தோழர்களே.. ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..!


20-01-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனது குடும்பத்தில் துன்பவியல் நாடகங்களுக்கு பஞ்சமேயில்லை..! எத்தனையோ துன்பங்களையும், துயரங்களையும் சந்தித்திருக்கிறோம்.. உச்சக்கட்டமாக எனது தந்தை மற்றும் தாயின் புற்றுநோய் அவலங்களைக் குறிப்பிடலாம்.. இவைகளைக் கடந்து இத்தனையாண்டுகள் கழித்து மீண்டும் ஒரு அவலம்..! 

இப்போது எனது அண்ணன்..! பிரிவியூ தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு நாளில், என்னை உடனே தேனாம்பேட்டை அப்பலோ மருத்துவமனைக்கு வரும்படி போனில் அழைத்தார் எனது அண்ணனின் சகலை..! ஏற்கெனவே சென்ற மாதம் திருச்சியில் இருந்த அண்ணனின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவர் திட உணவு சாப்பிட முடியாமல் வெறும் கஞ்சி மட்டுமே குடித்துக் கொண்டிருந்தது என்னை கொஞ்சம் பயமுறுத்தியிருந்தது.

அப்படியொன்று இருக்கக் கூடாதுடா முருகா என்று வேண்டிக் கொண்டேதான் மருத்துவமனைக்குள் நுழைந்தேன். ஆனால் நம்பிக்கை வழக்கம்போல பொய்த்துதான் போனது.. வாசல்படியிலேயே என்னைத் தனியே அழைத்துச் சென்றவர்கள் எனது அண்ணனுக்கு வாயில் புற்றுநோய் என்றும் 2-ம் கட்ட நிலையில் இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்தாக வேண்டும். அடுத்த வாரம் ஆபரேஷன் என்ற பொங்கி வந்த துக்கத்தைக்கூட முழுமையாக அனுபவிக்க விடாமல் நீட்டிக் கொண்டே போனார்கள்..!

எனது அண்ணன் இப்போதும் வழக்கம்போல டாக்டர்கள் கொடுத்த சீட்டுக்களை வரிசைக்கிரமமாக அடுக்கியபடியே என்னைப் பார்த்து சிரித்தார். விதி அபாரமாக விளையாடுகிறது என்று நினைத்த எனக்கு எனது அண்ணியின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவும் முடியவில்லை.

மிகப் பரபரப்பாகத் துவங்கிய இந்த விளையாட்டு அடுத்தடுத்த கட்டங்களில் சீராகவே நடந்து முடிந்தது..! அண்ணியாரின் சகோதரிகளும், சகோதரரும் பெரும் உதவி செய்ய சிகிச்சைக்கு முதல் கட்டமாகத் தேவையான 3.50 லட்சம் ரூபாயும் உடனே கிடைத்தது.. ஆபரேஷனுக்கு முதல் 3 நாட்களாக ஒரேயொரு விஷயம் மட்டுமே பிரச்சினையாக இருந்தது. அது ஆபரேஷனுக்காக வேண்டிய ரத்தம் பற்றியது..!

'ஓ' பாஸிட்டிவ் ரத்தம் கேட்டு நானும் அப்போதைய நேரத்தில் கூகிள் பிளஸ்ஸிலும், பேஸ்புக்கிலும் தகவல்களை பகிர்ந்திருந்தேன்.. மேலும் கூடுதலாக வலையுலக அன்பர்களிடம் விசாரித்தபோது பதிவர் “சுரேகா அண்ணன் அவருடைய தளத்தில் இதற்காகவே தனிப் பிரிவை வைத்திருக்கிறார். அதனைக் கிளிக் செய்து போனால் நிறைய பேர் கிடைப்பார்கள். உடனேயே தேடுங்கள்..” என்றார்கள். 

சுரேகா அண்ணனிடம் விசாரித்தபோது வெளியூர் நிகழ்ச்சியில் பிஸியாக இருந்தபோதிலும் மிகவும் அக்கறையாக அதற்கான வழிமுறைகளையெல்லாம் சொன்னார். அந்த லின்க்கின் மூலமாக தேடிப் பிடித்த சில அன்பர்கள் ஓரிருவர் “இப்போதுதான் ரத்தம் கொடுத்தோம்.. இனி 3 மாதம் கழித்துதான் தர முடியும்..” என்றார்கள். இரண்டு பேர் எடுத்த எடுப்பிலேயே “இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ள நாங்க ஆஸ்பத்திரிக்கு போய் கொடுத்திருவோம்..” என்றார்கள். அதேபோல் செய்துவிட்டும் போன் செய்து சொன்னார்கள்.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றும் பாஸ்கர் என்ற நண்பர், அவருடைய மனைவி உட்பட அலுவலக நண்பர்களையும் அழைத்துக் கொண்டு வந்து ரத்தம் அளித்து உதவிகளைச் செய்தார். இது போதுமென்று மருத்துவமனையில் இருந்து சொல்லியிருந்ததால் நானும் தேடுதல் வேட்டையை கொஞ்சம் நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் ஆபரேஷனுக்காக அட்மிட் ஆன பின்பு கூடுதலாக 2 யூனிட் நாளை காலைக்குள் தேவை என்று சொல்லிவிட்டார்கள்.

மறுபடியும் பாஸ்கரிடம் கேட்டேன்.. கூடுதலாக ஒருவரை உடனேயே அனுப்பி வைத்தார். அடுத்து அதே தளத்தின் மூலமாகத் தொடர்பு கொண்ட வேறொரு நண்பரும் ஓடி வந்து ரத்தமளித்து உதவிகளைச் செய்தார்கள். அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றிகள்..! இத்தனைக்கும் மூல காரணம் அண்ணன் சுரேகாதான்.. அவருக்கும் எனது குடும்பத்தினர் அனைவரின் சார்பிலும் கோடானு கோடி நன்றிகள்..!

அண்ணனின் வாய்ப்புறத்தில் வலதுபுற தோலின் உட்புறம் இருந்த கேன்சர் கட்டியை அகற்றிவிட்டு அந்தத் தோலுக்குப் பதிலாக அவருடைய தொடையில் இருந்து தோலை வெட்டியெடுத்து அங்கே ஒட்ட வைத்து.. கிட்டத்தட்ட 6 மணி நேரத்துக்கும் மேலாக அந்த ஆபரேஷன் நடந்தது..! ஆபரேஷன் முடிந்த பின்பு ஸ்பெஷல் வார்டில் 2 நாட்கள் வைத்திருந்துவிட்டு பின்புதான் ஆர்டினரி வார்டுக்கு கொண்டு வந்தார்கள். மூக்கில் சொருகியிருந்த டியூப் மூலமாகவே அவருக்கு வேண்டிய கஞ்சி போல் இருந்த உணவை செலுத்தினார்கள். கிட்டத்தட்ட 10 நாட்கள் ஒரு குழந்தையைப் போலவே படுத்திருந்தார்..! 

அண்ணன் சிகரெட் பழக்கத்தை கைவிட்டு 3 ஆண்டுகள் ஆகிறது.. ஆனாலும் ஏன் இந்த கேன்ஸர் என்று மருத்துவரிடம் கேட்டபோது, “அந்த கேன்ஸர் கட்டி 10 வருஷத்துக்கு முன்னாடியே பார்ம் ஆகியிருக்கு.. இப்பத்தான் அதுக்கான முழு சக்தியும் கிடைச்சு தன் வேலையைக் காட்டியிருக்கு.. கேன்ஸரை பொறுத்தவரையில் அது எப்போ வரும்.. எப்படி வரும்ன்னு யாராலேயும் சொல்ல முடியாது..  எல்லாருக்குள்ளேயும் கேன்ஸர் செல்கள் இருக்கு.. அமைதியா தூங்கிக்கிட்டிருக்குற அதனை தட்டி எழுப்பிவிடுற மாதிரி நாமதான் அதுக்குப் பிடித்தமான, நமக்குத் தீங்கானவற்றை செய்யக் கூடாது.. அப்படிச் செய்தால் இப்படித்தான்..” என்றார்..

அப்பலோ மருத்துவமனையில் கேன்ஸரை கண்டு பயப்படாமல் இருக்க வாரந்தோறும் மீட்டிங்கெல்லாம் நடத்துகிறார்கள். கேன்ஸர் நோயில் இருந்து மீண்ட நோயாளிகளை வரவழைத்து அவர்களை வைத்தே தற்போது மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளிடம் பேச வைத்து அவர்களுக்கும் நம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டுகிறார்கள்..! ஒரு சில நோயாளிகளுக்கு அவர்களுக்குள் ஏற்படும் பய உணர்விலேயே சரியாக சிகிச்சையை மேற்கொள்ளாமல் போய் நோய் முற்றிப் போய்விடுகிறது.. இதனைத் தடுக்கவே இது போன்ற மன ரீதியான சிகிச்சைகளையும் மேற்கொள்வதாக அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கூறினார்..!

என்னுடைய மூத்த அக்கா திண்டுக்கல்லில் இருந்து வந்தவர் அந்தக் கோலத்தில் அண்ணனை பார்த்தவுடன் கதறிவிட்டார். அண்ணனும், மூத்த அக்காவும்தான் என் வீட்டில் முதலில் பிறந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் அன்னியோன்யம் அதிகம்..! இதுக்காகவே “அக்காவை கூப்பிடாத.. நான் திருச்சிக்கு போன பின்னாடி வரச் சொல்லு..” என்று ஆபரேஷனுக்கு முன்பாகவே அண்ணன் என்னிடம் கூறியிருந்தார். ஆனாலும் எனக்கு மனசில்லை.. அக்காவும் தினமும் போன் போட்டு “என்னாச்சு என்னாச்சு..” என்று கேட்டுக் கொண்டேயிருக்க.. “கிளம்பி வந்திரு”ன்னு சொல்லிட்டேன்..! இது கட்டுக்குள் அடங்காத பாசவுணர்வு..! எந்த நேரத்தில் வர வேண்டுமோ அப்போது வந்தே தீரும்..!

பணக்காரன், ஏழை என்பதெல்லாம் நோய்களுக்கு இல்லை.. வெளிநாட்டு கார்களில் வந்திறங்கும் பணக்காரர்கள்.. இந்தியா முழுவதிலும் இருந்தும் இங்கே தேடி வரும் நோயாளிகள்.. வெளிநாட்டில் இருந்து குறிப்பாக ஆப்ரிக்காவில் இருந்து வருபவர்களும் நிறையவே இருந்தார்கள். என்றாலும் நோயால் அனைவரும்தான் துவண்டு போயிருக்கிறார்கள்.

ஒரு பத்து நிமிடம் அந்த மருத்துவமனையின் ரிசப்ஷனில் உட்கார்ந்து பாருங்கள்.. எத்தனை விதவிதமான மனிதர்கள்.. விதவிதமான நோய்கள்.. நோய்வாய்ப்பட்ட மனிதர்களெல்லாம் ஒரே ஜாதிதான் என்று மட்டுமே சொல்ல தோன்றுகிறது..! அதுவும் கேன்ஸர் என்றால் எல்லாருக்குமே ஒன்று போலத்தான்..! முதலில் திட உணவுகளை சாப்பிட முடியாது. இந்த ஒரு குறைபாட்டிலேயே அவருடைய அன்றாடச் செயல்பாடுகளில் பாதிப்பு வந்துவிடும்..! பின்பு இருக்கவே இருக்கிறது சாவு பற்றிய பயம்..! அதுவரையிலும் நாளைக்கு என்ன செய்யலாம் என்ற நினைப்பிலேயே இருப்பவர்களுக்கு விரைவில் சாவு என்ற நிலைமை வந்தால் என்ன செய்வார்கள்..?

மருத்துவமனையில் தினம்தோறும் ஏதாவது ஒரு வகையில் சாவு.. வரவேற்பறையில் யாராவது ஒருவர் கதறிக் கொண்டிருக்கிறார்.. படிக்கட்டுப் படிகளில், யார் மடியிலாவது படுத்து யாராவது சப்தம் வராமல் அழுது கொண்டிருக்கிறார்கள்..! இன்று இரவுக்குள் முடிந்துவிடும் என்ற மருத்துவர்களின் கணிப்போடு ஒரு மனிதர் வீட்டிலேயே நிம்மதியாக இறப்பதற்காக புறப்படுகிறார். இத்தனை நாட்கள் கவனித்துக் கொண்டதற்கு நன்றி என்பதுபோல் அந்த கைகள் மருத்துவரை நோக்கி கும்பிடுகிறது..! நெகிழ்ந்துவிட்டேன்..! 

திருமண வயதில் 3 பெண்கள் காத்திருக்கும் சூழலில் அவர்களுடைய அப்பா புற்று நோய்க்காக வந்திருக்கிறார்.. 3 பெண்களும் ஒருவர் மாற்றி ஒருவர் தினம்தோறும் வந்தார்கள். அவர்களுடைய அம்மா மிக பொறுப்பாக தான் மட்டுமே இங்கேயும், அங்கேயுமாக அலைந்து கொண்டிருந்தார். எப்போதும் ஐபேடில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்த கடைசி மகள் அன்றைக்கு கதறிக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு பெண்கள் அம்மாவின் இரு பக்க தோள்களையும் பிடித்துக் கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். யாரை தேற்றுவது என்று அவருக்குத் தெரியவில்லை..

சட்டென ஏற்பட்ட சாவு.. “மதியம்வரைக்கும் நல்லாத்தான் இருந்தாங்க.. இப்போத்தான்..” என்று சொன்ன மனைவிக்கு மேலும் சொல்ல வார்த்தைகள் இல்லை.. இப்பத்தான் பணம் கட்டிட்டு வந்தேன் என்று சொல்லி கையில் வைத்திருந்த அந்த ரசீதை இப்படியும், அப்படியுமாக புரட்டிக் கொண்டிருந்தவரிடம் அடுத்த நடைமுறைகள் பற்றி விளக்கிச் சொல்லியும் முடியவில்லை. ரிசப்ஷனில் இருந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் வலுக்கட்டாயமாக பிள்ளைகளையும், அம்மாவையும் பிரித்து அவர்களுடைய செல்போனில் கடைசியாக இருந்த நம்பரை பார்த்து யாருக்கோ டயல் செய்து தகவலைச் சொன்னார்கள்.

