அச்சம் என்பது மடமையடா - சினிமா விமர்சனம்

14-11-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரையுலகில் தற்போது பல புதிய இயக்குநர்கள் புது புது கதைக்களனோடு களத்தில் இறங்கி தங்களது சிறப்பான இயக்கத்தினால் ஒருவரையொருவர் தாண்டிக் கொண்டு ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கும் இந்த நேரத்தில். இவர்களோடு போட்டி போட்டு ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழின் அறிவுஜீவி இயக்குநர்களாக அறியப்பட்டவர்களும் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒருவர் கெளதம் வாசுதேவ் மேனன்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ என்றொரு படம் எக்குத்தப்பாக ஓடவும். இதைத் தொடர்ந்து ‘வேட்டையாடு விளையாடு’ படமும் ஓட்டமெடுக்க.. புதிய பார்வையாளர்களுக்குப் பிடித்தமானவராக மீடியாக்களில் புகழப்பட்டவர்.
மீண்டும் தலையெடுக்க துவங்கி பல்வேறு காரணங்களினால் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தவர் தனது வெற்றிப் பட ஹீரோ சிம்புவின் உதவியால் இப்போது திரைக்கு வந்திருக்கிறார்.
கொஞ்சம் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’.. கொஞ்சம் ‘வேட்டையாடு விளையாடு’ படங்களின் கதைகளில் ஆங்காங்கே எடுத்து சொருகப்பட்ட ஒரு திரைக்கதையில் ‘பழைய கள் புதிய மொந்தை’ என்னும் பாணியில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்கிற இந்தப் படத்தின் மூலம் மீண்டு வந்திருக்கிறார்.
சிம்பு, பி.இ. முடித்து அதன் பின் எம்.பி.ஏ. முடித்து அதையும் கம்ப்ளீட் செய்யாமல் அரியர்ஸுடன் சமர்த்தாக வாழும் பையன். இவரது தங்கையின் பிரண்டாக வீட்டுக்கு வரும் லீலா என்னும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்ணைப் பார்த்தவுடன் ஒரு தலையாய் காதலிக்கத் துவங்குகிறார்.
இந்தக் காதல் மஞ்சிமாவுக்கும் வந்திருக்கும் நேரத்தில் இருவரும் பைக்கிலேயே நாடு சுற்றும் டூர் கிளம்பகிறார்கள். அந்த டூரின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் பயணிக்கும்போது எதிர்பாராதவிதமாக பைக் விபத்துக்குள்ளாகி இருவரும் காயம்படுகிறார்கள். படு காயமடைந்த சிம்புவை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு மஞ்சிமா தனது பெற்றோரை பார்க்க அவசரமாக சொந்த ஊருக்குச் செல்கிறார்.
அங்கே அவரது அப்பாவும், அம்மாவும் யாரோ சில ரவுடிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பா உயிர் ஊசல். அம்மாவும் அடிபட்டிருக்கிறார். மஞ்சிமாவுக்கு துணைக்கு அங்கே யாரும் இல்லை என்று சிம்புவுக்கு தெரிய வர.. தனது வீட்டாருக்கே உண்மையைச் சொல்லாமல் தனது நண்பனை அழைத்துக் கொண்டு கோலாப்பூருக்கு கிளம்புகிறார் சிம்பு.
அங்கே தனது காதலிக்கு உதவி செய்யப் போய்.. ஏன் எதற்கு என்று தெரியாமலேயே பல கொலைகளைச் செய்துவிடுகிறார். உச்சக்கட்டமாக தனது காதலியும் இறந்துபோய்விட.. இதன் பின் தலைமறைவாய் வாழ வேண்டிய நிலைமை சிம்புவுக்கு.
சிம்பு திரும்பவும் வீடு திரும்பினாரா..? தன்னை கொலை செய்ய வைத்தவர்களை என்ன செய்தார் என்பதுதான் இந்தக் காதல் ப்ளஸ் கமர்ஷியல் பழி தீர்க்கும் கதையின் சுருக்கம்.
சிம்புவை காதல் போர்ஷனில் பார்க்க பிடிக்கவில்லை. கமர்ஷியல் ஹீரோவாக பார்க்கத்தான் பிடிக்கறது. படத்தில் அவரது சொந்த வாழ்க்கையை பற்றி அவரே கமெண்ட் செய்யும் காட்சிகளில்தான் அதிக கைதட்டல். அதிகம் அலட்டல் இல்லாத நடிப்பு என்பதால் கதை, திரைக்கதைக்கு போதுமான அளவுக்கு நடித்திருக்கிறார் சிம்பு.
மஞ்சிமா மோகன் மலையாள புது வரவு. புதிய வித்தியாசம் ஏதுமில்லை என்றாலும் காட்சி கோணங்களில் ரசிக்க வைக்கிறார். பாடல் காட்சிகளில் அதிகம் அழகாகத் தோன்றியிருக்கிறார். நடிப்பில் குறை வைக்கவில்லை. காதல் காட்சிகளில் சிம்புவைவிடவும் நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் என்பது உண்மைதான்.
