14-12-2008
என் இனிய வலைத்தமிழ் மக்களே..
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல், எந்தாண்டும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அரசியல் கலந்த அம்சமாகிவிட்டது.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் இரண்டு திரைப்பட இயக்குநர்கள் சங்கங்கள் இருந்தன. ஒன்று இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையிலான தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம். மற்றொன்று இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் தலைமையிலான தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கம். இந்த இரண்டு சங்கங்களின் தோற்றம், வளர்ச்சி குறித்து இப்போது வேண்டாம். அது பெப்ஸி விஜயன்-பாலுமகேந்திரா பிரச்சினையின்போது ஏற்பட்டது. பின்னொரு நாளில் பார்ப்போம்.
இந்த இரண்டு சங்கங்களையும் ஒரு நல்ல நாளில் இரு தரப்பினரும் கூடிப் பேசி இணைத்தனர். இணைப்பு ஒப்பந்தமாக இரண்டு சங்கங்களில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களையே ஒருமித்த சங்கத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற ஒருங்கிணைந்த பொதுக்குழுவின் முடிவுப்படி தென்னிந்திய திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்த திரு.ஏ.எஸ்.அமீர்ஜான் ஒருங்கிணைந்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராக திரு.எஸ்.ஏ. சந்திரசேகரும் தேர்ந்தெடுக்கப்பட்டு 2 வருடங்களை ஓட்டி முடித்துவிட்டனர்.
இப்போதைய தமிழ்நாட்டு அரசியல் சூழலில் முக்கியமான சினிமாத் துறை சங்கங்களின் கருத்துக்கள்தான் அரசியல் கட்சிகளுக்கு அடுத்து தமிழக மீடியாக்களால் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. நடிகர் சங்கத்திற்கு அடுத்து இயக்குநர்களின் சங்கம்தான் எந்த விஷயத்திலும் கருத்து சொல்ல தகுதியுடையதாகிறது.
இந்தச் சூழலில் எதிர்பார்த்தது போலவே இயக்குநர்கள் சங்கத் தேர்தலிலும் ஒரு எதிர்பார்ப்பு சூழ்ந்திருந்தது. நான் எதிர்பார்த்தது போலவே பாரதிராஜா களத்தில் குதித்தார். கூடவே அவருடைய தளபதியான ஆர்.கே.செல்வணியும் இருந்தார்.
காலம், காலமாக இயக்குநர்களின் நிழலிலேயே வளர்ந்து கொண்டிருந்த துணை, இணை, உதவி இயக்குநர்களில் சிலருக்கு இந்த முறை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்கிற உணர்வு வந்துவிட்டது. காரணம் ஒன்றே ஒன்றுதான்.. அது சம்பளம் சரிவர கைக்கு கிடைக்கவில்லை. சங்கத்தில் புகார் செய்தும் உறுப்பினர்களுக்கு அதனைப் பெற்றுத் தர சங்க நிர்வாகிகள் யாரும் முன்வரவில்லை என்பதுதான்.
தேர்தல் அறிவிப்பு வரும்வரை காத்திருந்து பின்பு சடாரென்று 20 பேரை கூட்டணி சேர்த்து தாங்களும் களத்தில் இறங்குவதாக அறிவிக்க கேள்விப்பட்ட இயக்குநர்களில் பலருக்கும் ஹார்ட் அட்டாக் வராத குறை. இயக்குநர்கள் சங்கத்தில் இயக்குநர்களைவிட, உதவி, துணை, இணை இயக்குநர்களின் எண்ணிக்கைதான் அதிகம்.
இது போதாதற்கு இயக்குநர் ஆர்.சி.சக்தி தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்று வெளிப்படையாகவே கேட்டார். இல்லாவிடில் தான் அந்தப் பதவிக்குப் போட்டியிடுவேன் என்றார். இயக்குநர்கள் தரப்பில் ஒரு பெரும்படையே அவருடைய இல்லத்திற்கு சென்று காலை முதல் மதியம்வரை அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் மசியவில்லை. முடியவே முடியாது என்றார். அவரும் களத்தில் நின்றுவிட்டார்.
