Showing posts with label பொம்மலாட்டம். Show all posts
Showing posts with label பொம்மலாட்டம். Show all posts

கேவலமாகிப் போன தமிழக அரசின் திரைப்பட விருதுகள்..!

29-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

'கோபப்படக் கூடாது..' 'ஆத்திரப்படக் கூடாது..' 'டென்ஷன்படக் கூடாது' என்று எத்தனையோ 'படக் கூடாது'களை 'பட்ட' பின்பு தெரிந்து வைத்திருப்பதால் ரிலாக்ஸாக இருக்க முடிந்தாலும் முடியவில்லை.

'சொறி பிடித்தவன் கை சும்மா இருக்காது' என்பதைப் போல பதிவுகளை போட்டே தீர வேண்டும் என்கிற அவசியத்தையும் என் அப்பன் முருகன் கொடுத்துக் கொண்டேயிருக்கிறான்.

நேற்று பாருங்கள்.. நேரு உள் விளையாட்டரங்கில் 'ஆழ்வார்பேட்டை ஆண்டவன்' தனது கலையுலகத்தின் 50-வது வருட பொன்விழாவை ஒட்டி நடைபெற்ற பாராட்டு விழாக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்க.. அவருக்கு இன்னுமொரு சிறப்பு சேர்க்கும்விதமாக 'தசாவதாரம்' படத்தில் பத்து வேடங்களில் வந்து கலக்கியதற்காக 'சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருது' கிடைத்திருக்கிறது.

இந்தத் 'தேர்வுப் பட்டியல்' பத்து நாட்களுக்கு முன்பே தயாராகிவிட்டாலும், நேற்றுதான்.. அதிலும் அண்ணன் கமலஹாசனுக்கு பாராட்டு விழா நடக்கும் தினத்தன்றுதான் அறிவிப்பு வெளியாக வேண்டும் என்கிற 'கோபாலபுரத்தாரின்' ஆசையை அரசு அதிகாரிகள் இன்றைக்கு நிறைவேற்றியிருக்கிறார்கள்.

இதற்கான நன்றிக் கடனை கடந்த சில நாட்களுக்கு முன்பேயே கமலஹாசன் கோபாலபுரத்தின் படியேறிச் சென்று செலுத்திவிட்டு வந்துவிட்டார். இவர் 2008-ம் ஆண்டுக்கு..

2007-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றுள்ள அண்ணன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு விருது கிடைக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொண்டு கிளைமாக்ஸ் காட்சிக்காக காத்திருந்த 'எந்திரன்' டீமிற்கே கடுக்கான் கொடுத்துவிட்டு, கோபாலபுரத்தாரின் கவிதை பாடல் நிகழ்ச்சிக்கு சென்று மூன்றரை மணி நேரம் முக்காலிட்டு உட்கார்ந்திருந்து தனது 'நன்றிக் கடனை' செலுத்திவிட்டுச் சென்றுவிட்டார்.

தேர்வு செய்வது தேர்வுக் கமிட்டி. அந்தத் தேர்வுக் கமிட்டியை நியமித்தது தமிழக அரசு. தேர்வு செய்தால் கமிட்டி அதனை அரசிடம் சமர்ப்பிக்கும். அரசு அதனை நாள், நேரம், நட்சத்திரம் பார்த்து வெளியிடும். அதற்கிடையில் அந்த நடிகர்களுக்கே இந்த விஷயம் போய்ச் சேர்ந்தது ஏன் என்றெல்லாம் சின்னப்புள்ளைத்தனமா கொஸ்டீன் கேக்கக் கூடாது..? இதெல்லாம் பெரிய இடத்து விவகாரம்..

இதெல்லாம் நமக்குப் பிரச்சினையில்லை.

பரிசுக்காகத் தேர்வு செய்திருக்கும் திரைப்படங்களையும், தேர்வு செய்யப்பட்ட வெற்றியாளர்களையும் பார்க்கும்போதுதான் பி.பி. தாறுமாறாக எகிறுகிறது. சில தேர்வுகள் பேலன்ஸ் செய்வதற்காக செய்யப்பட்டிருக்க.. பல தேர்வுகள் பல நல்ல கலைஞர்களை புறக்கணித்து, ஓரம்தள்ளிவிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது கொடுமையாக உள்ளது.

முதலில் 2007-ம் ஆண்டை பார்ப்போம். வெற்றி பெற்ற பட்டியலைப் பாருங்கள்.

சிறந்த படம் - முதல் பரிசு - சிவாஜி

சிறந்த படம் - இரண்டாம் பரிசு - மொழி

சிறந்த படம் - மூன்றாம் பரிசு - பள்ளிக்கூடம்

சிறந்த படம் - சிறப்பு பரிசு - பெரியார்

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - மிருகம்

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு - தூவானம்

சிறந்த நடிகர் - ரஜினிகாந்த் (சிவாஜி)

சிறந்த நடிகை - ஜோதிகா (மொழி)

சிறந்த நடிகர் - சிறப்புப் பரிசு - சத்யராஜ் (பெரியார்)

சிறந்த நடிகை - சிறப்புப் பரிசு - பத்மப்பிரியா (மிருகம்)

சிறந்த வில்லன் நடிகர் - சுமன் (சிவாஜி)

சிறந்த நகைச்சுவை நடிகர் - விவேக் (சிவாஜி)

சிறந்த குணசித்திர நடிகர் - எம்.எஸ்.பாஸ்கர் (மொழி)

சிறந்த குணசித்திர நடிகை - அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு)

சிறந்த இயக்குநர் - தங்கர்பச்சான் (பள்ளிக்கூடம்)

சிறந்த கதை ஆசிரியர் - வசந்த் (சத்தம் போடாதே)

சிறந்த உரையாடல் ஆசிரியர் - பாலாஜி சக்திவேல் (கல்லூரி)

சிறந்த இசையமைப்பாளர் - வித்யாசாகர் (மொழி)

சிறந்த பாடலாசிரியர் - வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்)

சிறந்த பின்னணிப் பாடகர் - ஸ்ரீனிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு)

சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (சிவாஜி)

சிறந்த ஒளிப்பதிவாளர் - நீரவ்ஷா (பில்லா)

சிறந்த ஒலிப்பதிவாளர் - யு.கே.அய்யப்பன் (பில்லா)

சிறந்த எடிட்டர் - சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே)

சிறந்த கலை இயக்குநர் - தோட்டாதரணி (சிவாஜி)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்)

சிறந்த நடன ஆசிரியர் - பிருந்தா (தீபாவளி)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் - ராஜேந்திரன் (பெரியார்)

சிறந்த தையல் கலைஞர் - அனுவர்த்தன் (பில்லா)

சிறந்த பின்னணி குரல்(ஆண்) - கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய)

சிறந்த பின்னணி குரல்(பெண்) - மகாலட்சுமி (மிருகம்)

2007-ம் ஆண்டு வெளி வந்த திரைப்படங்களின் பட்டியலில் ஏதேனும் ஒரு பிரிவிலாவது விருதுகளை வழங்கலாம் என்று கருதக்கூடிய திரைப்படங்களின் பட்டியல் இது.

சிவாஜி, பருத்தி வீரன், மொழி, பெரியார், ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கற்றது தமிழ், ராமேஸ்வரம், மாயக்கண்ணாடி எவனோ ஒருவன், கல்லூரி, பச்சைக்கிளி முத்துச்சரம், மிருகம், சென்னை 600028, அம்முவாகிய நான்

இதில் 'பருத்தி வீரன்' திரைப்படம் 2006-ம் ஆண்டிலேயே சென்சார் சர்டிபிகேட் வாங்கி 2007-ம் ஆண்டில் வெளியானதால் 2006-ம் ஆண்டிற்கான விருதுகளை பெற்றுக் கொண்டு லிஸ்ட்டில் இருந்து வெளியேறிவிட்டது.

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்திருக்கின்ற ஒரே காரணத்திற்காக 'பெரியார்' திரைப்படத்திற்கு சிறப்பு பரிசு வழங்கியிருப்பதை ஏற்றுக் கொள்ளலாம்.

இந்தப் பட்டியலில் 'மிருகம்' பெண்களை மிக உயர்வாகக் காட்டிய திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு விருது பட்டியலில் தனி இடம் பெற்று விட்டது.

சிறந்த திரைப்படமாக 'சிவாஜி'யை தேர்வு செய்திருக்கிறார்கள் நமது கலை வல்லுநர்கள். என்ன காரணம் என்பது உங்களுக்கே தெரியும்.. ஆனால் அது சிறந்த திரைப்படத்திற்கு தகுதியான திரைப்படம்தானா என்பதை சற்று யோசித்துப் பாருங்கள்.

'சிவாஜி' திரைப்படத்துடன் சிறந்த படத்திற்காக போட்டியிட்ட படங்கள் லிஸ்ட்டை பாருங்கள்.. மொழி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம், கற்றது தமிழ், ராமேஸ்வரம், மாயக்கண்ணாடி, எவனோ ஒருவன், கல்லூரி, பச்சைக்கிளி முத்துச்சரம், அம்முவாகிய நான்..

இந்தப் பட்டியலில் சந்தேகமேயில்லாமல் 'மொழி' திரைப்படம்தான் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கான எல்லாத் தகுதியும் அத்திரைப்படத்திற்கு உண்டு. சினிமா மொழியின் அடிப்படையில் பார்த்தால் 'சிவாஜி'யைவிட பல மடங்கு தரமான திரைப்படம் மொழி. மற்ற திரைப்படங்களும் வலுவான போட்டியைக் கொடுத்தாலும் கதை, நேர்த்தி, நடிகர்களின் நடிப்புத் திறன், திரைக்கதை ஆக்கம் என்று அனைத்திலும் மொழிதான் சிறப்பு வாய்ந்தது என்பது எனது கருத்து.

ஆனால் இவர்கள் 'சிவாஜி'யைத் தலையில் தூக்கி வைத்து ஆடியிருக்கிறார்கள். ரஜினியைக் காக்கா பிடிப்பது நல்லதுதான். அதற்காக இப்படியா..?

இரண்டாவது சிறந்த படமாக 'மொழி'யையும், மூன்றாவது சிறந்த படமாக 'பள்ளிக்கூடத்தையும்' தேர்வு செய்து பேலன்ஸ் செய்ய முற்பட்டிருக்கிறார்கள். கூடவே இன்னொரு கூத்தாக ரெடிமேட் தாக்குதலாக அறிக்கைவிடத் தயாராகக் காத்திருந்த தங்கர்பச்சானை கூல் செய்ய வேண்டி அவருக்கு 'சிறந்த இயக்குநருக்கான பரிசைக்' கொடுத்து சமாளித்துவிட்டார்கள். உண்மையில் இந்த விருதைப் பெற ராதாமோகனே தகுதியானவர் என்பது எனது தாழ்மையான கருத்து.

'பள்ளிக்கூடமும்', 'ஒன்பது ரூபாய் நோட்டு'வும் சிறந்த படைப்புகள்தான் என்றாலும் மதிப்பெண் விகிதத்தில் 'மொழி' திரைப்படத்திற்குப் பின்னால்தான் வரிசை கட்டி நிற்கின்றன. அதிலும் 'மொழி'யில் நடிகர்களின் நடிப்புத் திறன் வெளிப்பட்டிருப்பதில் இயக்குநரின் பங்குதான் அதிகம். ஆனால் ராதாமோகனுக்கு இங்கே பப்பே சொல்லிவிட்டு 2008-ம் ஆண்டு 'அபியும் நானும்' படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதைக் கொடுத்து கேலிக்கூத்தாக்கியிருக்கிறார்கள்.

'மொழி'யில் இருந்த திரைக்கலை உணர்வும், படமாக்கிய திறனும் 'அபியும், நானும்' திரைப்படத்தில் பாதிதான் இருந்தது. ஆனால் எதற்காக அத்திரைப்படத்திற்கு என்று புரியவில்லை.

'சத்தம் போடாதே' படத்தின் கதையைவிட மாயக்கண்ணாடியின் கதை எவ்வளவோ பெஸ்ட்.. ஆனால் பேலன்ஸ் செய்யும் நோக்கில் வசந்திற்கு தரப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

கற்றது தமிழ், இராமேஸ்வரம், பச்சைக்கிளி முத்துச்சரம், மாயக்கண்ணாடி, எவனோ ஒருவன் ஆகிய திரைப்படங்களில் ஏதாவது ஒரு பிரிவில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருந்தன. ஒரு பிரிவில்கூட இத்திரைப்படங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது அவர்களுடைய துரதிருஷ்டம்தான்.

அடுத்து 2008-ம் ஆண்டினை பார்ப்போம்..

முதலில் வெற்றி பெற்றவர்கள் பட்டியலை பார்ப்போம்..

சிறந்த படம் - முதல் பரிசு - தசாவதாரம்

சிறந்த படம் - இரண்டாம் பரிசு - அபியும் நானும்

சிறந்த படம் - மூன்றாம் பரிசு - சந்தோஷ் சுப்ரமண்யம்

சிறந்த படம் - சிறப்பு பரிசு - மெய்ப்பொருள்

பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - பூ

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு - வல்லமை தாராயோ

அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - இரண்டாம் பரிசு - வண்ணத்துப்பூச்சி

சிறந்த நடிகர் - கமலஹாசன் (தசாவதாரம்)

சிறந்த நடிகை - சிநேகா (பிரிவோம் சந்திப்போம்)

சிறந்த நடிகர் - சிறப்புப் பரிசு - சூர்யா (வாரணம் ஆயிரம்)

சிறந்த நடிகை - சிறப்புப் பரிசு - த்ரிஷா (அபியும் நானும்)

சிறந்த வில்லன் நடிகர் - ராஜேந்திரன் (நான் கடவுள்)

சிறந்த நகைச்சுவை நடிகர் - வடிவேலு (காத்தவராயன்)

சிறந்த நகைச்சுவை நடிகை - கோவை சரளா (உளியின் ஓசை)

சிறந்த குணசித்திர நடிகர் - பிரகாஷ்ராஜ் (பல படங்கள்)

சிறந்த குணசித்திர நடிகை - பூஜா (நான் கடவுள்)

சிறந்த இயக்குநர் - ராதாமோகன் (அபியும் நானும்)

சிறந்த கதை ஆசிரியர் - சா.தமிழ்ச்செல்வன் (பூ)

சிறந்த உரையாடல் ஆசிரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)

சிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)

சிறந்த பாடலாசிரியர் - வாலி (தசாவதாரம்)

சிறந்த பின்னணிப் பாடகர் - பெள்ளிராஜ் (சுப்ரமண்யபுரம்)

சிறந்த பின்னணிப் பாடகி - சின்மயி (நெஞ்சத்தைக் கிள்ளாதே)

சிறந்த ஒளிப்பதிவாளர் - ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்)

சிறந்த ஒலிப்பதிவாளர் - ரவி (வாரணம் ஆயிரம்)

சிறந்த எடிட்டர் - ப்ரவீன் காந்த் (சரோஜா)

சிறந்த கலை இயக்குநர் - ராஜீவன் (வாரணம் ஆயிரம்)

சிறந்த சண்டைப் பயிற்சியாளர் - கனல் கண்ணன் (சிலம்பாட்டம்)

சிறந்த நடன ஆசிரியர் - சிவசங்கர் (உளியின் ஓசை)

சிறந்த ஒப்பனைக் கலைஞர் - மைக்கேல் வெஸ்ட்மோர், கோதண்டபாணி (தசாவதாரம்)

சிறந்த தையல் கலைஞர் - ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்)

சிறந்த குழந்தை நட்சத்திரம் - லட்சுமி (வண்ணத்துப்பூச்சி)

சிறந்த பின்னணி குரல்(ஆண்) - எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.)

சிறந்த பின்னணி குரல்(பெண்) - சவிதா (பல படங்கள்)

2009-ம் ஆண்டு வெளியானாலும் 2008-ம் ஆண்டிலேயே சென்சார் சர்டிபிகேட் வாங்கிவிட்டதால் 'நான் கடவுள்' திரைப்படம் 2008-ம் ஆண்டு படங்களுடன் போட்டியிட்டுள்ளது.

கமலஹாசன் சிறந்த நடிகர்தான். பெற வேண்டிய விருதுதான். சந்தேகமில்லை. வாழ்த்துவோம். ஆனால் 'தசாவதாரம்' சிறந்த படமா..?

2008-ம் ஆண்டில் அத்திரைப்படத்துடன் போட்டியிட்டிருக்கும் படங்களை பாருங்கள்.. நான் கடவுள், பிரிவோம் சந்திப்போம், அஞ்சாதே, சுப்ரமணியபுரம், வெள்ளித்திரை, சந்தோஷ் சுப்ரமணியம், சரோஜா, பொய் சொல்லப் போறோம், வாரணம் ஆயிரம், பூ, பொம்மலாட்டம், அபியும் நானும்.

இந்த லிஸ்ட்டில் கண்டிப்பாக 'பூ', 'அஞ்சாதே', 'சுப்ரமணியபுரம்' ஆகிய மூன்று திரைப்படங்களும் சிறந்த திரைப்படங்களுக்கான லிஸ்ட்டில் இருக்க வேண்டிய திரைப்படங்கள். ஆனால் இவற்றில் 'பூ' படத்திற்கு பெண்களை உயர்வாகக் காட்டுவதாகச் சொல்லி சிறப்புப் பரிசு கொடுத்து ஒதுக்கிவிட்டார்கள். என்னே தேர்வுக் கமிட்டியினரின் கலைத்திறமை...?

இதில் காமெடியாக 'அபியும் நானும்', 'சந்தோஷ் சுப்ரமணியம்' என்னும் இரண்டு கமர்ஷியல் குடும்பக் கதைகள் விருதை பெற்றுள்ளன. இவைகளும் நல்ல திரைப்படங்கள்தான். இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் சினிமா மொழி இவற்றில் இல்லையே.. இவைகள் சாதாரணமான மேடை நாடகங்கள் போன்ற திரைப்படங்கள்தானே.. திரைப்படத்தின் உடற்கூற்றுக்கான ஒரு அடையாளம்கூட இத்திரைப்படங்களில் இடம்பெறவில்லை.

ஆனால் 'அஞ்சாதே'யும், 'சுப்ரமணியபுரமும்' தமிழ்த் திரையுலகின் டிரெண்ட்டையே தற்போதைக்கு இடம் மாற்றி வைத்துவிட்டன. அந்தச் சாதனையை செய்த திரைப்படங்களை கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை எனில் இந்த தேர்வுக் கமிட்டியினரை சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியுள்ளது.

இன்னும் எனக்கு இந்த மூன்றில் எதை சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்வது என்கிற குழப்பமே உள்ளது. அந்த அளவுக்கு சிறந்த காவியப் படைப்புகளை கையில் வைத்துக் கொண்டு விருதுகளை இரண்டரை மணி நேர நாடகங்களுக்கு வழங்கியிருப்பது கொடுமையான விஷயம்.

அடுத்த கொடுமை சிறந்த இயக்குநருக்கான விருது. நிச்சயம் இதில் போட்டியிடுபவர்கள் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும், மிஷ்கினும், சசிகுமாரும், சசியும்தான். ராதாமோகன் லிஸ்ட்டில் இல்லவே இல்லை. ஆனாலும் ராதாமோகனுக்குத்தான் கிடைத்திருக்கிறது. காரணம் நான் முன்பே சொன்னதுபோல தங்கர்பச்சானை கூல் செய்ய வேண்டி ராதாமோகனுக்கு கிடைத்த அதிர்ஷ்டப் பரிசு இது. முறைகேடான விஷயம் இது.

சசிகுமார் பாவம்.. தமிழக அரசின் விருதைத் தவிர மற்ற அத்தனை குறிப்பிடத்தக்க விருதுகளையும் 'சுப்ரமணியபுரம்' படத்திற்காக வாங்கிக் குவித்துவிட்டார். சரி.. அந்த அளவுக்கு தமிழக அரசின் விருதிற்கு மரியாதை இல்லை என்பதை இப்போதைக்கு புரிந்து கொள்வார் என்று நினைக்கிறேன்.

இதில் எனக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, சினேகாவுக்குக் கிடைத்த சிறந்த நடிகைக்கான விருது. நல்ல திரைப்படம்தான். நல்ல கதைதான். ஆனால் அழுத்தமான திரைக்கதையும், சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லக்கூடிய விதமாகவும் இல்லாமல் போனதால் 'பிரிவோம் சந்திப்போம்' திரைப்படம் மக்கள் மனதில் இடம் பெறாமல் போய்விட்டது. ஆனால் அதில் சிநேகாவின் நடிப்பு என்னை அப்போதே மிகவும் கவர்ந்திருந்தது.

சந்தேகம் இருப்பவர்கள் அதன் டிவிடியை வாங்கி பாருங்கள்.. எதிரில் சோபாவில் யாரோ அமர்ந்திருக்கிறார்கள் என்று நினைத்து அவர்களை இமேஜின் செய்து அவர்களுக்கு காபி கொடுப்பதற்காக டிரேயை நீட்டியபடியே காபி எடுத்துக்குங்க என்று எப்போதும் போல மிக, மிக இயல்பாக சொல்லும் சிநேகாவை அப்படியே அள்ளி முத்தமிடலாம்.

இரண்டாவது சந்தோஷமான விஷயம், 'பூ' படத்திற்காக சிறந்த கதையாசிரியருக்கான விருதை நமது சக பதிவரும், எழுத்தாளரும், முற்போக்கு எழுத்தாளர் சங்கத் தலைவருமான திரு.சா.தமிழ்ச்செல்வன் பெற்றிருப்பதுதான்.

'அஞ்சாதே' நரேனும், 'சுப்ரமணியபுரம்' சசிகுமாரும், 'பொம்மலாட்டம்' நானே படேகரும் 'வாரணம் ஆயிரம்' சூர்யாவைவிட பல மடங்கு நடித்திருக்கிறார்கள் என்பது சத்தியமான உண்மை. ஆனால் அவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் கிடைக்கவில்லை.

சிறந்த வில்லன் நடிகருக்கான போட்டியில் சந்தேகமே இல்லாமல் 'அஞ்சாதே' பிரசன்னாதான் என் கண்ணுக்குத் தெரிகிறார். ஆனால் இங்கே 'நான் கடவுள்' படத்திற்காக ராஜேந்திரனுக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஒரு ஓட்டு, இரண்டு ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பாரோ. ஆனால் 'டக் அஃப் வார்'தான்.. சந்தேகமில்லை..! பிரசன்னா தனது உடல் மொழியால் நடித்திருக்கிறார். நிச்சயம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். அதில் சந்தேகமில்லை. ஆனால் ராஜேந்திரன் கதை அப்படியில்லை. அவருடைய இயல்பான உடல் வாகுவும், பேச்சுத் திறனும் அப்படியே அமைந்துவிட்டதாலும், அவர் கவரப்பட்டார் என்று நினைக்கிறேன்..!

'சுப்ரமணியபுரம்' ஸ்வாதியும், 'பொம்மலாட்டம்' நாயகி ருக்மணியும், 'பூ'வில் பார்வதியும் நடித்த நடிப்பைவிடவா 'அபியும் நானுமில்' த்ரிஷா நடிப்பைக் கொட்டியிருக்கிறார்..? சிறப்புப் பரிசில்கூடவா இவர்களுக்கு இடமில்லை..!

இதில் இன்னுமொரு அபத்தம் 'நான் கடவுள்' படத்தின் கதாநாயகி பூஜாவுக்கு குணசித்திர நடிகைக்கான பரிசைக் கொடுத்து ஒதுக்கிவிட்டதுதான். இனிமேல் கதாநாயகி யார்? குணசித்திர நடிகை யார் என்பதையெல்லாம் தமிழக அரசிடம் கேட்டுவிட்டுத்தான் நடிகைகள் நடிக்க வேண்டும் போலும்..!

இதில் கொடுமையிலும் கொடுமையாக தமிழக முதல்வரே தான் கொடுக்க வேண்டிய விருதுகளில் ஒன்றை தானே உரிமையாக கையைவிட்டு எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய 'உளியின் ஓசை'க்காக சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதாம்..

அவருடைய விளம்பர வெறியும், பதவி ஆசையும், கூச்ச நாச்சமில்லாத படுத்துக்கொண்டே பாராட்டை கேட்கும் மனோபாவமும் உலகமறிந்த விஷயம் என்றாலும், இவ்வளவு பக்குவப்பட்ட வயதிலும் இன்னமும் அப்படியே இருக்கிறாரே என்பதை நினைத்தால்தான் மனம் பகீரென்கிறது.

இன்னும் அடுத்தடுத்த வருடங்களில் எதையெல்லாம் தான் எடுத்துக் கொண்டு மிச்சத்தை தமிழ்ப் படைப்பாளிகளுக்கு எச்சில் இலை போல் அள்ளி வீசப் போகிறாரோ தெரியவில்லை.

முதல்வராகப் பதவி வகிப்பவர் இது போன்ற அரசு விருதுகளுக்கான போட்டிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துவிட்டுச் செல்வதுதான் அந்தப் பதவிக்கு பெருமை சேர்க்கும் விஷயம். இங்கேதான் அந்தப் பெருமை சேர்ப்புகளையே குப்பைத் தொட்டிக்குக் கொண்டு போய் போட்டுவிட்டார்களே.. யார் கேட்பது..?

உண்மையில் 'உளியின் ஓசை' படைப்பு பரிசுக்குரியதா? சிறந்த உரையாடல் பரிசுப் போட்டியில் 'நான் கடவுளும்', 'பொம்மலாட்டமும்', 'அஞ்சாதே'யும், 'பூ'வும், 'சுப்ரமண்யபுரமும்' வரிந்து கட்டிக் கொண்டு வரிசையில் நிற்கின்றன. அவற்றைவிடவா ஐயா அற்புதமாக எழுதிக் குவித்துவிட்டார். கொடுமையடா சாமி..

'நான் கடவுளுக்கு' நிச்சயம் கொடுத்திருக்கலாம். அத்திரைப்படத்தின் வசனங்கள் தமிழ்த் திரையுலகத்துக்கு கிடைத்த புதுமை. பாவம் ஜெயமோகன்.. சாருநிவேதிதாவுக்கு பதிவு போடும் வேலையைக் கொடுக்க ஆசை, ஆசையாகத் தயாராகக் காத்திருந்தார். ஆப்படித்துவிட்டார் கோபாலபுரத்து ஐயா. சாருவுக்கு ஒரு வேலை மிச்சம்..

இந்த கேலிக்கூத்தான இரண்டு வருட பரிசு அறிவுப்புகளின் பின்னணிக்கு என்ன காரணம்? தான் ரிட்டையர்டுமெண்ட் பெற உள்ள இதே காலக்கட்டத்திலேயே கடைசியாக ஒரு முறை இரண்டு பெரும் நடிகர்களுக்கு நடுவில் அமர்ந்துவிடத் துடித்த ஒரு அல்பத்தனத்திற்கு அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பது மகா கேவலமானது.

ஏன்? இப்படி? யாரும் யோசிக்க மாட்டார்களா? என்றெல்லாம் தேர்வுக் கமிட்டியினரிடம் விசாரித்ததில் அவர்களிடம் அரசு அதிகாரிகள் தெரிவித்த விஷயங்கள் ஒன்றுதானாம்..

“தலைவர் மனசு குளிர்ற மாதிரி செலக்ட் பண்ணுங்க. வீணா அவரை அப்செட்டாக்காதீங்க” என்று மட்டும் தேர்வுக் கமிட்டியினரின் காதில் ஓதப்பட்டதாம். அதன் விளைவினால்தான் ஐயா விருப்பப்படியே டாப் லிஸ்ட் தயார் செய்யப்பட்டதாம்.

ஐயாவின் மனம் குளிர வைக்க அடுத்த விழா ரெடி..

இதற்குப் பேசாமல் அவரும், அவருடைய குடும்பத்தினருமே பரிசுக்குரியவர்களின் பெயரை டிக் செய்து "வீட்ல வந்து பரிசை வாங்கிட்டு சமத்தா கால்ல விழுந்துட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்திட்டு போய்ச் சேருங்க"ன்னு அறிக்கையே விட்ரலாம்.

எதையும் தாங்கும் தமிழன், நிச்சயம் இதையும் தாங்குவான்..!

பொம்மலாட்டம் - என்னவென்று சொல்வது..?

10-09-2009

என் இனிய வலைத்தமிழ் மக்களே..


முதலில் தாமதமான விமர்சனத்திற்காக கழகக் கண்மணிகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

பொதுவாகவே எனது திரைப்பட விமர்சனங்களில் முழுக் கதையையும் சொல்லிவிடுவது எனது வழக்கம் என்பதால் அதன்படி இத்திரைப்படத்தின் கதையை முன்பே சொல்லித் தொலைத்து, அதனால் படம் பார்க்கவிருக்கும் பதிவர்கள், ஆரம்பக் கட்டத்திலேயே ஒரு சுவாரஸ்யத்தை இழந்துவிடும் அபாயம் உண்டு என்பதால்தான் வேண்டுமென்றே இத்தனை தாமதப்படுத்தினேன்.

என் இனிய சுஜாதா தனது கலையுலக வாழ்க்கையில் இறுதியாகப் பணியாற்றியது இத்திரைப்படத்தில்தான் என்பதால், இத்திரைப்படம் ஒரு இலக்கியச் சிற்பியின் வரலாறோடு இணைந்து நிற்கிறது என்பதையும் மனதில் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

மிகச் சமீபத்தில் சென்னையில் நடந்த இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளின் அறிமுக விழாவில் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, “என்னுடைய வயது 66. ஆனால் நான் போட்டிருக்கும் டீஷர்ட்டும், ஜீன்ஸ் பேண்ட்டும்தான் என் வயதைக் குறைத்து என்னை ஒரு இளைஞனாகக் காட்டுகிறது..” என்று பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் சொன்னார்.

இயக்குநர் இமயம் தன்னை ஒரு இளைஞனாக காட்டிக் கொள்வதாக எந்தவிதத்தில் சொன்னார் என்பதனை அவரவர் கருத்தில் எடுத்துக் கொண்டு நோக்கினாலும், இளைஞன் என்கிற வார்த்தையை இந்தப் படைப்பின் மூலமும் நிரூபித்திருக்கிறார்.

ஸ்டூடியோக்களின் இருட்டுக்களில் செயற்கை வெளிச்சத்தில் உமிழ்ந்து கொண்டிருந்த தமிழ் சினிமாக்களை இங்கிருந்து புரட்டியெடுத்துச் சென்று கிராமத்து வாய்க்கால் கரையோரத்திலும், புழுதி பறக்கும் செம்மண்ணிலும் பதிவு செய்யத் துவங்கிய பாரதிராஜா, ‘16 வயதினிலே’ மற்றும் ‘சிகப்பு ரோஜாக்களுக்குப்’ பின்பு மூன்றாவதாக தனது சொந்தக் கதையை வைத்துப் படமாக்கியிருக்கிறார் ‘பொம்மலாட்டமாக’..

‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘டிக், டிக்.. டிக்’..., ‘ஒரு கைதியின் டைரி’, ‘கேப்டன் மகள்’, ‘கண்களால் கைது செய்’ என்று தனது திரையுலக வாழ்க்கையில் மிகக் குறைவாகவே சஸ்பென்ஸ், திரில்லர் பக்கம் தனது கவனத்தைத் திருப்பியிருக்கும் இந்தச் சிற்பியின் ஆறாவது திரில்லர் படைப்பு இது.

வழக்கமான களத்துமேட்டு கிராமத்துக் கதைகளை, மண்வாசனைக் களங்களை ரத்தமும், சதையுமாக பாரதிராஜாவால் சொல்லப்பட்ட வரலாறு தமிழ்ச் சினிமாவின் பொற்காலமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த நேரத்தில், அவர் படைத்துள்ள முற்றிலும் மாறுபட்ட இந்தத் திரைப்படம் தமிழ்த் திரையுலகத்திற்கு நிச்சயம் ஒரு புதுமைதான்.

ராணா என்கிற அந்த இயக்குநருக்கு திரையுலக வாழ்க்கையில் கிடைத்த வெற்றி, அவரது சொந்த வாழ்க்கையில் கிடைக்கவில்லை. மனைவியின்பால் அவருக்கு இருந்த வெறுப்பும், இயல்பாகவே தனக்குள் ஊறிப் போயிருந்த இறுக்கமும் சேர்ந்து அவரை ஒரு புரிந்து கொள்ள முடியாத மனிதராக மாற்றியிருக்கிறது.

வெளியாகவிருக்கும் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பிற்காக அனைவரும் காத்துக் கொண்டிருக்க ஹோட்டல் அறையிலிருந்து பத்திரிகையாளர்கள் கண்ணில்படாமல் கதாநாயகியைக் காப்பாற்றி காரில் அழைத்து வரும் இயக்குநர் ராணா, பார்வையாளர்களுக்கு தெரிந்தே கதாநாயகியை காரோடு மலையுச்சியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்கிறார்.

இதில் ஆரம்பிக்கின்ற இயக்குநரின் பரமபத விளையாட்டு, இறுதியில் அவரிடமே வந்து முடிகிறது.

தொடர்ச்சியான சில கொலைகளும் இதற்கு முன் நடந்துள்ளது என்பதனை சொல்லாமல் அடுத்தடுத்து வருகின்ற காட்சிகளில் விசாரணைப் படலத்தின் இடை, இடையே காட்டியுள்ள புது யுக்தி, திரைக்கதையின்பால் அதீத ஆர்வத்தை ஏற்படுத்தியது.

தான் கஷ்டப்பட்டு தேடிக் கண்டுபிடித்த கதாநாயகியை பொத்திப் பொத்திப் பாதுகாத்து வரும் இயக்குநரின் மீது, சந்தேகக் கனல் இறுதிவரையிலும் கனன்று கொண்டேயிருப்பது திரைக்கதையின் ஒரு பலம்.

விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில் இறுக்கமான முகத்தோடும், ஒரு வித அகம்பாவத்தோடும் பதிலளிக்கும் இயக்குநர் ராணா, சிபிஐ அதிகாரியின் தொடர் விசாரணையில் இதயம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். இங்கேயும் அவருடைய உடல் நலனில் சந்தேகப்பட்டு விடாமல் அங்கேயும் விசாரணை தொடர்கிறது.

இயக்குநர் இதுவரையிலும் வெளியுலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்திராத கதாநாயகியைப் பற்றி முழுவதையும் அறியத் துடிக்கும் அதிகாரி, இயக்குநருக்கு நடந்த நிகழ்வுகளை ஞாபகப்படுத்த.. கதை விரிகிறது.

ஒரு குக்கிராமத்தில் ஊர் முழுவதையும் சொந்தமாக்கி வைத்திருக்கும் ஊர்த் தலைவரின் அலம்பல்களைத் தாங்கிக் கொண்டு படப்பிடிப்பை நடத்தினாலும் வரம்பு மீறி போகும்போது பொறுமையிழந்த சூழலில் அந்த ஊராட்சித் தலைவர் கொல்லப்பட அதுதான் இயக்குநர் செய்த முதல் கொலை என்கிறார் ‘கதை’ சொல்லும் சிபிஐ அதிகாரி.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்கும் மலேசியாவில் படத்தின் மறைமுக தயாரிப்பாளரான, பைனான்ஸியரின் மகனும், படத்தின் ஹீரோவுமான ஒருவன், கதாநாயகியை நெருங்கி, நெருங்கிப் போக.. கண்டிக்கவும் முடியாமல் தடுக்கவும் முடியாமல் தடுமாறிப் போகிறார் இயக்குநர்.

ஆனாலும் வரம்பு மீறல் அதிகமாக அவனும் பரிதாபமாக உயிரை விடுகிறான். இது அவர் செய்த இரண்டாவது கொலை என்று குற்றம்சாட்டப்படுகிறது.

இடையில் போட்டுக் கொடுத்தே பேர் வாங்கும் பட்டியலில் இருக்கும் ஒரு உதவி இயக்குனன், இயக்குநரின் கதாநாயகி மீதான பாசத்தை அவருடைய மனைவிக்குப் போட்டுக் கொடுக்க படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து பேயாட்டம் ஆடிவிட்டுப் போகிறாள் இயக்குநரின் மனைவி.

வழக்கை விசாரிக்கும் அதிகாரியின் காதலி அனிதா, இயக்குநரின் தீவிர ரசிகையாக இருக்க.. அவளும் இந்த திரைப்படத்தின் படப்பதிவுகளின்போது உடனிருக்க வேண்டி வருகிறது. தனது இதயம் தொட்ட இயக்குநர், கத்தியைத் தொட்டிருக்க மாட்டார் என்பதில் உறுதியாக இருக்கிறாள் அதிகாரியின் காதலி. ஆனால் அதிகாரியோ தெளிவாகவே இருக்கிறார். இதில் ஒரு மர்மம் இருக்கிறது. அதுதான் என்ன..?

அதுவரையிலும் தள்ளி நின்று பிரமிப்பாயும், பயமாயும் பார்த்த இயக்குநரின் பராக்கிரமத்தை காவல்துறையிடம் சொல்லிக் கொடுத்து ஒதுங்குகிறார்கள் இயக்குநரின் உதவியாளர்களும், வீட்டு வேலையாட்களும். முடிச்சுகள் அனைத்தும் இயக்குநரின் கழுத்தைக் குறி வைத்தே வர.. அவர் கைது செய்யப்படுகிறார். ஆனால் கோர்ட் விசாரணையில் அவர் குற்றவாளி அல்ல என்று தீர்ப்பு சொல்லப்பட விடுதலையாகிறார்.

விடுதலையாகி மலைப்பிரதேசத்தில் தனது ரசிகையுடன் ஓய்வில் இருக்கும் இயக்குநரைத் தேடி வரும் அந்த அதிகாரி தான் கையோடு அழைத்து வந்திருக்கும் ஒரு பையனைக் காட்டிய பின்புதான் திரைக்கதையின் மிக சுவாரஸ்யமான முடிச்சு அவிழ்கிறது. அதுவரையில் பார்வையாளர்கள் ரசித்து வந்த அந்த கதாநாயகி ஒரு பெண்ணே அல்ல ஆண் என்று சொல்லப்படுகின்றபோது ஏற்பட்டது நிச்சயம் அதிர்ச்சி அலைதான்.

அந்த சிறுவனை இயக்குநர் ஏன் பெண் வேடமிட்டு கதாநாயகியாக சித்தரிக்க முன் வந்தார் என்பதில், அச்சிறுவனின் பாவப்பட்ட முன் ஜென்ம வாழ்க்கையை உதவிக்கு அழைக்கிறார் இயக்குநர்.

தாசி குலத்தில் பிறந்த அம்மாவின் வழியில் நடனத்தின் மீதான ஆர்வம் பெற்றெடுத்த பையன்களுக்கு இருந்தாலும், காலம் மாறிய வேகத்தில் நடனத்திற்கு வேலையில்லாமல் உடற்பசியைத் தீர்க்கும் புராதனத் தொழிலில் மூழ்குகிறாள் அம்மா. அதுவும் ஒரு நாளில் ஓய்ந்துபோய்விட.. நடனத்தில் இருந்த ஆர்வம் திரிஷ்னா என்கிற அந்தப் பையன் வேடமிட்டு நடனமாட வேண்டிய சூழல் வருகிறது.

இந்த இடத்தில்தான் கேமிராவும் கையுமாக உலா வரும் இயக்குநரின் கண்ணில் படுகிறான் திரிஷ்னா. பெண்களுக்கே சவால் விடும் வகையில் அவன் ஆடுகின்ற ஆட்டமும், காட்டுகின்ற நளினமும் இயக்குநருக்குள் எதையோ செய்கிறது. ஏற்கெனவே தான் நடிக்க வைத்த நடிகைகள் செய்த அலம்பல்களும், டார்ச்சர்களும் அவரது சிந்தனையைத் தூண்டுகின்றன.

இதுவரையிலும் இல்லாத ஒரு புதுமையை திரையில் செய்து காண்பிக்கத் துடிக்கிறது அவரது மனம். பெண்ணாக நடிப்பதற்கு பெண்ணாகவே இருக்க வேண்டுமா என்ன..? ஒரு ஆணையே பெண்ணாக நடிக்க வைத்துக் காண்பித்தால்தான் என்ன என்று மனக்கணக்குப் போடுகிறார். தனது கனவு கதாநாயகி இவனே என்று அப்போதே முடிவு செய்கிறார். திருஷ்னாவின் அண்ணனிடம் பேசி அவனை பெண் வேடமிட்ட கதாநாயகியாக்கப் போவதாக உறுதியுடன் சொல்கிறார்.

அப்படி கதாநாயகியாக்கப்பட்ட திரிஷ்னாதான் மேற்சொன்ன ஊராட்சித் தலைவரையும், ஹீரோவையும் படுகொலை செய்தான் என்பதுதான் சோகமான, சினிமாத்தனமில்லாத அழகான கிளைமாக்ஸ்.

பார்க்கும்போதெல்லாம் கதாநாயகியாக்கப்பட்டவனின் உடலை காமத்துடன் நோக்கியபடியே இருக்கும் ஊராட்சித் தலைவர் கேரவன் வேனுக்குள் போய் ஒளிந்திருக்க.. ஓய்வெடுக்க வரும் கேரவனுக்குள் வரும் திரிஷ்னாவின் பெண் வேடம் கலைக்கப்பட்டு அவன் தனது சொந்த உடலில் குடிபுகுந்திருக்கும் நேரத்தில் தலையை நீட்டும் ஊராட்சித் தலைவருக்கு தான் அதுவரையில் மோகித்திருந்த கதாநாயகி உண்மையில் நாயகி அல்ல நாயகன் என்பதும் தெரிகிறது.

ஆனாலும் அவருக்குள் இருந்த மோகம் இப்போது மோகினி மீது கொண்ட அசுரர்களின் ‘மோகமுள்’ளாக மாறிவிட “திரிஷ்னாவுடன் சுகிப்பதும் தனக்கு விருப்பமே” என்கிறார். வெறி பிடித்த வேங்கையாய் சுற்றிச் சுற்றி வரும் ஊராட்சித் தலைவரின் விருப்பத்தை நிறைவேற்ற அன்றிரவே அவரது வீட்டிற்கு வந்து ‘தர்மதரிசனம்’ தருவதாகச் சொல்கிறான் திரிஷ்னா.

‘தரிசனத்தை’ வீட்டில் வைத்துக் கொள்ள பயப்படும் ஊராட்சித் தலைவர் தனக்கு இறுதி நாள் அதுதான் என்பதையறியாமல் தனது கல்குவாரிக்கு வரச் சொல்கிறான். அங்கேதான் திரிஷ்னா தனது கோபத்தையெல்லாம் தான் கற்றறிருந்திருக்கும் நாட்டியத்தின் மீது காண்பித்து அதன் மூலம் விசுவரூபமெடுத்து ஊராட்சித் தலைவரை கொலை செய்கிறான்.

மலேசியாவில் தன்னை சந்திப்பதற்கு முன்பாகவே “ரேப் செய்யப் போறேன்.. கட்டிப் பிடிக்கப் போறேன்.. முத்தம் கொடுக்கப் போகிறேன்..” என்றெல்லாம் போனில் பூச்சாண்டி காட்டிய ஹீரோவை.. கற்பழிக்க முயல்வது போன்ற காட்சியில் நிஜமாகவே கற்பழிக்க ஆசைப்படும் ஹீரோவை.. தனியே அழைத்து விண்ணுலகுக்கு அனுப்பி வைக்கிறான் திரிஷ்னா.

இந்த இரண்டு குற்றங்களையும் திரிஷ்னா இயக்குநரிடம் சொல்லுகின்ற இடம்தான் படத்தின் முடிச்சு அவிழத் தொடங்கிய இடம். அது புதிய படத்தின் அறிமுக விழா. அன்றைக்குத்தான் அந்தப் படுகொலைகளை செய்தது தனது மானசீக கதாநாயகியாக்கப்பட்ட திரிஷ்னா என்பது இயக்குநருக்குத் தெரிய வர.. நிமிடத்தில் பரபரவென பரபரப்பாகிறார் ராணா.

பத்திரிகையாளர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கை தேர்ந்த பார்முலா ரேஸ் கார் ஓட்டுநரைப் போல் தனது கதாநாயகியைக் கடத்திக் கொண்டு போகிறார். வழியில் அவருடைய ஏற்பாட்டின் பேரில் அதே போன்றதொரு காரில் வரும் திரிஷ்னாவின் அண்ணன் தனது தம்பியை அழைத்துக் கொண்டு போக.. திரிஷ்னா அணிந்திருந்த சேலையை மட்டும் தனது முன் சீட்டில் ஒரு பொம்மைக்கு அணிவித்து காரோடு சேர்த்து சொக்கப்பானை கொழுத்தியிருக்கிறார் இயக்குநர்.

இந்த படுகொலை நியாயமா? நியாயமில்லையா..? என்கிற கேள்விக்குள் இயக்குநர் செல்லவேயில்லை. முடிந்தது. எல்லாமே தற்காப்புக்காகத்தான்.. இயக்குநரின் தவறு கொலையையும், கொலையாளியையும் மறைத்தது.. திசை திருப்பியது.. ஆனால் இயக்குநரின் திரைப்பட ஆர்வம்.. கலையார்வம்.. இதுவரையில் யாரும் செய்ய விரும்பாத ஒரு ஆணை பெண்ணாக காட்டத் துடித்த சாகசம்..?

இதுவரையில் தானும் ரகசியமாக நேசித்த ஒரு இயக்குநர்.. தனது அதிகார வாழ்க்கையில் தான் சந்தித்த முதல் வித்தியாசமான மனிதர் என்ற பற்பல விசித்திரங்களை கண்டறிந்த திருப்தியே போதுமென்ற அசைவில் அதிகாரி “வழக்கு முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும்..” என்று சொல்லிவிட்டுப் போக..

தனது நடனத்திற்கு இனி கவலையில்லை என்ற சந்தோஷக் கூச்சலில் திரிஷ்னா நடனத்துடன் செல்கின்ற அந்த கவிதை காட்சியோடு தமிழ்ச் சினிமா வரலாற்றில் அடுத்தக் கட்ட நகர்தலை சப்தமில்லாம் செய்து காட்டியிருக்கும் இத்திரைப்படம் நிறைவு பெறுகிறது.

முதல் வணக்கம் இயக்குநருக்கு..

கலை என்பதும் நடிப்பு என்பதும் எப்படி ஒரு மொழியோ அதேபோல் இயக்குதலும் ஒரு மொழி. இதனை இயக்குநர் இமயத்திற்கு சொல்லித் தர வேண்டியதில்லை. போட்டி போடுவது என்று முடிவு செய்தாகிவிட்டது. பின்பு ஏன் ஒரு பக்கம் மட்டுமான மாற்றம் என்று நினைத்து செல்லூலாய்டின் அனைத்து பிரேம்களிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார் இயக்குநர் இமயம்.

இப்படியெல்லாம்கூட ஷாட்டுகள் வைக்க முடியுமா என்பதை இப்போதைய இளம் இயக்குநர்களுக்குச் சொல்லிக் காட்டியிருக்கிறார் இமயம். ஆடு, மாடு, கோழி, மலை, ஆறு, குளம் என்று திரைப்படத்தில் இடம் பெறும் அனைத்து அ•றிணைகளையும், ஊர்வன, பறப்பவனையையும் குளோஸப்பில் காட்டாமல் விட்டதில்லை. குளோஸப் காட்சிகள்தான் இயக்குநர் இமயத்திற்கு மிக, மிக பிடித்தமான ஷாட். அதை அவரே இருபது வருடத்திற்கு முன்பே சொல்லியிருக்கிறார்.

இத்திரைப்படத்தின் காட்சிகளை அப்படியே கண் முன்னே வரிசைப்படுத்திப் பாருங்கள். எத்தனை, எத்தனை குளோஸப் காட்சிகள் என்று தெரியுமா? உங்கள் மனக்கண்ணில் முதலில் வருவது அக்காட்சிகள்தான். அவைகளே கதைகளை விரிக்கின்றன நம் முன்னே..



தட்டில் சப்பாத்தியை வைத்துக் கொண்டு காஜல் அகர்வால், நானா படேகரிடம் நீட்டுகின்ற காட்சியிலும், தொடர்ந்து பேசுகின்ற அக்காட்சியின் போது காட்டியிருக்கும் குளோஸப் அமைப்புகள் கொள்ளை அழகு. இந்தக் கோணத்தில்கூட ஒரு நடிகையை அழகாகக் காட்ட முடியுமா என்று ஒரு நிமிட சிந்தனைக்குள் ஆழ்த்திவிட்டது அக்காட்சி.

டிராபிக் சிக்னலில் நொடியில் பார்த்த மாத்திரத்தில் பைக்கிலிருந்து தாவி ராணவின் காரில் செல்லும் கஜாலா தனது மானசீக இயக்குநரிடம் பேசுகின்ற பேச்சும், ஆட்டோகிராப் வாங்குவதும் குழந்தைத்தனமான கொஞ்சல்.

ரஞ்சிதாவின் அறிமுகக் காட்சி யாருமே செய்யத் துணியாத செயல். அது ரஞ்சிதாதான் என்று கண்டுபிடிப்பதற்குள், காட்சிகள் தாவிவிட்டாலும் அக்காட்சியில் பேசப்பட்ட வசனங்களும், ரஞ்சிதாவின் தோற்றமும் கோணங்கித்தனம் என்றாலும் இதுதான் ரசிக்க வைக்கும் தன்மை.

ஒரு நல்ல இயக்குநர் களிமண்ணையும் நடிக்க வைத்துவிடுவார் என்று புகழாரம் சூட்டினாலும் அந்தக் களிமண்ணும் நல்ல மண்ணாகவே இருக்க வேண்டும். ஆனால், இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லாமல் வாய்த்திருக்கிறார் நானாபடேகர்.



இந்தித் திரையுலகில் எந்தவொரு வேடமாக இருந்தாலும் அலட்சியமாக செய்து முடித்துவிட்டுப் போகும் நானா, இயக்குநர் ராணாவாகவே இப்படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கிறார். சில நாள் தாடியுடன் படம் முழுக்கவே ஒரு வெறுப்படைந்த மனிதராக காட்சியளிக்கிறார் நானா.

கால் நனைந்து நடிக்க வேண்டிய காட்சியில் மினரல் வாட்டரை காலில் கொட்டிவிட்டு இயக்குநருக்கே அட்வைஸ் செய்கின்ற அந்த நடிகையை “இந்த மேனாமினுக்கியை அனுப்பிரலாமா..?” என்று தன் கட்டைவிரல் நண்பனிடம் கேட்டு விரட்டியடிக்கிற கோபத்திலேயே ஆரம்பித்துவிடுகிறது இவரது அமர்க்களம்.

மணிவண்ணன், விவேக்கின் அலம்பல் தாங்காமல், சகிக்கவும் முடியாமல் பொறுப்பான இயக்குநராக தயாரிப்பாளரை விரட்டிவிடும் காட்சி..

படப்பிடிப்புத் தளத்திற்கே வந்த மனைவி டச்சப் பெண்ணை புரட்டியெடுத்துவிட்டுப் போக.. அதனை ஏற்றுக் கொள்ள முடியாமலும், எதிர்க்க முடியாமலும் கையறு நிலையில் நிற்கும் முக பாவனை.. அபாரம்..

அதற்கு சற்றுமுன் அவர் சொல்லிக் கொடுத்த காதல் காட்சியினை இந்த கொடூரத் தாக்கத்தை மனதில் ஏற்றிக் கொண்டு, மீண்டும் சொல்லிக் கொடுக்கும்போது காட்டுகின்ற நடிப்பு ஒப்பனையில்லாதது.

அவ்வப்போது கண்ணீரோடு தன்னருகே வந்து நிற்கும் திரிஷ்னாவை வாஞ்சையோடு அணைத்து ஆறுதல் சொல்லும் உன்மத்த நடிப்பு..

“செலவு பிடிக்குமே ஸார்..” என்று சொல்லும் தயாரிப்பாளரிடம், “என்னைவிட இளிச்சவாயன் எவனும் கிடைக்க மாட்டான்..” என்று சட்டென்று சீறுகின்ற சீற்றம்..

ஹீரோவின் டார்ச்சர் தாங்காவில்லை என்று தன்னிடம் புகார் சொல்ல வரும் தயாரிப்பாளரை பார்த்து ஸ்னூக்கர் டேபிளில் இருந்து நிமிர்ந்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கூர்ந்து பார்க்கும் அந்த ஒரு பார்வை போதும்.. ராணாவாகவே வாழ்ந்திருக்கிறார் நானா படேகர்.

உடல் மொழியைப் பயன்படுத்தி நடிப்பை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தவர்கள் இந்தியாவிலேயே சொற்பத்தினர்தான். நடுவீட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளிவீசி “என் தலைல கொண்டு வந்து கொட்டுங்க..” என்று பொருமுகிறார் பாருங்கள். மனிதருக்கு இத்திரைப்படத்தின் மூலம் தேசிய விருது நிச்சயம் உண்டு எனலாம்.

நானாவின் முகமும், உடலும் காட்டிய நடிப்பிற்கு உறுதுணையாக இருந்திருக்கிறது நிழல்கள் ரவியின் டப்பிங் குரல். கிட்டத்தட்ட மணிரத்னம் ஸ்டைலில் இதுவரையில் இல்லாத புதுமையாக பாரதிராஜாவின் இத்திரைப்படத்தில் ஒலிச் சேர்ப்பும், ஒலி வடிவமும் முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.

காலம் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் இயக்குநர்களின் தனிப்பாங்கு மட்டும் மாறக்கூடாது என்பதனால் ஆர் வரிசையில் ருக்மணியை அறிமுகப்படுத்தியிருக்கிறார் இமயம்.

திரிஷ்னாவாக வலம் வருகிறார் ருக்மணி. முதல் திரைப்படம் போலவே தெரியவில்லை. அனுபவம் வாய்ந்தவர்களின் கலை படைப்புகள் சோடை போகாது என்பதுபோல இவரது நடிப்பாற்றலும் வெளிக்கொணரப்பட்டிருக்கிறது. நடனத்தில் தேர்ந்தவர்தான் இந்த வேடத்துக்கு வேண்டும் என்று மிகத் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கிடைத்தவர் இந்த ருக்மணி.


சின்னச் சின்ன முகச்சுழிப்புகளுக்குக்கூட அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதை குளோஸப் காட்சிகளில் பார்க்க முடிகிறது. மணிவண்ணனையும், விவேக்கையும் சமாளிக்க முடியாமல் சொட்டு கண்ணீரோடு இயக்குநரின் முன்னால் போய் நிற்கும் காட்சியும், இரண்டு கொலைகளையும் நான்தான் செய்தேன் என்று ஹோட்டல் அறையில் சொல்லும்போதும் இமயத்தின் நடிக்க வைக்கும் திறமை பளீச்..

இந்தத் திரைப்படம் சொன்னதுபோலவே இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே வெளியாகியிருந்தால் காஜல் அகர்வால் என்கிற பெண்ணிற்கு மிகச் சிறந்த அறிமுகமாக இருந்திருக்கும். சற்றுத் தாமதமாகிவிட அந்தப் பெருமை இப்படத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கிறது.

மிக அழகு. இந்த அழகின் ஓவியத்தை முழுக்க, முழுக்க காட்டிவிட்டார் இயக்குநர். காஜல் இப்படத்திற்குப் பின்பு நடித்தத் திரைப்படங்களில்கூட அவரை இந்த அளவுக்கு அழகாக நடிக்க வைத்தோ, தென்பட வைத்தோ காட்டியிருக்க மாட்டார்கள் என்று உறுதியுடன் சொல்லலாம்.

“அண்ணன் எப்போது சாவான் திண்ணை எப்போது காலியாகும்?” என்பதைப் போல் புருஷன் எப்போது இறப்பான் என்று தெரிந்தால் சொத்து விவகாரத்தில் கையெழுத்து வாங்கலாம் என்கிற அளவுக்கு ‘பாசமான’ மனைவி கேரக்டரில் ரஞ்சிதா.

“எவகூட படுத்திருக்க..? நான் ஒருத்தி இங்க இருக்கேன். அங்க எவ, எவளோ கேக்குதா உனக்கு..?” என்று போனில் புருஷனிடம் பொறுமுகிற பொறுமல் அட்சரச் சுத்தம் நடிப்பு.

அர்ஜூன் தன் காலைத் தூக்காமல் நடந்தே நடித்து முடித்திருக்கும் ஒரே திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். ஆனாலும் பொருத்தமான தேர்வுதான். நானா படேகர் இப்படித்தான் நடிப்பார் என்பதனை யூகித்து அவருக்கேற்றாற்போல் இருக்க வேண்டி, அர்ஜூன் இப்படத்திற்குத் தேவைப்பட்டிருக்கிறார் என்று உணர்கிறேன்.

மணிவண்ணனும், அவர் மைத்துனர் விவேக்கும் வழக்கம்போல செய்ய வேண்டியதை செய்திருக்கிறார்கள். சொல்லிக் கொடுத்ததை பேசியிருக்கிறார்கள். ஆனாலும் மணிவண்ணனுக்கு ஒரு நன்றி. “பெண் என்ற திரிஷ்னாவைவிட ஆணாக இருக்கும் திருஷ்னாவை மோகிப்பது அம்சமாக இருக்கும்” என்பது போன்ற வசனத்தை பேசும் கேரக்டரை ஏற்று நடித்துள்ள தைரியத்தை பாராட்டியே தீர வேண்டும். விவேக் இத்திரைப்படத்திற்குத் தேவைப்படாத ஒரு கேரக்டர். ஆனால் படத்தின் வியாபாரத்திற்காக இடைச்செருகல் செய்யப்பட்டிருக்கிறார் என்பது படத்தினை பார்க்கும்போதே தெரிந்தது.

சின்னச் சின்ன வசனங்கள், வெற்று காட்சிகளில் கதையை நகர்த்துதல், குறிப்பால் உணர்த்துதல் என்று பாரதிராஜாவின் டச்சப் நிறையவே இருந்தும் படத்தின் துவக்கத்தில் காட்சிகள் ஜெட்வேகத்தில் பறப்பது யாருடைய ஸ்டைல் என்று புரியவில்லை. கொஞ்சம் நிறுத்தி, நிதானமாகத் துவக்கியிருக்கலாம். காட்சிகளில் வேகத்தைக் கூட்டுவது மாசலா படத்திற்கு மட்டுமே தேவையானது. இங்கே எதற்கு..?

வழக்கமாக பாரதிராஜா என்றாலே வெள்ளை உடை தேவதைகள் கனவில் வருவார்களே என்ற கவலையுடன் உட்கார்ந்திருந்தவர்களையும், எதிர்பார்த்து வந்தவர்களையும் நல்லவேளையாகக் காப்பாற்றிவிட்டார் இயக்குநர். ஒரு பாடல் காட்சியில் கண்ணை உறுத்தாத வகையில் வெள்ளை உடையில் பெண்களை வரவழைத்துவிட்டார் இயக்குநர். அதிலும் காஜல் ராணாவுடன் எதிரெதிராக அமர்ந்து பேசுகின்ற காட்சியில் வெள்ளை உடையில் நிஜமாகவே தேவதை போல் தெரிந்தது அழகு.

படத்தின் துவக்கத்தில் மோதிரம் அணிந்த அந்த முத்திரைக் கைகளை கூப்பி படத்தினைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக வார்த்தைகளில் சிலம்பாட்டம் ஆடும் பாரதிராஜா, இந்த முறை இரண்டு காட்சிகளில்கூட தென்பட்டிருப்பது ஆபத்தான விஷயத்திற்கு அடிகோலுகிறது.

விவேக் அறிமுகமாகும் காட்சியில் நானா படேகருடன் டிராலியில் கேமிராவைப் பிடித்தபடி செல்பவர் பாரதிராஜா. பின்பு நானா விடுதலை செய்யப்பட்ட பத்திரிகை செய்தியைக் காட்டும் காட்சியிலும் மின்னல் வேகத்தில் கடையில் இருந்து பத்திரிகை வாங்கிவிட்டுச் செல்கிறார் இயக்குநர்.

ஒரு வித்தியாசமான, முன் மாதிரியான திரைப்படங்களில் இது மாதிரியான கண்காட்சி வித்தைகளை காட்டவே கூடாது. அது திரைப்படத்தின் போக்கினையும், திரைப்படத்தின் பெருமையையும் மட்டுப்படுத்திவிடும்.

நானா படேகரை மனதில் வைத்து ஹிந்தியிலும் இப்படம் வெளியாகும் சூழலால் திரைப்படத்தில் பல வடக்கத்திய முகங்கள் தென்படுகின்றன. திரைப்படம் கீழ்த்தட்டு, பாரதிராஜாவின் ரசிகர்கள் என்றில்லாமல் மேல்தட்டு மக்களையும் கவரத்தான் வேண்டும் என்பதால்(கதை அப்படிப்பட்டது) ஆங்கில வசனங்கள் அத்துமீறி எட்டிப் பார்த்துள்ளன.

பாரதிராஜாவின் கண்ணுக்குக் கண்ணனான ஒளிப்பதிவாளர் B.கண்ணனின் ஒளிப்பதிவும் சொல்லக் கூடியதாகத்தான் இருக்கிறது. இதுவரை தேனி மாவட்ட கிராமத் தெருக்களையே சுற்றி சுற்றி வந்த கண்ணனின் கேமிரா, இதில் புதிய ஒளிப்பதிவு இயக்குநர்களுக்கு சவால் விடுவதைப் போல் காட்சியளிக்கிறது.

காதில் கேட்ட பாடல்கள், திரையரங்கைவிட்டு வெளியில் வந்தவுடனேயே காணாமல் போய்விட்டது ஒரு மிகப் பெரிய குறை. ஏன் இப்போதெல்லாம் அனைத்து இயக்குநர்களுமே பாடல்களிலும், இசையிலும் கவனம் செலுத்த மறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் இப்போதைய நிலவரப்படி ஆடியோ பிஸினஸில் நிறையவே பணம் பண்ண வாய்ப்பிருக்கிறது.

திரைக்கதையில் ஆங்காங்கே சிற்சில குறைபாடுகள் என் கண்களுக்குத் தென்பட்டாலும் பலராலும் குறிப்பாகச் சொல்லப்பட்ட எடுத்த எடுப்பிலேயே சிபிஐ விசாரணையா என்கிற கேள்விக்கு பிற்பாடு அர்ஜூன் பதில் சொல்வது போல் எடுக்கப்பட்டிருந்த சில காட்சிகள் கத்திரிக்கோலில் அடிபட்டு போனதால் புரியாமலேயே போய்விட்டது.

“அந்த இருவரையும் நான்தான் கொலை செய்தேன்” என்று திரிஷ்னா ஹோட்டல் அறையில் சொன்னவுடன் நொடியில் யூகித்து அடுத்தடுத்த திகில் காரியங்களைச் செய்யும் ராணா திரிஷ்னாவின் சகோதர்களை அழைத்தது எப்படி? போக்குவரத்திலேயே சுற்றி சுற்றி வந்தவரின் கையில், வெடிகுண்டை வெடிக்கச் செய்யும் ஏர்பாட்டுடன் ரிமோட் வந்தது எப்படி என்பது போன்ற சிற்சில திரைக்கதை குழப்பங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

தமிழ்த் திரைப்படங்களின் வியாபாரத்திற்கு உறுதுணை செய்யும் பாடல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் வைக்க வேண்டிய கட்டாயம் இப்படத்திற்கும் இருந்து தொலைத்ததால், அக்காட்சிகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் இத்திரைப்படம் நிச்சயம் உலகத் தரமானதுதான். இதில் எனக்கு சந்தேகமில்லை.

ஆனால் உலகத் தரத்தில், சிறப்பு வாய்ந்த திரைப்படங்களை வழங்கினால் ஆதரவுக் கரம் நீட்டி, கை கொடுக்க வேண்டியது யார்..? ரசிகர்கள்தான். இத்திரைப்படத்திற்கு அது கிடைத்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

2 வருடங்களாக ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தை நம்பி மொத்தமாக வாங்கிவிடுவார்கள் என்று உட்கார்ந்திருந்து, கடைசியில் வேறு வழியில்லாமல் தனது 40 வருட சினிமா அனுபவத்தில் முதல் கசப்பான அனுபவத்தோடு படத்தினை சொந்தமாக வெளியிட்டுள்ளார் பாரதிராஜா.

ஆனால் முதல் 20 நாட்களிலேயே சென்னை போன்ற பெருநகரங்களில் திரைப்படத்தை தூக்கிவிட்டார்கள் தியேட்டர்காரர்கள். சிறிய நகரங்களில் 10 நாட்கள்தான் தாக்குப் பிடித்ததாகச் சொல்கிறார்கள். தரமான திரைப்படம்தான் என்றாலும் அதிகப்படியான ஒலிப்பதிவு டெக்னிக், ஆங்கில வசனங்கள், இறுக்கமான திரைக்கதை என்று வெகுஜன மக்களால் சட்டென்று பாரதிராஜாவின் திரைப்படமாக ஜீரணிக்க முடியாமல் போனது வருத்தமாக உள்ளது.

தரம் உயர்ந்தது என்றால் மக்கள் ஆதரவு குறைவாக உள்ளது. மக்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது என்றால் தரம் குறைவாக உள்ளது.. உங்களுக்கு எது வேண்டும்..? மக்களுக்கு எது வேண்டும்? கலைஞர்களுக்கு எது வேண்டும்?

களிப்பாட்டத்தைத் தேடியலைந்த ரசிகர்களுக்காகத்தான் விவேக்கின் காமெடியை வலுக்கட்டாயமாக நுழைத்திருக்கிறார்கள். அதிலும் அரைகுறை நம்பிக்கையுடனேயே விவேக்கின் காமெடி தேவைப்பட்டிருப்பதால் அதுவும் பலனைத் தரவில்லை.

இத்திரைப்படத்தில் இருக்கின்ற தரத்தைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு நமது ரசிகர்களுக்கு பக்குவம் இல்லையா..? அல்லது நமது ரசிகர்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் இயக்குநர்களுக்கு இல்லையா என்பது பேசப்பட வேண்டிய விஷயம். ‘அஞ்சாதே’யில் இருந்த திரைக்கதை பலம் இதில் இல்லாமல் இருப்பதுதான் தோல்விக்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

எப்படியிருந்தாலும், சினிமாவில் ஒரு பாடமாக வைக்க வேண்டிய அளவுக்கு நல்லதொரு திரைப்படத்தினை திரையுலகத்திற்கு படைத்திருக்கும் இயக்குநர் இமயத்திற்கு எனது சல்யூட்..

நன்றி..