Showing posts with label மெரீனா கடற்கரை. Show all posts
Showing posts with label மெரீனா கடற்கரை. Show all posts

பதிவர்கள் டுபுக்கு-பாஸ்டன் பாபாவுடன் ஒரு சந்திப்பு

12-06-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே!

'டுபுக்கு' என்ற வார்த்தையை என் சின்ன வயதில் கேட்டது. 'வாயைத் தொறந்தால் பொய்யைத் தவிர வேற எதையுமே பேச மாட்டான்' என்று என் பள்ளிக்காலத் தோழன் ராமச்சந்திரனை அடையாளம் காட்டி, சக மாணவர்கள் பேசியது எனக்கு இன்றைக்கும் நினைவிருக்கிறது.

அநேகமாக பள்ளிகளில் பேசிய இது போன்ற அர்த்தமுள்ள சிறார் வார்த்தைகளை, பின்னாளில் கேட்கின்ற போது ரொம்பத்தான் மனம் அதில் லயித்துப் போகிறது..

நான் வலையுலகில் நுழைந்த காலக்கட்டத்தில் வலைப்பதிவர்களின் பெயர்கள் சற்று காமெடியாகவும், சற்று வில்லங்கமாகவும் இருக்கும் என்பது தெரியும் என்றாலும், இந்த அளவுக்கு இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. காரணம் 'டுபுக்கு'.

நண்பர், தோழர் டுபுக்கு எனது பதிவிற்கு வருகை தர துவங்கியதில்தான் அவருக்கும், எனக்குமான தொலைதூரத் தொடர்பும் துவங்கியது. பெயர், ஊர் தெரியாமல் எழுத்தால் மட்டுமே அறிமுகமாயிருந்த நண்பர் டுபுக்கு திடீரென்று சென்ற வாரம் சென்னையில் பிரசன்னமாகியிருந்தார்.

வருவதற்கு முன்பே ஒரு பதிவினை இட்டிருந்தார். நானே கிட்டத்தட்ட மறந்து போயிருந்தேன் அந்தப் பெயரை.. மறுபடியும் ஞாபகப்படுத்துவதைப் போல் இருந்தது அவரது அழைப்பு. 'சந்திப்போம்' என்ற உணர்வோடு முன்கூட்டியே தெரியப்படுத்தியிருந்தேன். 'வருக.. வருக..' என்று அழைத்திருந்தார்.

திடீரென்று இரண்டு நாட்கள் முன்பாக செல்போனில் அழைத்தார். எனது ‘நிலைமை’ தெரியாததால் பாவம்.. பேசுவதற்குள் திணறிவிட்டார். 4, 5 முறை சொன்ன பிறகுதான் ‘டுபுக்கு’ என்ற பெயர் எனது ஓட்டைக் காதில் ஏறியது.. நானே மன்னிப்பு கேட்டு பேசினேன்.. “அவசியம் வரணும்.. உங்களை சந்திக்கணும்..” என்றார்.. “இடம் எங்கே..?” என்றேன்.. “சிட்டி சென்டர்..” என்றார்.. “அதுதான் எங்கே..?” என்றேன்.. “எனக்கே தெரியாது பாஸ்.. அன்னிக்கு போன் பண்ணுங்க.. சொல்றேன்..” என்றார்.

அடுத்து கொஞ்ச நேரத்தில் டோண்டு ஸார் போன் செய்து "சிட்டி சென்டர் எங்கே இருக்கிறது?" என்றார். ["இஸ்ரேலை பத்தி தெரியுது.. குஜராத்ல பகல்லேயே கிராமத்துல லைட் எரியறது நங்கநல்லூர்ல இருந்தே தெரியுது.. பிராங்க்ளினை தவிர மத்த ஜனாதிபதியெல்லாம் வேஸ்ட்டுன்னு தெரியுது.. ஊருக்குள்ளேயே இருக்குற சிட்டி சென்டர் எங்கன்னு தெரியல.. கொடுமை.."] “விசாரிச்சு சொல்றேன் ஸாரு”ன்னு சொல்லிட்டு விசாரிச்சேன். ஐநாக்ஸ் தியேட்டர் பில்டிங்குதான்னு சொன்னாங்க.. நமக்கு ‘குல தெய்வக் கோவிலை’ அடையாளம் காட்டினாத்தானே எல்லாமே தெரியுது.. மறுபடியும் டோண்டு ஸாருக்கு போனை போட்டு சொன்னேன்.. “வந்தர்றேன்..” என்றார்.

ஜூன் 7-ம் தேதி சனிக்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து கிளம்புகின்ற சமயம் பார்த்து வழக்கம்போல என் அப்பன் முருகன் தனது விளையாட்டைக் காட்டிவிட்டான். “ஒரு அர்ஜண்ட் வொர்க்.. நைட்டோட நைட்டா முடிச்சாகணும்..” என்று சொல்லி ஒரு கத்தை பேப்பரை கையில் திணித்தார்கள்.. நானும் வழக்கம்போல மனதுக்குள் முருகனைத் திட்டித் தீர்த்தேன்.

இருந்தாலும், போயே ஆக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியிருந்ததால், 2 மணி நேர பெர்மிஷன் சொல்லிவிட்டு கிளம்பினேன்.

சிட்டி சென்டர் வந்தவுடன் டோண்டு ஸாருக்கு போன் செய்தேன். மிக இரைச்சலுடன் “4-வது மாடிக்கு வாங்க..” என்றார். தியேட்டரில் இருக்கிறார்களோ என்ற சந்தேகத்துடன் 4-வது மாடியில் கால் வைத்தபோதுதான் தெரிந்தது அது Food Court Ground என்று..

குழந்தைகள் ஒரு பக்கம் கம்பி வலைகளுக்குள் கவலையே இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை அழைத்து வந்திருந்த பெற்றோர்கள் ஒரு புறம் அதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.

எங்கே இருக்கிறார்கள் என்று அந்தப் பக்கம், இந்தப் பக்கம் என நோட்டம் விட்டபோது டோண்டு ஸார் மட்டும் பளிச்சென தெரிந்தார். அருகில் சென்றேன்.. சுற்றிலும் ஒரு பத்து பேர் அமர்ந்திருந்தார்கள்.

கருப்பு பனியனில் அம்சமான கலரில், தோற்றத்தில் அழகாக இருந்தார் டுபுக்கு. ‘ஹாய் கோபி’க்குப் பிறகு வலையுலகில் இருக்கும் அழகான ‘கோபியன்’ இவர்தான் என்று நினைக்கிறேன்..

இரண்டு டேபிள்களில் சுற்றிலும் அமர்ந்திருந்தார்கள் நண்பர்கள். எனக்கு இப்போது நினைவில் இருப்பது சிலர்தான்.. மற்றத் தோழர்கள் கோபித்து கொள்ளக்கூடாது.. சட்டென்று நினைவிற்கு வர மறுக்கிறது..

கில்லி பிரகாஷ¤ம், பாஸ்டன் பாபாவையும் உடனேயே அடையாளம் தெரிந்தது.. நண்பர் விக்கியும் இருந்தார். கில்லி கொஞ்சம் மெலிந்திருந்தார்.. பாவம்.. ஏனோ தெரியவில்லை.. பாபா சென்ற வருடம் பார்த்ததைவிடவும் சற்று அழகு குறைவாக இருந்தார். வயது ஏறியதாலோ..?

என் அருகில் நண்பர் சிமுலேஷன். இவரது பெயர் மட்டும்தான் சட்டென்று நமீதா பெயரைப் போல் மனதில் ஒட்டிக் கொண்டது. ஏன் என்றுதான் தெரியவில்லை.

கில்லியார் எனது சுஜாதா பதிவைப் பற்றிச் சொல்லி “அன்னிக்கே நான் போன் பண்ணணும்னு நினைச்சேன்..” என்றார்.. ஏன் பண்ணவில்லை என்பதற்கு காரணம் சொல்வார் என்று எதிர்பார்த்தேன்.. சட்டென்று எஸ்கேப்பாகிவிட்டார். பட்டென்று கையில் ஒரு ஜூஸ் டம்ளரை கொடுத்து உபசரித்தார் சிமுலேஷன்.

இவரும் சுஜாதா பதிவைப் பற்றியே பேசினார். “சுஜாதா மறைவு தொடர்பான செய்திகளில்தான் உங்களைப் பற்றியே கேள்விப்பட்டேன்” என்றேன்.. “நான் அதிகமா எழுதறதில்ல. ஆனா உங்க பதிவை படிச்சுக்கிட்டேதான் இருக்கேன்..” என்றார்.

டுபுக்குவுடன் மீட்டிங்கில் மற்ற பதிவர்கள் மிக பிஸியாக இருந்தார்கள். நேருக்கு நேராக அமர்ந்து மீட்டிங் பேசிக் கொண்டிருந்தார் டோண்டு ஸார்.. அவரை விட்டுட்டுத் திரும்ப முடியுமா? மனுஷன் விடுவாரா அவரு..?

இன்னொரு பதிவர் வளைத்து, வளைத்து புகைப்படங்களை எடுத்துத் தள்ளினார். இங்கே பாபாவும், கில்லியும் சப்ஜெக்ட் டூ சப்ஜெக்ட்டாகத் தாவிக் கொண்டிருந்தார்கள். நான் வழக்கம்போல காதில் விழுந்ததை மட்டும் கேட்டுவிட்டு மற்ற நேரத்தில் வழக்கம்போல ‘சர்வே’ எடுத்துக் கொண்டிருந்தேன்.

