அமரா - சினிமா விமர்சனம்

03-03-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சின்ன பட்ஜெட் படம்.. புதுமுக நடிகர், நடிகையர்.. சொதப்பலான திரைக்கதை.. சுமாரான இயக்கம்.. அதைவிட சுமாரான நடிப்பு.. இப்படியிருந்தால் எப்படியிருக்குமோ, அப்படித்தான் இந்தப் படமும்..!

3 வருடங்களுக்கு முன்பாகவே தயாரான படம். விற்க முடியாமல் தவியாய் தவித்துப் போய் கடைசியாக இப்போதுதான் சந்தைக்கு வந்திருக்கிறது. இதனால் இறந்து போய் 2 வருடங்கள் கழித்தும் திரையில் தெரிகிறார் நடிகர் அலெக்ஸ்..


அமரன் என்ற ஹீரோ ஊரில் வெட்டி ஆபீஸர். குடித்துவிட்டு கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறார். தாய் திட்டியும் திருந்தியபாடில்லை. ஆனால் அனுபவம் திருந்த வைக்கிறது. அவருடைய நெருங்கிய நண்பன், பெண் பார்க்கச் செல்லும்போது அமரனை தவிர்க்கிறான். இது சட்டென்று அமரனை மனதை துன்புறுத்த உடனேயே ஏதாவது வேலைக்கு போயாக வேண்டும் என்று நினைக்கிறார்.

மதுரைக்கு வண்டியேறுகிறார். மதுரை சிம்மக்கல் மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்திருக்கும் அத்தையிடம் வந்து அடைக்கலமாகிறார். காய்கறி தொழில் பிடித்துப் போகிறது.. கடையில் வியாபாரத்தில் இருக்கும்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல் சம்பத்தை அடித்துவிடுகிறார். இதனால் கோபப்பட்ட சம்பத் அமரனை தூக்குவதற்கு வழிவகை செய்து கொண்டிருக்க.. அத்தை அமரனை பத்திரமாக சென்னைக்கு பேக் செய்கிறாள்..

சென்னைக்கு ரயிலில் செல்லும்போது ஹீரோயினை சந்திக்கிறார் ஹீரோ.. உடனேயே லவ்வு.. உடனேயே டூயட்டு.. ஏதோவொரு ஸ்டேஷனில் வண்டி நின்றிருக்கும்போது டிக்கெட் வாங்க இறங்கிய ஹீரோவை அப்படியே கட்டிக் கொள்கிறார் ஹீரோயின். அப்போது மயக்கத்தில் இருக்கிறார் ஹீரோயின். அவரை விட முடியாமல் தவித்த ஹீரோ, அவரையும் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரையில் வந்து டேரா போடுகிறார். மறுநாள் காலையில் இருவரும் ஒருவரையொருவர் யார் நீ என்று கேட்டு கதையை அடுத்த ரீலுக்கு நகர்த்துகிறார்கள்.

ஹீரோயின் தனது காதல் கதையைச் சொல்கிறாள். தமிழகத்திலேயே மிகப் பெரிய சாதிக்கட்சித் தலைவரான தனது அப்பா ஆஷீஷ் வித்யார்த்தி தனது காதலை எதிர்ப்பதாகவும், அதனால் பயந்து போய் வீட்டிலிருந்து தப்பித்ததாகவும் சொல்கிறார். இவர்கள் இருவரையும் சேர்ந்து பார்த்த ஒருத்தர் செல்போனில் புகைப்படம் எடுக்க.. அது மறுநாள் காலை அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகிறது..

ஆஷீஷ் வித்யார்த்தி ஹீரோவை ஹீரோயினின் ஒரிஜினல் காதலன் என்று நினைத்து அவரை வேட்டையாட நினைக்கிறார். ஹீரோயினை காப்பாற்ற நினைத்து ஹீரோ ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார். கடைசியில் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!

சுவாரசியமான கதை.. மிகப் பெரிய ஹீரோவை வைத்து.. திரைக்கதையை அழகாக படைத்து.. இயக்கத்தை சிறப்பாகச் செய்திருந்தால் இப்படம் நிச்சயம் ஹிட்டடித்திருக்கும்.. ஏதோ நமக்குக் கிடைத்த வாய்ப்பை செய்துவிடலாமே என்று நினைத்து இயக்குநர் செய்துவிட்டார். முடிந்தவரையிலும் செய்திருக்கும் இயக்குநர் ஜீவனுக்கு எனது பாராட்டுகள்..

அநேகமா ஹீரோதான் தயாரிப்பாளர் என்று நினைக்கிறேன். இல்லாவிடில் இவரை தேர்வு செய்திருக்கவே மாட்டார்கள். சுமாரான முகம்.. அதைவிட சுமாரான நடிப்பு.. ஹீரோயினும் அப்படியே..! ஆஷிஷ் வித்யார்த்தி மட்டுமே கொஞ்சூண்டு நடித்திருக்கிறார்..! இயக்கம் என்று பார்த்தால், காதலனின் அம்மா தனது மகனை ஹீரோயினின் அப்பா கொலை செய்துவிட்டதாக கதறுகின்ற அந்த ஒரு காட்சியில் மட்டுமே நிற்கிறது..! சம்பத் ஏதோ பெரிதாக சாதிக்கப் போவதாக நினைத்தோம். அப்படித்தான் பில்டப் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் கடைசியில் புஸ்வாணம்தான்.. கிளைமாக்ஸில் அம்பாசிடர் கார் பறந்து வர. அதிலிருந்து சம்பத் துப்பாக்கியால் சுடுகின்ற அந்தக் காட்சியை பார்த்தபோது ஏதோ 1980-களுக்கே போயிட்ட மாதிரி பீலிங் வந்தது..

டி.இமானின் இன்னிசையில் பாடல்களில் 2 ஓகே ரகம்.. அதிலும் குத்துப்பாட்டை குத்தோ குத்தோன்னு குத்தியிருக்காரு.. நிஷா ஆடும் நடனமும் அழகு.. பாடலும் அழகு..

இது மட்டும் இருந்தால் போதுமா..? படத்தை இறுதிவரையில் அமர்ந்து பார்க்க வைக்கத் தவறிவிட்டார் இயக்குநர்..!

அடுத்த முறையாவது ஜெயிக்கட்டும்..!

(போஸ்டரை பார்த்து ஏமாந்தால் கம்பெனி பொறுப்பல்ல..!)

1 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

//சுவாரசியமான கதை.. மிகப் பெரிய ஹீரோவை வைத்து.. திரைக்கதையை அழகாக படைத்து.. இயக்கத்தை சிறப்பாகச் செய்திருந்தால் இப்படம் நிச்சயம் ஹிட்டடித்திருக்கும்..
//

இதெல்லாம் அந்த இயக்குனருக்கு தெரியாமலா இருக்கும், எவனும் வாய்ப்பு கொடுக்கலை, வேற வழியில்ல கொடுத்தவனுக்கே செய்வோம்னு செய்றது தான்.

ஹிட் படம் கொடுத்தவங்களூக்கே ஹீரோ,தயாரிப்பாளர் கிடைக்கலைனு பொலம்புறதுலாம் கேட்டதேயில்லையா?

முதல் படம் செய்யும் ஒரு சில இயக்குனர்களுக்கு தான் சுதந்திரமே கிடைக்கும்.இல்லைனா 50 லட்சம் பட்ஜெட் ,15 நாளில் முடி , இதான் ஹீரோ, இதான் ஹீரோயினு ஏதோ ஒரு மூஞ்சை காட்டி படம் எடுக்க சொல்லுறாங்க.

ஒரு வேளை நீங்க , கோலிவுட்ல சும்மாவே சுத்தி வறிங்களா? விவரமேயில்லாம பேசிட்டு இருக்கிங்களே?