17-05-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
உரிக்க உரிக்க ஒன்றுமேயில்லாத வெங்காயத்தைப் போலவேதான் என் வாழ்க்கையும்.. சிற்சில சமயங்களில் நடக்கும் காமெடிகளை நினைத்துப் பார்த்தால், நானெல்லாம் உலகத் தமிழர்களை இம்சை செய்யும் அளவுக்கு வளர்ந்திருப்பதே பெரிய விஷயம் என்றே எனக்குத் தோன்றுகிறது.. சோம்பேறித்தனம்.. அளவு கடந்த சோம்பேறித்தனம்.. ஆபீஸ் வேலையைத் தவிர மற்றவற்றில் ஏனோதானோவென்று பைத்தியக்காரனை போல திரியும் எனக்கு இது போன்ற அலைச்சல்கள் புதிதல்ல..!
அன்றைக்கும் வழக்கம்போல முருகனைத் திட்டிவிட்டுத்தான் வீட்டில் இருந்து கிளம்பினேன்..! அடிக்கிற வெயிலில் ஏசி காரில் போகிறவனை பார்த்து காரணமேயில்லாமல் கோபமெல்லாம் கொப்பளிக்கும் காலை நேரம்..! ஆங்காங்கே சாலைகளில் ஸ்பீடு பிரேக்கர் போட்டு வைத்து நமது வண்டியை பதம் பார்க்க வைத்திருப்பது வண்டியோட்டிகளின் நலனுக்காக அல்ல.. வசூல் வேட்டை நடத்தும் போலீஸாரின் வசதிக்காகவே என்று இப்போதுதான் சென்னைவாழ் வாகன ஓட்டிகளுக்குத் தெரிந்திருக்கிறது..!
மடுவன்கரை பாலம் தாண்டி வேளச்சேரி செல்லும் ரோட்டில் ரேஸ்கிளப் குதிரை லாயத்தின் வாசலில் ஒரு பெரிய ஸ்பீடு பிரேக்கர்.. எப்போதும் அங்கே வசூல் ராஜாக்கள் யூனிபார்மோடு நின்றிருப்பார்கள். பல நாட்கள் அவர்களை ஒரு புன்னகையுடன் கடந்து போயிருக்கிறேன்.. நாம போறதே TVS XL SUPER. இதுக்கெல்லாம் ஒரு லைசென்ஸ் தேவையான்னு, அவங்களே பீல் பண்ணித்தான் நம்மளை எதுவும் கேக்க மாட்டாங்கறாங்களோன்னு நானே நினைச்சுக்கிட்டு போயிட்டு வந்துக்கிட்டிருந்தேன்..!
அன்றைக்கு பார்த்து ஒரு கெடா மீசை இன்ஸ்பெக்டர் அங்கே வசூலில் மும்முரமாக இருந்தார். நிறைய ஹோண்டாக்கள் சிக்கியிருந்தன.. எப்பவும் துணைக்கு ஒரேயொரு டிராபிக் கான்ஸ்டபிள்தான் இருப்பார். இன்றைக்கு இரண்டு பேர் இருந்தார்கள். இவர்களும் போதாமல் பெண் கான்ஸ்டபிள் ஒருவரும் இருந்தார்..!
இந்த டீமை பார்த்தவுடன் மெகா வேட்டை என்பதை புரிந்து கொண்டு சில இளைஞர்கள் தூரத்திலேயே வண்டியைத் திருப்பித் தப்பி ஓடிக் கொண்டிருந்தார்கள். நான்தான் “நம்மளை யார் கேக்கப் போறா..?” என்கிற அலட்சியத்துடன் வண்டியைவிட.. அந்த பெண் கான்ஸ்டபிள் என் வாழ்க்கையின் குறுக்கே.. ச்சே.. ச்சே.. என் வண்டியின் குறுக்கே வந்து நின்று கை காட்டினார்..
