தமிழென்ன..? ஆங்கிலமென்ன? - ஒரு எதிர்வினை

12-10-2007

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!‘தமிழ் எம்.ஏ.’ என்கின்ற ‘கற்றது தமிழ்’ திரைப்படம் திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மீதான ஒரு நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் கூட்டியுள்ளது என்னவோ உண்மைதான்.

‘ராம்’ என்கின்ற புதிய இயக்குநர் புதிய வடிவத்தில், புதிய கோணத்தில் இத்திரைப்படத்தை நம் பார்வைக்கு வைத்துள்ளார். அத்திரைப்படம் பற்றிய எனது விமர்சனம் இங்கே(http://truetamilans.blogspot.com/2007/10/blog-post_12.html).

திரைப்படத்தில் சொல்லப்பட்ட ‘பல’ விஷயங்களில் ஒன்றான கல்லூரியில் தமிழை முதன்மைப் பாடமாகப் படித்து, ஆசிரியர் வேலை தேடியலையும் இளைஞர்களுக்கு ஒளிமயமான எதிர்காலமே இல்லை என்ற ரீதியில் ‘கற்றது தமிழ்’ படத்தின் இயக்குநர் ராம் தொட்டுள்ள ஒரு விஷயம்தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் பரவலாக ஒரு பேச்சை ஏற்படுத்தியிருக்கிறது.

“தமிழ் படித்தவர்களெல்லாம் மாதம் 2000 ரூபாய் சம்பளத்தில் வேலை செய்ய, ஆங்கிலம் படித்தவன் மாதம் 30000 ரூபாய் சம்பளம் வாங்குவது எப்பேர்ப்பட்ட வெட்கக்கேடு..” என்கிறார் இயக்குநர்.

தமிழ் படித்தவர்களுக்கு தமிழ்நாட்டில் எதிர்பார்க்கும் சம்பளம் கிடைக்கவில்லை எனில் அதற்கு என்ன காரணம் என்று இயக்குநர் வேறு கோணத்தில் யோசித்திருந்தால், அவருக்கு இன்னொரு திரைப்படத்திற்கான கரு கிடைத்திருக்கும்.

தமிழ் மொழி தமிழ்நாட்டில் இன்னமும் பேச்சு மொழியாகவே இருந்து வருகிறது.. தொழில் மொழியாகவோ, பயிற்று மொழியாகவோ இன்னமும் 100 சதவிகிதம் முழு மூச்சுடன் வளரவில்லை. காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.. பொருளாதார நுகர்வால் விளைந்த ஆசை.

தமிழ் மொழியை தமிழ்நாட்டிற்குள்தான் பயன்படுத்தியாக வேண்டும் என்பதால், அதற்கேற்றவாறுதான் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

BPO என்கின்ற தொழிலையும், கம்ப்யூட்டர் என்ற தொழிலையும் உருவாக்கியவர்கள் ஆங்கிலத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள். உலகம் பரவிய அந்த இணைப்பு மொழி இன்றைக்கு நிலாவரையிலும் வியாபித்திருக்கின்றபோது அதன் தாக்கத்தை நாமும் உணரத்தான் வேண்டும்.
அதற்காக அவர்களைக் குற்றம் சொல்லி என்ன புண்ணியம்..?

பட்டப்படிப்பில் தமிழை பாடமாக எடுத்துப் படிப்பவர்களுக்கு அடுத்து என்ன வேலை கிடைக்கும்..? அவர்கள் தொடர்ந்து மேலும் டீச்சர் டிரெயினிங் முடித்தால் தமிழாசிரியர் வேலை கிடைக்கலாம்.

இப்போது அரசு பள்ளிகளில் மட்டுமே ஆசிரியர்களுக்கான சம்பளம் நியாயமானதாக உள்ளது. மற்றபடி தெருவுக்குத் தெரு முளைத்திருக்கும் பள்ளிகளில் ஒரே ஆசிரியர்தான் அனைத்துப் பாடங்களையும் எடுக்கிறார். அந்த அளவிற்குத்தான் அவர்கள் தங்களது பள்ளியின் செலபஸை வைத்துக் கொள்கிறார்கள். சற்று பெரிய தனியார் பள்ளிகளிலும் 5000-த்திற்கு மேல் சம்பளம் இல்லை.

ஆனால் இதை கம்யூட்டர் பொறியாளர்களுடன் எதற்கு இயக்குநர் ஒப்பிட முயன்றார் என்பது எனக்குப் புரியவில்லை. இரண்டுமே வேறு வேறு விளைவுகளை கொண்டவை என்பதை இயக்குநர் புரிந்து கொள்ளவில்லை.

இங்கே சம்பளம் என்பதே வரவை எதிர்பொறுத்துதான்.. அரசுப் பள்ளிகள் மக்களுக்காக நடத்தப்படுபவை. அவை தொழிலகங்கள் அல்ல. கல்வி நிறுவனங்கள்.. அங்கே லாப, நஷ்டம் பார்க்கவே முடியாது..

அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களைப் போலவே சம்பளம் பெறுகிறார்கள். அதாவது அரசுப் பணியாற்றுகிறார்கள். என்ன பணி என்பதில்தான் கோட்டையில் வேலை செய்யும் ஒரு செக்ஷன் கிளார்க்கிற்கும், ஆசிரியனுக்கும் வேறுபாடுகள் எழுகின்றன.. அவ்வளவே..

ஆனால் ஒரு BPO கம்பெனியோ அல்லது சாப்ட்வேர் நிறுவனங்களோ அப்படி அல்ல.. அவை லாப நோக்கில் நடத்தப்படுபவை. அவைகள் செய்யக்கூடிய தொழில்களோ மிகப் பெரிதான பணத்தை கணக்கில் கொண்டு செய்யப்படுபவை. அப்படியாயின் அங்கே ஊழியர்களுக்கான சம்பளமும் உயர்ந்துதான் இருக்கும். இது தொழில் நியதி. இதில் நாடு, மொழி, இனம், கலாச்சாரம் என்பதற்கெல்லாம் சம்பந்தமே இல்லை.

அவர்கள் கேட்கின்ற பணத்தைக் கொடுக்கிறார்கள். கொடுப்பவர்கள் கேட்கின்ற வேலையை அவர்கள் செய்து தருகிறார்கள். அவ்வளவுதான்.. ஆனால் இணைப்பாக அவர்கள் இதற்கு பயன்படுத்தும் மொழி ஆங்கிலம். ஆகவே ஆங்கிலம் படித்தவர்களும், கணினி அறிவியல் பயின்றவர்களும் ராஜகுமாரர்களாக இருப்பது கண்கூடு.

தமிழாசிரியரால் இச்சமூகத்திற்கு என்ன செய்ய முடியும் என்ற நோக்கில் பார்த்தீர்களானால் ஒரு நல்ல மாணவனை உருவாக்க முடியும். அந்த அனைத்து மாணவர்களுமே தமிழாசிரியர்களாக சென்றடைவார்களா என்பது சந்தேகமே..

ஒரு மாணவன் தனக்கு எதில் அதிக ஆர்வமோ அதைத்தான் தேடிச் செல்கிறான். அதில் அவனை குற்றமே சொல்ல முடியாது.. இந்த ஆர்வத் தேடலில் அவனுடைய குடும்பச் சூழலும் இணைந்திருக்கும்.

தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக வைக்க வேண்டும் என்று சொல்லும்போதே மருத்துவம், மற்றும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படுமே என்ற நோக்கில் இப்போதும் அது ஆய்வு நிலையில்தான் உள்ளது.

மிகப் பெரிய அளவுக்கு பணத்தைச் செலவழிக்கும் தகுதி கம்யூட்டர் சம்பந்தப்பட்டத் தொழில்களுக்குத்தான் உண்டு. இதில் தமிழுக்கு இடமே இல்லையே..
தமிழ் மொழியை மட்டுமே கருத்தில் கொண்டு எந்தத் தொழிலும் வடிவமைக்கப்படவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தமிழிலேயே BPO கம்பெனி ஒன்றை நிறுவுவோம் என்று வைத்துக் கொள்வோம். அதை எவ்வாறு செயல்படுத்துவது..? தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு மாநில மக்கள் இந்தக் கம்பெனியை எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள்..?

ஒரு இந்தி மட்டுமே தெரிந்தவரோ, அல்லது தெலுங்கு மட்டுமே தெரிந்தவரோ அல்லது அரைகுறையாக தமிழறிந்த ஒருவரால் இந்தக் கம்பெனியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள முடியுமா என்ன..?

முழுக்க முழுக்க தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே என் கம்பெனியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சென்னையை மையமாகக் கொண்ட எந்த நிறுவனமும் சொல்லாது.

தமிழ் நம் மாநிலத்தைவிட்டுத் தாண்டாத சூழலில் இணைப்பு மொழியின் தேவையும் உயரத்தான் செய்யும். அந்த வகையில் ஆங்கிலத்தின் வளர்ச்சி கணக்கிலடாங்காதது..

கணினியில் இவ்வளவு வசதியும், வாய்ப்புகளும் கிடைத்தவிட்ட போதும்கூட இந்த நேரத்திலும் தமிழில் கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்யலாம் என்பதே தமிழறிந்த நம்மவர்களுக்கு இன்னமும் ஆச்சரியத்தைக் கொடுக்கிறது எனில் எந்த அளவிற்கு நாம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண டீக்கடைகளில்கூட இப்போது வெளி மாநில கம்பெனிகளின் விளம்பரப் பலகைகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அங்கே அந்த டீக்கடைக்காரர் சொல்வது, “கடை வாடகைல பாதியாவது இதுல வருதுல்ல.. நான் ஏன் விடணும்..? ‘தமிழ்..’ ‘தமிழ்’ன்னு சொன்னாப்புல இங்க எல்லாத்தையும் குறைக்கவா போறாங்க.. அது பாட்டுக்கு அது.. இது பாட்டுக்கு இது..” என்பார்கள்.

தொழில் வாய்ப்புகளில் தமிழ்நாட்டிற்குள் மட்டுமே வரக்கூடிய வாய்ப்புகள் குறைந்து அகில இந்திய அளவிலும், வெளிநாடு வழியாகவும் செல்லவும், வரவும்கூடியவைகள்தான் அசுர வளர்ச்சியடைந்து வருகின்றன.