என் பின்புறத்தில் காதலர்களான இருவர் ஒரு ஜூஸை யார் வேகமாக உறிஞ்சுவது என்ற போட்டியில் ஈடுபட்டிருக்க.. அந்தச் சத்தமும் என் காதைத் தொட லேசாகத் திரும்பிப் பார்த்தேன். வழக்கம்போல நம்மாளு தோத்துட்டான்..

இப்போது பேச்சு எங்கெங்கோ சுற்றி அரசியல் பற்றி வந்து நின்றது.. காமராஜர், தியாகி ஜெபமணி, பற்றி கில்லியார் எடுத்துவிட அது ராஜீவ்காந்தி கொலை வழக்கு, சி.பி.ஐ. விசாரணை பற்றியெல்லாம் சுற்றிக் கொண்டு சென்றது.

நண்பர் விக்கி எனது குறும்படம் பற்றிப் பேசினார். “அதை ஏன் இன்னமும் வலையேற்றவில்லை..?” என்றார். எனது பிரச்சினையை சொன்னேன். “என்கிட்ட கொடுங்க.. நான் பண்ணித் தரேன்..” என்றார். “பாலாவும் இதையேதான் சொல்லிருக்கார். கொண்டு போய் கொடுக்க நேரமில்லாம இருக்கேன். அதான் பிரச்சினை.. இந்த மாசத்துக்குள்ள எப்படியும் ஏத்திரலாம்..” என்றேன்..

மேற்கொண்டு பேச வேண்டுமெனில் காதில் ஸ்பீக்கர் வைத்துக் கத்தினால்தான் கேட்கும் என்ற நிலைமை.. அவ்வளவுக்கு குழந்தைகளின் கூச்சலும், ஆர்வமும் அதிகரித்திருந்தது.

நண்பர் சிமுலேஷன் சீக்கிரமே விடைபெற்று சென்றார். டுபுக்குவும் இதற்கு மேல் இங்கேயிருந்து கத்த முடியாது என்று சொல்லி “இடத்தை மாத்துவோம்..” என்றார். அதுவரையில் அவருடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தையில் இருந்த டோண்டு ஸாரும் அதனை ஆமோதிக்க கூட்டம் அங்கிருந்து கலைந்தது.

டோண்டு ஸார், தன்னுடைய வயதை குறைத்துக் காட்ட வேண்டி ஒரு அடையாளத்துக்காக ஹாரிபாட்டர் புத்தகத்தைக் கையோடு கொண்டு வந்திருந்தார். எங்கே போனாலும் கையில் ஒரு புத்தகத்தை வைத்திருப்பது இவருடைய வழக்கமாம். “நேரத்தை வீணாக்கக் கூடாது..” என்றார். “என்னதான் பிலிம் காட்டினாலும் 65 வயசானது ஆனதுதான்.. அதை மாத்த முடியாது..” என்றேன்.. சிரித்துக் கொண்டார்.

கீழே இறங்க வரும்போதுதான் கவனித்தேன்.. ஒரு மூலையில் ஒரு கனிவான, மிக, மிக அழகான யுவதி கண்களில் சொட்டு, சொட்டாக நீர் வடிய செல்போனில் யாருடனோ பேசியபடியே அழுது கொண்டிருந்தார். அடப்பாவே.. வர வேண்டியவர் வராமல் ஏமாற்றிவிட்டாரோ என்னவோ?

எஸ்கலேட்டரில் நான் அதிகம் ஏறியவனில்லை. கொஞ்சம் பயம்தான் இன்னிக்கிவரைக்கும். பாதுகாப்பிற்காக முன்னால் டோண்டு ஸாரை போக விட்டு பின்னால் பயத்துடன் கால் வைத்து இறங்கினேன்.. அது ஏன் இங்கே மட்டும் சட்டென்று கால் வர மறுக்கிறது..? புரியவில்லை.

கிரவுண்ட் ப்ளோரில் மெயின் ஹாலில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ‘ஹோலி குரான்’ என்று எழுதப்பட்டிருந்த ஆங்கிலப் புத்தகத்தை பாபாவும், மற்றவர்களும் ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். வழக்கம்போல வாங்காமலேயே டாட்டா சொல்லிவிட்டு வந்தார்கள்..

ரோட்டிற்கு வந்தவுடன் பீச்சிற்கு போகலாம் என்று முடிவெடுத்தோம். அப்போது டோண்டு ஸாருக்கு போன் வர.. அப்போதே நினைத்தேன் “வீட்டம்மா கூப்பிடுறாங்க.. கிளம்புறேன்”னு சொல்வார் என்று.. அதேதான்.. ஒரு வார்த்தையைகூட மாற்றாமல் இதையே சொல்லிவிட்டு கிளம்பினார்.. இந்த வயசுல அவர் நிம்மதியா இருக்காருன்னா, அதுக்கு இதுதான் காரணம்னு நான் நினைக்கிறேன்.. வாழ்க அவர் வீட்டுக்காரம்மா..

கில்லியார் புகைத்த சிகரெட் அந்தக் கால மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களில் அசோகனின் உதடுகளில் புகைந்து கொண்டிருக்குமே அதுபோல, அப்படியொரு நீட்டமாக இருந்தது.. “கல்யாணமாயிருச்சுன்னு சொல்றீங்க.. அப்புறமெதுக்கு இது?” என்ற எனது வேண்டாத அட்வைஸை அவரிடமும் செய்தேன்.. “விடணும்தான் பாக்குறேன்.. முடியல.. முன்னாடி நிறைய.. இப்ப கொஞ்சம் 3 பாக்கெட்டுதான்.. விட்டுறலாம்.. நீங்க ஒண்ணு..” என்று என்னிடமே நீட்டினார். தேவைதான் எனக்கு..!

கில்லியுடன் கொஞ்ச நேரம்.. பாபாவுடன் கொஞ்ச நேரம்.. டுபுக்குவுடன் கொஞ்ச நேரம் என்று பேசியபடியே கடற்கரையை அடைந்தோம். வலைப்பதிவர்களின் தற்போதைய பாராளுமன்ற இடமான, அதே காந்தி தாத்தா சிலையின் பின்புறம் சிமெண்ட் பெஞ்சுகளில் தஞ்சமடைந்தோம்..

பேச்சு சூடு பிடித்தது.. பேச்சுகள் என் அறிவுக்கு அப்பார்ப்பட்டதாக இருந்ததால் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்து வேடிக்கை பார்த்தேன்..

நான் அதிக கமெண்ட்டுகள் போட்டதாக கில்லியார் குற்றம் சுமத்திய போதுதான் ஏதோ ஒரு சான்ஸ் கிடைச்சதேன்னு வாயைத் தொறந்து, “அது இந்த லக்கிலுக் பய, சுகுணா திவாகர் கல்யாணத்திற்குப் போய்ட்டு வந்து எழுதிய பதிவுல, ஒரு ஜாலிக்காக 100 கமெண்டு போடப் போய் அது தொற்றிவிட்டது..” என்றேன்..

இடையில் திடீரென்று விக்கி எழுந்து தன் பேண்ட், பாக்கெட்டுகளைத் துழாவு, துழாவென்று துழாவினார். அவருடைய பைக்கின் சாவி தொலைந்து போய்விட்டதாகச் சொன்னார். தேடிப் பார்த்தும், தடவிப் பார்த்தும் கிடைக்காததால் ஒருவேளை வண்டியிலேயே விட்டிருக்கலாம் என்று தனக்குத்தானே ஆறுதல்பட்டு அமைதியானார்.

பேச்சு சினிமா பக்கம் திசை திரும்பியது.

டுபுக்கு சினிமா பிரியர் போலிருக்கிறது.. நிறைய ஹிந்தி, தெலுங்கு படங்களைப் பற்றிப் பேசுகிறார்... “தெலுங்கு திரைப்படங்கள் நிறைய வித்தியாசமான திரைக்கதையோடு வருகின்றன..” என்கிறார்.

மலையாள சினிமாவில் பிரியதர்ஷனின் ஆதிக்கம் குறைந்தது பற்றி பாபா பேசினார். “பிரியதர்ஷன் ரீமேக் படங்களாத்தான் பண்றார்.. அவர் சமீபமா எடுத்த மலையாளப் படங்கள் எதுவும் நல்லாப் போகலை..” என்றார்.. அவருடைய சூப்பர்ஹிட் பேவரைட் படமான 'சித்ரம்' திண்டுக்கலில் 100 நாட்கள் ஓடியதை நான் சொன்னேன். “மலையாளப் படங்களை தமிழ்நாட்டு பெண்களிடமும் கொண்டு சென்ற படம் ‘சித்ரம்’தான்..” என்றேன். "தலைவர் ரஜினிக்குப் பிறகு எனக்குப் பிடிச்சது மோகன்லால்தான்.." என்றார் பாபா.

“பொம்மரிலு’ படத்தை பார்த்துவிட்டு ‘சந்தோஷ் சுப்பிரமணியத்தை’ பார்க்க முடியவில்லை..” என்றார் டுபுக்கு. “காட்சிக்கு காட்சி அப்படியே டப் செய்திருக்கிறார்..” என்றேன் நான். “அதுவும் நல்லதுதான்.. தமிழுக்கு ஏத்தாப்புல மாத்துறேன்னு எங்கனயாச்சும் கை வைச்சிருந்தா படம் விளங்கிருக்கும்” என்றார் பாபா. பாபாவின் இக்கருத்துக்கு அமோக ஆதரவு கூட்டத்தில். எனக்கும் இது சரியென்றே பட்டது.

'சிவாஜி'யை 'தசவாதாரம்' பீட் செய்துவிடுமா என்று திடீர் கருத்துக் கணிப்பும் கேட்கப்பட்டது. “பிளாக் டிக்கெட் இருக்கின்றவரையில் பீட் செய்தே தீரும். அதனால்தான் அதிகமான தியேட்டர்களில், அதிக பிரிண்ட்டுகள் போடப்பட்டு வருகின்றன..” என்று பாபா புள்ளிவிவரத்தோடு சொன்னார்..

ஆத்மார்த்த நடிகைகளை ரசிப்பதினால் தங்களது இல்லத்தரசிகளிடமிருந்து வரும் எதிர்ப்புகளை எப்படி சமாளிப்பது என்று குடும்பஸ்தர்களான டுபுக்குவும், பாபாவும் பரஸ்பரம் தங்களது வேதனைகளையும், தாங்கள் சந்தித்த சோதனைகளையும் பரிமாறிக் கொண்டார்கள்.. இதை அவர்களே சொல்லித் தொலைத்தால் நல்லது..

அதிலும் இந்த மாதிரியான நேரத்தில் மனைவிமார்கள் அமைதியாக இருந்தாலும், தங்களுடைய வாரிசுகள் எக்குத்தப்பாகப் பேசி மாட்டிவிடுவதைப் பெருமையாகப் பேசிக் கொண்டதைக் கேட்டபோது என் செல்போனில் டேப் செய்யும் வசதி இல்லாததை நினைத்து கடுப்பாகிவிட்டது மனம்.

டுபுக்கு ஸார் சொன்ன ‘அந்த’ மேட்டரை அப்படியே சொல்லலாம்னு பார்த்தா.. அடுத்த தபா வந்தா நம்மளை பார்ப்பாரான்னு சந்தேகமா இருக்கு.. அதுனால வேணாம் விட்டுர்றேன்..

பாபாவும் தன் பங்குக்கு தனது சோகம் ஒன்றை சொன்னார். அதையும் சொல்ல முடியாத சோகம் எனக்கு..

பேச்சு இப்போது வீட்டு வாடகை, நிலம் வாங்குவது என்பதற்கு வர.. “இப்போது சென்னையில் 2000 ரூபாய் வாடகைக்கு ஒரு கக்கூஸ், பாத்ரூம்கூட கிடைக்காது..” என்றேன்.. எல்லாம் ‘அவர்களால்தான்’(தனிப்பதிவு காத்திருக்கு) என்றேன்.

“இந்த வீட்டு வாடகைப் பிரச்சினை பரங்கிமலையிலிருந்து பாஸ்டன்வரைக்கும்கூட இருக்கு..” என்றார் பாபா. அவரும் அதே பிரச்சினையால் தினமும் 3 மணி நேரம் கூடுதலாக டிராவல் செய்வதாகச் சொன்னார்.. என்ன கொடுமை பாபா இது?

பேச்சுக்கள் அப்படியே தொடர்ந்து போய்க் கொண்டிருக்க.. பாபாவுக்கு போனில் அழைப்புகள் வந்தபடியே இருந்தன. டுபுக்குவும் கிளம்ப வேண்டிய சூழல் வந்துவிட்டதை உணர்ந்து "விடைபெறலாம்" என்றார்.

நாளைய சந்திப்புக்கு வரும்படி அவரை அழைத்தார் பாபா. நானும்தான்.. “நேரமிருந்தா வர்றேன்.. ஏற்கெனவே திட்டமிட்ட ஒரு நிகழ்ச்சி இருக்கு..” என்றார் டுபுக்கு. “வரப் பாருங்க” என்றேன்.. ஆனால் நானே மறுநாள் போக முடியவில்லை என்பது ஒரு சோகம்..

நான் அலுவலகத்திற்கு மீண்டும் சென்று பணி செய்ய வேண்டியிருந்ததால் கில்லியாரை ஏற்றிச் செல்ல எனது மெர்சிடிஸ் பென்ஸிற்கு கொடுத்து வைக்கவில்லை. “அடுத்த முறை போலாம் ஸார்..” என்று சொல்ல கில்லியார் நகரப் பேருந்தைத் தேடிப் போக.. இந்தப் பக்கம் பாபா நடந்தே போக முடிவு செய்து விடைபெற்றார். “நாளை சந்திக்கிறேன்” என்று சொல்லிவிட்டு பை சொன்னேன்..

நண்பர் டுபுக்கு மற்றும் விக்கியுடன் பேசியபடியே வண்டிகளை எடுப்பதற்காக மீண்டும் சிட்டி சென்டருக்கு வந்தோம். இப்போதைக்கு இறுதியாக ஒரு முறை டுபுக்குவுடன் பேசி விடைபெற்றேன்.

விக்கி “சாவியை நான் தேடிக் கொள்கிறேன்.. பை..” என்று சொல்லிவிட்டுப் போனார்.

டுபுக்குவும் நண்பர்களுடன் கிளம்பிச் செல்ல.. நானும் அலுவலகம் திரும்ப அவசரமாக இருந்ததால் உடன் திரும்பிவிட்டேன்.

அலுவலகம் திரும்பியவுடன்தான் யோசித்தேன்.. விக்கிக்கு என்ன ஆச்சோ? கூடப் போய் கொஞ்சம் பார்த்திருக்கலாமே என்று..

“அறிவு எப்பவுமே எனக்கு மட்டும் லேட்டாத்தான் வேலை செய்யுது..”

என்ன செய்யறது..?

நண்பர் விக்கி மன்னிப்பாராக..!

மார்ச்-30-காந்தி சிலை-பதிவர் சந்திப்பு

01-04-2008

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பதிவு எழுதுவதே எனக்கு சோதனையான விஷயம். அதிலும் ஒரு நாளைக்கு நான்கைந்து பதிவுகளையும் போட்டு, குறைந்தபட்சம் 100 பின்னூட்டங்களையும் இட வேண்டுமெனில் நான் சோத்துக்குச் சிங்கியடிக்காமல், கவலைப்பாடு இல்லாதவனாக இருக்க வேண்டும்.

அப்படிப்பட்டவர்களையும் வலையுலகில் பார்த்து, பார்த்து நான் விட்ட பெருமூச்சுதான் நிறைய பேரை வெளிநாட்டுக்குத் துரத்தியிருக்கிறது என்று நினைக்கிறேன்.

வலையுலகில் இதுபோல் கும்மாங்குத்தாக ஒட்டு மொத்தமாக பின்னூட்டங்களைப் போட்டுத் தாக்கும் பதிவர்கள் முக்கால்வாசி பேர் வெளிநாடுகளில்தான் வசிக்கிறார்கள். வளைகுடா நாடுகளில்.. அதிலும் துபாய், அமீரகத்தில்தான் அதிகம் என்று நினைக்கிறேன்.

பின்னூட்டங்கள் போடுவதிலும்கூட ஒரு நுணுக்கம் வேண்டும். அது என்னைப் போன்ற அரைகுறைகளுக்குத் தெரிவதில்லை. படித்தவுடனேயே குபீர் சிரிப்பை வரவழைப்பது எப்படி என்பதை வலையுலக ‘வருத்தமில்லாத வாலிபர் சங்கத்தினரிடமும்’, ‘பாவையர் சங்கத்தினரிடமும்’ இன்ன பிற சங்கத்தினரிடமும்தான் கேட்க வேண்டும். மற்றவர்கள், ‘வந்தால் ஏதோ ஒண்ணு போட்டுக்கோ’ என்ற ரகம்தான்..

அப்படி நான் பொறாமைப்பட்ட நபர்களில் முக்கியப் புள்ளிகளான அபிஅப்பாவும், குசும்பனும் நேரில் வருகிறார்கள் என்பதால் கண்டிப்பாகத் இந்த நிகழ்வைத் தவிர்க்கக்கூடாது என்று நினைத்து, மார்ச்-30 சென்னை மெரீனா கடற்கரை காந்தி தாத்தா சிலை அருகே நடந்த வலைப்பதிவர் கூட்டத்திற்கு நானே, நேரில், நிஜமாகவே ஆஜரானேன்.

வழக்கம்போல என் அப்பன் முருகப் பெருமான் கொடுத்த கொடுஞ் சோதனைகளையெல்லாம் அவன் தயவாலேயே முறியடித்து, மாலை 4 மணியளவில் காந்தி தாத்தா சிலை அருகே சென்றடைந்தேன்.

ஏற்கெனவே சொல்லியிருந்ததைப் போல இந்த மீட்டிங்கிற்கு முன்னதாக ஒரு மணி நேர ‘வலையுலக டியூஷனு’க்கு வருவதாகச் சொன்ன புதிய பதிவர் ஒருவர் தாமதிக்க.. அங்கே.. இங்கே.. என்றெல்லாம் கண்களை ஓடவிட்டு.. பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தேன்.

காந்தி தாத்தா சிலையருகே முன்பே சொல்லி வைத்தாற்போல் ஒரு குஜராத்தி குடும்பம்.. ஏதோ ‘பொண்ணு பார்க்கின்ற வைபவம்’(நாடு ரொம்ப முன்னேறிருச்சு) போல் தெரிந்தது.. அப்போதுதான் அறிமுகம் ஆகி.. ஒருவருக்கொருவர் கட்டித் தழுவிக் கொண்டார்கள்..