தேர்தல் நாளுக்கு முதல் நாள் இரவு வலையுலக கலைத்தளபதி திரு.ஜே.கே.ரித்திஷீன் அன்புக்குப் பாத்திரமானவர்கள் செய்த கலாட்டாவால் விடியற்காலையில் தேர்தலுக்குப் பதில் கலவர பீதி கோடம்பாக்கத்தில் தொற்றிக் கொண்டது. இயக்குநர்கள் அனைவரும் உதவி இயக்குநர்கள் தங்களை அவமானப்படுத்திவிட்டதாக நினைத்து கோபமடைந்துவிட்டார்கள். உதவி இயக்குநர்களோ இயக்குநர்கள்தான் தங்களை உதாசீனப்படுத்துவதாக சொல்லி சண்டையிடத் துவங்க.. சமாதானப்பேச்சு வார்த்தை, அடிதடிக்கு முந்தைய நிலைமையோடு முடிந்துபோனது. தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இயக்குநர் ஆர்.சி.சக்தி தேர்தலை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே அவசரமாக பொதுக்குழுவைக் கூட்டி அதில் குரல் ஓட்டெடுப்பு மூலம் பாரதிராஜாவை ஏகமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுத்தார்கள் இயக்குநர்கள் சங்கத்தினர். இதனையும் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு சென்றார் ஆர்.சி.சக்தி.
கோர்ட்டோ தேர்தல் நடக்கும்வரையிலும் சங்கத்தைக் கவனித்துக் கொள்ள இரண்டு பெண் வக்கீல்களை ரிசீவர்களாக நியமித்தது. கூடவே தேர்தலை கண்டிப்பாக நடத்தியே தீர வேண்டும். தலைவர் பதவிக்கும் தேர்தல் உண்டு என்று சொல்லிவிட தேர்தலை எதிர்நோக்கி காத்திருந்தது கோடம்பாக்கம்.
எப்போதும் சினிமாவுலகில் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை கட்டாய விடுமுறை. அன்றைக்குத்தான் அனைத்து சங்கங்களின் பொதுக்குழுவோ, செயற்குழுவோ அல்லது சாதாரண பஜ்ஜி, வடை, டீ கூட்டமோ நடக்கும். அதே இரண்டாவது சனிக்கிழமையான இன்று(14-12-2008) இயக்குநர்களின் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றது.
சம்பளம் வாங்கித் தராதது, மற்றும் உதவி இயக்குநர்களின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தியது.. இந்த இரண்டு விஷயத்திலும் இயக்குநர்கள் மீது காட்டமாக இருந்த உதவி இயக்குநர்களில் ஒரு சிலர் இந்த முறை நாளைய இயக்குநர்கள் அணி என்கிற பெயரில் போட்டியிட்டனர்.
இதனைத் தவிர்ப்பதற்காக பல முறை துணை, இணை, உதவி இயக்குநர்களை அழைத்து ஆர்.கே.செல்வமணியின் தலைமையில் சமாதானக்கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் உதவி இயக்குநர்கள் சங்கத்தின் பொறுப்பான பதவிகளில் அமர ஆசைப்பட.. “இது இயக்குநர்கள் சங்கமாச்சே..?” என்று நயமாகச் சொல்லப்பட்டது இயக்குநர்களால்.. இயக்குநர்களுக்கே கேப்ஷன் எழுதித் தருபவர்கள் உதவி இயக்குநர்கள்தானே.. “முடியாது..” என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட “நடப்பது நடக்கட்டும்.. பார்ப்போம்..” என்று சொல்லிவிட்டு போருக்குத் தயாரானது இயக்குநர்கள் கூட்டம்.
ஒரு புறம் பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் கூட்டம்.
மற்றொரு புறம் நாளைய இயக்குநர்கள் அணி என்கிற தலைமையில் உதவி, துணை, இணை, இயக்குநர்கள் கொண்ட கூட்டம்.
இது இரண்டிற்கும் பொதுவாக சுயேச்சையாக பல உதவி இயக்குநர்கள், இயக்குநர்கள் பல பதவிகளுக்கும் போட்டியிட்டார்கள். அவர்களில் முக்கியமானவர் இயக்குநர் திரு.ஆர்.சுந்தர்ராஜன். பொருளாளர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
நாளைய இயக்குநர்கள் அணியினர் நேற்றே விளம்பரப் பலகைகளை தேர்தல் நடக்கும் சேம்பர் திரையரங்கு அருகே வைத்து அசத்திவிட்டார்கள். பார்த்த கணத்தில் இயக்குநர்கள் டீம் ஒரு நிமிடம் ஆடித்தான் போனது. பின்பு அவசரம், அவசரமாக இரவோடு இரவாக வினைல் போஸ்டர்களும், தட்டி போஸ்டர்களும் உருவாக்கப்பட்டு விடியற்காலையில் வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையில் நடைபெற்றது. இந்த முறை வாக்குச் சேகரிப்பு என்பது கூட்டம், கூட்டமாக அதிகமாக இருந்ததால் பல இயக்குநர்களும் கை நிறைய பேப்பர்களை வாங்கி வைத்துக் கொண்டு திண்டாடித்தான் போனார்கள்.
எது வேண்டுமானாலும் நடக்கும் என்று ‘கழுகார்’ மேலிடத்திற்கு பற்ற வைத்திருந்ததனால், காவல்துறையின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. காலையில் “நாங்க சொல்ற மாதிரி கியூவுல நின்னு ஓட்டுப் போடுங்க..” என்று இயக்குநர்களுக்கே கிளாஸ் எடுத்தது காவல்துறை. இந்த விஷயத்தில் அனைத்து அணியினரும் ஒன்று சேர்ந்து கோரஸாக, “எங்களையென்ன முட்டாள்ன்னு நினைச்சீங்களா..? அதையெல்லாம் நாங்களே பாத்துக்குறோம்..” என்று எகிறு, எகிறு என்று எகிறிவிட்டார்கள். “எப்படியோ போங்க..” என்று கழன்று கொண்டார்கள் காவல்துறையினர்.
பல இயக்குநர்கள் ஓட்டுப் போட வரவில்லை. அவுட்டோர் ஷ¥ட்டிங்கில் மாட்டிக் கொண்டதாக செய்தி மட்டுமே அனுப்பினார்கள். பதிலி ஓட்டுப் போட இங்கே அனுமதியில்லை என்பதால் வேறு ஒன்றும் செய்ய முடியாத நிலைமை.
காலை 9 மணிக்கு கியூவில் நிற்க ஆரம்பித்து மதியம் 3 மணிக்குத்தான் கியூ காணாமற்போனது. அதுவரையில் கூட்டம்தான்.. ஆனாலும் கேன்வாஸிங்கும் மிக ஜாலியாகத்தான் இருந்தது. எதிரெதிர் அணியில் இருப்பவர்கள் அருகருகே அமர்ந்து பேசியபடியே இருந்தனர்.
ஆர்.சி.சக்தி அணியில் செயலாளர் பதவிக்கு இயக்குநர் திரு.புகழேந்தி போட்டியிட்டார்.
பாரதிராஜா அணியில் அவர் தலைவர் பதவிக்கும், ஆர்.கே.செல்வமணி பொதுச்செயலாளர் பதவிக்கும், வீ.சேகர் பொருளாளர் பதவிக்கும் போட்டியிட்டார்கள். துணைத் தலைவர்கள் பதவிக்கு விக்ரமன், சசிமோகன் ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பதவிக்கு லிங்குசாமி, அமீர், டி.கே.சண்முகசுந்தரம், ஏகாம்பவாணன் ஆகியோரும் களத்தில் இருந்தார்கள்.
செயற்குழு உறுப்பினர்களாக பாலி ரங்கம், பூபதி பாண்டியன், எழில், யார் கண்ணன், மாதேஷ், பேரரசு, ராஜாகார்த்திக், ஈ.ராம்தாஸ், இரவிகந்தசாமி, ஷிபி, சிபிசந்தர், எஸ்.எஸ்.ஸ்டேன்லி ஆகியோரும் போட்டியிட்டனர்.
கடைசி நபராக விமானத்தில் பறந்து வந்த இயக்குநர் வாசு ஓட்டுப் போட்டதோடு மாலை 5 மணிக்கு ஓட்டுப் பதிவு முடிந்து எண்ணிக்கை துவங்கியது.
என்றைக்கும் இல்லாத திருநாளாக இந்தத் தேர்தலில்தான் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 669. ஆச்சரியப்பட்டுப் போய்விட்டார்கள் அனைவரும்.
எண்ணத் துவங்கிய 1 மணி நேரத்தில் முதல் முடிவு வந்தது. தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாரதிராஜா 511 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து நின்ற ஆர்.சி.சக்தி 148 ஓட்டுக்கள் பெற்றார். இன்னொரு சுயேச்சை வேட்பாளர் 10 வாக்குகள் பெற்றிருந்தார்.
பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி 484 ஓட்டுக்கள் பெற்று வெற்றிபெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட புகழேந்தி 124 ஓட்டுக்களை பெற்றார்.
பொருளாளர் பதவிதான் பாரதிராஜா அணியை காலைவாரிவிட்டது. அந்த அணி சார்பாக போட்டியிட்ட வீ.சேகர் தோற்றுப் போய், சுயேட்சையாகப் போட்டியிட்ட ஆர்.சுந்தர்ராஜன் 306 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். வீ.சேகர் பெற்ற ஓட்டுக்கள் 268. இங்கேதான் நாளைய இயக்குநர்கள் அணியின் அரசியல் விளையாடிவிட்டது. அவர்கள் பெற்ற வாக்குகள் 78. இவர்கள் களத்தில் இல்லாமல் இருந்திருந்தால் வீ.சேகரே வெற்றி பெற்றிருப்பார்.
ஆர்.சுந்தர்ராஜனால் நம்பவே முடியவில்லை. அழுதேவிட்டார். இத்தனைக்கும் அவருக்காக கேன்வாஷ் செய்தது 2 பேர்தான். ஒருவர் அவருடைய கார் டிரைவர். இன்னொருவர் அவருடைய உதவியாளர். ஆனால் பல அருமையான வாசகங்கள் கொண்ட தட்டிகளை வைத்து அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தார் ஆர்.சுந்தர்ராஜன். கூடவே அனைத்து உறுப்பினர்களுக்கும் போன் செய்து வாக்கு சேகரித்தார். “306 பேர் என் மேல நம்பிக்கையா இருந்திருக்கானுகளேப்பா..” என்று சொல்லி சொல்லி அரற்றிக் கொண்டிருந்தார். இத்தனைக்கும் பாரதிராஜாவின் சீடர்தான் ஆர்.சுந்தர்ராஜன். அவரை அணியில் சேர்த்துக் கொள்ளாத கோபத்தில் தனித்து சுயேச்சையாக நின்று ஜெயித்துவிட்டார்.
வெற்றி செய்தி கிடைத்தவுடன் காரில் பறந்து வந்த பாரதிராஜாவை மெயின்ரோட்டில் இருந்து அரங்கம்வரையில் அலாக்காக தூக்கி வந்தார்கள் அவருடைய சீடர்கள். அவரே எதிர்பார்க்கவில்லை. மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுவிட்டார் இயக்குநர் இமயம். “எங்கள் அப்பா பாரதிராஜா வாழ்க..” என்ற கோஷத்தைக் கேட்டு சட்டென்று குரல் உடைந்து அழுதுவிட்டார். “தளபதி அதிரடிப்படை ஆர்.கே.செல்வமணி வாழ்க..” என்ற கோஷமும் செல்வமணியை உணர்ச்சிவசப்பட வைத்தது. ஆனால் இவரும் அழுதார். காரணம்தான் வேறு. வீ.சேகர் தோற்றுப் போனதை நினைத்து, சட்டென்று அவருடைய கரம் பிடித்து அழுது தீர்த்துவிட்டார் செல்வமணி.
