பட்டதாரி - சினிமா விமர்சனம்

25-11-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

GES Movies சார்பில் தயாரிப்பாளர் எஸ்.இளங்கோவன் லதாவின் தயாரிப்பில் இயக்குநர்.ஆர்.சங்கர்பாண்டி இயக்கியிருக்கும் படம் இது.
இதுவும் மதுரையை மையப்படுத்திய கதைதான். கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலைக்கு போகாமல் ஊரைச் சுற்றி வரும் 5 நண்பர்களை பற்றிய கதை இது.


அபி சரவணன், அம்பானி சங்கர், கலையரசன், துரை, கார்த்திக் என்ற இந்த 5 இளைஞர்களும் இணை பிரியாதவர்கள். இதில் அபி சரவணன்தான் ஹீரோ. கொஞ்சம் பணக்காரர். எல்லாவற்றையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்கிறார். பெண்கள் என்றாலே கொஞ்சம் வெறுப்பு. இதற்கு பிளாஷ்பேக் காரணமும் உண்டு.
இவர்களில் ஒருவன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அவன் சரியாக வேலைக்குப் போகாமல் ஊரைச் சுற்றுவதால் கடைசியில் வேறொருவனை கல்யாணம் செய்து கொண்டு செட்டிலாகிறாள் காதலி. இன்னொருவன் கடலை போடுவதற்காகவே பெண்களை வளைக்கப் பார்க்கிறான். அம்பானி சங்கர் குள்ளமாக இருப்பதால் பெண் கிடைக்க சிரமம் இருப்பதை உணர்ந்து பள்ளி மாணவியின் பின்னால் சென்று காதலித்து பொழுதைப் போக்குகிறான். இப்படிப்பட்ட நண்பர்கள் நிஜத்தில் எப்படியிருப்பார்களோ.. அப்படியேதான் திரையிலும் குடியும், கொண்டாட்டமுமாக இருக்கிறார்கள்.
ஹீரோயின் அதிதி, தற்செயலாக அபி சரவணனை பார்க்கிறார். பார்த்தவுடன் அவன் மீது காதல் கொள்கிறாள். ஆனால் ஏற்கெனவே ஒரு காதல் தோல்வியால் பெண்கள் மீதே வெறுப்பில் இருக்கும் அபி சரவணன், அதிதியின் காதலை ஏற்க மறுத்து தப்பித்து ஓடுகிறார்.
அதிதி தற்செயல் விபத்தொன்றில் சிக்கி காயம்பட அது தன்னால் விளைந்ததோ என்று நினைத்து பயந்து போன அபி சரவணன், தனக்கு இப்போது காதல் கசக்குவதற்கான காரணத்தை பிளாஷ்பேக்கில் சொல்கிறார்.
அந்தக் கதையையும் கேட்டுவிட்டு திடீரென்று அதிதி மனம் மாறி தான் அபியை காதலிக்கவே இல்லை என்று டபாய்க்க.. முடிவு என்னாகிறது என்பதுதான் இந்த ‘பட்டதாரி’ படத்தின் கதை.
வழக்கம்போல இந்தப் படமும் இளைஞர்களை காதல் என்னும் கொண்டாட்டத்திற்குள்ளேயே தள்ளப் பார்க்கிறது. அவர்கள் செய்வது தவறு என்பதை அவர்களே உணர்வதற்கான அழுத்தமான காட்சிகளே படத்தில் இல்லை. காதலன் சும்மாவே ஊர் சுற்றுகிறான் என்பதற்காக காதலி அவனை விட்டுப் பிரிவதும், அதன் பின்பு அவன் காதலி தன்னைவிட்டுப் போய்விட்டாள் என்று மகளிரை மானாவாரியாகத் திட்டுவதாகத்தான் காட்சியை நீட்டித்திருக்கிறார்கள்.
திடீரென்று ஏதோ ஒரு ஞானதோயம் வந்த்தை போல வேலைக்கு போகலாம் என்று முடிவெடுக்கிறார்கள். அதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றவுடன் கடைசியில் டீக்கடை வைத்து அங்கேயும் கதையடிக்கவே அமர்கிறார்கள் என்பதாக முடித்திருக்கிறார்கள்.
இது இளைஞர்களை நல்வழிப்படுத்துவதுபோல தெரியலையே..? அவரவர் படித்த படிப்புக்கு ஏற்றாற் போன்று கிடைத்த வேலைக்குப் போய் குடும்பத்தைக் காப்பாற்றவும், பெற்ற தாய், தந்தையரை பேணிக் காக்கவும் என்றைக்கு தமிழ்ச் சினிமா சொல்லிக் கொடுக்கப் போகிறது என்று தெரியவில்லை..!
பன்னெடுங்காலமாக ஒவ்வொரு வீட்டிலும் புழங்கி வரும் காதல் எதிர்ப்பு வசனங்கள் இந்தப் படத்திலும் ரீல் பை ரீல் வலம் வருகிறது. கல்லூரியில் உருவாகும் காதலை இன்னும் எத்தனை சினிமாக்கள்தான் ஆதரிக்கப் போகின்றன என்று தெரியவில்லை. இந்தக் காதலை நியாயப்படுத்துபவர்கள் சம்பாதிக்கவே துப்பில்லாத காதலன் கல்யாணம் செய்து என்ன செய்யப் போகிறான் என்பதை மட்டும் வசதியாக சாய்ஸில் விட்டுவிடுகிறார்கள்..! இதனால்தான் பெற்றவர்களின் காதல் எதிர்ப்புகள் வெகுஜன விரோதமாகவே இங்கு பார்க்கப்படுகின்றன. இந்தப் படமும் அதைத்தான் செய்திருக்கிறது.
நடிகர்கள் யாரும் நடிப்பில் குறை வைக்கவில்லை. இயக்கமும் சிறப்புதான். திரைக்கதை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பது ஒன்றுதான் பெரும் குறை. ஹீரோயின்களான ராசிகாவும், அதிதியும் நடிப்பில் கரை கண்டவர்கள்போல் நடித்திருக்கிறார்கள். உண்மையிலேயே சில, பல குளோஸப் காட்சிகளில் இவர்களின் அழுத்தமான நடிப்பை காண முடிந்திருக்கிறது.
இதேபோல் அபி சரவணனும்.. தன் காதலியின் இறப்புக்கு வந்து கதறியழும் காட்சியிலும், நண்பர்களுடன் அலட்சியப் போக்குடனும், எதைப் பற்றியும் கவலைப்படாத தன்மையுடனும் நடித்திருக்கும் காட்சிகளில் தனித்தன்மையைக் காட்டியிருக்கிறார். இன்னும் பல நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மேலும் பல ரவுண்டுகள் வரலாம்.
எஸ்.எஸ்.குமரனின் இசையில் ‘சிங்கிள் சிம்’ பாடல் தூங்கிக் கொண்டிருந்தவர்களை தட்டியெழுப்பி படத்தைப் பார்க்க வைத்திருக்கிறது. பாராட்டுக்கள்.
அனைத்து கேரக்டர்களையும் அழுத்தமாக நடிக்க வைத்திருக்கும் இயக்குநர், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜெயவாணியை மட்டும் ஏன் இப்படியொரு டிராமா ஆர்ட்டிஸ்டை போல நடிக்க வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அப்படியொரு சினிமாட்டிக் கேரக்டர்.. கண்ணில் அப்பிய மையும், பவுடர் கேக்கும் பளிச்சென்று தெரியுமளவுக்கு குளோஸப் வைத்தவர்கள்.. அவர் ஏன் வசனங்களை இப்படி மென்று, மென்று துப்புகிறார்  என்பதற்கான காரணத்தைச் சொன்னால் தெரிந்து கொள்வோம்.
அவரை துவக்கத்தில் வில்லியாக காட்டுவதா அல்லது நல்ல கேரக்டராக காட்டுவதா என்று இயக்குநருக்கு குழப்பம் வந்துவிட்டதுபோலும். அவருக்கேற்பட்ட குழப்பத்தில் பார்வையாளனுக்கும் குழப்பம் கூடிவிட்டது.
காதலன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக காதலி பழியைத் தான் சுமந்து கொண்டு வீடு திரும்புவது நல்ல திருப்பம்தான். ஆனால் இது இந்த இன்ஸ்பெக்டரம்மாவினால் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
தொடர்ந்து நடக்கும் கடைசி நேர கடத்தல் கிளைமாக்ஸ் டிவிஸ்ட் எதிர்பாராததுதான். இந்த ஒரு விஷயத்துக்காகவே படம் முழுவதையும் சிலாகிக்க வேண்டும் என்றால் எப்படிங்க இயக்குநரே..?!
கடைசியில் சாதாரணமானதொரு கமர்ஷியல் படமாகவே இந்தப் ‘பட்டதாரி’யைச் சொல்ல முடியும்..!

0 comments: