என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘ஐந்தாண்டு கால ஏதோ ஒரு கூட்டணி ஆட்சியின் மெகா ஊழல்’ என்று ஆரம்பித்த நமது ஊழல் கலாச்சாரம் இன்றைக்கு வருடத்திற்கு ஒன்று, மாதத்திற்கு ஒன்று என்றாகி கடைசியில் தினத்துக்கு ஒன்றாகிவி்ட்டது.
ஏற்கெனவே தாங்க முடியாத அளவுக்கு 2-ஜி ஸ்பெக்ட்ராம் ஊழலும், அதையடுத்து காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் நடந்த ஊழலும், இறுதியாக ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழலுமாக அத்தனை செய்தி சேனல்களுக்கும் விளம்பரங்களை வாரிக் கொடுத்தும், நமக்கு டென்ஷனையும், பி.பி.யையும் ஏற்றிக் கொடுக்கும் ஊழல்களின் வரிசையில் இன்றைக்கு புதிதாக ஒரு ஊழல் அவதாரமெடுத்துள்ளது.
கடந்த 2007-ல் வருடத்திற்கு ஒரு முதல்வர் என்ற வினோத ஒப்பந்தத்தின் அடிப்படையில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் - பா.ஜ.க., கூட்டணி ஆட்சி அமைத்தபோது இப்போதைய முதல்வர் எடியூரப்பாதான் துணை முதல்வராக இருந்தார்.
இந்த நில முறைகேட்டில், முதல்வர் எடியூரப்பா மட்டுமின்றி, அவரது அமைச்சர்களான அசோக், கட்டா சுப்பிரமணிய நாயுடு ஆகியோருக்கும் தொடர்புள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால், அவர்கள் இருவரும் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். ஏற்கனவே, அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடுவின் மகனும், கவுன்சிலருமான கட்டா ஜெகதீஷ் மீது நில ஊழல் புகார் கூறப்பட்டுள்ளது.
"சட்ட விதிமுறைக்குட்பட்டுதான், நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் இல்லை. எதிர்க்கட்சிகள் விரும்பினால் கடந்த பத்து ஆண்டுகளில், பெங்களூரில் நிலம் தொடர்பாக என்னென்ன பேரங்கள் நடந்துள்ளன என்பதையும், யார், யார் பெயரில் நிலங்கள் விற்கப்பட்டன என்பது பற்றியும் நீதி விசாரணை நடத்தலாம்..'' என்று தெரிவித்துள்ளார்.
“நீ ஏன்யா திருடுன?”ன்னு கேட்டா.. “இதுக்கு முன்னாடி எத்தனை பேர் திருடியிருக்காங்க... தெரியுமா?” என்ற ரீதியில் எடியூரப்பா கேட்டதற்கு அடிப்படை காரணம் இதற்கு முன்பாக ஆட்சியில் இருந்த அரசுகளும் குறிப்பாக, இப்போது எடியூரப்பாவை எப்படியாவது குப்புறக் கவிழ்த்து ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும் குமாரசாமியின் ஆட்சியிலும் இது போன்ற ஊழல்கள் மானாவாரியாக நடந்திருப்பதுதான்.
“நான் மட்டுமா திருடினேன்.. அவனும்தான் திருடினான்.. பாருங்க..” என்ற சின்னப்புள்ளத்தனமான எடியூரப்பாவின் பேட்டியை பார்த்துவிட்டு பா.ஜ.க. தலைவர்கள் நாளை என்ன சொல்வார்கள் என்று தெரியவில்லை.
இது மட்டுமின்றி, 2009-ம் ஆண்டு பெங்களூரில் 4,000 சதுர அடி அளவுள்ள அரசு நிலத்தை, தனது மகன் ராகவேந்திராவுக்கு, எடியூரப்பா விதிமுறைகளை மீறி வழங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது பற்றி எடியூரப்பாவின் அரசியல் ஆலோசகர் புட்டசாமி கூறுகையில், “எடியூரப்பா மகன்கள், ராகவேந்திரா, விஜயேந்திரா நிர்வாக இயக்குனர்களாக உள்ள "ப்ளூயிட் பவர் டெக்னாலஜிஸ்' நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் எவ்வித விதிமீறலும், முறைகேடுகளும் நடக்கவில்லை. நியாயமான முறையில்தான் நிலம் வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலத்தில் இதுவரையிலும் எந்தவிதமான கட்டடமும் கட்டப்படவில்லை.
பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம் (பி.டி.ஏ.,) "ஜி' என்ற சிறப்பு பிரிவில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்படும் நிலங்களை, எடியூரப்பாவைப் போலவே முந்தைய முதல்வர்களும் தங்களது உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர்.
முந்தைய முதல்வர்களில் யார், யார் இது போன்று நிலங்களை வழங்கியிருக்கின்றனர் என்ற பட்டியலை வெளியிட்டால், எதிர்க்கட்சியினரும், சில பத்திரிகைகளும் எடியூரப்பாவைப் பற்றிச் சித்தரிக்கும் தவறான எண்ணம் நிச்சயம் மாறும்(!!!!).
முன்னாள் முதல்வர் தரம்சிங் இந்த “ஜி” பிரிவின் கீழ் அவரது மகள், மாமியார், வீட்டு வேலைக்காரர் ஆகியோருக்கு அரசு நிலங்களை வாரி வழங்கியுள்ளார். அவரது இரண்டாண்டு ஆட்சிக் காலத்தில் விசேஷ பிரிவின் கீழ் இந்த நிலங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சியின்போது, நிலத்தை பெற தகுதியில்லாதவர்களுக்கும், தனது 19 உறவினர்களுக்கும் இது போன்று அரசு நிலங்களை ஒதுக்கியுள்ளார். அதுவும் அவர் ஆட்சியில் இருந்த ஓராண்டு காலத்திற்குள் இதனை செய்திருக்கிறார்.
2007-ல் குமாரசாமி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னதாக, கர்நாடகா தொழில் பகுதி அபிவிருத்தி கழகத்துக்குரிய (கே.ஐ.ஏ.டி.பி.,) 3.24 ஏக்கர் நிலத்தை, அவரது சகோதரர் பாலகிருஷ்ணனின் மைத்துனிக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளார். அந்த நிலத்தின் அப்போதைய மதிப்பு ஐந்து கோடி ரூபாய். ஆனால் தற்போதைய மதிப்பு 50 கோடி ரூபாயாகும்.
இந்த ஊழல் பட்டியலில் முதல்வர்கள் மட்டுமின்றி முன்னாள் கவர்னர் ரமாதேவியும் இடம் பெற்றுள்ளார். 2004-06-ம் ஆண்டுகளில் இவரும் "ஜி' விசேஷ பிரிவில் தனது உறவினர்களுக்கு அரசு நிலங்களை வாங்கிக் கொடுத்துள்ளார்” என்கிறார்.
இந்த நிலையில் “முதல்வர் எடியூரப்பாவின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளி வரும் சூழ்நிலையில், கவர்னர் பரத்வாஜ் மவுனமாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது..'' என்கிறார் முன்னாள் முதல்வர் குமாரசாமி.
“முதல்வர் எடியூரப்பாவின் நில ஆக்கிரமிப்பு குறித்து முதலில் தகவல் கூறியவன் நான்தான். பாம்பு புற்றைத் தோண்டினால், பாம்புகள் ஒவ்வொன்றாக வெளிவரும். அது போன்று, எடியூரப்பாவின் ஊழல்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளன. தனது மகன்கள், நண்பர்கள், அமைச்சர்களுக்கு பி.டி.ஏ., நிலத்தை சட்டத்திற்கு புறம்பாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் ஆட்சேபித்தும், அதை அவர் பொருட்படுத்தவில்லை.
இத்தனை புகார்கள் வந்தும், கவர்னர் பரத்வாஜ் அமைதியாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது. பா.ஜ.க. மேலிட தலைவர்கள், எடியூரப்பாவை ராஜினாமா செய்ய வற்புறுத்த வேண்டும். மகாராஷ்டிர முதல்வராக இருந்த அசோக் சவானின் ராஜினாமாவை வற்புறுத்திய பா.ஜ., தலைவர்கள், எடியூரப்பா ராஜினாமாவை ஏன் கேட்கவில்லை? இரண்டரை ஆண்டுகளில் அவர் செய்த ஊழல்கள் குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும்..” என்று கொதித்துள்ளார்.
கூடவே தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து பேசிய குமாரசாமி, “நான் முதல்வராக இருந்தபோது, நில மோசடி செய்து எனது குடும்பத்தினருக்கு வழங்கியதாக கூறுவதை எடியூரப்பாவும், அவரது கட்சியினரும் வெறும் வாய் வார்த்தையாக கூறாமல், ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபித்தால், எனது அரசியல் வாழ்க்கையை துறக்க தயாராக உள்ளேன்..” என்று சவாலும் விட்டுள்ளார் குமாரசாமி.
இந்த சவாலை எடியூரப்பா ஏற்று குமாரசாமியின் ஊழல்களை வெளிப்படுத்துவார். பதிலுக்கு குமாரசாமி, எடியூரப்பாவின் ஊழல்களை வெளிப்படுத்துவார்.. பெங்களூர் ராஜ்பவனில் காத்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஏஜெண்ட்டான கவர்னர் பரத்வாஜ், “பாஜக ஆட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. ஆட்சியைக் கலையுங்கள்” என்று லெட்டர் அனுப்பிவிட்டு தனது கவர்னர் பதவியை அடுத்த 5 ஆண்டுகளுக்கு உறுதி செய்து கொள்வார்.
இவர்களது மோதலைத் திசை திருப்பக் காத்திருக்கும் காங்கிரஸ்காரர்கள், “பாருங்க பாருங்க.. நாங்க மட்டுமா கொள்ளையடிச்சோம்? எதிர்க்கட்சிக்காரங்களும்தான் கொள்ளையடிச்சிருக்காங்க.. அதையெல்லாம் கேக்க மாட்டீங்களா..? ச்சும்மா.. இத்தூணூண்டு 1 லட்சத்து சொச்சம் கோடியை கொள்ளையடிச்சதுக்கே ஐயோ.. அம்மான்றீங்களே..?” என்று நம்மிடமே திருப்பிக் கேட்கப் போகிறார்கள்..
நாம் இதை யாரிடம் போய்ச் சொல்லப் போகிறோம்..!?
|
|
Tweet |