தத்தமது பிள்ளைகளை அறிமுகம் செய்து வைத்தார்கள். பெண்ணோ அம்சமாக அந்தக் கால ‘டிம்பிள் கபாடியா’ போல் சிக்கென்ற உடையில் ‘சிக்கன’மாக இருந்தார். பையன் ‘எதிர்நீச்சல்’ மாது போல் இருந்ததுதான் கொடுமை.. சரி.. எதையோ பேசி முடித்துக் கொண்டால் நல்லதுதான் என்று நினைத்து வேறு பக்கம் பார்த்தேன்.

‘எங்கெங்கு காணினும் கடலையடா’ என்ற நோக்கில், எதற்கும் அஞ்சாத கழகக் கண்மணிகள் எதிர்காலத்தை மும்முரமாக முத்துக் குளித்துத் தேடிக் கொண்டிருந்தார்கள். எங்கே, எதை என்று மட்டும் கேட்காதீர்கள் ப்ளீஸ்..

மணலில் இறங்கி கொஞ்ச தூரம் நடந்தால் பார்க்க இரண்டு கண்கள் போதாது என்ற நிலைமை.. மூஞ்சியை எங்க வைச்சிருக்காங்கேன்னே தெரியலடா சாமி.. அந்த போஸ்ல உக்காந்திருந்து வயித்தெரிச்சலை கொட்டுறானுக..

இதுக்குத்தான் காந்தி தாத்தாகூட கடலை பார்த்து நிக்காம ‘போங்கடா.. பொசக்கெட்ட பயலுகளா’ன்னுட்டு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைப் பார்த்து திரும்பிட்டாரு போல..

சரி.. இதுக்கு மேல போனா நமக்கு ராத்திரி சாப்பாடும் உள்ள இறங்காது என்பதால் அப்போதைக்கு வயிற்றுக்குப் பசியாற்ற சுண்டல் வாங்கிவிட்டுத் திரும்பினேன்.

அப்போது, கனஜோராக ‘வலையுலக வசிஷ்ட மாமுனி’ மா.சிவக்குமார் கையில் ஹெல்மட்டோடு அசத்தலாக எதிரில் வந்தார். படிக்கட்டுக்களில் அமர்ந்திருந்த தம்பி வினையூக்கியை கை காட்டினார். “என்ன ஸார்.. நாங்களே இப்பத்தான் வர்றோம்.. அதுக்குள்ள நீங்களா சாப்பிடுறீங்க?” என்றான் தம்பி வினையூக்கி. ‘வயிறுன்னு ஒண்ணு இருக்குதே’ன்னேன்.. வசிஷ்டரும் தன் பங்குக்கு சுண்டலை வாங்கிக் கொண்டு வந்தார்.

தாத்தாவின் சிலைக்குப் பின்புறமிருந்த அரைவட்ட பெஞ்சில் அமர்ந்தோம். சாப்பிடக்கூடவிடல தம்பி வினையூக்கி. “பக்கம், பக்கமா எழுதுறீங்களே” என்று வழக்கமான பொறாமையையே காட்டினான் தம்பி..

அவனுக்கு என் மீது ஒரு கோபம்.. அவன் கதையை மட்டும் படிக்கிறேன். கமெண்ட்டு மட்டும் போட மாட்டேங்கிறனேன்னு.. தப்புதான்.. ஆனா என்னமோ.. கதையும், கவிதையும் மட்டும் இந்த மரமண்டைக்குள்ள ஏறவே மாட்டேங்குது.. தம்பி அரசியல் எழுதினா முதல் பின்னூட்டம் நான்தான போடுவேன்.. அதையும் சொல்லிப்புட்டேன்.

நம்ம ‘முனிவர்’ வழக்கம்போல ‘புன்னகை மன்னன்’ என்ற இயற்பெயரைத் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் எதற்கெடுத்தாலும் புன்னகையை சிந்தியபடியே இருந்தார்.

இந்த நேரத்தில் சிவபூஜையில் புகுந்த கரடியாக, பாலபாரதி சீடர்கள் லக்கி, நந்தா படை சூழ வந்தார்.

பாலபாரதி முதலில் வழக்கம்போல் கொஞ்சினார். பின்பு உடனேயே “ங்கொய்யால..” என்றார். இதற்கான வாய்ப்பைத் தந்தவர் நண்பர் பைத்தியக்காரன்.

கையில் ஒரு புத்தக பையுடன் வந்திருந்தார் பைத்தியக்காரன். அந்தப் பையைப் பார்த்தவுடன் பாலபாரதிக்கு பிரஷர் எகிறிவிட்டது. “எனக்குத்தான்.. நான்தான்..” என்றெல்லாம் ஏதேதோ சொல்லி பைத்தியக்காரனை எக்கச்சக்க டென்ஷனாக்கி கத்திக் கொண்டிருந்தார். கடைசியில்தான் தெரிந்தது.. அது குசும்பனுக்குக் கொடுக்கப்பட வேண்டிய புத்தகப் பரிசு என்று..

இன்னும் நிறைய புத்தகங்களை வாங்கச் சொல்லியிருந்தாராம் பாலா. ஆனால் கொண்டு வரப்பட்டதோ கொஞ்சம்தான் என்பதால் கொஞ்சம் மூட்அவுட்..(சுண்டலையும், மீன் ரோஸ்ட்டையும் இதே மாதிரி சண்டை போட்டு எல்லாருக்கும் வாங்கிக் குடுத்திருந்தா நல்லாயிருந்திருக்கும்)

இடையில் எனது இரண்டு பக்கமும் உட்கார்ந்திருந்த முனிவரும், வினையூக்கியும் எதையோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஒண்ணும் இப்ப ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது.. ஆனா.. ‘டோண்டு ஸார்..’ ‘டோண்டு ஸார்’ என்று சொன்னது மட்டும் லேசா நினைவுக்கு வருது..

தம்பி லக்கிலுக் அன்றைய வலையுலக அரசியல் சூழ்நிலைகளை பளிச்சென்று சிம்பாலிக்காக காட்டுவதைப் போல் ‘தமிழ்மணம்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட டீ ஷர்ட்டை அணிந்து வந்திருந்தான். “என்னடா? நக்கலுக்கா..?” என்றேன்.. “இல்ல.. இல்ல..” என்று கட்சிக்காரன் மாதிரியே முழு பூசணிக்காயை சோற்றில் புதைத்தான்..

லக்கியைப் பார்த்தவர்கள் அனைவருமே இதைத்தான் முதலில் கேட்டார்கள். கடைசிவரையிலும் அனைவரிடமும் கூசாமல் இதையேதான் திருப்பித் திருப்பிச் சொன்னான்.. நிறைய டிரெயினிங் போலிருக்கு..

பாலாவும், லக்கியும், பைத்தியக்காரனும் அப்போது எங்களை அம்போவென்று விட்டுவிட்டு டீ குடிக்கக் கிளம்பிச் சென்றார்கள். மாட்டினோம் ஜென்டிலாக வந்தமர்ந்த கே.ஆர்.அதியமானிடம்..

மனிதர் ஆல் இண்டியா ரேடியோ விவிதபாரதி ஸ்டேஷனைப் போல் Non Stop-ஆக பேசிக் கொண்டே போகிறார்.. எடுத்த எடுப்பிலேயே ‘பார்ப்பான் யார்? பார்ப்பனீயம்னா என்ன?’ என்று பேச்சைத் துவக்க.. எனக்கு அந்த மாலை வெயில்லேயே குளிர் காய்ச்சல் வரும்போல இருந்தது.

ஏதாவது புரியறாப்புல இருந்தா நாம பேசலாம்னு நினைச்சா.. ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் மாதிரி ஸ்பீடை கூட்டிக்கிட்டே போயிட்டாரு அதியமான். புரியணும்னா ‘பெரியவர்’ வந்து டிரான்ஸ்லேட் செஞ்சாத்தான் புரியும்ன்ற மாதிரி இருந்துச்சு..

நல்லவேளை நான் வாய் மட்டுமே பார்த்தேன். தம்பி வினையூக்கி ஒரு ரெண்டு நிமிஷம், நந்தா ஒரு ரெண்டு நிமிஷம்.. ‘முனிவர்’ ஒரு நாலு நிமிஷம்னு சமாளிச்சுப் பார்த்தும் முடியாமல் இருந்தச் சூழலில்.. நல்லவேளையாக பாலா, முருகன் மாதிரி திரும்பி வந்து எங்களை காப்பாற்றினார்..

ஆனாலும் அவரிடமும் அதியமான் ‘அந்த’ மேட்டரை எடுத்துவிட.. பாலாவும், அதியமானும் கொஞ்ச நேரம் வேகமாக பேசிக் கொண்டார்கள். ‘அதெல்லாம்’ இங்க எதுக்கு? மறுபடியும் யாராச்சும் சூட்டைக் கிளப்பி போஸ்ட் போட்டு.. நமக்குப் பிரச்சினையாயிரும்.. விட்ருவோம்..

தம்பி நந்தாவிடம் ‘பாப்லோ நெரூதா பற்றி வலைச்சரத்தில் எழுதியிருந்த பதிவைப் படித்தேன். நன்றாக இருந்தது’ என்று சொன்னேன். பின்னூட்டம் போட்டிருக்கலாமே என்று தம்பி நினைப்பானோ என்னவோ, என்று நினைத்து.. அதற்கொரு தோதான பொய்யைச் சொல்லி அப்போதைக்குத் தப்பித்தேன்.

அடுத்தப் பதிவராக நித்யகுமாரன் வந்தார். புதிய பதிவர் இவர். நிறைய கவிதைகள் எழுதத் துடிக்கும் ஆர்வமுள்ளவர். அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தேன்.

தொடர்ந்து குப்புச்சாமி செல்லமுத்து வந்தார். “பதிவுகள் எழுதறதில்லை ஸார்.. ஆனா நிறைய படிக்கிறேன்..” என்றார்.. “நீங்களும் எழுதுங்கள்” என்றேன்.. ஏனோ மனிதர் தயங்குகிறார். அரசியல் தளங்களை மட்டுமே படித்திருப்பார் போலும்..

பின்பு NHM நாகராஜன் வந்தமர்ந்தார். பாலா அறிமுகப்படுத்தி வைத்தார். ஒரு மாதத்திற்கு முன்பாக பாலாவிடம் புலம்பியதையே இவரிடமும் புலம்பினேன்..

“என்னுடைய inscript method-ஐ இதில் சேர்த்து கொடுங்கள்” என்றேன். நாகராஜ் பாலாவிடம் கேட்க.. பாலா, “நான் செஞ்சு பார்த்தேன் தல.. ஒண்ணும் ஒர்க்அவுட் ஆகலே.. நீங்களாச்சு.. அவராச்சு..” என்று சொல்லி என்னைக் கை காட்டி, கை கழுவிவிட்டார். “இன்னும் 3, 4 நாள்ல முடிச்சுத் தர்றேன்..” என்றார் நாகராஜ். கொஞ்சம் நிம்மதி வந்தது எனக்கு..

“ஏன் இது விண்டோஸ் 98-ல வொர்க் ஆக மாட்டேங்குது.. நான் அதுதான் வைச்சிருக்கேன். அதையும் கொஞ்சம் மாத்திக் கொடுங்களேன்” என்றேன்.. கேட்டு முடிப்பதற்குள் தலையாட்டி மறுத்த நாகராஜ். “நோ ஸார்.. அது பெரிய வேலை.. மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கணும்.. நீங்க XPக்கு மாறிருங்க..” என்று திட்டமாகச் சொல்லிவிட்டார்.

பாலபாரதிக்கு போன் மேல் போன் வந்தபடியே இருந்தது.. “காந்தி சிலைக்குப் பக்கத்துல..” என்று 30 முறையாவது சொல்லியிருப்பார். பரவாயில்லை.. ஸ்கூல்ல படிக்கிறப்ப தாத்தா பேரை சரியாச் சொல்லாம விட்டிருப்பாரு போல.. அதான் முருகனா பார்த்து இப்படியொரு தண்டனையைக் கொடுத்திட்டான்னு நினைக்கிறேன்.

ஜ்யோவ்ராம் சுந்தரும், ஆடு மாடு என்ற பதிவரும் வந்தார்கள். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன் என்பதோடு அவர்கள் வேறொரு முற்போக்கு, பின்னவீனத்துவ கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டதால் தொடர்ந்து பேச முடியவில்லை.

இடையிடையே லக்கிலுக்கின் போனில் குசும்பன் வந்து “நான் கிண்டில இருக்கேன்.. சைதாப்பேட்டைல இருக்கேன்.. எப்படி வரணும்?” என்று கேட்டு கொண்டிருந்தார். தம்பியும் மகா பொறுமைசாலியாக பதில் சொல்லிச் சொல்லிக் களைத்துக் கொண்டிருந்தான்.

அடுத்த விருந்தினரான அபி அப்பாவும் எடுத்த எடுப்பிலேயே “பாண்டிச்சேரில இருந்து கிளம்பிட்டேன்..” என்று சொல்ல.. “நீங்க எங்க இருந்து வேண்ணாலும் கிளம்புங்க சாமி.. ஆனா யாருன்னு மொதல்ல சொல்லிட்டு அப்புறமா பேசுங்க..” என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் லக்கி.

இதே மாதிரி, கூட்டத்திற்குள் வந்து சேரும்வரை அபி அப்பா படுத்திய பாட்டை லக்கிலுக் ஜென்மத்தில் மறக்க மாட்டான் என்று நினைக்கிறேன்.

கடைசியாக அதையும் சொல்லிச் சொல்லிப் புலம்பினான்.. “பாண்டிச்சேரில ஒரு அபி அப்பா.. ஈ.ஸி.ஆர். ரோட்டுல ஒரு அபி அப்பா.. கிண்டில ஒரு அபி அப்பா.. சைதாப்பேட்டைல ஒரு அபி அப்பா.. எத்தனை பேரய்யா நாம கூப்பிட்டோம்..” என்ற புலம்பல் வேறு..

ஆனாலும் ஒவ்வொரு போன் கால் இறுதியிலும் மறக்காமல் அந்த கேன் விஷயத்தை லக்கி ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது வேறு விஷயம்.

வலையுலக நக்கல் மன்னன் குசும்பன் திடீரென்று பிரசன்னமானார். பெல்லி டான்ஸ் பதிவில் பார்த்ததுக்கும் நேரில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. இதையேதான் லக்கியும் சொன்னான். பெல்லி டான்ஸ் பதிவில் நான் சத்தியமாக குசும்பனை மட்டுமே பார்த்தான் என்பதையும் இங்கே சொல்லிக் கொள்கிறேன்.

குசும்பன் அநியாயத்திற்கு அழகாக இருந்ததையும் சொல்லித் தொலைய வேண்டும். இந்த மாதிரி நக்கல் பிடிச்ச ஆசாமிகளெல்லாம் எதுகை, மோனையா இருப்பாங்கன்னு நினைச்சா.. இங்க அது, ஏறுக்கு மாறால்ல இருக்கு.

குசும்பன் என்னிடம் இதையே மாத்திக் கேட்டார்.. “நீங்க ஏன் ஸார் இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கீங்க?” என்று.. “இல்லைன்னா இங்கன குப்பை கொட்ட முடியாது சாமி..” என்று லெக்சர் அடித்து ஓய்ந்தேன். ‘அஞ்சாதே விமர்சனக் கட்டுரையும், சுஜாதா பற்றிய கட்டுரையும் நல்லாயிருந்தது ஸார்’ என்றார்.

ஆங்காங்கே அமர்ந்திருந்த அனைவரும் பக்கத்த்தோடு பக்கம் பேசிக் கொண்டிருக்க.. ‘வசிஷ்ட மாமுனிவர்’ நான் முன்பே எனது முந்தையப் பதிவில் சொல்லியிருந்ததைப் போல தனது வசூலைத் துவக்கினார்.

தமிழ்99 தட்டச்சின் மாதிரி வடிவத்தை பிரிண்ட் செய்து கொண்டு வந்திருந்தார். அனைத்துமே கருப்புக் கலரில் இருந்தன. ஒரு பேப்பரில் இரண்டு பிரதிகளை ஒட்டியிருந்தார்கள்.

முனிவர் அனைவரிடமும், “இந்தாங்க.. வைச்சுக்குங்க..” என்று கையில் திணித்துவிட்டு கடைசியில் தட்சணையை கறாராக வசூலித்துவிட்டார். என்னிடம் 100 ரூபாய் கேட்பேன் என்று சொல்லியிருந்தார். ஆனால், நான் ஒன்று மட்டுமே வாங்கிக் கொண்டு எஸ்கேப்.. அந்த மட்டுக்கும் சந்தோஷம்.

குசும்பனும், பதிவர் சந்தோஷ¤ம் மிக நெருக்கமாகிப் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் வட்டம் பெருகியது.. தள்ளித் தள்ளி உட்கார்ந்திருந்த அதியமான் திடீரென்று பாலாவிடம் எதையோ கேட்கப் போய்.. அங்கேயிருந்தால் மறுபடியும் மாட்ட வேண்டுமே என்பதற்காக வரப் போகும் சுனாமியை அறியாமல் வேறிடத்தில் போய் அமர்ந்தேன்.

வந்தது சுனாமி.. ஒன்றல்ல இரண்டு. முதல் சுனாமி ‘பெரியவர்’. அவர் வருவதற்கு ஒரு நிமிடம் முன்புதான் தம்பி லக்கிலுக், “இன்னும் ஸார காணலியே..” என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவ்ளோ பாசமாம்..

‘பெரியவர்’ வந்தமர்ந்த வினாடிகளில் அவருக்கு போன் வந்தது. ஈரோட்டிலிருந்து வால்பையன் அழைத்தார்.. போன் என் கைக்கு வர வால்பையனுடன் நான் போனில் பேசினேன். “நேரில் நிச்சயம் சந்திக்க வேண்டும்..” என்று சொன்னேன்.. என்னைத் தொடர்ந்து அதியமானும் பேசினார்.

சுண்டல், கடலை விற்ற பையன்களுடன் முன்பே ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை செய்திருந்தோம். கால்மணி நேரம் கழித்து வாங்கிக் கொள்கிறோம் என்று.. ஆனால் திடீரென்று எனக்கு பசிப்பதைப் போல் தோண.. பின்னால் வந்து நின்ற ஒரு பையனிடம் கடலை கேட்டேன். அவ்வளவுதான்.. முன்பு ஒப்பந்தம் செய்த பையன்கள் சண்டைக்கு வந்து மல்லுக்கட்டி நின்றார்கள்.