1 மணி நேரத்தில் வாசலில் நின்ற ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்காக வந்த கணவரின் உடலை பார்த்த மனைவி, ரொம்ப கோபமாகவே செத்து போயிருந்த அந்தக் கன்னத்தில் மாறி மாறி அடித்து, “தலை தலையா அடிச்சனே.. குடியை விடுய்யா.. குடியை விடுய்யான்னு கேட்டியா..?” என்று ஓங்காரித்துவிட்டார்..! ஆம்புலன்ஸில் மகள்களை ஏற்றிவிட்டவர்.. “உங்க டாடி கூடவே போங்கடி. டாடியாம் பெரிய டாடி...” என்று கோபத்தைக் கொப்பளித்துவிட்டு தனக்குப் பின்னால் நின்றிருந்த தன் காரில்  ஏறிச் சென்றார். அவர் ஏறிச் சென்ற கார் பிஎம்டபிள்யூ..!

இந்த வயதினருக்குத்தான் என்றில்லை.. சின்னச் சின்னப் பிள்ளைகளுக்குக்கூட வந்திருக்கிறது..! அவர்களெல்லாம் என்ன பாவம் செய்தார்கள்.. ஒரு கியூட்டான பெண் குழந்தை.. பார்த்தாலே தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல இருந்தது.. மூளையில் கேன்ஸராம்..!  வட நாட்டில் இருந்து வந்திருந்த அக்குழந்தையின் பெற்றோர் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு பேஷண்டுகளை பார்க்க குழந்தைகளோடு வரும் பார்வையாளர்களைத்தான் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்ன கொடுமை இது..?

மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் அதிகம் பேரை பார்த்தேன்..  எத்தனை பணம் இருந்தும் என்ன செய்ய..? வந்துவிட்டது.. இறுதிவரையில் போராடுவோம் என்ற மனத்தோடு பலரும் வந்து செல்கிறார்கள்..! ஒரு சிலருக்கு முதல் கட்ட தாக்குதலிலேயே தெரிந்துவிடுகிறது. சிலருக்கு மூன்றாவது கட்டம்.. பலருக்கு இறுதிக் கட்டம்..! அது ஆண்டவனின் விருப்பம்..!

இந்த மருத்துவமனையே இப்படியென்றால் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால் மிக மிக பரிதாபமான கதைகள்தான் அதிகமிருக்கும்..! அதையும் என் தந்தை சாவின் போது பார்த்திருக்கிறேன்..! “மனசு ரொம்பக் கஷ்டமா இருக்கு. எனக்கு எவ்வளவு பிரச்சனை இருக்கு தெரியுமா?” என்றெல்லாம் கதை விடுபவர்களை கொஞ்சம் இந்த வார்டுக்குள் கொண்டு வந்து நிற்க வைத்து பார்க்கச் சொல்ல வேண்டும்.. இன்னும் 10 நாட்கள்தான் இவர் உயிரோடு இருப்பார் என்று சொன்னால் அந்த நபர் என்னவெல்லாம் நினைப்பார்..? அந்தக் குடும்பத்தினரின் நிலைமை என்ன என்பதையெல்லாம் கொஞ்சம் யோசிக்கச் சொல்ல வேண்டும்..! வாழ்க்கையை, கடந்து வந்த பாதையை மனிதர் அனைவருமே தங்களுடைய இறுதிக் காலத்தில்தான் அவசியம் திரும்பிப் பார்ப்பார்கள்.. அந்த சாவின் மீது இருக்கும் பயம் அப்படி..? 

அண்ணன் மீண்டும் திருச்சி சென்றுவிட்டு மறுபடியும் ரேடியேஷன் வைப்பதற்காக சென்னை வந்தார்.. என்னால் அவருக்காக பண உதவி அளிக்க முடியாவிட்டாலும் அவரது வசதிக்காக அவசரமாக வீட்டை மாற்றி அவரைத் தங்க வைத்து என்னால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்துவிட்டேன்..! 40 நாட்கள் தொடர்ச்சியாக ரேடியேஷன் வைத்திருக்கிறார்கள். காலையில் சிகிச்சையெடுத்து வந்தாலும் இரவில் வலிக்கிறது என்பார்.. அவருடைய கன்னம் பகுதி கருப்பாகி முகம் பொலிவிழந்து போயிருக்கிறது.. வாய் பகுதியில் தையல் இருந்ததால் இன்னமும் அவரால் முழுமையாக வாயைத் திறக்க முடியவில்லை..! பிரஷ் செய்ய முடியாமல், மவுத்வாஷை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.. இப்போதும் வெறும் கஞ்சிதான்.. அல்லது 4 இட்லியை மிக்ஸியில் போட்டு அரைத்து அதனைக் குடிக்கிறார். அவ்வப்போது ஜூஸ்.. இளநீர்.. இதுதான்.. சாப்பாடு.. 

கல்லூரியில் படிக்கும் மகனும், மகளும் திருச்சியில் இருப்பதால், பாண்டிச்சேரியில் இருந்து திருச்சிக்கு டிரான்ஸ்பர் வாங்கிவிட்டு சென்ற வாரம்தான் அங்கே டூட்டியில் சேர்ந்திருக்கிறார் அண்ணன்..! இனி இயல்பான வாழ்க்கையை அவர் வாழலாம் என்று மருத்துவர்கள் சொன்னாலும், அதிகம் சாப்பிடவே முடியாமல் என்னதான் செய்வது..? 2 மாதங்களுக்கு ஒரு முறை செக்கப்புக்கு வர வேண்டுமாம்.. “கொஞ்சம், கொஞ்சமாகத்தான் இது சரியாகும்.. இரண்டாம் கட்ட நிலைமையிலேயே கண்டறிந்ததால் இந்த அளவுக்காச்சும் முடிந்தது..” என்றார் மருத்துவர்..! 

ரேடியஷனுக்காக கூடுதலாக 3 லட்சம் ரூபாயுடன், இதுவரையிலும் மொத்தம் ஏழரை லட்சம் செலவாகியிருக்கிறது..! அண்ணன் மத்திய அரசு ஊழியர். அரசு வழங்கும் மருத்துவச் சலுகையினால் செலவழித்த தொகையில் 75 சதவிகிதம் திரும்பி வந்துவிடுமாம்.. ஆனாலும் அந்த இக்கட்டான நேரத்தில் உறவுகளும், சொந்தங்களும் கொடுத்தார்களே.. அது எவ்வளவு பெரிய விஷயம்..? அண்ணனுடன் மருத்துவமனையில் தவம் கிடந்து அவரை பார்த்துக் கொண்டது அண்ணியார் மட்டுமே..! அதிகம் அவருக்காக வெளி வேலைகளைச் செய்தது நான் உட்பட சொந்தங்களும், பந்தங்களும்தான்.. 

ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள் தோழர்களே..!  இந்த பாசவுணர்வு எல்லாருக்கும் கிடைக்காததுதான்..! கிடைக்குதோ கிடைக்கலையோ..? நாமும் நமக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் பகைவனை எதற்குத் தட்டியெழுப்ப வேண்டும்..? விட்டொழியுங்கள் கெட்ட பழக்கங்களை..! குடியும், புகையும் நமக்கு என்றென்றைக்கும் பகைதான்..! வராவிட்டால் சந்தோஷம்தான்.. வந்துவிட்டால் உங்களது குடும்பத்தினர் மட்டுமே தங்களது சந்தோஷத்தை இழப்பார்கள்.. நண்பர்களோ, மற்றவர்களோ அல்ல..!

தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்..!

54 comments:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

Dear Saravanan,
I could see everything thru your eyes, coz I was in the same situation 12 years back. We went thru the process of crying and consoling.. i just couldn't stop the tears from my eyes after reading your post.
May god give support and speedy recovery for your brother. All the best.
rgds-surya

உலக சினிமா ரசிகன் said...

தங்கள் சகோதரர் மீண்டு வந்து புதிய பொலிவு பெற என் தாய் மூகாம்பிகை
துணையிருப்பாள்.

Jayadev Das said...

Reined எண்ணெய் வகைகள், பழங்களுக்கு பழுக்க போடப்படும் கார்பைடு கற்கள், உணவு விளைச்சலுக்கு உபயோகப் படுத்தப் படும் செயற்கை உரங்கள், வீரிய மிக்க பூச்சி மருந்துகள் போன்றவற்றால் உயிர்க்கொல்லி நோய்கள் அதிகம் பேருக்கு வர ஆரம்பித்திருக்கிறது. இதை எந்த டாகடரும், விஞ்ஞானியும் வெளியில் சொல்ல மாட்டான், ஏன்னா திருடனும், இருட்டும் உற்ற நண்பர்கள். டாக்டர் தனக்கு வரும்படி வருவதால் மூச் விட மாட்டன்.

அன்புடன் அருணா said...

Very heart touching experience.Take care.

Unknown said...

தங்கள் சகோதரர் விரைவில் மேலும் குணமடைய வேங்கடவனை வேண்டுகிறேன் !

iniyavan said...

அண்ணே,

உங்கள் அண்ணன் விரைவில் பூரண குணம் அடைவார். அவருக்காக பிரார்த்திக்கிறேன். நீங்கள் எழுதியவிதம் என்னை அழ வைத்துவிட்டது. இரவு 11.18க்கு இதை எழுத வைத்துவிட்டது. என் அப்பா நினைவு வந்துவிட்டது. நான் ஏற்கனவே ப்ளாக்கில் இதை எழுதி இருக்கிறேன். நானும் 5 நாட்கள் அப்பல்லோவில் அப்பாவிடம் இருந்தேன். தம்பிகள் 10 நாட்கள் இருந்தார்கள். 10வது நாள் ஒரு ஆம்புலன்ஸில் அப்பாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றோம். அப்பா அடுத்து ஒரு மாதம் தான் உயிருடன் இருப்பார் என்று எனக்கு மட்டுமே தெரியும். குடும்பத்தினர் அனைவரிடமும் அப்பா குணமாகிவிட்டார் என பொய் சொன்னேன். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம். அப்பாவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.

பழமைபேசி said...

அண்ணா, மீள்தலுக்கான என் வேண்டுதல்கள்!!

கார்த்திக் சரவணன் said...

தங்கள் எழுத்து நடை உருக வைக்கிறது... பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் நம்முடைய கெட்ட பழக்கங்களே.... தங்கள் சகோதரர் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்....

பட்டிகாட்டான் Jey said...

அண்ணன் குணமடைய பிரார்த்தனைகள்ணே. ஆரம்ப கட்டத்துலேயே பார்த்ததால பணச்செலவோட போயிட்டுது. பார்த்துகிடுங்கண்ணே.

ராம்ஜி_யாஹூ said...

அண்ணன் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்.

priyamudanprabu said...

:(

Sathish Kumar Uthanda said...


அண்ணன் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்.

Anonymous said...

Dear Brother,
I pray for his speedy recovery.

Nondavan said...

கண்களில் நீக்கோர்க்கிறது உண்மை தழிழன் அண்ணே....!! என் அன்னை மறைவின் போது அரசு மருத்துவமனைவில் நடந்த சம்பவங்கள் கண் முன்னே நிழலாடுகிறது.

Nondavan said...

நம்ம அண்ணன் நலம் பெற தினமும், என் அன்னையிடமும் இறைவனிடமும் வேண்டிக்கிறேன்....

Unknown said...

மனதை மிகவும் கனக்கச் செய்துவிட்டது ..! நம் எல்லோருக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும் !

Unknown said...

உங்கள் சகோதரர் நலம் பெற கடவுளை வேண்டி கொள்கிறேன் .

Ponchandar said...

தங்கள் அண்ணன் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

KG said...

Very touching ..

This post will stay close to my heart for some reason ...

all the wishes for your bro ...

Kamal

மாதேவி said...

உங்கள் சகோதரர் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.

? said...
This comment has been removed by the author.
திருவாரூர் சரவணா said...

மிகவும் வேதனைப்பட வைக்கும் நிகழ்வுதான். நீங்கள் சொல்வதுபோல் எல்லோருக்குள்ளும் கேன்சர் செல் உறங்கிக்கொண்டிருக்கலாம். அதை தட்டி எழுப்புவது சிகரெட், மதுவுடன் நாம் உண்ணும் உணவாக கூட இருக்கலாம் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும்.

எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இந்த வியாதிக்கு தங்களை தின்னக்கொடுத்தவர்களும் கணிசமான எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள்.

தங்கள் சகோதரர் விரைவில் பூரண குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.

உண்மைத்தமிழன் said...

[[[Surya Narayanen S said...

Dear Saravanan,

I could see everything thru your eyes, coz I was in the same situation 12 years back. We went thru the process of crying and consoling.. i just couldn't stop the tears from my eyes after reading your post.

May god give support and speedy recovery for your brother. All the best.
rgds-surya]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், உங்களது அன்பான ஆதரவிற்கும் எனது நன்றிகள் ஸார்..!

உண்மைத்தமிழன் said...

[[[உலக சினிமா ரசிகன் said...

தங்கள் சகோதரர் மீண்டு வந்து புதிய பொலிவு பெற என் தாய் மூகாம்பிகை
துணையிருப்பாள்.]]]

நன்றிகள் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[உலக சினிமா ரசிகன் said...

தங்கள் சகோதரர் மீண்டு வந்து புதிய பொலிவு பெற என் தாய் மூகாம்பிகை
துணையிருப்பாள்.]]]

நன்றிகள் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Jayadev Das said...

Reined எண்ணெய் வகைகள், பழங்களுக்கு பழுக்க போடப்படும் கார்பைடு கற்கள், உணவு விளைச்சலுக்கு உபயோகப்படுத்தப்படும் செயற்கை உரங்கள், வீரிய மிக்க பூச்சி மருந்துகள் போன்றவற்றால் உயிர்க் கொல்லி நோய்கள் அதிகம் பேருக்கு வர ஆரம்பித்திருக்கிறது. இதை எந்த டாகடரும், விஞ்ஞானியும் வெளியில் சொல்ல மாட்டான், ஏன்னா திருடனும், இருட்டும் உற்ற நண்பர்கள். டாக்டர் தனக்கு வரும்படி வருவதால் மூச் விட மாட்டன்.]]]

எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாதவர்களுக்கு அவர்களுடைய உணவுப் பழக்கம் மூலமாகவும் இது வருகிறது..! எனக்குத் தெரிந்து எந்தெந்த உணவு வகைகளால் கேன்ஸர் உருவாகிறது என்று எந்த மருத்துவரும் இதுவரையிலும் அறுதியிட்டுச் சொல்லவில்லைதான்..! நீங்கள் குறிப்பிட்டது உண்மை என்றாலும், இது பற்றிய விழிப்புணர்வு இங்கே குறைவுதான்..!

உண்மைத்தமிழன் said...

[[[அன்புடன் அருணா said...

Very heart touching experience. Take care.]]]

மிக்க நன்றிகள் மேடம்..!

உண்மைத்தமிழன் said...

[[[புலவர் சா இராமாநுசம் said...

தங்கள் சகோதரர் விரைவில் மேலும் குணமடைய வேங்கடவனை வேண்டுகிறேன் !]]]

மிக்க நன்றிகள் ஐயா..!



உண்மைத்தமிழன் said...

[[[என். உலகநாதன் said...

அண்ணே, உங்கள் அண்ணன் விரைவில் பூரண குணம் அடைவார். அவருக்காக பிரார்த்திக்கிறேன். நீங்கள் எழுதியவிதம் என்னை அழ வைத்துவிட்டது. இரவு 11.18க்கு இதை எழுத வைத்துவிட்டது.

என் அப்பா நினைவு வந்துவிட்டது. நான் ஏற்கனவே ப்ளாக்கில் இதை எழுதி இருக்கிறேன். நானும் 5 நாட்கள் அப்பல்லோவில் அப்பாவிடம் இருந்தேன். தம்பிகள் 10 நாட்கள் இருந்தார்கள். 10வது நாள் ஒரு ஆம்புலன்ஸில் அப்பாவை அழைத்துக்கொண்டு ஊருக்கு சென்றோம். அப்பா அடுத்து ஒரு மாதம் தான் உயிருடன் இருப்பார் என்று எனக்கு மட்டுமே தெரியும். குடும்பத்தினர் அனைவரிடமும் அப்பா குணமாகிவிட்டார் என பொய் சொன்னேன். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விசயம். அப்பாவுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.]]]

இதுதான் மிகக் கொடுமை உலகநாதன்.. விதியைத் தவிர வேறு எதையும் சொல்ல முடியாது..! வருந்துகிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

அண்ணா, மீள்தலுக்கான என் வேண்டுதல்கள்!!]]]

மிக்க நன்றிகள் தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[பழமைபேசி said...

அண்ணா, மீள்தலுக்கான என் வேண்டுதல்கள்!!]]]

மிக்க நன்றிகள் தம்பி..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்கூல் பையன் said...

தங்கள் எழுத்து நடை உருக வைக்கிறது... பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் நம்முடைய கெட்ட பழக்கங்களே.... தங்கள் சகோதரர் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன்.]]]

நன்றிகள் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[பட்டிகாட்டான் Jey said...

அண்ணன் குணமடைய பிரார்த்தனைகள்ணே. ஆரம்ப கட்டத்துலேயே பார்த்ததால பணச் செலவோட போயிட்டுது. பார்த்துகிடுங்கண்ணே.]]]

மிக்க நன்றிகள்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பட்டிகாட்டான் Jey said...

அண்ணன் குணமடைய பிரார்த்தனைகள்ணே. ஆரம்ப கட்டத்துலேயே பார்த்ததால பணச் செலவோட போயிட்டுது. பார்த்துகிடுங்கண்ணே.]]]

மிக்க நன்றிகள்ண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[ராம்ஜி_யாஹூ said...

அண்ணன் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்.]]]

நன்றி ராம்ஜியண்ணே..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் பிரபு said...

:(]]]

நன்றி பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[பிரியமுடன் பிரபு said...

:(]]]

நன்றி பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Sathish Kumar Uthanda said...

அண்ணன் விரைவில் நலம் பெற வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்.]]]

நன்றி பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[suji said...

Dear Brother, I pray for his speedy recovery.]]]

மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[suji said...

Dear Brother, I pray for his speedy recovery.]]]

மிக்க நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

கண்களில் நீக்கோர்க்கிறது உண்மை தழிழன் அண்ணே!! என் அன்னை மறைவின் போது அரசு மருத்துவமனைவில் நடந்த சம்பவங்கள் கண் முன்னே நிழலாடுகிறது.]]]

அனைவருக்குமே இது போன்ற ஒரு அனுபவம் வாழ்க்கையில் கிடைக்கத்தான் செய்திருக்கிறது..! வருகைக்கு நன்றிகள் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நம்ம அண்ணன் நலம் பெற தினமும், என் அன்னையிடமும் இறைவனிடமும் வேண்டிக்கிறேன்.]]]

நன்றி.. நன்றி.. நன்றி..!

உண்மைத்தமிழன் said...

[[[ரமேஷ் வெங்கடபதி said...

மனதை மிகவும் கனக்கச் செய்துவிட்டது ..! நம் எல்லோருக்கும் இது ஒரு பாடமாக அமையட்டும் !]]]

அதற்காகத்தான் இதனை பதிவிட்டேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[rahul p said...

உங்கள் சகோதரர் நலம் பெற கடவுளை வேண்டி கொள்கிறேன் .]]]

மிக்க நன்றிகள் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[Ponchandar said...

தங்கள் அண்ணன் விரைவில் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.]]]

மிக்க நன்றிகள் பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[KG said...

Very touching. This post will stay close to my heart for some reason. all the wishes for your bro.

Kamal]]]

உங்களுக்குமா..? உங்களுடைய வருத்தங்களில் நானும் பங்கு கொள்கிறேன் நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[மாதேவி said...

உங்கள் சகோதரர் நலம் பெற இறைவனை வேண்டுகின்றேன்.]]]

மிக்க நன்றிகள் மேடம்..!

உண்மைத்தமிழன் said...

[[[சீனு said...

:(]]]

வருகைக்கு மிக்க நன்றிகள் சீனு..!

உண்மைத்தமிழன் said...

[[[சரண் said...

மிகவும் வேதனைப்பட வைக்கும் நிகழ்வுதான். நீங்கள் சொல்வதுபோல் எல்லோருக்குள்ளும் கேன்சர் செல் உறங்கிக் கொண்டிருக்கலாம். அதை தட்டி எழுப்புவது சிகரெட், மதுவுடன் நாம் உண்ணும் உணவாக கூட இருக்கலாம் என்ற கசப்பான உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் இந்த வியாதிக்கு தங்களை தின்னக் கொடுத்தவர்களும் கணிசமான எண்ணிக்கையிலேயே இருக்கிறார்கள். தங்கள் சகோதரர் விரைவில் பூரண குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.]]]

தங்களுடைய ஆறுதலான பின்னூட்டத்திற்கு நன்றிகள் பிரதர்..!

sundarmeenakshi said...

mansa ennamo ponnuthu

மன்சி (Munsi) said...

இரத்தம் கொடுத்தால் மூன்று மாதங்கள் கொடுக்கக் கூடாது என்றில்லை. கொடுக்கலாம். வேறு வழியே இல்லாத போது, ஒரு மாத்தின் பின் கொடுக்கலாம். கொடுத்திருக்கிறோம்.

எல்லா நோயிற்கான டெஸ்ட்டும் வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு வருடத்திற்கு ஒரு தடவை செய்ய வேண்டும். அதிக பணம் செலவானாலும் பரவாயில்லை.

உங்கள் உறவினர் விரைவில் குணமடையட்டும்.

உண்மைத்தமிழன் said...

[[[sundarmeenakshi said...

mansa ennamo ponnuthu..]]]

வருகைக்கு நன்றிகள் ஸார்..! பிரார்த்தியுங்கள்.. அது போதும்..!

உண்மைத்தமிழன் said...

[[[மன்சி (Munsi) said...

இரத்தம் கொடுத்தால் மூன்று மாதங்கள் கொடுக்கக் கூடாது என்றில்லை. கொடுக்கலாம். வேறு வழியே இல்லாதபோது, ஒரு மாத்தின் பின் கொடுக்கலாம். கொடுத்திருக்கிறோம். எல்லா நோயிற்கான டெஸ்ட்டும் வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு வருடத்திற்கு ஒரு தடவை செய்ய வேண்டும். அதிக பணம் செலவானாலும் பரவாயில்லை.
உங்கள் உறவினர் விரைவில் குணமடையட்டும்.]]]

நன்றிகள் ஸார்..!