என்னடா இது அதிசயமா இருக்கு..? இந்த இனத்துல யாராச்சும் லிப்ட் கேக்க மாட்டாங்களான்னு ஆசையா இருக்கும்போது, இப்படி அநியாயமா போலீஸ் டிரெஸ்ல வந்து மடக்கினா எப்படின்னு நினைச்சுக்கிட்டே பக்கத்துல போயி கெத்தா “பிரஸ்” என்றேன்.. “ஓகே ஸார்.. கொஞ்சம் ஓரமா நிறுத்துங்க.. இன்ஸ்பெக்டர்கிட்ட பேசிக்குங்க..” என்றது அந்தத் தேன்குரல்..!(பெயர் தெரியும்.. சொல்ல மாட்டேன்) திரும்பவும் அழுத்தமாகச் சொன்னேன்.. “பிரஸ்ஸுங்க. ஆபீஸுக்கு போயிட்டிருக்கேன்..” என்றேன்.. வேகவேகமாக எனது ஐடி கார்டை எடுத்துக் காட்டினேன். அதற்குள் பக்கத்தில் வந்த டிராபிக் கான்ஸ்டபிள்.. “சரி ஸார்.. புது இன்ஸ்பெக்டர்.. எல்லாரையும் நிறுத்தச் சொல்றாரு.. லைசென்ஸை காட்டிட்டு போங்களேன்..” என்றார்.. என் கோபம் அந்த போலீஸ் மயில் மேல் பாய்ந்தது..! ஒரு முறைப்பை காண்பித்துவிட்டு வண்டியை ஓரங்கட்டி நிறுத்தினேன்..!
இது மாதிரி எத்தனை பேர் நேரத்தை வீணடிக்கிறானுகன்னு கோச்சுக்கிட்டே என் சட்டை பாக்கெட்டில் இருந்த டிரைவிங் லைசென்ஸை எடுத்து டிராபிக் கான்ஸ்டபிள்கிட்ட நீட்டினேன்..! அவசரமா வாங்கினவர் அதை பார்க்கக்கூட இல்லாம அப்படியே நேரா கெடா மீசை இன்ஸ்பெக்டர்கிட்ட கொண்டு போய் கொடுத்தார். நானோ கை காட்டி நிறுத்தின அந்த போலீஸ் மயிலையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்..! அவ்வளவு அழகு..! அட்டக்கத்தி நந்திதாவை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருந்தது..! அதிலும் அந்த இறுக்கமான காக்கி டிரெஸ்ஸிலும் அசத்தலாக இருந்தார்.
திரும்பிப் பார்த்த என்னை இன்ஸ்பெக்டர் அங்கேயிருந்தபடியே முறைக்கிறார்.. பக்கத்துல இருந்த டிராபிக் கான்ஸ்டபிளும் என்னை முறைக்கிறார்.. இன்ஸ்பெக்டர் லைசென்ஸை கான்ஸ்டபிளிடம் கொடுத்துவிட்டு ஏதோ சொல்ல… கான்ஸ்டபிள் அதை வாங்கிக் கொண்டு நேராக என்னிடம் வந்தார்..
“ஏன் ஸார்.. என்னமோ பெரிசா பிரஸ்ஸுங்குறீங்க..? உங்களுக்கே பொறுப்பு வேணாமா..? இதுல உங்களுக்கு ஐடி கார்டு வேற..?” என்றார். நமக்கு ஒண்ணுமே புரியலை.. போலீஸ் மயிலும் பக்கத்தில் வந்து நின்று கொள்ள உள்ளுக்குள் ரோஷமும், தன்மானமும் தானாகவே எழுந்துவிட்டது..! “ஸார்.. இப்போ என்னாச்சு..? அதை மட்டும் சொல்லுங்க..” என்றேன். லைசென்ஸை என்னிடம் நீட்டி “டேட் பாருங்க..” என்றார் கான்ஸ்டபிள்.. வாங்கினேன்.. பார்த்தேன்.. “எக்ஸ்பயரி டேட் என்னிக்கு போட்டிருக்கு..?” என்றார் கான்ஸ்டபிள்.. அந்த இடத்தை உற்றுப் பார்த்தால் பகீரென்றது. கண்ணாடியை கழட்டியும் பார்த்தேன். தெளிவாகத் தெரிந்தது.. எனது லைசென்ஸ் காலாவதியாகி இரண்டு வருஷமாயிருச்சு..!
