மதயானைக் கூட்டம் - சினிமா விமர்சனம்

25-12-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சுப்ரமணியபுரத்தில் ஆரம்பித்த மதுரை மண்ணின் அரிவாள் கலாச்சாரம், இன்றைக்கு தமிழ்த் திரையுலகில் வருடந்தோறும் வெளிவரும் படங்களில் முக்கால்வாசியை ஆக்கிரமித்திருக்கிறது..! வெறுமனே அரிவாளை மட்டுமே நம்பியெடுத்த படங்களெல்லாம் ஒரு சீவு சீவும் நேரத்திற்குள்ளாகவே தியேட்டரைவிட்டே போய்விட்டன.. ஒன்றிரண்டு திரைப்படங்கள் மட்டுமே அரிவாளையும் தாண்டிய கதையுடன் மனதில் நிற்கின்றன.. லேட்டஸ்ட்டாய் நிற்கப் போவது இந்த மதயானைக் கூட்டம்..!


இத்திரைப்படத்தை இரண்டு கோணங்களில் நாம் அணுகலாம்.. ஒன்று.. தன்னுடைய அண்ணனுக்காக எதையும் இழக்கத் தயங்காத ஒரு தங்கையின் கதை.. இரண்டு.. போடிநாயக்கனூரில் இருக்கும் தேவர் சாதியின் ஒரு பிரிவினரான கள்ளர் இனத்தில், ஒரு குடும்பத்திற்குள் நடக்கும் வெட்டுக் குத்து..! 

எப்படிப் பார்த்தாலும் நம் தமிழ்ச் சமூகத்தில் அதிக ஜாதிப் பிடிப்பாக தங்களைக் காட்டிக் கொள்ளும் தேவர் இனத்தவர்கள்.. எதை இழந்து எதற்காக ஜாதியைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்  என்கிற கேள்விக்கு ஓரளவேனும் இப்படம் விடை கொடுக்கிறது..! அதுதான் அவர்களுடைய கவுரவம்..!  ஒரே சாதியாகவே இருந்தாலும் தங்களுக்கென்று ஒரு சுயமரியாதைக் கோட்டை அவர்களாகவே போட்டுக் கொள்கிறார்கள். அதைத் தாண்டியோ.. அல்லது சீண்டியோ எவர் வந்தாலும் அவரை அழிப்பது ஒன்றே தங்களது தன்மானத்திற்குக் கிடைத்த வெற்றியாக அவர்கள் கருதுகிறார்கள்.. 

தென்மாவட்டங்களில் கள்ளர்-மறவர் இடையே நடக்கும் அதிகமான சண்டைகளுக்கு இந்த கவுரவம் எனப்படும் சுயமரியாதைதான் முக்கியக் காரணமாக இருக்கிறது..! வேறு சாதியினருடன் மோதல் வரும்போது உயர் சாதி என்று தங்களைத் தாங்களே எண்ணிக் கொள்ளும் இதே சாதியினர்தான்.. சொந்த சாதிக்குள் என்னும்போது சுயகவுரவத்தை பெரிதாக நினைக்கிறார்கள்..!

இனி கதைக்குள் வருவோம்..!

ஜெயக்கொடித் தேவருக்கு இரண்டு மனைவிகள்.. ஒருவர் செவனம்மா என்னும் விஜி சந்திரசேகர். இன்னொருவர் பிரேமா என்னும் அம்மு. செவனம்மாவுக்கு ஒரு மகன் பார்த்தி.. செவனம்மாவின் அண்ணனாக வீரத்தேவர் என்னும் வேல.ராமமூர்த்தி..  ஜெயக்கொடி தேவரின் இரண்டாவது மனைவி மூலம் பிறந்த மகன் பார்த்தி என்னும் கதிர்தான் படத்தின் ஹீரோ.. ஜெயக்கொடித்தேவரின் இரண்டாவது மனைவியின் குடும்பத்தை விஜி இப்போதுவரையிலும் ஏற்கவில்லை. ஜெயக்கொடிதேவரையே தனது வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லி வைத்திருக்கிறாள். 

ஓவியா கேரளாவில் இருந்து போடி மீனாட்சி கல்லூரியில் படிப்பதற்காக வருகிறார். பார்த்த மாத்திரத்திலேயே காதல் கொள்கிறார் கதிர்.. கதிரின் தங்கையும் அதே கல்லூரியில்தான் படிக்கிறாள். முதல் நாளே ராகிங் செய்ததால் ஓவியாவை திரும்பவும் கேரளாவுக்கே அழைத்துச் செல்ல விரும்புகிறார் அவரது தந்தை. இடையில் புகும் கதிர்.. ஓவியா மீதான காதலால் தனது தங்கை மூலமாக தனது வீட்டில் தங்க வைத்து தனது காதலையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்..!


ஊர், வெட்டுக் குத்துகளுக்கு பஞ்சமில்லாமல் அடிக்கடி ரத்தத்தில் குளித்துக் கொண்டிருக்கிறது..! தனது மனைவி மற்றும் மைத்துனரிடம் பேசாவிட்டாலும் ஊரில் பெரிய மனிதராகவே வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெயக்கொடி தேவருக்கும், கவுரவச் சூழல் கொஞ்சம் கொஞ்சமாக இறங்குதளத்தில் இருக்கிறது..! அவருடைய மகளை பெண் கேட்டு வரும் உறவுக்காரர், விஜியின் தூண்டுதலால் பின் வாங்க.. உடனேயே தனது மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து ஜாம், ஜாமென்று கல்யாணத்தை செய்து வைக்கிறார்..! அன்றைய இரவிலேயே எதிர்பாராதவிதமாக ஹார்ட் அட்டாக்கில் அவர் இறந்துவிட.. வீரத்தேவரின் பையன்கள் வந்து ஜெயக்கொடித்தேவரை அள்ளிக் கொண்டு செல்கிறார்கள்..

இரண்டாம் தாரமும், ஹீரோவும் தெருவோரமாக அமர்ந்து தங்களது தந்தையின் துக்கக் காரியங்களை துக்கத்தோடே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். விஷயம் தெரிந்து ஓடி வரும் மகளையும் பார்க்க அனுமதிக்க மறுக்கிறார் வீரத்தேவர்.. எதிர்த்துப் பேசும் முதல் தாரத்து மகனை.. “அவங்க வந்தா நான் சீர், செனத்தி செய்ய மாட்டேன்.. ஊர்ச்சனம் வராது.. உங்கப்பனுக்கு இந்த மரியாதை கிடைக்காது...” என்று சொல்லி வாய் மூட வைக்கிறார்கள்..!

கருமாதியன்று நடக்கும் அசம்பாவிதத்தில் ஒரு கொலை நடந்துவிட.. பதிலுக்குப் பதிலாக ஹீரோவை கொலை செய்ய வீரத்தேவரும் அவரது பிள்ளைகளும் நாயாய், பேயாய் அலைகிறார்கள்.. இதில் ஜெயித்தார்களா இல்லையா என்பதுதான் மீதமிருக்கும் சோகக் கதை..!


கதை மட்டும் இருந்தால் போதும் ஸார்.. என்பவர்களெல்லாம் இந்தப் படத்தையும் ஒரு முறை பார்த்துவிடுவது நல்லது..! கதை ஒரு பிளாட்பார்ம்தான்.. அதில் மச்சு வீடோ, பங்களா வீடோ.. எது கட்டினாலும் அதற்கு சிறப்பான இயக்கம் தேவை.. அது இல்லையேல் நல்ல கதையாகவே இருந்தாலும் படம் ஊத்தல்தான்..! இதில் அந்தச் சிறப்பான இயக்கத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர்..

பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர்.. ஆடுகளம் படத்தின் வசனகர்த்தா.. இந்தத் தகுதிகளோடு மிகச் சிறப்பான முறையில் இதை எடுத்திருக்கும் இவரைவிடவும் முதலில் பாராட்ட வேண்டியது படத்தின் தயாரிப்பாளர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரை..! இப்படியொரு கதையை கேட்டு, இயக்குநர் மீது நம்பிக்கை வைத்து.. மூன்றாவதாக தனக்குப் பதிலாக ரகுநந்தனை இசையமைக்கச் செய்தும் படத்தை தயாரித்திருக்கும் இவருக்கு ஒரு ஷொட்டு..!

ஜெயக்கொடி தேவரின் மரணத்தில் இருந்துதான் படமே  துவங்குகிறது.. பாண்டிய நாடு படத்திற்குப் பின்பு எழவு வீட்டில் படம் துவங்குவது இதுதான் என்று நினைக்கிறேன்.. 'உன்னை வணங்காத' என்ற வேல்முருகனின் கணீர் குரலில் தமிழ்க் கலாச்சாரத்தின் கால ஓட்டத்தில் காணாமல் போய் சிறிதளவே மிச்சமாக இருக்கும் அந்தக் கரகாட்டக் குழுவினரின்  கதையாடலில்தான் முதல் பாதி முழுவதும் ஜெயக்கொடித் தேவரின் கதை சொல்லப்படுகிறது..! பாடலின் துவக்கத்தில் கள்ளர் சமூகத்தினரின் பெருமையைப் பாடினாலும், போகப் போக படத்தின் கதை, வசனத்தையே அப்பாடல்தான் சொல்கிறது..!

ஜெயக்கொடி தேவரின் குடும்பப் பாரம்பரியம்.. பிள்ளைகள்.. பிரச்சினைகள் என்று அனைத்தும் அடுக்கடுக்காய் வரிசையாய் பாடலின் மூலமாகச் சொல்லப்படும் இந்த உத்தி சூப்பர்ப்..! அவர்களை விலக்கிக் கொண்டு உள்ளே வரும் பெரும் கூட்டம்.. தள்ளாடியபடியே வந்து மாலையணிவிக்கும் ஒரு கூட்டம். என்னதான் பிரச்சினையென்றாலும் சந்தோஷத்திற்கு போகலைன்னாலும் பரவாயில்லை.. சாவுக்கு போய்த்தான் தீரணும் என்பார்கள்.. அந்த சங்கோஜத்துடன் வருபவர்களை விரட்டியடிக்கும் ஒரு கும்பல்.. யார் இறந்தாலும் தங்கள் வீட்டு சாவு போல கட்டிப் பிடித்து அழுகும் பெண்களின் கூட்டம்.. இத்தனை களேபரத்துக்கிடையில் கட்டிய கணவரின் உடலைக்கூட பார்க்க முடியாமல் ரோட்டில் அமர்ந்து விசும்பிக் கொண்டிருக்கும் மனைவி மற்றும் மகன், மகளின் நிலைமை.. என்று அனைத்தையும் கட் டூ ஷாட்டுகளிலேயே சொல்லிக் கொண்டே சென்றிருக்கிறார் இயக்குநர்..! எதுவும் போரடிக்கவில்லை.. மாறாக போகப் போக பயத்தைத்தான் குடுத்தது..!


நல்ல இறுக்கமான திரைக்கதை.. கதையை நகர்த்தும்விதமான வசனங்கள்.. எதையும் மிகைப்படுத்திக் காட்டாத நடிப்பு.. நடிகர்களை எளிமையாக நடிக்க வைத்திருக்கும் இயக்கம்.. எல்லாமே சேர்ந்து இந்தப் படம் சாதாரணமானதல்ல என்று திரும்பத் திரும்பச் சொல்ல வைக்கிறது..! 

முதலிடம் விஜிக்குத்தான். 'ஆரோகணம்' படத்திற்குப் பிறகு இவங்களுக்கு பெயர் சொல்லும் படம் இதுதான்..! இப்போதும் உசிலம்பட்டி, கருமாத்தூர், போடிநாயக்கனூர் இன்னும் தேவர் திருமகள்கள் அதிகம் இருக்கின்ற ஊர்களிலெல்லாம் இவரைப் போன்று ஊருக்கு 5 பேராவது நிச்சயமாக இருப்பார்கள்.. மின்னல்கொடி, பஞ்சவர்ணம், அன்னலட்சுமி, பேச்சியம்மாள் என்று பெயர்கள் மட்டும்தான் மாறியிருக்குமே தவிர.. பிரச்சினைகள் ஒன்றுதான்..!

முதல் ஷாட்டில் இருந்து இறுதிவரையிலும் தான் ஒரு ஏமாற்றப்பட்ட மனைவியாகவே தன்னை மாற்றிக் காட்டியிருக்கிறார் விஜி..! காதுகுத்து நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு வெளியேறும்போது கணவரின் 2-வது குடும்பத்தைப் பார்த்தும் பார்க்காததுபோல் இருப்பதும்.. பேச விருப்பமில்லாமல் பேசிவிட்டுப் போவதும்.. மேடம் பிய்ச்சுட்டாங்க.. அதேபோல வேறு வழியே இல்லாமல், வேறொரு சூழலில் 2வது மனைவியின் வீட்டுக்கே போய் அவரை அழைத்து வருவது.. இன்னொரு மரணத்தை வீடு சந்திக்கும் சூழலில் அவருடைய முகம் காட்டும் சலனமேயில்லாத ஒரு சின்ன ஷாட்.. தனது அண்ணன் தனக்கு பொறி வைக்கிறார் என்பது தெரிந்தும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அண்ணனுக்கு உதவ ஒத்துக் கொள்ளும் அந்த காட்சி.. என்று இந்த அம்மணியின் இந்த கேரக்டர் நிச்சயம் பேசப்படும்.. இவருடைய வாய்ஸை கேட்ட யாரும் சொந்தக் குரல் என்றே ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.. அந்த அளவுக்கு நேரில் பேசுவதற்கும், படத்தில் பார்ப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது..!


வேல.ராமமூர்த்தி.. நம்ப முடியாத ஒரு பிரமிப்பைக் கொடுத்திருக்கிறார்.. தனது தங்கையின் மகன் தன்னை எவ்வளவு அவமானப்படுத்தினாலும் தங்கைக்காக தாங்கிக் கொள்ளும் அந்த உணர்வை தலையைக் குனிந்த நிலையிலும் உடல் மொழியால் வெளிக்காட்டியிருப்பது சிம்ப்ளி சூப்பர்ப்..! முதல் முறையாக நடிக்க வந்தும், பல படங்களில் நடித்த அனுபஸ்தர் போலவேதான் இருக்கிறது இவரது நடிப்பு..! மிக இயல்பாக மீசையை தடவிக் கொண்டே தனது கவுரவத்திற்காக அவர் செய்யும் செயல்கள்.. தூண்டுதல்கள்.. பஸ்ஸ்டாண்டில் ஹீரோவால் தாக்கப்பட்ட பின்பு டிரவுசருடனேயே வீட்டுக்கு நடந்து வரும் அழகு.. விஜியிடம் என்னால தூங்க முடியலை என்று கவுரவத்திற்கும், இயல்புக்கும் இடையில் காட்டும் நடிப்பு.. ஆடுகளம் ஜெயபாலன் போல இதிலும் தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார்..!

முருகன்ஜி.. இந்து இயக்கம் ஒன்றின் தலைவர் என்று நினைக்கிறேன்.. ஜெயக்கொடி தேவராக.. சந்தர்ப்பவசத்தால் மாட்டிக் கொண்டு தவிக்கும் குடும்பத் தலைவராக..  மகளுக்கு பாசமான அப்பாவாக.. கச்சிதமாக இருக்கிறது..! வெறுமனே கோவத்தைக் காட்டுவதிலோ.. அட்ரா அவனை.. வெட்டுடா அவனை என்று கத்துவதிலோ நடிப்பைக் காட்டிவிட முடியாது..! இப்போதெல்லாம் இயல்பான நடிப்புகள்தான் மக்கள் மனம் கவருகின்றன..! இந்தப் படம் அவர்களை நிச்சயம் முழு திருப்தி செய்யும்..!

ஹீரோ கதிர்.. அறிமுகம்.. ஓவியாவின் காதலில் ஆரம்பித்து பாதியிலேயே டெர்ரரிஸ்ட்டாகிவிடும் கேரக்டர் என்பதால்  பாதிக்கும் மேலாக இறுக்கமாகவே இருக்கிறார்..! கிளைமாக்ஸில் மட்டுமே தேவனாக நடித்திருக்கிறார்..! இன்னும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறதே பார்க்கலாம்..! ஓவியாவுக்கும் நடிக்க பெரிய அளவுக்கு வாய்ப்பில்லை.. சின்னச் சின்ன ஷாட்டுகளிலேயே காட்சியை நகர்த்தியிருப்பதால் இவருடைய பங்களிப்பு படத்துக்கு பெரிதாக எதையும் கொடுக்கவில்லை..! 

ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய படமென்றாலும் தானே இசையமைக்காமல் தென்மேற்குப் பருவக்காற்று ரகுநந்தனை இசையமைக்க வைத்ததுகூட ஒருவகையில் நல்லதுதான்.. பின்னணி இசையே படத்தை இன்னும் கொஞ்சம் தூக்கியிருக்கிறது..! பாடல்களில் 'உன்னை வணங்காத' பாடல் கணீர் ரகம்.. 'கொம்பு ஊதி'யும் இதே சிச்சுவேஷன்தான்.. ஆனால் அது மகிழ்ச்சியானது..! தஞ்சை செல்வியின் குரலில் ஒலிக்கும் 'எங்க போற மகனே' பாடல் அந்த சிச்சுவேஷனுக்கு ஏற்ற வெகு ரம்மியம்.. இந்தக் காட்சி முடிந்த சில நிமிடங்கள் அடுத்த்தாக ஒரு டூயட்டும் ஒலிக்க.. அதுவும் படத்தின் வேகத்தை கொஞ்சமும் குறைக்கவில்லை.. 'கோணக் கொண்டைக்காரி' பாடலும், 'யாரோ யாரோ'வும் மெலடியாக காதுகளை இனிக்க வைத்தன.. இப்படி ஒரு படத்தின் அனைத்து பாடல்களுமே இசையை பின்னுக்குத் தள்ளிவிட்டு வரிகளை முன்னுக்குக் கொண்டு வந்தது இந்தாண்டில் இந்தப் படமாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்..!

ராகுல் தருமனின் ஒளிப்பதிவும், கிஷோரின் எடிட்டிங்கும் இயக்குநர் விரும்பியதுபோலவே கிடைத்திருக்கிறது.. பஸ்ஸ்டாண்ட் காட்சிகளை சிறப்பாக்குவதில் இருவருமே போட்டி போட்டிருப்பார்கள் போலிருக்கிறது..!  இயக்குநருக்கு பெரும் உதவி செய்திருக்கிறார்கள்..! பாராட்டுக்கள்..! அவ்வளவு கூட்டத்தைக் கூட்டி.. அத்தனை பேரையும் பிரேமுக்குள் திணித்து.. ஒரு அழகை கொண்டு வந்திருக்கும் ஒளிப்பதிவாளரை நிறையவே பாராட்டலாம்..!

சின்னச் சின்ன விஷயங்களைக்கூட கவனமாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குநர்.. கள்ளர் குலத்தின் விஷயங்கள்.. அவர்கள் எது, எதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.. எதை எளிதாக எடுத்துக் கொள்வார்கள் என்பதில் துவங்கி.. சாவுக்கு காரியம் எப்படிச் செய்வார்கள்..? யார், யாரால் பிரச்சினை வரும் என்பதையெல்லாம் திரைக்கதையின் ஒரு உத்தியாக பயன்படுத்தி போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார்..! ஜெயிலுக்கு போய் வந்தாலே கரகாட்டம்.. தப்பாட்டத்தோடு வரவேற்பு.. கறிக்குழம்பு விருந்து.. என்று ஜெயில் வாழ்க்கையை மறக்கடிக்கும் சூழல்கள்.. செத்த வீட்டில் காரியம் செய்யும் நிகழ்வுகள்.. தாய் மாமனின் சீர்.. அது இல்லையெனில் நடக்கும் பிரச்சினைகள்.. வீட்டின் குடும்பத் தலைவர் போய்விட்டாலும் மனைவிக்கு இன்னமும் பிறந்த வீட்டு சொந்தங்கள் இருக்கின்றன என்பதைக் காட்டும்விதமாக பல சாதிகளிலும் பலவித சாங்கிய முறைகள்.. தேவர்களில் ஒரு பிரிவினர் தங்களது அந்தஸ்தை காட்டும்வகையில் பணத்தாலேயே அடிப்பார்கள்.. அதில் ஒரு சின்ன குறையிருந்தாலும் வம்ச சண்டையாகிவிடும்.. இதிலும் அப்படியொரு சண்டையில் துவங்கும் அனர்த்தம்தான் படத்தின் பிற்பாதி கதை..!

பொதுவாகவே இரண்டாம் மனைவிக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து கிடைக்குமா என்பதைவிட சமூகத்தில்.. அவரவர் குடும்பச் சொந்தங்களில்.. அவரவர் குடும்ப நிகழ்ச்சிகளில் உரிய மரியாதை கிடைக்குமா என்பதைத்தான் மிகப் பெரிய விஷயமாக நினைப்பார்கள்..! அந்த ஒரு விஷயத்தை இதில் முக்கியமாகவும் கையாண்டிருக்கிறார் இயக்குநர்..! இரண்டாவது மனைவியின் வீட்டிற்கு முதல் மனைவி வழி உறவினர்கள் தயக்கத்தோடு வருவதையும்.. உள்ளே வந்தாலும் எதுவும் குடிக்க மறுத்து தயங்குவதையும்..  உறவினரான முதல்  மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ளாமல் ஒதுங்குவதும்.. கதிருக்கு உதவி செய்யப் போய் அவருடைய வேறு வழி உறவினரின் வீட்டில் பெண் எடுத்திருப்பதால் அது சிக்கலில் போய் முடிய.. இதனாலேயே கதிர் ஊர் திரும்பி உயிரைப் பணயம் வைக்கும் சூழலை ஏற்படுத்துவதும் திரைக்கதையின் சின்ன சின்ன முடிச்சுகள்தான்.. ஆனால் படத்தின் டெம்போவை எந்தவிதத்திலும் குறையாமல் பார்த்துக் கொண்டவை இவை போன்ற டிவிஸ்ட்டுகள்தான்..! ஸ்டேஷனுக்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு போகும்படி இன்ஸ்பெக்டர் அழைப்பதும்.. “வீட்ல வெட்டுக் குத்து நடக்குது.. வந்து காப்பாத்துங்க..” என்று மூத்த தாரத்து மகன் ஸ்டேஷனுக்கு வந்து அழைத்தும் வராமல் தாமதம் செய்யும் போலீஸின் நிலைமை..! கருமாரியை முடித்திவிட்டு தோள் சீலையை தோளில் போட்டுவிட்டு உருமாவையும் கட்டிய பின்பு, "கதைவைச் சாத்துடா..." என்று பதற வைக்கும் அந்த கிளைமாக்ஸின் துவக்கம்.. படம் இத்தனை கொலைகளை கண்ட பின்பும்.. இது எப்படித்தான் என்பதையும் பார்க்கணுமே என்கிற ஆர்வத்தைத்தான் தூண்டிவிட்டது..!

எப்படியும் தாய் மாமனை, மூத்த தாரத்து மகனே போட்டுத் தள்ளப் போகிறான் என்கிற அளவுக்கு திரைக்கதையைக் கொண்டு போய் கடைசியில் அப்படியெதுவும் இல்லாமல் படத்தை முடித்திருப்பது எதிர்பாராதது..! தேவரின கதையில் பெண்களுக்கும் பங்குண்டு என்பதை இதில் நடக்கும் மைத்துனரின் மகன் கொலையில்.. கொலையானவரின் மனைவி.. "கொன்னவனை பிணமா இங்க கொண்டு வந்து போடு.. அப்புறமா இவரைத் தூக்கிட்டுப் போ..." என்று கூக்குரலிடுவதும்.. கிளைமாக்ஸில் "இவனைப் போட்டுத் தள்ளிட்டு வா மாமா.. வெளில காத்திருக்கோம்.." என்று அலட்சியமாகச் சொல்லிவிட்டுப் போவதும் சினிமாத்தனம் அல்ல.. உண்மையில் நடப்பதுதான்..! கேள்விப்படாதவர்களுக்குத்தான் இது அதிர்ச்சியாகவும், இயல்பை மீறிய செயலாகவும் இருக்கும்.. தென் மாவட்ட மக்களிடம் கேட்டுப் பாருங்கள்.. உண்மையைச் சொல்வார்கள்..!

ஒரு ஆண் செய்கின்ற தவறு.. அது பெண்களாலா..? அல்லது ஆண்களின் திமிர்த்தனத்தாலா என்பதையெல்லாம் இந்தச் சமூகம் இன்னமும் தோண்டாமல்.. பழியை மட்டும் மிக எளிதாக இன்னொரு பெண்ணின் மீது சுமத்தி.. பெண்ணுக்கு பெண்தான் எதிரி என்பதை மட்டும் காலம்காலமாக போதித்து வருகிறது..! தேவர் சமூகத்தில் இரண்டு மனைவிகள் என்பது சர்வசாதாரணம்..! மிக அதிகமும் அவர்களிடத்தில்தான்..! இரண்டு மனைவிகளால் வாழ்க்கையைத் தொலைத்த கணவர்களும் அதிகம்.. மனைவிகளும் அதிகம்.. இவர்களைவிட இவர்களது குழந்தைகள்தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் எப்போதும்..! 

இப்படி பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்துப் பிள்ளைகளின் சோகக் கதையாக இதனை எடுத்துக் கொண்டால், நான் முன்பே சொன்னதுபோல, அது இப்படம் பற்றிய மூன்றாவது கோணமாகவும் இருக்கும்..! தவறான கருத்தைத் திணிப்பது வேறு.. நடந்த விஷயங்களை கொஞ்சம் நேர்ப்பட.. நேர்மையாக சொல்வது வேறு.. இதன் இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இந்தக் கதையை என்னளவில் நேர்மையாகவே கொடுத்திருப்பதாகத் தோன்றுகிறது..!  வாழ்த்துகளும், பாராட்டுகளும் அவருக்கு..! 

தமிழ்ச் சினிமா ரசிகர்கள் நிச்சயமாக பார்த்தே தீர வேண்டிய படம்தான்..!


10 comments:

வவ்வால் said...

அண்ணாச்சி,

உமக்கு நல்ல சினிமானா என்னனு இந்தக்காலத்துக்கு புரிய வாய்ப்பேயில்லைனு மட்டும் தெரியுது.

டாஸ்மாக் காட்சி வர படப்படம் மட்டும் சமூகத்தை கெடுக்காது. இது போன்ற பழமைவாதப்படங்களும் தான்.

ஜோதிஜி said...

கருமாரியன்று

கருமாதி என்று மாற்றி விடுங்க சரவணன்.

ஒரு ஆய்வுக்கட்டுரை போல மிக அழகாக கொஞ்சம் வித்தியாசமாக எழுதியிருக்கீங்க. சில வரிகள் இது சரவணன் தானா எழுதியது என்று ஆச்சரியப்படுத்தியது.

ravikumar said...

new directors seems to better than kamalahasan direction which has got neat screenplay instead of cofusion & unwanted expenses like viswaroopam. Tamil film field has got lot of small & good directors nowadyas
good review . keep it up[

Unknown said...

வேறு சாதியினருடன் மோதல் வரும்போது உயர் சாதி என்று தங்களைத் தாங்களே எண்ணிக் கொள்ளும் இதே சாதியினர்தான்.. சொந்த சாதிக்குள் என்னும்போது சுயகவுரவத்தை பெரிதாக நினைக்கிறார்கள்..!

IDHU ELLA JATHIKKUM PORUNTHUM

வவ்வால் said...

அண்ணாச்சி,

இந்த "டெம்ப்ளேட்டில்" நிறைய படம் வந்திருந்தாலும் , இப்படம் பாரதிராஜாவின் "பசும்பொன்" படத்தின் தழுவலாகவே படுது,

ரெண்டு தாரம் போல ,ரெண்டு அப்பா , முதல் அப்பாவுக்கு பொறந்த பையன் "பிரபு" அவரோட அப்பா செத்த பிறகு ,பிரபு அம்மா 'ராதிகா"வுக்கு மறுகல்யாணம்(சமூக புரட்சி!) செய்து ரெண்டாவது அப்பாவுக்கு பொறந்த பசங்க பொன்வண்ணன் & விக்னேஷ் , இவர்களிடையே எப்பவும் "அக்னிநட்சத்திரமாக" சண்டை தான் , ஊர் பெரிய மனிதர் "சிவாஜி தான் இந்த குடும்ப தலை, இன்னொரு கண்ணியவான் "சிவகுமார், கடைசில சிவாஜி சாவுல எல்லாம் பகை மறப்பாங்க , அதுவும் ராதிகா மரணப்படுக்கையிலனு படம் போவும் அவ்வ்.

படத்துல பிரபு & பொன்வண்ணன் சண்டைனு அடிச்சிக்கிட்டு இருந்தாலும் , பொன்வண்ணன் ,விக்னேஷை வில்லன் குருப்பு அடிக்கும் போது பிரபு வந்து தடுப்பார், இவங்க என் தம்பிங்க ,நான் அடிப்பேன் ஆனால் வேற எவனாது அடிச்சா அவனுங்கள நான் அடிப்பேன்னு "உறவு விட்டுறாம" வசனம் பேசுவாருல்ல.

ஆனால் என்ன படம் தான் ஓடலை. அந்த படத்தையே பட்டி ,டிங்கரிங் பார்த்து மத யானையா ஆக்கிட்டாங்க அவ்வ்!

இதுல நீர் வேற ஆஹா ,ஓஹோனு சொல்லிக்கிட்டு , நாங்கல்லாம் எந்த படமா இருந்தாலும் ஆராய்ஞ்சிடுவோம்ல அவ்வ்!

rajasundararajan said...

உங்கள் விமர்சனத்தை வாசிக்காமல் போய்விட்டேனே!
https://plus.google.com/u/0/114321565207764387320/posts/bvHYCEjFXsr

வவ்வால் said...

அண்ணாச்சி,

எங்கே ஓய் காணாம போயீட்டீர்?

வலைப்பதிவல்லாம் காணோம்னதும்,ஏதாவது ஆண்டிய கரெக்ட் பண்ணிட்டு ஆந்திராப்பக்கமா போயி செட்டிலாகிட்டிரோனு பயந்துட்டேன்...ஹி...ஹி!

மீண்டு வருக,மொக்கைப்போடுக!!!

vasu balaji said...

அண்ணே வாழ்த்துகள். இனியாச்சும் புதுசா எதுனா சேந்திருக்கா என்னான்னு பாருங்க. வாரம் ஒருக்கா பேக்கப் எடுங்க.

http://blogger-backup-utility.software.informer.com/1.0b/

இத இன்ஸ்டால் பண்ணிக்கோங்க.

ஸ்ரீராம். said...

வாழ்த்துகள் தலைவரே...

Venkatesh babu said...

ஒரு வழிய உங்க ப்ளாக் ரெடி அயுடிச்சி, எப்பா இனிமேல் ரெகுலர் அப்டேட்ஸ் கிடைகும்யா...