இவர்களுக்கு பிறகு நண்பனாக நடித்திருக்கும் சதீஷ், இன்ஸ்பெக்டர் காமெத்தாக நடித்திருக்கும் பாபா சேஹலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
டான் மற்றும் டானியின் ஒளிப்பதிவும், அந்தோணியின் படத் தொகுப்பும் இயக்குநருக்கு பெரிதும் உதவ இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானோ இசையை துவைத்து எடுத்திருக்கிறார். முதற்பாதியில் பின்னணி இசையில் அடக்கம் காட்டியவர், முன்னணி இசையில் போட்டுத் தாளித்திருக்கிறார். காது கிழிந்த்துதான் மிச்சம்.
பாடல்களிலேயே அனைத்துமே காட்சிகளையும் சேர்த்தே நகர்த்தியிருப்பதால் முக்கியத்துவமாக இருக்கின்றன. ஆனால் அனைத்தையும் ரஹ்மான் மட்டும்தான் கேட்டுக் கொள்ள வேண்டும்.
வெறும் பாடல் வரிகளில் தமிழை வைத்து விளையாடுவதால் மட்டுமே அந்தப் பாடல் சிறந்த பாடலாகிவிடாது. பாடல் ஒலிக்கும்போது ரசிகர்களும் சேர்ந்து பாடினால்தான் அது திரையிசைப் பாடல்.. ரஹ்மான் இதையெல்லாம் கேட்கும் நிலையில் இப்போது இல்லை என்பது தெளிவு. அவரே கேட்காதபோது இயக்குநர் எங்கே கேட்கப் போகிறார்..?
‘தள்ளிப் போகாதே’ பாடலை ஆஹோ.. ஓஹோ என்றார்கள். படத்தில் பாடல் ஒலிக்கிறது என்பது மட்டுமே ஆறுதல்..! ‘சோக்காலி’, ‘அவனும் அவளும்’, ‘இது நாள்’ பாடல்களும் ஒலிக்கின்றன. ‘தத்தித்திரு முத்துத்திரு’ பக்தி பாடலின் மெட்டை அப்படியே காப்பி செய்து போட்டிருப்பதை பார்த்தால் இசை ரஹ்மான்தானா என்று சந்தேகமும் வருகிறது.
முழுக்க முழுக்க காதல் படமாகவே எடுத்திருக்கலாம். அல்லது கமர்ஷியல் கம்மர்கட்டாகவே எடுத்திருக்கலாம். இரண்டுக்கும் ஆசைப்பட்டு முற்பாதி ஒரு படமாகவும், பிற்பாதி இன்னொரு படமாகவும் இருக்க.. இரண்டுக்கும் நடுவில் நமது ரசிக மனப்பான்மை எதை ரசிப்பது என்று திண்டாடுகிறது.
முற்பாதி கதையில் வழக்கமான காதல்.. பெண்ணின் தோற்றம், அழகு, பையன்களின் அணுகுமுறை.. பெற்றோரின் கண்டிப்பு.. கலாய்த்தல்.. குடும்பப் பாசம் என்று அனைத்தையும் கொத்து புரோட்டா போட்டிருக்கிறார் மேனன்.
இந்தக் கால பையன்களுக்கு இப்படி சொல்வதுதான் பிடிக்கும். இந்த மாதிரியான காதலைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்று யாரோ மேனனுக்கு வேப்பிலை அடித்துவிட்டார்கள் போலிருக்கிறது. மனிதர் ஏகத்துக்கும் தெருவில் இறங்கி அடித்து ஆடியிருக்கிறார்.
முற்பாதியில் தன்னை ஒரு பாலகுமாரனாக நினைத்துக் கொண்டு கவுதம் மேனன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார். வசனம் எழுதியிருக்கிறார். நடிக்கவும் வைத்திருக்கிறார். ஆனால் இந்தக் காதலைத்தான் மற்றைய சினிமாக்களும் சொல்லிக் கொண்டேயிருப்பதால் ‘உடையார்’ மாதிரி புதிதாக ஏதாவது சொல்லுங்க மேனன் என்று ரசிகர்களை சொல்லவும் வைத்திருக்கிறார்.
“ஷூட்டிங் ஸ்பாட்டில்தான் காட்சிகளை, வசனங்களை எழுதுவேன்..” என்று பத்திரிகையாளர் சந்திப்பிலேயே கூறியவர் அநேகமாக இந்தக் காதல் கதையை அப்படித்தான் எழுதியிருப்பார் போல..!?
முன் பின்னான காட்சிகளை படத் தொகுப்பாளர் கச்சிதமாக கத்தரித்துக் கொடுத்திருந்தாலும், இன்றைய இளசுகளுக்கேற்றாற்போன்ற வசனங்களால் காட்சிகளை நகர்த்தியிருந்தாலும், முற்பாதி முழுக்க ஒரு அந்நியமான மன நிலையிலேயே படத்தை பார்க்க வேண்டியிருக்கிறது.