பக்கென்று நிமிர்ந்து பார்த்தேன். இப்போது கான்ஸ்டபிள் கூடுதல் முறைப்போடு, “என்ன ஸார் பிரஸ்ஸு..? லைசென்ஸ் முடிஞ்சு 2 வருஷமாச்சு.. அதுகூட தெரியாம இன்னும் வண்டியோட்டிக்கிட்டிருக்கீங்க..? ஆனா நாங்க மட்டும் ஒரு நிமிஷம் நில்லுங்கன்னு சொன்னா கோச்சுக்குறீங்க..?” என்றார்.. வாழைப்பழத்தை வாயில் வைத்துக் கொண்டு முழுங்குவதா வேண்டாமா என்கிற யோசனை எனக்கு..!
போலீஸ் மயில் ஒரு எகத்தாள பார்வை பார்க்க அதற்குமேல் சைட் அடிக்கும் எண்ணமே இல்லாமல் போய் “ஹி ஹி..” என்றேன்.. “ஸார்.. இந்த ரெண்டு வருஷமா நான் யார்கிட்டேயும் மாட்டலை. அதான் தெரியாம போச்சு..” என்று இழுத்தேன். “ஏன் நாங்க கேட்டாத்தான் நீங்க லைசென்ஸை பார்ப்பீங்களா..? நீங்களே செக் பண்ணிக்க மாட்டீங்களா..?” என்றார். தலையைச் சொறிந்து கொண்டே “இப்ப என்ன ஸார்.. பைன்தானே கட்டணும்.. எவ்வளவுன்னு சொல்லுங்க.. கொடுத்தர்றேன்..” என்று வேகவேகமாக பர்ஸை எடுத்தேன்..!
“ஹலோ.. நாங்க ஒண்ணும் கேஸ் பிடிக்குறதுக்காக அலையலை.. ‘அவர் இப்போவரைக்கும் கவனிக்காம இருந்திருக்காரு. அதுனாலதான் கேட்டவுடனே கெத்தா லைசென்ஸை எடுத்து நீட்டியிருக்காரு.. லைசென்ஸ் வாங்கிச் சொல்லி அனுப்பிரு’ன்னு இன்ஸ்பெக்டரே சொல்றாரு.. ஏன் ஸார் இப்படியே எங்களை நினைக்குறீங்க..? பிரஸ்.. பிரஸ்ஸுன்னு… மொதல்ல நீங்க நேர்மையா இருங்க.. அப்புறமா எங்களை சொல்லலாம். போங்க.. போங்க..” என்று சொல்லிவிட்டு அடுத்து வந்த டி.வி.எஸ். ஸ்கூட்டியை நிறுத்தப் போய்விட்டார்.
பக்கத்தில் இருந்த மயில் என்னை ஒரு பார்வை பார்க்க.. படாரென்று ஒரு சிரிப்பு சிரித்தேன்.. முதலில் சிரித்து.. பின்பு சுதாரித்து தான் போலீஸ் என்பதை உணர்ந்தோ என்னவோ முகத்தைத் திருப்பிக்கிச்சு..! இன்ஸ்பெக்டரின் அருகில் சென்று “ஸார்.. நிசமாவே நான் கவனிக்கலை ஸார்.. ஸாரி ஸார்.. சீக்கிரமா லைசென்ஸ் வாங்கிர்றேன்.. மிக்க நன்றி..” என்றேன்.. கெடா மீசை.. ஒரு வார்த்தைகூட பேசலை.. அப்படியே நம்பியார் மாதிரியே முறைச்சு பார்க்க.. ஓகே.. இந்த மரியாதையே போதுண்டா சாமின்னு கிளம்பிட்டேன்..!