துணைத் தலைவர் தேர்தலில் விக்ரமன் பாரதிராஜாவுக்கு அடுத்த இடத்தில் 505 வாக்குகளை பெற்று அனைவரையும் அதிசயப்படுத்தியிருக்கிறார். அடுத்து சசிமோகன் 368 வாக்குகள் பெற்று ஜெயித்துள்ளார்.
இணைச் செயலாளர்களாக அமீர் 488 ஓட்டுக்களும், லிங்குசாமி 420 ஓட்டுக்களும், டி.கே.சண்முகசுந்தம் 290 ஓட்டுக்களும், ஏகம்பவாணன் 322 ஓட்டுக்களும் வாங்கி வெற்றி பெற்றுள்ளார்கள்.
செயற்குழு உறுப்பினர்களுக்கான பட்டியலில் பாரதிராஜா அணியில் போட்டியிட்ட அனைவருமே வெற்றி வாகை சூடியிருக்கிறார்கள்.
வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளும்
1. S.எழில் - 445
2. பேரரசு - 417
3. யார் கண்ணன் - 416
4. ஈ.ராமதாஸ் - 414
5. மாதேஷ் - 403
6. பூபதிபாண்டியன் - 400
7. S.S.ஸ்டான்லி - 393
8. R.ஷிபி - 343
9. பாலி ஸ்ரீரங்கம் - 311
10. D.ஷிபிசந்தர் - 306
11. ராஜாகார்த்திக் - 243
12. ரவி கந்தசாமி - 220
இயக்குநர்கள் அனுமோகனும், டி.பி.கஜேந்திரனும். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவுதான் ஏற்றத்தாழ்வுகளும், கருத்து வேறுபாடுகளும் இருந்தாலும் இயக்குநர்கள் மீது துணை இயக்குநர்களுக்கு இருக்கும் மரியாதை போகவில்லை என்று இந்த தேர்தல் முடிவுகள் வந்த பின்பு தமிழ்த் திரையுலகம் முழுவதும் பேச்சு. எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
இனி தமிழகத்தின் அனைத்துத் தலையாய விஷயங்களிலும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான திரு.பாரதிராஜாவின் குரலும் ஒலிக்கப் போகிறது. அதற்காகத்தான் இவ்வளவு பரபரப்பு.
எல்லாம் நன்மைக்கே..
நன்றி..
|
Tweet |
17 comments:
//இனி தமிழகத்தின் அனைத்துத் தலையாய விஷயங்களிலும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான திரு.பாரதிராஜாவின் குரலும் ஒலிக்கப் போகிறது.//
ithuthan matteru kanna..
நல்ல கவரேஜ்!
இந்தக் கதையை வைத்து ஒரு படம் எடுத்தால் நூறு நாள் ஓடக்கூடும்.
?
///Anonymous said...
//இனி தமிழகத்தின் அனைத்துத் தலையாய விஷயங்களிலும் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவரான திரு.பாரதிராஜாவின் குரலும் ஒலிக்கப் போகிறது.//
ithuthan matteru kanna..///
கண்ணா நீ சொன்னாலும் சொல்லாட்டியும் இதுதான் கண்ணா மேட்டரு.. இனிமே பாரு இயக்குனர் இமயம் பட்டையைக் கிளப்பப் போறாரு..
//r.selvakkumar said...
நல்ல கவரேஜ்!//
மிக்க நன்றி ஸார்..
//அ நம்பி said...
இந்தக் கதையை வைத்து ஒரு படம் எடுத்தால் நூறு நாள் ஓடக்கூடும்.//
200 நாட்கள் ஓடக்கூடிய உள்ளடி கதையும் இந்தக் கதையில் உண்டு நம்பி அவர்களே..
அது நிறைய முன்னணி இயக்குனர்கள் ஓட்டுப் போட வராத கதை..
//ஆட்காட்டி said...
?//
ஆட்காட்டி ஸார்.. இங்கேயும் அதே ஸிம்பல்தானா.. நான் என்னன்னு புரிஞ்சுக்கிறது..
விரிவான கவரேஜ்
//சரவணகுமரன் said...
விரிவான கவரேஜ்//
நன்றி ஸார்..
தம்பி,
தமிழ் உணர்வாளர் பாரதிராசா வென்றால் உனக்கென்ன சந்தோசம்? ஒன்றும் புரியலையே?
அருமையான கவரேஜ். மிக சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.
இது போன்ற கட்டுரைகள்தான் வலைப்பதிவை வெகுஜன ஊடகங்களை விட சுவராசியமாக்குகின்றன.
மேலும் எதிர்பார்த்து
//Anonymous said...
தம்பி, தமிழ் உணர்வாளர் பாரதிராசா வென்றால் உனக்கென்ன சந்தோசம்? ஒன்றும் புரியலையே?//
முதலில் அவர் இயக்குநர் இமயம். பின்புதான் தமிழ் உணர்வாளர்.. எனக்கு இயக்குநர் இமயமே போதும்.. இயக்குநர்கள் சங்கத்தின் 90 சதவிகித ஓட்டுக்களைப் பெற்று முதல்வனாகியிருக்கிறார். எங்களுக்கு நல்லதே செய்வார் என்கிற எதிர்பார்ப்பு நிறைய உண்டு. அதனால்தான்..
இதில் தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம், தெலுகு மொழிகளுக்கெல்லாம் வேலையே இல்லை.. எங்களுக்கு ஒரே மொழிதான்.. அது "கலை"..
//முரளிகண்ணன் said...
அருமையான கவரேஜ். மிக சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். இது போன்ற கட்டுரைகள்தான் வலைப்பதிவை வெகுஜன ஊடகங்களை விட சுவராசியமாக்குகின்றன. மேலும் எதிர்பார்த்து..//
நன்றி முரளி.. எங்கே பத்து நாட்களாக ஆளையே காணோம்.. பெஸ்ட்டிவலுக்குக் கூட வரவில்லையே..?
தேர்தல் நாளுக்கு முதல் நாள் இரவு வலையுலக கலைத்தளபதி திரு.ஜே.கே.ரித்திஷீன் அன்புக்குப் பாத்திரமானவர்கள் செய்த கலாட்டாவால் விடியற்காலையில் தேர்தலுக்குப் பதில் கலவர பீதி கோடம்பாக்கத்தில் தொற்றிக் கொண்டது.
இந்த மேட்டர் என்ன என்பதை தெரியபடுத்தவும்.
இப்படிக்கு
காவேரி கணேஷ்
தலைவர்
அகில உலக நாயகன் JKR ரசிக மன்றம்
///KaveriGanesh said...
தேர்தல் நாளுக்கு முதல் நாள் இரவு வலையுலக கலைத்தளபதி திரு.ஜே.கே.ரித்திஷீன் அன்புக்குப் பாத்திரமானவர்கள் செய்த கலாட்டாவால் விடியற்காலையில் தேர்தலுக்குப் பதில் கலவர பீதி கோடம்பாக்கத்தில் தொற்றிக் கொண்டது.//
இந்த மேட்டர் என்ன என்பதை தெரியபடுத்தவும்.
இப்படிக்கு
காவேரி கணேஷ்
தலைவர்
அகில உலக நாயகன் JKR ரசிக மன்றம்///
அண்ணே.. கணேஷ் அண்ணே.. நீங்களுமா..?
சரி.. சொல்றேன் கேட்டுக்குங்க..
இயக்குநர்களை எதிர்த்து தேர்தலில் நின்ற நாளைய இயக்குநர்கள் அணியில் ஜே.கே.ரித்திஷிற்கு நெருக்கமான சில உதவி இயக்குநர்களும் இருந்தார்கள். அவர்களுக்கு உதவுவதற்காக ரித்திஷீன் அன்பர்கள் இரவு நேரத்தில் போஸ்டர்களையும், தட்டிகளையும் வடபழனி பேருந்து நிலையம் அருகே வைத்துக் கொண்டிருந்தபோது அங்கே வந்த இயக்குநர்கள் அணியின் ஆதரவாளர்களுடன் ஏதோ பேசப் போய் அது பெரிதாகி, கைகலப்பாகிவிட்டது.
இதுதான் மேட்டர்..
See who owns hostmonsterforum.com or any other website:
http://whois.domaintasks.com/hostmonsterforum.com
Post a Comment