வலையுலக மக்கள் பேசுவதே கேட்காத நிலையில் இப்போது இவர்களும் ஆளாளுக்கு பேச பாலா எரிச்சலாகிவிட்டார். தம்பி வினையூக்கி ஒரு வழியாக சமாளித்து, “ஒவ்வொருவரும் 4 பொட்டலங்களைக் கொடுத்துவிட்டுப் போங்க..” என்று சமரசம் செய்யப்பட்டு கடலை விநியோகம் நடந்தது. பில்லில் கொஞ்சம் நானும், பாதியை பெரியவரும் சேர்ந்து கொடுத்தோம்.

பெரியவர் என்னிடம், “என்ன எழுதியிருந்தீங்க முந்தின பதிவுல? ‘தளபதி’ பட டயலாக் எதையோ என்கிட்ட கேட்பேன்னு சொல்லியிருந்தீங்களே.. என்ன? எனக்குப் புரியல..” என்றார்.. என்னத்தை சொல்ல.. பதிலே சொல்லாமல் சிரித்து மழுப்பிவிட்டு எஸ்கேப்பானேன்.. அதன் பிறகு இறுதிவரையில் அவர் கண்ணில்படவேயில்லை.

‘அறிவுத்திலகம்’ வழக்கம்போல ‘மப்பு மாப்ளை’யுடன் ஜோடியாக வந்தார். பார்க்க கொஞ்சம் இளைத்திருந்தார். இந்த வாரம் முழுக்க மண்டையடியான மேட்டர்களை எழுதியிருந்ததால் கொஞ்சம் களைத்துப் போயிருந்தார். டீ ஷர்ட்டில், இன் செய்து புது மாப்பிள்ளை தோற்றம் வந்திருந்தது.

குசும்பன் இப்போதும் ஒவ்வொருவரிடமும் பக்கத்தில் சென்று பவ்யமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். என்ன அடக்கம்? என்ன பணிவு?

'அறிவுத்திலகம்', பாலாவிடம் “மொதல்ல எல்லாரும் அறிமுகப்படுத்திக்கலாமே..” என்றார். பாலா முதல் நபராக ஆரம்பித்து வைத்தார். “பாலா..” என்றதுமே “பின்னூட்ட பாலாவா..?” என்று யாரோ கேட்டுத் தொலைக்க.. கண்ணு ரெண்டும் வெளில வர்ற மாதிரி முறைச்சுப் பார்த்தார்.

அறிமுகப் படலம் முடிந்ததும் அவரவர் தோதான கூட்டணியில் இணைந்து கொண்டு பேசத் துவங்கினார்கள். நான் முன்பே சொன்ன பின்னவீனத்துவ குழு, அவ்வப்போது எழுந்து போய் தனியே பேசத் தொடங்கியது.. கூட்டணியை பார்த்துதான் எனக்கு திகைப்பாக இருந்தது..

பைத்தியக்காரன், 'அறிவுத்திலகம்', ஜ்யாவ்ராம் சுந்தர், ஆடுமாடு, ‘மப்பு மாப்ளை’ என்று எப்போதெல்லாம் வெண்குழல் பத்த வைக்க தோன்றியதோ.. அப்போதெல்லாம் தனியாக போய் பேசிக் கொண்டேயிருந்தார்கள்.

‘முனிவர்’, ‘பெரியவரின்’ அருகில் சென்று பேச்சைத் துவக்கினார். அது சுவாரஸ்யமானதாக இருந்தது என்று நினைக்கிறேன். ஏனெனில், ‘முனிவர்’ அந்த சீட்டிலிருந்து அடுத்த அரை மணி நேரத்திற்கு எழவில்லை.

நண்பர் ஆழியூரான் ஏதோ சினிமா தியேட்டருக்கு வருவதைப் போல் மூச்சு வாங்கி வந்து நின்றார். என்னவென்று தெரியவில்லை.

‘ஆதிஷா நான்தான்’ என்று கையை நீட்டி பிரசன்னமானார் பதிவர் ஆதிஷா. பார்க்க சின்னப் பையனாகத் தெரிந்தார். ஆனால் பின்பு விசாரித்து பார்த்ததில் ‘பெரியவரின்’ அறிமுகமாகம் இவர்.. கேட்டவுடனேயே ஒரு ஸ்டெப் பின்னால் போய் நின்றேன்.. புரிந்து கொண்டு சிரித்தார். இது போதும் அவருக்கு.. இவர் பிழைத்துக் கொள்வார். நெஞ்சுக்கு நிம்மதி.

பதிவர் முரளிகண்ணன் நிறைய பேசினார். எனது பதிவுகளை தவறாமல் படித்து வருவதாகச் சொன்னார். அப்படி படித்தும் என்னுடன் பேச வந்த தைரியத்தை என்னவென்று சொல்வது..? சுஜாதா பதிவையும், அஞ்சாதே பதிவையும் பற்றியும் பேசினோம். தான் நிறைய எழுதுவதில்லை என்றார்.

தனக்கு “வீட்டுக்கு வீடு லூட்டி’ சீரியல் ரொம்பப் பிடித்தது..” என்றார். “நீங்க எழுதினதுன்னு படிச்ச பின்னாடி ரொம்ப ஆச்சரியமாப் போச்சு..” என்றார். அது பற்றி நிறைய பேசினோம். இதுக்கு மேல அதைப் பத்தி எழுதினா தற்புகழ்ச்சியாயிரும். அதுனால விட்ருவோம்.

குசும்பன் திருமணப் பத்திரிகைகளை வழங்கினார். தெரியாதவர்கள் பெயர்களைக் கேட்டு எழுதிக் கொடுத்தார். நான்கூட சொல்லிப் பார்த்தேன். “எதுக்கு தலைவா வேஸ்ட்டு பண்றீங்க? அதான் வாய்ல சொல்லிட்டீங்களே.. போதுமே” என்று.. அவருக்கு மனசு கேட்கவில்லை போலும்..

பாலா குசும்பனை அழைத்து நடுநாயகமாக நிற்க வைத்து செல்லமுத்து குப்புசாமி மூலமாக புத்தகங்களை பரிசாக வழங்கினார். நானும் ஒரு பரிசை குசும்பனிடம் கொடுத்தேன். எதிர்பாராத சந்தோஷத்தில் பெற்றுக் கொண்டார்.

குசும்பனிடம், “இப்பவே போன் பில் எவ்ளோ ஆச்சு?” என்றேன் சுற்றிவளைத்து.. புரிந்து கொண்ட குசும்பன், “அதுல செலவழித்த காசுக்கு பெசன்ட் நகர்ல வீடே வாங்கிருக்கலாம். அவ்ளோ ஆச்சு” என்று அழுகாமல் சொன்னார் குசும்பன். மணமகளும் அவருடைய உறவினர்தானாம்.. “சின்ன வயதிலிருந்தே தெரியும் ஸார்..” என்றார். வாழ்வாங்கு வாழட்டும் என்று வாழ்த்துகிறேன்..

யாரோ ஒருவர் தாவிக் குதித்து, லாங் ஜம்ப்பெல்லாம் செய்து எங்களை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன் அவராகத்தான் இருக்க முடியும் என்று நினைத்தேன். அவரேதான்.. “இவர்தான் அபி அப்பா” என்று குசும்பன் அறிமுகப்படுத்தினார்.

அபி அப்பா கலகலப்பாகவே ஆரம்பித்தார் தனது பேச்சை.. மாயவரத்திலிருந்து நேரடியாக வந்ததாக காந்தி தாத்தாவிடம் மட்டும்தான் அவர் சொல்லவில்லை. மற்றபடி எல்லாரிடமும் இந்தக் கதையைச் சொல்லிவிட்டுத்தான் தன் பெயரையே சொன்னார்.

பாலா, அபி அப்பாவை பார்த்ததும் கட்டியணைத்துக் கொண்டு முத்தமழை பொழிந்தார்.

பாலா, ‘பெரியவரின்’ முன்பாக ‘பரதநாட்டியம்’, ‘குச்சுப்புடி’, ‘கதகளி’ என்று பலவித டான்ஸ்கள் செய்து கொண்டிருந்தார். என்னவென்று கூர்ந்து கவனித்தபோது பேசிக் கொண்டிருந்தார்களாம்.. இப்படியா..? பாலா மிகுந்த சந்தோஷமா இருந்த தருணம் அது..

பெரியவரும் நாகராஜும் ரொம்பவே ஆர்வமாக பேசிக் கொண்டிருந்தார்கள். நிச்சயம் அது NHM பற்றித்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதேதான் என்று அவரே எழுதியிருக்கிறார்.

பின்னவீனத்துவ கூட்டணிகள் விரிந்து கொண்டும், சுருங்கிக் கொண்டும் இருக்க.. எல்லா இடத்திலும் அதியமானின் வெண்கலக் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது.

இடையிடையே ஒட்டுக் கேட்ட போது, ‘உக்ரைன்’, ‘ரஷ்யா’, ‘ஸ்டாலின்’, ‘ஜார் மன்னன்’ என்றெல்லாம் கெட்ட வார்த்தைகள் காதில் விழுக.. இது நமக்கான இடமில்லை என்று சொல்லி சற்று தள்ளியே நின்றிருந்தேன்.