இதில் முதலிடம் பிடிக்கக்கூடிய சாப்ட்வேர் துறையும், ஆயத்த ஆடை தொழிலும் பல நாடுகளில் செய்யப்பட்டு வருகிறது. அங்கே தொழில் பெருக நமக்கு ஒரு இணைப்பு மொழி கண்டிப்பாக தேவைதான்..
தமிழ் மட்டுமே போதும் என்று நினைத்தால் திருப்பூர் பனியனும், டைட்டல்பார்க்கும் நமக்குத் தேவையில்லாத ஒன்றாகத்தான் இருக்கும்.

ஆனால் இதன் மூலம் கிடைக்கும் தொழில் வாய்ப்புகளில் எத்தனை, எத்தனை லட்சம் தமிழ் குடும்பங்கள் பயன் பெறுகின்றன என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

உலகம் முழுவதையுமே ஒரே இணைப்பின் மூலம் கொண்டு வர முடிந்திருக்கிறது என்றால் அது இப்போதைக்கு கணினி அறிவியல் மூலம்தான். இதைப் பயன்படுத்தி நாம் தமிழையே தற்போது மேம்படுத்தி வருகிறோம்.. இதை யாரும் மறுக்க முடியாது..

தமிழ் வழி சார்ந்து தொழில் வாய்ப்புகள் பெருகினால் மட்டுமே தமிழுக்கென்றே தனி அடையாளமும், அதற்குரிய பொருளாதார பலன்களும் கிட்டும். அது நடக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு நாளும் விதவிதமான கண்டுபிடிப்புகள் உலகின் பல்வேறு மொழிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்க, நாமும் அதனுடே பயணப்பட்டுத்தான் போக வேண்டும்.

நம் மொழியே போதும்.. என் மொழியைத் தவிர வேறு எதுவும் வேண்டாம் என்று நாம் நினைத்தால் அது பூனை கண்ணை மூடிக் கொள்ளும் கதைதான்..

ஏற்றத்தாழ்வுகள் என்பது படிப்பின் மூலமும் கிடைக்கும் என்பதால்தானே மதிப்பெண்கள் என்ற ஒரு விஷயமே இருக்கிறது.. இல்லாவிடில் அனைவருமே தமிழில்தானே படிக்கிறார்கள். எதற்கு மதிப்பெண் என்று சொல்லிவிடலாமே..

தமிழாசிரியர்களுக்கான சம்பளம் குறைவு என்பதைப் போல் பல தனியார் பள்ளிகளிலும் மற்றப் பிரிவு ஆசிரியர்களுக்கும் சம்பளம் குறைவுதான்.. தமிழுக்கு மட்டுமே அல்ல. அதை இயக்குநர் சொல்ல மறந்துவிட்டார் என்றே நினைக்கிறேன்.

அதிலும் தமிழாசிரியராகப் படித்தவர்களுக்காவது தமிழைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு தளங்கள் காத்திருக்கின்றன. ஆனால் வரலாறு, புவியியல் படித்த ஆசிரியப் பயிற்சியாளர்களைக் கேட்டுப் பாருங்கள். தெரியும் அவர்களது சோகக் கதை..

அதைப் படமெடுக்க இன்னொரு இயக்குநர் யாராவது ஒருவர் முன் வருவார் என்று நினைக்கிறேன். அதுவரைக்கும் பொறுத்திருப்போம்.

15 comments:

Unknown said...

நல்ல பதிவு உண்மைதமிழன். அர்த்தம் கெட்டவகையில் உணர்ச்சி வசப்படுவதே சினிமாகாரர்களுக்கு பிழைப்பாக போய்விட்டது.

ஆங்கிலம் படித்தால் 30,000 சம்பளம் என்பது இந்த சீசனில் தான் உண்மை.பத்து வருடங்களுக்கு முன்பு ஆங்கில வாத்தியாருக்கும் தமிழ் வாத்தியாருக்கும் ஒரே சம்பளம்தான்.

தமிழ் வாத்தியார்கள் கூட நாலைந்து மொழிகளையும் கற்று மொழிபெயர்ப்பு, புத்தகம் எழுதுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் கிட்டும்.

வவ்வால் said...

உண்மைத்தமிழர்,
//தமிழிலேயே BPO கம்பெனி ஒன்றை நிறுவுவோம் என்று வைத்துக் கொள்வோம். அதை எவ்வாறு செயல்படுத்துவது..? தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு மாநில மக்கள் இந்தக் கம்பெனியை எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள்..?//

இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநில மக்கள் என இருக்க வேண்டும்!

நீங்கள் சொல்வது சரி தான் படத்தில் கூட ஜீவாவிற்கு அத்தகைய நிலை வரக்காரணம் தமிழ் மட்டும் அல்ல, பெற்றோர் ,இழப்பு காதலி கிடைக்காதது என இருக்கிறது. அப்படி இருக்கும் போது அவர் தமிழை தூக்கி தோளில் போட்டதால் தான் வீணாகப்போனார் என படம் சொல்வதாக , இயக்குனர் சொல்லிக்கொள்ள முடியாதே.

இன்று வரையில் வெறும் இளங்கலை அறிவியல் படித்தாலும் அதே நிலைதான், குறைந்தது முதுகலை அறிவியல், மேலும் ஆய்வு, பிறகு சில கணிப்பொறி பட்டயங்கள் எனப்பெற்றால் வேலைக்கிடைக்கலாம்.

அம்பத்தூர் பக்கம் போய் பாருங்கள் எத்தனை பொறியியல் படித்தவர்களே சொற்ப சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் எனபது தெரியும்.

கணிப்பொறியாளர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது என்றால் அவர்கள் சேவையை பயன்படுத்துவோர்களிடம் இருந்து அதை விட அதிக பணம் வாங்கி விடும் அந்த நிறுவனங்கள்.

அதே போல தமிழாசிரியருக்கு அதிக சம்பளம் தர வேண்டும் எனில் , அவரின் சேவையை பயன் படுத்தும் மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும். அப்புறம் கல்விக்கட்டணம் தான் அதிகரிக்கும் :-))

இலவச கல்வி கேட்கும் காலத்தில் இது எப்படி சாத்தியம்.

தமிழாசிரியர்கள் ஒருவகையில் பாவப்பட்டவர்கள் , டூயுஷன் கூட எடுத்து சம்பாதிக்க முடியாது. அறிவியல் ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்புண்டு!

dondu(#11168674346665545885) said...

காலத்துக்கேற்ப மாற வேண்டும். சந்தை நிலவரங்களுக்கு நாம்தான் ஒத்து போக வேண்டும். அவை நாம் நினைத்தபடி ஆடாது.

இப்போதிருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் என்ன சொன்னாலும் வெறும் தமிழை வைத்து கொண்டு குப்பை கொட்ட முடியாது. அரசியல் தலைவர்களுக்கே அது தெரியும். வெறுமனே ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் அவர்கள். தங்கள் பிள்ளைகளை கொடைக்கானல் கான்வெண்டிலும் தில்லி மேட்டர்டே பள்ளிகளிலும் படிக்க வைப்பவர்கள். அவர்கள் கூறுவதை குப்பையென ஒதுக்கித் தள்ளிவிட்டு நம் குழந்தைகளுக்கு எக்கல்வி தேவையோ அதைத் தருவோம். அது நிச்சயமாக தமிழ் எம்.ஏ. அல்ல.

பல திறமைகளை வள்ர்த்து கொண்டு, நல்ல சம்பளத்தை உறுதி செய்து கொண்டு பிறகு வேண்டுமானால் தமிழை கவனிக்கலாம்.

எனக்கு தெரிந்து தமிழால் நன்கு சம்பாதித்தவர்கள் எழுத்தாளர் சுஜாதா, வைரமுத்து அப்புறம் சற்று மாடஸ்ட் அளவில் மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவன் (அவனும் வெறுமனே தமிழ் மட்டும் படித்திருந்தால் செத்தான்) மற்றும் வெகு சிலரே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

உண்மைத்தமிழன் said...

//செல்வன் said...
ஆங்கிலம் படித்தால் 30,000 சம்பளம் என்பது இந்த சீசனில் தான் உண்மை.பத்து வருடங்களுக்கு முன்பு ஆங்கில வாத்தியாருக்கும் தமிழ் வாத்தியாருக்கும் ஒரே சம்பளம்தான்.//

உண்மைதான் செல்வன்.. தொழில் வாய்ப்புகள் பெருகப் பெருக தாராளமயமாக்கலால் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கத் துவங்க.. அங்கே ஆங்கிலம் விளையாடத் துவங்கிவிட்டது. இதை அவர்களுக்குப் புரிய வைப்பது கடினம்தான்.

//தமிழ் வாத்தியார்கள் கூட நாலைந்து மொழிகளையும் கற்று மொழிபெயர்ப்பு, புத்தகம் எழுதுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் கூடுதல் வருமானம் கிட்டும்.//

தமிழாசிரியர்கள் புத்தகம் எழுதுதல், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுதல், பத்திரிகைகளுக்கு எழுதுதல் என்று தமிழை மையமாக வைத்து பல தளங்களில் செயல்படலாம். ஆனால் எழுத்து என்பதே ஒரு தவமாச்சே.. ஆசிரியப் பணிக்குச் செல்வது என்பதே நிறைய பேருக்கு சம்பளம் என்ற முக்கியக் காரணமாகத்தான்.. தமிழ் என்பதற்காக அல்ல.. தமிழ்தான் முக்கியம் என்பவன் நிச்சயம் புலம்ப மாட்டான்.

உண்மைத்தமிழன் said...

//வவ்வால் said...
உண்மைத்தமிழர், நீங்கள் சொல்வது சரிதான். படத்தில்கூட ஜீவாவிற்கு அத்தகைய நிலை வரக் காரணம் தமிழ் மட்டும் அல்ல, பெற்றோர் ,இழப்பு காதலி கிடைக்காதது என இருக்கிறது. அப்படி இருக்கும் போது அவர் தமிழை தூக்கி தோளில் போட்டதால்தான் வீணாகப்போனார் என படம் சொல்வதாக, இயக்குனர் சொல்லிக் கொள்ள முடியாதே.//

வவ்வால்ஜி.. இங்கேதான் இயக்குநர் சறுக்கிவிட்டார் என்றே சொல்லலாம்.. மொத்தம் நான்கு விஷயங்களையும் தொட்டுவிட்டதால் அனைத்தையும் தொடர வேண்டுமே என்பதற்காக கொண்டு சென்றதுபோல் எனக்குத் தோன்றுகிறது. ஆனாலும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருந்தால் மக்களை ரீச் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

//இன்று வரையில் வெறும் இளங்கலை அறிவியல் படித்தாலும் அதே நிலைதான், குறைந்தது முதுகலை அறிவியல், மேலும் ஆய்வு, பிறகு சில கணிப்பொறி பட்டயங்கள் எனப் பெற்றால் வேலை கிடைக்கலாம்.//

வவ்வால்ஜி.. போட்டிகள் மிகக் கடுமையாக இருக்கின்றன.. தெருவுக்குத் தெரு பள்ளிகள் திறக்கப்பட்டாலும் சரியான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. வெறும் பட்டம் மற்றுமே ஆசிரியனுக்கு போதாதே.. திறமை வேண்டுமே... சொல்லிக் கொடுப்பதற்கான திறமைகள் ஆசிரியப் பட்டம் ஒன்றை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது.. ஆளுமைத் திறன் வேண்டும். இதற்கு கண்டிப்பாக மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பது எனது கருத்து..

//அம்பத்தூர் பக்கம் போய் பாருங்கள் எத்தனை பொறியியல் படித்தவர்களே சொற்ப சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் எனபது தெரியும்.//

அம்பத்தூர் எதற்கு? என் அலுவலகத்திலேயே B.E.Electronics and Communications-First Class படித்த நபரே குறைவான சம்பளத்தில் நெட்வொர்க்கிங் என்ஜீனியராக இருக்கிறார்.. வாய்ப்பு வர வேண்டும் ஸார். அதற்குத்தான் காத்திருக்கிறேன் என்கிறார்.. போட்டிகள் மலிந்து திறமைசாலிகளும் அதிகரிக்கத் துவங்கிவிட்டார்கள். இப்போது கிடைக்கின்ற வேலையைச் செய்வோம் என்று சொல்லி இவர்களும் காத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட இதே சம்பளத்தில்தான் தனியார் பள்ளி தமிழாசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது கண்கூடு.

//கணிப்பொறியாளர்களுக்கு அதிக பணம் கிடைக்கிறது என்றால் அவர்கள் சேவையை பயன்படுத்துவோர்களிடம் இருந்து அதை விட அதிக பணம் வாங்கி விடும் அந்த நிறுவனங்கள். அதே போல தமிழாசிரியருக்கு அதிக சம்பளம் தர வேண்டும் எனில், அவரின் சேவையை பயன்படுத்தும் மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும். அப்புறம் கல்விக் கட்டணம்தான் அதிகரிக்கும் :-)) இலவச கல்வி கேட்கும் காலத்தில் இது எப்படி சாத்தியம்.//

உண்மைதான்.. அது கல்வித் திட்டத்திற்கு மூடு விழா நடத்திவிடும்.. கல்வி என்பது ஒரு சேவை மனப்பான்மையுடன் செய்யப்படுவது என்பதை அந்த யக்குநர் புரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். இல்லையெனில் அப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்.

//தமிழாசிரியர்கள் ஒருவகையில் பாவப்பட்டவர்கள் , டூயுஷன் கூட எடுத்து சம்பாதிக்க முடியாது. அறிவியல் ஆசிரியர்களுக்கு அந்த வாய்ப்புண்டு!//

ஏன்.. வரலாறு, புவியியல் ஆசிரியர்கள்கூட பாவப்பட்டவர்கள்தான் வவ்வால்ஜி.. அறிவியலுக்குக்கூட டியூஷன் எடுப்பவர்கள் மற்றதற்கு குருட்டுக்கடி மனப்பாடம் செய்து கொள்ளத்தான் நினைக்கிறார்கள். பாடமும் அப்படித்தானே உள்ளது..

ஆனால் தமிழ் இலக்கணத்திற்கு டியூஷன் வைத்துப் படித்தாலும் சிலருக்கு மண்டையில் ஏறாது என்பது வேறு விஷயம்..

உண்மைத்தமிழன் said...

//dondu(#11168674346665545885) said...
காலத்துக்கேற்ப மாற வேண்டும். சந்தை நிலவரங்களுக்கு நாம்தான் ஒத்து போக வேண்டும். அவை நாம் நினைத்தபடி ஆடாது.

இப்போதிருக்கும் நிலையில் அரசியல் தலைவர்கள் என்ன சொன்னாலும் வெறும் தமிழை வைத்து கொண்டு குப்பை கொட்ட முடியாது. அரசியல் தலைவர்களுக்கே அது தெரியும். வெறுமனே ஊருக்கு உபதேசம் செய்பவர்கள் அவர்கள். தங்கள் பிள்ளைகளை கொடைக்கானல் கான்வெண்டிலும் தில்லி மேட்டர்டே பள்ளிகளிலும் படிக்க வைப்பவர்கள். அவர்கள் கூறுவதை குப்பையென ஒதுக்கித் தள்ளிவிட்டு நம் குழந்தைகளுக்கு எக்கல்வி தேவையோ அதைத் தருவோம். அது நிச்சயமாக தமிழ் எம்.ஏ. அல்ல.//

இதில் ஒரு சின்னத் திருத்தம் 'தாத்தா..' தமிழ் எம்.ஏ. மட்டுமல்ல என்று இருந்திருக்க வேண்டும். சரியா..?

//பல திறமைகளை வள்ர்த்து கொண்டு, நல்ல சம்பளத்தை உறுதி செய்து கொண்டு பிறகு வேண்டுமானால் தமிழை கவனிக்கலாம்.//

நல்ல அறிவுரைதான்.. என்னிடமும் இப்போ சமீபமா 9 வருஷத்துக்கு முன்னால ஒருத்தர் நிறைய அட்வைஸ் செஞ்சார்.. இப்ப பண்ணிட்டிருக்குற பாக்ஸ்புரோ புரோகிராமை இன்னும் நல்லாக் கத்துக்க.. இதுல ஒரு நல்ல பியூச்சர் இருக்குது.. அப்புறமா சைடா நீ தமிழ்ல எழுதலாம்.. அதுதான் உனக்கு நல்லதுன்னு.. கேக்கலையே..?

//எனக்கு தெரிந்து தமிழால் நன்கு சம்பாதித்தவர்கள் எழுத்தாளர் சுஜாதா, வைரமுத்து அப்புறம் சற்று மாடஸ்ட் அளவில் மொழிபெயர்ப்பாளன் டோண்டு ராகவன் (அவனும் வெறுமனே தமிழ் மட்டும் படித்திருந்தால் செத்தான்) மற்றும் வெகு சிலரே.//

சுஜாதா, வைரமுத்து தெரியும் தாத்தா.. அது யார் டோண்டு ராகவன்..? இதுவரைக்கும் நான் கேள்விப்பட்டதே இல்லையே..?

Anonymous said...

தாத்தாவா..? டோண்டு 'எப்படிப்பட்ட' இளைஞர் என்பது உனக்குத் தெரியுமா தமிழா..? இவ்ளோ அனுபவப்பட்டும் திருந்த மாட்டேங்குறியே..

Subbiah Veerappan said...

போட்டிகள் நிறைந்த உலகம்.வெறும் தமிழ் மொழிப் பாண்டித்துவம் மற்றும் உதவாது.
பன்முனைத் திறமை அவசியம்.எனக்கு மூன்று மொழிகள் தெரியும். எல்லை கடந்த எனது வியாபரத்திற்கு அது எவ்வளவு உதவுகிறது என்று எனக்குத்தான் தெரியும்.
ஆகவே ஒவ்வொருவரும் மொழி பற்றிய தங்களது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுதல் அவசியம்.

அதைப் புரிந்து கொள்ளாதவன் புரிந்து கொள்ளமலேயே போகட்டும் மிஸ்டர் உண்மைத்தமிழன்!
நீங்களோ நானோ எவனையும் மாற்ற முடியாது! ஆகவே கவலையை விடுங்கள்!

உண்மைத்தமிழன் said...

//SP.VR. SUBBIAH said...
போட்டிகள் நிறைந்த உலகம்.வெறும் தமிழ் மொழிப் பாண்டித்துவம் மற்றும் உதவாது. பன்முனைத் திறமை அவசியம்.எனக்கு மூன்று மொழிகள் தெரியும். எல்லை கடந்த எனது வியாபரத்திற்கு அது எவ்வளவு உதவுகிறது என்று எனக்குத்தான் தெரியும். ஆகவே ஒவ்வொருவரும் மொழி பற்றிய தங்களது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ளுதல் அவசியம்.//

அதைத்தான் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே வாத்தியாரே.. தமிழைவிட உசத்தி வேறெதுவும் இல்லை. அது ஒண்ணே போதும்னு சொல்லி தங்கள் வாழ்க்கைக்கு தாங்களே சூனியம் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் சொல்கின்ற கொள்கைத் தலைவர்கள்.. தங்களது மூணு தலைமுறைக்கும் சேர்த்து முப்பது மொழிகளை கற்றுக் கொடுத்துவிட்டல்லவா செல்கிறார்கள். இதற்குப் பலிகடா அப்பாவி தொண்டர்கள்தானே..

//அதைப் புரிந்து கொள்ளாதவன் புரிந்து கொள்ளமலேயே போகட்டும் மிஸ்டர் உண்மைத்தமிழன்! நீங்களோ நானோ எவனையும் மாற்ற முடியாது! ஆகவே கவலையை விடுங்கள்!//

நீங்களே இப்படிச் சொன்னா எப்படி வாத்தியாரே..? பத்து பேர்கிட்ட சொல்லி அழுகுறோம்.. ஒருத்தராவது மனமிறங்கி நாம் சொல்வதற்கு செவி கொடுக்க மாட்டாரா..