இப்படியெல்லாம் ஒருத்தன் அரை லூஸாக இருக்க முடியுமா என்பதற்கு சிம்புவின் இந்தக் கேரக்டரும் ஒரு உதாரணம். “காதலுக்கா எதையும் செய்வான் தமிழ் இளைஞன்..” என்னும் கான்செப்ட்டை கவுதம் மேனனும் நம்பியதுதான் ஆச்சரியமாக இருக்கிறது.
ஒரே வீட்டில் இருக்கிறார்களாம். ஆனால் சிம்புவின் பெயர் தெரியாதாம்.. யாரும் சொல்லவில்லையாம்.. சிம்பு ஓட்டும் பைக் வாசலில்தான் நிற்கிறது. ஒரு பாடல் காட்சியில்கூட பைக்கை கடந்துதான் செல்கிறார் மஞ்சிமா. ஆனால் பைக்கை பார்க்கவே இல்லையாம்..
போகும் வழியில் திருநின்றவூரில் ஒரு வீட்டு வாசலில் பைக்கை நிறுத்தி “கன்னியாகுமரிவரைக்கும் பைக்லயே டூர் போறோம். ராத்திரி தங்க இடமில்லை. உங்க வீட்ல தங்கிக்கலாமா…?” என்று கேட்டு தங்கிவிட்டு மறுநாள் கிளம்புகிறார்களாம்..! இப்படியெல்லாம் அநியாயத்துக்கு தனது இஷ்டத்துக்கு திரைக்கதையை எழுதி ரசிகனை வளைக்கப் பார்த்திருக்கிறார் கவுதம் மேனன்.
அரசியல்வியாதிகளின் அராஜகத்தால் பாதிக்கப்படுகிறார் மஞ்சிமா. ஆனால் இதற்கான காரணம் அவருக்கு தெரியவில்லை என்றாலும் இதற்காக சிம்பு 3 வருடங்கள் தலைமறைவாக இருந்து காரணத்தை அறிந்து தானே ஐ.பி.எஸ். ஆபிஸராக மாறி அதே கோலாப்பூரில் அதே ஸ்டேஷன் இருக்கும் பகுதிக்கு துணை கமிஷனராக வந்து நிற்பதெல்லாம் எந்தக் காலத்து பூச்சுற்றல் இயக்குநரே..?
ஏதோ சிம்புவே ஐ.ஏ.எஸ். தேர்வெழுதி அவரே பேப்பரை திருத்தி தனக்குத்தானே நேர்முகத் தேர்வினை நடத்திவிட்டு, தன்னை, தானே தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துக் கொண்டு, மத்திய  உள் துறையில் தானே பேசி தன்னை மகாராஷ்டிரா மாநில கோட்டாவில் அப்பாயிண்ட்மெண்ட் செய்யும்படி கேட்டுக் கொண்டு, அதன்படி மகாராஷ்டிராவுக்கு வந்து சேர்ந்து, எடுத்த எடுப்பிலேயே தான் விரும்பிய அதே கோலாப்பூர் துணை கமிஷனராக தன்னைத்தானே நியமனம் செய்து கொண்டு………… உஷ் அப்பாடா.. என்று சொல்ல வைக்கிறது இந்த பூச்சுற்றல்..!
சிம்புவின் பெயரை சஸ்பென்ஸாக உடைக்கும் இடமும், அதற்கான கெத்தும் சிம்புவின் ரசிகர்களிடத்தில் கைதட்டலை பெற்றுக் கொடுத்திருக்கும். மற்றபடி படத்தின் கதைக்கு அது எந்தவிதத்திலும் பலனளிக்கவில்லை.
இத்தனை களேபரத்திலும் இரண்டாம் பாதியில் இருக்கும் தீவிரமான திரைக்கதைதான் படத்தை கடைசிவரையிலும் பார்க்க வைத்திருக்கிறது என்பதில் ஐயமே இல்லை. சஸ்பென்ஸை உடைக்காமலேயே கடைசிவரையில் நீட்டிக்க வைத்திருப்பதில் திரைக்கதையாசிரியருக்கு ஒரு பாராட்டு.
வெறும் மல்லிகைப் பூக்களை கையில் வைத்திருப்பதாலேயே அதற்குரிய மரியாதை கிடைத்துவிடாது. பூக்களை நார் கொண்டு கோர்த்து மலராக்கி அதைக் கூந்தலில் சொருகினால்தான் அதன் மணத்தினால் கூந்தல் உடையவருக்கும், மலருக்கும் அழகு..!
“சிம்புவும், கெளதம் மேனனும் இணைந்து அடுத்த படம் செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான்…” என்று மட்டுமே இந்தப் படம் சொல்ல வைத்திருக்கிறது..!

0 comments: