18-10-2010
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு திரைப்படம் வெளியானவுடன் இமயமலைக்குச் சென்று பல ஆண்டுகளாக உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படும் தனது ஆன்மிகக் குருவான பாபாவின் குகையில் அமர்ந்து தியானம் செய்து மறுபடியும் புல் சார்ஜ் ஏற்றிக் கொண்டு திரும்பி வருவதுதான் தன் வழக்கம் என்று ஏதோ ஒரு பட விழாவில் அண்ணன் ரஜினி கூறியிருந்தார்.
சென்ற முறை அவர் அப்படி இமயமலைக்குச் சென்றபோது அவருடன் சென்றிருந்த ஹரி என்னும் நண்பரைத் துப்பறிந்து கண்டறிந்த பத்திரிகைகள், அவருடன் ரஜினியின் அனுபவங்கள் என்ற தலைப்பில் பேட்டி கண்டு கல்லா கட்டியது நினைவிருக்கலாம்.
விஜய் டிவி ஒரு படி மேலே போய் சூப்பர் ஸ்டார் சென்று வந்த பாதைகளில் கேமிராவுடன் சென்று படமெடுத்து, அவர் தியானம் செய்த குகையையும் பதிவு செய்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு இமயமலைக்குச் சென்று வந்தால் அமைதி கிடைக்கும் என்று சொல்லியது.
இந்த முறையும் 'எந்திரன்' என்னும் சூப்பர்ஹிட்டை கொடுத்துவிட்டு வழக்கம்போல அண்ணன் இமயமலைக்குச் சென்று வந்திருக்கிறார். எப்போதும் காதும், காதும் வைத்தாற்போல் சென்று வருபவர் இந்த முறை மட்டும் எந்தத் தேதியில் செல்கிறார்? எந்தத் தேதியில் திரும்பி வருகிறார்? என்கிற செய்தியையெல்லாம் வெளியில் ரிலீஸ் செய்துவிட்டுத்தான் போனார்.
போனவர் தனது தியானத்தை முடித்துவிட்டு பத்திரமாக திரும்பிவிட்டார். இனி ரசிகர்களுக்கான விருந்து அழைப்பு என்றைக்கு என்று பத்திரிகைகள் செய்திக்காக காத்திருக்கும் நேரத்தில் அதிசயமாக இமயமலையில் ரஜினி ரவுண்ட் அடித்த புகைப்படங்களை பேஸ்புக்கில்தான் முதலில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்.
யார் இந்தப் புண்ணியவான்கள் என்று தெரியவில்லை.. ரஜினிக்குத் தெரியாமல் புகைப்படம் வெளியில் வர வாய்ப்பில்லை என்பதால் அண்ணன் தேறிவிட்டார் என்றே நினைத்துக் கொள்ளலாம்.
புகைப்படத்திற்காக இமயமலையிலும் சூப்பர் ஸ்டாராகவே போஸ் கொடுத்திருப்பதைப் பார்த்த பின்புதான் இதனை நாமும் வெளியிட்டு கல்லா கட்டினால் என்ன என்று தோன்றியது..?
இந்தப் புகைப்படங்களில் சூப்பர் ஸ்டார் தெரிகிறாரா? சாதாரண ரஜினிகாந்த் தெரிகிறாரா என்று நீங்களே பார்த்து முடிவு செய்து கொள்ளுங்கள்..!
நன்றி..!
|
|
Tweet |