Subbiah Veerappan said...

///நீங்களே இப்படிச் சொன்னா எப்படி வாத்தியாரே..? பத்து பேர்கிட்ட சொல்லி அழுகுறோம்.. ஒருத்தராவது மனமிறங்கி நாம் சொல்வதற்கு செவி கொடுக்க மாட்டாரா..////

செய்யாதே என்றால் செய்வான்
போடா என்றால் வருவான்
நீ யார் என்னைக் கேட்பதற்கு என்று செய்வான்
அது மனித குணம்
அதற்காகத் தான் அந்த சொற்கள்:--)))

வே. இளஞ்செழியன் said...

தேவைக்கு மிஞ்சிய முக்கியத்துவத்தை ஆங்கிலத்திற்குக் கொடுக்கும் சமூகமாக நாம் உள்ளோம். தமிழ் தேசியம் -- மிகைப்படும் பட்சத்தில் அது சிக்கலாக உருமாறும் என்பதை கவனத்தில் கொள்வோம் -- இதன்னைக் கண்டிக்கின்றது. சரிதானே? அதே வேளையில், அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழுக்குள்ள மதிப்பும் தேவையும் அபரீத வளர்ச்சி அடையும் என்று நான் யூகிக்கின்றேன். பாதுகாப்பு, பொருளியல் தேவைகள் பூர்த்தி அடைந்த பின்னர் உணர்வு சார்ந்த தேவைகளை நாடுவது மாந்தனின் இயல்பு அன்றோ... இங்கு வனிக முறைமை வெளிமயமாக்கப்பட்ட (BPO) மைய ஊழியர்களைக் குறை சொல்வதில் பயன் இருப்பதாகத் தெரியவில்லை. இன்று இந்தியா. நாளை வியட்நாம், இந்தோனேசியா என்று வேறு ஏதாவது ஒரு நாடு. உலகத்தில் ஏழை நாடுகளுக்கா பஞ்சம்?

பின் குறிப்பு: நமது இழிநிலைக்கு நாமே பொறுப்பு என்பது எ.தா.க.

உண்மைத்தமிழன் said...

//SP.VR. SUBBIAH said...
செய்யாதே என்றால் செய்வான். போடா என்றால் வருவான். நீ யார் என்னைக் கேட்பதற்கு என்று செய்வான். அது மனித குணம்
அதற்காகத்தான் அந்த சொற்கள்:--)))//

ஆனாலும் எந்த நிலையிலும் ஒரு ஆசிரியர் தன் நிலையை மறக்கக் கூடாது.. அதற்காகத்தான் திரும்பவும் சொன்னேன் வாத்தியாரே..

உண்மைத்தமிழன் said...

//வே. இளஞ்செழியன் said...
தேவைக்கு மிஞ்சிய முக்கியத்துவத்தை ஆங்கிலத்திற்குக் கொடுக்கும் சமூகமாக நாம் உள்ளோம். தமிழ் தேசியம் -- மிகைப்படும் பட்சத்தில் அது சிக்கலாக உருமாறும் என்பதை கவனத்தில் கொள்வோம் -- இதனைக் கண்டிக்கின்றது. சரிதானே? அதே வேளையில், அடுத்த பத்து ஆண்டுகளில் தமிழுக்குள்ள மதிப்பும் தேவையும் அபரீத வளர்ச்சி அடையும் என்று நான் யூகிக்கின்றேன்.//

அல்ல இளஞ்செழியன்.. தேவைக்குக் குறைவாகத்தான் நாம் ஆங்கிலத்தை இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.. முக்கியத்துவமும் கொடுக்கிறோம். ஆங்கிலத்தின் அவசியமும், தேவையும் நேரக் கணக்கில் அனைத்துத் துறைகளிலும் புகுந்து கலக்கிக் கொண்டிருக்கிறது. நாம்தான் அதைப் புரிந்து கொள்ளாமல் இன்னமும் தமிழ், தமிழ் என்று புலம்பிக் கொண்டிருக்கிறோம்.. இங்கே அவர்கள் பேசியது ஆங்கிலத்தால் தனி நபரின் பொருளாதார வசதிகள் பெருகுகின்றன என்பதைத்தான். அதை நாம் ஒத்துக் கொள்ளத்தானே வேண்டும்.

//பாதுகாப்பு, பொருளியல் தேவைகள் பூர்த்தி அடைந்த பின்னர் உணர்வு சார்ந்த தேவைகளை நாடுவது மாந்தனின் இயல்பு அன்றோ... இங்கு வனிக முறைமை வெளிமயமாக்கப்பட்ட (BPO) மைய ஊழியர்களைக் குறை சொல்வதில் பயன் இருப்பதாகத் தெரியவில்லை.//

உண்மைதான்.. மனிதனின் பொருளியல் தேவைகள் அவ்வளவு சீக்கிரம் பூர்த்தியாகும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. இன்னும் போகப் போக ஆங்கிலத்தின் தேவை நமக்கு அதிகமாகிக் கொண்டே செல்லும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

//இன்று இந்தியா. நாளை வியட்நாம், இந்தோனேசியா என்று வேறு ஏதாவது ஒரு நாடு. உலகத்தில் ஏழை நாடுகளுக்கா பஞ்சம்? பின் குறிப்பு: நமது இழிநிலைக்கு நாமே பொறுப்பு என்பது எ.தா.க.//

ஏழை நாடுகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பது ஒரு புறமிருந்தாலும் அத்தனை நாடுகளிலும் சிறிதளவாவது பொருளாதாரச் சந்தையாக அத்துறை மாறியிருக்கிறதே அதையும் பார்க்க வேண்டுமே.. கொடுத்துள்ள வேலை வாய்ப்புகளையும், அதன் பின்னணியில் இருக்கும் சமூக எழுச்சியையும் ஒப்பிட்டுப் பாருங்கள். புரியும்..

ஆங்கிலத்தின் தேவையை நாம் இன்னமும் உணராததுதான் நமது இழிநிலை என்று நான் கருதுகிறேன்..

Anonymous said...

பதிவு செய்தவர்: agniputhiran பதிவு செய்தது: 25 Dec 2008 10:07 am

தமிழ்மொழியைப் பாதுகாக்க முதலில் அதை ஆர்வத்துடன் பயில இளம் சந்ததியினரை ஊக்குவிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி பொருளாதார நிலையில் அக்கல்வி பயில்வோரை உச்ச நிலைக்குக் கொண்டு செல்வதேயாகும்.


கலைஞர் அவர்களின் ஒரே ஒரு உத்தரவால் அதாவது தமிழ்த்திரைபடங்களுக்குக் தமிழில் பெயரிட்டால் வரிச்சலுகை என்ற அந்த உத்தரவால், திரையுலகில் தமிழ்த்திரைப்படங்களுக்கு ஆங்கில பெயர் வைக்கும் மோகம் அழித்தொழிக்கப்பட்டுத் தற்போது தமிழிலேயே பெயர் வைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதே உத்தியை இப்போது இதற்கும் பயன்படுத்த வேண்டும்.


ஐயா கலைஞருக்கு எனது வேண்டுகோள்:1. தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை அதிகப்படுத்த வேண்டும்.


2. தாய்மொழி வழியாக நற்பண்புகளை ஊட்டி எதிர்காலத்திற்கு சிறந்த நற்குடிமக்களை நாட்டிற்கு உருவாக்கும் அற்புதப் பணியைத் தமிழாசிரியர்கள் ஆற்றுவதால் அவர்களுக்குச் சிறப்பு ஊக்கத்தொகையுடன் கூடிய சம்பளம் வழங்க வேண்டும்.


3. தமிழை தனி ஒரு முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்மொழி இலக்கணம், இலக்கியம் மற்றும் திறன் வளர்க்கும் பயிற்சிகள் பெற்று ஆற்றல் மிகுந்தவர்களாகத் தமிழ்ப்பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ற வகையில் தமிழ்மொழிப்பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.


4. தமிழ்ப் பட்டதாரிகள் படித்து முடித்தவுடன் உடனடியாக வேலைவாய்ப்பு பெறவும் அவர்களுக்கு மற்றவர்களைவிடக் கூடுதல் சம்பளம் கிடைக்கவும் வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ்த்தானே என்று ஓடியவர்கள் எல்லாம் தமிழ்த்தேனே என்று தமிழ் பயில ஓடி வர வேண்டும்.


5. தமிழ் இலக்கியங்களைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு நற்பண்புகளை வளர்க்கும் தாய்மொழி வழியிலான கல்வித்திட்டம் ஒன்றைத் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக்கழங்கள் வரை ஏற்படுத்த வேண்டும்.


6. தமிழைத் தனி ஒரு முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்காலம் ஒளிமயமானதாகத் திகழ்வதற்கு அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அதற்கு இம்மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்தல் வேண்டும். அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட சதவீதப் பணியிடங்கள் தமிழ்ப் பட்டதாரிகளைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும்.


7. மென்பொருள் துறையில் வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாகத் திறன் மிகுந்த தமிழ்ப்பட்டதாரிகளுக்குச் சிறப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.


8. தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான திட்டங்களை உருவாக்க தமிழ்மொழி அறிஞர்கள் குழு அமைத்து ஆராய வேண்டும்.இவ்வாறு பொருளாதார நிலையில் தமிழ் ஏற்றம் பெற்றால் நமது மொழி நிச்சயம் நிலைக்கும். நமது இனம் பாதுகாக்கப்படும். நமது கலை, கலாச்சாரம், பண்பாடு கட்டிக் காக்கப்படும்.


நமது தாய்மொழியாம் தமிழ்மொழியைப் போற்றிப் புகழ்வோம். தமிழாய்ந்த தமிழன் தலைமைப் பொறுப்பில் இருக்கும் இத்தருணமே தமிழ் தலைநிமிர்ந்து நிற்க மிகச்சரியான காலமாகும். தமிழனுக்குத் தமிழ்தான் முகவரி. இதுவே நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய ஒப்பற்ற உண்மையாகும்.

abeer ahmed said...

See who owns souq.com or any other website:
http://whois.domaintasks.com/souq.com