகிறது..! ஆனால் அப்படியொரு சின்ன எதிர்ப்பைக்கூட தமிழனால் இங்கே சொல்ல முடியவில்லை. இலங்கை கிரிக்கெட் அணியைப் புறக்கணியுங்கள்.. இந்தியாவில் விளையாட அனுமதிக்காதீர்கள் என்ற கோஷம்கூட தீவிர இயக்கத்தினர் சிலர் மட்டும்தான் சொல்லி வருகிறார்கள். இப்படி முன் வருபவர்களை முன் மொழிபவர்கள்கூட குறைவாகத்தான் இருக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கேடு கெட்ட அரசும், கேவலங்கெட்ட அதிகார அமைப்பும் பணத்தைத் தவிர வேறு எதுவும் தங்களுக்குத் தேவையில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இதனைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள்..!



இவர்களுக்கு பக்கத்து வீட்டில் நடப்பது விருந்து என்றும் தன் வீட்டில் நடந்தால் அது சாவு என்பதுமான மனநிலை.. இந்த மனநோய் பிடித்த மனநிலையில் இருந்து இந்த தமிழன் என்றைக்கு வெளியே வருவது..?

வெங்காயம் கிலோ என்ன விலை விக்குது..? ஏற்றுமதி செய்யலாமா? கூடாதா? கையிருப்பு எவ்வளவு உள்ளது..? என்றெல்லாம் ஒரு நாள் மீட்டிங் போட்டு தெரிந்து கொள்ளத் துப்பில்லாத ஒரு விவசாயத் துறை அமைச்சர்தான் தற்போது கிரிக்கெட் வாரியத் தலைவரா நாள் முழுக்க, கிரிக்கெட் வேலையையே பார்த்துக்கிட்டிருக்கிறாரு..

ஆனா இந்தாளுக்கு கவர்ன்மெண்ட்டு சம்பளம், காரு, பங்களா.. ஊர் சுற்ற அரசு காசு.. இதே மாதிரி கவர்ன்மெண்ட்டுல சாதாரண ஊழியம் பார்ப்பவர்கள், “நாங்க பார்ட் டைமா எல்.ஐ.சி. பாலிஸி பிடிக்குற வேலைக்குப் போறோம்.. அப்பப்ப வந்து எங்க வேலையைப் பார்க்கிறோம்”னு சொல்லிட்டுப் போனா நீங்க விட்ருவீங்களா..?

தாசில்தார் ஆபீஸ், போலீஸ் ஸ்டேஷன், கலெக்டர் ஆபீஸ் இன்ன பிற அரசு அலுவலகங்களில் மக்களுக்கு மரியாதை இல்லை. அரசு அலுவலர்கள் யாரும் மிகச் சரியான நேரத்துக்கு  வருவதில்லை.. ஒழுங்கா வேலை பார்க்கிறதில்லை என்றெல்லாம் புகார் மனுவை நீட்டும் மிஸ்டர் காமன்மேன்கள் இந்த பெருச்சாளிகளான கபோதி அமைச்சர்களை மட்டும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை.

ஆனா அந்தக் கபோதி மந்திரி இப்படித்தான் இப்போதும் ஊர் சுத்திக்கிட்டிருக்காரு. இந்தாளு என்னிக்கு தனது துறையைக் கவனிச்சிருக்காரு..? நேத்துகூட இந்தாளுதான் கோப்பையைத் தூக்கிக் கொடுக்குறாரு.. இது மாதிரி தனது துறை வேலையை ஒரு நாள்கூட இந்தாளு பார்த்திருக்க மாட்டிருக்காரு.. உலகக் கோப்பை நடந்த இத்தனை நாட்களும் இந்த அமைச்சர் ஸ்டேடியங்களைத்தான் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியா முழுவதும் தினத்துக்கு 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல லட்சணத்தில் நாடு இருக்கின்ற நிலையில் அவர்களது குறைகள் என்ன? கோரிக்கைகள் என்ன என்றெல்லாம்கூட காது கேட்க முடியாத இந்த வெட்கங்கெட்ட ஜென்மங்களை அமைச்சராக்கி நமக்கென்ன புண்ணியம்..?  நம்ம மன்னமோகனசிங்குக்கு தான்தான் பிரதமர் அப்படீன்றதே சில சமயம் மறந்து போகுது.. இதையும் அவர்கிட்ட சொல்லி என்னாகப் போகுது..? இந்த லட்சணத்துலதான் இவனுக ஆட்சி நடத்துறானுக..!

இதுல உங்களுக்கு உலகக் கோப்பை ஒரு கேடு..!

அடப் போங்கப்பா.. நீங்களும் உங்க இந்தியப் பாசமும்..!

கிரிக்கெட் வளர்த்த தமிழ் வர்ணனையாளர்கள்

08-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்றைய தினம் என்றைக்கும் போலவே என் குடும்பத்தாருக்குத் தெரிந்தாலும் எனக்கு மட்டும் ஸ்பெஷல்.. காலையில் வேகவேகமாக எழுந்து ரெடியாகி சாப்பாட்டை முடித்துவிட்டு கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டு ரேடியோவின் அருகில் நான் உட்காரும் ‘அழகைப்’ பார்த்தவுடனேயே என் அக்கா கேட்பார், “ஓ.. இன்னிக்கு மேட்ச் இருக்கா..?” என்று.. “அப்புறம்.. டெஸ்ட் மேட்ச்சு...” என்பேன்.. அவ்வளவுதான் எனது பேச்சு.. அதற்குப் பின் மாலை 4.40 மணிக்கு மேட்ச் முடியும்வரை ரேடியோவே கதி.

நான் மட்டுமல்ல.. அன்றைக்கு இந்தியா முழுமைக்குமே இருந்த இளைய சமுதாயத்தினரை கட்டிப் போட்டிருந்தது கிரிக்கெட்.. எப்படி..?

கிரிக்கெட் கிரவுண்டின் சுற்றளவு எவ்வளவு..? பந்து எதனால் ஆனது..? பிட்ச் என்றால் என்ன? கிரிக்கெட் பேட் என்ன விலை..? அதை எப்படித் தயாரிக்கிறார்கள்? என்கின்ற கிரிக்கெட்டின் அடிப்படை தெரியாதவர்கள்கூட ரேடியோவில் தலை சாய்த்துப் படுத்துறங்கினார்கள் என்றால்... என்ன காரணம்? கிரிக்கெட்டா..? அல்லது பொழுது போகாமல் இருந்தார்களா..?

என்னைக் கேட்டால் இவை இரண்டுமில்லை.. மொழிதான் முதல் காரணம்.. என்பேன்.

ஆம்.. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டின் நகரப் பகுதிகளிலும், ரேடியோ கோலோச்சிக் கொண்டிருந்த கிராமப்புறங்களிலும் கிரிக்கெட் என்னும் விளையாட்டை வளர்த்தவர்கள் யாரெனில், கிரிக்கெட் வீரர்களைவிட கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனையாளர்கள்தான்.

காலை 9 மணிக்கெல்லாம் ரேடியோவில் நிகழ்ச்சிகள் முடிந்து, “மீண்டும் ஒலிபரப்பு, சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெறும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பற்றிய நேரடி தமிழ் வர்ணனையோடு காலை 9.55 மணிக்குத் துவங்கும்..” என்ற அறிவிப்போடு முடிவடையும்.

இந்த 55 நிமிடத்திற்குள்தான் வீட்டினர் யாராக இருந்தாலும் என்னிடம் வேலை சொல்ல வேண்டும். அதற்கு மேல் என்றால், வீட்டில் ஒரு ‘இராமாயணம்’தான். என் தந்தையும் கொஞ்சம் கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளவர் என்பதால் அவரும் தயாராக இருப்பார்.

நேரம் நெருங்க, நெருங்க அடிவயிற்றில் ஒரு இனம் புரியாத சந்தோஷம். கிரிக்கெட் கேட்கப் போகிறேன் என்பதைவிட, எனக்குத் தெரிந்த மொழியில் கேட்கப் போகிறேன் என்கிற சந்தோஷம்தான் அதிகம்.

மணி 9.55 மணிக்கு ஒருவித அறிமுக இசையோடு ரேடியோ தனது ஒலிபரப்பைத் துவக்கும். முதலில், “வணக்கம். திருச்சிராப்பள்ளி வானொலி நிலையம்.. நேரம் காலை 9 மணி 55 நிமிடங்கள். இப்பொழுது சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று துவங்கும் இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் பற்றிய நேரடி ஒலிபரப்பு, இன்னும் சில நொடிகளில் சென்னையிலிருந்து ஒலிபரப்பாகும்..”

இந்த வரிகளைக் கேட்டதும் என்னையறியாமல் கை தட்டுவேன்.. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத மட்டற்ற ஒரு சந்தோஷம் அன்றைக்கு..

தொடர்ந்து, “நேயர்களே.. இப்பொழுது உங்களை சென்னை, எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டரங்கிற்கு அழைத்துச் செல்கின்றோம்..” என்று சென்னை வானொலி நிலையத்திலிருந்து பேசுவார்கள்..

இதுவரைதான் நான் நானாக இருப்பேன்.. இதற்குமேல் நான் பொம்மலாட்டக் கலைஞர்கள் போன்ற கிரிக்கெட் வர்ணனையாளர்களின் கையில்தான்.. அவர்கள் மதியம் லன்ச் பிரேக் விடும்போதுதான் எனது கவனமும் வீட்டுப் பக்கம் திரும்பும். அதுவரையில் நான் அவர்களது அடிமைதான்.. காரணம் அவர்கள் பேசிய தமிழ்.. தமிழ்.. தமிழ்..

முதலில் கேட்பது கிரிக்கெட் ரசிகர்களின் கூச்சலும், விசில் சப்தமும்தான்.. அப்போதே என்னை யாரோ மாயக் கம்பளத்தில் வைத்து தூக்கிச் சென்று ஸ்டேடியத்தில் அமர வைத்திருப்பது போல் தோன்றும்.

“வணக்கம் நேயர்களே.. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலிருந்து கூத்தபிரான் பேசுகிறேன்..” என்று முதல் குரல் ஒலிக்கும்.. அடுத்து அவர் என்ன பேசுவார் என்பதை நானே முடிவு செய்து ரேடியோ குரலுக்கு ஊடாக பேசுவேன்.

“இந்திய-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்னும் சில நொடிகளில் துவங்க இருக்கிறது.. ‘பூவா’, ‘தலையா’ போட்டுப் பார்த்ததில் இங்கிலாந்து அணி டாஸ் ஜெயித்து, பேட்டிங்கை தேர்வு செய்திருக்கிறது.. முதலில் இரு அணியிலும் உள்ள வீரர்களைப் பற்றிப் பார்ப்போம்..” என்று சொல்லி இரு அணி வீரர்களின் பெயர்களையும் சொல்வார்.

அநேகமாக இந்திய அணி நான் ரேடியோவில் தமிழ் வர்ணனை கேட்கத் துவங்கிய காலக்கட்டத்தில் இப்படித்தான் இருந்தது என்று நினைக்கிறேன்.

சுனில் மனோகர் கவாஸ்கர், அன்ஷ¤மன் கெய்க்வாட், திலீப் வெங்க்சர்க்கார், குண்டப்பா விஸ்வநாத், சந்தீப் பாட்டீல், மொஹீந்தர் அமர்நாத், கபில்தேவ், கிர்மானி, யஷ்பால் சர்மா, ரோஜர் பின்னி, திலீப் தோஷி, கார்சன் காவ்ரி” என்று இருக்கும்.(என் நினைவில் இருக்கும்வரையிலும் எழுதியிருக்கிறேன்)

“வானம் மப்பும், மந்தாரமுமாக காட்சியளிக்கிறது.. போதுமான அளவு வெளிச்சம் மைதானத்தில் பரவியுள்ளது. ஸ்டேடியம் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிகிறது..” என்று கூத்தபிரான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று ரசிகர்களின் கை தட்டல் ஓசை பலமாகக் கேட்கத் துவங்க.. முதல் பந்தை வீச கபில்தேவ் தயாராகிவிட்டார் என்பதை நான் புரிந்து கொள்வேன்.

“இதோ இந்தப் போட்டியின் முதல் பந்தை வீசுவதற்காக ஆயத்தமாகிறார் ஹரியானா சிங்கம் கபில்தேவ்.. ஆஜானுபாகுவான தோற்றம்.. நெடு நெடு என்ற உயரம்.. இதோ வாலாஜா சாலை முனையிலிருந்து தனது ஓட்டத்தைத் துவக்குகிறார் கபில்தேவ்.. குதிரையின் ஓட்டத்தைப் போல், படிப்படியாக, சீரான வேகம் பெற்று, வலக்கை விக்கெட்டின் மேல் வர பந்தை வீசுகிறார். பந்து off stemp-க்கு சற்று வெளியே விழுந்து செல்ல இயான் போத்தம்(என்று நினைத்துக் கொள்ளுங்கள்) அதை ஆடாமல் அப்படியே விட்டு விடுகிறார். ரன் எடுக்கும் வாய்ப்பு இல்லை...” என்று முதல் பந்திற்கான கமெண்ட்ரி முடிவடையும்.

நான் அப்போது பள்ளியில் படிக்கும் சிறுவன் என்பதனால் இந்த வார்த்தைப் பிரயோகங்கள் என்னைக் கட்டிப் போட்டிருந்தன. இதில் சொல்லப்பட்ட “ஆஜானுபாகுவான தோற்றம், நெடு நெடு என்ற உயரம்..” போன்ற வரிகள் ஒரு புதிய தமிழை எனக்கு அப்பொழுதே கற்றுக் கொடுத்தன.

கபில்தேவை புகைப்படத்தில் பார்த்திருப்பதினால் ‘குண்டா, உசரமா இருந்தா இப்படிச் சொல்வாங்க போலிருக்கு’ என்று நானே நினைத்துக் கொள்வேன்..

“படிப்படியாக, சீரான வேகம் பெற்று..” என்ற வரிகள் ஓடி வருவதை வர்ணித்துச் சொன்னவைகள் என்றாலும், ஒரு கவன ஈர்ப்பைச் செய்தன என்பதை மறுப்பதற்கில்லை.

“வலக்கை விக்கெட்டின் மேல் வர..” என்ற வரிகள் நிரம்பவே யோசிக்க வைத்த வரிகள். இதற்கான விளக்கத்தை நான் அப்போது விளையாடி வந்த கிரிக்கெட் டீம் கேப்டனும் நான் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் மகனுமான ஏசு அண்ணனிடம் பின்பு கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

வலது கையைத்தான் 'வலக்கை' என்றும், அம்பயர் நிற்குமிடத்தில் நிறுவப்பட்டிருக்கும் ஸ்டம்ப்புகளைத்தான் 'விக்கெட்டுகள்' என்றும் வர்ணிக்கிறார்கள் என்பது புரிந்தது. அதென்ன “மேல் வர..?” இதற்கும் ஒரு தனி விளக்கம் கிடைத்தது. பந்தைப் பிடித்து வீசுகின்ற கை, அந்த ஸ்டம்ப்புகளின் மேலே உயரத்தில் செல்வதைத்தான் “மேல் வர..” என்று வர்ணிக்கிறார்கள் என்பது புரிந்தது.

“வாலாஜா சாலை முனை, பட்டாபிராம் கேட் முனை” என்று இரண்டு இடங்களில் இருந்துதான், பந்து வீச்சாளர்கள் பந்து வீச வருவதாக வர்ணனையாளர்கள் சொல்வார்கள்.

‘அதென்ன வாலாஜா சாலை முனை, பட்டாபிராம் கேட் முனை..?’ என்று முனைப்புடன் விசாரித்து சென்னை எந்தப் பக்கம் இருக்கிறது என்பது கூடத் தெரியாத நிலையில் சேப்பாக்கம் ஸ்டேடியம் அமைந்திருக்கும் ரோட்டின் பெயர் ‘வாலாஜா ரோடு’ என்ற செய்தியை ஏதோ எனக்கு மட்டும்தான் தெரிந்த ரகசியம்போல் சக மாணவர்களுடன் வகுப்பறையில் கிசுகிசு பாணியில் பகிர்ந்து கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டது நினைவுக்கு வந்து தொலைகிறது..

தொடர்ந்து வர்ணனையில் “இதோ அடுத்த பந்தை வீச ஓடி வருகிறார் கபில்தேவ். வீசுகிறார். அளவு குறைந்து வந்த பந்து.. போத்தம் அதை மிக அழகாக மிட்ஆன் திசையிலே திருப்பி அடித்துள்ளார்.. பந்து எல்லைக் கோட்டை நோக்கிச் செல்கிறது. மொஹீந்தர் துரத்திச் செல்கிறார். இல்லை.. அவரால் பிடிக்க முடியவில்லை.. பந்து எல்லைக் கோட்டைக் கடந்து சென்று விட்டது.. நான்கு ரன்கள்.. இங்கிலாந்தின் எண்ணிக்கை விக்கெட் இழப்பின்றி நான்கு ரன்களாக உயர்ந்துள்ளது. இயான் போத்தம்(என்று நினைத்துக் கொள்ளுங்கள்) நான்கு ரன்களுடன் களத்தில் இருக்கிறார்..” என்று தொடர்ந்து மின்னல் வேகத்தில் வெளியாகும் வார்த்தைகளைக் கேட்டு ஆச்சரியப்படும் முதல் விஷயம்.. “எப்படி இவ்ளோ ஸ்பீடா பேசுறாங்க..?” என்று..

பந்து வீச்சைத் தொடர்ந்து சென்று மட்டையில் அடி வாங்கி, அடிக்கப்பட்ட திசையில் பந்து சென்று ஓரிடத்தில் முட்டி மோதி நிற்கும்வரையிலும் இவர்கள் கொடுத்த வர்ணனை இருக்கிறதே.. அதைக் கேட்கும்போதே ஏதோ நானும் உடன் கூடவே ஓடிச் செல்வதைப் போலவே இருக்கும்.

இந்த ‘எல்லைக்கோடு’, ‘பவுண்டரி லைன்’, ‘விக்கெட் இழப்பின்றி’ என்ற புதிய தமிழ் வார்த்தைகளெல்லாம் என்னைப் போன்ற சிறுவர்களுக்கு தமிழ் மொழியின் மீது ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்திய வார்த்தைகள்.

ஒரு முறை மணீந்தர்சிங் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். யார் பந்து வீசினார்கள் என்பது தெரியாது. ஆனால் மணீந்தர்சிங் கிளீன்போல்டு ஆனார், அதை மிக அழகாகச் சொன்னார்கள் வர்ணனையில் இப்படி..

“பந்தும் வந்தது.. மணீந்தர்சிங்கும் பாதி மைதானம் இறங்கி மட்டையை வீசினார். வீசின வேகத்துடனேயே ஒரு சுற்று சுற்றித் திரும்பிப் பார்த்தார். மிடில் ஸ்டம்ப்பை காணவில்லை..” என்று.. அவுட் ஆனதையே கொஞ்சம், கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியது வர்ணனைக்கு அழகு சேர்த்த விஷயம்.

மொஹீந்தர் அமர்நாத் வீசிய இந்தப் பந்தை முடாசர் நாசர் ஏறி வந்து அடித்தார். பந்து எல்லைக் கோட்டை அல்ல.. மைதானத்தை வானத்திலேயே கடந்தது..” என்று சிக்ஸர் அடித்த அழகை, இவர்கள் சொன்ன தமிழ் இன்னும் கொஞ்சம் கூட்டியது.

சுனில் கவாஸ்கர்.. இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்.. இதோ தயாராக இருக்கிறார். அவருக்கு பந்து வீச வருவது மால்கம் மார்ஷல்.. இதோ வருகிறார் மார்ஷல்.. வீசுகிறார்.. out side of the off stump.. கவாஸ்கர் இதை மிக மிக அழகாக டிரைவ் செய்தார்.. கண்டிப்பாக நான்கு ரன்கள். சந்தேகமேயில்லை...” என்று பவுண்டரியை இவர்களே முடிவு செய்து சொல்லும்போது கவாஸ்கரைவிட வர்ணனையாளர்தான் எங்களுக்குப் பிடித்தமானவராக இருந்தார்.

வர்ணனையாளர்கள் யார், யார் என்று பார்த்தால் கூத்தபிரான், கணேசன், அப்துல்ஜப்பார், ராமமூர்த்தி என்ற நான்கு பெயர்கள் மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. இவர்களோடு புள்ளியியல் நிபுணராக சாரி என்பவர் இருப்பார்.

கணேசன் எதற்கெடுத்தாலும் ஒரு புள்ளிவிவரத்தைச் சொல்லி நம்முடைய புள்ளியாளர் சாரி அவர்கள் இதைச் சொல்கிறார் என்று அவரையும் எங்களிடத்தில் அறிமுகப்படுத்துவார்.

கூத்தபிரானின் குரல் கொஞ்சம் வெண்கலக் குரல்.. ஒலி அதிகமாகவே இருக்கும். கணேசனின் குரல் நடுவாந்திரம்.. அதில் மென்மை கலந்திருக்கும். ஆனால் அப்துல்ஜப்பார்.. ?

“அடுத்து பட்டாபிராம் கேட் முனையிலிருந்து மால்கம் மார்ஷல் பந்து வீச வருகிறார். இங்கே வர்ணனையைத் தொடர நண்பர் அப்துல்ஜப்பார் அவர்கள் வருகிறார்.. வாருங்கள் ஜப்பார்..” என்று சொல்லி கணேசன் விலகியவுடன் “வணக்கம் நேயர்களே..” என்று ஜப்பார் ஸார் ஆரம்பித்தவுடன் என் தந்தை “டேய் சவுண்டை குறைடா..” என்பார். எனக்கு அப்போதெல்லாம் பிடிக்காத ஒரு விஷயம் ரேடியோவில் சவுண்டை குறைப்பதுதான்.. “முடியாது..” என்பேன். வீட்டினர் அனைவரும் சவுண்ட்டை “குறையேண்டா..” என்று கத்தியவுடன் வேண்டாவெறுப்பாக குறைப்பேன். அவ்வளவு உச்சஸ்தாயி சவுண்ட்.. ஆனாலும் மிக மிக கவர்ச்சியான குரல் அந்த மனிதருக்கு..

“மூன்று ஸ்லிப்கள், ஒரு கவர் பாயிண்ட், மிட் ஆன், மிட் ஆ·ப், மிட் விக்கெட், லாங் ஆன், லாங் ஆ·ப் என்ற பரந்த வியூக அமைப்பு” என்று அப்துல் ஜப்பார் அவர்கள் சொல்கின்ற அழகே தனி அழகு.

இதில் இந்த ‘பரந்த வியூக அமைப்பு’ என்கிற வார்த்தைக்கு மறுநாள் தமிழ் ஆசிரியரிடம் விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்டது எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது.

இது போன்ற தமிழ் வார்த்தைகள் அநேகம் கல்லூரி பாட நூல்களில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள்.. மிக, மிக எளிதாக இதையெல்லாம் பள்ளிச் சிறுவர்களிடம் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்கள் இந்த ஆசான்கள்தான்.

மற்ற வர்ணனையாளர்களைவிட எனக்கு ஜப்பாரையை அதிகம் பிடிக்கும். காரணம் அவரது குரல் வளம்தான்..

சில சமயங்களில் மதிய நேரத்தில் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு ஸ்கூலுக்குத் திரும்பிப் போகும்போது ரோட்டோர கடைகளிலும், வீடுகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் ரேடியோவில் கமெண்ட்ரியை நின்று, நின்று கேட்டபடியே பள்ளிக்குச் செல்வேன். அப்போதெல்லாம் அனைவரையும்விட நிமிடத்திற்கு நிமிடம் ஸ்கோர் போர்டை சொன்னது ஜப்பார் ஸார்தான்.

இந்த நான்கு வர்ணனையாளர்களும் ஆளுக்கு 10 அல்லது 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன். அவரவரின் நேரங்களில் தங்களுக்குத் தெரிந்த தமிழை, விளையாட்டோடு இணைத்து உணர்ச்சி ததும்ப சொன்னதுதான் இவர்களது சிறப்பு.

கவாஸ்கரோ, கபில்தேவோ அவுட்டானால் சாதாரணமாகச் சொல்ல மாட்டார்கள். “இந்தியா தனது விலை மதிக்க முடியாத விக்கெட்டை இழந்துவிட்டது” என்பார்கள். இதில்கூட ஒரு அழகுத் தமிழைப் புகுத்தி கேட்பவரை உணர்ச்சிவசப்பட வைக்கும் ஆற்றல் இந்த வர்ணனையாளர்களுக்கு இருந்தது.

கவாஸ்கர் எப்போதுமே காட்டடியெல்லாம் அடிக்க மாட்டார். அவருடைய ஸ்ட்ரோக்குகள் எல்லாமே அழகாக இருக்கும். இப்போது டெண்டுல்கர் விளையாடுவதைப் போல..

“ஹாட்லி வீசிய அந்தப் பந்தை மிக அழகாக, பந்து காலில் பட்டதா அல்லது கால்காப்பில் பட்டதா என்பதே தெரியாத அளவுக்கு மிக நுணுக்கமாக தனது கால் திசையிலே திருப்பி விட்டார் கவாஸ்கர்.. பந்து எல்லைக் கோட்டை மின்னல் வேகத்தில் கடந்தது..” என்பார்கள்.

இதிலே காலில் கட்டிக் கொள்ளும் Pad-ஐ கால்காப்பு என்றழைப்பதாக தெரிந்து கொண்டேன். இதிலே சொல்லப்படுகின்ற தமிழாலேயே, கவாஸ்கர் என்றாலே மிக அழகாக அடிப்பவர் என்று நானே நினைத்துக் கொண்டேன்.

அன்றைய காலக்கட்டத்தில் மைதானத்தில் ஜென்டில்மேன் என்றால் திலீப் வெங்ச்சர்க்காரைத்தான் சொல்வார்கள். ஏன் என்றால் அவர் ஆர்ப்பாட்டமில்லாமல் வருவார். அதேபோல் திரும்பிச் செல்வார்.

“நான் பேசிக் கொண்டிருக்கும்போதே பந்தை வீசுகிறார் இம்ரான்கான். அளவு குறைந்து வந்த பந்து. வெங்க்ச்சர்க்காரின் கால்காப்பில் படுகிறது.. வீரர்கள் எல்.பி.டபிள்யூ கேட்டுள்ளார்.. ஆம்.. வெங்க்ச்சர்க்கார் அவுட். இந்தியா தனது நான்காவது விக்கெட்டை இழக்கிறது...” என்பார்கள்..

இதில் எல்.பி.டபிள்யூ என்பதற்கான விரிவாக்கமான 'Leg Before Wicket' என்பதை கிரிக்கெட் மேட்ச் விளையாடப் போகும்போது சக வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

“இதுக்கு என்னடா அர்த்தம்..?” என்று என் அப்பா கேட்க நான் அதற்கு “Leg Before Wicket” என்று கிளாஸ் ரூமில் சொல்வதைப் போல் சத்தமாகச் சொல்ல, என் அம்மா அப்பாவிடம் பெருமையாக, “எம்புள்ளை எப்படி இங்கிலீஷ் பேசுறான் பாருங்க..” என்று சொல்லி சிரித்ததை இப்போது நினைத்தாலும் ஒரு மாதிரி வெட்கமாகத்தான் உள்ளது.

ஆனாலும் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் ஒரு நொடி மகிழ்ச்சிக்கும் ஒரு மொழி காரணகர்த்தாவாக இருக்க முடிகிறதே என்பது, உங்களது வாழ்க்கையிலும் நிச்சயம் நடந்திருக்கும்.

அப்துல் காதீர் வீசிய அந்தப் பந்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தின் கால் காப்பில் பட்டுள்ளது. வீரர்கள் அவுட் கோருகின்றனர். ஆனால் அம்பயரோ திட்டவட்டமாக அது அவுட் இல்லை என்று தலையை அசைத்து மறுக்கிறார். இதனால் இந்திய அணிக்கு எந்த ஆபத்தும் இல்லை..” என்று சற்று டென்ஷனைக் கூட்டிச் சொல்லும்போது உட்கார்ந்து கேட்கின்ற நான் அப்படியே எழுந்து ரேடியோவின் அருகில் சென்று காதை வைப்பேன்.. அந்த அளவுக்கு வர்ணனையின்போதே கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வெறியாக மாற்றிய பெருமை, இந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கே உண்டு.

ஒரு டெஸ்ட் மேட்ச்சில் இந்திய அணி வீரர்கள் ஒரு நாள் மேட்ச்சைப் போல் விளையாடி ஒருவர் பின் ஒருவராக பெவிலியன் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்து, “யாராவது இந்திய அணி வீரர்களிடம் சென்று இன்றைக்கு நடப்பது டெஸ்ட் மேட்ச் என்று ஞாபகப்படுத்தினால் நல்லது என்றே நினைக்கிறோம்.. ஒரு நாள் போட்டியின் தாக்கம் இன்னும் நமது வீரர்களை விடவில்லை போலும்..” என்று இவர்களே இந்திய அணியின் ரசிகர்களாக மாறி எங்களைப் போன்றவர்களின் எண்ணங்களையும் அப்போதே வெளிப்படுத்தியுள்ளார்கள்.

ஒரு முறை சென்னையில் ரவிசங்கர் சாஸ்திரி பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போதே அவருக்கு நாங்கள் ‘கட்டை மன்னன்’ என்று பெயர் வைத்திருந்தோம். அவ்வளவு ஸ்லோவாக ரன் எடுப்பார்.. அது ஒரு நாள் போட்டி. அன்றைக்குப் பார்த்து தொடர்ந்து 2 ஓவர்களில் ரவிசாஸ்திரி ரன் எடுக்காமல் ‘தடவிக்’ கொண்டிருக்க.. ரசிகர்கள் கூச்சலிடத் துவங்கினார்கள்.

அப்போது வர்ணனை செய்தவர், “ரவிசங்கர் சாஸ்திரி தனது கால் காப்பு, கை காப்பு, ஹெல்மெட் என்று அனைத்தையும் சரி செய்து கொண்டு இதோ விவியன் ரிச்சர்டின் பந்து வீச்சை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறார்.. ரிச்சர்டும் பந்து வீச தயாராக இருக்கிறார்.. ரசிகர்களும் பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு இப்போதாவது ரவிசாஸ்திரி தனது மட்டைக்கு வேலை கொடுக்க மாட்டாரா என்ற பரிதவிப்போடு உள்ளார்கள். இதோ commentators-ஆன நாங்களும், எங்களது கமெண்ட்ரி வேலைக்கு ஒரு வாய்ப்பு வராதா என்று காத்திருக்கிறோம்..” என்று சற்று நகைச்சுவையாகச் சொன்னது இன்றைக்கும் எனக்கு நினைவிருக்கிறது.

ஆட்ட நேரம் முடிந்தவுடன் அன்றைய போட்டியின் ஸ்கோர் போர்டை வாசிக்கும் அழகுக்கே தனி சல்யூட் செய்யலாம்.

கவாஸ்கர் caught சர்பிராஸ்நவாஸ் bowl இம்ரான்கான் 32. அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 64..” என்று ஆரம்பித்து 10 பேர்களின் பெயர்களையும் சொல்லி முடிப்பதற்குள் நான் அதை குறித்து வைக்கத் திணறுவேன்.. ஆனால் இதில் அனைத்திலும் ஒரு அழகு இருந்தது.. வேகம் இருந்தது.. சுவை இருந்தது.

கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும், அதன் உபகரணங்களையும், கிரிக்கெட் பீல்டின் அமைப்புகளையும் அந்தச் சிறு வயதிலேயே எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் இந்த பிரதிபலன் எதிர்பாராத தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்கள்தான்.

அப்போதெல்லாம் ‘கல்லி’ எங்கே இருக்கிறது.. ‘ஸ்லிப்’ எங்கே இருக்கிறது.. ‘டீப் ஸ்கொயர் லெக்’ எங்கே இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்..? நாங்கள் விளையாடுகின்ற மேட்ச்சில்கூட நாங்க பார்த்து எங்கே ஆளை நிறுத்துகிறோமே அதுதான் ‘கல்லி’.. அதுதான் ‘ஸ்லிப்’.. அதுதான் ‘ஸில்லி பாயிண்ட்’..

இப்படி கிரிக்கெட்டின் அனைத்து நுணுக்கங்களையும் எந்தப் பள்ளியிலும் சொல்லித் தராமல் நாங்களே கற்றுக் கொண்டோம் என்றால் அது இந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களால்தான்.

காலம் மாறியது.. காட்சிகளும் மாறியது.. கோலங்களும் மாறின. தொலைக்காட்சிகள் வீட்டின் சமையல்கட்டுவரைக்கும் தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கியவுடன், ரேடியோவின் தமிழ் வர்ணனை கொஞ்சம் கொஞ்சமாக தனது முக்கியத்துவத்தை இழந்தது.

நானும் ஒரு முறை சென்னையில் நடந்த மேட்ச்சை ரேடியோ கமெண்ட்ரியையும், டிவியையும் அருகருகே வைத்து பார்த்தும், கேட்டும் கொண்டிருந்தேன். அப்போதுதான் தெரிந்தது கிரிக்கெட் வர்ணனையாளர்கள் எப்பேர்ப்பட்ட ரசிகர்கள் என்று.. எப்பேர்ப்பட்ட ஆசான்கள் என்று..

ஒவ்வொரு முறையும் பந்து பவுண்டரி லைனைக் கடக்கும்போது ரசிகர்களின் கை தட்டலுக்கு ஈடாக, இந்த வர்ணனையாளர்களும் ஒரு உற்சாகத்தை தங்களுக்குள் வரவழைத்து ரேடியோ ரசிகர்களையும் பரவசப்பட வைத்துள்ளார்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது.

காலம் செல்லச் செல்ல ஒதுக்கப்பட்ட ரேடியோவைப் போலவே, இந்த கிரிக்கெட் வர்ணனையாளர்களும் ஒதுக்கப்பட்டு விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

சமீபத்தில் லேட்டஸ்டாக சென்னையில் நடந்த ஒரு மேட்ச்சில் தமிழில் வர்ணனை செய்யப்படவில்லை. காரணம் கேட்டால் யாரும் பதில் சொல்ல முன் வரவில்லை.

தொலைக்காட்சியில் பார்க்க வாய்ப்பில்லாதவர்கள் ரேடியோவில் கமெண்ட்ரியாவது கேட்டு ஆசுவாசப்படுவார்களே என்றால், இப்போது கிரிக்கெட்டிற்கு தமிழ் மொழி தேவையில்லாததாகிவிட்டது போலும்.. ஆங்கிலம், இந்தி கமெண்ட்ரி மட்டுமே.

என்னைக் கேட்டால் இந்தியாவில் எங்கே கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் அங்கே அனைத்து பிராந்திய மொழி நேரடி வர்ணனைகளும் ஒலிபரப்பு செய்யப்பட வேண்டும். இது கிரிக்கெட்டிற்காக அல்ல.. என்னைப் போன்ற இப்போது வளர்ந்து வரக்கூடிய சிறுவர்கள் தத்தமது மொழியை இலகுவாக கற்றுக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

மொழி ஒரு பிரச்சினை இல்லையெனில், எந்தவொரு விஷயத்தையும் எளிதாகச் செய்து முடிக்க முடியும்.

எங்கோ இங்கிலாந்தில் ஆரம்பித்து இன்றைக்கு இந்தியா முழுமைக்குமே மூணு குச்சி, ஒரு பேட், ஒரு பால் என்று வைத்து இணைக்க முடிந்ததெனில் அது மொழியால் மட்டுமே முடிந்த செயல்..

அந்த நல்லிதயம் படைத்த தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர்களுக்கு என்னைப் போன்ற அவர்களது தயவால் வளர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிந்தாநதியாரின் தடாலடிப் போட்டிக்காக ராகுல் டிராவிட்டுடன் ஒரு சந்திப்பு

தமிழ்மணம் பதிவில் எனது தளம் வரும்வரை புதிதாக எந்தக் கதையையும் எழுத வேண்டாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அந்த நினைப்பை மறக்க வைத்துவிட்டது இந்த http://tamiltalk.blogspot.com/-ல் இருந்த சிந்தாநதியாரின் தடாலடி போட்டி..

சரி.. வலைத்தளத்தில் 'அனாதைப் பயல்'ன்னு பேர் வாங்கியாச்சு. இப்படியாச்சும் முயற்சி செஞ்சு நாலு பேர் 'பய யாரு?'ன்னு கேக்குற அளவுக்குப் பண்ணுவோமேன்னு நினைச்சு நானும் இந்தத் தடாலடி போட்டில 'தடால்'ன்னு குதிச்சிட்டேன்..
நேயர்களே.. ரசிகர்களே.. இதோ தடாலடி போட்டிக்காக உண்மைத் தமிழனின் கிரிக்கெட் சந்திப்பு..
கோவளம் பீச்சில் ரெஸ்ட்டில் இருந்த ராகுல் டிராவிட்டை சந்தித்தேன். பேட்டி தொடர்கிறது.

நான் : என்ன அக்கிரமம் ஸார் இது?

டிராவிட் : கரெக்ட்.. எனக்கும் அக்கிரமமாத்தான் தெரியுது.. ஆனா என்ன செய்ய?

நான் : இங்க 110 கோடி பேர் உங்களுக்காக கோவில், குளம்னு சுத்துக்கிட்டிருந்தோம்..

டிராவிட் : அதான் நாங்களும் உங்ககூடவே கோவில், குளம்னு சுத்தலாம்னுதான் சீக்கிரமா வந்துட்டோம்..

நான் : அதென்ன ஸார் பங்களாதேஷ்கிட்ட போய் தோக்கலாமா? நம்ம கவுரவம் என்னாகுறது?

டிராவிட் : தப்புதான்.. ஆனா என்ன பண்றது? நம்ம பங்காளி பாகிஸ்தான் தோத்துச்சுன்றே பீலிங்ல நாங்களும் விட்டுட்டோம்..

நான் : அது சரி. அப்ப பெர்முடாவை ஏன் இப்படி சாத்துனீங்க..?

டிராவிட் : இங்க இந்தியால என் வொய்ப்கிட்டேயிருந்து வெளில தலை காட்ட முடியலைன்னு பேக்ஸ் மேல பேக்ஸ்.. போன் மேல போன்.. அதான் கொஞ்சம் ரிலாக்ஸா ஆடினோம்..

நான் : ரிலாக்ஸா ஆடினீங்களா? பார்த்தா அப்படியெல்லாம் தெரியலையே..?

டிராவிட் : அந்த மேட்சல எந்தப் பந்து ஸ்டம்ப்பை பார்த்து வந்துச்சு.. ?
நான் : அப்ப இலங்கையோட தோத்தீங்களே..?

டிராவிட் : எல்லா பந்தையும் ஸ்டம்புக்கு நேராவே போட்டுட்டாங்க.. நாங்க என்ன செய்றது?

நான் : இவ்ளோ பேர் காட்டுக் கத்துக் கத்தியும் 'தோற்போம்'னு பிடிவாதமா சொல்லி தோத்துட்டு வந்து நிக்குறீங்களே? உங்களுக்கு எவ்ளோ தைரியம்?

டிராவிட் : எப்படியும் டீம்ல நாங்க இருப்போம்ன்ற தைரியம்தான்..

நான் : சரி அத விடுங்க.. இலங்கையோட விளையாடுற மேட்ச் முக்கியம்னு உங்களுக்கே தெரியும்.. அப்படியிருந்தும் டாஸ் வின் பண்ணிட்டு எதுக்காக பீல்டிங்கை எடுத்தீங்க..?

டிராவிட் : சச்சினுக்கு காலைலயே பேட்டிங் பிடிக்கணும்னா அலர்ஜி.. கங்குலிக்கு டஸ்ட் அலர்ஜி.. டோனி தலைல வேப்பெண்ணெய் தடவிருந்ததால அது காய்ஞ்சாத்தான் நல்லா அடிக்க முடியும்னுட்டாரு.. சேவக் கிரவுண்ட்ல நாலு ரவுண்ட் ஓடிப் பார்த்தாத்தான் தன்னால ஓட முடியும்னுட்டாரு.. உத்தப்பா காலை தோசை சாப்பிட்டதால ஏப்பம், ஏப்பமா வருதுன்னுட்டாரு.. வேறென்ன செய்றது? நீங்களே சொல்லுங்க..

நான் : அப்ப மத்தவுங்க சொல்லித்தான் நீங்க பீல்டிங் எடுத்தீங்களா?

டிராவிட் : இல்ல.. இல்ல.. சேப்பல் பேட்டிங் எடுன்னாரு.. நான் எப்பவும் அவர் சொல்றதுக்கு ஆப்போஸிட்டாத்தான் செய்வேன். அதான் பட்டுன்னு பீல்டிங்ன்னு சொல்லிட்டேன்..

நான் : அதென்ன உத்தப்பா உடனே அவுட்..?

டிராவிட் : சேவக்கோட முதல்ல நான்தான் உள்ள போவேன்னு கங்குலி அடம் புடிச்சாரு.. அவரைச் சமாளிக்க முடியல. அதான் உள்ள போனவுடனே நாலு சாத்து சாத்திட்டு சீக்கிரமா வெளில வந்திருன்னு சொல்லியனுப்பிச்சேன்.. வந்துட்டாரு..

நான் : கங்குலி ஏன் அப்படி தடவினாரு..?

டிராவிட் : உலகக் கோப்பை முடிஞ்சவுடனே திரும்பவும் டீம்ல இருந்து தூக்கப் போறாங்கன்னு எவனோ ஒருத்தன் அவர்கிட்ட பிட்டை போட்டுட்டான். உடனே பயந்துட்டார் மனுஷன்.. எப்படியாவது ரொம்ப நேரம் கிரவுண்ட்ல நிக்கணும்னு நினைச்சாராம்.. அப்படின்னு என்கிட்டயே சொன்னாரு..

நான் : அப்புறம் ஏன் சச்சின் டக் அவுட்.. மேட்ச் பிக்ஸிங்கா?

டிராவிட் : ஐயோ.. அப்படீல்லாம் ஒண்ணுமில்ல.. அவருக்கு கொஞ்சம் மூட் அவுட்.. எத்தனை மேட்ச்ல நான் மேட்ச் வின்னரா இருந்திருக்கேன். இன்னிக்கு நீங்க யாராவது ஒருத்தர் இருந்துக்குங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அவ்ளோதான்..

நான் : அந்தப் பந்தை அடிக்கிறது எப்படின்னு சச்சினுக்குத் தெரியாதா?

டிராவிட் : நானும் வெளில வந்தவுடனே கேட்டேன்.. எதுக்குத் தொட்டீங்கன்னு.. தொடலைன்னா உன்னை எப்படி உள்ள கூப்பிடுறதுன்னு சொல்றாரு..

நான் : நீங்க ஏன் பொசுக்குன்னு அவுட்டானீங்க..? நின்னு செஞ்சுரி போட்டிருக்கலாம்ல..

டிராவிட் : எத்தனை செஞ்சுரிதான் போடுறது? போரடிக்குதுல்ல..

நான் : சேவக்கிட்ட கொஞ்சம் பார்த்து விளையாடச் சொல்லிருந்தா அரை செஞ்சுரியாவது போட்டிருப்பாருல்ல..

டிராவிட் : ச்சே... அதெல்லாம் தப்பு.. அவனுக்கு என் பார்ட்னர்ஷிப் பிடிக்கலையாம். அதான் போறேன்னான்.. போடான்னுட்டேன்..

நான் : யுவராஜ்சிங் ஒழுங்காத்தான ரம்பிச்சான்.. அவனை எதுக்கு ரன் அவுட்டாக்குனீங்க..?

டிராவிட் : அவனுக்குக் கொழுப்பு..

நான : நீங்கதான வரச் சொன்னீங்க..

டிராவிட் : நான் வரச் சொன்னா வந்திர்றதா? அவனுக்கே அறிவு வேணாம்..

நான் : சேவக்கூட ஒழுங்கா பார்ட்னர்ஷிப் கொடுத்திருந்தா ஜெயிச்சிருக்கலாம்ல..

டிராவிட் : அதெப்படி? அவன் நல்ல பேர் எடுத்திருவானே?

நான் : டோனி நல்லா அடிக்கிறவனாச்சே.. ஏன் விட்டான்..?

டிராவிட் : யுவராஜ்சிங் அவுட்டான சோகம் அவனுக்கு. பெஸ்ட் பிரண்டு. அவனுக்கு மனசு கேக்குமா..? கம்பெனி கொடுக்க நானும் போகட்டுமான்னு கேட்டான். போடான்னுட்டேன்..

நான் : கடைசி வாலா ஆடினவங்களாச்சும் பொறுப்பா ஆடிருக்கலாம்ல..

டிராவிட் : தலையே வெளி வந்துட்டோம்.. வாலுக என்ன உள்ள போய் வாலாட்டுறது? அப்புறம் எங்களை எவன் மதிப்பான்..?

நான் : ஆக மொத்தம் வேணும்னே தோக்கணும்னு ஆடி தோத்துட்டீங்க.. அப்படித்தானே..

டிராவிட் : வேணும்னேல்லாம் ஆடலை.. சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்னு நினைச்சோம். அதான் வந்துட்டோம்..

நான் : அதான் சொளையா லட்சம் லட்சமா அள்ளிக் கொடுக்குறாங்கள்லே.. அப்புறமென்ன?

டிராவிட் : கொடுத்தா.. இப்ப அதுவா முக்கியம்..?

நான் : அப்புறம்..

டிராவிட் : ஸார் மொதல்ல ஒண்ண நல்லா புரிஞ்சுக்குங்க.. அந்த நாட்டோட கிளைமேட் எவ்ளோ ஜில்லுன்னு இருந்துச்சு தெரியுமா? சும்மா கைல பீரோட சாயந்தரம் பிகரோட ரூட் விட்டுக்கிட்டு.. என்ஜாய் பண்றானுக ஸார் அல்லாரும்.. அதான் வீட்டு ஞாபகம் வந்திருச்சு..
நான் : உங்களுக்கு நாட்டை விட, வீடு முக்கியமா?

டிராவிட் : பின்ன.. இந்த முப்பத்திரண்டு வயசுல ஆடாமா ஐம்பத்திரண்டுல ஆடுனா நீங்களே போட்டா போட்டுக் கிழிச்சிர மாட்டீங்க..

நான் : ஏன் உங்க பொண்டாட்டிகளையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போயிருக்க வேண்டியதுதான..?

டிராவிட் : நாங்களா மாட்டோம்னு சொன்னோம்.. சேப்பல்தான் கெடுத்திட்டாரு..

நான் : ஏன்..?

டிராவிட் : அவர் பொண்டாட்டி வர மாட்டேன்னு சொல்லிட்டாங்களாம்.. அதுனால எல்லாரும் என்னை மாதிரியே தண்டனையை அனுபவிக்கணும்னு சொல்லிட்டாரு.. நல்லாயிருப்பாரா அந்த மனுஷன்..?

நான் : ஆக திட்டம் போட்டு.. பிளான் செஞ்சு.. மேட்டர் ரெடி பண்ணி.. மேப் போட்டு.. மிக்ஸிங் பண்ணி..

டிராவிட் : இது எல்லாமே ஒண்ணுதான்..

நான் : ஐயோ எனக்குத் தலையே சுத்துது..

டிராவிட் : இத தடவுங்க.. சரியாப் போயிரும்..

நான் : என்னது இது?

டிராவிட் : டிராவிட்டின் பாம்.. பார்க்கலை.. கிரிக்கெட் போட்டி நடுவுல ரெண்டு நிமிஷத்துக்கு ஒரு தடவை வந்து வந்து நடிச்சனே.. ஒரு விளம்பரப் படம்.. இதுதான்.. சும்மா தடவுங்க.. தலைவலி பஞ்சா பறந்திரும்..

நான் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன்..