அதியமான் சிங்கிள்மேனாக ஆடிக் கொண்டிருந்த இடத்திலெல்லாம் ‘பெரியவர்’ முன்னே வந்து அவருக்கு கை கொடுத்துக் கொண்டிருந்தார். இதுகூட செய்யலைன்னா எப்படி?

அதுலேயும் ‘உக்ரைன்’ பேச்சைவிட ‘உலகமயமாக்கல்’ பேச்சுதான் டாப்.. அதியமான் விக்கிபீடியாவை கரைத்துக் குடித்திருப்பார் போலும்..
எல்லாவற்றுக்கும் ஒரு உதாரணத்தைச் சொல்லி அடுத்த கருத்தைச் சொல்ல முடியாதபடிக்கு பேசுகிறார்.

ஆசிரமத்தில் 108 பிள்ளைகள் காத்திருப்பதாலும்.. அவர்களுக்குச் சமைத்துப் போட்டுவிட்டு தானும் சாப்பிட வேண்டும் என்கின்ற ஆத்திர, அவசரம் இருந்த காரணத்தாலும் வசிஷ்ட மாமுனிவர் பாதியிலேயே விடைபெற்றார். உடன் அழைத்து வந்த காரணத்தால், தம்பி வினையூக்கியும் அவருடனேயே சென்றுவிட்டான்.

தொடர்ந்து அடுத்த ஆளாக, கல்யாணம் முடிந்து மறுவீடு செல்லும் மாப்பிள்ளை, தன் வீட்டில் ‘சந்தோஷமாக’ விடைபெறுவதைப் போல் நண்பர் பைத்தியக்காரன் ஒவ்வொருவரின் தோளைத் தட்டித் திருப்பி “நான் போயிட்டு வரேன்..” என்று சொல்லிவிட்டுப் போனார்.

அபிஅப்பாவிற்கு நான் ஒரு நினைவுப் பரிசை பண்போடு வழங்கினேன். அன்போடு பெற்றுக் கொண்டார். அபி அப்பாவை கொஞ்சம் தனியே தள்ளிக் கொண்டு போய் பேசினேன்.

“உங்களுடைய கும்மி டீம் என்ற குரூப் இருப்பதால்தான் வலையுலகத்தில் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு கொஞ்சம் ரிலாக்சேஷனும், ஆர்வமும் இருக்கிறது..” என்றேன்.

தனது வலையுலக தம்பிகளையும், தங்கைகளையும் பற்றி அபிஅப்பா சொன்னபோது அவருக்குத் தொண்டை அடைத்து, கண்களில் கண்ணீர் கட்டிக் கொண்டது.

கிட்டத்தட்ட ‘பாசமலர் சிவாஜி’யாகவே மாறிப் போயிருந்தார் அபிஅப்பா. “மை பிரெண்ட், கண்மணி, இம்சை அரசி, பாசமலர் என்று எல்லாருமே எனக்குக் கூடப் பொறக்காத தங்கச்சிக ஸார்.. நேர்ல பாக்குறதுக்கு முன்னாடியே நாங்க அண்ணன்-தங்கச்சியா பழகத் துவங்கி, இன்னிக்கு பெவிகால் ஒட்டாத பாசப் பிணைப்புல இருக்கோம்” என்று சொல்லிவிட்டு தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். நானும்தான்..

கூடவே ஒரு விஷயத்தை சொன்னார். “உங்களை தம்பி சென்ஷி ரொம்பவே விசாரிச்சதா தனிப்பட்ட முறைல சொல்லச் சொன்னான் ஸார்..” என்றார். நான் எதிர்பார்க்கவே இல்லை. “உங்களைப் பத்தி எங்ககிட்ட நிறைய தடவை சொல்லிருக்கான் ஸார்..” என்றார் மேற்கொண்டு.

எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. சென்ஷியை என்னால் மறக்க முடியுமா?

நான் முதன்முதலில் வலைப்பதிவில் எழுதத் துவங்கியபோது எனக்காக தனிப்பதிவு போட்டு அறிமுகப்படுத்தியவன் தம்பி சென்ஷிதான்.

அபிஅப்பா இதைச் சொன்னதும், நெகிழ்ந்து போனேன் நான்.. “நானும் ரொம்ப விசாரிச்சேன்னு சொல்லுங்க ஸார்..” என்றேன்.. தம்பி சென்ஷி.. அப்படியே கை தூக்கி வணங்குகிறேன்.. “நீ எங்க இருந்தாலும் நல்லாயிருப்படா ராசா..!”

அபிஅப்பாவின் பேச்சு அப்படியே துபாய் வாழ்க்கையைப் பற்றிப் போக.. துபாயை பற்றி நிறைய பேசினார். “அங்கே வெளிநாட்டுக்காரர்கள் நிலம் வாங்க முடியாதாமே..?” என்று நான் கேட்டதற்கு.. “முன்பு அப்படியிருந்தது இப்போது அப்படியில்லை. விதிமுறைகளைத் தளர்த்தி 99 வருஷத்துக்கு குத்தகை மாதிரி எடுத்துக்கலாம்னு சொல்லிருக்காங்க.. அப்படித்தான் நிறைய பேர் வீடு வாங்கியிருக்காங்க..” என்றார்.

மேலும், “அமிதாப்பச்சன், ஷாரூக்கான் என்ற பலரையும் பிராண்ட் பெயராக பயன்படுத்தித்தான் அங்கேயும் ரியல் எஸ்டேட் தொழில் நடக்கிறது..” என்றார் அபி அப்பா.

இடையிடையே அவருடைய வீட்டுக்காரம்மா, “எங்க இருக்கீங்க? எப்ப வருவீங்க..?” என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். “என்ன விஷயம்..?” என்று கேட்டபோது, “காலைல மெட்ராஸ்க்கு போய்ட்டு மதியம் பதிவர் மீட்டிங்க்ல பேசிட்டு, சாயந்தரம் மாயவரத்துல இருப்பேன்..” என்று தனது திருமதியாரிடம் வாக்களித்துவிட்டு வந்ததாக சொல்லி கலகலப்பூட்டினார்.

பார்க்கும் நபர்களிடமெல்லாம் ‘நான் இன்னிக்கு, இந்த நேரத்துல உங்க வீட்லதான் இருப்பேன்’ என்று அரசியல்வாதி போல் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருந்தாராம் அபி அப்பா. அதுதான் அனைவரும் போன் மேல் போன் போட்டுவிட.. எங்களைவிட போனில்தான் நிறைய நேரம் பேசினார் அபிஅப்பா.

நான்கூட ‘தீபா வெங்கட்’ சுலோச்சனா ஹவுஸில் ஷ¥ட்டிங்கில் இருப்பதை சொல்லலாம் என்றிருந்தேன். ஆனால் ‘அழைத்துப் போங்க’ என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் விட்டுவிட்டேன்.

“என்ன செய்றது? கல்யாணம்னு ஒண்ணு ஆனா இப்படித்தான்..” என்று சொல்லி “இதையே குசும்பனிடம் இப்போதே சொல்லி தைரியப்படுத்தி விடுங்கள்..” என்றேன்.

குசும்பன் அந்தப் பக்கமாக வர.. அவர்கள் இருவருக்கும் இடையில் செவ்வாய்கிழமை புரோகிராம் பற்றி முட்டிக் கொண்டது. தீர்த்து வைக்க கழகத்தின் கண்மணிகள் யாரும் உடன் இல்லாததால் அது நீடித்துக் கொண்டே சென்றது.

குசும்பன் போனஸ் நியூஸாக தன்னுடைய திருமணத்தன்றுதான் அய்யனாருக்கும் திருமணம் என்றார்.

திடீரென்று பாலா, “இவ்ளோ பேர் வேலை மெனக்கெட்டு உங்களை பார்க்க கூடியிருக்கோம்ல.. வந்து ரெண்டு பேரும் ஒரு குத்தாட்டம் போட்டுட்டு போங்க..” என்று அபிஅப்பாவையும், குசும்பனையும் அழைத்தார்.

பெல்லி டான்ஸ் மட்டுமே தெரியும் என்பதால் குசும்பன் பீச்சை நினைத்து பயந்துதான் போனார். “இங்க எப்படிய்யா..? இம்புட்டு பேர் சுத்தி நிக்குறாங்க..” என்று பதறிவிட்டார்.

அபி அப்பாவோ, தீபா வெங்கட் டான்ஸ் ஆடி அவர் பார்க்காத காரணத்தாலோ என்னவோ, அவரும் நடனமாடக் கற்றுக் கொள்ளாமல் இருப்பதால், “ஐய்ய.. வேணாமே.. வேணும்னா பத்து பக்க டயலாக் பேசி கிளிசரின் போடாமலேயே அழுதுட்டுப் போறேன் என் ‘செல்லம்’ மாதிரி..” என்று சொல்லித் தப்பித்துக் கொண்டார்.

திடீரென்று ‘மப்பு மாப்ளை’ அப்போதுதான் என்னை அடையாளம் தெரிந்ததைப் போல் கையைப் பிடித்திழுத்து அமர வைத்துப் பேசினார். அவருடைய ‘பின்புல ஜாதகத்தை’ பற்றி அவரே எடுத்துச் சொன்ன பின்புதான், எப்பேர்ப்பட்ட ஆளுகிட்ட கூட உக்காந்து பேசிக்கிட்டிருக்கேன்னு எனக்குத் தெரிஞ்சது.. இனிமே, இன்னும் கொஞ்சம் சுதாரிப்பா இருந்துக்கணும்..

‘லக்கிலுக்’கும், ‘மப்பு மாப்ளை’யும் ‘பிரெஞ்சு வீராங்கனை’ பற்றி அட்டகாசமாக ‘கதை’ பேசினார்கள். அவர்கள் பேசியதையெல்லாம் வெளியில் சொன்னால் எனக்கு இன்னொரு பட்டப் பெயர் உறுதி என்பதால் சென்ஸார் செய்து விடுகிறேன்.

தமிழ்மணத்தின் தற்போதைய போக்கு பற்றியும், “திட்டறதுதான் திட்டுறீங்க.. என்ன திட்டுறீங்கன்னு புரியற மாதிரி திட்டுன்னா என்ன ஸார் தப்புன்னு நான் கேட்டது தப்பா போயிருச்சு அவுங்களுக்கு.. நீங்களே சொல்லுங்க.. நான் கேட்டது தப்பா?” என்று லக்கி கேட்டபோது சிரிக்காமல் இருக்க முடியவில்லை. (கேட்டவிதம்தான் தவறு என்பது எனது கருத்து)

பதிவர் ஜேகே மற்றும் பாரியுடன் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேச முடிந்தது.

வாத்தியார் சுஜாதா பற்றி நெகிழ்ச்சியுடன் அனைத்து பதிவர்களும் என்னிடம் பேசியது எனக்கு சற்று பெருமையாகவும், ஆறுதலாகவும் இருந்தது.

பார்க்கின்ற அனைவருமே, “உங்கள் பதிவு எல்லாமே நீளமா இருக்கு ஸார்.. எப்படி டைப் பண்றீங்க..?” என்றே கேள்வி கேட்டு சலிப்படைய வைத்துவிட்டார்கள்.

எல்லாருக்கும் நான் சொன்ன ஒரே பதில், “அனைவருக்கும் எலிக்குட்டியை உருட்டுவதற்கு அவ்வளவு சோம்பேறித்தனம்..” என்று.

இடையிடையே அபி அப்பா தனது திருமதியிடமிருந்து வந்த போனுக்கெல்லாம் “சைதாப்பேட்டை தாண்டிட்டேன்.. கிண்டி வந்துட்டேன்..” என்றெல்லாம் டகுல் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்த லட்சணத்தில் டெல்பின் டாக்டரம்மாவை பார்க்க அவர் வீட்டுக்குப் போகும் வழி கேட்டுக் கொண்டிருந்த கொடுமையும் நடந்தது.

‘பாலவாக்கம் போயி திரும்பி வந்து, மாயவரம் போறதுக்கு நாளைக்கு மதியானம் ஆகிடும்’ என்று நாங்கள் எச்சரிக்கை செய்த பிறகே, அத்திட்டத்தைக் கைவிட்டார் அபிஅப்பா.

இந்த கடைசி நேரத்தில் தாக சாந்திக்கு ஏற்பாடு செய்யும் ஸ்பான்ஸராக வந்து சேர்ந்தார் ஓகையார். அனைத்து பதிவர் சந்திப்பிலும் இதுக்கு மட்டும் ஸ்பான்ஸர் இவர்தானாம். சந்தித்தோம்.. கை கொடுத்தோம்.. பேசினோம்.. அபிஅப்பாவையும், குசும்பனையும் அவரிடத்தில் அறிமுகப்படுத்தி வைத்தேன்.

குழு, குழுவாக பேசிக் கொண்டிருந்தவர்களை பாலா “நேரமாச்சு..” என்று கிளப்பி விட்டுக் கொண்டிருந்தார். ஒரு குரூப் டீக்கடை நோக்கிச் செல்ல.. இன்னொரு குரூப் ‘தாக சாந்தி’க்காக டாஸ்மாக் கடை நோக்கிச் சென்றது.

அபிஅப்பாவிற்கு கிண்டி செல்லும் பேருந்தை கை காட்டி பத்திரமாக அனுப்பி வைத்தோம். “சென்று வருகிறேன்.. திரும்பியும் வருவேன்..” என்றெல்லாம் பிரியாவிடை பெற்றுச் சென்றார் அபிஅப்பா.

குசும்பன் ஸார், யாருடன் சென்றார் என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை. கடைசி நேரத்தில் அனைவரும் ஆளுக்கொரு பக்கமாக கிளம்பியதால் சற்றுக் குழப்பமாகிவிட்டது.

சில மாதங்கள் கழித்து கடற்கரைக்கு வந்திருப்பதால் அப்படியே உள்ளே சென்று கடலில் கால் நனைத்துவிட்டு போகலாமே என்று எண்ணினேன். நண்பர் நித்யகுமாரனும் “வருகிறேன்..” என்று சொன்னதால் கடலுக்குச் சென்று, கால் நனைத்து, இதமான காற்றை சிறிது நேரம் அனுபவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

நண்பர் நித்யகுமாரனை கிண்டியில் இறக்கிவிட்டுவிட்டு, வீடு வந்து சேர்வதற்குள் ‘பெரியவரிடமிருந்து’ போன் வந்தது. “அபிஅப்பா உங்க போன் நம்பர் கேட்டார். கொடுத்திருக்கேன். இன்னும் கொஞ்ச நேரத்துல பேசுவார்..” என்றார். “தேங்க்ஸ் ஸார்..” என்றேன்.

சொன்னது போலவே நான் வீட்டுக் கதவைத் திறக்கும்போது அபிஅப்பா போனில் வந்தார். பஸ்ஸில் தான் மாயவரம் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னார்.. உடனேயே இடம் கிடைத்துவிட்டதால் ரொம்ப சந்தோஷம் என்றார்.

பின்பு சொந்த விஷயங்கள் சிலவற்றை பேசினோம். “நீங்க துபாய்க்குகூட வந்திருங்க..” என்று அழைப்பு விடுத்தார். சென்னையில் இருக்கும் எனது உறவினர்களே இன்னும் என்னை வீட்டுக்கு அழைக்க யோசிப்பதை நினைத்துப் பார்த்த இந்த இடத்தில் கொஞ்சம் எமோஷனல் ஆனேன். இதையெல்லாம் அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும்.

“அழைப்புக்கு நன்றி.. பத்திரமா ஊருக்குப் போயிட்டு வாங்க ஸார்..” என்று வாழ்த்திவிட்டு போனை வைத்தேன்.

அன்றைய தினத்தில் மேற்கொண்டும் பல பதிவர்களிடம் பேசினேன்.. என்ன பேசினேன் என்பது இவ்வளவு முயன்றும் நினைவுக்கு வராத காரணத்தால் அவர்களைப் பற்றி குறிப்பிட முடியவில்லை.

அனைவரும் மன்னிக்கவும்.

இது போன்ற வலைப்பதிவர் சந்திப்புகள் மாதந்தோறும் நடைபெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அப்போதுதான் வலைப்பதிவர்களுக்கிடையில் இருக்கும் இறுக்கங்கள் தளர்ந்து, கட்டுப்பாடுகள் உடைந்து ஒரு பொதுவான அமைப்பாக நாம் உருவாக முடியும் என்று நினைக்கிறேன்.

முடிவாக இரண்டு விஷயங்கள் :

1. நண்பர் வவ்வால் இக்கூட்டத்திற்கு வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன். பாலாவிடம்கூட கேட்டேன். வருவார் என்று தானும் எதிர்பார்ப்பதாகச் சொன்னார். ஆனால் வவ்வால் வரவில்லை. ‘ஊரில் இல்லை’ என்று வினையூக்கியின் பதிவில் சொல்லியிருக்கிறார்.

இருந்தாலும், நான் அவருக்குச் சொல்லியிருந்ததைப் போல இனி அவரிடமிருந்து வரும் எந்தப் பின்னூட்டங்களையும் நான் வெளியிடப் போவதில்லை. அதே போல் நானும் அவருடைய பதிவிற்கு எந்தப் பின்னூட்டமும் போடப் போவதில்லை. பகிஷ்கரிப்புதான்.

2. இனிமேல் வலையுலகில் யாராவது ‘தெய்வ மச்சான்’, ‘திருவோடு மச்சான்’, ‘திருட்டு மச்சான்’ என்று எழுதி சண்டை போட்டுக் கொண்டால், உடனேயே ஓடோடி சென்று ‘கண்ணீரைத் துடைக்கிறேன்’ என்று சொல்லி உங்களது கருத்துக்களை சொல்லி உங்களது நேரத்தை வீணாக்கிக் கொள்ளாதீர்கள்.

அந்தப் பட்டத்தை சமீபத்தில் வாங்கியவரும், பட்டத்தைக் கொடுத்தவரும்தான் அன்றையக் கூட்டத்தில் கட்டிப் பிடித்துக் கொள்ளாத குறையாக கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தனர். கடைசியாக டாஸ்மாக் கடைக்குக்கூட இருவரும் ஜோடி போட்டுச் சென்றதை என் கண்ணால் பார்த்தேன்.

சண்டையெல்லாம் ச்சும்மாங்க.. புரிஞ்சுக்குங்க..

அப்ப அடுத்த மீட்டிங்ல சந்திப்போமா..?

அதுவரைக்கும் விடைபெறுகிறேன்.

கடைசிவரையிலும் சோம்பேறித்தனப்படாமல் எலிக்குட்டியை உருட்டியவர்களுக்கு எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்கள்.