மனசுக்குள் போலீஸ் மயிலுக்கு ஒரு பிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு, டாட்டா காட்டாமல் ஓரப்பார்வை பார்த்தபடியே வண்டியைக் கிளப்பிய எனக்கு இப்போதுவரையிலும் அந்த போலீஸ் மயிலின் ஓரக்கண் பார்வை மறக்கவில்லை..!
மறுநாளே கே.கே. நகர் ஆர்.டி.ஓ. ஆபீஸ்.. “டிரைவிங் லைசென்ஸ் நீங்க எந்த ஊர்ல, எந்த ஆபீஸ்ல வாங்கினீங்களோ, அங்கதான் போய் ரினீவல் பண்ணனும்.. இங்க செய்ய முடியாது..” என்றார்கள்.. “இப்போ மதுரைல அந்த அட்ரஸ்ல யாருமே இல்லை ஸார்.. போக, வர பணமும் செலவாகுமே..” என்று இழுத்தேன். “நாங்க என்ன பண்றது..? கவர்ன்மெண்ட் ரூல்ஸை கண்டிப்பா நாங்க பாலோ செஞ்சுத்தானே ஆகணும்.. இல்லைன்னா நீங்கதான இதுக்கும் எங்களைத் திட்டுவீங்க..?” என்று சைடாக ஒரு போடு போட்டார் டிராபிக் இன்ஸ்பெக்டர். உள்ளே நுழைஞ்சதும் ஐடி கார்டை காட்டியதன் விளைவு..!
“வேற வழியே இல்லையா ஸார்..?” என்றேன்.. “வேணும்னா சென்னை அட்ரஸை வைச்சு புதுசா லைசென்ஸ் அப்ளை பண்ணி வாங்கிக்குங்க” என்று மெல்லிய குரலில் அட்வைஸ் செய்தார்.. யோசித்தேன். “ஹலோ.. அது ஒண்ணுதான் ஒரே வழி.. டைமை வேஸ்ட் பண்ணாதீங்க..” என்றார்.. “ஓகே” சொல்லிவிட்டு புதுசுக்கு அப்ளிகேஷன் போட்டேன்..!
டிரெயினர் சர்டிபிகேட் கொடுத்தார்கள். அது வெறும் ஏ-4 பேப்பரில் இருக்கும் ஒரு அத்தாட்சிதான்.. ஒரு மாசம் கழிச்சு வண்டியை ஓட்டி காமிச்சு லைசென்ஸ் வாங்கிக்கலாம்னு சொன்னாங்க..! ஆனா அந்த ஒரு மாசமும் வண்டியோட்டும்போது ‘L’ போர்டு மாட்டியிருக்கணுமாம்.. ஆபீஸ் போர்டுல எழுதியிருந்தாங்க.. நாம ஓட்டுற வண்டியே L போர்டு வண்டிதான். பிறகெதுக்கு L போர்டுன்னு விட்டுட்டேன்..!
ஒரு நாள் ராத்திரி தி.நகர்ல கண்ணதாசன் சிலையைத் தாண்டி பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷன் பின் பக்க ரோட்டுல வந்து வலது பக்கம் திரும்பும்போது போலீஸ் ஸார் ஒருத்தர்கிட்ட சிக்குனேன்..
“எல் போர்டு எங்க..?”
“இந்த வண்டிக்கு எதுக்கு ஸார்..?”
“ரூல்ஸ்ன்னு ஒண்ணு இருக்குல்ல..?”
“எல்லாரும், எல்லா சமயமும் ரூல்ஸை அப்படியே கீப் அப் பண்றாங்களா..?”
“நல்லா பேசுங்க.. ஆனா அதை மட்டும் செஞ்சிராதீங்க..?”
“இந்த வண்டிக்கு எல் போர்டு மாட்டினா கேவலமா இருக்கும் ஸார்…?”
“இது கவர்ன்மெண்ட்டுக்கு தெரியலையே.. நாங்க என்ன செய்யறது..?”
“இப்போ என்ன செய்யணும்ன்றீங்க..?”
“பைன் 100 ரூபா.. இல்லாட்டி ஒரு 50 கொடுத்துட்டு போயிருங்க..”
“பைனையே கட்டிர்றேன்.. ரசீது கொடுங்க..”
“இதெல்லாம் விவரமா பேசுங்க.. ஆனா ஒரு போர்டு எழுத மட்டும் யோசிங்க..”
“அதெல்லாம் கவுரவப் பிரச்சினை ஸார்..”
“சரி.. சரி.. போயிட்டு வாங்க.. நாளைக்கு போர்டு எழுதிருங்க..”
“பைன்.. ரசீது..”
“இன்ஸ்பெக்டர் மெஷினை எடுத்திட்டுப் போயிட்டாரு. அவர்கிட்டதான் இருக்கு..”
“அப்போ இப்போ எதுக்கு இந்த என்கொயரி..?”
“அதெல்லாம் உங்களுக்கெதுக்கு..? கிளம்புங்க..”
அப்படியும் போர்டை மாட்டவில்லை.. தன்மானச் சிங்கமாக வலம்வரும் வேளையில் கேவலம் L போர்டு மாட்டி எனது பெருமையை குறைத்துக் கொள்ள விரும்பாததால் ஒரு மாத காலம் தமிழக அரசின் விதிமுறையை புறக்கணித்தேன் என்பதை இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..!
ஒரு மாதம் கழித்து கே.கே. பழைய பேருந்து நிலையத்தில் அன்றாடம் நடக்கும் வாகன ஓட்டிகளுக்கான டெஸ்ட்டுக்காக சென்றேன்.. வண்டியோட ஒரிஜினல் சர்டிபிகேட்டுகள், புகை பரிசோதனை சான்றிதழ், 3 புகைப்படங்கள், 300 ரூபாய் பணம் கட்டிய சலான் என்று அனைத்தையும் கையில் வைத்துக் கொண்டு எனது வண்டியுடன் தயாராகவே இருந்தேன்..!
டிரைவிங் இன்ஸ்டிடியூட் மூலமாக வருபவர்களுக்கே அங்கே முதலில் முன்னுரிமை. ஒரே வண்டியை பலரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதியளிக்கிறார்கள்.. எட்டு போடச் சொன்னால், ஒரு சிலர் ஒன்பது போட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். கட்டாயம் ஹெல்மெட் அவசியம் என்றார்கள். சிலர் சரியாக வண்டி ஓட்டாதபோது இன்னொரு சான்ஸ் கொடுத்து அவர்களைக் காப்பாற்றினார் இன்ஸ்பெக்டர். நல்ல மனுஷன்யா. எனக்கு அலுவலகத்தில் அட்வைஸ் செய்த அதே ஆசாமி..!
எனது விண்ணப்பத்தைக் கொடுத்தேன். உதவியாளர் “எங்க உங்க வண்டி..?” என்றார். ஓடிச் சென்று எனது பி.எம்.டபிள்யூ.வை காட்டினேன்.. ஐஸ்வர்யாராயை பார்க்க வந்து பிந்துகோஷை பார்த்த அதிர்ச்சியில் உதவியாளர் வாய் பிளந்துவிட்டார்.. நானோ வண்டியை ஸ்டார்ட் செய்துவிட்டு தயாராக இருக்க.. உதவியாளர் இன்ஸ்பெக்டரிடம் எனது விண்ணப்பத்தைக் கொடுத்து ஏதோ சொல்ல.. இன்ஸ்பெக்டர் என்னை அழைத்தார்.
வண்டியை ஸ்டாண்ட் போட்டுவிட்டு அருகில் போனேன்.. “என்ன ஸார் இது..?” என்றார். “வண்டி ஸார்..” என்றேன்.. “அது தெரியுது.. வண்டி நம்பர் என்ன..?” என்றார். TN 07 Q 7803 என்றேன். “நான் அதைக் கேக்கலை.. வண்டில நம்பர் பிளேட் எங்கன்னு கேட்டேன்..?” என்றார். திக்கென்றானது. திரும்பிப் பார்த்தேன். அட நெசம்தான். என் காதல் வாகனத்தின் முன் பகுதியில் முந்தைய நாள்வரையிலும் பளிச்சென்று தெரிந்து கொண்டிருந்த நம்பர் பிளேட்டை காணவில்லை.. தேடு தேடு என்று தேடினேன்.. பின்னாடியெல்லாம் போய் தேடினேன்..
“ஹலோ.. முன்னாடி இருக்கற பிளேட்டைத்தான் கேட்டேன்..?” என்றார் மறுபடியும்.. “ஹி.. ஹி.. ஸாரி ஸார்.. எனக்குத் தெரியலை.. எங்கயாவது விழுந்துருச்சுன்னு நினைக்கிறேன்..” என்றேன்..! “ஏன் ஸார்.. இப்படி டிப்டாப்பா ஐடி கம்பெனி மாதிரி வேலைக்குப் போகத் தெரியுது.. கொஞ்சம் வண்டியை நல்லவிதமா பார்த்துக்கத் தெரியாதா..? இப்போ நாங்க என்ன செய்யணும்னு சொல்லுங்க..?” என்றார்...!
“இல்ல ஸார்.. நிஜமாவே நான் கவனிக்கலை. இல்லாட்டி நான் இன்னிக்கு வந்திருக்கவே மாட்டேன்..” என்றேன்.. “வண்டி ஓனர் யாரு..?” என்றார். “நான்தான் ஸார்..!” “வண்டிய வாங்கி 10 வருஷமாச்சே.. லைசென்ஸ் இல்லாமலேயே இதுவரைக்கும் வண்டி ஓட்டுனீங்களா..?” என்றார். கலவரமானது எனது வயிறு.. சுற்றி 20 பேர் நின்று கொண்டிருக்க மானம் போகுதேன்னு கவலை வேற..!
பக்கத்தில் போய் “ஸார்.. முன்னாடியே மதுரைல வாங்கினது.. தேதி முடிஞ்சு போச்சு.. சென்னை அட்ரஸை வைச்சு வேற புதுசு வாங்கிக்கன்னு நீங்கதான் சொன்னீங்க..!” என்றேன்.. சற்றுத் தள்ளி என் முகத்தை பார்த்துவிட்டு நியாபகம் வந்ததை போல தலையைத் தேய்த்துக் கொண்டார்..! ஒவ்வொரு திங்கள்கிழமை மட்டுமே நம்ம முகம் பளிச்சுன்னு இருக்கும்ன்றது அவருக்குத் தெரியாதுல்ல.. அதான் குழப்பமாயிருச்சு..!
இதுக்கு மேல எதுவுமே சொல்லாம அந்த பேப்பர்ல சிவப்பு மைல கையெழுத்த போட்டு அதை என் கைல கொடுத்திட்டு தூரத்தில் ஒரு இடத்தைக் கை காட்டி “அங்க போய் வெயிட் பண்ணுங்க..” என்றார்..! நம்ம வாய் சும்மா இருக்குமா..? “அப்போ ஓட்டிக் காட்ட வேணாமா ஸார்..?” என்றேன்.. இன்ஸ்பெக்டர் முறைத்த முறைப்பு இருக்கே..! புரிந்து கொண்டு நடையைக் கட்டினேன்..!
11 மணிக்கெல்லாம் பயிற்சி சோதனை முடிந்து அலுவலகத்திற்கு வரச் சொன்னார்கள். வரிசையாக போட்டிருந்த சேர்களில் ஆள் எழுந்து போகும்போதெல்லாம் கிடைத்த சீட்டுகளில் மாறி மாறி உட்கார்ந்தும் நம்மளை போட்டோ எடுக்க கூப்பிடலை.. ஆர்.டி.ஓ. ஆபீஸுக்குள்ள தரகர்களை ஒழித்துவிட்டோம்ன்னு என்னிக்கோ அமைச்சர்ன்னு சொல்லி ஒருத்தர் சட்டசபைல கூவுனாரு.. அவரை வந்து இங்க உக்காரச் சொல்லி பார்க்க வைக்கணும்..!
வெளில இருந்து வந்த ஒருத்தரே ஆபீஸ் பைலை திறந்து அதுல அப்ளிகேஷன் விவரங்களை பில்லப் செய்து கையெழுத்துக்கு மட்டும் காது குடைஞ்சுக்கிட்டிருந்த அலுவலரிடம் தள்ளிவிட்டார். அந்த ஒரு வேலையை செய்றதுக்கு அந்தாளு அவ்ளோ யோசிக்கிறாருய்யா.. இன்னும் சிலர் கொண்டு வரும் அப்ளிகேஷன்களுக்கு அவர்களே சீல் எடுத்து குத்திவிட்டு நம்பரை மட்டும் அலுவலரிடம் சொல்லிவிட்டு கையோடு எடுத்துக் கொண்டு உள்ளே ஓடினார்கள்.. ஓடிய வேகத்தில் திரும்பி வந்து விண்ணப்பதாரர்களை உள்ளே அழைத்துச் சென்று போட்டோ எடுக்க வைத்தார்கள்.. என்னைய மாதிரியான உண்மையான பொழப்பத்த, நாதியத்த தமிழர்கள் வாயில் விரல் வைத்துச் சப்பிக்கொண்டு இந்தக் கூத்துக்களையெல்லாம் வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தோம்..!
ஒரு வழியாக புகைப்படம் எடுத்துக் கொடுத்தவுடன், “மதியம் 3 மணிக்கு வாங்க. ரெடியா இருக்கும். வாங்கிக்கலாம்..” என்றார்கள். அது போலவே அன்று மதியம் 4 மணிக்கு சென்று எனது லைசென்ஸை பெற்றுக் கொண்டேன்..! ஆனாலும் என் அப்பன் முருகன் இதிலும் ஒரு ஆப்படித்துவிட்டான்.. ஒரிஜினல் சர்டிபிகேட்டுகள் தேவை என்று டிராபிக் இன்ஸ்பெக்டர் கேட்டதால் எனது வண்டியின் ஒரிஜினல் ஆர்.சி.பேப்பரையும் அதனுடன் இணைத்திருந்தேன். அதனை திருப்பிக் கேட்க மறந்துவிட்டேன்..!
எனது வண்டியின் இன்ஸூரன்ஸ் பாலிஸி முடிந்துவிட்டதால் அதை ரினீவல் செய்ய போன இடத்தில் தேதி முடிந்து வந்தால், ஒரிஜினல் ஆர்.சி.பேப்பர் இருந்தால்தான் செய்ய முடியும் என்றார்கள். வீட்டில் தேடிப் பார்த்து களைத்த பின்பே இதன் ஞாபகம் வந்தது.. மறுபடியும் ஆர்.டி.ஓ. ஆபீஸ் சென்று கெஞ்சி கூத்தாடி பார்த்தேன்.. அதில் ஜெராக்ஸ்தான் இருக்கிறது. ஒரிஜினல் இல்லை என்கிறார்கள். ஒருவேளை அன்றைக்கு ஜெராக்ஸ் எடுத்த இடத்தில் விட்டுவிட்டேனா என்றோ தெரியவில்லை..! இல்லாவிடில் புதுசா அப்ளிகேஷன் போட்டு வாங்கணுமாம்.. அதுக்கு வேற தனியா அலையணுமா..? முருகா..
இதாவது பரவாயில்லை.. இன்னும் ஒரு பிரச்சினை இருக்கு பாருங்க..! இந்தியக் குடிமகன் என்ற அங்கீகாரம், பாஸ்போர்ட் நம்ம கையில் இருந்தால்தான் உண்மையாம்..! வாங்கிய பாஸ்போர்ட்டும் காலாவதியாகி 1 வருஷமாச்சு.. அடுத்து அங்கேதான்..!
எடுறா வண்டியை..!